காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 - நிறைவுப் பதிவு - ஒரு இனிய அனுபவம்!

காமிக் கானில் என்னை பிரம்மிக்க வைத்த விஷயம் என்னவென்றால், விழாவிற்கு வந்திருந்த கூட்டம் வெறும் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமாக இல்லாமல் கைகளில் ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை அள்ளிச் சென்றதுதான்! வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் காமிக்ஸ் ஆர்வலர்களே என நினைக்கிறேன். அனைத்து வயதினரும், தங்கள் வயதுக்கு ஏற்ற ஏதோ ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கியதாகவே தெரிந்தது! "காமிக்ஸ் என்பது சிறு பிள்ளைகளுக்கு மட்டும்" என்று இன்னமும் தவறாக எண்ணிக்கொண்டிருப்பவர்கள் இந்த கண்காட்சியை ஒருதரம் பார்த்திருந்தால் உண்மையை உணர்ந்திருப்பார்கள்!

பல பதிப்பகங்கள் மற்றும் பிரபல புத்தகக் கடைகள் தமது ஸ்டால்களை அமைத்திருந்தன! ஆனால், அப்படி ஒன்றும் பிரமாதமான தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கவில்லை! சிறிய / புதிய பதிப்பகங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் MRP விலைக்கோ அல்லது ஆன்லைனில் விற்பதை விட சற்று அதிக விலைக்கோ விற்றுக் கொண்டிருந்தனர்! "War Picture Library Collection" என்றொரு பருமனான புத்தகம் இருந்தது - விலையைக் கேட்டால் பத்து பவுண்டுகள் என்றார்கள், நாம் இருப்பது லண்டனிலா, பெங்களூரிலா என்ற குழப்பத்துடன் இடத்தை காலி செய்தேன்! Batman-இன் சன்னமான காமிக்ஸ் புத்தகங்கள் ஒவ்வொன்றின் விலையும் ரூபாய் ஆயிரத்துக்கு மேல் - லயனில் வரும்போது படித்துக்கொள்ளலாம் என நடையைக் கட்டினேன்! ;)

பொதுவாய் ஆங்கில காமிக்ஸ்களை படிக்கும் வழக்கம் இல்லை என்பதால் அவற்றை வாங்குவதில் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் சில இந்தியப் பதிப்பகங்களின் உள்ளூர் தயாரிப்புக்கள் கண்களையும், கவனத்தையும் ஈர்த்தன! அந்த பதிப்பகங்களின் பெயர்கள்: Campfire, Level 10, Pop Culture, Rovolt & Vimanika! இவர்களின் காமிக்ஸ் புத்தகங்களை புரட்டிப்பார்த்து வியப்பிலாழ்ந்தேன் - சித்திரங்கள் உலகத் தரத்தில் இருந்தன! கதையமைப்பும் உலகத்தரமா என்பது படித்துப் பார்த்தால்தான் தெரியும்! இவற்றில் சிறப்பானவற்றை தேர்வு செய்து, தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இந்தியப் படைப்புகளுக்கும் நாம் ஆதரவு அளிக்க வேண்டும் எனபது என் ஆசை - ஒருவேளை விஜயன் அவர்கள் மனது வைத்தால் இது நடக்கலாம்!

ஒரேயடியாக எல்லா புத்தகங்களையும் வாங்க மனம் (பணம்) இல்லாததால், Pop Culture பப்ளிஷர்சின் Payback மற்றும் Rovolt பப்ளிஷர்சின் Aveon இரு பாகங்கள் - இந்த மூன்று காமிக்ஸ்கள் மட்டும் வாங்கினேன்! என் மகனுக்காக ஒரு சோட்டா பீம் குட்டீஸ் படக்கதை மற்றும் ஒரு மாற்றத்துக்காக சூஃபி குட்டி(பட)க்கதைகள் இவற்றையும் வாங்கினேன்! Payback தீவிரவாதத்தை கதைக்களனாக கொண்டிருக்கிறது! இதன் ஓவியரை ஸ்டாலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது - வெகு சமீபத்தில்தான் தனது கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்! இவ்வளவு இளவயதில் அவருடைய சித்திரத் திறமை வியக்க வைக்கிறது - விற்பனையான ஒவ்வொரு Payback புத்தகத்திலும் தன்னுடைய இனிஷியலை அழகாகப் பொறித்துத் தந்தார்! Aveon ஒரு அறிபுனைத் தொடர்கதை - இது வரை இரு பாகங்கள் வெளியாகியுள்ளன! இந்திய ஓவியர்களின் கைவண்ணத்தில் சித்திரங்கள் அட்டகாசமாக இருக்கிறது - சுருக்கமாக சொன்னால் இந்தியாவில் இருந்து ஒரு உலக காமிக்ஸ்! இந்த இரண்டு கதைகளையும் இன்னமும் படிக்கவில்லை, படித்த பின்னர் முடிந்தால் ஒரு விமர்சனப் பதிவிடுகிறேன்!


ப்ளேட்பீடியாவைத் துவக்கிய சமயம் புத்தகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி ஒரு பதிவிட்டது நினைவிருக்கலாம். காமிக் கானில் நான் மிகவும் எதிர்பார்த்து சென்ற விஷயம் - காமிக்ஸ் இதழ்களை பாதுகாக்க ஏதுவான மைலார் உறைகளையும், அமிலத் தன்மையற்ற அட்டைகளையும் வாங்கலாம் என்பதுதான்! துரதிர்ஷ்டவசமாக எந்த ஒரு ஸ்டாலிலும் இவற்றைக் காண இயலவில்லை! நம்நாட்டில் இன்னமும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படாதது வருத்தத்துக்குரியது!

காமிக்ஸ் தவிர்த்து குட்டீஸ்களை கவர்வதற்காக எக்கச்சக்கமான ஸ்டால்கள்! சின்னச் சின்ன பொம்மைகளுக்கெல்லாம் யானை விலை குதிரை விலை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்! இரண்டு நாட்களில் ஸ்டால் வாடகையை மீட்டாக வேண்டுமே - அவர்கள்தான் என்ன செய்வார்கள்?! அழுது அடம் பிடிக்கும் என் மகனை சமாதானப்படுத்த இருநூறு ரூபாய் பெறாத ஒரு காரையும் மேலும் ஒரு பொம்மையையும் வாங்கியதில் ஆயிரம் செலவாயிற்று - அழுகையின் விலை ஆயிரம்!!!  Dora மற்றும் Ninja-வின் ஆளுயர பொம்மைகள் விழாவில் உலா வந்து கொண்டிருந்தன. அவற்றின் உள்ளே இருந்தவர்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருந்தது!

நமது காரிகேச்சர்களை வரைந்து கொடுக்கவும் ஓவியர்கள் இருந்தனர் - முகத்தை வரைய Rs.150/-. என் மகனை மடியில் உட்கார வைத்து அவன் முகத்தை வரையச் சொன்னேன்! இதை வேடிக்கை பார்க்கவும், போட்டோ எடுக்கவும் ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது! யார், யார் ஃபேஸ்புக் 'வால்களில்' எங்கள் போட்டோக்கள் அடிபடுகிறதோ தெரியவில்லை! :D இரண்டரை வயது குழந்தையை வரைவது லேசுபட்ட காரியமா என்ன - அதன் முடிவில் என் மகனைப் போல ஐம்பது சதவிகிதம் தோற்றமளிக்கும் ஒரு உருவம் ஓவியர் கைவண்ணத்தில் உதித்திருந்தது - தாடையைதான் அநியாய நீளத்திற்கு இழுத்து விட்டிருந்தார்! மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்பினோம் - என் மகனுக்கு ஒரே பெருமிதம் மற்றும் சந்தோஷம்!


இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டது ஒரு இனிய அனுபவம், அதை உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் அந்த இனிமை இரட்டிப்பாகியது! இந்த கண்காட்சி வேண்டுமானால் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், தமிழ் காமிக்ஸைப் பொறுத்தவரை இது ஒரு இனிய துவக்கமாக அமைந்திருக்கிறது எனலாம். இந்திய அளவில் நடந்த ஒரு நிகழ்வில் நமது தமிழ் காமிக்ஸ் இதழ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்தது பெருமைக்குரிய விஷயம்! இது குறித்த சிறப்புப் பதிவை ஆசிரியர் S.விஜயனில் வலைப்பூவில் காணலாம்! தமிழ் காமிக்ஸ் என்று மட்டுமல்ல, பொதுவாகவே காமிக்ஸ் பற்றிய அறிதலை மக்களிடம் இவ்விழா சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது! காமிக் கான் பற்றிய எனது பதிவுகளை (இது ஆறாவது!) தொடர்ந்து படித்த உங்களுக்கு என் நன்றிகள் பல.

இத்துடன் இந்த தொடர் மொக்கைகள் நிறைவடைகிறது என்பதை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்! அதை விட அதிக மகிழ்ச்சியுடன் நீங்கள் தப்பித்துச் செல்லும் முன்னர், கீழே உள்ள படங்களை பார்த்துச் செல்ல தவறாதீர்கள்! :)

காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்!:
Comic Con Express 2012 @ Bangalore




சூஃபி காமிக்ஸின் அழகான ஸ்டால்!

லயனில் வருமா?!



ஓவியர்களின் தினம்!

விலை 10 பவுண்டுகள் மட்டுமே!



குடும்பத்தோடு படிப்போம்!

இந்தக் கூட்டம் போதுமா?!



இன்னும் கொஞ்சம் வேணுமா?!

சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்!

காமிக் கான் முழு பதிவுத் தொகுப்பு :

கருத்துகள்

  1. அந்த கதைகள் எனது ஆர்வத்தை தூண்டி விட்டன நண்பரே,முடிந்தால் கதையின் ஏதேனும் ஒரு பக்கத்தை பதிவிடுங்கள்,தங்களின் இனிமையான தருணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.ஆசிரியர் முயற்சிப்பதாக கூறியுள்ளார் ..பார்ப்போம் .....................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! Aveon படங்களை இங்கு காணலாம்:
      http://www.rovolt.com/aveon.html

      நீக்கு
  2. அருமையாக இருக்கிறது. மிஸ் செய்துவிட்டேனே :-(((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வருவீர்கள் என நினைத்தேன்! :) நீங்கள் சமீபத்தில் வாங்கிய லயன் காமிக்ஸ்கள் பற்றிய உங்கள் விமர்சனப் பதிவு எங்கே?!

      நீக்கு
    2. அதற்கு முன்பு வாங்கிய நான்கு புத்தகங்களை முடித்து விட்டு இப்போது தான் ஆரம்பித்து உள்ளேன். ஒன்று முடித்து விட்டேன். அநேகமாக அடுத்த வாரம் பதிவு எழுதுவேன் :-))

      நீக்கு
    3. வாவ்... காமிக்ஸ் பற்றிய தொழில்நுட்ப விமர்சனத்தை எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள்...

      :D :D :D

      நீக்கு
    4. அப்ப Blade-க்கு போட்டியா கிளம்பிட்டாரு krishna-ன்னு சொல்லுங்க! :)

      நீக்கு
    5. அது பலே பிரபு தளத்தில் வரும். :-)))

      //அப்ப Blade-க்கு போட்டியா கிளம்பிட்டாரு krishna-ன்னு சொல்லுங்க! //

      இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள முடிச்சுடுவீங்க போலவே.

      நீக்கு
    6. கிருஷ்ணா, நீங்களும் காமிக்ஸ் பத்தி நெறைய எழுதுங்க! நோ ப்ராப்ளம், நோ போட்டி! :D

      நீக்கு
    7. @History:
      என்னைக் கேட்டா தமிழ் காமிக்ஸ் வரலாறு சம்பந்தமா நீங்களும் ஒரு பதிவு போடலாம்! ;)

      நீக்கு
    8. //என்னைக் கேட்டா தமிழ் காமிக்ஸ் வரலாறு சம்பந்தமா நீங்களும் ஒரு பதிவு போடலாம்! ;)//


      சூப்பர்!

      நீக்கு
    9. நண்பரின் விருப்பிற்கு மறுப்பேது விரைவில் எழுதிவிடுகிறேன்! :)

      நீக்கு
    10. அருமை, விரைவில் எதிர்பார்க்கிறேன்! :)

      நீக்கு
    11. @ Abdul Basith

      வெற்றி திலகமிட்டு உங்களை வேட்டைக்கு அனுப்பிவைத்தால் இங்கு வந்து நீங்கள் மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறீர்களே? :D :D

      # Hunt for Hint-2

      நீக்கு
    12. இங்க தான் ஹின்ட் கிடைக்குதாம். ;-)))

      நீக்கு
    13. //இங்க தான் ஹின்ட் கிடைக்குதாம். ;-)))//


      ஹா ஹா ஹா!

      நீக்கு
    14. நீங்கள் இல்லாமல் தனியாக வேட்டையாடுவதில் வருத்தமாக உள்ளது.!

      :D :D :D

      நீக்கு
  3. என்னுடைய சிறு வயது காமிக்ஸ் ரசனையை தூண்டிவிட்ட உங்கள் ப்ளாக், தற்போது அதனை அதிகரிக்க வைத்துள்ளது. இறைவன் நாடினால் இந்தியா வரும்போது சில காமிக்ஸ் புத்தகங்கள் அவசியம் வாங்க முடிவெடுத்துள்ளேன்.

    ரத்தப் படலம் ஜம்போ பேக் கிடைக்குமா?

    ஹிஹிஹிஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் சந்தா கட்டி உங்கள் (இந்திய) வீட்டு முகவரிக்கு புத்தகங்களை அனுப்பச் சொல்லுங்கள்! இங்கே வரும் போது படித்துக் கொள்ளலாம்! :)

      நீக்கு
  4. // என் மகனுக்கு ஒரே பெருமிதம் மற்றும் சந்தோஷம்!//

    இது அந்த 150 ரூபாயைவிட அதிக மதிப்புள்ளது..

    :)

    பதிலளிநீக்கு
  5. அருமையான அனுபவத்துக்கு எங்களை ஆட்படுத்தி விட்டீர் நண்பரே. வாழ்க!

    பதிலளிநீக்கு
  6. உங்களிடம் காமிக் கான் பற்றி கவர் பண்ண சொல்லும் bothu
    தன்அடக்கத்துடன் முடிந்தளவு செய்கிறேன் என்று ஆரம்பித்து விட்டு முடிவில் அதகலபடுதிவிட்டீர்கள்.
    மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிருஷ்ணா! :) கொஞ்சம் ஓவராகவே எழுதி விட்டேன் போல - இனி ஒரு வாரம் லீவ்! :D

      நீக்கு
  7. // Aveon இரு பாகங்கள் //
    படங்கள் கலக்கலாக உள்ளது நண்பரே
    இப்புத்தகத்தினை பற்றிய விரிவான உங்களது பதிவை விரைவில் எதிர் பார்க்கிறோம் நண்பரே :))
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சிக்கிறேன்! :) Payback படித்து விட்டேன் - நன்றாக இருந்தது!

      நீக்கு
  8. // ப்ளேட்பீடியாவைத் துவக்கிய சமயம் புத்தகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி ஒரு பதிவிட்டது நினைவிருக்கலாம். காமிக் கானில் நான் மிகவும் எதிர்பார்த்து சென்ற விஷயம் - காமிக்ஸ் இதழ்களை பாதுகாக்க ஏதுவான மைலார் உறைகளையும், அமிலத் தன்மையற்ற அட்டைகளையும் வாங்கலாம் என்பதுதான்! //

    மன்னிக்கவும் நண்பரே உங்களது இந்த பதிவை கவனிக்கவில்லை
    மேலும் இதுபோல புத்தகங்களை பாதுகாப்பது எப்படி என்று நமது நண்பர் பாலாஜி சுந்தர் அவர்கள் தனது வலைப்பூவில் தெரிவித்திருந்தார்
    நானும் எனது புத்தகங்களை பாதுகாக்கும் வழியை அனுப்பினேன் அதனை அவர் தனது வலைப்பூவில் ஒரு பதிவாகவே போட்டுள்ளார்
    அவரை தொடர்புகொண்டால் தகவல் தெரியலாம் முயற்சிக்கவும் நன்றி :))
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி நண்பரே, பாலாஜியும் கீழே பின்னூட்டம் இட்டிருக்கிறார்!

      நீக்கு
  9. டியர் கார்த்தி,

    குண்டுச் சட்டியை விட்டு எனது குதிரையை வெளியே அவ்வளவாக ஓட்டியதில்லை. ஆனால் இந்த முறை காமிக் கானுக்காக, மொழி தெரியவில்லை என்றாலும், கட்டாயம் பெங்களூருக்கு வர வேண்டும் என்று அதி தீவிர ஆவலுடன் முயற்சி செய்தேன். ஆனால் என்ன முயன்றும் வர முடியவில்லை.

    உங்களது காமிக் கானின் வரிசையான பதிவுகளை படித்தும், படங்களை பார்த்தும் சந்தோஷப்பட்டேன். மிக நன்றாக கவர் செய்திருக்கின்றீர்கள். பதிவுகளுக்கு மிகவும் நன்றி. பல வெளிநாட்டு காமிக்ஸ்களை நாம் எக்ஸிபிஷனில் மட்டுமே பார்க்க முடியும். காரணம் அவற்றின் அதீத விலையே. இப்படி விலையிருந்தால் என்ன செய்வது? அதே சமயம் இன்று லயன் முத்துவில் வரும் புத்தக விலைக்கு வேறு எவரும் வெளியிடுவதில்லை. சினி புக் ஒவ்வொன்றும் விலை 400, 500 அல்லது அதற்கு மேல்தான் என்று நினைக்கின்றேன்.


    சில மாதங்களுக்கு முன்பே உங்களது தளத்தில் இணைந்திருந்தாலும், உங்களது பதிவுகளுக்கான மெயில் மட்டும் எனக்கு வருவதில்லை. என்ன சொதப்பி இருக்கின்றேன் என்று தெரியவில்லை. உங்கள் தளம் தான் என்று இல்லை, இன்னும் பல தளங்களின் மெயிலும் வருவதில்லை. ஒரு சில வலைத்தள பதிவுகள் பற்றிய மெயில் வருகிறது. அதுவும் 3, 4 நாள் கழித்து.

    இன்று நண்பர் சிபி, எனது தளத்தின் ஒரு பின்னூட்டத்தில் இந்த தளத்திற்கான அழைப்பு ஒன்றை இட்டு வந்தார். ஏப்ரல் மாதத்தில் நீங்கள் இட்ட புத்தக பாதுகாப்பு பற்றிய பதிவையும் பார்த்தேன். பயணுள்ள விவரங்களை பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி.

    அந்த பாழாய் போன மைலார் கவர்களைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கின்றேன். அது பற்றிய விவரம் தெரியவந்தால் சொல்கிறேன். உங்களுக்கு கிடைத்தால் நீங்களும் சொல்லுங்கள். சாதாரண கவர்கள் சில மாதங்களுக்கு பிறகு உட்பக்கமாக ரசாயணம் கசிந்து ஒட்டிக் கொள்ளும் என்று நினைக்கின்றேன். இது போன்ற சம்பவம் டிவிடிக்களில் நடந்திருக்கின்றது. சாதாரண கவர்களை விட புட் க்ரேட் ஜிப் லாக் கவர்கள் தேவலை என்று தோன்றுகிறது.

    உங்கள் குழந்தையின் படம் அருமை. உங்களுக்கு 1000ம் ரூபாய் பச்சா வைத்த சந்தோஷம், அந்த உதடுகளின் ஓரத்தில் தேங்கி நிற்கிறது. வீட்டில் பெரியவர்களை விட்டு சுற்றிப் போடச் சொல்லுங்கள்.

    உங்கள் பதிவுகள் அனைத்தும் ரசிக்கும்படியாக அதிரடியாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட மறுமொழிக்கு நன்றி நண்பரே! பரவாயில்லை விடுங்கள் - அடுத்த வருடம் நீங்களும் கலந்து கொள்ளலாம் - மூன்று நாட்கள் நடைபெறப் போகிறதாம்!

      காமிக் கான் பதிவுகளை (பொறுமையாக) படித்ததிற்கு மிக்க நன்றி! என்ன செய்ய, தமிழில் படிக்கத் தெரியாத அல்லது படிப்பதை கௌரவக் குறைச்சலாக நினைக்கும் கும்பல் இருக்கும் வரை தமிழ் காமிக்ஸ் (அல்லது பொதுவாக தமிழ் புத்தகங்கள்!) விலை குறைவாக இருந்தாலும் அதிகம் பேர் வாங்காத நிலை நீடிக்கும்!

      ஆம், சில மாதங்கள் முன் இத்தளத்தில் நீங்கள் இணைந்து ஓரிரு கருத்துக்கள் இட்டீர்கள் - நன்றி! உங்கள் பின்னூட்டங்களை அவ்வப்போது பிற வலைப்பூக்களில் படித்துள்ளேன். உங்களுடைய நீண்ட பின்னூட்டங்கள் காமிக்ஸ் நண்பர்களிடையே வெகு பிரபலம் என்பதை அறிவேன் - இது sarcastic கருத்து அல்ல - பாராட்டுக்கள்தான்! :) உங்களுடைய ஆரம்பகால பதிவுகள் சிலவற்றையும் படித்துள்ளேன் - கருத்திட்டதில்லை, மன்னிக்கவும். சிபி மற்றும் உங்களின் பின்னூட்டம் கண்டு, மீண்டும் ஒரு முறை உங்கள் தளத்தை மேய்ந்து விட்டு இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். சினிமா மற்றும் காமிக்ஸ் சார்ந்த பதிவுகள் நன்றாக உள்ளன! புத்தக பாதுகாப்பு குறித்தும் நிறைய தகவல்கள் திரட்டி உள்ளீர்கள் - நன்றி!

      மைலார் கவர்கள் குறித்த தகவல் கிடைத்தால் நிச்சயம் தெரிவிக்கிறேன். இப்போதைக்கு டாகுமென்ட் ஸ்லீவ்களை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன்!

      //குழந்தையின் படம் அருமை//
      மிக்க நன்றி :)

      //வீட்டில் பெரியவர்களை விட்டு சுற்றிப் போடச் சொல்லுங்கள்.//
      இந்த ஸ்கேன் செய்த படத்தைத்தானே! :D

      உங்கள் பாராட்டுகளுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி பாலாஜி!

      நீக்கு
  10. hello friends,i m AHMED from bangalore,its really nice to know about ur craze.plz forgive me to join u guys very very late,but beleave me, i m a die hard fan of my master,VIJAYAN sir,since 1984, when our LION started roaring.love u PARANIPRASANNA.

    பதிலளிநீக்கு
  11. // உங்களுடைய ஆரம்பகால பதிவுகள் சிலவற்றையும் படித்துள்ளேன் - கருத்திட்டதில்லை, மன்னிக்கவும். //

    நண்பரே, எதற்கு வருத்தமெல்லாம் தெரிவித்துக் கொண்டு! நானும் இந்த தளத்தில் இணைந்ததற்கு பிறகு, அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறேன். Our feelings are mutual. உங்களுக்கும் கோபாலுக்கும் முட்டிக் கொண்டதை படித்து, அதை எடிட்டரின் வலைத்தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டும் இருக்கிறேன். வலைப்பூவிற்கு வருபவர்களில் ஒன்றிரண்டு பேர்களே பின்னூட்டம் இடுகின்றனர்.

    //ஸ்கேன் செய்த படத்தைத்தானே! :D //

    இரண்டுமே ஒன்றுதான். எதற்கு செய்தாலும் ஒன்றுதான். எதையாவது ஒன்றை செய்யுங்கள். ஒரு நீண்ட பதிவே போடும் அளவுக்கு இந்த திருஷ்டி மேட்டர் இருக்கிறது. அதையெல்லாம் பதிவிட்டு படிப்பதற்கு பதில், சட்டி தலையனையும், குற்ற சக்ரவர்த்தி ஸ்பைடரையும் படித்துவிடலாம். ;-))

    உங்கள் பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. To: Karthik Somalinga: அருமையான பதிவுகளை இடும் உங்களுக்கு உற்சாகமளிக்கும் ஒரு போட்டோ இங்கே இருக்கிறது, பாருங்கள் நண்பரே!
    http://www.facebook.com/photo.php?fbid=467363683295593

    ஓவியத்தை வைத்துத்தான் இதை கண்டுபிடித்தேன். சரிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாவ்! இதேதான் நண்பரே! :) மிக்க நன்றி! காமிக் கான் ஃபேஸ்புக் பக்கத்திலேயே இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது! :)

      நீக்கு
    2. லயன் ஸ்டாலை கண்டுபிடித்ததிற்கும் வாழ்த்துக்கள் நண்பரே! :) துப்பறியும் பொடியன்! :)

      நீக்கு
    3. wow! super! So cute!

      நான் உங்களை சொல்லலை, உங்க மகனை சொன்னேன்!

      :) :) :)

      நீக்கு
    4. இனிமே யார் சொல்லி என்ன ஆகி வேண்டி இருக்கிறது! :D

      நீக்கு
  13. அருமையான தெளிவான தொடர் பதிவுகள்.
    சென்றவாரம் அங்கிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்பமான தருனங்களை இழந்துவிட்டதை நினைக்கும் பொழுது வருத்தமாகத்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்டாலின் - பரவாயில்லை அடுத்த வருடம் இதை விட பெரிதாய் நடைபெறும் என நம்புகிறேன் - அப்போது கலந்து கொள்ளுங்கள்! :)

      நீக்கு
  14. நண்பர் கார்த்திக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்!
    காமிக்கானுக்கு ஞாயிரு மதியம் நானும் வந்திருந்தேன் என்றாலும் ஓரிரு நிமிட இடைவெளியில் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதை அப்போது அங்கிருந்த நண்பர் பிரசன்னா மூலம் அறிந்தேன். (நான் வரப்போவதை உளவுத்துறை மூலம் எப்படியோ தெரிந்துகொண்டீர்கள் போலுள்ளது. ஈரோடு ஸ்_லின்?!!)
    பல்வேறு வேலைகளின் காரணமாக என்னால் அங்கே 45 நிமிடங்களுக்கு மேல் இருந்திட முடியவில்லை என்பதால் உங்களைப் போன்ற நண்பர்களின் சந்திப்பையும், மற்ற ஸ்டால்களின் அழகையும்(!) எனக்குப் போதிய நேரம் கிட்டிடவில்லை.

    சூழ்நிலைகள் சாதகமாக அமையுமெனில், அடுத்த காமிக்கானில் சாவகாசமாய் உங்களையெல்லாம் சந்தித்துப் பேசிட இப்போதே உறுதிபூண்டிருக்கிறேன்.

    இந்த காமிக்கானில் அதிக நேரம் என்னால் அங்கு இருந்திட முடியவில்லையே என்ற ஏக்கத்தை உங்களது கடந்த சில வலைப்பதிவுகள் நிறையவே போக்கியிருக்கின்றன. அதற்குத்தான் ஆரம்பத்திலேயே உங்களுக்கு நன்றி கூறினேன்.
    ஆரம்பத்தில் நன்றி கூறினால் கடைசியில் சொல்லக்கூடாதென்று எந்த வரையறையும் இல்லையே! ஆகவே,
    மீண்டும் நன்றிகள் பல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் விஜய்! உளவுத்துறை மூலம் தகவல் வந்தது உண்மைதான்! ;) ஆனால் அதற்காக நான் பயந்து ஓடவில்லை! :D என் குட்டிப் பையனின் தொல்லை தாங்காமல் இடத்தை காலி பண்ண வேண்டியதாகிவிட்டது! உண்மையில் வெளியே வந்த பிறகுதான் எனக்கு நினைவுக்கு வந்தது உளவுத்துறை சொல்லி இருந்த நண்பர்களை மீட் செய்யாமல் வந்து விட்டோமே என்று - ஆனால், மறுபடியும் வரிசையில் நின்று அடம் பிடிக்கும் மகனை சமாளித்துக் கொண்டு உள்ளே வரும் தெம்பில்லாததால் நடையை கட்டி விட்டேன் - மன்னிக்கவும்! :) நிச்சயம் அடுத்த வருடம் சந்திக்கலாம்! காமிக்கான் பதிவுகளை தொடர்ந்து படித்ததிற்கு நன்றி! :)

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia