முரட்டுக் கௌபாய் - லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி - Man with a Strange Name!

தோற்றத்திலும் சரி, ஆளுமையிலும் சரி - ப்ளூபெர்ரி-யைப் பார்க்கும் போதெல்லாம் என் ஞாபகத்திற்கு வரும் நபர் 'கிளின்ட் ஈஸ்ட்வுட்'தான்! ஒற்றுமைகள் உருவத்தோடு நின்று விடுவதில்லை; கிளின்ட்டின் டாலர் ட்ரையாலஜி படங்களுக்கு சற்றும் சளைக்காதது ப்ளூபெர்ரியின் வெஸ்டர்ன் காமிக்ஸ் வரிசை! ஜிம்மி என்ற பெயர் கொண்ட தனது குடிகார கிழட்டு டெபுடியுடன் இணைந்து, வன்மேற்கில் இவர் நிகழ்த்தும் அதிரடி சாகசங்கள், வெஸ்டர்ன் ரசிகர்களை குதூகலிக்க வைக்கும்! வழக்கமான 'டமால், டுமீல்' ரக கௌபாய் கதைகள் போலன்றி; அழுத்தமான கதையம்சத்தையும், பல வரலாற்று விவரங்களையும் இவரது காமிக்ஸ்கள் கொண்டிருக்கும்!

வெஸ்டர்ன் படங்கள் மற்றும் காமிக்ஸ் மீதான ஈர்ப்பு சிறு வயதிலேயே  தோன்றியதற்கு ராணி காமிக்ஸ்தான் முக்கிய காரணம் - அதில் தான் அடிக்கடி கௌபாய் / வெஸ்டர்ன் கதைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்!

கௌபாய்களை விட, அவர்களின் எதிரிகளாக காட்டப்பட்ட செவ்விந்தியர்கள் மீதுதான் எனக்கு ஈர்ப்பு அதிகம்! பெயரில் இந்தியர்கள் என இருந்ததால் அவர்களும் நம்மூர் ஆட்கள்தான் என்ற தப்பான புரிதலில் இருந்த பால்ய காலம் அது. காமிக்ஸ்களிலும், எங்கள் அப்பா அரிதாக அழைத்துச் சென்ற வெஸ்டர்ன் சினிமாக்களிலும், செவ்விந்தியர்கள் வீரமிக்கவர்கள் ஆனால் மூளையற்ற வெறியர்கள், கொலைகாரர்கள் என்ற ரீதியிலேயே சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். சற்று விவரம் தெரிந்த பிறகு, உண்மையான வில்லன்கள் அமெரிக்காவை ஆக்ரமித்த வெள்ளையர்கள்தான் என்பதும், செவ்விந்தியர்கள் குழுக்களாக பிரிந்து தங்கள் பகுதி நிலத்தை பாதுகாக்க போராடி உயிர் நீத்த அப்பாவி பூர்வ குடிகள் என்பதும் தெளிவாக புரிந்தது!

அதனாலோ என்னவோ, எண்பதுகளின் பிற்பாதியில் லயன் காமிக்ஸ் மூலமாக  'டெக்ஸ் வில்லர்' அறிமுகமானபோது மனதில் 'பச்சக்' என ஒட்டிக்கொண்டார். செவ்விந்திய நவஜோ இன தூதராக, அவர்கள் உரிமைக்கு பாடுபடும் நாயகராக சித்தரிக்கப்பட்டிருப்பார் (இருப்பினும் வெள்ளையர்களே உயர்வாக காட்டப்படுவார்கள் என்பது வேறு விஷயம்!). டெக்ஸைப் பற்றி வேறு ஒரு  பதிவில் பார்ப்போம்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து, தொண்ணூறுகளின் பிற்பாதியில், என் காமிக்ஸ் ஆர்வம் மங்கத் தொடங்கிய கால கட்டத்தில் - லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி, முத்து காமிக்ஸ் 'தங்கக் கல்லறை' இதழ் மூலமாக, 'கேப்டன் டைகர்' என்ற பெயரில் அறிமுகமானார். ஆச்சரியகரமாக, இப்புத்தகம் என் சேகரிப்பில் இருந்தும், ப்ளூபெர்ரி என்ற டைகர், ஐந்து வருடங்கள் முன் வரை என் நினைவில் இருந்திருக்கவில்லை. வேலையில் அமர்ந்து, காமிக்ஸ் சகவாசம் இன்றி கழிந்த பத்து ஆண்டுகளின் முடிவில், கடந்த 2007-ஆம் ஆண்டு லயன் அலுவலகம் சென்று, அவர்கள் கைவசம் இருந்த அனைத்து பிரதிகளையும் அள்ளிக்கொண்டு வந்தேன்! அவற்றில் இருந்த ப்ளூபெர்ரி கதைகளை படித்தபோதுதான், டெக்ஸூக்கு நிகரான ஆளுமை கொண்டிருந்த ப்ளூபெர்ரியும் என் மனதில் 'பச்சக்' என்று ஒட்டிக்கொண்டார்


சவரம் செய்த முகத்துடன் பளிச்சென்று வலம் வரும் வழக்கமான கௌபாய் நாயகர்கள் போலன்றி, முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கும் ஒரு வார தாடியுடன், காடு மேடுகள் சுற்றித் திரியும் கரடு முரடான மனிதர் ப்ளூபெர்ரி! வசதியான குடும்பத்தில் பிறந்து, துவக்கத்தில் கருப்பின அடிமை முறையை ஆதரித்தவர் தான் இவரும்! செய்யாத கொலைக்காக பழி சுமத்தப் பட்டு, அதில் இருந்து தப்பியோடி, கருப்பினத்தை சேர்ந்த ஒருவரால் காப்பாற்றப் பட்டு மனம் மாறுகிறார்! தெற்கை சேர்ந்தவராக இருப்பினும் நான்கு ஆண்டுகள் நடந்த அமெரிக்க சிவில் போரில் தென்மாநில கான்ஃபெடரேட்  படைகளுக்கு எதிராக செயல்பட்டு, போர் முடிந்ததும் அமெரிக்க குதிரைப்படையில் லெஃப்டினன்டாக பணியில் அமர்கிறார்.

கருப்பின மக்கள், செவ்விந்தியர்கள், வெள்ளையர்கள் என்ற எந்த ஒரு பாகுபாட்டையும் பாராமல், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது அவரது வாடிக்கையாக மாறுகிறது! தனது சமயோசித புத்தியாலும், செயல்திறனாலும் பல வெற்றிகளை தேடித் தந்தாலும்; தெற்கைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினாலும், கொஞ்சம் அடாவடிப் பேர்வழி என்பதாலும் மேலதிகாரிகளின் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் வஞ்சிக்கப்படும் பரிதாப நாயகர் இவர். ப்ளூபெர்ரியின் கதைகள் யாவும் மேற்கண்ட சம்பவங்களை / குண இயல்புகளை அடிப்படையாக வைத்தே பின்னப் பட்டிருக்கும்.

ப்ளூபெர்ரியின் பிரதான படைப்பாளிகள் - Jean-Michel Charlier (கதாசிரியர்), Jean Giraud (கதாசிரியர் + பிரதான ஓவியர்) - இருவருமே தற்போது உயிருடன் இல்லை! Moebius என்ற புனைப்பெயரில் அறியப்படும் இதன் ஓவியர், ப்ளூபெர்ரியை வரைந்தது 'Jean-Paul Belmondo' என்ற ஃபிரெஞ்சு  நடிகரின் (இடது) தோற்றத்தை மாதிரியாக வைத்து! Moebius ப்ளூபெர்ரியை வரையும் அட்டகாசமான இந்த வீடியோக்களைப் பாருங்களேன் - ஜீனியஸ்!:

ப்ளூபெர்ரியை வைத்து ஒரு ஃபிரெஞ்சு படமும் வந்திருக்கிறது! இருப்பினும் கேள்விப்பட்டவரையில் அப்படம் ப்ளூபெர்ரியின் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை!

ப்ளூபெர்ரி Vs கிளின்ட் ஈஸ்ட்வுட் உருவ ஒற்றுமை!
ப்ளூபெர்ரி காமிக்ஸ் சித்திரங்களை முழுப் பக்கமாக பார்த்தால் ஒழுங்கின்றி கொசகொசவென்று இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் ஒவ்வொரு Panel-ஐயும் உற்று நோக்கினால் அவற்றில் உள்ள நுண்ணிய விவரங்கள் ஆளை அசரவைக்கும். ஒரே ஒரு குறை, ப்ளூபெர்ரி மற்றும் ஜிம்மியின் முகங்கள் ஒரே கதையின் ஒவ்வொரு பேனலிலும் ஒவ்வொரு விதமாக மாறி 'சில சமயம்' அவர்களை இனம் காணுவதில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.

ப்ளூபெர்ரியின் சிறந்த கதைகளில் ஒன்றான தங்கக் கல்லறையின், முதற்பதிப்பின், முதல் பாகத்தை அது வெளிவந்த சமயத்தில் 'படித்து மறந்ததோடு' சரி! அதன் இரண்டாம் பாகம் என்னிடம் இல்லாததால் அதனை முழுதாய் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது! சமீபத்தில் வெளியான இதன் 'முழு வண்ண மறுபதிப்பு' அந்தக் குறையைத் தீர்த்திருக்கிறது! சுருக்கமாக சொன்னால் வெஸ்டர்ன் ரசிகர்கள் தவறவிடக் கூடாத அட்டகாசமான இதழ் இது! இதன் விமர்சனத்தை விரைவில் எதிர்பாருங்கள்! இந்த இதழ் தற்போது ebay-யில் கிடைக்கிறது!

22 comments:

 1. ;-)தலைவர் புளூபெர்ரி குறித்த சிறப்பான பதிவுக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 2. சூப்பர் கார்த்திக்! எனக்கு மிகவும் பிடித்த கேப்டன் டைகரை அழகாக விமர்சித்துள்ளீர்கள். செவ்விந்தியர்களின் பரிதாபமான வீரமான வாழ்க்கையை நமக்கு தமிழில் அளித்த விஜயன் சாருக்கும் நன்றி. இல்லையென்றால் தமிழர் நிலை அறியாத வடமாநிலத்தவர் போல நமக்கு நம் வரலாற்று அறிவில் பதிந்திருப்பார்கள் சிவப்பிந்தியர்கள்!

  ReplyDelete
  Replies
  1. //தமிழர் நிலை அறியாத வடமாநிலத்தவர் போல நமக்கு நம் வரலாற்று அறிவில் பதிந்திருப்பார்கள் சிவப்பிந்தியர்கள்//
   உண்மை!!!

   Delete
 3. ஆஹா!
  முழுப்பதிவையும் படித்து முடித்தபோது, எதற்காகவோ செய்யப்பட்ட பரிகாரப் பதிவுபோல என் எண்ணங்களில் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை. ;-)

  இவ்வளவு வரலாற்றுப் பிண்ணணி கொண்ட கதைகளையா நம் தாய்மொழியில் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் ஆச்சர்யம் அதிகரிக்கிறது!

  தகவல்களுக்கு நன்றி கார்த்திக்!

  ReplyDelete
  Replies
  1. இப்படி எல்லாம் தப்பு தப்பா யோசிக்கப்படாது! ;) ஒவ்வொரு பிரபல காமிக்ஸ் நாயகனுக்கும் ஒரு சிறப்பு பதிவு என்ற அடிப்படையில் இட்ட பதிவு இது! ;) வரலாற்று காமிக்ஸ் ஒரு பக்கம் இருக்கட்டும், ஸ்கூல்ல அமெரிக்க வரலாறு படிச்சது ஞாபகம் இருக்கா?! :) :) :)

   Delete
  2. அமெரிக்க வரலாறா? ஓ.,. ஞாபகம் இருக்கே! அதில்கூட நம்ம டெக்ஸ் வில்லர் ஒரு கோச் வண்டி கொள்ளையனை சுட்டு வீழ்த்துவார்தானே? :-D

   Delete
  3. அடப்பாவிகளா, வரலாற்று புக்குக்கு நடுவுலே லயன் காமிக்ஸ் வச்சு படிச்சா விளைவு இப்படி பயங்கரமாத்தான் இருக்கும்! ;)

   Delete
 4. முன்னோட்டம் பலமாக இருக்கிறது.
  மெயின் பிச்சர் காக ஆர்வமுடன் இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஓவர் எதிர்பார்ப்பு, விஸ்வரூப ஏமாற்றம்! :D
   (கருத்து உபயம்: சந்தானம்!)

   Delete
 5. இன்று காலையில் தான் "Meckenna's gold" படத்தை பார்த்தேன். டைகரின் தங்க கல்லறை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அந்த ஹீரோவுடைய சித்தரிப்பு டைகருடயது மாதிரியே இருந்தது. ஆனால் டைகர் அளவுக்கு அழகாக (:-D ) இல்லை. முதலில் இருந்து கடைசி வரை மனுஷன் இப்போதான் சலூனுக்கு போயிட்டு வந்த மாதிரி இருந்தார். அந்த படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும். வில்லன் கொலராடோ சான்சே இல்லை.

  மூன்று குதிரை வீரர்கள் (லியோ, ஃப்லிப் & சைமன்) அந்த காலத்தில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். இப்போது அவர்களுடைய புத்தகங்கள் வைத்திருக்கிரர்களா?

  //இதன் விமர்சனத்தை விரைவில் எதிர்பாருங்கள்//

  I am Waiting (துப்பாக்கி படத்தின் பாதிப்பு :-D)

  ReplyDelete
  Replies
  1. I'll be back! பில்லா பாதிப்பு அல்ல! ;)

   Delete
 6. அருமையான பதிவு!

  Clint East wood is my child-hood (still :) favourite hero. ஒப்பீடு அருமை

  ReplyDelete
  Replies
  1. டர்ட்டி ஹாரி ஆகவும் கலக்கி இருப்பார்! :)

   Delete
 7. //ப்ளூபெர்ரியின் தோற்றம் வரையப்பட்டது 'Jean-Paul Belmondo' என்ற ஃபிரெஞ்சு நடிகரை மாதிரியாக வைத்து// அருமையான தகவல் mate. Well done

  ReplyDelete
 8. Clint East wood எனக்கு மிகவும் பிடித்த வெஸ்டேர்ன் ஹீரோ. அவருடைய சூப்பர் ஹிட் movies collection எல்லாம் வைத்துள்ளேன். good bad ugly making அண்ட் background மியூசிக் of தி movie இஸ் எவர் கிரீன். அவர் cigaratte பற்ற வைக்கும் ஸ்டைலைதான் நம்ம சூப்பர் ஸ்டார் follow பண்றார் :)

  ReplyDelete
  Replies
  1. சிலிர்க்க வைக்கும் தீம் மியூசிக் அது!!! :)

   Delete
 9. கேப்டன் டைகரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக உங்களுக்கு நன்றிகள் கார்த்திக். இவரை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு இனி ஒரு கௌபாய் கதை வருமா எனத்தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. டைகர் ரசிகர் மன்றத்தில் நீங்க கேப்டனா, லெப்டினன்ட்டா ?! :) :) :) டெக்ஸ் பெஸ்டா, டைகர் பெஸ்டான்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் போல?! :)

   Delete
 10. டைகர் பற்றிய விரிவான தகவல்களை தமிழில் தொகுத்து வழங்கியதற்கும், உங்களின் ஆர்வமிகு உழைப்பிற்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன மாற்றங்களை (அடிமை முறை, அடாவடிப் பேர்வழி & ப்ளூபெர்ரி திரைப்படம்) செய்து விட்டேன் சௌந்தர்! :)

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia