மொக்கை எனப்படுவது யாதெனின்...!

தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்ததொரு சொல் மொக்கை! இதை நாளுக்கு ஒரு தடவையாவது பயன்படுத்தாவிட்டால் தமிழனுக்கு இரவில் தூக்கம் வராது - 'ச்சே, செம மொக்கை... நைட்டானா தூக்கமே வர்றதில்லே' என புலம்பியவாறு தூங்கிப்போவான் தமிழன்! இவ்வளவு பெருமையும், புகழும் வாய்ந்த இந்தச் சொல் எங்கு, எப்படி, எப்போது தோன்றியது? இதைக் கண்டுபிடித்தது யார்? தமிழ் திரைப்படங்களில் இந்த சொல்லை முதலில் உபயோகித்து அதன் மூலம் ஒரு மொழிப் புரட்சிக்கு வித்திட்ட அந்த வில்லன் யார் போன்ற தகவல்கள் உலகத் தமிழ் வரலாற்றில் இன்னமும் விடை கிட்டாத இரகசியங்கள்! இந்த மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாறை வெளிக்கொணரும் முயற்சியின் சிறிய தொடக்கமே இந்த மொக்கைப் பதிவு!

மொக்கை - ஒரு சிறு குறிப்பு வரைக: 
மொக்கை என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? ஒரு சுமாரான ஷேவிங் ப்ளேடுதானே! கரெக்ட்! அதனால்தான் மொக்கை போடுவதை, ப்ளேடு போடுவது என்றும் சொல்வார்கள்! அதாவது கூர்மையாகவும் இல்லாமல், மழுங்கலாகவும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலைதான் மொக்கை! அப்படி இருக்கும் ப்ளேடின் மூலம் கழுத்தை அறுத்தால் அறுபடாது, ஆனால் ரொம்ப வலிக்கும்! இரத்தம் வராது, ஆனால் அலறல் சத்தம் வரும்! சுருங்கச் சொன்னால் இரத்தமில்லாமல் யுத்தம் செய்யும் ஒரு வித்தைதான் மொக்கை!

சில மொக்கை உதாரணங்கள்:
மொக்கைக்கு ஏதாவது ஒரு உதாரணம் சொல்ல முடியுமா? 'உன்னுடைய ப்ளாக்தான்' என கடுப்பேற்ற வேண்டாம்! அப்புறம் எதுதான் மொக்கை - நான் இப்போது போட்டுக் கொண்டிருப்பதும் ஒருவகை மொக்கை! அதாவது எந்த ஒரு பயனும் இல்லாமல் இந்த மாதிரி சொத்தையாக எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பது! பயனுள்ள தகவல்களை கொட்டாவி வரவைத்திடும் படி சொல்வது இன்னொரு வகை மொக்கை! யாராவது ஜோக்'கடித்து' உங்களுக்கு சிரிப்புக்கு பதில் அரிப்பு வந்தால் அந்த ஜோக் ஒரு மொக்கை! அவ்வளவு ஏன் உங்கள் அம்மா, அப்பா & ஆசிரியர்கள் உங்களிடம் பேசினாலே மொக்கைதான்! கல்யாணமானவராயிருந்தால் உங்கள் மனைவியோ அல்லது கணவரோ கல்யாணமான 30 நாட்களுக்கு பிறகு பேசுவது எல்லாமுமே மொக்கை!

மொக்கை - பெயர்க்காரணம்:
ப்ளேடு என்றாலே ஷேவிங் ப்ளேடு மட்டும்தான் உங்கள் நினைவுக்கு சரக் என்று வரும்! ஆனால் கத்தியின் பிடியைத் தவிர்த்த முன்பக்க உலோகப் பகுதியும் ப்ளேடு என்றுதான் அழைக்கப்படும் என்ற சதக் உண்மை உங்களுக்கு தெரியுமா? ஷேவிங் ப்ளேடு பிரபலமாகாத அந்த காலத்தில் இந்த மாதிரி மொக்கை போடுபவர்களை 'மொண்ணை கத்தி' என்று அழைத்தார்கள், அதாவது கூர்மை இல்லாத கத்தி! இந்த மொண்ணைக் கத்திகளை கூர் தீட்டுவதற்காகவே சாணை பிடிப்பவர்கள் வீதிக்கு வீதி அலைந்து கொண்டிருப்பார்கள்! மொண்ணை என்ற சொல்லை பல பேர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் - மொண்னை, மொன்னை, மொன்ணை என்று பலவாறும் பயன்படுத்தி நாளடைவில் அந்த சொல் திரிந்து, மறுகி, மழுங்கி, கூர்மை இழந்து 'மொக்கை' ஆனது! சுருக்கமாக சொன்னால் - மொண்ணைக்கே மொண்ணை போட்டு அதை மரண மொண்ணை ஆக்கும் நிலைதான் மொக்கை!

ஆதாரங்கள்:
மெட்ராஸ் அதாவது சென்னை பல்கலைகழகத்தின் தமிழ் Lexicon-இல் இருந்து:
  • மொண்ணை moṇṇai : n. cf. மண்ணை. 1. Baldness; வழுக்கை. 2. Bluntness; கூர்மை யின்மை.
  • மொக்கை mokkai : n. < மொக்கு³. 1. Bluntness, as of an iron style; கூரின்மை. பேனா மொக்கையாய் விட்டது. 2. Bulkiness; stoutness; பருமன். 3. Piece of wood; stump; மரத்துண்டு. Loc. 4. Low condition; தாழ்வு. Loc. 5. Ignominy, shame, disgrace; அவமானம். (யாழ். அக.) 6. Respect; மதிப்பு. (யாழ். அக.) 7. Face; முகம். மொக்கைக்காட்டி யடித்தான். Loc.
  • சாணைபிடி-த்தல் cāṇai-piṭi- : v. tr. & intr. < சாணை¹ +. To grind, whet, sharpen, as a weapon; ஆயுதத்தைக் கூர்மைப்படுத்துதல். (திவ். திருப்பா. 1, அரும். 32.)
பி.கு. 1: இந்த தமிழ் Lexicon-னை சென்னை பல்கலை கழக வெப் சைட்டில் வைக்காமல் சிகாகோ பல்கலைகழகத்தில் வைத்தது ஏன் என்று கேள்வி கேட்டு மொக்கை போடக் கூடாது!

பி.கு. 2: மொண்ணை மறுகி மொக்கை ஆனதிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டு சேதாரம் பண்ணாதீர்கள்! அது நானாக கண்டுபிடித்த ஆதாரம்! ;) உண்மையில் மொக்கை என்பதற்கு "முகம்" என்ற அர்த்தம் உட்பட வேறு பல அர்த்தங்கள் இருப்பதைப் பார்த்தால் அது ஒரு மருகாத தூய தமிழ் தனிச் சொல்லாகவும் இருந்திட வாய்ப்பு இருக்கிறது! அதற்காக உங்கள் காதலியோ அல்லது மனைவியோ உங்களிடம் பேசும்போது, 'உன் மொக்கை சகிக்கல' என்று டபுள் மீனிங்கில் பேச வேண்டாம்! ;)

தமிழ் சினிமாவில் மொக்கை:
தமிழ் சினிமாவே மொக்கைதான் என பஞ்ச் டயலாக் அடிக்காதீர்கள்! :) பிரதர், கில்மா, ஜில்பான்ஸ், மாம்ஸ், மாப்ளே, மச்சி, கலாய், அவ்வ்வ் - என தமிழ் சினிமாக்கள் மூலம் ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலமான சொற்கள் ஏராளம்! ஆனால், எல்லாவற்றையும் ஓரம் கட்டி விட்டு பாப்புலாரிடி மீட்டரில் பெரிய அப்பாடக்கராக இருக்கும் ஒரே சொல் திருவாளர் "மொக்கை"தான்! 15 வருடங்களுக்கு முன் நான் கல்லூரி முடித்த காலத்தில் கூட இந்த சொல் பிரயோகத்தில் இருந்ததாய் நினைவில்லை! இந்த சொல்லை முதலில் பயன்படுத்தியவர் கவுண்டமணியா, வடிவேலா, விவேக்கா, சந்தானமா என்பதை கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு ஒரு பேக் Topaz ப்ளேட் பரிசாக வழங்கப்படும்! இந்த மொக்கை ஆராய்ச்சியை இன்னொரு பதிவில் வைத்துக்கொள்வோம்!

மறுபடியும் முதல்லே இருந்தா?! ;)

கருத்துகள்

  1. இப்பிடியெல்லாம் பதிவை தேத்த முடியுமா.? :D

    பதிலளிநீக்கு
  2. நமக்கு ஒரு பதிவு போட 10 நாள் ஆகுது :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க பதிவை போடறீங்க! நாங்க மொக்கை போடறோம்! :D

      நீக்கு
  3. சிகாகோ பல்கலைகழகத்திடம் உங்களுக்கு "முனைவர்" பட்டம் கொடுக்க சொல்ல வேண்டும். அப்படியே நோபல் பரிசுக்கும் சிபாரிசு செய்ய வேண்டும்.

    :) :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனே செய்யுங்கள்! ;) ஆஸ்காரை ஏன் விட்டு விட்டீர்கள்! :D

      நீக்கு
    2. அந்த காரை யார் வெச்சிருக்காங்க??? :P

      நீக்கு
  4. எங்கிருந்தாவது இப்படி புதுசு புதுசா ஒரு மேட்டர் தேடிக்கிறீங்கப்பா. மொக்கையை வச்சே ஒரு பதிவை தேத்தீட்டிங்களே?

    பி.கு - மொக்கைன்னா அது சுமாரான ப்ளேடுன்னு இன்னிக்கு தான் தெரியும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் மொக்கை போடுவதை, ப்ளேடு போடுவது என்றும் சொல்வார்கள்! ;)

      நீக்கு
  5. பதிவை படிக்கும் போது கொட்டாவி வந்தது காரணம் தான் தெரியல. ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்! சிறந்த மொக்கைக்கு அதுதான் அடையாளம்! :)

      நீக்கு
  6. அட்டா எத்தனை விதமான மொக்கை..

    உங்கள் பதிவுகள் எல்லாமே வெகு சுவாரஸ்யம்.. Monthly update அசத்தல்..

    சலூன் பதிவும் சூப்பர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ப்ளேட்பீடியாவின் 50-ஆவது உறுப்பினராக இணைந்ததிற்கு வாழ்த்துக்கள் மற்றும் அனுதாபங்கள்! ;)

      நீக்கு
  7. //அப்படி இருக்கும் ப்ளேடின் மூலம் கழுத்தை அறுத்தால் அறுபடாது, ஆனால் ரொம்ப வலிக்கும்! இரத்தம் வராது, ஆனால் அலறல் சத்தம் வரும்! சுருங்கச் சொன்னால் இரத்தமில்லாமல் யுத்தம் செய்யும் ஒரு வித்தைதான் மொக்கை!/

    ஹா ஹா ரூம் போட்டு யோசிச்சீங்க போல கலக்கல்

    பதிலளிநீக்கு
  8. என்ன ஒரு அருமையான "மொக்கை" பதிவு.
    வாழ்த்துக்கள் நண்பரே.
    தொடரட்டும் உங்கள் மொக்கை பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் நண்பா, தமிழ் நாட்டின் தென் பகுதிகளில் இன்றும் மொக்கை என்ற சொல் உள்ளது . அதற்கு, பெரிய மற்றும் தடிமனான என்ற பொருள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia