புது டம்ளரில் குடிக்க மாட்டேன்! - போஸ்ட் கார்ட் பதிவுகள் - தோல்வி?!

நண்பர்களே, அவசரப்பட்டு களத்தில் இறங்குவது அப்புறம் திரு திரு என்று மரியாதையாக முழிப்பது எனக்கு புதிது அல்ல! :) சோதனை முயற்சியாக இன்னொரு வலைப்பூவை சில நாட்களுக்கு முன் தொடங்கினேன்! சும்மா இருக்காமல் டொமைன் வேறு ரெஜிஸ்டர் செய்தாயிற்று! அறிமுகப் பதிவை தவிர்த்து மூன்று பதிவுகள் இட்டு விட்டேன்! ஆனால், அந்த முயற்சியை தொடர்வதா வேண்டாம் என்பதில் சிறு குழப்பம்! அந்த பதிவுகளை உங்கள் பார்வைக்காக இங்கே கொடுத்துள்ளேன்! இது போன்ற சிறிய பதிவுகள் ப்ளேட்பீடியாவில் வெளிவந்தால் ஓகேதானா?! உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்! :)

1. புது டம்ளரில் குடிக்க மாட்டேன்!
புதிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில், அவற்றை தயாரித்த அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருப்பதை கவனித்திருப்பீர்கள்! அந்த ஸ்டிக்கரை பிரிக்க முயற்சி செய்திருக்கிறீர்களா?! துணிகளில் இருக்கும் கிரீஸ் கரையை கூட நீக்கி விடலாம் ஆனால் இந்த ஸ்டிக்கரை முழுதாக நீக்க முடியாது! நகத்தை கொண்டு உரித்தால் ஸ்டிக்கரின் மேற்பகுதி மட்டும் தனியாக பிரியும், பிறகு வெண்மையான ஸ்டிக்கரின் அடிப்பகுதி தெரியும்! அப்படி எதைக் கொண்டுதான் ஒட்டுவார்களோ தெரியவில்லை, கொலைவெறியோடு சுரண்டினாலும் ஆங்காங்கே பசையும், அரைகுறையாய் கிழிந்த ஸ்டிக்கரும் நமக்கு பெப்பே காட்டும்! சோப்புத் தண்ணீரில் ஊற வைத்தாலும் வராது! பசையின் வீரியத்தைப் பொறுத்து ஸ்டிக்கர் முழுவதுமாய் பிரிய சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ ஆகலாம்!!! இதற்காகவே புது டம்ளரில் குடிக்க (குடிநீர் அல்லது காஃபிதான்!) விரும்புவதில்லை. பிசுக் பிசுக் என்று விரல்களில் பசை ஒட்டினாலே எரிச்சலாக இருக்கும், இதே காரணத்திற்காக புதுத் தட்டிலும் சாப்பிடுவதில்லை! :)

அன்புள்ள பாத்திர தயாரிப்பாளர்களே, வியாபாரிகளே பாத்திரங்கள் உங்கள் நிறுவனத்தில்தான் வாங்கப்பட்டது என்ற பேருண்மை, நாங்கள் அதை வாங்கும் போதே எங்களுக்கு தெரியும்! எப்போதாவது எட்டிப் பார்க்கும் விருந்தாளிகளுக்கு இந்த பாத்திரங்களின் வடிவமைப்பு பிடித்திருந்தால் 'எந்த கடையில வாங்கினீங்க, நல்லா இருக்கே!' என்று எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்! எனவே, தயவு செய்து பாத்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டாமல் அல்லது எளிதில் பிரியகூடிய வகை ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்டி விற்றால் அவை எங்கள் கைகளில் ஒட்டாமல் இருக்கும்!

2. உங்கள் பதிவுகள் பிறரின் வலைப்பூக்களில் தெரிய வேண்டுமா?!
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்திருந்தால், ஒரு வலைப்பூவின் முகப்பில் மற்றதன் சமீப பதிவுகளை காண்பிக்க விரும்பலாம் (ஒரு விளம்பரம்தான் ;) இடது பக்கம் பார்க்க!). அல்லது உங்கள் அபிமான வலைப்பூக்களில் ஏதாவது ஒன்றின் - உதாரணத்திற்கு Bladepedia-வின், சமீபத்திய சில பதிவுகளை உங்கள் வலைப்பூ முகப்பில் பட்டியலிட விரும்பலாம்! அப்படிச் செய்ய உங்களுக்கு அந்த வலைப்பூவின் RSS feed அட்ரஸ் தெரிந்திருக்க வேண்டும்! Bladepedia-வின் RSS feed இதோ:
http://www.bladepedia.com/feeds/posts/default

ப்ளாகின் Layout பகுதிக்கு சென்று 'Feed' Gadget-ஐ நிறுவுங்கள்!

www.blogger.com --> உங்கள் ப்ளாக் பெயர் மீது ஒரு கிளிக் --> இடப்பக்கம் Layout மீது ஒரு க்ளிக் --> வலப்பக்கம் தேவையான இடத்தில் "Add Gadget" மீது ஒரு க்ளிக் --> Basics --> Feed --> "Configure Feed" Gadget இப்போது திறக்கும் --> "Feed URL"-க்கு எதிரே http://www.bladepedia.com/feeds/posts/default என்ற முகவரியை கொடுத்து விட்டு "Continue" மீது ஒரு க்ளிக்! படத்தில் காட்டியது போல், Feed-க்கான தலைப்பு, எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும் போன்ற விவரங்களை தெரிவு செய்து விட்டு --> Save மீது ஒரு க்ளிக்! --> அவ்ளோதான்!

இப்போது உங்கள் வலைப்பூவை (ரெப்ரெஷ் செய்து) பார்த்தால், ப்ளேட்பீடியாவில் இருந்து சமீபத்திய 5 பதிவுகளின் சுட்டிகள் உங்கள் வலைப்பூவை அலங்கரிக்கும்! உங்களுக்கு Bladepedia பிடிக்கவில்லை என்றால், மாறாக இந்த feed முகவரியை கூட பயன்படுத்தலாம்: http://www.kuttiblade.com/feeds/posts/default - அல்லது யாருடைய வலைப்பூவில் உங்களுடைய பதிவுகள் தெரியவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களிடம் உங்கள் வலைப்பூவின் RSS Feed முகவரியை கொடுத்து மேற்காணும் முறையை பின்பற்ற சொன்னால் போதுமானது! அப்பாடா தலைப்பு Justified!

3. கற்பிழந்த கார்கள்!
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் எதிரொலியாக, பெங்களூர் ட்ராபிஃக் போலீஸ் - 'கார்களில் உள்ள சன் ஃபிலிமை அகற்ற வேண்டும்' என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்ததுமே நீதிக்கு தலை வணங்கி, கார் கண்ணாடிகளின் கற்பை ஆள் வைத்து சூரையாடினேன்! உறித்த கோழி போலாகி விட்ட காரை, வெளியில் எடுக்கவே சங்கடமாக இருக்கிறது! கீறல் விழுந்த கண்ணாடி வழியாக பார்த்தால் ரோடு, கோடு கோடாக தெரிகிறது! சிக்னலில் நிற்கும் போது பக்கத்து வண்டிக்காரர்கள் ஆவலாய் காருக்குள் நோட்டமிடுகிறார்கள்! வெயில் அடித்தால் கண்கள் கூசுகின்றன! இதை எல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம்! முக்கால்வாசி பேர் இன்னமும் கார்களில் சன் ஃபிலிம் அகற்றாமலேயே பவனி வருகிறார்கள்! அவர்களின் நக்கலான பார்வையைத்தான் தாங்க முடியவில்லை!

லட்சக்கணக்கில் ஃபைன் கலெக்ஷன் செய்ததாக செய்திகள் மட்டும் வெளியாகின்றன! ஆனால், ட்ராபிஃக் கான்ஸ்டபிள்களோ இன்னமும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களை பிடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்! ரோட்டை அடைக்காமல் 'காரியத்தை முடிக்கலாம்' என்பதுதான் காரணமா என்று தெரியவில்லை! சன் பிலிம் அகற்றாத கார்களையும் வளைச்சு வளைச்சு பிடிங்க சார், ப்ளீஸ்! தமிழ்நாட்டுல நிலைமை எப்படி?!

கருத்துகள்

  1. நீங்க எதுல எழுதுனாலும் உங்களை விரட்டி விரட்டி ப(அ)டிப்போம் :D :D

    பதிலளிநீக்கு
  2. நல்லா சொன்னாரு நம்ம நண்பர் வரலாற்று சுவடுகள்...

    பதிலளிநீக்கு
  3. எவர்சில்வர் புது டம்ளர் ஸ்டிக்கரை கேஸ் தீயின் மீது ஒரு நிமிடம் காய்ச்சி ஸ்டிக்க்கரை எடுத்தால் கிழியாமல் வந்து விடும். டம்ளர் சூடாக இருக்கும்போதே துணியால் துடைத்தால் பசையும் போய்விடும்.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. எத்தனை வலைதளங்கள் இருந்தாலும் பதிவுகளை மட்டும் கேப் இல்லாமல் போட்டு கொண்டே இருக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. // எனவே, தயவு செய்து பாத்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டாமல் அல்லது எளிதில் பிரியகூடிய வகை ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்டி விற்றால் அவை எங்கள் கைகளில் ஒட்டாமல் இருக்கும்! //

    வாஸ்தவம் தான் அதுக்காக
    இலவசமாக நாங்கள் செய்யும் விளம்பரங்களை தயவு செய்து தடை போடாதீர்கள் ;-)
    .

    பதிலளிநீக்கு
  7. // புது டம்ளரில் குடிக்க மாட்டேன்! - போஸ்ட் கார்ட் பதிவுகள் - தோல்வி?! //

    ம்ஹூம் இப்புடியெல்லாம் அடம் பிடிக்ககூடாது

    தோல்வியே வெற்றிக்கு முதல்படி , தொடருங்கள் வெற்றி பெறுவீர்கள் :))
    .

    பதிலளிநீக்கு
  8. //அந்த முயற்சியை தொடர்வதா வேண்டாம் என்பதில் சிறு குழப்பம்!//

    ஹலோ நண்ப்ஸ் ஏன் இந்த தயக்கம் ?

    பின்னூட்டமே இல்லாமல் பல ஆண்டுகளாய் தினமும் பதிவிடும் இந்த வலைத்தலத்தை பாருங்கள். நான் தான் சில மாதங்களுக்கு முன் முதல் பின்னூட்டமிட்டேன்.
    http://pettagum.blogspot.in/


    முன் வைத்த காலை பின்வைக்க வேண்டாமே! .......

    பதிலளிநீக்கு
  9. புதுச தொடரலாமா வேணாமான்னு ஒரு பதிவு போட்டு அதுக்கு 10 கமன்ட் வாங்குற உங்க அப்ரோச் புடிச்சிருக்கு ? :D

    எனி வே என்னைய பொறுத்த வரைக்கும் bladepedia விலேயே குரும்பதிவுகள் ன்னு கேட்டேகரியில் போடலாமே எங்களுக்கும் ஒரே இடத்தில் படித்த மாதிரி இருக்கும். உங்களுக்கும் ரெண்டு இடத்தை மெயின்டைன் பண்ண தேவை இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia