ஆன்லைன் ஷாப்பிங் - 3 - பாதுகாப்பு முறைகள்!

லாப்டாப், டெஸ்க்டாப் இல்லாமல் ஆன்லைன் ஷாப்பிங்கா?! எனவே நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் உபயோகிக்கும் கணினிகளில், தரமான "Anti Virus & Anti Spyware" சாப்ட்வேர்களை நிறுவுவது! அத்தோடு நில்லாமல் அவ்வப்போது Windows மற்றும் Virus/Spyware Definition-களை அப்டேட் செய்வது அவசியம் (Linux பிரியர்கள் நக்கலாக சிரிப்பது கேட்கிறது!). மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை ஃபுல் ஸ்கேன் செய்து உங்கள் கணினியின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!
டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங்கை விட, கிரெடிட் கார்டு உபயோகிப்பதே சிறந்தது என சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்! அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் கொஞ்சம் பழமையானவை! அதாவது டெபிட் கார்டு விவரங்கள் களவு போனால் உங்களுடைய சேமிப்பு கணக்கில் இருந்து பணம் சுத்தமாக வழித்து எடுக்கப்படலாம் என்பதே அது! ஆனால், வங்கிகள் வழங்கும் "ஜீரோ பேலன்ஸ் சேவையை" மிகச்சிறந்த முறையில் உபயோகித்து வரும் எங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு அந்த பயம் கொஞ்சமும் இல்லை ;)

அவர்கள் கூறும் இன்னொரு காரணம் - கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள், கார்டின் வகைக்கேற்ப பல இன்சூரன்ஸ் வசதிகளை அளிக்கின்றன. மோசடி நடந்தது தெரியவந்து, நீங்கள் உடனடியாக அவர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் களவு போன தொகையை நீங்கள் கட்டி அழத்தேவையில்லை - அது இன்சூரன்ஸ் மூலம் கட்டப்பட்டு விடும்! இப்போது இந்த வசதியை டெபிட் கார்டிலும் பல வங்கிகள் வழங்குகின்றன. எதற்கும் உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டுகளில் இந்த சேவைகள் உள்ளனவா என சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி உறுதிபடுத்தி கொள்ளுங்கள்!

கிரெடிட் கார்டோ, டெபிட் கார்டோ அல்லது நெட்பேங்கிங்கோ - இவற்றில் எதையும் உபயோகப்படுத்தும் முன் கீழ் கண்ட பாதுகாப்பு முறைகளை பின்பற்றுங்கள்!

நெட் பேங்கிங் (Net Banking):
உங்களுக்கு இந்த வசதி ஏற்கனவே இல்லாத பட்சத்தில், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகி உங்கள் நெட் பேங்கிங் சேவைக்கான பயனர் கணக்கு மற்றும் தற்காலிக பாஸ்வோர்டை பெற்று, முதல் வேலையாக பாஸ்வோர்டை கடினமான ஒன்றாக மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். இந்த வசதி மூலம் நேரடியாக உங்கள் சேமிப்புக்கணக்கில் இருந்து பண பரிமாற்றம் செய்யலாம்! சில வங்கிகள் கூடுதலாக "பாதுகாப்பு கேள்வி / பதில்கள்"  மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வசதியையும் அளிக்கின்றன. இதன் மூலம் உங்களுடைய பாஸ்வோர்ட் பிறர்க்கு எப்படியோ தெரிந்து விட்டாலும், நீங்கள் ஏற்கனவே உள்ளீடு செய்து வைத்த கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களால் ஒரு பைசாவையும் எடுக்க முடியாது. அதே போல சில வங்கிகள் கார்டின் பின்புறம் சில ரகசிய எண்கள் கொண்ட Grid-ஐ பிரிண்ட் செய்திருக்கும், நீங்கள் பண பரிமாற்றம் செய்யும் போது பாஸ்வோர்ட் மட்டுமன்றி இந்த எண்களும் கைவசம் இருப்பது அவசியம்!

கிரெடிட் / டெபிட் கார்டு பாஸ்வோர்ட்:
சேமிப்பு கணக்கை நெட் பேங்கிங் பாஸ்வோர்ட் மூலம் காப்பது போல, கார்டுகளுக்கும் பாஸ்வோர்ட் வைத்துக்கொள்ளலாம்! உங்களுடையது Visa கார்டாக இருக்கும் பட்சத்தில் Verified by Visa வசதி மூலமும், Master கார்டாக இருக்கும் பட்சத்தில் MasterCard SecureCode மூலமாகவும் பாஸ்வோர்ட் செட் செய்து கொள்ளலாம். முதன் முறை நீங்கள் கார்டை ஆன்லைனில் பயன்படுத்தும் போதே உங்கள் வங்கி இந்த வசதியை உபயோகிக்கச் சொல்லி அதற்கான ஸ்டெப்புகளை விளக்கும்!

விர்ச்சுவல் கீபோர்ட் (Virtual Keyboard):
மேற்கண்டவாறு நீங்கள் செட் செய்த பாஸ்வோர்ட்டை, பண பரிமாற்றம் செய்யும்போது கீபோர்ட் மூலம் டைப் செய்யாமல், ஸ்க்ரீனில் தெரியும் விர்ச்சுவல் கீபோர்ட் மூலம், மௌஸின் துணையுடன் உள்ளீடு செய்யுங்கள்! விர்ச்சுவல் கீபோர்ட் மூலம் அடிக்கப்பட்ட பாஸ்வோர்ட்களை "Key Logger" சாப்ட்வேர்களால் கண்டுபிடிக்க இயலாது!

SMS / Email அலெர்ட்டுகள் (Alerts):
உங்களுடைய இ-மெயில் முகவரியையும், மொபைல் நம்பரையும் பேங்கில் பதிவு செய்து உங்களுக்கு அக்கௌன்ட் யூசேஜ் அலெர்ட் வருமாறு செட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுடைய கார்டிலோ அல்லது சேமிப்புக் கணக்கிலோ என்ன transaction நடந்தாலும் அடுத்த சில நொடிகளிலேயே உங்களுக்கு SMS மற்றும் இ-மெயில் மூலம் தெரிந்து விடும்!

வங்கி தொடர்பு எண்கள் / இ-மெயில் முகவரிகள்:
உங்கள் அனுமதியின்றி நடக்கும் transaction-களை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது! அதை உடனே வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும்! எனவே வங்கியின் போன் பேங்கிங் நம்பரை உங்கள் போனிலும் மற்றும் உங்கள் கிரெடிட் / டெபிட் / சேவிங்க்ஸ் அக்கௌன்ட் எண்களை உங்கள் நினைவிலும் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். 'நினைவில் ஏன் வைக்க வேண்டும், அந்த எண்கள்தான் கார்டிலேயே பிரிண்ட் ஆகி இருக்குமே?' என்கிறீர்களா? கார்டோடு சேர்ந்து பர்ஸையும் பறிகொடுத்தால் என்ன செய்வீர்கள்?! உங்களால் அவ்வளவு எண்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது என்ற பட்சத்தில் யாரும் அறியாத வண்ணம் ஒரு பேப்பரிலோ அல்லது மொபைலிலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அதற்காக "My Citi Bank Credit Card Number: 1234 2345 3456 4567 / Password: anushka143" என்றெல்லாம் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்துக் கொள்ளக் கூடாது! முடிந்தால் சங்கேத மொழியில் ராணுவ ரகசியம் போல் குறித்துக் கொள்ளுங்கள்! (இதற்கே ஒரு தனிப்பதிவு தேவைப்படும்!) :)

போன் பேங்கிங் (Phone Banking):
அதே போல உங்கள் சேமிப்புக் கணக்கை போன் மூலம் உபயோகிக்க போன் பேங்கிங் PIN நம்பரை செட் செய்ய வேண்டியது அவசியம். இந்த வசதி நீங்கள் போன் மூலம் ஆர்டர் செய்தால் உபயோகப்படும் - இருந்தாலும் இந்த முறை அவ்வளவாக பிரபலமாகவில்லை!.

சென்ற பதிவில் குறிப்பிட்டது போல், பிரௌசிங் சென்டர்களில் பண பரிமாற்றம் செய்வதை கண்டிப்பாக தவிருங்கள்! வீட்டில் அல்லது அலுவலகத்தில் உங்களுக்கு பிரத்தியேகமான கணினி இருக்கும் பட்சத்தில் மட்டும் அதை செய்யுங்கள்!. பேங்க் / கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்களை கவனமாக படித்து, அதில் காணும் transaction-கள் யாவும் சரியானவையா என உறுதி செய்து கொள்ளுங்கள்! ஸ்டேட்மென்ட் வரும்வரை காத்திருக்காமல் நெட் பேங்கிங் மூலம் அவ்வப்போது transaction-களின் மேல் ஒரு கண் வைத்திருப்பது அவசியம்.

இந்த பதிவின் நீளம், ரொம்ப அகலமாக ஆகிவிட்டதை தவிர்க்க இயலவில்லை! :) ஆனாலும் இந்த விவரங்கள் யாவும் மிக அவசியம் என்பதாலேயே இத்தனை நீளம்! அடுத்த பதிவில் சில பிரபலமான ஆன்லைன் ஷாப்புகள் பற்றி பார்க்கலாம்! :)

ஆன்லைன் ஷாப்பிங் - முந்தைய பாகங்கள்!

கருத்துகள்

 1. பொறுமையாக படித்ததிற்கு நன்றி! :)

  பதிலளிநீக்கு
 2. நண்பரே,

  உங்கள் பதிவிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் வித்தியாசமாக இருப்பதற்கு எனது பாராட்டுக்கள்.
  நீங்கள் விவரிக்கும் முறை மிகவும் நன்றாக உள்ளது.

  கிருஷ்ணா வ வெ

  பதிலளிநீக்கு
 3. @கிருஷ்ணா: தொடர்ந்து படிப்பதற்கும், பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே! :)

  பதிலளிநீக்கு
 4. ஒரு நல்ல தொடர்பதிவு . இது போன்ற பதிவுகளை மேலும் எதிர் பார்கிறேன்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia