2014 - புத்தாண்டுத் தீர்மானங்கள்: காமிக்ஸ், கான்ட்ரவர்ஸி, கட்டுப்பாடு!

புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது! "இந்த வருடம் ஜிம்மில் சேர்ந்து, எனது வயிற்றுப் பகுதியில் மையம் கொண்டிருக்கும் சிக்ஸ் பேக்கை அமுக்கிப் பிடித்து, எப்படியாவது உடலின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து விட வேண்டும்" - என்பது போன்ற காமெடி தீர்மானங்களை எடுத்து, புத்தாண்டு துவங்கிய மறுநாளே, அவற்றை மறந்து விடுவதும் உண்டு! இப்படி நடைமுறைக்கு ஒவ்வாத தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக, "தமிழ் காமிக்ஸ் சார்ந்த களங்களில் எனக்கு இருக்கும் அதீத ஈடுபாட்டை கட்டுக்குள் வைப்பதன் மூலம், எனது நேரத்தை வெகுவாக மிச்சப் படுத்தக் கூடிய, சில உருப்படியான புத்தாண்டுத் தீர்மானங்களை எடுத்தால் என்ன?" என்று தோன்றியது!

1) வீண் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி:
நான் சொல்வது சரி என்று என் மனதுக்குத் தோன்றினால், அதை எதிராளி ஒப்புக் கொள்ளும் வரை - பாயிண்டுகளை அள்ளி வீசி, கண்கள் சிவக்க, நாசி புடைக்க, மீசை துடிக்க விவாதிப்பதுண்டு! அப்படியே அந்த விவாதத்தில் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி தரும் மனத் திருப்தியை விட, நேரத்தை வீணடித்த குற்ற உணர்ச்சி தான் மேலோங்குகிறது! இத்தனை நாட்கள் விவாதித்ததில், சற்று தாமதமாக "புரிந்து கொண்ட" மூன்று விஷயங்கள்:

i) நாம் சொல்ல வருவதை புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் விவாதம் செய்வது வீண்; ஏனெனில், அவர்கள் ஏற்கனவே மனதில் எடுத்து வைத்திருக்கும் ஒரு முடிவை நோக்கித் தான் விவாதத்தை நகர்த்துவார்கள்!

ii) சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல நேர்ந்தால், அவற்றை சொல்லி விட்டு அமைதி காப்பது நலம்; மாறாக, அவற்றை ஒட்டி விவாதங்கள் செய்து கொண்டே இருப்பது, வீண் பிரச்சினைகளில் தான் சிக்க வைக்கும்!

iii) விவாதங்கள் செய்வதன் மூலம், எஞ்சி இருக்கும் ஒரு சில காமிக்ஸ் நண்பர்களையும் இழக்க விரும்பவில்லை!

நானாக பிறரின் கருத்துக்களில் மூக்கை நுழைத்து விவாதங்கள் வளர்ப்பது இல்லை என்றாலும், என் கருத்துகளுக்கு இடையே நுழைபவர்களிடம் இருந்தும்; வெற்றிலை பாக்கு வைத்து என்னை விவாதத்திற்கு அழைப்பவர்களிடம் இருந்தும் விலகி இருக்க நான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது! எனக்கு மிகவும் சவாலாக இருக்கப் போவது இந்தத் தீர்மானம் தான்! :-)

2) ப்ளேட்பீடியாவில் மட்டும் விமர்சனம்:

2012-இல், லயன் / முத்து வெளியீடுகளைப் பற்றி - எடிட்டர் ப்ளாக், ஃபேஸ்புக் காமிக்ஸ் க்ரூப்கள், மற்றும் ப்ளேட்பீடியா என பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து எழுதி, தீவிரமாக நிறை குறைகளை விமர்சித்து வந்தேன்! ஒவ்வொரு மாதமும் வெளியான காமிக்ஸ்களுக்கு ப்ளேட்பீடியாவில், விரிவான பிளேடும் போட்டு வந்தேன்! ;-)

2013-இல், எனது காமிக்ஸ் விமர்சனங்களை பிரதானமாக எடிட்டர் ப்ளாகில் மட்டும் எழுதி வந்தேன்; ஒவ்வொரு மாதமும் வெளியாகும் புத்தகங்களிற்கு, தனிப்பதிவுகள் இட்டு நேரத்தை வீணடிப்பது அனாவசியம் எனத் தோன்றியதால் - ஏப்ரலில், முதல் மூன்று மாத புத்தகங்களுக்கான பதிவுகள்; பிறகு ஜூலையில், அரையாண்டுக்கான பதிவு என்று, விரல் விட்டு எண்ணக் கூடிய சில பதிவுகளுடன் வேலையை முடித்து விட்டேன்! 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' கிராஃபிக் நாவல் சார்ந்த, "மறக்கப் பட்ட மனிதர்கள் & மாற்றங்களும், ஏமாற்றங்களும்" தொடர் பதிவுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு - அந்தப் பதிவுகளை விரல் விட்டு எண்ண தனியே ஓரிரு கைகள் தேவைப் படலாம்! ;-)

2014 முதல், ப்ளேட்பீடியா வலைப்பூ மற்றும் ப்ளேட்பீடியா ஃபேஸ்புக் பக்கம் ஆகிய இவ்விரு தளங்களில் மட்டுமே, தமிழ் காமிக்ஸ் பற்றி விமர்சிக்கப் போவதாக இருக்கிறேன்! கடந்த ஆண்டைப் போல ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு தனிப்பதிவு அல்லது இந்த ஆண்டைப் போல சில மாதங்களுக்கு ஒருமுறை தொகுக்கப் பட்ட விமர்சனப் பதிவு என எந்த ஒரு கால வரையறைகளிலும் சிக்கிக் கொள்ளாமல், என்னை மிகவும் கவர்ந்த அல்லது வெறுப்பேற்றிய காமிக்ஸ் புத்தகங்களை மட்டும், என்னுடைய தளங்களில் விமர்சிப்பதாய் உள்ளேன்!

3) மே நஹி பனூங்கா ட்ரான்ஸ்லேட்டர் (MNBT):
லயன் காமிக்ஸ் நடத்தும் "கோன் பனேகா ட்ரான்ஸ்லேட்டர்" போட்டிகளில் இனிமேல் கலந்து கொள்வதாக இல்லை! ஃபில்லர் கதைகளை மொழிபெயர்ப்பதில் எனக்கு ஆர்வம் போய் விட்டது! இதுவரை அவர்கள் நடத்திய மூன்று போட்டிகளில் கலந்து கொண்டதில், இரண்டு கிடைத்தற்கரிய பழைய காமிக்ஸ் புத்தகங்கள் லாபம் என்ற திருப்தியோடு போட்டிக் களத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேறுகிறேன்! :-)

4) மே நஹி பனூங்கா கிராஃபிக் டிஸைனர் (MNBGD):
கிராஃபிக் டிஸைனிங் செய்வது என்னுடைய பிரதான திறமை அல்ல, என்னுடைய அலுவலகப் பணியும் முற்றிலும் மாறுபட்டது! டிஸைனிங்கில், கத்துக்குட்டி அளவில் தான் இருக்கிறேன்; எனது மகனுடைய படங்களை ஒன்றிணைத்து Collage செய்யும் அளவிற்கு மட்டுமே இருந்த எனது ஆர்வம், காமிக்ஸ் மீதான காதலால் - காமிக்ஸ் நாயகர்களின் கொலாஜ் (ஈரோடு புத்தக விழாவில்), காமிக்ஸ் அட்டை (பயங்கரப் புயல்) மற்றும் லோகோ வடிமைப்பு (சன்ஷைன் கிராஃபிக் நாவல்) என சற்றே விரிவடைந்தது! ஆனால், இது எனது நேரத்தை கணிசமாக விழுங்கி இருப்பது, ஒரு மிகப் பெரிய உறுத்தல்! அனுபவமின்மை காரணமாக, சிறிய டிஸைனிங் வேலையைச் செய்வதற்குக் கூட பல மணிநேரங்கள் எடுத்துக் கொள்ள நேர்கிறது! எனவே, இனிமேல் லயன் ப்ளாக் டிஸைனிங் போட்டிகளில் கலந்து கொள்வதை அறவே தவிர்க்க முடிவெடுத்துள்ளேன்!

5) டெம்ப்ளேட் பின்னூட்டங்களுக்கும், பதில்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு:
ப்ளேட்பீடியாவில் இடப்படும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் தவறாமல் பதில்கள் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன்! "நம்மையும் மதித்து பின்னூட்டம் இடுகிறார்களே, அவர்களுக்கு பதில் சொல்வது நம் கடமை அல்லவா?!" என்ற எண்ணத்தில், குறைந்த பட்சம் ஒரு நன்றியையாவது சொல்லி வைப்பேன்! இனி, அவ்வாறு செய்வதை நிறுத்திக் கொண்டு, அவசியப் பட்டால் மட்டுமே பின்னூட்டங்களிற்கு பதில் அளிப்பதாக இருக்கிறேன்! ஆனால், ஜாலி + கிண்டல் ரக பதில்கள் வழக்கம் போல தொடரும்! :-)

அதே போல லயன் ப்ளாகிலும் என்னுடைய பின்னூட்டங்களைக் குறைத்துக் கொள்ளப் போகிறேன்! 2012-உடன் ஒப்பிட்டால், அங்கு எனது பின்னூட்டங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து விட்டேன் என்றாலும், அவ்வப்போது சில பதிவுகளில் அவை கபீஷின் வாலாக நீண்டு விடுகின்றன! ஒவ்வொரு பதிவிலும் என்னுடைய முதல் பின்னூட்டத்தை இட்ட கையுடன், அந்தப் பதிவிற்கு ஈமெயில் சப்ஸ்க்ரைப் செய்து, மற்றவர்களின் கருத்துக்களையும் தொடர்ந்து கண்காணித்து, எனது பின்னூட்டத்திற்கு வரும் பதில்களுக்கு மறுமொழி அளிக்கும் அந்த முடிவற்ற சங்கிலியில் சிக்கித் தவிப்பதற்குப் பதிலாக - வாரம் ஓரிரு முறைகள் மட்டும் அங்கே எட்டிப் பார்ப்பதாக முடிவெடுத்துள்ளேன்!

பல்வேறு முகநூல் காமிக்ஸ் குழுமங்களில் வழக்கம் போல என் காமிக்ஸ் கமெண்டுகள் தொடரும் - அளவுடன்!

காமிக்ஸ், கான்ட்ராவர்ஸி, கட்டுப்பாடு!
2014-ம் ஆண்டு துவங்குவதிற்கு இரு வாரங்கள் முன்னதாகவே புத்தாண்டுத் தீர்மானங்களை வெளியிடுகிறானே என்று புருவம் உயர்த்த வேண்டாம்! இவை, பல மாதங்களாகவே என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் எண்ணங்கள் தான்! இவற்றிற்க்கு ஒரு இறுதி வடிவம் தந்து, உருப்படியான சில முடிவுகளை எடுத்தான பின்னர், அவற்றை செயல்படுத்த புத்தாண்டு மலரும் வரை ஒரு ஃபார்மாலிட்டிக்காக காத்திருப்பது அவசியமாகத் தோன்றவில்லை! உண்மையில், இவற்றை புத்தாண்டுத் தீர்மானங்கள் என்று அழைப்பது கூட, இந்தப் பதிவிற்கு ஒரு கவர்ச்சிகரமான தலைப்பு தர உதவுகிறது என்ற அளவில் மட்டும் தான்! :-)

நண்பர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இனிமேல், "இவன் வேற மாதிரி!" :-D

Image Credit: diabetesmine.com

கருத்துகள்

  1. me first...

    இதுக்கு ரிப்ளை பண்ணுவீங்களா சார்? :P

    பதிலளிநீக்கு
  2. அருமையான தீர்மானங்கள் கார்த்திக் ! உங்கள் அளவு பிரபலமான பதிவர் இல்லை என்றாலும் - ஆழ்ந்து அழுவாச்சி காவியங்களை விமர்சிப்பவன் இல்லை என்றாலும் :-) - இந்த வருடம் நான் எடுத்த முக்கிய முடிவும் இதுதான் !

    ஓரிரு தளங்களில் மட்டுமே ஆதி காமிக்ஸை நக்கல் அடித்துக் கொண்டும் - அதி பூத்தாற்போல் வரும் நல்ல வெளியீடுகளைப் பாராட்டிக்கொண்டும் (கடைசீயா ப்ளுகொட்ஸ், டெக்ஸ்) இருக்கிறேன்.

    நமது எண்ணங்களை முன்வைக்க நினைக்கும் பொது குறுக்கிடும் எல்லாம் தெரிந்த காமிக்ஸ் கட்சி கண்மணிகளுடன் போரிட்டு போரிட்டு அலுத்து விட்டது. எஞ்சி இருக்கும் நண்பர்களை -உங்களைப் போல - இழக்க விருப்பமில்லை !

    அனாலும் நய்யண்டிகளை விடக்கூடாது என்று என் அமெரிக்க நண்பர் Peter Martin PhD அவர்கள் கூறுகிறார் :-D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! :P

      ச்சே, இந்த டெம்ப்ளேட் பின்னூட்டத்தை விட முடியலியே! இரண்டாவது நாளே, அஞ்சாவது தீர்மானம் காலியா?! :(

      நீக்கு
  3. உங்கள் மனதுக்கு தோன்றுவதை, உங்கள் மனதுக்கு பிடித்ததை செய்யுங்கள் கார்த்திக்!

    நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் 'வீண்' விவாதங்களை குறைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி விவாதங்கள் ஆரோக்கியமானவை. விவாதம் செய்தால்தான் புரிதல் ஏற்படும்.

    என்னைப்பொறுத்தவரை நீங்கள் எதையும் விடத்தேவையில்லை. எப்போதும் போல தொடருங்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவாதங்கள் ஆரோக்கியமானவை என்பதில் ஐயம் இல்லை செந்தில்! Reasonable ஆக இருப்பவர்களிடம், என் நேரத்தை வீணடித்துக் கொள்ளாத வகையில் விவாதங்கள் தொடரும்! :)

      'நோ விவாதம்' கீழ்க்கண்ட வகையினரிடம் தான்!
      //நாம் சொல்ல வருவதை புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் விவாதம் செய்வது வீண்//

      நீக்கு
  4. தங்கள் வருகைக்கும், பதிலுக்கும் நன்றி கார்த்திக்! (ஹம்ம்...)

    பதிலளிநீக்கு
  5. "புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது!"

    வாழ்த்துக்கள்!

    நாளை நடப்பதை யாரறிவர் ?

    பதிலளிநீக்கு
  6. அப்படியா.......

    ஒரு பழமொழி இருக்கு! வேனாம் விடுங்க பழமொழி சொன்னா உங்களுக்கு கோபம் வருமே!! ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திலகர் தத்துவம் சொல்லி பயமுறுத்தறார்! நீங்க பழமொழி சொல்லாம பயமுறுத்திறீங்க!! நான் திருந்திட்டேன்... அட சொன்னா நம்புங்கப்பா! ;-)

      நீக்கு
  7. //1) வீண் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி:
    //ii) சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல நேர்ந்தால், அவற்றை சொல்லி விட்டு அமைதி காப்பது நலம்;

    அதாவது ஆரம்பிச்சு மட்டும் விட்டுருவீங்க. அதப் பாத்துட்டு எதாவது ரெண்டு பயக அடிச்சு கிட்டு சாகுறத பாக்குறதில அவ்வளவு ஆனந்தம் ;)

    //iii) விவாதங்கள் செய்வதன் மூலம், எஞ்சி இருக்கும் ஒரு சில காமிக்ஸ் நண்பர்களையும் இழக்க விரும்பவில்லை!

    நிறைய இணைய நட்புக்கள் அடித்துக் கொள்ளும் அளவுக்கு போவதற்கு காரணம், விவாதங்களே.

    //2) ப்ளேட்பீடியாவில் மட்டும் விமர்சனம்:

    ஏன் இந்த முடிவு? அட்லீஸ்ட் விமர்சனங்களை சுருக்கமாகவாவது எடிடர் ப்லொகில் பதிவு செய்யுங்கள்.

    //3) மே நஹி பனூங்கா ட்ரான்ஸ்லேட்டர் (MNBT):
    //4) மே நஹி பனூங்கா கிராஃபிக் டிஸைனர் (MNBGD):

    என்னங்க நீங்களே இப்படி சொல்லிட்டா, தமிழ் காமிக்ஸ் உலகம் தாங்குற தூண் இல்லாமல் கீழே விழுந்துடாதா ? ;)

    //5) டெம்ப்ளேட் பின்னூட்டங்களுக்கும், பதில்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு:

    பிரபல பதிவரயிட்டாலே இவிங்க இப்படிதான் ;)

    எடுத்த முடிவுகள் நல்ல முடிவுகளே. பாயிண்ட் 2 ஐ கூட எடிடர் ப்லொகில் கமெண்ட் இட்டுவிட்டு ஒரு ஜென் துறவியைப் போல வெளியேறி விடுங்கள். ;)

    நிறைவேற வாழ்த்துக்கள். எங்க கிட்ட சொல்லிட்டீங்கல்ல வாட்ச் பண்ணிக் கிட்டே இருப்போம். ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பாயிண்ட் 2 ஐ கூட எடிடர் ப்லொகில் கமெண்ட் இட்டுவிட்டு ஒரு ஜென் துறவியைப் போல வெளியேறி விடுங்கள். ;)//
      அது லேசுப்பட்ட காரியமா என்ன? :) உங்க அளவுக்கு எனக்கு அந்த பக்குவம் இல்லையே ராஜ்! ;)

      //எங்க கிட்ட சொல்லிட்டீங்கல்ல வாட்ச் பண்ணிக் கிட்டே இருப்போம். ;) //
      ஹா ஹா, இதே வேலையா திரியறாங்கப்பா! :)

      நீக்கு
  8. ஒரு மாற்றத்துக்கு உங்க பயண அனுபவங்களை பற்றி மீண்டும் எழுதலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதலாம் தான்! ஆனால், அதற்கு பயணம் செய்ய வாய்ப்பு வர வேண்டுமே! :) தொடர்ச்சியாக காமிக்ஸ் பற்றி எழுதி எனக்கும் போரடித்து விட்டது! :(

      நீக்கு
  9. இந்த முடிவை மனமார .....






    வெறுக்கிறேன் நண்பரே ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காமிக்ஸ் படிப்பதையோ, கமெண்டு போடுவதையோ நிறுத்தப் போவதில்லையே பரணி?! விவாதங்களையும், நேரத்தை விழுங்கக் கூடிய இதர விஷயங்களையும் தானே குறைக்கவிருக்கிறேன்?! இதில் நீங்கள் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது?! :)

      நீக்கு
    2. விவாதம் பண்றதை நீங்க நிறுத்திட்டா, அங்கே 'நாட்டாமை எது சொன்னாலும் தீர்ப்பு'னு ஆகிடுமே?

      பல அடுக்குமாடிகளைப் பார்த்த அத்தளம், குடிசை வீடுகளை மட்டுமே கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமம் போல் காட்சி தருமே?

      உறுதியா விவாதம் பண்ண ஆளில்லாமப் போச்சுன்னா எங்களை மாதிரி விவரம் தெரியாதவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் ஏமாந்து நிற்கும் அவலம் அரங்கேறுமே?

      அரிய பல விசயங்களை அள்ளித் தர எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே விக்கிபீடியா - இந்த ப்ளேடுபீடியா மட்டும் தானே?

      இல்லீங்களா, பரணிதரன்? (பேசாம கார்த்திக்கும் ஒரு கடுதாசி வரைஞ்சிடுங்க. எல்லாம் சரியாகிடும் :D)

      நீக்கு
    3. ஹா ஹா... நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு விஜய்! :)

      ஒரு அளவுக்கு மேல் எதையும் செய்தால், அதற்கு மதிப்பு இருக்காது இல்லையா?! எடிட்டர் ப்ளாகில் - 'நொய் நொய்' என்று சதா விமர்சித்துக் கொண்டிருந்தால், அது அங்கே வருபவர்களை (எடிட்டர் உட்பட) பயங்கரமாக கடுப்பேற்றக் கூடும்! இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு, அமைதியாக இருப்பது தான் உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது! நம்ம கருத்தைச் சொல்லத் தான், நம்ம 'ப்ளேடு' தளங்கள் இருக்கே!!! :-)

      திறமையாக எழுதக் கூடிய / விவாதம் செய்யக் கூடிய நண்பர்கள் பல பேர், இன்னும் அங்க இருக்காங்க விஜய்! ஒரு மாற்றத்திற்கு, நீங்களும் ஏன் விவாதம் செய்ய / கருத்து சொல்ல ஆரம்பிக்கக் கூடாது?! அட்லீஸ்ட் ஒரு நாள் அல்லது ஒரு பதிவில் முயற்சி செஞ்சு பாருங்களேன்! ;-)

      நீக்கு
    4. // ஒரு மாற்றத்திற்கு நீங்களும் ஏன் விவாதம் செய்ய/ கருத்துச் சொல்ல ஆரம்பிக்கக் கூடாது?!//

      உங்களின் உள்நோக்கத்தை நான் நன்கறிவேன் கார்த்திக்! ;)

      நீங்கள் வேறு யாருடனோ விவாதம் செய்வதை ஒரு 'பார்வையாளன்' என்ற இடத்திலிருந்து வேடிக்கை பார்த்தபோதே பல முறை முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போயிருக்கிறது எனக்கு! நானாவது விவாதமாவது?
      'ஊய்ய்...' னு ஒரு சவுண்டு விட்டுப்பாருங்க; நான் எப்படி ஓடுறேன்கிறதை! :)

      நீக்கு
  10. நீங்க ஒழுங்கா பதிவு எழுதுங்க அதுவே போதும் :-)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரி தான் சீனு! எப்படியோ புலம்பிப் புலம்பியே ஒரு பதிவைத் தேத்தியாச்சு! :D இனிமே ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு தீர்மானப் பதிவு போட்டுட வேண்டியது தான்! சில பேரு சுடுதண்ணி வைப்பது எப்படின்னு எல்லாம் பதிவு போடுறாங்க! இருங்க வர்றேன்... :D

      நீக்கு
  11. Good ones Karthik. If you resist too much, i am sure you will break these immediately. Instead avoiding it completely try and reduce the time spent.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rightly said! Just like any other habit I find it hard to stop it immediately! :) But yes, I am trying to reduce and I will... :)

      நீக்கு
  12. ஸார் ,வலைத்தளத்தில் அதிகம் உலவுவதில்லை,பின்நூட்டம் அதிகம் இடுவதில்லை,இட்டாலும் திரும்பி பார்க்க நேரம் குறைவு என்பதால் விவாதக்கள் உங்களுக்கு தந்த வேதனை புரியாவிட்டாலும் உணர முடிகிறது.நல்ல ஆரோக்கியமான விவாதங்கள்,நகைச்சுவை விவாதங்கள் கண்டு ரசிப்பதில் என் போன்ற ரசிகர் பட்டாளம் உண்டு.நல்ல வசன நடை எல்லோருக்கும் அமைவதில்லை.சமயங்களில் ரீலாக்ஸ் தருகிறது.தேவையற்ற சீரியசாக மாறும் விவாதம் தவிர்த்து விவாதங்களில் பங்கேட்க உங்களையும் பிற நண்பர்களையும் கேட்து கொள்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிற நண்பர் கருத்தை பாராது தான் என் கருத்தை பதிந்தேன்.அவர்கள் கருத்துக்களை இப்போது வாசித்தேன்.அவற்றையும் வழிமொழிகிறேன்.வீண் விவாதம் செய்வதுக்கு முற்றுப்புள்ளி: , சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல நேர்ந்தால், அவற்றை சொல்லி விட்டு அமைதி காப்பது நலம் போன்றவற்றை நிச்சயம் ஆதரிக்கிறேன்

      நீக்கு
    2. நன்றி அபிஷேக்! வேதனை என்பதை விட, நேரம் வீண் ஆகிறது என்பது தான் முக்கியமான காரணம்! இதற்கு அதிக நேரம் செலவழித்தால் எனது மற்ற காரியங்கள் தடைபட்டுப் போகின்றன; இருப்பினும், அளவுடன் பங்களிப்புகள் & விவாதங்கள் தொடரும்! :)

      நீக்கு
  13. நாட்டடடடடாமை !தீர்ப்ப மாத்தி சொல்லு .இல்ல அண்ணதம்பி பொளங்கமாட்டோம் தீர்ப்ப மாத்திசொல்லு அம்புட்டுத!!!.

    பதிலளிநீக்கு
  14. ஹாய்.உங்களுடைய சிறு வயது காமிக்ஸதேடல்.,தற்போததைய ஆர்வம் ஆகியவற்றை என்னுடன் ஒப்பிடும்போது,நான் குறைவுதான்.நீங்களே இப்படி ஒதுங்விட்டபோது,எனக்கும் பின்நாளில் காமிக்சின் மீது உள்ள மோகம் குறைந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia