காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் இரண்டு!

முதலில் முதல் பாகம் படியுங்க!

புயல் தாக்கிய புத்தக புதையல்!

தினமும் ஸ்கூல் விட்டு வந்தவுடனேயே பொறுப்பாக பாட புத்தகங்களை வைத்து உட்கார்ந்து விடுவேன். நடுவில் பின் அடித்த பாட புத்தகமாய் தேர்ந்தெடுத்து அதற்குள் முதல் பாகத்தில் பதுக்கிய காமிக்ஸையோ அல்லது ஏற்கனவே படித்த, மிகவும் பிடித்த காமிக்ஸையோ வைத்துக்கொண்டு ரொம்ப பொறுப்பாக படிக்க ஆரம்பித்து விடுவேன். யாராவது அருகில் வந்தால் பாட புத்தகத்தின் அடுத்த பக்கத்தை புரட்டி எனது கல்வி சேவையை தொடருவேன். இது ஒரு நாள் அப்பாவிடம் கையும் களவுமாய் பிடிபட்டு காது முறுக்கு பிழியப்படும் வரை நடந்தது! நல்ல வேளை, அப்போது உள்ளே தலைவர் ஜேம்ஸின் காமிக்ஸ் இல்லை!

சரி, பழைய புத்தக கடை மேட்டருக்கு வருவோம். வார சேமிப்பு அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறாக மட்டுமே இருந்த காரணத்தினால் புதிய காமிக்ஸ் வாங்க அவ்வளவாக நாட்டம் காட்டியதில்லை! மாதம் கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு வகை காமிக்ஸுகள் வந்திட்ட பொற்காலம் அது! அதை தவிர பூந்தளிர், ரத்னபாலா, அமர் சித்ரகதா போன்ற புத்தகங்களும் வாங்க சொல்லி ஆசையை கிளப்பும்! கிரைம் நாவல்களும் கோலோச்சின! எல்லாவற்றையும் அட்டை முனை மடியாமல், பக்கங்கள் கசங்காமல் புத்தம் புதியதாய் வாங்குவதென்பது என்னை போன்ற பள்ளி மாணவர்களுக்கு ஒரு கனவாக மட்டுமே இருந்தது! எங்களது தீராத புத்தக தாகத்திற்கு 50% தள்ளுபடி தந்துதவி, ஒரு உயரிய சேவையை இந்த பழைய புத்தக கடைகள் செய்தன.

அப்போதெல்லாம் சேலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வோர் பஸ் ஸ்டாப்புக்கும் ஒரு பழைய புத்தக கடை இருந்தது! ஆனால் எல்லாவற்றிலும் காமிக்ஸ் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலான கடைகளில் ராஜேஷ் குமார், பிகேபி, சுபாவின் நாவல்களே அதிகமாய் கிடைக்கும். (அவ்வப்போது அவற்றை வாங்கினாலும் பெரும்பாலும் சேகரித்து வைத்ததில்லை, சர்குலேசன் முறையிலேயே பலவற்றை படித்து விடுவோம்) அதை தவிர பாட்டு புத்தகங்களும் சில மஞ்சள் பத்திரிகைகளும் அக்கடைகளில் வைத்திருப்பார்கள்.

காமிக்ஸ் கிடைத்த கடைகள்  வின்சென்டிலும், அதை தாண்டினால் வள்ளுவர் சிலை மற்றும் கலெக்டர் ஆபீஸ் அருகிலும் இருந்தன. இரயில் மற்றும் பஸ் நிலைய அருகிலிருந்த கடைகளை தவிர்த்து இன்னும் சில இடங்களில் காமிக்ஸ் புத்தகங்கள் கொட்டி கிடந்தன. முக்கியமாக கீதாலயா  திரையரங்கை (அங்கு உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் ப்ரூஸ்-லீயின் பிக் பாஸ் படங்களை புத்தம் புதிய பிரிண்டில் 70mm திரையில் கண்டது கொசுறு தகவல்) சுற்றிய பகுதிகளில் ஏராளமாக பழைய புத்தக தள்ளு வண்டி கடைகள் நிற்கும். அங்குதான் நான் லயனில் வெளி வந்த சிறந்த டெக்ஸ் கதைகளில் ஒன்றான டிராகன் நகரத்தை வாங்கினேன்! என்ன, இலவச தாய விளையாட்டுதான் கிடைக்கவில்லை!

அட்டை கிழிந்திருக்கும் காரணத்தினாலேயே நான் பல காமிக்ஸுகளை வாங்காமல் விட்டதுண்டு! அவ்வாறிருக்க, பின்னடித்த நிலையில், வார்னிஷ் மெருகுடன் புத்தம் புதிய, நான் கேள்விப்பட்டிராத பல முத்து காமிக்ஸ் புத்தகங்கள் அங்கே காணக்கிடைத்தால் அதுவும் பாதி விலையில் கிடைத்தால் குஷிக்கு கேட்கவும் வேண்டுமா? அவ்வாறு கீதாலயா அருகில் சில முத்து காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கினேன். அவை போலியாக இருக்கக்கூடும் என்ற ஐயம் இப்போதும் எனக்கு உண்டு! ஏனென்றால்,   அப்போதெல்லாம் முத்து காமிக்ஸ் மறுபதிப்பு செய்யப்பட்டால், அட்டை படத்தை மாற்றி, விலையை ஏற்றி, ஒரு புதிய வெளியீடு எண்ணையையும் குடுத்து விடுவார்கள்! ஆனால் நான் குறிப்பிடும் புத்தகங்களில் அந்த மூன்றாவது விஷயம் மட்டும் மிஸ்ஸிங்! புதிய அட்டை, புதிய விலை ஆனால் வெளியீடு எண் மட்டும் எழுபதுகளில் வந்த அதே எண்! இவை போலியா அல்லது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிட்டவைதானா? இந்த கேள்விக்கு விஜயன் சாரால் மட்டுமே பதில் கூற இயலும் என்று நினைக்கிறேன் (அவர் இந்த பதிவை படிக்கும் அபாக்கிய நிலை நேர்ந்தால்!). போலியோ இல்லையோ, ஜானி நீரோ ஜாலியாக ஸ்டெல்லாவுடன் போஸ் கொடுக்கும் அந்த அட்டைப்படமும், அப்புத்தகத்தின் கடைசி பக்கமும் நீங்களும் கண்டு களிக்க, இதோ! :

காணமல் போன கைதி! - முத்து (மறு!) வெளியீடு எண் - 35

 

எனது காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு முக்கிய பகுதி சேலத்தில் பழைய புத்தக கடைகளில் வாங்கியவையே!எல்லாம் என் கைப்பட பார்த்துப் பார்த்து வாங்கியது என்பதால், யார் கையும் அதன்மேல் படாமல் பொக்கிஷமாய் பொத்திப் பாதுகாத்து வருகிறேன்! உள்பக்கங்களை ஸ்கேன் செய்தால் அவை மடங்கிவிடுமோ என்ற அச்சத்திலேயே அதை தவிர்க்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

நடுவில் கிரிக்கெட் பைத்தியம் முற்றிப் போனதால் கொஞ்ச காலம் காமிக்ஸ் வாங்காமல் தெரு கிரிக்கெட் விளையாடி கழிந்தது! கை டென்னிசும் ரொம்ப பிரசித்தம்! இன்னும் சில காலம் தபால்தலை மற்றும் நாணய சேகரிப்பில் கழிந்தது! ராணி காமிக்ஸின் தரம் தாழ்ந்த அந்த காலகட்டத்தில் எனது காமிக்ஸ் ஆர்வமும் கொஞ்சம் தடுமாற்றமாய்தான் இருந்தது! எனது உயிர் தோழர்களாக அப்போது இருந்த கணேஷ் மற்றும் ஓம்ப்ரகாஷுக்கு காமிக்ஸ் ஆர்வம் இல்லாததும் ஒரு காரணமாய் இருந்திருக்க கூடும்! எட்டாவது அரையிறுதி தேர்வு நடந்த சமயம், கிரிக்கெட் ஆர்வகோளாறு காரணமாக கணக்கு பரீட்சை அன்றைக்கு இருப்பதையே மறந்து, நாள் முழுக்க விளையாடி விட்டு அடுத்த நாள் பள்ளி சென்று நின்றால், சாரி நீ ஒரு நாள் லேட் என்றார்கள்! அதோடு கிரிக்கெட்டுக்கு தடா விழவும், மறுபடி படிப்பில் நாட்டம் செலுத்தலானேன் (பாட புத்தக நடுவில் புதைத்த காமிக்ஸ் புத்தக படிப்பில்தான்!)

நடுநடுவில் எனது சொந்த ஊரான மதுரை செல்ல வாய்க்கும் போது அங்கும் விடாமல் கடைகள் தேடி அலைவேன்!  இப்படி இனிமையாக கடந்த அந்த நேரத்தில் புயலாய் ஒரு தகவல் என்னை தாக்கியது! 1991 - எனது அப்பாவுக்கு மீண்டும் இடமாற்றமாகி விட்டிருந்தது! நண்பர்களை பிரியப்போகிற துயரத்துக்கு இணையாக, நான் அறிந்த பழைய புத்தக கடைகளையும் அவற்றின் உரிமையாளர்களையும் இனிமேல் என்னால் பார்க்க முடியாதே என்ற துயரம் என்னை அழுத்தியது! என்னை பொறுத்தவரையில் சேலத்தை தவிர வேறு எங்கும் இவ்வளவு புத்தகங்கள் கிடைக்காது என்றே நம்பிக்கொண்டிருந்தேன். எனது புத்தக வேட்டை இனி கனவு கோட்டைதானா?  அடுத்த வேட்டைக்களம் எது? விரைவில்....

கருத்துகள்

  1. enakkum எனக்கும் நிறைய பதிவிட என் காமிக்ஸ் போராட்டங்களை ஷேர் பண்ணிக்க மிகுந்த ஆசைதான் ஆனால் காவல் துறை அலுவல் மிகுந்த நேரம் மக்கள் தொண்டாற்றும் பணி அல்லவா அதற்கே முதலிடம் அதனால் என் ஒட்டு உனக்கே நண்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சல்யூட் நண்பா! :) ஏதோ ஒரு வேகத்தில் ஆரம்பித்து விட்டேன், பார்க்கலாம் எவ்வளவு நாள் போகிறதென்று!

      நீக்கு
  2. உங்களின் காமிக்ஸ் வேட்டை அனுபவங்களைப் படிக்கும் போது, படிப்பவர்களின் அனுபவங்களும் அவர்களது மனதில் நிழலாடும். தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் எனது கல்லூரி நட்களில் பாட புத்தகங்கள் நடுவில் காமிக்ஸ் புத்தகங்கள் வைத்து படித்தது இன்னும் மறக்க முடியவில்லை

      நீக்கு
    2. உண்மைதான் எனது கல்லூரி நட்களில் பாட புத்தகங்கள் நடுவில் காமிக்ஸ் புத்தகங்கள் வைத்து படித்தது இன்னும் மறக்க முடியவில்லை

      நீக்கு
  3. @Msakrates: எழுத ட்ரை பண்ணறேன் :)

    @பின்னோக்கி: தொடர்கிறேன்! ரொம்ப போர் அடிக்கும்போது சொல்லி விடுங்கள்!

    @Erode M.STALIN: கல்லூரி நாட்களிலுமா? :) அப்ப எல்லாம் பயம் விட்டு போனதால ஓபனா படிச்சுருக்கேன் :) வேற மாதிரி காமி'க்ஸ்' புக்தான் மறைச்சு வச்சு படிப்பேன் ;)

    பதிலளிநீக்கு
  4. நன்று, கார்த்திக் நான் பாட்ஷா மது​​​​​ரையிலிருந்து, உங்களு​டைய ​செல்​பேசி நம்ப​​​​ரை தர முடியுமா. என்னு​டைய எண்" 9585500604

    பதிலளிநீக்கு
  5. கார்த்திக்,

    நீங்கள் இந்த பதிவை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

    இது நமது முத்து காமிக்ஸ் இதழே. சந்தேகம் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! சந்தேகம் தீர்ந்தது! :)

      காமிக்ஸ் பதிவுகளை நான் முடிந்த வரை படிக்க விரும்பினாலும், வேலை அழுத்தத்தில் பல சமயம் படிக்காமலேயே போய் விடுவதுண்டு. உங்களுக்குள் முழித்துக் கொண்டிருக்கிற அதே மிருகம் எனக்குள் சோம்பேறியாய் பல சமயம் மாத, வருடக்கணக்காய் தூங்கிவிடுமென்பதுதான் பிரச்சினையே :)

      சில வாரமாகத்தான் எடிட்டரின் ப்ளாக் பார்த்து அது சோம்பல் முறிக்க துவங்கியுள்ளது! அதன் விளைவே இந்த கொடூர தொடர் பதிவு! வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  6. டியர் கார்த்திக் உங்க பதிவு அருமை. நானும் சேலம் வாசிதான். சேலம் குகை தான் பிறந்த இடம். வள்ளுவர் சிலை அருகில் பழைய புத்தக கடை, கீதலையா தியேட்டர் பிக் பாஸ் படம் இந்த வரிகளை படிக்க படிக்க பரவாயில்லை நம்மை போல அதே அனுபவங்களோட நீங்களும் உள்ளீர்கள் என சந்தோஷ பட்டேன். சேம் ப்ளட். சென்ட்ரல் மற்றும் நியு இம்பீரியல் தியேட்டர்களில் நீங்க படம் பார்த்து இல்லை போல. (நான் கொஞ்சம் சீனியரோ?) . அதுவும் கை டென்னிஸ் இன்னமும் மறக்க முடியாதது. லஞ்ச் பிரேக் அவசரம் அவசரமாக சாபிட்டுவிட்டு விளையாட ஆரம்பித்தால் மதிய பெல் அடித்து வாத்தியார் வந்து துரத்தும் வரை ஆடுவோம். நான் கோகுலநாதா ஸ்கூல் வாசி, இன்னமும் இதை விளையாடுகிறார்களா என தெரியவில்லை. எனிவே உங்கள் காமிக்ஸ் பதிவு அருமை. தொடருங்கள்.

    சிங்கை ஜெயராமன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே!

      (முன்னாள்?) சேலம்வாசி ஒருவர், என் பதிவை வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி! உண்மையை சொல்லப்போனால், எனக்கு சேலத்தில் பல இடங்களின் பெயர்கள் மறந்து விட்டன! அதற்காகவே அவற்றை பற்றிய எண்ணங்களை பகிர முடியவில்லை! எனக்கு நாட்குறிப்பு எழுதும் வாடிக்கை இல்லாது போனது குறித்து இப்போது வருந்துகிறேன் :( நேரம் வாய்க்கும் போது செல்வேன் ஓர்நாள் சேலம்!

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia