துரோக தேசங்கள்!

இரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி "நாஜி சல்யூட்" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும்! ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன.
 
ஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை (Allied Forces) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ் படைப்புகளும் இதற்கு விதி விலக்கல்ல!
 
ஜெர்மானியர்களின் மறுபக்கத்தை, நற்பண்புகளை, 'தந்தை' தேசத்தின் மீதான அவர்களின் நேசத்தை, அதற்காக அனுபவித்த துயரங்களைப் பற்றி ஓரளவுக்கேனும் பேசும் படைப்புகள் வெகு அரிதாகவே கண்ணில் படுகின்றன - அவற்றில் ஒன்று தான் "தி கிராண்ட் டியூக்" (The Grand Duke)!
1943 - ஜெர்மனி மற்றும் சோவியத்திற்கு இடையே உக்கிரமான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். ஜெர்மானிய விமானப் படையின் லெஃப்டினன்ட் "வுல்ஃப்" - தேசப் பற்றும், தேசத் தலைவர் (Führer) ஹிட்லர் மீதான வெறுப்பும் சரி விகிதத்தில் கொண்டவர்! இதே காரணத்திற்காக தீவிர நாஜிக்களின் வெறுப்பைச் சம்பாதித்து இருந்தாலும்; சோவியத் மீதான வான்வெளித் தாக்குதல்களில் அவர் ஈட்டி இருந்த பெரும் வெற்றிகள், "தேசத் துரோகி" என்ற முத்திரை அவர் மீது விழாமல் காத்து வந்தன.
 
அந்நாளில், "Night Witches" என்றழைக்கப் பட்ட ரஷ்ய விமானப் படைப் பிரிவு, முழுக்க முழுக்க பெண் விமானிகளைக் கொண்டு இயங்கி வந்தது. இரவு நேர திடீர் தாக்குதல்கள் மூலம், எதிரிகளை நிலைகுலைய வைப்பது அவர்களின் தனித் திறன்! அப்பிரிவின் புகழ் ஈட்டிய விமானிகளில் ஒருத்தியான லில்யா, தாக்குதல் ஒன்றின் போது ஜெர்மானியர்களிடம் அகப்பட்டு விடுகிறாள். வுல்ஃப் தன் மகளிடம், "போரில் பெண்களைக் கொல்ல மாட்டேன்" என்று கொடுத்திருந்த வாக்குறுதி காரணமாக, லில்யாவை தப்பவைக்கிறார்.
 
சில மாதங்கள் கழித்து நேசநாட்டினரின் பலத்த குண்டு வீச்சில், வுல்ஃப்பின் மகள் வசிக்கும் ட்ரெஸ்டன் நகர் தரைமட்டமாகிறது. மகளை இழந்த துக்கத்திற்கு, எதிரி விமானங்களை வீழ்த்துவதின் மூலம் வடிகால் தேடுகிறார் வுல்ஃப். அந்நிலையில், லில்யாவை அவர் மீண்டும் ஒருமுறை சந்திக்க நேர்கிறது. அசந்தர்ப்பமான சூழலில் அமையும் அச்சந்திப்பில், அவர்களுக்கிடையே என்ன நிகழ்கிறது என்பதையும்; தத்தம் தேசங்களால் வெவ்வேறு காரணங்களின் பேரில், "தேசத் துரோகிகள்" என்று முத்திரை குத்தப்படும் அவ்விருவரின் கதி, இறுதியில் என்னவாகிறது என்பதையும் - கதையின் இறுதிப் பாகம் பரபரப்பாக விளக்குகிறது.
பாசம், நேசம், காதல், காமம் ஆகிய இயல்பான மனித உணர்வுகள் - இனப்பற்று, தேசபக்தி ஆகிய அரசியலாக்கப் பட்ட உணர்வுகளாலும்,  அதன் காரணமாய் விளையும் யுத்தங்களினாலும் எவ்விதம் பாதிப்புக்குள்ளாகிறன என்பதை கதையின் அடிநாதமாக ஒலிக்க விடுகிறார் கதாசிரியர் யன் (Yann)! தம் குடிமக்களின் மனித (அபிமான) உணர்வுகளை, தேசிய உணர்வின் பெயரால் கொன்று புதைக்கும் "துரோக தேசங்களைப்" பற்றிய கதையாக இது அமைந்திருக்கிறது.
 
மூன்று பாக பிரெஞ்சு கிராஃபிக் நாவல்கள் என்றாலே, மனதில் லேசாக கிலி தட்டுவதை தவிர்க்க முடிவதில்லை. மெதுவே நகரும் கதைகளுக்கும், இழுவையாய் நகரும் கதைகளுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு - இக்கதை முன்னதில் சேரும். முக்கிய கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து கொள்ளவும், கதை நிகழும் சூழலை உள்வாங்கிக் கொள்ளவும் இந்த நீளம் அவசியமாக இருக்கிறது. லேசாக சலிப்பு தட்டும் இடங்களில், நம்மை தட்டி நிமிர்த்தி உட்கார வைப்பது இக்கதையின் ஓவியங்களே!
 
பேரழகும், கம்பீரமும் கொண்ட யுத்த விமானங்களை அத்தனை தத்ரூபமாக வரைந்து, நம் கண் முன்னே பறக்க விட்டிருக்கிறார் ஓவியர் ஹியூகல் (Hugault)! வான்வெளியில் அலுமினியப் பறவைகள் போல சீறிப் பாயும் போர் விமானங்கள்; பறவைப் பார்வையில் காட்டப்படும் நிலப் பரப்புகள்; தேர்ந்த சர்க்கஸ் கலைஞர்களைப் போல, ஆகாயத்தில் வீர சாகசம் புரியும் விமானிகள்; வெறுப்பில் உமிழ்ந்த எச்சமென, எதிரிப் பிராந்தியங்களின் மீது அவர்கள் பொழியும் வெடி குண்டு மழை; இரவைக் கிழித்துக் கொண்டு தீப்பிழம்பாய் பாயும் ஏவுகணைகள்; இயந்திரத் துப்பாக்கிகளின் இடைவிடா முழக்கங்கள் என ஒவ்வொரு யுத்தக் காட்சியும் சிலிர்ப்பூட்டுகிறது.
 
பக்கங்களைப் புரட்டாமல் கைகளும், வைத்த பார்வை அகலாமல் கண்களும் ஒவ்வொரு தாளிலும் தயங்கி நிற்கின்றன. இதற்கு ஓவியங்களின் பேரழகு ஒரு காரணம் என்றால்; தாள்களின் அடர்த்தியும், அச்சு நேர்த்தியும், வண்ண சேர்த்தியும் இன்ன பிற காரணங்கள்! $25-க்கு தகுந்த தரத்தை, "Archaia - BOOM!" பதிப்பகம் சற்றும் குறைவின்றி வழங்கி இருக்கிறது - Flipkart புண்ணியத்தில் இப்புத்தகத்தை மிகக் குறைந்த விலையில் வாங்கினேன் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்! ;)
 
மற்றொரு சிறப்பம்சம்(?!) சற்றே சர்ச்சைக்குரியது - பிரெஞ்சு காமிக்ஸ் ஆல்பங்களை, மொழி மாற்றி வெளியிடுகையில் - ஆனானப்பட்ட அமெரிக்க / பிரிட்டிஷ் பதிப்பகங்களே கூட, அவரவர் அளவுகோல்களுக்கேற்ப - நிர்வாணச் சித்திரங்களை கத்தரித்தும், ஆங்காங்கே ஆடை வரைந்து மறைத்தும் வெளியிடுவது வழக்கம். ஆனால் ஆர்கையா பதிப்பகமோ, முழு நிர்வாண மற்றும் உடலுறவுக் காட்சிகளைக் கூட ஒளிவு மறைவின்றி வெளியிட்டுள்ளது! இந்தியாவில், குறிப்பாக பிராந்திய மொழிகளில் இவ்வாறு தணிக்கையின்றி வெளியிடுவது தற்போதைக்கு சாத்தியம் இல்லை! ஆனால், ஓரிரு (முற்றும் துறந்த) காட்சிகளை வெட்டுவதின் மூலம், ஒரு சிறந்த படைப்பு மேலும் நான்கு பேரைச் சென்றைடையும் என்றால், அதில் தவறில்லை தான்!
குறைகள் என்று பார்த்தால், முதலாவதாக புத்தகத்தின் அளவைச் சொல்லலாம். Paquet பதிப்பகம் வெளியிட்ட பிரெஞ்சு ஒரிஜினல் ஆல்பத்துடன் ஒப்பிடுகையில், இதன் நீள அகலம் சற்று குறைவே (அமெரிக்க பாணி)! மற்றொன்று, கதையில் ஆங்காங்கே உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் ஜெர்மன் / ரஷ்யச் சொற்கள் மற்றும் இராணுவ சங்கேத வார்த்தைகள்! நேரம் அமையும் போது, அவற்றின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு மீள்வாசிப்பு செய்ய எண்ணியுள்ளேன்! அதிலும், பதவிகளைக் குறிக்கும் ஜெர்மன் பதங்கள் நமது நாவைப் பதம் பார்க்கின்றன (Oberleutnant, Staffelkapitän etc.).
 
அதே போல, உலகப் போர் பற்றிய பின்னணித் தகவல்களை சற்றேனும் அறிந்து வைத்திருப்பது, இக்கதையை முழுமையாக ரசித்திட உதவும். ஆனால், அத்தகைய எந்த ஒரு தகவலும் முன்னுரையில் கொடுக்கப் படவில்லை! மாறாக இக்கதையை, "யுத்த வானில் நடைபெறும் ஒரு காதல் காவியம்" என்பதாக முன்னிறுத்தும் ஒரு சிறு அறிமுகம் மட்டுமே பின்னட்டையில் தரப்பட்டுள்ளது! அது ஓரளவுக்குச் சரியே என்றாலும், இக்கதையின் சாராம்சம் காதல் மட்டுமே அல்ல!

ஆக மொத்தத்தில், "தி கிராண்ட் டியூக்" - போர்க் கதை ரசிகர்களும், காமிக்ஸ் காதலர்களும், விமான விரும்பிகளும் தவறவே விடக் கூடாத சித்திரப் புதையல்!
 
Image Credits: Archaia - BOOM! & Paquet

கருத்துகள்

  1. மிகவும் குறைந்த விலை என்றால் என்ன விலை... ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைந்த விலையில் என்பதை விட, பலத்த தள்ளுபடி விலையில் வாங்கினேன் என்பது பொருத்தமாக இருக்கும் - 100 ரூபாய்கள் மட்டும்! :)
      - புக்மார்க் வைத்து புக்கு வாங்குவோர் சங்கம், பெங்களூரூ - 66

      நீக்கு
  2. பதில்கள்
    1. இருக்கிறது... ஆனால், நான் வாங்கிய விலையில் இப்போது கிடைக்காது: Flipkart & Amazon

      நீக்கு
  3. கார்த்திக், இதுதான் அடுத்த மாதம் வானம் எங்கள் வீதியாக வரவுள்ளதா நமது லைன் காமிக்ஸ்ல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை பரணி, அது வேறு கதை: Dent d'ours. Grand Duke-இன் கதாசிரியர் Yann தான் அதற்கும் கதை எழுதி உள்ளார்.

      நீக்கு
  4. வரையப்பட்டதா அல்லது ஃபோட்டோக்களா என்று பிரம்மிக்கச் செய்திடும் அற்புத ஓவியங்கள்!! அந்தப் போர்விமானங்களின் அழகு என் மனதையும் கொஞ்சம் சிதைத்துவிட்டதென்னவோ நிஜம் கார்த்திக்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சமாக குண்டு வீசி சிதைத்து விட்டனவா?! :D

      //வரையப்பட்டதா அல்லது ஃபோட்டோக்களா//
      உண்மை தான்... சம்பிரதாய வழிமுறைகளோடு, டிஜிட்டல் ஆர்ட்டும் சற்று கலந்திருக்கும் என நினைக்கிறேன்.. ஆனால், ஓவியங்கள் எங்கும் உறுத்தலாகத் தோன்றவில்லை.

      நீக்கு
  5. ஏம்பா இதுல்லாம் தமிழில் வராதா ராசா? வந்தா குறிப்பிடுங்க... அல்லாமல் காமிக்ஸ்னா சின்ன புள்ளங்க மேட்டர்னு ஒதுங்கிப்போனா, அதுல அரசியல் போர் காதல்னுலாம் வருதுனா படிக்கலாம்லான்னு மனசுக்குள்ளே பெரிய மனுசன் கேள்வி கேக்குறாப்ல ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாஸ், சௌக்கியமா?! :) டிசம்பரில், இதே போன்ற ஒரு போர் (விமானக்) கதை தமிழில் வெளியாகிறது - வானமே எங்கள் வீதி!. அடுத்த வாரம் முதல் Worldmart-ல் கிடைக்கும்!

      நீக்கு
    2. சௌக்கியம் ப்ரோ ...நீங்க நலமா? வரட்டும் படிக்கலாம்..காமிக்ஸ் உலகம் தாண்டியும் நிறைய உங்ககிட்ட எதிர்பார்க்கிறது இந்த பாவிப்புள்ள மனசு ... :)

      நீக்கு
  6. @ கார்த்திக் சோமலிங்கா
    நண்பரே...10,000 km அப்பால் சீனாவில் இருந்து உங்கள் பதிவை படித்தேன்.உங்களுக்காகவே ஒரு....இங்கே'கிளிக்'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொப்பி - கண்ணாடி சகிதம் "தமிழ்வாணன்" அவர்களைப் போல அட்டகாசமாக இருக்கிறீர்கள் சிவா!!! சீனாவில் சங்கர்லால்?! :)

      வா.எ.வீ. குறித்து, நேரம் அமைந்தால் நிச்சயம் பதிவிடுகிறேன் நண்பரே... நன்றி!

      நீக்கு
  7. கார்த்திக்,

    காமிக்ஸ் கதை பற்றிய பதிவு என்பதையும் தாண்டி வரலாற்று விபரங்களுடனும், இன அழிப்பு பற்றிய உண்மையான புரிதலுடனும் எழுதியிருக்கிறீர்கள். அருமை.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  8. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  9. அன்புடையீர்!
    வணக்கம்!
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    நட்புடன்/நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்,நான் உங்கள் பதிவை ஒன்று விடாமல் படிப்பேன்.(சினிமா விமர்சனம் தவிர)காமிக்ஸை எப்படி ரசித்துபடிப்பது என்பதை உங்கள் விமர்சனம் பார்த்துதான் தெரிந்துகெண்டேன்

    பதிலளிநீக்கு
  11. நான் உங்கள் காமிக்ஸ் விமர்சனபதிவை ஆர்வத்துடன் இரசித்து படிப்பேன்.இதை பார்த்துதான் காமிக்சை யே ரசித்து படித்து பழகினேன்

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. டாலர்ராஜ்ஜியம் பற்றி ஒருபதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும்.ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. ஓகே ஓகே... ஓவர்... மைக் நன்றாக வேலை செய்கிறது! :)

      நீக்கு
  15. கா.சோ.அவர்களுக்கு வணக்கம்,உங்களின் பள்ளி பருவ காமிக்ஸ் சேகரிப்பு மற்றும் ஆர்வம் ஏறக்குறைய என்னுடன் ஒத்துபோகும் எனவே மிகவும் ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி நண்பரே! பெரும்பாலான தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் கடந்த காலம் ஏறக்குறைய ஒன்றே போல் இருப்பதில் வியப்பில்லை தான்; இப்போது தான் மாறி விட்டோம்! :D

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia