சினிமா ஓட்டிய சிறுவர்கள்!

நான் ஆறாவது படிக்கும் சமயம் (1989) ஸ்டாம்ப், காயின் & காமிக்ஸ் சேகரிப்புக்கு இணையாக இருந்த மற்றொரு பொழுதுபோக்கு சினிமா பிலிம் களை சேகரிப்பது! பள்ளிக்கு வெளியே தின்பண்டம் விற்கும் சாலையோரக் கடைகளின் அருகே, சினிமா பிலிம் விற்பவர்களையும் அப்போது காண முடியும்! சினிமா பிலிம் என்றால், ஏதோ படச் சுருளையே வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள் என்று அர்த்தமல்ல! தியேட்டர்களில் ஓடித் தேய்ந்த படங்களின் பிலிம் ரோல்களை, ஒவ்வொரு ஃபிரேமாக மெனக்கெட்டு கத்தரித்து, பத்து வெவ்வேறு சீன்களின் ஃபிரேம்களை ஒன்று சேர்த்து, சிறு சிறு பொட்டலங்களாக கட்டி விற்பார்கள்! ஒரு செட்டின் விலை பத்து அல்லது இருபத்தைந்து காசுகள் என்பதாக ஞாபகம்!

அவை உண்மையில் பாசிடிவ் பிலிம்கள் தான் என்றாலும், அப்போது விவரம் தெரியாது என்பதால் அவற்றை நாங்கள் 'சினிமா நெகடிவ்' என்றே அழைப்போம்! :D இஸ்திரி போட்டால் துணியில் ஒட்டக் கூடிய ஸ்டிக்கர்கள் மற்றும் புத்தகத்தில் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர்களும் அந்தக் கடைகளிலேயே கிடைக்கும்! என் வயது மாணவர்களிடையே (அப்போது.. அப்போது!) ஹீ-மேன் தான் வெகு பிரபலம்! அந்த ஸ்டிக்கர்களின் வாசனையே தனி தான் - முகர்ந்து பார்த்தாலே போதையாக இருக்கும்! :D

சரி விஷயத்திற்கு வருவோம்! இப்போது சினிமா டிவிடி வாங்கும் போது, பிரிண்ட் நன்றாக இருக்கிறதா, டிவிடி முழுதாக write ஆகி இருக்கிறதா, கீறல் இல்லாமல் இருக்கிறதா என்று தூக்கிப்(!) பார்த்து வாங்குவதைப் போல; நாங்கள் ஒவ்வொரு பிலிமாக தூக்கித் தூக்கிப் பார்த்து, கீறல் விழாத காப்பியாக வாங்குவோம்! ;) நான் பெரும்பாலும் ரஜினி பட பிலிம்களாக வாங்குவேன், அண்ணன் கமல் ரசிகன் என்பதால் கமல் படங்களாக வாங்குவான்!

என் அண்ணன் சரவணக் குமாருக்கு எலெக்ட்ரானிக்ஸ் / எலெக்ட்ரிகல் சமாச்சாரங்களில் ஆர்வம் அதிகமாக இருந்த காலம் அது! ஒரு நாள் திடீரென்று, ஒரு பெரிய அட்டைப் பெட்டியோடு வீட்டிற்குள் நுழைந்தான்! 'எதுக்குடா?!' என்று கேட்டதற்கு, 'வீட்டிலேயே 'ஸ்டில் பிலிம் ப்ரொஜெக்டர்' ஒன்று தயாரித்து, அந்த பிலிம்களில் உள்ள படங்களை சுவற்றில் ப்ரொஜெக்ட் செய்து, சினிமா போல பார்க்கலாம்' என்று சொல்லி, அதை எப்படி செய்வது என்றும் டெக்னிகலாக விளக்கினான்!

அவன் இதை தன் நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொண்டானா, அல்லது சுயமாக அப்படி ஒரு யோசனை உதித்ததா என்றெல்லாம் எனக்குத் தெரியாது! :D ஆனால், அப்போது எங்கள் வீட்டில் டிவியே கிடையாது, VCP / VCR என்பதெல்லாம் வாயைப் பிளக்க வைக்கும் தொழில்நுட்ப அதிசயங்கள் எங்களுக்கு! இருந்தாலும், நாங்கள் தயாரிக்கப் போகும் ப்ரொஜெக்டர் போன்ற அந்த வஸ்துவைத் தான், பிற்காலத்தில் "ஹோம் தியேட்டர்" என்ற பெயரில் அழைக்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் மளமளவென்று செயலில் இறங்கினோம்!!!

ப்ரொஜெக்டர் தயாரிப்புக்குத் தேவையான மற்ற பொருட்களான, கார்ட்போர்ட் அட்டை; லென்ஸ் (அதாவது, பூதக் கண்ணாடி!), அறுபது வாட்ஸ் பல்ப் - அதற்கான ஹோல்டர், வயர் மற்றும் ப்ளக் இவற்றையும் ஏற்பாடு செய்தோம்! கார்ட்போர்ட் அட்டைகளை வட்டமாக கத்தரித்து, அவற்றின் ஓரங்களில் பிலிம்களை பொருத்தும் அளவிற்கு செவ்வக ஓட்டைகளை போட்டு ஸ்லைடுகள் தயாரித்தோம்! கிட்டத்தட்ட இங்கே படத்தில் உதாரணத்திற்கு காட்டப் பட்ட ஸ்லைடு மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன் - ஆனால் இவ்வளவு அழகாக இருக்காது தான்! ;) அப்படி தயாரிக்கப் பட்ட இரண்டு வெற்று ஸ்லைடுகளின் நடுவே, பிலிம்களை அந்த செவ்வக ஓட்டைகளில் பொருந்துமாறு வைத்து (சாண்ட்விச் போல!) வெளியே ஸ்டேப்ளர் பின் அடித்தோம் - ஸ்லைடு ரெடி!!!

அண்ணன் பலசரக்கு கடையில் இருந்து வாங்கி வந்திருந்த அந்த பிரிட்டானியா பிஸ்கட் கார்ட்டன் பாக்ஸின் பின்புறம் - நடுவாக, 60 வாட்ஸ் பல்பைப் பொருத்தினோம் (அதன் வெளிச்சம் பெட்டிக்குள் விழுமாறு)! பெட்டியின் நடுவே ஒரு அட்டையை வைத்து அதில் ஒரே ஒரு பிலிம் மட்டும் தெரியுமாறு துளையிட்டு, அந்தத் துளை பல்ப்பின் எதிரே இருக்குமாறு அமைத்தோம்!

பிறகு நடுவில் உள்ள அந்த அட்டையில், ஒரு ஸ்லைடை பொருத்தினோம்! வெளியே இருந்து ஸ்லைடை சுற்றுவதற்கு வசதியாக, ஸ்லைடின் ஓரப்பகுதி மட்டும் பெட்டிக்கு வெளியே வருமாறு, பெட்டியின் பக்கவாட்டில் ஒரு துளை இட்டோம்! பெட்டியின் மறுமுனையில், பெரிய துளையாகப் போட்டு, அங்கே லென்ஸை வைத்தோம்! இதில், 1) பல்ப்; 2) ஸ்லைடு; 3) நடு அட்டையில் உள்ள துளை; 4) முன்பக்கத்தில் உள்ள துளை & 5) லென்ஸ் - இவை ஐந்தும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டியது அவசியம்! :)

பிறகு பெட்டியை முழுவதுமாக மூடி விட்டு, ரூம் கதவையும் சாத்தி இருட்டாக்கிக் கொண்டு, ப்ரொஜெக்டர் லைட்டை (பல்ப்!) ஆன் செய்ததும் - வெள்ளைச் சுண்ணாம்பு அடித்த வீட்டுச் சுவற்றில் கலங்கலாக அந்த சினிமா பிலிமின் பிரதிபலிப்பு தெரிந்தது! தெளிவான உருவத்தை தெரிய வைக்க, லென்சை முன்னும் பின்னும் நகர்த்தி போகஸ் செய்ய வேண்டி இருந்தது! முன்பக்க லென்ஸ் மற்றும் ஸ்லைடுக்கு நடுவே, கூடுதலாக இன்னொரு லென்ஸும் வைத்ததாக ஞாபகம்! இப்படி ஒரு சில டெக்னிகல் அட்ஜஸ்ட்மென்ட்களைச் செய்ததும் படம் வெகு பிரமாதமாக, பெரிதாக சுவற்றில் தெரிந்தது! சவுண்டு எபெக்டுக்கு கேசட் ப்ளேயரில் எதாவது மியூஸிக்கை அலற விட்டு - ஸ்லைடை மெதுவாக சுழற்றினால், அடுத்த பிலிம் - அடுத்த படம்! :) விஷூவல் எஃபெக்டுக்கு, பியூஸ் போன குண்டு பல்பில் தண்ணீர் ஊற்றி, அதை லென்ஸுக்கு முன்னே பிடித்துக் கொண்டு, சினிமாஸ்கோப்பில் படம் காட்டுவான் என் அண்ணன்! :D

நான் ரஜினி பட ஸ்லைடுகளாக தயாரித்துத் தள்ள, அவன் ஏகப்பட்ட கமல் பட ஸ்லைடுகளை உருவாக்கினான்! 'பில்லா' படத்தின் பிலிம்கள் தான் என் பேவரைட்! அதன் டைட்டில் காட்சியில், ஒரே ஃபிரேமில் எட்டு ரஜினிக்கள் தெரிவது போன்ற கிராபிக்ஸ் வித்தை எல்லாம் இருக்கும்! :D பில்லா என்ற கொட்டை எழுத்துக்கள், அப்புறம் ரஜினி இன்ட்ரோ, குதிரையில் தப்பிக்கும் காட்சி, ஒரு பாட்டு, ஒரு சண்டை அப்புறம் கடைசியாக வணக்கம் என்ற எழுத்துக்கள் - இவை எல்லாம் - ஒரே ஸ்லைடில் வருவது போல தயாரித்து வைத்திருந்தேன்! (குறும்படம்?!)

ஏரியா பயல்களை எல்லாம் கூப்பிட்டு வைத்து விதம் விதமாக படம் காட்டினோம்! ;) ப்ளாக் & வைட், ஈஸ்ட்மென் கலர், வண்ணக் கலர் என்று ரகவாரியாக ஸ்லைடுகள் வைத்திருந்தோம்! பிலிம் ப்ரொஜெக்டர் செய்து கொடுக்க நண்பர்களிடம் இருந்து ஆர்டர்கள் குவிந்தன! டெக்னிகல் டிப்ஸ் மட்டும் தான் கொடுக்க முடியும் என்று லேசாக கெத்து காட்டிக் கொண்டோம்! :D

சில மாதங்கள் இப்படி டக்கராகத் தான் போய்க் கொண்டிருந்தன...

படம் இன்னும் கொஞ்சம் பிரைட்டாகத் தெரிய வேண்டுமானால், 60 வாட்ஸ் பல்பை அப்க்ரேட் செய்து, 100 வாட்ஸ் பல்பாக மாட்டலாமே என்று யாரோ ஒரு 'ஞான பல்ப்' சொன்ன ஐடியாவைக் கேட்டு மாடிபிகேஷன் செய்ததில் எங்கள் சினிமா ப்ரொஜெக்டர் எரிந்து நாசமாகியது! மூடிய அட்டைப் பெட்டிக்குள் நூறு வாட்ஸ் பல்பின் உஷ்ணம் தாளாமல், "உருகுதே, மருகுதே" என்று பிலிம் எல்லாம் உருகிப் போனதோடு இல்லாமல், பல்பும் பட்டென்று வெடித்தே விட்டது! :( அத்தோடு எங்கள் ஹோம் தியேட்டருக்கும் எங்கள் அப்பா புண்ணியத்தில் மூடு விழா நடந்தது!!! :-D

வணக்கம்!

பின்குறிப்பு 1:
நேரம் கிடைக்கும் போது, அந்த ப்ரொஜெக்டர் டிசைனை வரைந்து அப்லோடுகிறேன்! :) இன்றைய சிறுவர்கள் அந்த அளவு மெனக்கெட தேவையில்லை தான், இதே எஃபெக்ட் அவர்களுக்கு View-Master Slide Viewer-ல் கிடைத்து விடுகிறதே! :)

பின்குறிப்பு 2:
இரண்டு வார பழைய குமுதம் (8.1.2014) இதழ் ஒன்றை, சமீபத்தில் புரட்டிக் கொண்டிருந்த போது, 87ம் பக்கத்தில் - "தமிழ் சினிமா கிலோ இரண்டு ரூபாய்" என்ற கட்டுரை கவனத்தை கவர்ந்தது! சினிமா தியேட்டர்கள் அனைத்தும் (கிட்டத்தட்ட) டிஜிட்டல் மயமாகி விட்டதால், பழைய படச்சுருள்கள் எல்லாம், மிகக் குறைந்த விலையில் எடைக்கு எடை போடப் படுகின்றனவாம்! அதைப் படித்ததும், எனக்கு நாங்கள் சிறுவயதில் பிலிம் வைத்து படம் ஒட்டிய ஞாபகம் வந்து விட்டது!!!
Image Credits:

கருத்துகள்

  1. அருமையான பதிவு...நாங்களும் இது போல் பள்ளியில் சூரிய ஒளியில் படம் காட்டியதை நினைவு படுத்தி விட்டீர்கள்...செயல் முறை விளக்கமும் அருமை...அப்போது எல்லாம் இந்த பிலிம் சுருளுக்கு எவ்வளவு மவுசு இருந்தது என்று இக்கால பொடுசுகளுக்கு தெரியவா போகிறது..கண்ணில் கூட பார்த்திருக்க மாட்டார்கள்...புது வருடத்தில் புதியதோர் பதிவில் கமெண்ட் இட்டதைப் போல நூறாவது பதிவிலும் கமெண்ட் இட ஆசை...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி :-) இப்டீல்லாம் கமெண்ட் போட்டா நீங்க அவராயிடுவீங்களா :-p

      நீக்கு
    2. //சூரிய ஒளியில் படம் காட்டியதை//
      ஆக எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் படம் காட்டிக் கொண்டு இருந்திருக்கிறோம்! :D

      நண்பர் சாக்ரடீஸ் பேஸ்புக்கில் பகிர்ந்தது:
      //Msakrates Sak நம்ம கதை என்னன்னா... டார்ச் லைட் முன்னாடி ஒரு துண்டு பிலிமை காட்டி சுவத்துல பட வைச்சா அதுதான் சினிமா! :)//

      நீக்கு
  2. கார்த்திக் நானும் என் தம்பியும் ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் அப்போ .. விடுமுறைகளில் திருச்சி போகும்போது சித்தப்பா வீட்ல VCR இருக்கும் .. ஆளுக்கொரு நாள் சாய்ஸ் எடுத்து கமல் / ரஜினி படமா பார்த்து தள்ளுவோம் - என் தம்பியை வெறுப்பேத்த நான் கமல் சாகும் படங்கள் வாங்கி போடுவேன் - என் தம்பி ரஜினி சாகும் படங்கள் வாங்கி போடுவான் - இப்படியே போட்டு போட்டு கடசீல ஒரு நாள் அவன் மூன்று முகம் போட்டான் - நான் அப்போ 'நான் தான் ஜெயிச்சேன் - இன்னொரு ரஜினி உசிரோட தான் இருக்கான்' என்று சொன்ன ஞாபகங்கள் :-)

    ----

    நானும் இந்த ப்ரொஜெக்டர் ட்ரை பண்ணி இருக்கேன் தம்பியோட சேர்ந்து - ஒரு நாள் அப்போ புதுசா வந்திருந்த REXIN சோபா மேல இந்த பொட்டிய வெச்சு பலப் மாட்டும் பொது வெப்பம் தாங்காமல் சோபா பிளாஸ்டிக் கருகிவிட .. அப்புறம் ஒரு லெனின்-விஜயன் ஜோடி உருவாகாம போச்சு :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆக எல்லா அண்ணன் தம்பிகளும், எதிரெதிர் ரசனை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்! ரஜினி / கமல் விஷயத்தில் மட்டும் அல்ல! எனக்கு ஜீப் பிடிக்கும், அவனுக்கு கார் - ரெண்டு பேரும் மாற்றி மாற்றி மட்டம் தட்டிக் கொள்வோம்! :)

      //பலப் மாட்டும் பொது வெப்பம் தாங்காமல் சோபா பிளாஸ்டிக் கருகிவிட//
      என்னது, மாட்டும் போதே கருகிச்டுச்சா!!! :D

      நீக்கு
    2. ... மாட்டி சுவிட்ச் போட்டு ஒருத்தனுக்கொருத்தன் பாராட்டி சந்தொஷப்பட்டப்போ ...

      நீக்கு
  3. சினிமாஸ்கோப்பில் படம் காட்டுவான் என் அண்ணன்! LOL

    பதிலளிநீக்கு
  4. // இஸ்திரி போட்டால் துணியில் ஒட்டக் கூடிய ஸ்டிக்கர்கள் மற்றும் புத்தகத்தில் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர்களும் அந்தக் கடைகளிலேயே கிடைக்கும்! என் வயது மாணவர்களிடையே (அப்போது.. அப்போது!) ஹீ-மேன் தான் வெகு பிரபலம்! அந்த ஸ்டிக்கர்களின் வாசனையே தனி தான் - முகர்ந்து பார்த்தாலே போதையாக இருக்கும்! :D //

    ஒருகாலத்தில் புதுமையான பொருட்களின் வாசனையும் நம்மைக் கவரும் Factor-ஆக இருந்தது! தற்போது மூக்கும் Sensitive-ஆக இல்லை, புதிய பொருட்களின் மீது Hyper ஆர்வமும் முன்பு மாதிரி இல்லை! ;)

    கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு சென்ட் ரப்பரின் வாசனை எதிர்பாராத நேரத்தில் யதேச்சையாக என் மூக்கைத்தொட்டது (பஸ்ஸில் போகும்போது பக்கத்திலிருந்த சிறுவனின் உபயத்தால்). சட்டென்று மூளை ஒரு 25 வருடம் பின்னாடிப்போய்விட்டது :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொசுறு: Semi transparent-ஆன கலர் கலராகப் படம் போட்ட சென்ட் ரப்பர்கள் அடிக்கடி என் பையிலிருந்து திருடுபோவது - அந்தக்காலத்தில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்!

      நீக்கு
    2. என் விஷயத்தில் இது கொஞ்சம் வேறு விதமான போதை ரமேஷ்!!! :D ஸ்டிக்கரின் பசை முதற்கொண்டு நெயில் பாலீஷ், பெயிண்ட், வார்னிஷ், கெரஸின், பெட்ரோல், விக்ஸ், யூக்கலிப்டஸ் தைலம், Axe ஆயில் என.... எனக்கு பிடித்தமான வாசனைத் திரவியங்களின்(!) பட்டியல் மிக நீளமானது! :) அவற்றை நினைத்துப் பார்த்தாலே, நாசியில் அவற்றின் வாசனையை உணர முடியும்! ;)

      //சென்ட் ரப்பர்//
      பெரும்பாலான சென்ட் ரப்பர்கள் கட்டை போலத் தான் இருக்கும் - அவற்றை வைத்து "ஒரு பென்சிலின் சுவடுகளை" அழிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்! :D

      நீக்கு
    3. // பெரும்பாலான சென்ட் ரப்பர்கள் கட்டை போலத் தான் இருக்கும் - அவற்றை வைத்து "ஒரு பென்சிலின் சுவடுகளை" அழிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்! :D //

      உண்மைதான், ஒருகட்டத்தில் Natraj Plasto ரப்பர் அறிமுகமானவுடன் சென்ட் ரப்பர்களின் மயக்கம் தீர்ந்நுவிட்டது! :D

      நீக்கு
  5. உங்க அளவுக்கு மெனக்கெடாமல் ஏதோ எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி நாங்களும் ப்லிம் காட்டியுள்ளோம்! பழைய நினைவுகளை கிளறிவிட்ட பதிவு! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கும் அருமையான பதிவு.

    ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் ஒருவங்களை ஒத்த கார்டூன் கதைகளின் பாஸிடிவ், ஏதோ ஒரு பபிள் கம் வாங்கும்போது கிடைத்தது. அவற்றை வைத்து கலரில் படம் ஓடியிருக்கிறது எங்கள் வீட்டில்.

    நீங்கள் பல்ப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். எங்கள் பகுதியில் அப்போது மின்சாரம் என்பது கிடையாது என்பதால், நாங்கள் சூரிய ஒளியை கண்ணாடியில் ரிப்ளெக்ட் செய்து அதனை பெட்டியின் ஒரு பக்க துளையின் ஊடாக அனுப்பி படம் காட்டியிருக்கிறோம். சூரியன் அசைய அசைய வெளியே வைத்துள்ள கண்ணாடியையும் அட்ஜஸ்ட் செய்யவேண்டியிருக்கும். ம்... அதெல்லாம் ஒரு பொற்காலமப்பா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பொடியன்!! அதே போல, சூரிய ஒளி மற்றும் லென்ஸ் உதவியுடன் தீக்குச்சிகளை பற்ற வைத்து விளையாடியதுண்டு! இன்றைய அபார்ட்மென்ட் வாழ் பொடிசுகள் இதை எல்லாம் செய்து பார்க்க வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது! அல்லது...

      நாம் கவனிக்காத நேரம் பார்த்து அவர்களும் பல குசும்புகளை செய்து கொண்டிருக்கலாம்!!! :D

      நீக்கு
    2. என் தம்பி மகன் எப்போ வீட்டுக்கு வந்தாலும் செல் போன் ரிங்கிங் டோனை மாத்தி வெச்சுட்டு போய்டுவான் .. சொல்லவே மாட்டான் .. அது பாட்டுக்கு பத்து இருவது missed கால் பதிஞ்சிருக்கும் .. அப்புறம் நான் தேடி எடுத்தாதான் தெரியும் .. :-D

      .. sometimes அடுத்த நாள் ஆபீஸ்ல, பாக்கெட்ல இருக்குற மொபைல் வேற tune ஒலிக்கும்பொதுதான் கண்டே பிடிப்பேன் .. காலம் மாறினாலும் குசும்புகள் இருக்கத்தான் செய்யுது ...

      நீக்கு
  7. கிடைச்ச வெளிச்சத்தையும் (சூரிய ஒளியை ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி மூலமாக ருமிற்க்குள் திருப்பிவிட்டு) பெட்டிக்கடையில் கிடைத்த பிலிம்மையும் வைத்து நாங்களும் ப்ளா ப்ளா ப்ளா... :) ஆனாலும் உங்க அளவுக்கு டெக்னிக்கலா பண்ணலை ;) (உங்க அண்ணன் இப்ப என்ன பண்றாரு கார்த்திக், மதுரையில் சொந்தமா ஒரு தியேட்டர் வச்சிருப்பாருன்னு நினைக்கிறேன் ;))

    குட்டியா ஒரு லக்கி-லூக் கதைக்குத் தேவையான எல்லா அம்சமும் உங்களோட ஃப்ளாஸ்பேக்கில் இருக்கு. சுவாரஸ்யமா வசனம் அமைக்க நீங்க இருக்கீங்க; படம் வரைய நம்ம நாட்டாமை இருக்கார். அப்புறமென்ன விஜயன் சாருக்கு ஒரு மெயில் மெயில் அனுப்பிட்டா நாங்க எல்லாம் சந்தா கட்டி வாங்கிப் படிப்போம்ல? :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia