6 மெழுகுவத்திகளும், 2 டிக்கெட்டுகளும்!

இந்நேரம் தமிழ்நாட்டில் உள்ள அநேகம் பேர் 'ஆறு மெழுகுவத்திகள்' படத்தை பார்த்திருப்பார்களோ இல்லையோ, பத்திரிக்கைகள் மற்றும் இணையம் மூலம் விமர்சனம் படித்து கதையாவது தெரிந்து கொண்டிருப்பார்கள்! அதில் முக்கால்வாசி பேராவது, கதைச் சுருக்கத்தைப் பார்த்தவுடனேயே 'ஹாவ்' என்று கொட்டாவி விட்டு நகர்ந்திருப்பார்கள்! ஆனால், அவர்கள் மட்டும் இந்தப் படத்தைப் பார்த்திருந்தார்கள் என்றால் அவர்களின் ரியாக்ஷன் 'வாவ்' என்று இருந்திருக்கும்!

தங்கள் மகனின் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கையோடு, கடற்கரைக்கு செல்லும் ஷாம் (படத்தில் ராம்!) தம்பதியினர் அங்கே அவனைத் தொலைத்து விடுகின்றனர். பல மணி நேரங்கள் கடற்கரை முழுவதும் தேடி அலைந்தும் குழந்தை கிடைக்காததால், இறுதியாக போலீஸிடம் செல்கிறார்கள். போலிஸ் ஸ்டேஷனில் ராமின் மனைவி அழுது கொண்டே நின்றிருக்க, அங்கே உட்கார்ந்திருக்கும் ஒரு குற்றவாளி அவளைப் பார்த்து கண் அடிக்கும் போதே, அவனை விட கேவலமான மனிதர்களை இந்தப் படத்தில் பார்க்கப் போகிறோம் என்பது புரிந்து விடுகிறது. கம்ப்ளைன்ட் கொடுத்து ஓரிரு நாட்கள் கழித்தும் மகனைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், தேடுதல் வேட்டையை தானே மேற்கொள்ள முடிவு செய்கிறார் ஷாம்.

கான்ஸ்டபிள் ஒருவரின் துணையுடன், இதுபோன்ற காரியங்களுக்கு உடந்தையாக இருக்கும் ஒரு பிச்சைக்காரனிடம் தகவல் சேகரிக்கப் போகிறார்கள். முதலில் ஒத்துழைக்க மறுக்கும் அவன், ஷாமின் மனைவி காலில் விழுந்து கதறியதும், குழந்தைகளை கடத்திச் சென்ற ஒரு ஆந்திரக் கும்பலின் முகவரியைத் தருகிறான். ஷாம் தரும் பணத்தை வாங்க மறுக்கும் அந்த பிச்சைக்காரன், 'உன்னை மாதிரி ஆளுங்க மேலே நின்னு சுண்டி விடுவீங்களே ஒத்த ரூபா; அதே மாதிரி, நான் ஒனக்கு இந்த ஒத்த உதவியை கீழே ஒக்காந்து சுண்டி விட்டிருக்கேன். பொறுக்கிக்கிட்டு போய்ட்டே இரு" என்று சொல்லி அவர்களை விரட்டும் இடத்தில், சமூகத்தின் மீது பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் வெறுப்பு பிரதிபலிக்கிறது.

வாடகை காரில் டிரைவர் ஒருவரின் துணையுடன் ஆந்திரா கிளம்பும் ஷாம் ஒவ்வொரு இடமாக அலைக்கழிக்கப் படுகிறார். இறுதியாக மேற்கு வங்கத்தில் இருக்கும் 'குழந்தைக் கடத்தல் நெட்வொர்க்கின்' பெரிய தலை ஒருவன், ஐம்பது லட்சம் தந்தால் மட்டுமே குழந்தை கையில் கிடைப்பான் என்று சொல்லி, ஒரு திருநங்கையிடம் (யார் அவர்?! அட்டகாசமான நடிப்பு!) அனுப்பி வைக்கிறான். சென்ற இடத்தில், அங்கே மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு பள்ளி மாணவியை ஷாம் தப்ப வைக்கிறார். இதனால் எரிச்சலாகும் கடத்தல் கும்பல், ஷாமின் மகனை அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு சென்று விடுகிறது; அத்துடன் தொடர்பும் துண்டிக்கபடுகிறது. இடைப்பட்ட நேரத்தில் ஷாமின் மனைவி ஐம்பது லட்சத்தை அந்த கும்பலுக்கு ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர் செய்து விட, பணமும் பறிபோய் விடுகிறது.

சென்னை திரும்ப மனமின்றி, தன் குழந்தையைத் தேடி பிச்சைக்காரன் போல் பல மாநிலங்களுக்கு பயணிக்கிறார் ஷாம்! பல மாதங்கள் அவர் இப்படியே சுற்றிக் கொண்டிருக்க, அவர் மனைவியோ 'எனக்கு நம்பிக்கை இல்ல ராம்! நீ வீட்டுக்கு திரும்பி வா, உனக்கு எத்தனை குழந்தை வேணுமோ நான் பெத்துத் தர்றேன்' என்று போனில் கதறுகிறார். இந்த காட்சியைப் பார்த்த என் மனைவி, 'அது எப்படி இப்படி ஒரு வசனத்தை, ஒரு அம்மா பேசுவது போல வைக்கலாம்' என்று ரொம்பவே கோபமாகி விட்டார். இதற்குப் பிறகு சில பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம், இறுதியில் ஒரு உருக்கமான க்ளைமேக்சுடன் முடிகிறது. அதை படம் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்!

கோலிவுட்டில் இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு, இப்படி ஒரு படத்துடன் ரீ-என்ட்ரி செய்ய ஒரு தனி தைரியம் தேவை! அதற்காகவே ஷாமைப் பாராட்டலாம்! அழுகைக் காட்சிகளைத் தவிர பிற இடங்களில் கச்சிதமாக நடித்துள்ளார். படம் துவங்கும் போது ஒரு டிப்டாப் சாஃப்ட்வேர் என்ஜினியராக அறிமுகமாகும் அவரின் தோற்றம், படிப்படியாக ஒரு பிச்சைக்காரனைப் போல மாறுவது நம்பும் படி இருக்கிறது; அந்த மாற்றமே கிளைமேக்சில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மற்ற நடிகர்களும் அதிக அலட்டல் இன்றி தேவையான அளவு நடித்திருக்கிறார்கள்.

லோ-பட்ஜெட் தான் என்றாலும், நல்லதொரு படத்தை எடுத்திருக்கிறார்கள். சில காட்சிகளில் - ஹீரோயிசமும், சினிமாத்தனமும் தலை தூக்கினாலும், இவ்வாண்டின் தவிர்க்கவே முடியாத முக்கியமான சினிமாக்களில் இதுவும் ஒன்று! கலைப்படம், ஆவணப் படம் என்றெல்லாம் ஒதுக்கி விட முடியாது, அவ்வளவு பரபரப்பாக நகர்கிறது! படம் முழுவதும், ஒரு பதட்டமாகவே உணர்ந்தேன்! தரமான ஒரு திரைப்படத்தை அளித்திருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனரும் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியவர்கள்.

'மகாநதி', 'நான் கடவுள்' என்று ஏற்கனவே இந்த பாணியில் ஒரு சில படங்கள் வந்திருந்தாலும், இளம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தரும் படைப்பாக இது அமைந்துள்ளது. அதை முழுவதும் உணர்ந்து கொள்ள இந்த விமர்சனத்தைப் படித்தால் மட்டுமே போதாது; சில குறைகள் இருந்தாலும், அர்த்தமுள்ள படம் என்பதால் அவசியம் பாருங்கள். ஆனால், அதற்கு தியேட்டரில் இன்னமும் ஓட வேண்டுமே?! :(

"ஆர்யா சூர்யா" போன்ற படங்கள் கூட தமிழ்நாட்டில் வெளியாகும் அதே நாளில் பெங்களூரிலும் ரிலீஸ் ஆகி விடும்! ஆனால், 'ஆறு மெழுகுவத்திகள்' போன்ற படங்கள் இங்கு பெரும்பாலும் வராது! அப்படியே வந்தாலும் - வருவதும் தெரியாது, போவதும் தெரியாது! இது போன்ற படங்களை வேறுவழியின்றி DVD-யில் பார்க்க நேரும்போது, 'படத்தின் தயாரிப்பாளர் அவரது வங்கி விபரங்களை பொதுவில் விளம்பரம் செய்தால், டிக்கெட் பணத்தை அவருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து விடலாமே' என்று எனக்குத் தோன்றும்! கமலால் கூட விஸ்வரூபத்தை Movie On Demand மூலமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை; இந்த அழகில் என்னுடைய, "DVD-யில் பாரு, டிக்கெட் பணம் அனுப்பு" திட்டமெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா என்று தெரியவில்லை! என்னால் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான், இந்தப் படத்தின் ஒரிஜினல் DVD இந்தியாவில் ரிலீஸ் ஆகும் போது அதை வாங்குவதே!

பி..கு: தங்க மீன்கள் படத்தின் ஒரிஜினல் DVD-யே 75 ரூபாய்க்கு கிடைகிறது (அமேசான் / மூவி மால்)! எப்படி இவ்வளவு குறைவாக என்று புரியவில்லை. படம் வெளியாகிய சில மாதங்களில் இப்படி அனைத்து படங்களையும் DVD-யில் ரிலீஸ் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! பாலிவுட்டில் செய்கிறார்கள், தமிழில் ஏன் செய்வதில்லை என்பது புரியவில்லை!

கருத்துகள்

 1. நல்ல படம்தாங்க! ஆனா போதிய விளம்பரம் இல்லை! தியேட்டரில் பார்ப்பதற்கு முன்பே தூக்கிவிட்டார்கள்! நான் 25 ரூபாய்க்கு வாங்கிய DVD லதான் பார்த்தேன்! :)

  பதிலளிநீக்கு
 2. ஹய்யா .. சூப்பர் டூப்பர் தீபாவளி பதிவு ... எங்களைப் போன்ற சில நூறு வாசகர்களுக்காக உங்கள் பிசியான பண்டிகைத் தருணத்திலும் இந்த பதிவு போட்டதற்கு நன்றிகள் பல ஸார் :-D

  பல நாட்களுக்கு பிறகு ஒரு மூவி ரிவ்யூ - படிக்கும் போதே மகாநதி சாயல் தட்டியது - எனினும் வித்யாசனான முயற்சி ... !

  நீங்கள் சொன்ன அந்த தங்க மீன்கள் DVD விஷயம் .. முன்பே தமிழ், இந்தி, தெலுங்கு படங்களின் ஒரிஜினல் வீடியோ டேப் சில மாதங்களில் வந்துவிடும் .. இப்போ தான் என்னாச்சுன்னு புரியல .. இதனால் பல நல்ல படங்கள் பாக்க முடியாமல் போகிறது - அரங்கம் சென்று பார்த்திட நான்கு மணி நேரம் தேவை - கிடைப்பதில்லை :-(

  உங்களது ஒரிஜினல் வரும்போது வாங்கும் முயற்சி நல்லது - பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பிளாட்பாரக் கடைகளில் வாங்கிய புத்தகங்களை இப்போது ஒரிஜினல் வாங்கி அடுக்கி - வீட்டில் அடுக்கடுக்காய் வசையும் வாங்கிக் கொண்டிருக்கிறேன் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறந்து விட்டேன் - மீ தி செகண்டு அண்ட தேர்டு :-)

   நீக்கு
  2. //அரங்கம் சென்று பார்த்திட நான்கு மணி நேரம் தேவை - கிடைப்பதில்லை//
   சதா சர்வகாலமும், லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அவற்றின் எடிட்டர், லயன் ப்ளாக் விவகாரங்கள் இவற்றைப் பற்றியே பேசிக் கொண்டிராமல் இருந்தால் நிச்சயம் நேரம் கிடைக்கும்! கொஞ்சம் காமிக்ஸ் உலகை விட்டு வெளியில் வாருங்கள் ராகவன்! :)

   நீக்கு
  3. /* சதா சர்வகாலமும், */ - தவறு - என் நய்யாண்டிகள் அவைகளைப் பற்றியதாக மட்டும் உள்ளது ஆனால் எப்போது அல்ல ... 80 N கருத்து :-)

   மேலுள்ள கமெண்ட் பார்க்கவும் - இதில் காமிக்ஸ் பற்றி [மட்டும்] வருகிறதா? மற்றவை தெரியவில்லையா? :-) [எய்ட்டி மை ஒபினியன் :-D] (மொழி பெயர்த்துக் கொள்ளவும் ...)

   நான் கமெண்ட் போடுபவற்றில் நீங்கள் சதா சர்வகாலமும் ஒரு குறிப்பிட்டவற்றை மட்டும் சில காலமாய் சுட்டிக் காட்டுவது ஓவர் ரியாக்டியன் இல்லியா? :-) [ 80 N கருத்து .. உஸ் ... அப்பா :-) ]

   நீங்கள் குறிப்பிட்ட தளங்களில் எனக்கு நண்பர்களும் உண்டு என்பது நீங்கள் நன்கு அறிந்தது தான் - அவர்களோடு எனக்கு வேறுபாடுகள் இருந்தாலும் எதிர்ப்புக்கள் இல்லை என்பதும் நீங்கள் அறிந்த என் கருத்தே ... !

   :-) :-) :-)

   நான் இனி எங்கும் கருத்து சொல்லி ஆவது ஒன்றுமில்லை 80ம் N கருத்தே ... :-)

   நீக்கு
  4. //நான் கமெண்ட் போடுபவற்றில் நீங்கள் சதா சர்வகாலமும் ஒரு குறிப்பிட்டவற்றை மட்டும் சில காலமாய் சுட்டிக் காட்டுவது ஓவர் ரியாக்டியன் இல்லியா? :-)//
   உங்கள் அளவுக்கு அதிகமான உள்டப்பி & வெளிடப்பி தமிழ் காமிக்ஸ் கருத்துக்கள், என் நேரத்தை ஏகத்துக்கும் விழுங்கி வந்ததால் தான், உங்களிடம் நான் அவற்றை தொடர்ந்து சுட்டிக் காட்ட நேர்ந்தது என்பது நீங்கள் அறிந்தது தானே?! :)

   //நான் இனி எங்கும் கருத்து சொல்லி ஆவது ஒன்றுமில்லை 80ம் N கருத்தே ... :-)//
   அது உங்கள் விருப்பம்! :)

   கமிங் பேக் டு த டாபிக் ;)
   //மூவி ரிவ்யூ - படிக்கும் போதே மகாநதி சாயல் தட்டியது//
   ஆமாம், சில காட்சிகளில் மகாநதி பாதிப்பு தெரிந்தது!

   நீக்கு
 3. /* ஆமாம், சில காட்சிகளில் மகாநதி பாதிப்பு தெரிந்தது! */

  அமாம் .. மகாநதி பாதிப்பு இருக்கு :-D

  [இதுவும் அளவுக்கு அதிகமா இருக்கோ :-D]

  பதிலளிநீக்கு
 4. நல்ல படம். இன்னும் சற்றே அழுத்தமாக எடுத்திருந்தால் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ராம்! பாட்டுகள் மற்றும் சில தேவையில்லாத காட்சிகளைத் தவிர்த்து அழுத்தம் கூட்டி இருக்கலாம்!

   நீக்கு
 5. இந்தப் பதிவு (நான் இதுவரை படித்த) உங்களுடைய மற்ற பதிவுகளிலிலிருந்து மாறுபட்டது! சில படங்கள் பெங்களூரில் ரிலீஸ் ஆவதில்லை - அதனால் டிவிடியில் பார்த்தேன் - நல்ல படம் - குற்ற உணர்வு - தயாரிப்பாளரின் அக்கெளவுண்ட்டு பணம் அனுப்பத் தயார் - ஆனால் வாய்பில்லை - அதனால் ஒரிஜினல் டிவிடி வாங்கி பரிகாரம் செய்வேன். ப்ப்பா! என்னா ஒரு நேர்மையான மனசு உங்களுக்கு?!! :)

  இன்னொரு ஐடியா தருகிறேன். பெங்களூர் தியேட்டருக்குப் போய் உங்க குடும்பம் படம் பார்த்திருந்தால் என்ன செலவாகியிருக்குமோ,அந்தப் பணத்தை(இடைவேளையின்போது 'வாங்கித் திண்ணும்' செலவையும் சேர்த்து) பல மாதங்களாக சினிமா பார்க்க காசு இல்லாமல் ஏங்கித் தவிக்கும் யாராவது ஒரு அப்பாவிக்கு ( உதாரணம்: ஈரோடு விஜய்) நீங்கள் மணி ஆர்டர் அனுப்பி வைக்கலாமே? இதனால் ஒரே நேரத்தில் அந்த அப்பாவிக்கும், அந்தத் தயாரிப்பாளருக்கும் பயன் கிடைக்குமில்லையா? ஹி ஹி! ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் படம் பாக்க நான் காசு அனுப்பறேன்! இங்க, மல்டிப்ளெக்ஸ்ல ஆங்கிலப் படங்கள் பார்க்க நீங்க Fund Transfer பண்ணுங்க! ;)

   நீக்கு
 6. உங்க பையன அடிக்கடி பாட்டிகிட்ட தூங்க வச்சுட்டு நீங்க ரெண்டு பேரும் escape ஆயிடறீங்க போல தெரியுது! : ).


  படத்த ரொம்பவே ரசிச்சு பாத்த மாதிரி தெரியுது கார்த்திக்! தனது பிள்ளைகள் மேல
  ரொம்ப attached ஆகா இருக்கற parents இந்த படத்த பாக்கும் போது ரொம்பவே உணர்ச்சி
  மயமா இருப்பாங்கன்னு நினைக்கறேன்.

  நான் கடைசியா, வீட்டுக்காரம்மா தொல்ல தாங்கமுடியாம சிங்கம்-2 போன போது எங்க
  சுட்டிக்கு 10தே நிமுசத்துல பொறுமை போயி சின்ன சிங்கமா மாறி கலாட்ட பண்ண
  ஆரம்பிக்க,சுத்தி இருந்தவங்க எரிச்சலாக முகம் காண்பிக்க , நானும் அவனும் அவ்விடம்
  விட்டு escape ஆனோம். ( ரெண்டு வருஷம் கழிச்சு படத்துக்கு வந்திருக்கோம், படம்
  முடியாம எழுந்திரிக்க மாட்டேன்னு அவங்கம்மா கண்டீசன சொல்லிட்டாங்க )
  அதென்னமோ தெரியலீங்க வெளியில வரும் போது இந்த காலத்து சுட்டிகள் மிகச்சரிய
  அப்பாகிட்ட தொத்திக்கறாங்க! : )

  so தற்சமயத்துக்கு தியேட்டர் என்பது எட்டா கனிய தெரியுது!!

  nice review karthik!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா, இந்த படம் கொஞ்சம் டிஸ்டர்பிங்கா இருந்தது விஸ்கி!

   தியேட்டர்ல படம் பாக்குறது ஒரு பிரச்சினை இல்ல! ஏன்னா, என் பையன் விரும்பிப் பார்ப்பான். :) ஆனா ஒண்ணு, தியேட்டர் போனா மட்டும் கிரைண்டர் மாதிரி எதையாவது அரைச்சுத் தள்ளிட்டே இருக்கணும் அவனுக்கு! :P

   //வெளியில வரும் போது இந்த காலத்து சுட்டிகள் மிகச்சரிய அப்பாகிட்ட தொத்திக்கறாங்க! //
   இங்கேயும் அதே கதை தான்! :D படம் பாக்கறப்போ, ஸ்நாக்ஸ் / பாத்ரூம்னு ஒரு ரெண்டு, மூணு தடவையாவது வெளியே கூட்டிட்டு போக வேண்டி இருக்கும்! :)

   நீக்கு
 7. ஒரிஜினல் DVD ரிலீஸ் ஆகி விட்டது - ஒரு காப்பி வாங்கி விட்டேன்! இந்தப் படத்தை பார்க்க விரும்புபவர்கள் வாங்கலாம்:

  http://www.amazon.in/gp/product/B00HP4EJR4/ref=ox_sc_act_title_2?ie=UTF8&psc=1&smid=A3EQS17L770VSS

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia