கபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்!

கபாலி - அசத்தலான ட்ரைலர்கள், சூப்பர் ஸ்டாரின் அட்டகாசமான கெட்டப், "மெட்ராஸ்" ரஞ்சித்தின் இயக்கம், அனைத்திற்கும் மேலாக - "இப்படி இருக்கும், அப்படி இருக்கும்" - என்று ஏகத்துக்கும் எகிற வைக்கப் பட்ட எதிர்பார்ப்புக்கள் - இவை யாவும் தந்த அழுத்தத்துடன், ஒரு அதிரடியான "கேங்க்ஸ்டர்" படத்தைப் பார்க்கவிருக்கிறோம் என்ற உற்சாகத்தில், 22ம் தேதி காலை ஆறு மணிக்கு -  "நெருப்புடா" என்று கிளம்பி, படம் பார்த்த பின்னர் - "ஓரளவுக்கு மகிழ்ச்சி" என்று ஒற்றை வரியில் முகநூல் கடமையாற்றி விட்டு, அலுவலகப் பணிகளில் மூழ்கி விட்டேன்!

கடந்த இரண்டு நாட்களாக இப்படத்தைப் பற்றிய நூற்றுக் கணக்கான விமர்சனங்களையும், அந்த விமர்சனங்களின் மீதான விமர்சனங்களையும் படித்து வருகிறேன். எதிர்மறை விமர்சனங்களைக் கூட ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால், சினிமா ஆர்வலர்களின் "ஆராய்சிக் கட்டுரைகளை" மட்டும் இரண்டு பத்தி தாண்டுவதற்குள் மூச்சு வாங்கி விடுகிறது.

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த படி இன்று காலை (ஞாயிறு) மீண்டும் கபாலி, இம்முறை குடும்பத்துடன்! ஒரு கேங்க்ஸ்டர் படமாகப் பார்க்காமல், "தமிழர்களாலேயே ஒடுக்கப் படும் ஒரு பகுதி (மலேசியத்) தமிழர்கள்" என்ற புதியதொரு கோணத்தில் படத்தைப் பார்த்தேன்... வெள்ளிக்கிழமை பார்த்த போது வழக்கமான பன்ச் வசனங்களாகத் தெரிந்த ஒரு சில வசனங்களை வேறு விதமாக புரிந்து கொள்ள முடிந்தது. ரஜினியின் இயல்பான நடிப்பை மேலும் ரசிக்க முடிந்தது! அதிரடியை எதிர்பார்க்காமல், அழகாக பயணிக்கும் படத்தை அதன் போக்கில் அனுபவிக்க முடிந்தது.

சுற்றி வளைக்காமல் சொல்வதானால், கபாலி ஒரு அருமையான படம். தனது வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்க சூப்பர் ஸ்டார் முயன்றிருக்கும் இந்த முதல் முயற்சி வரவேற்கப் பட வேண்டிய ஒன்று. என்ன தான் சில குறைகள் இருந்தாலும், இந்தப் படம் மட்டும் ரசிக ரீதியாக தோல்வி அடைந்து விட்டால், ரஜினி அவர்களிடம் இருந்து - இது போன்ற இயல்பான நடிப்பையும், முதிர்ச்சியான கதாபாத்திரங்களையும், இனிமையான காட்சிகளையும், அர்த்தமுள்ள படங்களையும் இனி எதிர்பார்க்கவே முடியாது!

இந்திய சினிமா என்றால் பாலிவுட் என்றும், இந்தியர்கள் என்றால் இந்தி பேசுபவர்கள் என்றும் இருக்கும் வெளிநாட்டு பிம்பங்களைத் தகர்க்கக் கூடிய சக்தி தற்போது தென்னக சினிமாவிடம் தான் இருக்கிறது. சமீபத்தில் பாகுபலி, தற்போது கபாலி! இவற்றை விட வெகு சிறப்பான படங்கள் இங்கே பல வந்திருக்கின்றன என்றாலும், பரவலான கவனத்தை பெறக் கூடிய சக்தி  இவை போன்ற பெரிய பட்ஜெட் படங்களிடம் தானே இருக்கிறது? அதிலும் தமிழைப் பொறுத்த வரை, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய நட்சத்திரம் என்றால் அவர் ரஜினி மட்டும் தான்!

இங்கே நான் அறிந்த வட இந்தியர்கள் பலரும், இப்படத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ, ஆனால் கபாலி கபாலி என்று கடந்த சில நாட்களாக அவர்கள் பேசிக் கொண்டிருப்பது எனது மிகைப் படுத்தல் அல்ல! அந்த பேச்சுக்களில் தமிழ்ப் படங்களைப் பற்றிய ஒரு வித நக்கல் இழையோடுவதும் மறைக்க முடியாத ஒன்று!  "ஒரு தமிழ்ப் படம் முதல் நாளே 35 கோடி வசூலிப்பது தான் உன் பிரச்சினைனா, கபாலி 50 வசூலிக்கும் டா"... என்று அவர்களை வெறுப்பேற்றும் விஷயங்கள், அற்ப சந்தோஷங்கள் கைவசம் நிறையவே இருந்தாலும்...

எந்திரன் 2-க்குப் பிறகு வெளிவரப் போகும், ரஜினியின் அடுத்த படம்  கபாலியை விட சிறப்பாக இருந்து இந்தியாவை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்குமா அல்லது லிங்கா வகையறாவாக இருந்து தொலைத்து வட இந்தியர்களின் நக்கல்களுக்கு ஆளாகுமா என்ற தலைவிதி, கபாலியின் வெற்றி தோல்வியில் தான் எழுதப் படப் போகிறது. எது எப்படியோ, கபாலி சில வருடங்கள் கழித்து cult classic ஆக கொண்டாடப் படும் என்பதில் மட்டும் ஐயமில்லை!

7 comments:

 1. அப்பாடி ரொம்ப நாள் கழித்து ஒரு போஸ்ட் .. நீங்களும் ரஜினி மாதிரி ஆகிட்டீங்க :) .. அப்ப அப்ப போஸ்ட் போடுங்க

  ReplyDelete
 2. pl visit >>>http://www.jokkaali.in/2016/08/blog-post_12.html
  கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் !

  ReplyDelete
 3. ரொம்ப லேட்டான பின்னூட்டம்தான், ஆனால் இப்பதான் நேரம் கிடைத்தது.

  // அதிலும் தமிழைப் பொறுத்த வரை, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய நட்சத்திரம் என்றால் அவர் ரஜினி மட்டும் தான்! //

  நடிப்பில் எந்தவொரு சாதனையையும் நிகழ்த்தி வட இந்தியாவைத் திரும்பிப் பார்க்கச்செய்யவில்லை ரஜினி. அவருடைய ஸ்டைல்-ட்ரிக்ஸ் 1980ன் வட இந்தியத் தலைமுறையை "இதென்னடா புது காமெடி" என்கிறவிதத்தில் கவனயீர்ப்பு செய்து நினைவில் இருத்தியிருக்கிறது - அதன் மறுவலான தொடர்ச்சியே தற்போதைய பார்வையும். இது நமக்கே தெரியும். இயக்குனர் ஷங்கர் இதனை வெளிப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் நிஜத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா?!

  சமீப காலத்தில் இந்தியாவைத் தனது நேரடியான திறமையால் (மட்டும்) கவனயீர்ப்பு செய்த திரைத்துரை ஆர்ட்டிஸ்ட் ஏ. ஆர். ரஹ்மான் மட்டுமே. சொல்லப்போனால் 1960-80 வரையிலாவது சில நடிகைகள் நடிப்பத்திறமையின் காரணமாக மொழி, கலாச்சாரங்களைக் கடந்து சாதித்துள்ளனர். நடிகர்களைப் பொருத்தவரையில் பரவலாக வெவ்வேறு மாநிலங்களில் வரவேற்கப்படவில்லை என்பதைவிட; நடிப்பைத்தாண்டி அவர்கள் செயற்கையாக ஏற்படுத்திய "மாஸ்" அட்ராக்ஷன்கள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்தைக் கடப்பதற்குள்ளாகவே பல்லிளித்துவிடுகிறது என்பதே உண்மை (நல்லவேளையாக).

  இவ்வளவு நீளமான விளக்கம் எதற்கென்றால் - ரஜினியோ அல்லது எந்தவொரு "மாஸ்" ஆர்ட்டிஸ்டையோ நாம் நம்பிக்கிடக்கிறோம் என்கிற விஷயம் ஒரு மாயை - என சுட்டிக்காட்டத்தான்!

  Btw, என்னைப் பொருத்தவரையில் லிங்காவும் நல்ல படம்தான். அது ஓடவில்லை அவ்வளவே!

  ReplyDelete
 4. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

  எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
  http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  ReplyDelete
 5. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia