மாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்?!

கிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம்! அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும்! தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன! விடியல் பதிப்பகம் வெளியிட்ட, "ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம்.

ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் "மர்ஜானே சத்ரபி", தனது சுயசரிதை நூலான "Persepolis" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி)! கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis!

"பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும்" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான்! ஆனால், இதன் தமிழ் வடிவத்தை கடந்த ஆண்டே படித்திருந்தும் - அதைப் பற்றி பதிவிட அப்போது தோன்றவில்லை! உண்மையில், அது போன்ற கதைகளைப் படிப்பதில் அப்போது நான் ஈடுபாடு காட்டவில்லை என்பது தான் உண்மை! அது தவிர, மர்ஜானேவின் சுயசரிதை கி.நா. என்னைக் கவராது போனதிற்கு வேறு சில காரணங்களும் இருந்தன!

முதலாவது காரணம், மர்ஜானேவின் மிக மிகச் சாதாரணமான சித்திரங்கள்! ஐரோப்பிய மற்றும் அமெரிக்க காமிக்ஸ்களின் அற்புதமான, அழகான, தெளிவான, விரிவான, நுணுக்கமான சித்திரங்களையே பார்த்துப் பழகிய என்னால் மர்ஜானேவின் சித்திரங்களை ரசித்திட முடியவில்லை! அவற்றை குழந்தையின் கிறுக்கல்கள் என்பதா; கற்றுக்குட்டி ஓவியரின் கைவண்ணம் என்பதா; அல்லது அவை, நவீன பாணியில் வரையப்பட்ட சித்திரங்களா என்ற குழப்பம் தான் எஞ்சி நின்றது!
இரண்டாவது காரணம், ஈரானிய வரலாறு / அரசியல் பற்றி எனக்கு எள்ளளவும் தெரியாது; தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அப்போது எழவில்லை! எனவே, அந்தக் கதை முழுக்க விரவிக் கிடந்த ஈரானிய அரசியல் மற்றும் வரலாறு சார் தகவல்களும், குறிப்புகளும் சுவாரசியத்தைத் தூண்டுவதாக அமையவில்லை!

மூன்றாவது காரணம், அதன் தமிழ் மொழிபெயர்ப்புத் தரம் - சற்றே, பழைய இந்திரஜால் காமிக்ஸ்களை நினைவுறுத்தும் ஒரு தமிழ் நடை! இந்திரஜால் அளவுக்கு மகா மோசமில்லை என்றாலும், மொழிபெயர்ப்பாளர் பாலசந்திரன் அவர்களின் தமிழ் நடையில் ஏதோ ஒரு அம்சம் உறுத்தலாகத் தோன்றியது நிச்சயம்! அந்த இரண்டு புத்தகங்களையும் நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டதால், அவற்றை மீண்டும் புரட்டிப் பார்த்து உதாரணம் அளிக்கவோ, அல்லது மாதிரிப் பக்கங்களின் ஸ்கேன்களைப் பிரசுரிக்கவோ இயலவில்லை!

ஆனால், காமிக்ஸ் நண்பர்கள் பலரும் இந்த மொழிமாற்ற கிராஃபிக் நாவல் பற்றி சிலாகித்துப் பேசியதை / எழுதியதை முன்பு கவனித்திருக்கிறேன்! லயன் / முத்து காமிக்ஸில் கிராஃபிக் நாவல்கள் வேண்டாம் என்று இப்போது சொல்பவர்களும்; கி.நா. எதிர்ப்பாளர்களுக்கு +1 போட்டு ஊக்குவிப்பவர்களும் - ஈரான் கிராஃபிக் நாவலைப் புகழ்ந்தவர்களில் அடக்கம் என்பது கொசுறுத் தகவல்! ;-)

பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட, "பிரளயத்தின் பிள்ளைகள் & ஒரு சிப்பாயின் சுவடுகளில்!" - இந்த இரு கிராஃபிக் நாவல்கள்; மற்றும் விடியல் பதிப்பகத்தின் "ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்" - இவற்றிற்கு இடையே உள்ள பொதுவான அம்சம் - இவை அனைத்தும் வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை என்பதே! முக்கியமான வேறுபாடு - பி.பி. & ஒ.சி.சு. கதைகளில் புனைவு சற்று தூக்கலாக இருக்கும்; ஈரான் கிராஃபிக் நாவலோ, உண்மை தூக்கலான சுயசரிதை!

சரி, பதிவின் தலையங்கதிற்கு வருவோம்:

அரசியல் + வரலாறு = சோகம்?!:
அந்நிய நாடுகளின் வரலாறு மற்றும் அரசியல் சூழல்களைப் பற்றிய எந்த ஒரு முன்னறிமுகமும் இன்றி - அத்தகைய கதைகளை ரசித்துப் படிப்பதும், புரிந்து கொள்வதும் சாத்தியமே இல்லாத செயல்கள்! அரசியல் / வரலாற்றுக் கதைகளைப் பொறுத்தவரையில், நமக்குப் பழக்கப் பட்ட களங்கள் இரண்டே இரண்டு தான்!

1) அமெரிக்க வரலாறு:
பொதுவாக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள், 'கௌபாய் கதை' பிரியர்கள்! அவை 'வெஸ்டர்ன் மாஸ் மசாலா' - டெக்ஸ் வில்லர் கதைகளாக இருந்தாலும் சரி; லக்கி லூக்கின், வரலாற்று உண்மைத் தகவல்களின் அடிப்படையிலான காமெடி கதைகளாக இருந்தாலும் சரி; பக்கம் பக்கமாக அமெரிக்க வரலாறு / உள்நாட்டு அரசியல் பேசும் ப்ளூபெர்ரி கதைகளாக இருந்தாலும் சரி; அல்லது சோக ரசம் பிழியும் 'எமனின் திசை மேற்கு' கிராஃபிக் நாவலாக இருந்தாலும் சரி - நம்மவர்களுக்கு கொஞ்சமும் சலிப்பு தட்டுவதே இல்லை! Wild West ரசனைக்காக அடித்தளங்கள் முத்து காமிக்ஸின் ஆரம்ப காலத்திலேயே (சிஸ்கோ கிட்!) போடப் பட்டு விட்டன; அதை ராணி காமிக்ஸ் நீரூற்றி வளர்த்தது என்றால்; லயனும், முத்துவும் அந்த ரசனையை இன்று வரை பேணிப் பாதுகாத்து வருகின்றன!

2) இரண்டாவது உலக யுத்தம்:
ஒரு சமயத்தில் இரண்டாம் உலகப் போர் சார்ந்த கதைகள் வெகு பிரபலம் - குறிப்பாக நேசநாடுகள் மற்றும் ஹிட்லரின் ஜெர்மனிக்கு இடையே நடைபெற்ற யுத்தக் கதைகள்! ராணி மற்றும் லயன் / முத்து காமிக்ஸ்களில் ஏராளமான WW-II கதைகள் வந்திருக்கின்றன! உலகப் போர் பற்றி வரலாற்றுப் பாடம் படித்துக் கற்றதை விட, காமிக்ஸ் படித்து அறிந்தது தான் அதிகம்! சிறு வயதில் இருந்தே இரண்டாம் உலகப்போர் சார்ந்த கதைகளை நாம் படித்துப் பழகியதால், அவற்றை இன்றளவும் நம்மால் ரசித்திட முடிகிறது! 'பிரளயத்தின் பிள்ளைகள்', ஒரு கிராஃபிக் நாவலாக இருந்தும் கூட, வாசகர்கள் இடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றதிற்கு, வேறென்ன காரணங்கள் இருந்திட முடியும்?!

மேற்சொன்ன இரு களங்களைத் தவிர, 'மர்ம மனிதன் மார்ட்டின்' கதைகளையும் படித்திருப்பீர்கள் - பல்வேறு வகையான வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த கதைத் தொடர் அது! அதில் புனைவின் சதவிகிதம் அதிகமாகவும், மசாலா காட்சிகள் நிறைந்தும் இருப்பதாலோ என்னவோ, மார்ட்டின் கதைகளைப் ரசிப்பதில் நமக்கு எவ்வித சிரமமும் இருப்பதில்லை!

ஆனால், வரலாறு தூக்கலாகவும், அரசியல் வாடை கலந்தும், உண்மைச் சம்பவங்களைக் கொண்டும், யதார்த்தத்திற்கு நெருக்கமாகவும் கதைகள் இருக்கும் போது நம்மவர்களுக்கு கொட்டாவி தான் மிஞ்சுகிறது! அதுவும், அவை நமக்கு எந்த தொடர்பும் இல்லாத, படித்தும் அறிந்திராத அந்நிய நாடுகளில் நடைபெறும் கதைகள் எனும் போது!

ஈரான் மற்றும் 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' ஆகிய கிராஃபிக் நாவல்கள் பெரிதாய் எந்த வரவேற்பும் பெறாததின் பின்னணியில் மேற்சொன்ன காரணங்களும் அடங்கியுள்ளன! எமனின் திசை மேற்கு & பிரளயத்தின் பிள்ளைகள் - இவை இரண்டும், "பழக்கப் பட்ட களங்கள் + அட்டகாசமான சித்திரங்கள்" என்ற அடிப்படைகளில் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சோகமான முடிவைக் கொண்டிருந்ததால், அதே அளவுக்கு எதிர்ப்பையும் பெற்றன என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்!

இனிமேல் தமிழில், சுயசரிதை (உ.ம்.: Buddha), அரசியல் / வரலாறு பேசும் (உ.ம்.: Maus) அல்லது சோகமயமான முடிவைக் கொண்ட (உ.ம்.: V for Vendetta) கிராஃபிக் நாவல்களை வெளியிடும் தைரியம், எந்த பதிப்பகத்திற்காவது வருமா என்பது மிகப்பெரும் கேள்விக் குறியே! வாசகர்கள் இடையே வரவேற்பு இல்லாத கதைகளை வெளியிட்டு, இழப்பைச் சந்திக்க யார் தான் முன் வருவார்கள்?!

// அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழிலும் கிராபிக்ஸ் நாவல்கள், மாங்கா நேரடியாக எழுதப்பட்டு மிகப்பிரபலமாக விளங்கும் என்று நான் முன் உணர்கிறேன், அது நடைபெறுவதற்காக ஆரம்ப அறிகுறிகள் இப்போது தென்படத்துவங்குகின்றன. //

இவை, பிரபல எழுத்தாளர் திரு.S.ராமகிருஷ்ணன், ஈரான் கிராபிக் நாவலுக்கான தனது விமர்சனப் பதிவில் முத்தாய்ப்பாக எழுதி இருந்த வரிகள்! அதை அவர் எழுதியே, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இருக்கும்! எஞ்சியிருக்கும் எட்டரை ஆண்டுகளில் - கிராஃபிக் நாவல்கள், தமிழில் நேரடியாக படைக்கப் படுவது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; ஏற்கனவே மொழிபெயர்த்த ஒரு சில நாவல்களைப் படிப்பதற்கு, இங்கே சில நூறு ஆட்களாவது தேறுவார்களா என்பது தான் இப்போதைய ஒரே கேள்வி!

( தொடரும் )

கருத்துகள்

  1. எனக்கு இதுல எந்த கதையும் பிடிக்கலைப்பா..... சிப்பாயின் சுவடுகள் எவ்வளவோ பரவாயில்லை.... ஈரான் மற்றும் பி.பி சுத்தமா முடியல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஈரான் கி.நா. சுத்தமாகப் பிடிக்கவில்லை! ஆனால், லயன் மொழிபெயர்ப்பு & கிராஃபிக் நாவல் வெளியீடுகளை கழுவி ஊற்றிய பலர், ஈரான் கிராஃபிக் நாவலை பாராட்டிப் பேசியிருப்பது விந்தை தான்! :) ராமகிருஷ்ணன் போன்ற சில எழுத்துலப் பிரபலங்களும், வேறு பல வலையுலகப் பிரபலங்களும் அதைப் புகழ்ந்து தள்ளியது ஒரு காரணமாக இருக்கலாம்! பிரபலங்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், நம்மவர்களும் "வாவ், சூப்பர்!" என்று படித்துப் பார்க்காமலேயே அடித்து விட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்! :D

      நீக்கு
  2. /* கிராஃபிக் நாவல்கள் வேண்டாம் என்று இப்போது சொல்பவர்களும்; கி.நா. எதிர்ப்பாளர்களுக்கு +1 போட்டு ஊக்குவிப்பவர்களும் - ஈரான் கிராஃபிக் நாவலைப் புகழ்ந்தவர்களில் அடக்கம் என்பது கொசுறுத் தகவல்! */

    பார்த்து .. மத்தவங்க உங்களை அடக்கம் பண்ணாம விட மாட்டீங்க போல ? :-)

    இன்னும் சில LIC பில்டிங்குகள் கட்டப்படும் போல தெரிகிறதே !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்த வேலை முடிஞ்சிருச்சு இல்ல?! ;) இன்னும் என்ன லுக்கு? கெளம்புங்க கெளம்புங்க... ;)

      நீக்கு
  3. /* கிராஃபிக் நாவல்கள், தமிழில் நேரடியாக படைக்கப் படுவது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; ஏற்கனவே மொழிபெயர்த்த ஒரு சில நாவல்களைப் படிப்பதற்கு, இங்கே சில நூறு ஆட்களாவது தேறுவார்களா */

    சமீபத்தில் ஒருவர் கிராபிக் நாவல் வரிசையில் ராஜேஷ்குமார் , P T சாமி கதைகள் வருமா என்று கேட்டது ஏனோ ஞாபகம் வந்தது தொலைக்கிறது :-) :-) ஹி ஹி !!

    பதிலளிநீக்கு
  4. // ஈரான் மற்றும் 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' ஆகிய கிராஃபிக் நாவல்கள் பெரிதாய் எந்த வரவேற்பும் பெறாததின் பின்னணியில் மேற்சொன்ன காரணங்களும் அடங்கியுள்ளன! //

    ஈரான் கதையின் வரவேற்பு பற்றிய தங்களின் கருத்து உண்மையாக இருக்கலாம், ஆனால் 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' வரவேற்பைப் பெறவில்லை என்பதை நாம் உறுதியாகச்சொல்ல சில மாதங்கள் பொருத்திருக்க வேண்டும் கார்த்திக். இணையதளத்தில் சில routine காமிக்ஸ் வாசகர்களின் feedback-ஐ வைத்து ஒரு வரலாறு சார்ந்த கிராஃபிக் நாவலின் வரவேற்பை உறுதி செய்வது சாத்தியப்படாது.

    "ஒரு சிப்பாயின் சுவடுகளில்" வெளிவந்து ஒரு மாதம்கூட நிறையவில்லை. சந்தாதாரர்களை வேண்டுமானால் உடனடியாக சென்றுசேர்கிறது, ஆனால் நேரடியாக புத்தகக்கடைகளுக்கு சென்றுசேர்வது சில வாரங்கள் கழித்தே என்பதால் நமக்கு முழுமையான தகவல் தற்சமயம் தெரியாதல்லவா?

    இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் டெக்ஸ் வில்லரின் கதையான "நிலவொளியில் ஒரு நரபலி" நமது இணையதள விமர்சனங்களில் பெரியதொரு ஈர்ப்பைப் பெறவில்லை - abnormal கதைக்களம் மற்றும் புத்தகத்தின் size போன்ற காரணங்களால். ஆனால் ஆசிரியரின் தகவல்படி புத்தகக்கடைகளில் அதுவொரு Top seller-ஆகவும் இருந்துள்ளது - probably attracting new readers.

    So சில மாதங்கள் கழித்து வரவேற்பைக்குறித்து தகவலளித்தால் realistic-ஆக இருக்குமே. வரவேற்பு என்பது வாசகர் review-ஐ மட்டுமே சார்ந்தில்லாமல் விற்பனையையும் சார்ந்துதானே உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே போன்ற ஒரு கருத்தை ஃபேஸ்புக் நண்பர் சரவணாவும் வலியுறுத்தி இருந்தார்! ஆனால், நான் ஒ.சி.சு. பற்றி இங்கே பகிர்ந்துள்ள கருத்தை இறுதியானதாக பார்க்க வேண்டாமே, ரமேஷ்?!

      //'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' வரவேற்பைப் பெறவில்லை என்பதை நாம் உறுதியாகச்சொல்ல சில மாதங்கள் பொருத்திருக்க வேண்டும்//

      ஒரு காமிக்ஸ் வாசகனாக, லயன் ப்ளாகிலும், ஃபேஸ்புக்கிலும் புத்தகம் வெளியான முதல் சில வாரங்களில் இடப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே எனது பார்வையைப் பகிர்ந்துள்ளேன்! ஒரு காமிக்ஸ் வெளியானதும் அதிக பட்சம் நான்கு வாரங்கள் மட்டுமே அதைப் பற்றிய பேச்சுக்கள் இணையத்தில் அடிபடும்; அதாவது, அதற்கு அடுத்த மாதத்திற்கான காமிக்ஸ்கள் வெளியாகும் வரை!

      இம்முறை வந்திருந்த முதல் கட்ட பாராட்டுகளை விட, நெகடிவ் கருத்துக்களே அதிகமாக இருந்ததாகத் தோன்றியது! ஒ.சி.சு. Ebay விற்பனை நிலவரம் பற்றிய எடிட்டரின் கருத்தும் அதைக் கோடிட்டுக் காட்டுவதாகவே இருந்தது! ஆனால், ஒ.சி.சு. எனக்குப் பிடித்திருந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்!!

      //So சில மாதங்கள் கழித்து வரவேற்பைக்குறித்து தகவலளித்தால் realistic-ஆக இருக்குமே//
      உண்மை! சில மாதங்கள் கழிந்ததும், அந்த realistic-ஆன தகவலை அளித்திட எடிட்டரால் மட்டுமே முடியும்; என்னால், மற்ற இணைய வாசகர்களின் கருத்துக்களை வைத்து மட்டுமே கருத்து சொல்ல முடியும்!

      தவிர, பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட மற்ற கிராஃபிக் நாவல்களும் ஓரளவுக்கே வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்!

      எனவே, இந்தப் பதிவின் மையக் கருத்தில் இருந்து விலகிச் செல்ல வேண்டாம் என்பதே நண்பர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்! இந்தத் தொடர் பொதுவாக, "தமிழில் கிராஃபிக் நாவல்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காதது ஏன்" என்பதைப் பற்றியதே அன்றி, ஒ.சி.சு.-வை மட்டும் ஓரங்கட்டி குறை கண்டு பிடிக்கும் முயற்சி அல்ல!

      நீக்கு
    2. // சில மாதங்கள் கழிந்ததும், அந்த realistic-ஆன தகவலை அளித்திட எடிட்டரால் மட்டுமே முடியும்; என்னால், மற்ற இணைய வாசகர்களின் கருத்துக்களை வைத்து மட்டுமே கருத்து சொல்ல முடியும்! //

      அதனால்தான் இதை சுட்டிக்காட்டினேன். வரலாறு சார்ந்த கிராஃபிக் நாவல்கள் regular காமிக்ஸ் வாசகர்களுக்கு அந்நியமாகத்தோன்றுவது இயல்பான விஷயம். தற்போதைய Feedback அனைத்துமே ஓரளவுக்கேனும் main target audience-ன் கருத்தில்லை என்பதால் இந்த point-ம் main topic-உடன் நேரடி சம்பந்தமுடையதுதானே.

      // தவிர, பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட மற்ற கிராஃபிக் நாவல்களும் ஓரளவுக்கே வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்! //

      உண்மைதான். இதுவரை அம்மாதிரிக் கதைகள் வரலாறு சார்ந்த புனைவு கதைகளை வாசிப்போரை சென்றுசேர்ந்ததா என்பதேகூட கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் அவை மற்ற regular காமிக்ஸ் புத்தகங்களுடன் இணைத்தே வெளியிடப்பட்டன - அதற்கான கூடுதல் விலையுடன். More of an experiment done within regular comics readers - not outside ;) ஒ.சி.சு கதை மட்டுமே முழுமையான முதல் முயற்சியாக இருப்பதால், புதிய வாசகர்களிடையே இதன் வரவேற்பு எவ்வாறுள்ளது என்பது - atleast opens door for proper observation in the future.

      // இந்தத் தொடர் பொதுவாக, "தமிழில் கிராஃபிக் நாவல்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காதது ஏன்" என்பதைப் பற்றியதே அன்றி, ஒ.சி.சு.-வை மட்டும் ஓரங்கட்டி குறை கண்டு பிடிக்கும் முயற்சி அல்ல! //

      I agree and realized the same! :) I responded just to point that ஒ.சி.சு is not yet fully ready to participate in the "why these kind of stories aren't received well" club!

      நீக்கு
    3. விற்பனையில் வரவேற்ப்பு ஆசிரியர்க்கு மட்டுமே.... விற்பனை அதிகமாக இருந்தால் மட்டும் வாசகர்களிடையே வரவேற்ப்பு பெற்றதாக ஆகாது. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் தான் அதிக விற்பனையை பெற்றதாக ஆசிரியர் சொன்னார்.

      வந்து ஒருமாதம் ஆன நிலையில் உறுதியாக சொல்லிவிடலாம் போதிய வரவேற்ப்பை பெறவில்லை என்று

      நீக்கு
    4. // விற்பனை அதிகமாக இருந்தால் மட்டும் வாசகர்களிடையே வரவேற்ப்பு பெற்றதாக ஆகாது. //

      பொதுவாக இதே கருத்துதான் என்னுடையதும் - என்றாலும் வெகுஜன இரசனைக்கான ஊடகமாக காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்கள் இல்லாததால் விற்பனை என்பது தற்காலிகமாக வரவேற்பின் ஒரு indicator-ஆக விளங்குகிறது.

      // வந்து ஒருமாதம் ஆன நிலையில் உறுதியாக சொல்லிவிடலாம் போதிய வரவேற்ப்பை பெறவில்லை என்று //

      இந்த approach முன்பு வெளிவந்த டெக்ஸ்வில்லர் கதையையும், தற்போது வெளிவரும் டெக்ஸ்வில்லர் கதையையும் compare பண்ண வேண்டுமானால் முழுமையாகப் பொருந்தும். ஆனால் வரலாறு சார்ந்த கதை என்று வரும்போது முற்றிலும் புதிய வாசகர்வட்டத்தையும் கணக்கில்கொள்ள வேண்டும். சில புத்தகங்கள் library piece-ஆக வரவேற்கப்பட்டும், entertainment piece-ஆக நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

      நீக்கு
    5. //தற்போதைய Feedback அனைத்துமே ஓரளவுக்கேனும் main target audience-ன் கருத்தில்லை என்பதால் இந்த point-ம் main topic-உடன் நேரடி சம்பந்தமுடையதுதானே//
      ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான்! ஆனால், புதிய வாசகர்களை(யும்) அடைய வேண்டிய, மாறுதலான கிராஃபிக் நாவல் முயற்சிகள் பிரகாஷ் பப்ளிஷர்ஸசைப் பொறுத்த வரை சற்றே ஆட்டம் கண்டு விட்டன அல்லவா?!

      இந்த வருடம் மட்டும், கிராஃபிக் நாவல் என்ற முத்திரையுடன் 7 இதழ்கள் வந்துள்ளன (க்ரீன் மேனர் - 3 பாகங்கள், பி.பி. - 2 பாகங்கள், ஒ.சி.சு. - 2 பாகங்கள்). அனைத்துமே மாறுபட்ட ரகக் கதைகள் என்பது கவனிக்கப் பட வேண்டிய அம்சம்! ஆனால் அடுத்த ஆண்டு வரவிருக்கும் மொத்த கிராஃபிக் நாவல்களின் எண்ணிக்கையே ஆறு தான்!

      2 * தோர்கல்
      1 * XIII
      1 * WW-II கதை
      2 * க்ரைம் / திகில் த்ரில்லர்

      மேற்சொன்னவற்றையும் கிராஃபிக் நாவல் வகையில் அடக்கலாம் தான்! ஆனால், அவை அனைத்தும் அழுத்தமான கதைகளா அல்லது வழக்கமான மசாலா பாணி கதைகளா என்பது தான் கேள்வி! தோர்கல் & XIII - இவற்றை வழக்கமான லயன் / முத்து சந்தாவில் இணைத்திருந்தால் கூட எந்த மாறுதலும் இருந்திருக்காது! மற்ற மூன்று கதைகள் எப்படிப் பட்டவை என்பதை, படித்துப் பார்த்த பின்னர் தான் சொல்ல முடியும்!

      சந்தா வாசகர்களையும், அவர்களின் விருப்பங்களையும் மட்டுமே பிரதானமாக வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம், பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு தற்சமயம் உள்ளது! அதைத் தாண்டி புதிய வாசகர்களை அடைவதற்குத் தடையாக பல காரணங்கள் இருக்கலாம்; அது ஒருவகையில் அவர்களுடைய தவறும் கிடையாது! எனவே தான், சென்ற பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:

      //உங்களுக்கு கிராஃபிக் நாவல்களே பிடிக்காமல் போனாலும் பரவாயில்லை! ஆனால், இது போன்ற மாறுபட்ட களங்களையும், யதார்த்தமான படைப்புகளையும், உணர்வுகள் சார்ந்த கதைகளையும் அல்லது மேற்சொன்ன உதாரணங்களில் அடங்காத புதிய பாணிகளையும் ரசிக்கக் கூடிய - முற்றிலும் புதியதொரு வாசகர் வட்டம் உருவாவது, தமிழ் காமிக்ஸின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான ஒன்று தானே?!//

      அப்படி ஒரு புதிய வாசகர் வட்டம் எப்படி உருவாகும் என்று நினைக்கிறீர்கள்?! விண்ணில் இருந்து குதிக்காது அல்லவா?! ;)

      தவிர, பிரகாஷ் பப்ளிஷர்ஸ் மட்டுமே கிராஃபிக் நாவல்களை வெளியிட வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லையே? விடியல் பதிப்பகம் போன்ற மற்ற நிறுவனங்களும், அவற்றை தரமான மொழிபெயர்ப்புடன் வெளியிட முன் வந்தால் கூடுதல் மகிழ்ச்சி தானே?!

      அதற்கு கி.நா. பற்றிய awareness முதலில் ஏற்பட வேண்டும் அல்லவா?! இதைப் பற்றி பலரும் பேசினால் தான், அது வழக்கமான காமிக்ஸ் வட்டத்தைத் தாண்டி பரவலாக கவனிக்கப்படும்! அதைத் தான் நான் இப்போது செய்து கொண்டு இருக்கிறேன்; இங்கே உங்களின் கருத்துக்களைப் பதிவதன் மூலம், ஒருவகையில் நீங்களும் அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள்!

      //I agree and realized the same! :)//
      Thanks! :)

      நீக்கு
    6. @Lucky Limat:
      //விற்பனை அதிகமாக இருந்தால் மட்டும் வாசகர்களிடையே வரவேற்ப்பு பெற்றதாக ஆகாது. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் தான் அதிக விற்பனையை பெற்றதாக ஆசிரியர் சொன்னார்.//
      +1

      //வந்து ஒருமாதம் ஆன நிலையில் உறுதியாக சொல்லிவிடலாம் போதிய வரவேற்ப்பை பெறவில்லை என்று//
      +2

      :)

      நீக்கு
    7. // ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான்! ஆனால், புதிய வாசகர்களை(யும்) அடைய வேண்டிய, மாறுதலான கிராஃபிக் நாவல் முயற்சிகள் பிரகாஷ் பப்ளிஷர்ஸசைப் பொறுத்த வரை சற்றே ஆட்டம் கண்டு விட்டன அல்லவா?! //

      நான் சொல்லவந்தது - புதிய / மாறுபட்ட வாசகர்கள் ஒரே கதையினை வேறுவிதமாக receive பண்ணக்கூடும் என்கிற ரீதியில்தான். "முயற்சிகள் ஆட்டம் கண்டு விட்டன" என்று யோசிக்குமளவுக்கு வரலாறு சார்ந்த கிராபிக் நாவல் முயற்சிகள் யாவும் வெகுஜன விஷயம் கிடையாதே - கிராஃபிக் நாவல்களில் இருக்கும் Variety மற்றும் Dedication ஒருவேளை புதிய வாசகர்களை காமிக்ஸ் / சித்திரக்கதைகளின் பக்கமாக ஈர்க்கலாம் என்கிற Soft அணுகுமுறை தானே இந்த முயற்சிகள். நம்மூரில் என்றைக்குமே abrupt success-ஐ எதிர்பார்த்து புதிய கதைக்களங்கள் வருவதில்லை.

      உலகளவில் கிராஃபிக் நாவல்களில் இருக்கும் variety தற்போது நமது பரிசோதனை முயற்சிகளை எளிதாக்கிவிடுகிறது - ஒரேவொரு பிரச்சனை தொடர்ச்சியாக 2 வரலாற்றுத் தொடர்புடைய கதைகளை வெளியிட்டதால் அழுகாச்சி என்ற அவப்பெயரை சந்தித்துவிட்டது - unfortunately! :D

      நீக்கு
    8. //கிராஃபிக் நாவல்களில் இருக்கும் Variety மற்றும் Dedication ஒருவேளை புதிய வாசகர்களை காமிக்ஸ் / சித்திரக்கதைகளின் பக்கமாக ஈர்க்கலாம் என்கிற Soft அணுகுமுறை தானே இந்த முயற்சிகள்//

      ஒருவகையில் எனது கருத்தும் அதுவே! ஃபேஸ்புக் நண்பர் ரஃபிக்கிற்கு அளித்திருந்த ஒரு பதில், உங்கள் கருத்துக்கு தொடர்புடையது என்பதால் அதை கீழே காப்பி பேஸ்டுகிறேன்! :)

      //என்னைப் பொறுத்த வரை, பி.பி. & ஒ.சி.சு. கூட ஒரு மாறுபட்ட முயற்சி என்ற அடிப்படையில் எனக்குப் பிடித்து தான் இருந்தன! கதைத் தேர்வில் சறுக்கல்கள் இருக்கலாம், ஆனால் இது பரீட்சார்த்த கட்டம் என்பதால் அதில் தவறில்லை! கிராஃபிக் நாவல்கள் என்ற பரந்து விரிந்த களத்தில், இனி அழுகாச்சி கதைகளை வெளியிடக் கூடாது என்பது, இதன் மூலம் எடிட்டர் கற்ற பாடமாக இருக்கும்! அந்த முடிவு, சிலருக்கு மகிழ்ச்சி தருவதாகவும், சிலருக்கு ஒன்றிரண்டு கதைகள் அப்படி வந்தால் குடி முழுகிப் போய் விடுமா என்ற கேள்வியைத் தருவதாகவும் அமையலாம்! கிராஃபிக் நாவல் என்ற முத்திரையில் வழக்கமான மசாலா கதைகள் வராத வரை சரி தான்!!!//

      நீக்கு
    9. Aha - so many LIC buildings :-)

      BTW, Sippai -> Thogal -> XIII -> what is next in Graphic Novels ?? Mickey and Donald ? :-p

      நீக்கு
    10. // கிராஃபிக் நாவல் என்ற முத்திரையில் வழக்கமான மசாலா கதைகள் வராத வரை சரி தான்! //

      ஹா ஹா! உண்மைதான், ஒரு பக்கம் அழுகாச்சி என்ற அடைமொழியை துடைக்கும் முயற்சியில் மற்றொரு பக்கம் regular action hero கதைகளை சேர்த்தால் அதுவும் problem-தான்!

      நீக்கு
    11. // Aha - so many LIC buildings :-) //

      அங்கே லயன் Blog-ல் எடிட்டரின் புது post வந்ததுகூட தெரியாமல் இதுலயே உட்கார்ந்துட்டேன்! Grrrr....

      :D

      நீக்கு
  5. நமக்கு லயன்ல போடுறதுதான் காமிக்ஸ் மத்தது எல்லாம் நோமிக்ஸ் :D

    பதிலளிநீக்கு

  6. சிப்பாயின் சுவடுகள் நெகடிவ் விமர்சனதுக்கு அதன் முடிவில் நிலவும் குழப்பமும் ஒரு காரணம். நல்ல கலரில் கதைகள் வந்த பிறகும் இன்னமும் கட்ட கருப்பில் தான் படிப்பேன் என்பவர்கள் இருக்கும் வரையில் கிராபிக் நாவல் எப்படி வரவேற்ப்பு பெரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிப்பாயின் சுவடுகள் நெகடிவ் விமர்சனதுக்கு அதன் முடிவில் நிலவும் குழப்பமும் ஒரு காரணம்//
      உண்மை!

      நீக்கு
  7. சிப்பாயின் சுவடுகள் - கிராபிக் நாவல் எப்படியாச்சும் படிச்சு முடிக்கனும், அதுக்கு ஏதாச்சும் வழி இருந்தா சொல்லுங்க பாஸ்!

    “கிராபிக் நாவல் போறடிக்காமல் படித்து முடிப்பது எப்படி” ன்னு ஒரு பதிவே போட்டாலும் ஓகே!! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. P. Karthikeyan, ஒரு நாளைக்கு ஒரு frame ட்ரை பண்ணுங்க. கண்டிப்பா முடியும் :-D

      நீக்கு
    2. @PKK:
      "கிராஃபிடெக்ஸ் - முப்பது நாட்களில் கிராஃபிக் நாவல் படிப்பது எப்படி!" - என்ற புத்தகத்தை வாங்கிப் பயனடையுங்கள்! :) இது ஒரு ப்ளேட்பீடியா வெளியீடு! :P மாற்று சட்டை இலவசம்! ;-)

      நீக்கு
  8. கிராபிக் நாவல் பற்றிய இந்த விவாதங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயம் நண்பர்களுக்கு ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் .நான் ஒரு "கிராபிக் நாவல் " எதிர்பாளன் என அனைவரும் அறிந்தாலும் நான் நமது "கிராபிக் நாவலை"விரும்பா விட்டாலும் (இனி வருவதை அல்ல ) படித்து முடித்தே எனது கருத்தை கூறி வருகிறேன் .அதே சமயம் முதல் கிராபிக் நாவல் (எமனின் திசை .....) தவிர அடுத்து வந்த மூன்று கிராபிக் நாவலையும் வாங்கி வைத்து கொண்டு இன்னும் படிக்காமல் இருப்பவர்களை சேலத்தில் மட்டும் ஐந்து நண்பர்களை அறிவேன் . மொத்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்களில் எத்துனை பேர் என்பது நான் அறியேன். நபர்கள் குறைவாக இருந்தாலும் அதுவே நான் "கிராபிக் நாவலின் " தோல்வி யாக தான் கருதுகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் ஒரு "கிராபிக் நாவல் " எதிர்பாளன் என அனைவரும் அறிந்தாலும் நான் நமது "கிராபிக் நாவலை"விரும்பா விட்டாலும் (இனி வருவதை அல்ல ) படித்து முடித்தே எனது கருத்தை கூறி வருகிறேன்//
      இது உண்மையில் பாராட்டப் பட வேண்டிய விஷயம் பரணி! ஏற்கனவே வந்த கிராஃபிக் நாவல்கள் பிடிக்கா விட்டாலும்; இனி வரும் கதைகள் ஒரு வேளை பிடிக்கக் கூடுமோ என்ற நம்பிக்கையில் தொடர்ந்து படிக்கும் பொறுமை அனைவருக்கும் இருப்பதில்லை; உங்களைப் பொறுத்த வரை, அது நிச்சயம் ஒரு வாசிப்பு மாற்றத்திற்கு வழிவகுக்கும்! அதே சமயம், அனைத்து கி.நா. கதைகளும் பிடித்தே தீர வேண்டும் என்ற அவசியமும் இல்லை!

      //அடுத்து வந்த மூன்று கிராபிக் நாவலையும் வாங்கி வைத்து கொண்டு இன்னும் படிக்காமல் இருப்பவர்களை சேலத்தில் மட்டும் ஐந்து நண்பர்களை அறிவேன்//
      ஹ்ம்ம்.. ஃபேஸ்புக்கிலும் இதே போன்ற கருத்தை சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்...

      // .... நபர்கள் குறைவாக இருந்தாலும் அதுவே நான் "கிராபிக் நாவலின் " தோல்வி யாக தான் கருதுகிறேன் .//

      அப்படிச் சொல்ல முடியாது நண்பரே...!

      கிராஃபிக் நாவல்களும், அவற்றில் வரும் கதைக் களங்களும் - அவற்றை ரசிக்கக் கூடிய (புதிய) வாசகர்களை இன்னமும் போய்ச் சேரவில்லை என்பது தான் உண்மை! ஏற்கனவே இருக்கும், (இரண்டு) ஆயிரத்தி சொச்ச காமிக்ஸ் வாசகர்கள் - கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பாணி கதைகளுக்கு மட்டுமே பழக்கப் பட்டவர்கள் என்பதால், அவர்களை ஒரேடியாக குறை சொல்லி விட முடியாது! அவர்களில் சிலர் கிராஃபிக் நாவல்களை தயக்கமின்றி ஏற்பார்கள், சிலர் உங்களைப் போல சகித்துக் கொண்டு படிப்பார்கள் & இன்னும் சிலர் ஒரேடியாக தவிர்த்தும் கூட விடுவார்கள்! எனவே, ரெகுலர் காமிக்ஸ் வாசகர்களைத் தாண்டி, புதிய வாசகர்களை அடைய முயற்சிப்பது தான் இப்போதைய அத்தியாவசியத் தேவை!

      நீக்கு
  9. எனக்கு...

    எ.தி.மே - ரொம்பப் பிடித்தது
    க்ரீன் மேனர் - ரொம்ம்ம்ப்ப்பப் பிடித்தது
    பி.பி - பி (பிடித்தது)
    ஓ.சி.சு - ம்... இன்னொரு முறை படிச்சாத்தான் எதையும் உறுதியாச் சொல்ல முடியும் ( ஆனால், படிக்க மாட்டேன்) :)

    (தொடரும்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிராஃபிக் நாவல் பரிட்சையில் 100க்கு 75 மார்க் வாங்கி, ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகி விட்டீர்கள் போல?! ;-)

      நீக்கு
    2. விஜய், மர்ஜானே சத்ரபியின் ஈரான் கிராஃபிக் நாவலையும் படித்து அதிக மதிப்பெண்களுக்கு முயற்சிக்கலாமே?

      ( முற்றும்! )

      நீக்கு

  10. காமிக்ஸ் இதழ்கள் மிகக்குறைவாக வந்து கொண்டிருந்த காலங்களில் வெளிவந்த மர்ஜானே சத்ரபி கதைகளை நானும் ஆர்வமுடன் படித்தேன். ஆனால் மர்ஜானே சத்ரபி, பி.பி, ஒ.சி.சு "போன்ற" கி.நாவல்களுக்கு தனி இதழ் என்பதெல்லாம் ஓவர். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒன்று என்ற வரை ஓகே (என்பது என் கருத்து :) ). .

    BTW தோர்கல் மற்றும் XIII போன்ற கதைகள் கி. நாவல்கள?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி SIV :-)

      உங்களின் மேற்கண்ட கருத்துக்களுக்கு தொடர்புடையது என்பதால், லக்கி ப்ளாகில் நான் போட்டிருந்த ஒரு கமெண்டை, இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன்!

      //நாம் இதுவரை காமிக்ஸ்களில் படித்து வந்த பல கதைகள் கி.நா. வகையைச் சார்ந்தவையே!ஆனால், காமிக்ஸ் என்றாலே சிறுவர்களுக்கு என்ற முத்திரை விழுந்து விட்டதால், பெரியவர்களை / புதிய வாசகர்களைக் கவர இது போன்ற கவர்ச்சிகரமான பெயர்கள் தேவைப் படுகின்றன!

      இந்த கி.நா. முத்திரையை ஒவ்வொரு பதிப்பகமும் தங்களுக்கு பிடித்த வகையில் பயன்படுத்துகின்றன! ஆனால், எடிட்டர் விஜயன் நாம் ஏற்கனவே பழக்கப் பட்ட கதைகளில் இருந்து, கிராஃபிக் நாவல்களை வேறுபடுத்திக் காட்ட கொஞ்சம் மாறுதலான கதைகளை வெளியிட முடிவெடுத்தார் என்று நினைக்கிறேன்! ஆனால், அடுத்த வருடம் முதல் அந்தப் பிரச்சினையும் இல்லை//

      அடுத்த வருடம் தான், XIII, தோர்கல் என்று நாம் பழக்கப் பட்ட கதைகள் வரப் போகின்றனவே?! :D

      நீக்கு
  11. அன்பின் கார்த்திக்,

    நலமா? வலசை சிற்றிதழ் சார்ந்து உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும். உங்களது அலைபேசி எண்ணை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியுமா?
    karthickpandian@gmail.com
    நன்றி

    பிரியமுடன்,
    கார்த்திகைப்பாண்டியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!!! மின்னஞ்சலில் விபரங்கள் அனுப்பியுள்ளேன்! தங்களிடம் இருந்து வரப் போகும் அழைப்புக்கு, ஒரு தலைப்பு வைக்கச் சொன்னால் என்ன வைக்கலாம் என்று (உட்கார்ந்து) யோசித்ததில் தோன்றியது:

      கார்த்திக்கை அழைத்த கார்த்திகை! :-) :-)

      நீக்கு
    2. /* கார்த்திக்கை அழைத்த கார்த்திகை! :-) :-) */

      கார்த்திக்கை ஒரு கார்த்திகை (திங்களில்) அழைத்த கார்த்திகை :-)

      ரொம்ப ப்ளாக் படிக்கிறோமோ ;-)

      நீக்கு
  12. பதில்கள்
    1. thank you Ashok! :)

      //nice blog...liked ur blog name too :) //
      same goes for your blog too! :) nice pics...
      http://ashokism.blogspot.in/

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia