ஒரு கைராசி வைத்தியரின் நம்பிக்கை நோயாளிகள்!

டாக்டர்கள் மீது நோயாளிகள் வைக்கும் நம்பிக்கையே பாதி நோயை குணப்படுத்தி விடுகிறது 
கைராசி டாக்டர் என்று பெயர் போனவர்(?) ஏரியாவுக்கு ஒருவராவது இருப்பார் அல்லவா? அப்படிப்பட்ட டாக்டர்கள் நடத்தும் கிளினிக் அல்லது ஹாஸ்பிடலுக்கு நீங்கள் எப்போதாவது சென்றதுண்டா?! வரவேற்பறையில் நிற்கக் கூட இடம் இன்றி கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்க. நீளமான இருக்கைகளில் நெருக்கியடித்துக் கொண்டு வாடிக்கையாளர்கள்(!) அமர்ந்திருப்பார்கள்! நீங்கள் நோயாளியுடன் உதவிக்கு உடன் சென்ற நபரானால், எண்ணி இரண்டே நாட்களில் நீங்களே அங்கு நோயாளியாக திரும்பச் செல்ல வேண்டிய வாய்ப்பு கட்டாயம் கிட்டும்!

வாசலருகே கடுகடுவென அமர்ந்திருக்கும் அந்த சிடுமூஞ்சி வரவேற்பாளரிடம் 'டாக்டர் வந்துட்டாரா?' என்று கேட்டால் மேலும் கீழுமாக ஒரு தடவையும், இடதும் வலதுமாக இன்னொரு தடவையும், மையமாக கூட்டல் குறி போல தலையாட்டுவார்! 'வந்துட்டாரா... வரல்லியா?' என்று நாயகன் பாணியில் திரும்பவும் கேள்வி கேட்டால், 'வருவார்' என்று மணிரத்ன பாணியில் ரத்ன சுருக்கமான பதில்தான் வரும்!

பெஞ்சில் அமர்ந்திருபவர்கள், விட்டால் எங்கே இவனும் அருகில் வந்து அமர்ந்து கொள்வானோ என்ற பயத்தில் காலை இன்னும் சற்று அகலமாக விரித்து - இருக்கும் கொஞ்ச நஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்வார்கள். சற்று நேரம் கழித்து மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு ஒரு நடுத்தர வயது நபர், கடுமை கலையாத முகத்துடன் விறுவிறுவென நடந்து வந்து ஆலோசனை அறையில் நுழைவார், பார்த்தவுடனேயே தெரிந்துவிடும் அவர்தான் நமது Dr.கைராசி, MBBS, AtoZ என்று!

அடுத்த சில நொடிகளில், ஒரு மணி நேரம் முன்னதாகவே முதல் நபராக வந்து முக்காடு போட்டு காத்திருந்த யாராவது ஒரு நபர் இருமிக்கொண்டோ அல்லது மூக்கை சிந்திக் கொண்டோ டாக்டர் அறையினில் நுழைவார். உடனே தயங்காமல் அவர் இடத்தில் நாம் அமர்ந்து விட வேண்டும்! அது முதல் கட்ட வெற்றி மட்டுமே என்பதை நாம் மறந்து விடலாகாது!

டாக்டர்களில் இரண்டு வகையினர் உண்டு. முதலாமவர்கள் நேரத்தின் மதிப்பு தெரிந்தவர்கள், டோக்கன் சிஸ்டம் எல்லாம் வைத்திருப்பார்கள். இரண்டாமவர்கள் மற்றவர்களுடைய நேரத்தின் அருமை அறியாதவர்கள், டோக்கன் எல்லாம் கிடையாது; "மேரா நம்பர் கப் ஆயேகா" என்று மோட்டு வலையைப் பார்த்து மோவாய்க்கட்டையை சொறிய வேண்டியதுதான்.

சரி முதலில் டோக்கன் சிஸ்டம் வைத்திருக்கும் டாக்டர்களைப் பற்றி பார்ப்போம்! உள்ளே நுழையும்போதே அந்த சிடுமூஞ்சி வரவேற்பாளரிடம் தவறாமல் ஒரு டோக்கனை வாங்கி விட வேண்டும்! அதில் இருபதோ, அறுபதோ - கூட்டதிற்கேற்ப ஏதோ ஒரு வரிசை எண் எழுதப் பட்டிருக்கும்! 'இப்போ எந்த நம்பர் போயிருக்கு?!' என்று நீங்கள் கேட்டீர்களானால் 'கூப்பிடுவாங்க, வெயிட் பண்ணுங்க!' என்று பிடி கொடுக்காமல் ஒரு பதில் வரும்! ஒரு உதாரணத்திற்கு ஐந்தாம் நம்பர் டோக்கன் பெற்ற நபர்தான் டாக்டரைப் பார்க்கப் போயிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; இது அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அதை நம்மிடம் சொல்லாமல் நம்மை ஒரு குழப்பத்திலேயே காத்திருக்க வைப்பதில் அவர்களுக்கு ஒரு அற்ப மகிழ்ச்சி!
 
மருத்துவமனையில் இருக்கும் சில உதவியாளர்கள் டோக்கன் எண்ணை உரக்கச் சொல்லி அழைப்பார்கள்; அப்படி செய்தால்,  நமக்கும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என ஒரு ஐடியா கிடைத்து விடும்! அதற்கேற்ப டீ குடிக்கவோ அல்லது அதிக நேரம் இருப்பின் உருப்படியாக வேறு வேலையைப் பார்க்கவோ கிளம்பலாம்! நடுவில் போன் செய்து எந்த நம்பர் வரை போயிருக்கிறது எனக் கேட்டாலும் பொறுப்பாக பதில் சொல்வார்கள்.
 
ஆனால், சில 'உதவாதயாளர்கள்' பயங்கர சாடிஸ்ட் பேர்வழிகள். நோயாளிகள் ஒவ்வொருவரின் முகங்களையும், அவர்களுக்குரிய டோக்கன் எண்களையும் நினைவில் இருத்திக்கொண்டு,  வரிசைப்படி அவர்களை மட்டும் கை காட்டி அழைத்து உள்ளே அனுப்பி வைப்பார்கள்!. வலியப் போய் கேட்டாலும் அவர்கள் அனுப்பிய டோக்கன் எண் என்ன என்பதை நம்மிடம் சொல்லாமல், 'ஒக்காருங்க, கூப்பிடுவோம்' என வெறுப்பேற்றுவார்கள்.
 
அப்படிச் செய்வதில் அவர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது. அவர்களுக்கு தெரிந்த ஆட்கள் இடையில் வந்தால் டாக்டரிடம் வரிசைப்படி அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாமல் உடனே அனுப்பி வைப்பார்கள்! டோக்கனை உரக்கக் கூவி அழைத்தால் அடுத்த டோக்கன்காரர் உள்ளே நுழைவதற்கு ரெடியாக இருப்பார் அல்லவா, நடுவில் யாரையும் நுழைக்க முடியாதல்லவா?!
 
டோக்கன் சிஸ்டம் இல்லாத டாக்டர்கள் என்றால் இன்னும் கஷ்டம்! உதவியாளர்களிடம் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டால் 10 நிமிஷத்துல பார்த்துறலாம் என்பார்கள்; எத்தனை மணி நேரம் கழித்துக் கேட்டாலும் அதே பதில்தான் வரும் - சொன்ன சொல் மாறாதவர்கள்! அப்படிப்பட்ட இடங்களில், வரிசைப்படி டாக்டரைப் பார்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது - நாம் உள்ளே நுழைந்தவுடனேயே யார் யார் நமக்கு முன்னே வந்திருக்கிறார்கள் என்று நோட்டமிட்டு, அவர்களின் முகங்களை மனதில் பதித்துக்  கொள்ள வேண்டும்! இதன் மூலம் புதிய  நபர் யாராவது நமக்கு முன்னே Dr.கைராசியை பார்க்க எத்தனித்தால் கையும் களவுமாக பிடித்து விடலாம்!
 
பிரச்சினைகள் இத்தோடு நிற்பதில்லை. கடைசி கட்ட கழுத்தறுப்பு கேஸ்கள் நமக்காக காத்துக் கொண்டிருக்கும்! அடுத்ததாக நமது டோக்கனை அழைப்பார்கள் என்ற நிலையில், திடீரென்று ஒரு ஆசாமி கையில் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு நமக்கு முன்னால் வந்து நிற்பார். 'அடுத்து நான் போகணும்ங்க' என்றால், 'ரெண்டே நிமிஷம் சார், ரிப்போர்ட் மட்டும் காட்டிட்டு வந்துர்றேன்' என்று சொல்லி இருபது நிமிஷம் மொக்கை போட்டு விட்டு வருவார். இது ஒரு ரக தொல்லை என்றால் இன்னொரு தொல்லை மெடிக்கல் ரெப்கள் உருவில் டிப் டாப்பாக வரும். அவர்களில் சிலர் சற்றும் காத்திராமல் சட்டென்று உள்ளே நுழைந்து விடுவார்கள், இன்னுமொரு இருபது நிமிஷம் காலி!
 
சரி தொலையட்டும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தால், எமர்ஜென்சி கேஸ் அட்மிட் ஆகியுள்ளதென டாக்டர் திடீரென வெளிநடப்பு செய்து விடுவார். அப்படியே அரை மணி நேரம் கழிந்து விடும். ஒருவழியாக நம் முறை வந்து டாக்டரைப் பார்க்க உள்ளே சென்றால் - ஒரே நிமிடத்திற்குள் செக் செய்து, ப்ரிஸ்க்ரிப்ஷனில் ஏதோ கிறுக்கி நம்மை வெளியில் அனுப்பி வைத்து விடுவார்.

இதற்கு முன்னால் சென்ற பேஷன்ட் ஒவ்வொருவரும் ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என மொக்கை போட்டு நம்மை காக்க வைத்திருக்க, நம்மை மட்டும் இப்படி வேகமாக அனுப்பி விட்டாரே என்ற எரிச்சலோடு உள்ளேயே இருக்கும் பார்மஸிக்கு சென்றால், அங்கு இன்னுமொரு பெரும் கூட்டம் நின்று கொண்டிருக்கும். வெளியே வேறு மெடிக்கலுக்கும் போக முடியாது. ஏதாவது ஒரு மாத்திரையாவது வேறு எங்கேயும் கிடைக்காத காம்பினேஷனில் எழுதி வைத்திருப்பார் மனிதர்.
 
சரி இவ்வளவு தலைவலி பிடித்த அந்த கைராசி டாக்டரிடமே போயாக வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். வீட்டில் யாராவது பெரியர்வர்கள் இருந்தால் இந்தத் தொல்லையில் இருந்து நிச்சயம் தப்ப முடியாது. ரெகுலர் செக்-அப், வயிற்று வலி, கை வலி என்று மாதம் ஒரு முறையாவது இந்த கைராசி தொல்லையை அனுபவித்தே ஆக வேண்டியிருக்கும். வேறு டாக்டரிடம் செல்லவும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

கன்சல்டேஷன் ஃபீஸ் இருநூறு, முன்னூறு என வாங்கி, Dr.கைராசி எழுதிக் கொடுக்கும் அதே மருந்தை தெருமுக்கில் உள்ள 50 ரூபாய் டாக்டர் கூட எழுதிக்கொடுப்பார் என்றாலும் நம்பிக்கை என்ற ஒரு அம்சம் இருக்கிறது அல்லவா?! பெங்களூரில் உள்ளதொரு புகழ்பெற்ற கண் மருத்துவமனையில் "Your faith shall heal you!" என்று எழுதி வைத்திருப்பார்கள்! அது போல இந்த கைராசி டாக்டர்கள் மீது அவர்களின் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே பாதி நோயை குணப்படுத்தி விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை!

கருத்துகள்

  1. அனுபவத்தை அழகா சொல்லி இருக்கீங்க!
    ஏதோ கிளினிக் ல நுழைஞ்சு கம்மென்ட்ரி போட்ட மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப அனுபவித்து எழுதி இருக்கீங்க! நானும் இந்த கஷ்டம் அனுபவிச்சதுண்டு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவித்து எழுதலைங்க, நொந்து போய் எழுதியிருக்கேன்! :)

      நீக்கு
  3. ஒரு சில டாக்டர்கள் கைராசியான டாக்டராவதே ஓவர் டோஸ் மருந்து கொடுத்து விரைவில் குணப்படுத்துவதால்தான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் சரிதான்! நம்மாளுக்கும் அதானே வேணும்?!

      நீக்கு
  4. எப்படி இருக்கீங்க கார்த்திக்?

    இப்போ தேவலையா?

    Review-க்கு தானே போயிருந்தீங்க? டாக்டர் என்ன சொல்றார்?

    டாக்டரைப் பார்க்க ஆயிரம் கஷ்டங்களை அனுபவித்தாலும், அந்த பெஞ்ச்சில் இடம் பிடித்து 'இருபுறமும்' பேலன்ஸ் செய்து உட்கார முடிகிற அந்த சுகமே தனிதான், இல்லையா?    :D

    ஹிஹி, jokes apart, அருமையான ஒரு உளவியல்  பதிவு! டோக்கன் நம்பரை சத்தமாகச் சொல்லிடுவதிலுள்ள சிக்கல்களை எடுத்துச் சொல்லியவிதம் ஒன்றே போதுமே, உங்கள் பதிவின் நேர்த்தியை பறை சாற்றிட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க ஒரு பக்கம் மட்டும் அந்தரத்துல மிதக்கறது ரொம்ப கஷ்டமான காரியம்தான்! :) இப்ப அய்யா perfectly alright! :)

      நீக்கு
  5. பின் குறிப்பு:

    வீடு நிறைய டாக்டர்களைக் கொண்டிருக்கும் ஒருவர், டாக்டர்களை கிண்டலடிக்கும் இப்பதிவைப் பாராட்டி(!) எனக்கு மேலே கமெண்ட் போட்டிருக்கிறார் என்பதுதான் இங்கே உச்சபட்ச காமெடி! :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே உண்மையை மறைக்க / மறுக்க முடியுமா என்ன?! ;)

      நீக்கு
    2. Yes my home is a proud place of 4 generation doctors of the past 80 years. But I am not one :-) So I am OK with this !!

      நீக்கு
    3. Yes my home is a proud place of 4 generation doctors of the past 80 years. But I am not one :-) So I am OK with this !!

      நீக்கு
  6. அருமையானதொரு அலசல் பதிவு.
    நீங்கள் கூறி இருக்கும் பிரச்னை இன்னும் பல இடங்களில் நான் சந்திப்போம்.
    இருந்தும் மருத்துவமனையில் தான் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோக்கன் முறை ஓரளவுக்கு ஒழுங்காக அமல்படுத்தப்படும் ஒரே இடம் வங்கிகள் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  7. மிகச் சரியான வர்ணனை. "உதவாதயாளர்கள்" - இவிங்க தான் எப்பவுமே ரொம்ப கடுப்பேத்துவாங்க

    மேலே ஒரு அன்பர் கூறியுள்ளது போல - Its a magazine quality article. நீங்க ஏன் பத்திரிகைகளுக்கு எழுத முயற்சி செய்யக்கூடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பெரியார்! பத்திரிக்கைக்கு அனுப்புவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், கட்டுரை பிரசுரம் செய்யப்படுமா இல்லையா எனத் தெரியாமல் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டி வரும்! அது தெரியாதவரை அந்தக் கட்டுரையை வலைப்பூவிலும் பகிர்ந்திட முடியாது! :)

      நீக்கு
  8. என்னவோ டாக்டரை சந்திப்பது என்றாலே எனக்கு சிறு வயதில் ஹோம்வொர்க் செய்யாமல் அடுத்த நாள் வகுப்பறையில் ஆசிரியரின் வருகைக்காக காத்திருக்கும் மன நிலையே இப்பொழுதும் ஏற்படுகின்றது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயதில் டாக்டர்கள் பலரிடம் ஊசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட பயம் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்! :) 'ஊசி போடட்டா, இல்லை பெரிய பெரிய மாத்திரையா எழுதித் தரட்டா' என்றெல்லாம் டாக்டர்கள் என்னை மிரட்டி இருக்கிறார்கள்!

      நீக்கு
    2. ரொம்ப அழுதால் மாட்டுக்கு போடுற பெரிய ஊசிய போட்டுவிடுவேன் என்று பயமுறுத்தி உள்ளார்கள்.

      நீக்கு
  9. அருமையான அலசல் பதிவு.
    இதே மாதிரியான அனுபவம்தான் செல்போன் பில் கட்டுவதற்கும்.
    அது அடுத்த பதிவில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனபாலன்! தொலைபேசி, அலைபேசி, மின்சாரம், இரயில் - இப்படி பில் மற்றும் டிக்கெட் சார்ந்த சமாச்சாரங்களை நான் இணையம் மூலமாகவே எளிதில் சமாளித்து வருகிறேன்! வரிசையில் சென்று நிற்பது கிடையாது! :)

      நீக்கு
  10. அட்டகாசமான பதிவு கார்த்திக் நண்பரே ,
    வாழ்வில ஏறக்குறைய அனைவரும் இந்த practical தொல்லைகளை அனுபவித்தவர்களாகவே இருப்பார்கள். எங்காவது தேவையில்லாமல் காக்கவைக்கப்ப்படும் போதெல்லாம் எரிச்சலை கட்டுப்படுத்துவது வெகு சிரமம். ஒரு மருத்துவமனையில் காத்திருப்பது போக்குவரத்து நேரிசலில்
    காத்திப்பதை விட ஆயிரம் மடங்கு தேவலாம்.

    அந்த கைராசி டாக்டர் பேசும் ஒரு வார்த்தை,வழக்கமாக கொடுக்கும் அதே மருந்து நமது வீட்டு பெரியவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதலும் comfort டும் என்றால் அவர்களின் முகத்தில் பிறகு தெரியும் அந்த relief நமக்கு ஒரு மிகப்பெரிய திருப்பதி.

    போக்குவரத்துக்கு நெரிசலில், சரியாக பராமரிக்கப்படாத ரோடுகளில் நாம் இழக்கும் கால விரயம் , தாசில்தார் அலுவலகங்களிலோ ,VAO அலுவலகங்களிலோ காக்கவைகப்படுபோது ஏற்படும் எரிச்சல் இதெல்லாம் மிகப்பெரிய கொடுமை சார்! இதில் மிஞ்சுவது எரிச்சல் மட்டுமே. இங்கே திருப்பதிக்கு இடமே இல்லை. : (


    //உதவிக்கு உடன் சென்ற நபரானால், எண்ணி இரண்டே நாட்களில் நீங்களே அங்கு நோயாளியாக திரும்பச் செல்ல வேண்டிய வாய்ப்பு கட்டாயம் கிட்டும்!//

    மருத்துவர்களின் வியாபார தந்திரங்களுள் இதுவும் ஒன்றா அல்லது இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் இவற்றையெல்லாம் practical ஆக பார்க்க வேண்டுமாவென்று தெரியவில்லை

    GOOD GOING. ENJOYED YOUR BLOG. THANK YOU !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர்களின் முகத்தில் பிறகு தெரியும் அந்த relief நமக்கு ஒரு மிகப்பெரிய திருப்பதி//
      ஆமாம், மிகச் சரியாக சொன்னீர்கள்! :) தொடர்ந்து படித்து வருவதிற்கு நன்றி விஸ்கி!

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia