வவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்!

இப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One! இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல்! இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-)

முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம்! சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும்.

அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது! காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும்! எனவே, நம் வயது மற்றும் ரசனைக்கேற்ற சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து படிப்பது மிக அவசியம்.

எண்பதுகளின் பிற்பாதியில், DC காமிக்ஸ் நிறுவனம், சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது! அதன் ஒரு அங்கமாக, பேட்மேனின் முன்கதையை காலத்திற்கேற்ப மாற்றிச் சொல்லும் கடினமான பணியை, Bronze Age காமிக்ஸ் பிதாமகர்களில் ஒருவரான ஃபிரான்க் மில்லர்-இன் வசம் ஒப்படைத்தது! அந்த முடிவு, பேட்மேனுக்கு இன்றளவுக்கும் பொருந்தக் கூடிய மிகச் சரியானதொரு துவக்கத்தைத் தந்திருக்கிறது!

பேட்மேனுக்கு மட்டுமல்ல, பேட்மேன் தொடரை வாசிக்க எண்ணுபவர்களுக்கும், இந்த 'Batman: Year One' புத்தகம் சரியான ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது! இந்த 'முன்கதையின் முன்கதை'-யை இத்துடன் நிறுத்திக் கொண்டு, கதைக்குள் நுழையலாமா?!

ட்ட ஒழுங்கு சீர்கெட்ட கோத்தம் சிட்டி! அன்றைய தினம், முக்கியமான இருவர் வருகை புரிகின்றனர். லெஃப்டினன்ட் 'ஜேம்ஸ் கோர்டன்'; சிகாகோவில் இருந்து பணி மாற்றமாகி, கோத்தம் நகருக்குள் அடியெடுத்து வைக்கிறார். மற்றவர், 25 வயது இளம் கோடீஸ்வரர் 'ப்ரூஸ் வேய்ன்'; 12 வருட வனவாசத்திற்குப் பிறகு தனது மாளிகைக்குத் திரும்புகிறார்.

இடைப்பட்ட இந்த 12 வருடங்களில், பல்வேறு தற்காப்பு மற்றும் தாக்குதல் கலைகளைத் கற்றுத் தேர்ந்த ப்ரூஸ் வேய்ன், இரவில் மாறு வேடமிட்டு சமூக விரோதிகளை எதிர் கொள்கிறார். முதல் முயற்சி, படுதோல்வியில் முடிகிறது. லெஃப்டினன்ட் கோர்டனின் முதல் நாள் அனுபவங்களும் உற்சாகமூட்டுவதாக இருக்கவில்லை. அவரின் உயரதிகாரியான போலிஸ் கமிஷனர் 'ஜில்லியன் லோப்', காவல் துறையை சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுத்துவது அவருக்குத் தெரிய வருகிறது.

இவ்விருவரின் வழிமுறைகள் வேறாக இருந்தாலும் குறிக்கோள் ஒன்று தான் - சமூக விரோதிகளை களைந்து, கோத்தம் சிட்டியை சுத்தம் செய்வது! சட்டத்தை தன் கையில் எடுக்கும் ப்ரூஸ் வேய்ன், வவ்வால் வேடமிட்டு சமூக விரோதிகளின் மனதில் பயத்தை விதைக்கிறார். சட்டத்திற்குக் கட்டுபட்ட கோர்டனோ, தனது நேர்மையான நடவடிக்கைகளின் மூலம் மக்களிடையே புகழ் பெறுகிறார். இடையே, 'ஹார்வி டென்ட்', 'கேட்வுமன்' போன்ற முக்கியமான பாத்திரங்களின் அறிமுகங்களும் நடைபெறுகின்றன!

கோர்டன் மற்றும் பேட்மேனை முடக்க, கமிஷனர் தலைமையிலான கும்பல் பல முயற்சிகளை மேற்கொள்கிறது! 'அந்தக் கும்பலின் கொட்டத்தை அடக்க, நேரெதிர் குணம் கொண்ட நம் நாயகர்கள் இருவரும் கை கோர்த்தார்களா?' - என்ற கேள்விக்கு, விறுவிறுப்பான இறுதிப் பக்கங்கள் விடை அளிக்கின்றன! முத்தாய்ப்பாக, கதையின் இறுதிப் பக்கத்தில், பேட்மேன் தொடரின் பிரபல வில்லனான 'ஜோக்கர்'-இன் பெயரும் அடிபடுகிறது! இவை அனைத்தும் நூற்றுக்கும் குறைவான பக்கங்களில் நடந்து முடிந்து விடுவதால், பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லை!

கோர்டன் மற்றும் பேட்மேனின் பார்வையில், மாறி மாறி நகர்கிறது கதை - சிறிதும் அலுப்பு ஏற்படுத்தாமல்! பிரான்ஃக் மில்லரின், கனகச்சிதமான கதை சொல்லலுக்கு, டேவிட் மாஸுக்கெல்லி-யின் ஓவியம் கூடுதல் கனம் சேர்க்கிறது! ப்ரூஸ் தன்னை பேட்மேனாக நிறுவிக் கொள்ள செய்யும் முயற்சிகளில் சந்திக்கும் முதல் கட்டத் தோல்விகள், கோர்டன் மற்றும் அவர் மனைவிக்கு இடையே நேரும் விரிசல், நாயகர்கள் இருவரும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபடுவது - ஆகிய உளப் போராட்டங்கள் நிறைந்த பகுதிகள், அவர்களோடு நம்மை ஒன்றச் செய்கின்றன!

பேட்மேன், வவ்வால்கள் புடை சூழ போலீசிடம் இருந்து தப்பும் இடமும்; கோர்டன் மன நோயாளியிடம் இருந்து சிறுமிகளைக் காப்பாற்றும் இடமும், ரசிகர்களை இருக்கை நுனிக்குத் தள்ளக் கூடியவை! இவை போதாதென்று, கூர்மையான வசனங்களும் கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன!

ஒரு கட்டத்தில், "From this moment on.... none of you are safe." என்று, பேட்மேன் தன்னுடைய எதிரிகளை நோக்கிக் கூறுவார்! அந்த வசனத்தை சற்று மாற்றி, இப்புத்தகத்தைப் பற்றிய ஒருவரித் தீர்ப்பை பின்வருமாறு எழுதலாம்: From the moment you pick this book, none of you will get bored!
பின்குறிப்பு 1:
இக்கதை சில வருடங்களுக்கு முன்னர் அனிமேட்டட் படமாக வெளியாகி, பேட்மேன் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது! அதில் இருந்து ஒரு அதிரடிக் காட்சி:


பின்குறிப்பு 2:
நம்மில் பலருக்கு, திரைப்படங்கள் வாயிலாக பேட்மேனின் அறிமுகம் இருக்கும். ஆனால் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு, கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு முன்னரே, திகில் காமிக்ஸ் மூலமாக பேட்மேன் அறிமுகமாகி இருந்தது பற்றி, வலைப்பூ துவக்கிய புதிதில் (Bladepedia: Year One) எழுதி இருந்தேன்: தமிழ் பேசிய பேட்மேன்!

பின்குறிப்பு 3:
ஆங்கில காமிக்ஸ் படிக்கும் / சேர்க்கும் ஆர்வம் இருந்தாலும் (புத்தக வடிவில்), அவற்றின் விலை ஒரு தடையாக இருந்து வந்தது. Flipkart மற்றும் Amazon புண்ணியத்தில், (பலத்த) தள்ளுபடி விலையில், பல ஆங்கில காமிக்ஸ்களை கடந்த ஒரு வருடமாக வாங்கி வருகிறேன். சமீப மாதங்களில் தான் இவற்றை வாசிக்கத் துவங்கியுள்ளேன் (Thorgal, Watchmen, Jonah Hex, Batman etc.). ஆகவே, இனி ப்ளேட்பீடியாவில் ஆங்கில வாடை சற்று தூக்கலாக இருக்கும்! :)

கருத்துகள்

 1. இந்த புத்தகத்தை ( பிரெஞ்சு மொழியாக்கத்தில் ) சில மாதங்களுக்கு முன்னர்தான் படித்தேன் !

  From the moment you pick this book, none of you will get bored!

  உண்மையான தீர்ப்பு !

  நீங்களே குறிப்பிட்டது போல பிரான்க் மில்லர் பேட் மேனுக்கு அருமையானதொரு புதிய பரிமாணத்தை கொடுத்திருக்கிறார். கடைசி மூன்று பேட் மேன் படங்கள் சக்கைபோடு போட்டதற்கு இவரின் மாற்றங்களும் ஒரு காரணம்.

  பின்குறிப்பின் மூலம் என்னை மீன்டும் nostalgia சுழலுக்குள் அமிழ்த்திவிட்டீர்களே ! திகில் காமிக்ஸ் முதல் இதழிலிருந்து கடைசி வரையிலும் ( சீக்கிரமாகவே நின்றுவிட்டதாக ஞாபகம் ) வாங்கி குவித்தேன் ! ஹூம்... அது ஒரு அழகிய கவலைகளற்ற காமிக்ஸ் காலம் !

  என் பின்குறிப்பு ! : சென்ற வாரம் Captain America Winter Soldierபார்த்தேன்... பரவச அனுபவம் ! ( dc, Marvelன் மொக்கை படங்கள் கூட எனக்கு பரவசம் தான் ! எல்லாம் Nostalgia effect !!!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை நண்பரே! :) எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் ஹாலிவுட் படங்களை வாய் பிளந்து பார்க்கப் பழகி விட்டோம் - சமீப உதாரணம் அமேசிங் ஸ்பைடர்மேன் 2! ஆனால், வின்டர் சோல்ஜர் உண்மையிலேயே நல்ல படம் என்று கேள்விப் பட்டேன்...

   நீக்கு
 2. ஹும்.....ஆசிரியரை பலமுறை வேண்டியும் தமிழில் "பேட் மேனை " மீண்டும் கொண்டு வர முடிய வில்லை .காத்து கொண்டே இருக்கிறேன் .

  நல்ல பதிவு .வாழ்த்துகள் நண்பரே ....

  பதிலளிநீக்கு
 3. அருமையானதொரு ரிவ்யூ நண்பரே.

  இந்தக் கதையை ஒரு வருடத்துக்கு முன்னர் படிக்கக் கிடைத்தது. விறு விறுப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் அதிரடிக்கும் பஞ்சமில்லாத தொடர் இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நட்புக்கும் துரோகத்துக்கும் நட்புக்கும் வெறுப்புக்குமிடையில் நடக்கும் சதுரங்க ஆட்டங்கள் அபாரம்.

  தமிழில் வர 'காமிக்ஸ் கடவுள்' அருளட்டும்!

  உங்கள் ரிவ்யூக்கள் தொடரட்டும். கலக்குக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே!

   //நட்புக்கும் துரோகத்துக்கும் நட்புக்கும் வெறுப்புக்குமிடையில் நடக்கும் சதுரங்க ஆட்டங்கள் அபாரம்//
   இந்த வரி மட்டும் சற்று குழப்புகிறது! ஒருவேளை நீங்கள் குறிப்பிடுவது வேறு பேட்மேன் கதையாக இருக்குமோ?!

   //தமிழில் வர 'காமிக்ஸ் கடவுள்' அருளட்டும்!//
   ஹ்ம்ம்... பேட்மேன் தொடரின் லைசன்ஸ் தொகை அதிகம் என்று எடிட்டர் விஜயன் குறிப்பிட்டிருந்தார்! ஆனால், அவர் பொதுவாகவே ஐரோப்பிய காமிக்ஸ்களின் மீது மட்டுமே நாட்டம் காட்டுவதாகத் தெரிகிறது.

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia