Life of Pi - புலி வேஷம்!

'கண்ணே கண்மணியே' என்று தமிழ் பாடலுடன் துவங்கும் ஹாலிவுட் படங்கள் மிக மிகக் குறைவுதான், இல்லையா?! முதல் காட்சியிலேயே நிமிரச் செய்தது அந்த தமிழ்ப் பாடல்! நடுத்தர வயதில் இருக்கும் Pi-யை (பையை என்று எழுதினால் குழப்பமாக இருக்கும் அல்லவா?!) மேற்கத்திய எழுத்தாளர் ஒருவர் சந்திக்க வருகிறார். அனுபவம் வாய்ந்த மாலுமிகளும் எண்ணி வியக்கும் விதத்தில் தனியொருவனாக நடுக்கடலில் சிக்கி, 227 நாட்களுக்குப் பிறகு உயிருடன் கரை சேர்ந்த பையின் (இர்ஃபான் கான்) அனுபவங்களை ஒரு நாவலாக வடிப்பது அந்த எழுத்தாளரின் நோக்கம்! எளிய இந்திய ஆங்கிலத்தில் தனது வாழ்க்கைக் குறிப்புகளை பகிரத் தொடங்குகிறார் பை.

ஃபிரெஞ்சு ஆதிக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில், பையின் அப்பா ஒரு மிருகக் காட்சி சாலை நடத்துபவர். ஹிந்துச் சிறுவன் பை, கடவுளைப் பற்றிய தேடலில் மற்ற மதங்களையும் நாட ஆரம்பிக்கிறான். அன்பு காட்டினால் ஜூவில் வளரும் பெங்கால் புலி ரிச்சர்ட் பார்க்கரைக் (ஆம், அதுதான் புலியின் பெயர்!) கூட கட்டுக்குள் கொண்டு வரலாம் என நினைக்கும் பையை ஒரு பலியாட்டின் மூலம் அது தவறு என்று நிரூபிக்கிறார் பகுத்தறிவு பேசும் தந்தை. திக்கில்லா இளைஞனாக வளரும் பைக்கு ஆறுதலாக அமைகிறது அழகுப் பெண் ஆனந்தியுடனான சொல்லாத காதல்.

இடம் மாறி ஏதாவது ஒரு மணிரத்னம் அல்லது கௌதம் படத்திற்கு வந்து விட்டோமா என்ற சந்தேகத்தில், நிமிர்ந்து உட்கார்ந்திருந்த என்னை லேசாய் நெளியச் செய்தன இந்த ப்ளாஷ்பேக் காட்சிகள்! தமிழ் கொஞ்சமும், ஆங்கிலம் அதிகமுமாக பையின் குடும்பத்தினர் மற்றும் அவர்களை சுற்றி இருப்பவர்கள் பேசிக் கொள்ளும் நாடகத்தனமான காட்சிகள் படு எரிச்சல். அதிலும் பையின் தாயாக வரும் தபு பேசும் தமிழ் கேட்டு குபுக் என்று வாந்தி வராத குறை! பக்கா மணிரத்ன பாணியில் சர்ச்சையை கிளப்பும் மதங்களைப் பற்றிய வசனங்களும், அடுத்து வரும் காட்சிகளில் யார் மனமும் புண்படக் கூடாதென அவற்றை பூசி மொழுகுவதுமாக, சர்வதேசப் புகழ் பெற்ற இயக்குனர் ஆங் லீ இப்படி சொதப்புவார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை! நல்ல வேளை, மீதப் படம் அப்படி இருக்கவில்லை!

அரசியல் மாற்றங்களால் பையின் குடும்பம், ஜூ மிருகங்களையும்  உடனழைத்து பெரியதொரு கப்பலொன்றில் புதிய வாழ்வைத் தேடி கனடா நோக்கிப் பயணிக்கின்றது! சைவ உணவென்றால் என்னவென்றே கேள்விப் பட்டிராத கப்பலின் முரட்டு சமையல்காரனுடன் பையின் அப்பா நடத்தும் அந்த கசப்பான விவாதம் கைகலப்பில் முடிகிறது.

பயணத்தின் நடுவில் கடும் புயலில் சிக்கி மூழ்கும் கப்பலில் இருந்து, கப்பலின் மாலுமி, சமையல்காரன் மற்றும் பை அடங்கியதொரு குழு, சிறிய படகொன்றில் தப்ப எத்தனிக்கிறது. அந்தத் தருணத்தில் இருந்து படம் முழுக்க முழுக்க பையின் பார்வையில் நகர்கிறது! ஏறிய சில கணங்களிலியே அப்படகில் இருந்து அனைவரும் தூக்கி வீசப்படுகின்றனர்.

சமாளித்துக்கொண்டு மீண்டும் படகேறும் பை அங்கே  காண்பதோ ஒரு அடிபட்ட வரிக்குதிரையையும், ஒரு வெறிகொண்ட கழுதைப்புலியையும்! சற்று நேரத்தில் ஒரு உராங்குடான் குரங்கும், நீரில் மிதக்கும் வாழைக்குலை ஒன்றை பிடித்துக்கொண்டு படகை வந்தடைகிறது. பசியில் துடிக்கும் கழுதைப்புலி, வரிக்குதிரையை அடித்துச் சாப்பிடுகிறது. அதை எதிர்க்கும் குரங்கையும் கொன்றுவிடுகிறது. வெறி கொள்ளும் பை கழுதைப்புலியை நோக்கி ஆங்காரமாய் கத்தும் சமயம், அவ்வளவு நேரம் படகின் மறைவில் பதுங்கியிருக்கும் வங்கப் புலி (அதே ரிச்சர்ட் பார்க்கர்) கழுதைப்புலியை அடித்துக் கொல்கிறது!

படகில் எஞ்சியிருப்பது தினம் ஐந்து கிலோ இறைச்சி உண்ணும் புலியும், பையும் மட்டுமே! திக்குத்தெரியாத நீண்ட பயணத்தில் இவர்கள் இருவரிடையே என்ன நடக்கிறது?! கடவுளைப் பற்றிய பையின் தேடல் தொடர்ந்ததா?!

எப்படியோ உயிருடன் கரையொதுங்கும் பையைச் சந்திக்கும் இன்சூரன்ஸ் அதிகாரிகள் அவன் சொல்லும் இக்கதையை நம்ப மறுக்கின்றனர். அவர்கள் நம்பும் வகையில் இன்னொரு கதை சொல்கிறான் பை!

படம் பார்க்கும் நமக்கோ இந்த இரண்டு கதைகளுமே ஏற்புடையதாகத்தான் இருக்கின்றன! ஆனால் இவ்விரண்டில் உங்களை எந்தக் கதை கவரும்?! இதற்கான பதிலை படம் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்

இதே பெயரில் Yann Martel எழுதிய நாவலை சுவாரசியமாக படமாக்கியிருக்கிறார் ஆங் லீ! பசிபிக் பெருங்கடலின் பிரமாண்டத்தில் சிறியதொரு புள்ளியாய், படகில் புலியும் பையும் பயணிக்கும் காட்சிகள் கவிதை!!! இரவில் வண்ணச் சிதறல்களாய் மின்னும் ஒளிரும் மீன்கள் துள்ளும் காட்சியும், கண்ணில் தெரிவது வானமா அல்லது கடல் நீரில் தெரியும் அதன் பிரதிபலிப்பா என மயக்க வைக்கும் காட்சியும், மிதக்கும் தீவின் அழகை திரையில் செதுக்கிய காட்சிகளும் அவர் திறமைக்கு சில சான்றுகள்! இளவயது பையாக சூரஜ் ஷர்மா நன்றாக நடித்துள்ளார். ஆனால் மனதைக் கவர்வதென்னவோ அந்த வங்கப் புலிதான்!

வித்தியாசமான, தத்துவார்த்தமான படத்தை பார்க்கும் எண்ணம் இருந்தால் தவறாமல் பாருங்கள். ஆனால் தயவு செய்து 3D-யில் மட்டும் பார்க்க வேண்டாம். பெங்களூரில் 2D பதிப்பு எங்கும் திரையிடப்படாத காரணத்தினால் வேறு வழியின்றி 3D-யில் பார்த்தேன். படம் முடிந்து பல மணிநேரம் ஆகியும் நான் வெளியுலகில் காணும் அனைத்து காட்சிகளும் ஒண்ணரை D-யில் இன்னமும் கலங்கலாகவே தெரிகின்றன, தலைவலிதான் மிச்சம்! இருக்கவே இருக்கிறது Tiger பாம் - புலியை புலியால்தானே எடுக்க முடியும்?! :D

கருத்துகள்

  1. Have to watch the movie Karthik, Whitefield forum mall la movie odidu irugunu ninaikiren

    பதிலளிநீக்கு
  2. As you said, I don't like to watch movies in 3D, none of the theatres are good in Bangalore. I watched avengers 3D in central mall , complete movie was blur, veruthu poiten :'(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. They charge 30 rupees as Service charges for a 3D glass and yet they don't provide us new ones! Fun Cinemas are reusing even the scratched / damaged ones! I had to run between my seat and the counter and swapped as many as 4 glasses during the show - pathetic! :(

      நீக்கு
  3. என்ன கிரியாரே! நீங்களே இப்படி சொன்னா. நாங்க என்ன சொல்றதாம்? பேசாம பரங்கி மலை ஜோதில ஐக்கியமாய்ட வேண்டியதே! பதிவுக்கு நன்றி ப்ளேட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பரங்கி மலை ஜோதில ஐக்கியமாய்ட வேண்டியதே//
      என்ன படத்துக்கு? "Life of பைக்குட்டி"-யா?! ;) :) :)

      நீக்கு
    2. John -Nenga Jothi theatre oda permanent member nu kelvipatten he he

      நீக்கு
  4. பாக்கலாம்ன்னு இருந்தேன் காப்பாத்தி விட்டுடீங்க சாமி
    அம்புலி 3D சைடில் உட்கார்ந்து தலைவலி வந்தது. ஐஸ் ஏஜ் 3 தியேட்டர் நடுவில் உட்கார்ந்து பார்க்கிற மாதிரி எடுத்தேன் மிக நன்றாக இருந்தது.

    ஒருவேளை அது தான் காரணமாக இருக்குமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கலாம், ஆனால் 2D-யில்! 3D கிளாஸ் தரத்திலும் இருக்கிறது சூட்சுமம்! :)

      நீக்கு
  5. விமர்சனம் நல்ல இருக்கு.படம் பார்க்கலாம் போலத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. நல்ல விமர்சனம்... முன்னெச்சரிக்கை தகவலுக்கு நன்றி... tm2

    பதிலளிநீக்கு
  7. நேற்றிரவுதான் இப்படத்தைப் பார்த்தேன். வித்தியாசமான படம்! முதல் 30 நிமிடங்கள் டாக்குமென்ட்டரி டைப்பில் நெளியவைத்தாலும், அதன்பிறகு வித்தியாசமாக நகர்கிறது. வேறு எந்தப் படத்திலும் கடலை இவ்வளவு அழகாய்ப் பார்த்ததில்லை. 3D யில் பார்ப்பது சில சமயங்களில் கார்த்திக்கு நேர்ந்ததைப் போல கொடுமையாய் அமைந்துவிடுகிறது.
    நல்லவேளை நான் 2D யில் தான் பார்த்தேன். :-)

    பதிலளிநீக்கு
  8. நானும் 3D யில் தான் பார்த்தேன். தமிழ் காட்சிகளில் புலிக்கு உணவு கொடுப்பது, காதல் காட்சிகள் தவிர வேறு எதுவும் ஈர்க்கவில்லை, ஆனால் கதை கடலுக்கு வந்தவுடன் அருமையாக இருந்தது. புலிக்கும், Pi - க்கும் உள்ள உறவை இன்னும் கொஞ்சம் அதிகம் காட்டி இருக்கலாம் என்று தோன்றியது.

    ஆரம்பத்தில் ஐந்து நிமிடங்கள் மிஸ் செய்து விட்டேன். மறுபடி பார்க்க வேண்டும் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் பேசுவது தமிழ்தானா என்ற சந்தேகமே வந்து விட்டது எனக்கு!!! :(

      //ஆரம்பத்தில் ஐந்து நிமிடங்கள் மிஸ் செய்து விட்டேன்//
      மிஸ் செய்யும் அளவுக்கு முதல் 5 நிமிடங்களில் பெரிதாக ஒன்றும் இல்லை! :)

      நீக்கு
  9. எங்க ஊர் சம்பந்தப்பட்ட கதை. எங்க ஊர்லயும் ஷூட் பண்ணியிருக்காங்க. தல வலிச்சாலும் நான் கண்டிப்பா பார்ப்பேனாக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, பாதி படம் நல்லாதாங்க இருக்கு - தலைவலி வந்தது 3D-யால! கிஃப்ட் வவுச்சர் இன்னும் வரல! ;)

      நீக்கு
  10. Karthik/guys,

    Do you have any idea about the alchemist graphic novel. Is it worth to buy?

    பதிலளிநீக்கு
  11. Sorry, no idea..

    try asking in this FB group:
    https://www.facebook.com/groups/lionmuthucomics/

    பதிலளிநீக்கு
  12. இன்று குடும்பத்துடன் பார்த்தேன். வித்தியாசமான படம் நன்றாக உள்ளது . குமுதம் இதழில் 5 ஸ்டார் கொடுத்துள்ளார்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia