டெக்ஸ் வில்லர் - The Danger Ranger from Texas!

வெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும்! அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன்! ;)

>>> சிறு நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (!!!), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ...

... "டைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்" சகிதம், "நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் " அணிந்து; தனியாகவோ... அல்லது, "சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'" உடனோ...

... சில சமயங்களில், "தான் வழிநடத்தும் நவஜோ செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த விசுவாசி 'டைகர் ஜாக்'" மற்றும் "தனது நவஜோ இன மனைவி 'லிலித்' வழி பிறந்த புதல்வன் 'கிட் வில்லர்'" - இவர்களுடன் இணைந்தோ...

... ரந்த பாலைவனங்கள் மற்றும் புல்வெளிகளின் ஊடே குதிரைகளில் தளராது பயணித்து; வேகவைத்த ஆப்பிள் மற்றும் பீன்ஸூடன், வறுத்த கறியும் உண்டு இளைப்பாறி; வழியில், தாக சாந்திக்கு காப்பி, விஸ்கி (?!), பீர் வகையறாக்களை தொண்டையில் சரித்துக் கொண்டு...

... "!!! கீர்த்தி வாய்ந்த ரேஞ்சர் வில்லர் வருகிறாரா? விவேகமானவர், அதே சமயம் விரியனை விட வில்லங்கமானவர் ஆயிற்றே அவர்...?!" என்று எதிரிக் கும்பலில் இருக்கும் ஒருவனே பயபக்தியுடன் ஹீரோ புகழ் பாடிக் கொண்டிருக்கும் வேளையில்...

... ழியெங்கும் "கும், ணங், சத், டுமீல், டிஷ்க்யூம், டமால்" போன்ற பல்வேறு சவுண்ட் எஃபெக்ட்டுகளின் பின்னணியில் சண்டையிட்டு; தனது ட்ரேட்மார்க் நக்கல் மற்றும் பன்ச் டயலாக்குகளைப் உதிர்த்தவாறே எதிரிகளின் தாடைகளைப் பெயர்த்து...  

... ஸ்திரி கலையாத மஞ்சள் சட்டையில், கொஞ்சமும் தூசு படாமல் அதிரடி செய்வது தான், "இரவுக் கழுகு" என்று நவஜோக்களால் அன்புடன் அழைக்கப் படும் 'டேஞ்சர் ரேஞ்சர்' டெக்ஸ் வில்லரின் ஸ்டைல்! <<<
இப்போது கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்ளுங்கள்... இல்லை... இல்லை, இது எவரோ ஒரு தெலுங்கு பட ஹீரோ பற்றிய அறிமுகம் அல்ல....

பாகவதர் காலம் தொடங்கி, இன்றைய பவர் ஸ்டார் காலம் வரை வெளிவந்திருக்கும், டெக்ஸ் வில்லரின் அறுநூற்றுச் சொச்ச கதைகளிலும் மனிதர் இதையே தான் தவறாது செய்து வருகிறார்! எழுத்தாளர் போனெல்லி, ஓவியர் காலெப்பினி இவர்களின் படைப்பில் 1948-ம் ஆண்டு அறிமுகமான இவரது காமிக்ஸ்கள் - 66 ஆண்டுகளாக இத்தாலியிலும், 28 வருடங்களாக தமிழ்நாட்டிலும் மங்காத வரவேற்பு பெற்று வருவது இந்த ஒரு காரணத்தினால் தான்!

டெக்ஸ் வில்லர் ஒரு மாஸ் மசாலா மன்னர் - கொடுத்த காசுக்கு, "அஞ்சு காமெடி சீன், பத்து பன்ச் டயலாக், முப்பது Gun ஃபைட்,  எதிரிகளின் தாடைகளில் சுமார் ஒரு நாற்பது ஐம்பது 'கும்'-மாங் குத்துக்கள்" - இதைத் தவிர அவரது ரசிகர்கள் பெரிதாய் ஏதும் எதிர்பார்த்து விடப் போவதில்லை! வெளியான சில மாதங்களில் அவரது புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடுவதின் ரகசியம் இதுவே! இதுவரை எந்த கதையிலும் அவர் பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டதில்லை என்பது மட்டும் தான் ஒரே குறை - பெண்களை விரலால் கூட தொட மாட்டார் நமது வில்லர்!

இவரை தமிழில் அறிமுகப் படுத்திய பெருமைக்குரிய லயன் காமிக்ஸ் நிறுவனம், தனது 30-வது ஆண்டு மலரான, 900 பக்க "மேக்னம் ஸ்பெஷலில்" ( பார்க்க: LMS - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்! ), நான்கில் ஒரு பகுதியை டெக்ஸ் வில்லர் கதைக்கென ஒதுக்கி, முடி சூட்டி அழகு பார்த்திருக்கிறது - முழு வண்ணத்தில்! "சட்டம் அறிந்திரா சமவெளி" - தலைப்பே கதை சொல்கிறதல்லவா?! என்னது விளக்கமாக கதை சொல்ல வேண்டுமா? சரியாப் போச்சு, பதிவின் இரண்டாம் பத்தியை (பத்திகளை?) இன்னொரு முறை படியுங்கள் - அது தான் கதை! :)

கதை என்னவோ வழக்கமானது தான் என்றாலும் - பிரம்மிக்க வைக்கும் ஓவியங்களும், கதாபாத்திரங்களின் முகபாவங்களும், டெக்ஸ் & கார்ஸன் இடையேயான நக்கல் வசனங்களும் அதை சுவாரசியமாக்குகின்றன. பொதுவாக, ஃபிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் ஓவியங்களின் மிதமான, இயல்பான வண்ணச் சேர்க்கையுடன் ஒப்பிடும் போது - இத்தாலியக் கதைகளின் வண்ணக் கலவைகள், சற்று அடர்த்தியாக, கருமை நிறம் தூக்கலாக இருக்கும்! கருப்பு வெள்ளைக்கு என்றே படைக்கப் பட்ட ஓவியங்கள் அவை என்பது ஒரு காரணம்! ஆனால், இக்கதையின் ஓவியங்களுக்கு மிகவும் ரசிக்கத் தக்க வகையில் வண்ணமேற்றி இருக்கிறார்கள்!

இத்தனை வருடங்கள், டெக்ஸ் வில்லரை கருப்பு-வெள்ளையில் மட்டுமே பார்த்து (ஒரே ஒருமுறை தவிர) காய்ந்து போயிருந்த அவரது தமிழ்நாட்டு ரசிகப் பட்டாளத்தை, கண்ணைப் பறிக்கும் இந்த வண்ண ஓவியங்கள் கூடுதல் குஷிப் படுத்தும் என்றால் அது மிகையல்ல! அந்த காரணத்தினாலேயோ என்னவோ, அவ்வப்போது தொடருக்கான ஓவியர் மாறுகையில், டெக்ஸின் தோற்றம் லேசாக மாறினாலும் முகம் சுளிக்கும் தீவிர ரசிகர்கள், இம்முறை அவரது முக அமைப்பு வெகுவாக மாறி இருந்தும் வாயே திறக்கவில்லை - விசில் அடிப்பதற்குத் தவிர! மொத்தத்தில், டெக்ஸ் வில்லர் - காமிக்ஸ் உலகின் முடி சூடிய சூப்பர் ஸ்டார்!

பின்குறிப்பு: அலட்டிக் கொள்ளாமல் அப்ளாஸ் வாங்கும் நாயகர்களுக்கு இடையே; யதார்த்தத்தின் எல்லை கோடுகளில் சிக்கிக் கொண்டு, அல்லல் பட்டே அப்ளாஸ் அள்ளும் நாயகர்களும் இருக்கத் தான் செய்வார்கள் இல்லையா?! அந்த வகையில் காமிக்ஸ் உலகின் முடி சூடா சூப்பர் ஸ்டார் லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி ஆவார்! தமிழ்நாட்டில் கேப்டன் டைகர் (!) என்ற பெயரில் அழைக்கப் படும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள, எனது இந்த பழைய்ய்ய்ய பதிவைப் படியுங்கள்: முரட்டுக் கௌபாய் - லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி - Man with a Strange Name!

இந்த இரண்டு பதிவுகளும் எழுதப் பட்டிருக்கும் விதத்தை வைத்தே டெக்ஸ் மற்றும் ப்ளூபெர்ரி, இவர்களுக்கு இடையேயான அடிப்படை வித்தியாசத்தை நீங்கள் கணித்து விடலாம்! டெக்ஸ் ஜாலி பேர்வழி, ப்ளூ படு சீரியஸ் ஆசாமி! :)
-சுபம்-
Image Credits: Sergio BonelliLion - Muthu Comics

கருத்துகள்

  1. என்னது விளக்கமாக கதை சொல்ல வேண்டுமா? சரியாப் போச்சு, பதிவின் இரண்டாம் பத்தியை (பத்திகளை?) இன்னொரு முறை படியுங்கள் - அது தான் கதை! :)

    Lol...!

    பதிலளிநீக்கு
  2. என்னங்கோ... டெக்ஸ் வில்லர் பற்றி புதுசா ஏதும் சொல்வீங்கன்னு வந்தா...

    இருந்தாலும் சுவாரஸ்யமாய் எழுதியிருந்தீர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா :) இது ஏற்கனவே டெக்ஸ் மற்றும் தமிழ் காமிக்ஸ் பற்றி பரிச்சயம் உள்ளவர்களுக்கான பதிவு அல்ல நிஜாம் சார்! :) புதிய வாசகர்களுக்கான அறிமுகப் பதிவு - அவ்வளவே!

      நீக்கு
  3. //மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பலஎதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ...//
    //கிழட்டு சகா 'கிட் கார்சன்'" உடனோ...//
    //'கிட் வில்லர்'" - இவர்களுடன் இணைந்தோ...//
    //சாந்திக்கு காப்பி, விஸ்கி (?!), பீர் வகையறாக்களை தொண்டையில் சரித்துக் கொண்டு...//
    //எதிரிக் கும்பலில் இருக்கும் ஒருவனே பயபக்தியுடன் ஹீரோ புகழ் பாடிக் கொண்டிருக்கும் வேளையில்...//
    //நக்கல் மற்றும் பன்ச் டயலாக்குகளைப் உதிர்த்தவாறே எதிரிகளின் தாடைகளைப் பெயர்த்து... //
    கலக்கும் காமிக்ஸ் கதாபாத்திரம் யார் என....
    இப்படி குறிப்புகள் கொடுத்து வண்டுகளை டிவியில் கூட க்விஸ் கேள்விகள்
    கேட்கமுடியாத அளவிற்கு டெக்ஸ் புகழ் LMS முலம் பரவத்தொடகிவிட்டது,
    இல்லையா நண்பரே !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. LMS-ல் டெக்ஸ் கலரில் வந்திருப்பது ஸ்பெஷலான விஷயம் தான் இல்லையா?! :)

      நீக்கு
  4. 'தல' டெக்ஸுக்காண்டி ஒரு பதிவா 'ஆஹா'னு நம்ம்ம்பிப் படிக்க வந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சுது அந்தப் பயபுள்ள டைகரின் ரசிகக் கண்மணிகள் காசு கொடுத்து உங்களை எழுத வச்சிருக்காங்க போலிருக்கு. ம்ம்... நாங்களும் உண்டியல்ல காசு சேர்த்துவோம்... உண்டியல் நிறைஞ்சதுமே அதைத் தூக்கிட்டு உங்ககிட்ட ஓடிவருவோம். தயாரா இருங்க! (டைம் கிடைக்கும்போது இப்போர்ந்தே கொஞ்சம் கேவலமான வார்த்தைகளை தேடிப்பிடிச்சு எழுதக் கத்துக்கோங்க. எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல)

    ஆங், அடுத்த வருஷம் 'தல' டெக்ஸின் 700 பக்க ஸ்பெஷல் வருதே! அதைச் சொல்ல மறந்துட்டீங்களே... 700 பக்கத்துக்கு ஒரே கும், ணங், டமார், டுஷ் தான் !
    :) :)
    டெக்ஸ் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏங்க... அவ்ளோ மோசமாவா இருக்கு?! நல்ல விதமாத் தானே எழுதி இருக்கேன்?! :-/

      ஒருவேளை சிண்டு முடிக்கப் பாக்கறீங்களோ? ;)

      எது எப்படி இருந்தாலும், அந்த காணிக்கை அமௌண்டை ப்ளேடு நல நிதிக்கு தவறாமல் அனுப்பி வைக்கவும்! :P

      பி.கு: டெக்ஸ் & ப்ளூ - இந்த இருவருக்குமே நான் விசிறி தான்.. என்ன ஒன்று... தீவிரமாக இல்லாமல், கொஞ்சம் மெதுவாகத் தான் விசிறுவேன் (இருவருக்கும்)! ;)

      நீக்கு
  5. ஒரு டவுட்டு. ரொம்ப நாளாக உட்கார்ந்தபடி லாரி ஓட்டுபவர்களுக்கு பைல்ஸ் வருவதுபோல நெடுந்தொலைவுகளுக்கு அடிக்கடி குதிரையில் அமர்ந்து பயணிக்கும் டெக்ஸுககு மூலம், பௌத்திரம் ஏதும் ஏற்படாதா? :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன? குதிரை மூலம் பயணித்தால் மூலம் வருமா?! அப்புறம் இன்னொரு டவுட்டு, ரௌத்திரமாக இருப்பவர்களுக்கு பௌத்திரம் வருமா? :P

      குதிரை மீதேறி பயணித்தவர்களை விட்டுத் தள்ளுங்கள்... நாட் கணக்கில் ஓடி ஓடியே உயிர் நீத்த அந்த அப்பாவிக் குதிரைகளை நினைத்தால் தான் பாவமாக உள்ளது! அந்த வகையில், குதிரைகளுக்கு மரியாதை செலுத்திய ஒரே நபர் திருவாளர் லக்கி லூக் தான்... இல்லையா?! "ஓடிக் களைத்து விட்டது, கருணை அடிப்படையில் கொல்கிறேன்" என்று சாக்கு சொல்லி, தனக்கு விசுவாசமாக இருந்த குதிரையை பொசுக் என்று சுட்டுத் தள்ளாமல், கடைசி வரை ஒரே குதிரையுடன் காலத்தை தள்ளியவர் அவர் மட்டும் தானே?! :)

      நீக்கு
    2. // நாட் கணக்கில் ஓடி ஓடியே உயிர் நீத்த அந்த அப்பாவிக் குதிரைகளை நினைத்தால் தான் பாவமாக உள்ளது! //

      Same blood. அவை அநியாயத்துக்கு துப்பாக்கி சண்டையில் மாண்டும், மிரண்டும் போகும் அவலம்வேறு.

      லக்கி லூக் எல்லாவற்றிலும் Clean. ஒரு கௌபாய்க்கு ஒரு குதிரை என்ற உயரிய கொள்கையின் எடுத்துக்காட்டு :D

      நீக்கு
  6. டெக்ஸ் வாழ்க ...வாழ்க .....


    டைகர் கொஞ்சூண்டு வாழ்க ..... :-)

    பதிலளிநீக்கு
  7. வெகு நாட்களுக்கு பிறகு KS-ன் trade mark பதிவு ;) அதுவும் தல டெக்ஸ்-யைப் பற்றி .. மிக அருமை...

    ஆனால் இடையிடையே நக்கல், நையாண்டி, வஞ்சப் புகழ்ச்சி நெடியுடன்.. முக்கியமாக தெலுங்குப் பட ஹீரோக்களுடன் ஒப்பிட்டதற்க்காக எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்

    இருந்தாலும் சூரியனை யாரும் மறைக்க இயலாது .. அது போலத் தான் டெக்ஸ்

    டெக்ஸ் புகழ் ஓங்குக !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இடையிடையே நக்கல், நையாண்டி, வஞ்சப் புகழ்ச்சி//
      அப்படியா..ஆஆஆ! :D

      //தெலுங்குப் பட ஹீரோக்களுடன் ஒப்பிட்டதற்க்காக//
      என்ன செய்ய, தலைவரது டிரெஸ்ஸிங் சென்ஸ் அப்படி! :P

      நீக்கு
  8. சொல்ல மறந்துட்டேன் ....... பரட்டை எப்பவுமே ஒழிக :)

    பதிலளிநீக்கு
  9. // "ஆ!!! கீர்த்தி வாய்ந்த ரேஞ்சர் வில்லர் வருகிறாரா? விவேகமானவர், அதே சமயம் விரியனை விட வில்லங்கமானவர் ஆயிற்றே அவர்...?!" என்று எதிரிக் கும்பலில் இருக்கும் ஒருவனே பயபக்தியுடன் ஹீரோ புகழ் பாடிக் கொண்டிருக்கும் வேளையில். //

    ha ha LOL, very true.

    பதிலளிநீக்கு
  10. கார்த்திக்,

    இந்த பதிவை வரிக்குவரி ரசித்து படித்தேன் ! காரணம் வரிக்கு வரி இழையோடும் அளவான நய்யாண்டி ! பதிவின் ஆரம்பத்தை சிறு சிறு பத்திகளாய் பிரித்து " டெம்போ " கூட்டிய ஸ்டைல் !

    இல்லை... இல்லை, இது எவரோ ஒரு தெலுங்கு பட ஹீரோ பற்றிய அறிமுகம் அல்ல....

    பாகவதர் காலம் தொடங்கி, இன்றைய பவர் ஸ்டார் காலம் வரை வெளிவந்திருக்கும்,

    டெக்ஸ் வில்லர் ஒரு மாஸ் மசாலா மன்னர் - கொடுத்த காசுக்கு, "அஞ்சு காமெடி சீன், பத்து பன்ச் டயலாக், முப்பது Gஉன் ஃபைட், எதிரிகளின் தாடைகளில் சுமார் ஒரு நாற்பது ஐம்பது 'கும்'-மாங் குத்துக்கள்" - இதைத் தவிர அவரது ரசிகர்கள் பெரிதாய் ஏதும் எதிர்பார்த்து விடப் போவதில்லை! ( டெக்ஸ் வில்லரை வச்சி நம்ம மாஸ் ஹீரோக்களை கவுத்திட்டீங்களே பாஸ் ! )

    ஹா ! ஹா ! ஹா !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  11. சார் ,நான் உங்கள் எழுத்து நடையை தீவிரமாக ரசிக்கும் முகம் தெரியாத ரசிகன்.விஜயன் சாருக் அடுத்தபடியாக உங்கள் பதிவைத்தான் ரசித்து படிக்கின்றேன்.தற்போது அதிகம் பதிவு போடதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது .மீண்டும் முன்பு போல் பதிவுஇடமுடியுமா? ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே... நிரந்தரமாக பதிவு போடாமலிருக்கும் எண்ணம் ஏதும் இல்லை! I'll be back :)

      நீக்கு
  12. 2014.தான் முடிந்து விட்டதே!2015ல் நிறைய பதிவு போடுவேன் என்று (தீர்மானம்)சபதம் போடுங்களேன்!!!

    பதிலளிநீக்கு
  13. டெக்ஸ் வில்லரின் கதைகளைப்பற்றி நன்றாக அறிந்துபோதும் நீங்கள் சுவராசியமாக எழதியது நன்றாக இருந்தது.டெக்ஸின் தீவிர ரசிகையான என்மனைவியும் பாராட்டினாள்

    பதிலளிநீக்கு
  14. ஈரோடு புத்தககண்காட்சியில் உங்களை சந்திக்க ஆவலுடன் வந்தேன் ஆனால் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தொடர் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே! சவுத் இந்தியா சிறியது, சந்திக்கலாம்! :)

      நீக்கு
  15. கார்த்திக்,

    உங்களோட எழுத்துக்களுக்கு எத்தனை விசிறிகள் இருக்காங்கன்னு இன்னுமா உங்களுக்குப் புரியலை? ம்... சீக்கிரம் ஆவட்டும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்மருக்கு விசிறிகள் மட்டும் போதாது என்பது தாங்கள் அறியாததல்லவே! :P (இப்படி மையமா உளறி வெப்போம்!) :D

      நீக்கு
    2. சில நாட்களுக்கு முன்னர் தான் காமிக்ஸ் குழயடி சண்டை பதிவு படித்தேன்.ஒரு போராளி ஜென் துறவி போல் மாறியது அதிசயம்தான்.

      நீக்கு
    3. உங்களை மனதில் வைத்துதான்,மோசஸின் பத்து கட்டளைகள் போல் இத்தாலி விஜய் அவர்களின் கட்டளையையும் ஆசியும் சேர்த்து பதிவிடுகறேன்.கருத்தை பதிவிட,பெட்ரோல் குடோனில் எரியும் மெழகுவர்தியை எடுத்துசெல்வது போல் உள்ளது.

      நீக்கு
  16. மி.ம.பற்றி ஒரு பதிவை எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  17. நண்பரே!ஒரு காலத்தில் சென்னை பின்னி மில்,இந்தியாவிலே மிகப்பெரிய பிரமாண்டமானதொழிற்சாலைகளில் ஒன்றாகய்,அங்கு வேலை கிடைப்பதே குதிரை கொம்பாய் இருந்த காலம்போய் ,இன்று பிரமாண்டமும் ,நினைவுகளும் மட்டுமே மிச்சம்.அதை போலவே உங்கள் தளத்தை உணருகிறேன். இது தவறா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில், தொடர்ந்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து வருவதற்கு மிக்க நன்றி வெங்கட்! ப்ளேட்பீடியா, துண்டு பீடியாக மாறிப்போனது காலத்தின் கட்டாயம்! :D மற்ற பணிகளின் சுமை சற்று குறைந்ததும், நிச்சயம் வலைப்பூ பக்கம் திரும்புவேன்.. உங்கள் அன்புக்கு நன்றி!

      நீக்கு
  18. வேலையின் காரணமாக வர முடியவில்லை என்றால் தப்பே இல்லை.வேலைதான் முதலில் சாரி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia