தந்தை
மொழி!
தமிழ், எனது தாயின் மொழி அல்ல; மாறாக, பயிற்றுவித்த குருவின் மொழி! தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி, தமிழ் வழிக் கல்வி பயின்ற வகையில் தமிழும் எமது தாய்மொழியே என மனதார ஏற்றுக் கொண்ட சௌராஷ்டிரத் தமிழர்களில் நானும் ஒருவன்! கற்றது தமிழ், சிந்திப்பதும் அதில் என, எனது எண்ணங்களின் வடிவமாய், எழுத்தார்வத்தின் படிமமாய் நிற்கும் இணைப்பு மொழி தமிழ்!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சௌராஷ்டிர ராஜ்யத்தில் இருந்து புலம் பெயர்ந்து, தென்னகம் வந்தடைந்த எமது முன்னோரின் வாய்வழி நினைவுகள், மெல்லிய பட்டு நூலாக ஊசலாடிட; தலைமுறைகளைத் தமிழகத்தில் விதைத்ததில், எண்ணத்திலும், செயலிலும், தாய்மொழி சௌராஷ்டிராவிலும் கணிசமாகவே கலந்திருக்கிறது தமிழ்! மொழியையும், பாரம்பரியத்தையும் விட்டுத் தராது; அதே சமயம் தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டு விலகாத ஒருவித சமநிலையே, எங்கள் நிலை!

தமிழகத்தில் இருந்தவரை, 'வீட்டில் சௌராஷ்டிரா, வெளியில் தமிழ்' என்பதாகத் தான் இருந்தது! தமிழக எல்லை தாண்டி வசிக்கும் கடந்த 18 வருடங்களில் - வெளியுலக மொழிப் பட்டியலில், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் 14 வருட நிரந்தர உறைவிடமான பெங்களூரின் (சொல்ப சொல்பா) கன்னடமும் இணைந்து விட்டன! இருந்தும், "வயசான காலத்துலேயாவது மதுரை, சென்னைன்னு செட்டில் ஆகிறனுமப்பா" என்ற நப்பாசை உள்ளுக்குள் ஒரு ஓரமாய் ஒட்டிக் கொண்டு தானிருக்கிறது!

என் மகனுக்கு தமிழ் கற்பித்து விட வேண்டும் என்பது அவன் பிறந்த போதே எடுத்த முடிவு! அது அவ்வளவு எளிதல்ல என்பது, அவன் பிறந்து ஐந்தரை வருடங்கள் கழித்துத் தான் புரிந்திருக்கிறது! Play school-ல் இருந்தே, முதல் மொழியாக ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது; UKG-யின் இரண்டாம் மொழி பட்டியலில் இருப்பது ஹிந்தி அல்லது கன்னடம்; நாங்கள் ஹிந்தியைத் தேர்ந்தெடுத்திருப்பதால்; மூன்றாம் வகுப்பில் இருந்து, மூன்றாம் மொழியாக கன்னடமும் அவனுக்கு அறிமுகமாகி விடும்! வீட்டில் அவ்வப்போது தமிழில் பேசுவதாலும், தமிழ் சானல்கள் மற்றும் தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பதாலும், தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வெறுமனே புரட்டுவதாலும் மட்டுமே என் மகன் தமிழைக் கற்றுக் கொண்டு விட முடியாது என்ற உண்மை, அவன் இப்போது UKG நுழைந்ததும் தான் சுளீரென்று உறைத்திருக்கிறது!

அவனது பள்ளித் தோழர்களின் பேச்சு மொழியோ ஆங்கிலம் (மட்டும்); டிவியில் அவன் பார்க்க விரும்புவதோ ஆங்கில மற்றும் ஹிந்தி கார்ட்டூன்களை; அக்கம் பக்கத்திலும் தமிழ் பேசும் சம வயதுத் தோழர்கள் அவனுக்கு இல்லை என்ற நிலையில் - தமிழுக்கும் அவனுக்குமான ஒரே தொடர்பு, நாங்கள் பார்க்கும் திரைப்படங்களும் அவற்றின் பாடல்களும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மட்டும் தான். எனக்கு மிக எளிதாக கிடைத்த தமிழ், என் மகனுக்கு இப்போது எட்டாக் கனியாக இருக்கிறது!

அவனுக்கு சுத்தமாகத் தமிழ் தெரியாது என்றில்லை; மழலைத் தமிழில், சிறு சிறு வார்த்தைகள் மட்டும் பேசுவான். ஆனால், நான் எதிர்பார்ப்பதோ சரஸ்வதி சபதம் சிவாஜியைப் போல, அகர முதல எழுத்தை எல்லாம் ஒரே இரவில் கரைத்துக் குடித்து, "இயல், இசை, தமிழ் காமிக்ஸ் தீபம் ஏற்றி வைத்தாய் நீயே... என் தந்தையே!" என்று எனை நோக்கி பாட வேண்டுமென்று! எளிதில் நடக்கக் கூடிய காரியமா அது? 'வருங்காலத்தில், மதுரை / சென்னை போகும் பேருந்துகளின் பெயர்ப் பலகைகளை எழுத்து கூட்டிப் படித்து, எங்களை ஏற்றி விடும் அளவுக்காவது அவன் தமிழ் கற்றுக் கொள்வானா, மாட்டானா?' என்ற அச்சம் லேசாக தலை தூக்கியிருக்கிறது! அதன் காரணமாய், மெல்லத் துவங்கி இருக்கிறது ஒரு தந்தையின் தமிழ்ப் போராட்டம்!

முதல் கட்டமாக, சானல்களின் audio / language preference-களை மாற்றி - 'சோட்டா பீம்' இங்கிலீஷில், 'டோரேமான்' தமிழில், 'ஆகி அண்ட் காக்ரோச்சஸ்' ஹிந்தியில் என்றெல்லாம் ரக வாரியாக பங்கு பிரித்து வைத்திருக்கிறேன். பொடிசுகளுக்கான சானல்களில், விளம்பரங்கள் முதற்கொண்டு வட ஹிந்திய ஆதிக்கம் சற்று அதிகமாகவே காணப் படுகிறது! இது போதாதென்று சோட்டா பீம் போன்ற பிரபல கார்ட்டூன் தொடர்களில், தெற்கை வம்புக்கு இழுக்கும் வைபவமும் மறைமுகமாக நடந்தேறி வருகிறது. உதாரணத்திற்கு, பீமில் ரெகுலராக தலை காட்டும் திருடர்கள் இருவரும் தென்னிந்தியர்களே! தீயவர்களை கருமை நிறத்தில் காட்டுவது இந்திய கேளிக்கைத் துறையில் புதிதில்லை தான்; என்றாலும், நிற, இன மற்றும் மொழி அரசியல்களை பிஞ்சிலேயே ஆழ விதைத்து விடுகிறார்களே என்றொரு ஆதங்கம். (தமிழுணர்வின் காரணமாக, மொழிவாரியாக நிகழ்ச்சிகளை பிரித்துப் பங்கு போடும் எனது செயலும் அத்தகைய விதைகளில் ஒன்றே என்பதை ஒத்துக் கொள்கிறேன்!).

ஹிந்தியில், ஏராளமான அனிமேஷன் தொடர்களை சொந்தமாக தயாரித்தும், மொழிபெயர்த்தும் வெளியிடுகிறார்கள். உதாரணத்திற்கு, "Oggy and Cockroaches" ஒரு பிரெஞ்சுத் தயாரிப்பு - வசனங்களே இல்லாத படைப்பு என்பதால், அதில் டப்பிங்கிற்கு வேலையே இல்லை; ஆனால், அதன் ஹிந்தி வடிவிலோ ஷாரூக்கான் மற்றும் இதர பாலிவுட் நடிகர்களின் குரல்களில், இஷ்டத்துக்கும் காமெடி வசனங்களைச் சேர்த்து ரகளை செய்கிறார்கள். என் மகன் சத்தமின்றி ஹிந்தி கற்றுக் கொண்டிருப்பது, ஒரு வருடமாக Oggy பார்த்துத் தான்! இப்படி குழந்தைகளைக் கவரக் கூடிய வகையில் மொழிபெயர்க்கப் பட்ட கார்ட்டூன் தொடர் தமிழில் ஏதேனும் இருக்கிறதா என்று இன்னமும் தேடிக் கொண்டே இருக்கிறேன். சுட்டி டிவியில் வரும் ஜாக்கி சான் சற்று பரவாயில்லை.

அடுத்ததாக, காலையில் எழுந்து பள்ளி கிளம்பும் நேரம் வரை என் மகன் என்னுடன் தமிழில் தான் பேச வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கிறேன்! "அப்பா, இதை மட்டும் சௌராஷ்டிராவிலேயே சொல்லிடறேனே?" என்று அவன் அடிக்கடி பரிதாப முகம் காட்டினாலும், அவன் சொல்வதை தமிழ்ப் படுத்திப் பேசிக் காட்டுகிறேன். நான் தமிழை அவன் மீது திணிக்கிறேனோ என்ற எண்ணம் அவனிடம் தலை தூக்கி, அதுவே தமிழ் மீதான வெறுப்பாக மாறி விடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வில் - கொஞ்சம் இங்கிலீஷ், கொஞ்சம் ஹிந்தி, இதர சமயங்களில் சௌராஷ்டிரா என்று கலந்து கட்டி பேசி வருகிறேன்.

கடைசியாக, தமிழ் எழுத்துப் பலகை மற்றும் கையெழுத்துப் பயிற்சி புத்தகங்களை வாங்கி, அவனை எழுதப் படிக்க வைக்க முயன்று வருகிறேன், தினமும் முடிவதில்லை. அவனை ஸ்கூல் ஹோம் வொர்க் செய்ய வைக்கும் முழுப் பொறுப்பையும் என் மனைவி தான் கவனித்து வருகிறார் என்பதால், தமிழை என் தலையில் கட்டி விட்டார்! :)

ஒரேடியாக திணிக்காமல், சிறுகச் சிறுக அவனுக்கு தமிழின் மீதான ஆர்வம் கூடுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டு வருகிறேன்! நானெல்லாம் ஐந்து வயதில் நேரடியாக ஒன்றாம் வகுப்பு சேர்ந்து, அதன் பின்னர் தான் தமிழ் (மட்டும்) படித்தேன், LKG எல்லாம் எட்டிக் கூட பார்த்தது கிடையாது; ஆங்கிலம், மூன்றாம் வகுப்பில் தான் என்னை எட்டியே பார்த்தது, இருந்தும் அதை நான் சட்டை செய்ததில்லை! அவனுக்கோ, இந்த ஐந்து வயதிலேயே மூன்று, நான்கு மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்! இந்தகால குழந்தைகளின் நிலைமை, மாநில மொழிகளின் நிலைமையைப் போலவே வெகு பரிதாபகரமாகத் தான் உள்ளது!

இருப்பினும், "தமிழே இனி என் மகனது தந்தை மொழி" என உறுதி பூண்டு, "அ - அப்பா" என்று ஆரம்பித்திருக்கிறேன்... முழு நம்பிக்கையுடன்!

32 comments:

 1. சரஸ்வதி தேவியின் கையில் எழுத்தாணி இருந்தது, இங்கு அப்பாவோ ப்ளேடை வெச்சு எழுதுறார். பாவம் குழந்தை.
  என் தந்தை எண்ணற்ற ப்ளேடால் கொல்-னு -நிச்சயம் பேர் வாங்கிக் குடுப்பான், தைரியமாக இருங்க.

  ReplyDelete
 2. எந்த மொழியில் ஒரு மனிதன் சிந்தித்து, தனது எண்ணங்களை தடையின்றி வெளிப்படுத்துகின்றானோ. அது தான் அவனது தாய்மொழியாகும். அந்த மொழியே அவனது பெற்றோரின் மொழியாகவும், அவனது பிள்ளைகளுக்கும் மொழியாகவும், அவனது சுற்றத்தின் மொழியாகவும், அவனது கல்விக்கான மொழியாகவும், அவனது பணியிடத்து மொழியாகவும், அவனது பொழுதுபோக்கு மொழியாகவும், அவனது நண்பர்களின் மொழியாகவும், அவனது உறவினர்களின் மொழியாகவும் இருக்க வேண்டியதில்லை. அப்படி அனைத்து மொழியும் ஒன்றாக இருந்தால் அது சிறப்பானது தான், ஆனால் அப்படி இருக்க வேண்டியதில்லை. எந்தவொரு மொழி அவனது எண்ணக்கருவை, சிந்தனைப்புலனை, நினைவாற்றலை பெருக்கிக் கொண்டு முதன்மை மொழியாகவும், அவனது எண்ணம், பேச்சு, எழுத்து, தொடர்பாடல் போன்றவற்றில் முதன்மை மொழியாக திகழ்கின்றதோ அது தான் அவனது முதன் மொழி, தாய் மொழி, தந்தை மொழி எல்லாம்.

  உங்கள் பிள்ளையின் தாய்மொழியாக எது இருக்க வேண்டும் என நீங்களும், உங்களது வாழ்வியல் சூழலும் தான் தீர்மானிக்கின்றன. நிச்சயம் தமிழ் தாயகப் பகுதிகளில் ( தமிழகம், புதுவை, வட இலங்கை ) இருந்து நாம் வேற்றிடத்துக்கு புலம்பெயரும் போது நமது முதன்மை மொழி என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் மாறிவிடுகின்றன. ஒரு வட்டாரத்திலோ, ஒரு பகுதியிலோ பெருமளவிலான ஒரே மொழி பேசும் மக்களாக புலம்பெயரும் போது, அங்கு மாற்று மொழிக்கான தேவை குறைந்துவிடும் போது அங்கு தாய்மொழிப் புலம்பெயர்ச்சி நடந்துவிடும். இலங்கையின் மலையகத் தோட்டங்களில், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் தமிழே முதன் மொழியாக இருப்பது இதனால் தான்.

  பெங்களூரு போன்ற நகரங்களில் வாழ்வோருக்கு தமிழ் தாய்மொழியை போதிப்பது மிக எளிது தான். ஒன்று பெங்களூரு தமிழக எல்லையில் அமைந்திருக்கின்றது. பெங்களூருவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகம், பெங்களூருவின் பிரதான மொழியான கன்னடம் தமிழோடு தொடர்புடையது. பெங்களூருவில் தமிழ் தொலைக்காட்சிகள், சினிமாக்கள், பத்திரிக்கைகள் கிடைக்கின்றன, பெங்களூருவில் பள்ளியில் தமிழை ஒரு பாடமாகவும், அல்லது முழு தமிழ் வழியிலும் கூட கல்வி கற்க முடியும். ஆனால் தமிழ்நாட்டவர்கள் மற்ற மாநிலங்களுக்கு போன பின் தமிழுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது தான் நிதர்சன உண்மையாகும்.

  தமிழை பேசவும், எழுதவும் கற்றுக் கொடுப்பதில் முக்கியப் பங்கு நமது தமிழ் சினிமாக்கள், தொலைக்காட்சிகளின் பாப்புலராட்டி மட்டுமே. அதுவும் இல்லை என்றால் மாற்று மொழி பகுதிகளில் வாழ்வோருக்கு தமிழ் மீதான ஈடுபாடே இல்லாமல் போயிருக்கும்.

  என்ன தான் தமிழை பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டாலும் தமிழின் தனித்தன்மை அதன் அழகியல் அதன் இலக்கியத் தகமை அதன் வரலாற்றுப் பின்புலம் அதன் பழமை அதன் ஆழமான அறிவுக் கோட்பாடுகளை தமிழை கற்றால் மட்டுமே பெற முடியும். ஆனால் அவரவர் தேவைகள், வசதிகள், வாய்ப்புக்கள், எதிர்கால திட்டங்களுக்கு அமைய தமிழின் இடம் இடம் மாறிக்கொண்டு விடுகின்றது.

  குறைந்தது தமிழை பேசவும், எழுதவுமாவது கற்பிக்க முயன்றுள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு இதோ பெங்களூர் பக்கத்தில் உள்ளது. அடிக்கடி பெற்றோர், உற்றோர், உறவினர் வீடுகளுக்கு கோடை விடுமுறையில் போய் தங்கிவிட்டு வாருங்கள். செவியும், கண்ணும் தமிழை தானாக கற்றுக் கொடுக்கும். மொழி அதன் வாழும் சூழலிலேயே போய் கற்பது தான் இயல்பானது, ஆழமானது. வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. விரிவான, மிகச் சிறப்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதிற்கு மிக்க நன்றி ஐயா!

   //என்ன தான் தமிழை பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டாலும் தமிழின் தனித்தன்மை அதன் அழகியல் அதன் இலக்கியத் தகமை அதன் வரலாற்றுப் பின்புலம் அதன் பழமை அதன் ஆழமான அறிவுக் கோட்பாடுகளை தமிழை கற்றால் மட்டுமே பெற முடியும்.//

   //மொழி அதன் வாழும் சூழலிலேயே போய் கற்பது தான் இயல்பானது, ஆழமானது.//

   உண்மையிலேயே மிகவும் ஆழமான, நிதர்சனமான கருத்துக்கள்! என்னால் இயன்றதை நிச்சயம் முயல்வேன்!

   //பெங்களூருவில் பள்ளியில் தமிழை ஒரு பாடமாகவும், அல்லது முழு தமிழ் வழியிலும் கூட கல்வி கற்க முடியும்//
   தமிழை ஒரு பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் நான் அறிந்த வரையில் மிகக் குறைவே! மீண்டும் விசாரித்துப் பார்க்க வேண்டும்!

   வழிகாட்டலுக்கு மீண்டும் ஒருமுறை கோடி நன்றிகள்!

   Delete
 3. குழந்தைகளை எப்படியாது தமிழ் அறியவைக்க வேண்டுமே என்று நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டுகள்.
  நீலன் அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன்.

  ReplyDelete
 4. தமிழ்மண கருவிப் பட்டையை இணைத்தால் நன்று .

  ReplyDelete
 5. உங்களுக்கு மகன் தமிழ் கற்றுகொள்வாரா என்கிற கவலை. அவருக்கு ஒரே நேரத்தில் பல மொழிகளுடன் உறவாடும் சிரமம்.
  இடப்பெயர்வு எவ்வளவு வலி உடையது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. (தமிழ் காதல் இல்லை என்றால் பிரச்சனை இல்லையோ)

  ReplyDelete
  Replies
  1. உண்மையில், நிரந்தர இடப்பெயர்வு எனது குழந்தை தமிழ் கற்பதில் தடையாக இருக்கக் கூடும் என்ற கோணத்தில் நான் பெரிதாக யோசித்ததில்லை! அவன் சிறு குழந்தையாக இருந்த போது இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று தான் தோன்றியது. வருடங்கள் உருள உருள, பிரச்சினை பூதாகரமாவது போல சிறு கலக்கம்...

   Delete
  2. ஒசூர் CBSC பள்ளிகள் சரிப்படாதா ?

   Delete
  3. வேலை, வீடு, வசதி பெங்களூரில் தான் எனும் போது, ஓசூர் ஒத்து வராதே?!

   Delete
 6. அங்கே எடிட்டரின் ப்ளாக்கில் 'அன்புள்ள ஆசிரியர் ஐயா'னு நீங்க ஆரம்பிச்சப்பவே லேசா டவுட்டு ஆனேன். ;)

  ReplyDelete
  Replies
  1. :-D ஆமாம், விஜய் ஐயா! நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கக் கூடும்! :P

   Delete
 7. தங்களது தமிழ்ப் பற்றை பாராட்டுகிறேன்...

  பிறந்த மண்ணை விட்டு வெளியூர்களில்/வெளிநாடுகளில் குடி பெயர்ந்துள்ள பெரும்பான்மையான பெற்றோர்களின் தாய்மொழி பற்றிய ஆதங்கத்தை அப்படியே இப்பதிவில் வடித்துள்ளீர்.

  வீட்டில் எனது பிள்ளைகள் தமிழில் மட்டுமே பேசினாலும், இன்னும் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளவில்லை என்று எனக்கும் அதே கவலையே.. .

  குறைந்தது நீங்கள் உங்கள் மகனுக்கு தமிழ் அறிமுகப்படுத்த / போதிக்க முயற்சிக்கிறீர்கள். நான் அதைக் கூட செய்ய ஆரம்பிக்கவில்லை :( (எல்லாம் சோம்பேறித்தனம் தான்)

  நிச்சயமாக இப்பதிவு எனக்கு உந்துதலாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி பெரியார்! ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, அவர்களின் கவனங்கள் நாம் சொல்வதில் இருக்காது என்பதால், ஆரம்பப் பள்ளி வயதிலேயே எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து விடுவது நல்லது! சமச்சீர் கல்வி - மின் நூல்களை இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம் (ஒன்றாம் வகுப்பு முதல்):
   http://www.textbooksonline.tn.nic.in/

   அதை விட எளிய நிலை தமிழ் அறிமுகம் வேண்டும் என்றால், Smartphone Apps அல்லது பிற பதிப்பகங்களின் புத்தகங்களை நாடலாம்:
   http://www.surabooks.com/author/45550/arradha-krishnan
   http://www.surabooks.com/author/45548/echitradevi

   Delete
 8. Replies
  1. ஹா ஹா ஹா... நான் நலமே! :) அந்த கடேசி லைன் தான் புரிய மாட்டேங்குது! :P

   Delete
  2. (தெப்பா)அப்போ(தெப்பா)அப்போ(நிக்கோபா)எழுதுங்கப்பா...!
   இந்த அர்த்தம் சரிதானே...?

   Delete
 9. சேம் ப்ளட் (வித் டிஃபரண்ட் RH Type).

  பொதுவாக குழந்தைகள் ஒரு மொழியுடன் முதலில் அறிமுகமாவது பேச்சு மூலமாக என்பதால் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அதை ஓரளவுக்கு இயல்பாகவே கொண்டு வந்துவிட இயலும் (வீட்டிலிருப்போர் துணையுடன் - Noticed that in my relatives / their children).

  எழுத்துப்பயிற்சி சரிவர அமைவது நம் கையில் 100% இல்லை (Depends on luck factors such as School > Teacher > Practice methods > Continuity). ஒருவேளை 1 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்புவரை சிறப்பு கவனத்துடன் தமிழ்ப்பயிற்சி தரும் பள்ளி கிடைத்தால் பாரம் நிஜமாகவே குறையும்! ஏனென்றால் பேச்சு தவிர மற்ற எந்தப் பயிற்சியையும் குழந்தைகள் வீட்டில் அவ்வளவாகக ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் பள்ளியில் அது 90% சாத்தியம். ;)

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ரமேஷ்! அதுவும் வீட்டிலேயே தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது இமாலயக் காரியம் என்பதை மெல்ல மெல்ல உணர்ந்து வருகிறேன்! என் மனைவியும் சற்று உதவி செய்து வருவதால் ஏதோ ஓரளவுக்கு சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது! ஆனால், பள்ளியில் சக மாணவர்களுடன் இணைந்து கற்கும் / உரக்கப் பேசிப் படிக்கும் அனுபவத்தை நிச்சயம் தர முடியாது தான்! :(

   இதில் காமெடி என்னவென்றால், "முதலில் நீ எழுதிக் காட்டு" என்கிறான் குட்டிப்பையன், கீபோர்ட் தட்டியே பழக்கமாகி விட்டதால் தடுமாற வேண்டி இருக்கிறது! :)

   Delete
 10. கார்த்திக்...

  தனிப்பட்ட காரணங்களால் அதிகம் வலைப்பூ பக்கம் வர இயலவில்லை. ஒரு அருமையான பதிவுக்கு தாமதமாக பின்னூட்டமிடுகிறேன்...

  வீட்டினுள் தங்களின் பூர்வீக வேர்களை வாடாமல் காக்கும் அதே நேரத்தில் வெளியே வசிக்கும் பூமியின் தமிழையும் மனதார நேசிக்கும் உங்களை போன்ற பல நண்பர்களை கொண்டவன் நான் !

  உங்களின் தமிழ் மீதான நேசம் பூர்வீக தமிழர்களை விடவும் அதிகம் !

  இந்தியாவை பொறுத்தமட்டில் ஹிந்தி ஆங்கிலம் இரண்டை தவிர மற்ற மொழிகள் அனைத்துக்குமே நீங்கள் குறிப்பிடும் நிலைதான் ! தமிழர்களின் " மொழிப்பற்றால் " தமிழின் நிலை இன்னும் மோசம் !!!

  " வட ஹிந்திய "... மிகவும் ரசித்தேன் !!!

  "Oggy and Cockroaches" சிறப்பே வசனம் இல்லாததுதான்... அதற்கும் ஹிந்திய வசன கோமாளித்தனமா ?... ஜூனூன் தமிழைவிடவும் மோசமாக இருக்குமே...

  உங்களின் முயற்சியில் வெற்றி நிச்சயம்.

  எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, நலமா?

   //இந்தியாவை பொறுத்தமட்டில் ஹிந்தி ஆங்கிலம் இரண்டை தவிர மற்ற மொழிகள் அனைத்துக்குமே நீங்கள் குறிப்பிடும் நிலைதான் !//
   வேடிக்கை என்னவென்றால், தமிழ் எழுத வைப்பது கடினம் என்று தவிர்க்கும் அதே பெற்றோர்கள் தான், தங்கள் குழந்தை ஹிந்தி பயிலும் போது மட்டும் வாய் திறப்பதில்லை - ஹிந்தி எழுத்துக்களும் அதே அளவு கடினமானவையே என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்!

   //"Oggy and Cockroaches" சிறப்பே வசனம் இல்லாததுதான்... //
   காமிக்ஸ்களை / கார்ட்டூன்களை நேசிப்பவன் என்ற முறையில், மூலப் படைப்பு மொழிபெயர்ப்பில் சிதைக்கப்படுவதில் எனக்கும் வருத்தம் தான்!

   //" காலம் திருடிய கடுதாசிகள் ! " படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.//
   நிச்சயமாக...

   Delete
 11. வணக்கம் !

  தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. @ சாமானியன்

   காமிக்ஸ் வலைதளங்கள் பற்றிய உங்கள் தகவல்கள் தவறாக உள்ளன..!
   //
   Lion-Muthu Comics, இரவுக்கழுகு, கனவுகளின் காதலன், ஹாய் தமிழா என நான்கு வலைப்பூக்களுக்குச் சொந்தக்காரர் ஈரோடு விஜய் . காமிக்ஸ் கருவூலம் !//

   Lion-Muthu Comics- எடிட்டர் திரு விஜயன் அவர்கள் தளம்.
   இரவுக்கழுகு- நண்பர் கிருஷ்ணா.வா.வெ
   கனவுகளின் காதலன்-பிரான்ஸ் சங்கர் விஸ்வலிங்கம்
   ஹாய் தமிழா-ராஜ் முத்து குமார்
   ஈரோடு விஜய்- காமிக்ஸ் தளங்களை தேடி பாராட்டும் நல்ல மனதுக்கு சொந்தகாரர்.

   தகவல்களை சரிபார்த்து மாற்றினால் நலம்..!

   Delete
  2. @சாமானியன்:
   எதிர்பாரா சில சம்பவங்களால் சில நாட்கள் இங்கே எட்டிப் பார்க்க முடியவில்லை, வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

   @சிவா:
   சரியான தகவல்களை பகிர்ந்ததிற்கு நன்றி சிவா!

   @ஈரோடு விஜய்:
   லயன் ப்ளாக் ஓனர் விஜய் அவர்களே, நலமா? ;-)

   Delete
 12. வலைச்சரம் மூலம் வந்தேன்.. பிள்ளைகள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கண்டு மகிழ்கிறேன் .. என் மனநிலையும் அதே தான்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே!

   Delete
 13. வணக்கம்

  இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

  ReplyDelete
 14. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே... புத்தாண்டு வாழ்த்துகள்!

   Delete
 15. its been one year since you written anything in your blog Karthik....! something is missed definitely...

  ReplyDelete
  Replies
  1. Hi Sathish! Thank you for stopping by :) Even I too miss blogging, will return when things ease up a bit.

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia