மாற்றங்களும், ஏமாற்றங்களும் - 1 - வாசிப்பு!

எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருப்பதும்; அந்த ரசனைகளின் பால் அவரவரின் தனித்துவமான பார்வைகளைக் கொண்டிருப்பதும் இயல்பான ஒன்று! இந்த ரசனை மாறுபாடுகளே, வாழ்க்கையை ரசிக்கத் தக்கதாக மாற்றுகின்றன! சிலருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் - பிறருக்கு கோபம், துக்கம், வெறுப்பு என பல தரப்பட்ட எண்ணங்களைத் தருவதாகவும்; ஒரு பகுதியினரால் வெறுக்கப்படும் விஷயங்கள் - ஏனையோரால் விரும்பப் படுபவையாகவும் இருப்பது, சமூக வாழ்க்கையில் தவிர்க்க முடியாததொரு அம்சம்!

அதற்காக, "எல்லாமே மாயை தான், விருப்பு வெறுப்புகள் வேண்டாம்!" என்று ஆன்மீகப் பிரச்சாரம் செய்வது என் நோக்கமல்ல! ;-) பிடித்த விஷயங்களை சிலாகித்துப் பேசும் அதே வேளையில், பிடிக்காத விஷயங்களை அவ்வப்போது விமர்சனமும், கிண்டலும் செய்வதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை; அதை இயன்ற அளவுக்கு, பிறர் மனத்தைப் புண் படுத்தாமலும், தனிமனித தாக்குதல்கள் இல்லாமலும் செய்தாலே போதுமானது!

ஆனால் இன்றைய சூழலில், "யாரும் யார் மனதையும் புண்படுத்தாமல், எந்த ஒரு கருத்தையுமே சொல்லி விட முடியாது" என்பது, நான் அனுபவித்து அறிந்த உண்மை! "நீ இதைப் பற்றி பேசுவது தவறு!" என்று நீங்கள் யாரிடமாவது கருத்து கூறினால், அந்தக் கருத்து அவர்களின் மனதை புண்படுத்தக் கூடும்! எதையும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருந்தாலுமே, அந்த மௌனம் சில சமயங்களில் எவர் மனதையாவது புண்படுத்தி விடக் கூடும்! எனவே, பிறர் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது! இப்படி ஒரு பலத்த பீடிகையுடன் இந்த புதிய தொடரை துவக்குவதிற்கு, காரணங்கள் இல்லாமல் இல்லை! :-D

மறக்கப்பட்ட மனிதர்கள் தொடரை, நான்கு பாகங்களுக்கு நீட்டி முழக்கி எழுதிய போது; நண்பர்கள் பலரும் பொறுமையிழந்து - "ஒரு கிராஃபிக் நாவலுக்கு இத்தனை பில்ட்-அப் தேவை தானா?!" என்ற ரீதியில் - இங்கும், ஃபேஸ்புக்கிலும்  என்னை கேட்ட வண்ணம் இருந்தனர்!

லார்கோ வின்ச்சை விரும்புபவர் வேய்ன் ஷெல்டனையும்; டெக்ஸ் வில்லரை ரசிப்பவர், ப்ளூபெர்ரியையும் விரும்பாது போகலாம்! அதற்காக அவர்கள், ஜனரஞ்சக காமிக்ஸ்கள் அனைத்தையும் வெறுத்து ஒதுக்கி விடுவதில்லையே?! அதே போலத் தான் ஒ.சி.சு. கிராஃபிக் நாவலும்! இந்தக் கதை எல்லாருக்கும் பிடித்தே தீர வேண்டும், படித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவது, அந்தத் தொடர் பதிவின் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை!

மாறாக, "மொக்கை என்று பரவலாக முத்திரை குத்தப் பட்ட ஒரு கிராஃபிக் நாவலின் பின்னணியில், எத்தனை எத்தனை வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உண்மைத் தகவல்களும்; படைப்பாளிகளின் தேடலும், உழைப்பும் அடங்கி இருக்கின்றன..!" என்பதை உணர்த்துவதே அதன் பிரதான நோக்கமாக இருந்தது! ஆனால், ம.ம. தொடரை இந்தக் கோணத்தில் ரசித்தவர்கள் மி.மி. குறைவே என்பது, அதற்கு வந்திருந்த கருத்துக்களைப் பார்க்கையில் நான் அறிந்து கொண்ட வருத்தமான உண்மை!

அடுத்ததாக இன்னொரு தொடரை ஆரம்பித்ததன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று குழம்பித் தவிக்கும் நண்பர்களுக்காக, இந்த புதிய தொடரின் நோக்கத்தையும் இப்போதே சொல்லி விடுகிறேன்!

"கிராஃபிக் நாவல் என்ற சொல்லைக் கேட்டாலே, வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு பல வாசகர்கள் தள்ளப்பட்டு இருப்பதன் காரணங்கள் என்னவாக இருக்கும்?!" என்பதை அலசுவதும், அதற்கான தீர்வுகளைத் தேடுவதுமே இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும்! கி.நா. அலர்ஜிக்கான முதன்மையான காரணமாக நான் நினைப்பதை இந்தப் பதிவிலும், இதர காரணங்களை - அவற்றிற்குரிய விளக்கங்களுடன் வரவிருக்கும் பதிவுகளிலும் பார்க்கலாம்!

இனி, பதிவின் முதல் பகுதிக்குச் செல்வோம்:

வாசிப்பு:
காமிக்ஸ் புத்தகங்களைப் பொறுத்த வரை - "எளிமையான கதை, விறுவிறுப்பான நடை & சுபமான முடிவு!" என்ற சிறிய வட்டத்தில் அடங்கக் கூடிய படைப்புகளை வாசித்தே நாம் பழக்கப் பட்டு விட்டோம்; விதி விலக்குகளாக - ப்ளூபெர்ரி, XIII, பேட்மேன் (சிரிக்கும் மரணம்) போன்ற வயதுக்கு மீறிய படைப்புகளை சிறிய வயதிலேயே வாசித்துப் பழகிய நாம், இன்றளவும் அக்கதைகளை நேசிக்கிறோம்! ஆனால், இந்த வட்டத்திற்குள் அடங்காத காமிக்ஸ் கதைகளை, 'கிராஃபிக் நாவல்' என்ற புதிய பெயரில் பார்க்கும் போது, மிரண்டு போய், அவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்! 'இதெல்லாம் ஒரு காமிக்ஸா?' என்று, ஏமாற்றத்தில் மருகுகிறோம்!

"காமிக்ஸ் என்பது வயதில் சிறியவர்களுக்கு மட்டுமல்ல" என்ற புளித்துப் போன டயலாக்கை சளைக்காமல் பேசும் அளவிற்கு; வயதில் பெரியவர்கள் வாசிப்பதற்கென பிரத்யேகமாக படைக்கப்படும் காமிக்ஸ்களைப் படிப்பதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை! அப்படியே படித்தாலும், அவற்றில் பொழுது போக்கு அம்சங்கள் தூக்கலாக உள்ள படைப்புகளை மட்டுமே விரும்புகிறோம் (உ.ம். லார்கோ வின்ச்).

வழக்கமான பாணியில் இருந்து விலகும் படைப்புகளை, பொறுமையாக ஒருமுறை - வாசிக்கக் கூட முயற்சிக்காமல்; அவற்றின் மேல் - 'சோகக் காவியம்', 'ஆவணக் கதை', 'சுத்தப் போர்' - என்று பலவகையான முத்திரைகளைக் குத்தி, ஒதுக்கி வைத்து விடுகிறோம். நம்முடைய இந்த போக்கு மாறினால் மட்டுமே, "காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு மட்டும்" என்ற வெகுஜனக் கருத்தும் (மெல்ல மெல்ல) மாறும்!

இந்த மன நிலைக்கு முக்கிய காரணம், காமிக்ஸை ஒரு பொழுது போக்கு சாதனமாக மட்டுமே நாம் அணுகுவது - அதில் தவறில்லை; ஆனால், மாறுபட்ட கதைகள் பொழுது போக்காக இருக்காது, சுவாரசியமாக இருக்காது என்பது போன்ற ஒரு மனத் தடையை நமக்கு நாமே போட்டுக் கொள்வது தான் தவறு! இந்த மனத் தடைக்கு, நமது நுனிப்புல் வாசிப்புப் பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம் - என்னைப் பொறுத்த வரை அது ஒரு பெரிய காரணமாக இப்போதும் இருந்து வருகிறது! பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், "எடுத்தோம், படித்தோம், கவிழ்த்தோம்" என்ற "எக்ஸ்பிரஸ் வாசிப்பு" பாணிக்கு நாம் அடிமைப்பட்டு விட்டோம்!

உதாரணமாக சமீபத்தில் வெளியான, "XIII - தொடரும் ஒரு தேடல்" கதையில் கொடுக்கப் பட்டிருந்த அமெரிக்க வரலாற்றுத் தகவல்களைச் சொல்லலாம்; வளவளவென்று ஆறேழு பக்கங்களுக்கு நீண்ட அந்தத் தகவல்களை - முழுமையாகப் படிக்கப் பொறுமையின்றி, மீதக் கதையைப் படித்து முடித்தேன். 'இது ஒரு தொடர்கதை தானே, இன்னொரு சமயம் பொறுமையாகப் படித்துக் கொள்ளலாம்' என்ற அலட்சியமும் இதன் பின்னணியில் இருந்தது! அதன் காரணமாக, கதைக்கும் அந்த வரலாற்றுத் தகவல்களுக்கும் என்ன தொடர்பு என்பது, சரிவர புரியாமலேயே போய் விட்டது! அதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொறுமை, XIII நெடுந்தொடரைப் பொறுத்தவரை எனக்கு சுத்தமாக இல்லை!

இன்னொரு உதாரணம், "ஒரு சிப்பாயின் சுவடுகள்" கிராபிக் நாவல்! முதல் வாசிப்பின் போது, அந்தக் கதை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை; அதற்கு முதல் காரணம் என்னுடைய இந்த நுனிப்புல் மேயும் பழக்கம் தான். கதையின் இடையிடையே, எக்கச்சக்கமான வரலாற்று விவரங்கள் கொடுக்கப் பட்டிருந்ததால், அவற்றை மேலோட்டமாக மட்டுமே படித்தேன்!

ஆனால், அதன் க்ளைமேக்ஸ் மற்றும் மொழிபெயர்ப்பின் சில பகுதிகள் அளித்த குழப்பத்தால், கதையை பொறுமையாக மறுவாசிப்பு செய்ததில், க்ளைமேக்ஸ் என்னவாக இருக்கும் என்று, தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர முடிந்தது! அத்தோடு, நுணுக்கமான பல அம்சங்களும் புலனாகின! அப்படி நான் கண்டறிந்த பல விஷயங்களைப் பற்றி, "மறக்கப்பட்ட மனிதர்கள்" தொடரில் விரிவாக எழுதியிருந்தேன்!

"என் வாழ்க்கையிலேயே நான் படித்த அதி அற்புதமான காமிக்ஸ் ஒ.சி.சு.-தான்!" என்றெல்லாம் கதை விட விரும்பவில்லை; "இது போன்ற கிராஃபிக் நாவல்களைப் படிப்பது தான் உயர்ந்த காமிக்ஸ் ரசனை!" என்று சரமாரியாக அளந்து விடவும் போவதில்லை! ஆனால், வழக்கமான "டமால், டுமீல்"; "ஹா ஹா, ஹீ ஹீ" ரகக் கதைகளையே படித்துப் பழகிய எனக்கு, இது போன்ற ஒரு மாறுதலான கதையை உள்வாங்கிக் கொள்வது முதலில் சிரமமாக இருந்தாலும், மெல்ல மெல்ல இந்தப் பாணியையும் ரசித்திட முடிந்தது!

லார்கோ, லக்கி, டெக்ஸ், டைகர் - இவர்களை ரசித்திடும் அதே வேளையில், பிரளயத்தின் பிள்ளைகளையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது! பி.பி.க்கு ஒரு தனிப்பதிவு இட எண்ணி, கடைசி வரை அதை எழுத முடியாமலேயே போய் விட்டது! ஒ.சி.சு.-க்காவது அதை ஒழுங்காகச் செய்யலாமே என்ற நோக்கமும் ம.ம. தொடரின் பின்னணியில் இருந்தது! :-)

உங்களுக்கு கிராஃபிக் நாவல்களே பிடிக்காமல் போனாலும் பரவாயில்லை! ஆனால், இது போன்ற மாறுபட்ட களங்களையும், யதார்த்தமான படைப்புகளையும், உணர்வுகள் சார்ந்த கதைகளையும் அல்லது மேற்சொன்ன உதாரணங்களில் அடங்காத புதிய பாணிகளையும் ரசிக்கக் கூடிய - முற்றிலும் புதியதொரு வாசகர் வட்டம் உருவாவது, தமிழ் காமிக்ஸின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான ஒன்று தானே?! "கிராஃபிக் நாவல்கள் வேண்டவே வேண்டாம்!" என்று தொடர்ந்து கூறுவதன் மூலம், இவற்றை வெளியிட நினைக்கும் லயன் / முத்து காமிக்ஸ் பதிப்பாசிரியர் விஜயன் அவர்களின் ஆர்வத்திற்கு அணை போட்டு, புதிய ரக வாசகர்கள் உருவாகக் கூடிய அந்த வாய்ப்பை தட்டிப் பறிப்பது நல்லதல்ல என்பதே, ஒரு காமிக்ஸ் வாசகனாக என்னுடைய எளிய கருத்து!

( தொடரும் )

கருத்துகள்

  1. //பிடித்த விஷயங்களை சிலாகித்துப் பேசும் அதே வேளையில், பிடிக்காத விஷயங்களை அவ்வப்போது விமர்சனமும், கிண்டலும் செய்வதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை; அதை இயன்ற அளவுக்கு, பிறர் மனத்தைப் புண் படுத்தாமலும், தனிமனித தாக்குதல்கள் இல்லாமலும் செய்தாலே போதுமானது!//

    ரொம்ப சரிங்க சார்!! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுசரி! என்னாச்சு உங்களுக்கு!? :)

      நீக்கு
    2. //அதுசரி! என்னாச்சு உங்களுக்கு!?//
      ஒரு வாரமா, பதிவு போட நெறைய ஃப்ரீ டைம் கெடச்சு இருக்கு! :D

      நீக்கு
  2. அந்த போட்டா வில் இருப்பது நான் இல்லை தானே நண்பரே .. :-)

    உங்கள் போன இரண்டு பதிவுகளின் உழைப்பிற்கு ஒரு ராயல் சல்யூட் சார் .அது எவ்வளவு கடினமான பணி என்பது அனுபவித்தில் புரிந்தது .உடனடியாக கமெண்ட்ஸ் இடும் வசதி இணைய பழுதால் வர முடிய வில்லை .

    உங்களின் இந்த பதிவின் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர் பார்க்கும் "கிராபிக் நாவலின் " எதிர் பாளன் . :-)
    (எந்த வகை கிராபிக் நாவலின் எதிர் பாளன் என்பது உங்கள் தொடர் முடிந்ததும் ... :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்த போட்டா வில் இருப்பது நான் இல்லை தானே நண்பரே .. :-)//
      ஹா ஹா, நிச்சயம் இல்லை பரணி! அது உலகளவில் புகழ் பெற்ற Facebook Laughing Face :D படத்தின் மேலேயே, கீழேயோ சிரிப்பைத் தூண்டும் எந்த ஒரு கருத்தையும் போட்டுக் கொள்ளலாம்! :)

      இந்தப் பதிவு உங்களை குறி வைத்து எழுதப்பட்டது அல்ல! பொதுவாக, லயன் ப்ளாகிலும், ஃபேஸ்புக்கிலும் நான் கவனித்த கிராஃபிக் நாவல் எதிர்ப்பு அலையைப் பற்றிய எனது கருத்துகளை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்! :)

      //(எந்த வகை கிராபிக் நாவலின் எதிர் பாளன் என்பது உங்கள் தொடர் முடிந்ததும் ... :-)//
      தொடர் முடியும் வரை உங்கள் தீர்ப்பை ஒத்தி வைத்த அந்த அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!!! :D ஆனால், நீங்கள் அழுக்காச்சி காவியங்களின் எதிர்ப்பாளர் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்! :D

      நீக்கு
    2. அப்படி என்றால் இந்த தொடர் முடிந்ததும் எனக்கு வேலை இல்லை .. :-(

      நீக்கு
    3. # இந்த பதிவு உங்களை குறி வைத்து எழுத பட்டது அல்ல #
      அந்த நம்பிக்கை என்றுமே உண்டு நண்பரே ...


      நீக்கு
    4. அட, பரவாயில்லை பரணி; நீங்க இன்னொரு முறை அதையே ரிபீட் பண்ணுங்க! ஒண்ணும் பிரச்சினை இல்லை! :D

      நீக்கு
    5. இது:
      //அட, பரவாயில்லை பரணி; நீங்க இன்னொரு முறை அதையே ரிபீட் பண்ணுங்க! ஒண்ணும் பிரச்சினை இல்லை! :D//

      இதுக்காகச் சொன்னது:
      //அப்படி என்றால் இந்த தொடர் முடிந்ததும் எனக்கு வேலை இல்லை .. :-(//

      இதுக்கான பதில்:
      //அந்த நம்பிக்கை என்றுமே உண்டு நண்பரே ...//

      இது:
      நன்றி நண்பரே! :)

      இணையத்தில் குழப்பம் வராம கருத்து போடுவது மகா கஷ்டமான காரியம்!!! :D

      நீக்கு
  3. 'இப்படித்தான் இருக்கும்' என்று ஒருவாறாக நாங்கள் யூகித்த பின்னே, அதிலிருந்து விலகிச்சென்று வேறொரு அழகான பாதையில் அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்துவதெல்லாம் கார்த்திக் மட்டுமே அறிந்த கதை!
    க்ராபிக் நாவல்களுக்கென்றே ஒரு பிரத்யேக வாசகர்கூட்டம் தமிழ் காமிக்ஸ் உலகில் உருவாகிடவேண்டும் என்ற உங்களது முற்போக்கு எண்ணம் பாராட்டுக்குரியதுதான்!

    ஆனால்...

    (தொடரும்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு 'தொடரும்' பதிவுக்கு நாங்களும் 'தொடரும்' பின்னூட்டம் போடுவோம்ல... :)

      நீக்கு
    2. ஆனாலாவது, ஆவன்னாலாவது! :) உங்களைப் போன்ற நண்பர்களின் யூகிப்பை, எதிர்பார்ப்பை ஓரளவேனும் பூர்த்தி செய்ய முயற்சிப்பேன் - கவலை வேண்டாம்! ;) உண்மையில் அது பற்றி விரிவாக எழுதும் உத்வேகம், நேற்றில் இருந்து தான் எனக்குத் லைட்டாக உதயமாகி இருக்கிறது! ;-)

      // ஒரு 'தொடரும்' பதிவுக்கு நாங்களும் 'தொடரும்' பின்னூட்டம் போடுவோம்ல... :) //
      பின்னூட்ட வரலாற்றிலேயே முதன் முறையாக.... :D

      நீக்கு
  4. அதெப்பிடி கார்த்திக் ... ரேடியோ பேச்சு, கிளைமாக்ஸ் டயலாக் .. என்று ஆரம்பிச்சு .. அலசி காய போட்டு .. பக்கம் பக்கமா பிரிச்சு மேய்ஞ்சு.. வரலாற்றுத் தகவல்களைத் தேடி தொடர் எழுதி .. கடசீல ... பதிப்பாளரின் ஆர்வத்திற்கு அணை போடாதீங்க என்ற எளிய கருத்தினை [ஹி ! ஹி !!] பிரஸ்தாபித்து ... ரெண்டு பக்கமும் applause மற்றும் விசில் வாங்கிடுறீங்க ... :-D

    இது நல்ல டெக்னிக்கா இருக்கே !!!! :-D

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia