Skyfall - 2012 - ஐம்பதிலும் ஆக்ஷன் வரும்!

கர்நாடகா உதயமான நாளில், பலத்த Rain Fall-க்கு இடையில் என்னுடைய பழைய ஃபியட் பெட்ராவில் பெட்ரோல் நிரப்பி, Skyfall பார்க்க ஃபன் சினிமாஸ் ஸ்க்ரீன் ஒன்னில் நுழைந்த போது மணி பத்து அடித்து 007 நிமிடங்கள் கடந்திருந்தன! ஜேம்ஸ் பாண்ட் ரயிலின் மேற்கூரையில் தடதடவென ஓடிக்கொண்டிருந்தார் - என் தலையில் இடி இறங்கியது, இதைத்தான் Skyfall என்பார்களோ?!. எப்போதும் படம் துவங்கும் முன்னர் குறைந்தது கால் மணி நேரம் விளம்பரம் ஓட்டும் ஃபன் சினிமாஸ் நிர்வாகம் நான் லேட்டாக சென்ற சமயம் பார்த்து பத்து மணிக்கே பாண்ட் படத்தை டான் என்று போட்டு எனக்கு பன் கொடுத்துவிட்டது! பத்து மணி காட்சி டிக்கட் விலை ₹220, பதினோரு மணி காட்சி டிக்கட் விலையோ ₹350. பத்து மணி காட்சி பார்ப்பதால் மிச்சம் பிடிக்கும் ₹130-க்கு பாப்கார்ன்+பெப்சி வாங்கலாம் என்ற என் மதியூகத்தால் பலியானது அந்த மோட்டார் சைக்கிள் சேஸிங்! இப்படியாகத்தான் அனைவராலும் சிலாகிக்கப்படும் பாண்ட் படத்தின் ஆரம்பக் காட்சியை முதன் முறையாக தவற விட்டேன்!

MI6-இன் தலைவர் M-ஆல் கைகழுவப்பட்ட இரண்டு உளவாளிகள் - முதலாமவர் சில்வா (Bardem) - MI6-ஐ, குறிப்பாக M-ஐ அழிக்க நினைக்கிறார். மற்றவர் ஜேம்ஸ் -  தேசபக்தி மிகுதியால் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அதை முறியடிக்கப் போராடுகிறார். விமர்சகர்கள் பாணியில் சொன்னால் உள்ளங்கையில் எழுதி விடக்கூடிய கதை. அப்படிப் பார்த்தால் எந்த ஒரு படத்தின் கதையையும் உள்ளங்கையில் எழுதி விட முடியும் இல்லையா?! அந்தக் கதையை சுவாரசியமாக எடுத்திருக்கிறார்களா இல்லை சுமாராக எடுத்திருக்கிறார்களா என்பதுதான் கேள்வி...

வழக்கமான ஜேம்ஸ் படம் என்பது டேனியல் எப்போது பாண்டாக நடிக்க ஆரம்பித்தாரோ, அப்போதே காணாமல் போன ஒன்று! எனவே வெடிக்கும் பேனாக்களையும், மறையும் கார்களையும் இன்ன பிற ஜாலியான சங்கதிகளையும் எதிர்பார்த்துப் போனால் பாண்டைப் போலவே நீங்களும் ஏமாந்து போவீர்கள். இதில் பாண்ட் சற்று வயதாகி, செயல்வேகத்தை இழந்து தளர்ந்து போன நபராக காட்டப்படுகிறார். இருந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் பழைய வழிமுறைகளை பின்பற்றி எதிரியை எப்படி வீழ்த்துகிறார் என்பதை நின்று நிதானித்து காட்டுகிறார்கள்.

கையருகில் எதிராளியை வைத்துக்கொண்டு, விருந்து வைத்து, ஊற்றிக் கொடுத்து, கதை பேசி பிறகு நழுவ விட்டு முழிக்கும் வழக்கமான (டெம்ப்ளேட் என்று நம் வலைப்பூ விமர்சகர்கள் அடிக்கடி சொல்வார்களே!) ஹாலிவுட் காட்சிகள் இந்தப் படத்திலும் நிறைய இருக்கிறது.புதிதாக சில செண்டிமெண்ட் காட்சிகளும் உள்ளன, நல்ல வேளை பாண்டுக்கு தங்கச்சி யாரும் இல்லை!

இதில் வரும் பல வசனங்களையும், காட்சிகளையும் ஏற்கனவே பாண்ட் படங்களை அனுபவித்துப் பார்த்தவர்களால் மட்டுமே ரசிக்க முடியும். எனவே பாண்டின் தீவிர ரசிகர்கள் (மற்றும் பிரிட்டிஷ்காரர்கள்!) இந்தப் படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள் (இது என்ன தீபாவளியா?!). என்னால் ஆட முடியவில்லை. ஆரம்பக் காட்சியை மிஸ் செய்த கடுப்பில் கொஞ்ச நேரம் படத்தோடு ஒன்றவே முடியவில்லை என்பதும் ஒரு காரணம்.

இந்தியாவைக் காட்டினால் மட்டும்  தேடிப் பிடித்து அழுக்கைக் காட்டும் ஹாலிவுட்காரர்கள், சீனாவின் ஷாங்காய் நகரை மிக அழகாகக் காட்டுகிறார்கள்! அந்த அளவிற்கு இந்தியாவில் எந்த ஒரு மெட்ரோவும் இல்லை என்பதில்  உண்மை இல்லாமல் இல்லை! ஷாங்காயின் வானுயர்ந்த கட்டிடம் ஒன்றின் மேல் பாண்ட்  நீச்சலடிப்பது, பிரமாண்டமான LED திரையின் பின்னணியில் எதிரியோடு மோதுவது, மக்காவ்வில் (Macau) உள்ள சூதாட்ட விடுதியொன்றை படகில் சென்றடைவது - இந்த மூன்று காட்சிகளும் இரவில் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன. அதே போல முன்னிரவில் காட்டப்படும் அந்த பாழடைந்த ஸ்காட்லான்ட் வீடும் மயக்கும் அழகு!

பொழுது போகவில்லைஎன்றால் இந்தப் படத்தை தாராளமாகப் போய் பார்க்கலாம் - அவ்வளவுதான்! :) ரொம்ப எதிர்பார்த்துப் போனால் இப்படிதான் மூஞ்சியை வைத்துக்கொண்டு திரும்ப வேண்டியிருக்கும்! ஐம்பதிலும் ஆக்ஷன் வரும்! :) ஆக்ஷனுடன் கொட்டாவி வரும்! ;)

சின்னதாய் ஒரு Spoiler:
Spoiler-களை விரும்பாதவர்கள் நேரடியாக இந்தப் பதிவைப் படிக்கப் போகலாம்: 007 ஜேம்ஸ் பாண்ட் - தமிழில்! மற்றவர்கள் கீழே உள்ள பத்தியை படித்து விட்டு இதைப் படிக்கலாம்!

கதாநாயகிகள் இருவரும் பாண்ட் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாக  செய்திருக்கிறார்கள். அதில் ஒருவர் மணிப்பென்னியாக மாறுகிறார். Q-ஆக ஒரு புதிய இளைஞர் வந்து மானிட்டரை வெறித்து வெறித்துப் பார்க்கிறார். அதே போல M-க்கும் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். காமிக்ஸ்களில் வருவதை போல இனி ஒரு ஆண்தான் M-ஆக வருவார். டேனியலுக்கும் வயதாகிவிட்டது. இப்படி படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில குறிப்புகளை வைத்துப் பார்த்தால், அடுத்த படத்தில் பாண்டாக வேறு நபர் வரும் வாய்ப்பு பலமாக இருக்கிறது! கடைசியில் "Bond will be back" என்று போடுகிறார்கள், எனக்கு ஏனோ தேவையில்லாமல் பில்லா சீரிஸ் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது!

கருத்துகள்

 1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/

  பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  பதிலளிநீக்கு
 2. வழக்கமான பாண்ட் படம் போல இருப்பதே ரொம்ப சந்தோஷம்...பன்னு கொடுத்ததா சொன்னீங்களே எப்படி நல்லா இருந்துச்சா...தியேட்டர் இருந்து வரும்போது செவுத்தில் இடித்து கொண்டீங்களா மூஞ்சியை அப்படி வச்சிகிட்டு வந்தேன்னு சொன்னீங்களே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படத்தைப் பார்த்தால் அது எப்படி என்று விளங்கும்! :)

   நீக்கு
 3. வழமை போல நகைசுவைகழந்து உங்கள் பாணியில் விமர்சனம்.
  வலைபூக்கள் அனைத்திலும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.
  ஆனால் உங்களது இந்த பாயிண்ட் எனக்கு உண்மையை உணர வைத்தது.
  //ஏற்கனவே பாண்ட் படங்களை அனுபவித்துப் பார்த்தவர்களால் மட்டுமே ரசிக்க முடியும்.//
  இன்னும் பார்கவில்லை.அடுத்தவாரம் முயற்சி செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. எப்படியும் இரண்டு வாரங்களில் இங்கும் திரையிடப்படும்... பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்... பார்க்கலாம்...

  விமர்சனத்திற்கு நன்றி...
  tm4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இரண்டு வாரங்களில் இங்கும் திரையிடப்படும்//
   ஏன் இவ்வளவு தாமதம்?!

   நீக்கு
 5. 'நெக்லஸ் அணிந்திருக்கிறாயே, அதுபோதும்!' என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றால் இந்தப் படத்தை குறைந்தபட்சம் ஒருதடவையாவது பார்க்கத் தயார்! ;-)

  பதிலளிநீக்கு
 6. தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  பதிலளிநீக்கு
 7. முதல் 17 நிமிட சேசிங்கை தவிர ஏமாற்றம் தான் என்று கேள்வி பட்டேன். அதிலும் 7 நிமிடங்கள் அவுட்டா ? இந்த டேனியல் பையன் வந்த பிறகு பாண்டின் சார்மிங் குறைந்து விட்டது.

  மூவீஸ் நவ்வில் போடும் பொது பார்த்து கொள்ள லாம் :D

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முதல் 17 நிமிட சேசிங்//
   அத மட்டும் ஞாபகப் படுத்தாதீங்க! :(

   நீக்கு
 8. "நல்ல வேளை பாண்டுக்கு தங்கச்சி யாரும் இல்லை!" செம்மையான கற்பனை ஜி!

  பதிலளிநீக்கு
 9. Nice review... as usual with sufficient amount of humor lines ;)

  Stopped watching Bond movies after Daniel Craig became Bond :( Couldn't accept him as Bond 007 in my perspective. Typically Bond character should be mature, suave and witty (like our Karthik Somalinga)

  All his movies now coming with action + sentiment + americanized(!) instead of British flavour

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. A loud Double "ஓ" for you buddy, for equating me with OO7! ;)

   This movie does have some British flavor returning to the franchise and is the reason why the British critics are all praises for this movie!

   A decent watch, definitely not a must watch!

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia