லயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்!

பருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும்! காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை!

விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன்  "மகா மெகா குண்டு" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை! அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு?) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு "ஸ்பெஷல் புத்தகம்" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு). அந்த பாணியில், முத்து காமிக்ஸ் 40-வது ஆண்டு மலராக Never Before Special என்ற 456 பக்க சிறப்பிதழை கடந்த ஆண்டு அவர்கள் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

ஆனால், அதில் இம்முறை சிறிய ஆனால் இனிய மாற்றம்! நவரசங்கள் என்னவோ அப்படியே தான் இருக்கின்றன; ஆனால், மாற்றம் ஏற்பட்டுள்ளது தயாரிப்புத் தரத்தில்! லயன் காமிக்ஸின் 30வது ஆண்டு சிறப்பு மலராக, र550 விலையில், 900+ பக்கங்களுடன்  வெளிவந்திருக்கும், "லயன் மேக்னம் ஸ்பெஷல்" என்ற இரட்டைச் சிறப்பிதழின் 770 பக்க முதல் புத்தகத்தில் தான் அந்த மாற்றம் தென்படுகிறது! தடியாக இருந்தாலே அது ஸ்பெஷல் தான் என்ற நீண்ட நாள் நம்பிக்கையை மூட்டை கட்டி வைத்து விட்டு, நிஜமான ஸ்பெஷல் இதழைப் படைத்திருக்கிறார் பதிப்பாசிரியர் திரு.S. விஜயன் அவர்கள்.
ஒன்பது கதைகளின் அணிவகுப்பு!
இத்தாலிய காமிக்களின் பிரத்தியேகத் தொகுப்பாக அமைந்திருக்கும், LMS Book No. 1-ஐப் பொருத்த வரை, உள்ளே இருக்கும் கதைகளின் தரம் இரண்டாம் பட்சமாக மட்டுமே இருக்கப் போகிறது! ஏனெனில், புத்தகத்தை புரட்டுவதற்கு முன்னதாகவே, அதன் தரம் நம்மை புரட்டிப் போட்டு விடுகிறது! பளபளவென மின்னும் அட்டை, அதில் வசீகரிக்கும் டெக்ஸ் வில்லரின் ஓவியம், உறுதியான பைண்டிங் (Hard Bound), இதழின் முதுகில் Leather Bound போன்றதொரு மாயத் தோற்றம், புத்தகத்தின் கனம் (கிட்டத்தட்ட 1.25kg!!!), அசத்தலான வண்ண அச்சு என, Book 1-ன் மிகச் சிறப்பான தயாரிப்புத் தரம், காமிக்ஸ் படிக்காத வாசகர்களையும் முதல் பார்வையிலேயே கவர வல்லது!
'இத்தாலியன் - தமிழ்' - காமிக்ஸ் அகராதி!
கதைகளைப் பொருத்த வரையில், அனைத்து தரப்பு வாசகர்களையும் கவர  வேண்டும் என்பதற்காக, வெஸ்டர்ன், ஆக்ஷன், திகில், மர்மம், நகைச்சுவை, கிராஃபிக் நாவல் என்று கலவையாக தொகுத்து இருக்கிறார்கள். அவ்வகையில், லயன் தனது முப்பது ஆண்டு கால பயணத்தில் தொட்டுச் சென்ற காமிக்ஸ் வகைகளின் சிறு பிரதிபலிப்பாக இவ்விதழ் அமைந்துள்ளது (சூப்பர் ஹீரோ ஜானர் நீங்கலாக)!

காமிக்ஸ் வாசிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு சில ஆயிரங்களில் மட்டுமே இருந்தாலும், இந்த இதழைத் தயாரிப்பதில் பதிப்பாளர்கள் செலுத்தி இருக்கும் கவனமும், புத்தகத்தின் நேர்த்தியும் தான் இப்படி பத்தி பத்தியாக பாராட்ட வைக்கிறது! ஆனால், இந்த முயற்சிகள் யாவும், காமிக்ஸ் என்ற சிறு வட்டத்தைத் தாண்டி வெளியே தெரியாமல் போகிறதே என்ற வருத்தம் இருக்கத் தான் செய்கிறது.

LMS-ன் நிறைகுறைகள் பற்றிய முழுமையான அலசல், கதைத் தேர்வு பற்றிய கருத்துக்கள், கதை விமர்சனங்கள், 136 பக்க Book 2-ன் தர வேறுபாடு - இவற்றைப் பற்றி எல்லாம் பிறிதொரு நாளில், நேரம் அமைந்தால் பார்க்கலாம். இப்போதைக்கு, இந்த சிறப்பான இதழை உங்களுடையதாக்கிக் கொள்ள பிரகாஷ் பப்ளிஷர்ஸை உடனே அணுகலாமே?! மேலும் விவரம் அறிய இந்தப் பதிவைப் பாருங்கள்!

இறுதியாக... கேப்டன் டைகர் (எ) ப்ளூபெர்ரி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் ஒரு சேதி...

மின்னும் மரணம் - The Complete Saga:
பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு, குண்டு புத்தகங்கள் மீதிருக்கும் தீராக் காதலின் நீட்சியாக, 500+ பக்கங்கள் கொண்ட மற்றுமொரு மெகா சிறப்பிதழ் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆனால், LMS போல பல கதைகளின் தொகுப்பாக இல்லாமல், ஒரு முழு நீள வெஸ்டர்ன் (Cow-boy?!) காவியமாக அமையவிருக்கும் இவ்விதழ், முன்பதிவுகளின் பேரில் குறைந்த அளவு மட்டுமே அச்சேற உள்ளது - இதன் விலை (र900) உங்கள் புருவங்களை உயர்த்தினால் அதற்கான காரணமும் இது தான்! :)

ஒரு கிலோ சிங்கத்தை வாங்குவதா அல்லது ஒரு கிலோ புலியை வாங்குவதா, இல்லை இரண்டையுமே வாங்குவதா என்ற குழப்பத்தில் உங்களை விட்டு விட்டு இப்போதைக்கு விடை பெறுகிறேன்! "விற்கும் விலைவாசியில், கால் கிலோ புளி கூட வாங்க முடியாது!" என்று கமெண்டு பகுதியில் மொக்கை போட வேண்டாம் என்று தீவிரவாதி வாசகர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்! :P

கருத்துகள்

  1. நல்ல விமர்சன அறிமுகம். நீங்கள் குறிப்பிட்டபடி, காமிக்ஸின் பொன்னியின் செல்வன், எத்தனை பேரை எட்டும் எனத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரங்கள் ஏதும் இல்லாத வரை (அதில் ஏக சிரமங்கள் உள்ளன என்றாலும்), வாசகர்களின் வாய் வார்த்தைகள் மூலமாக எட்டக் கூடிய அளவு மட்டுமே எட்டும்! தவிர, வாங்கும் முறையை எளிதாக்க வேண்டியது மிக அவசியம். கீழே வாசகர் ஒருவரின் (Sheae) கருத்தைப் பார்த்தீர்களா?!

      நீக்கு
  2. There are people who are interested in buying these comics but there are no proper channels to buy them. I live in Canada emailed them about shipping charges and no response. Atleast I'm one person who is willing to pay in dollars and they are not ready to get my money. Sad!

    பதிலளிநீக்கு
  3. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் சார்! உடனே சிங்கத்தை வாங்கிடுறேன் சார்! ரெண்டு கிலோ புலி ஆர்டர் போட்டுறேன் சார் ! :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாருக்கு ரெண்டு கிலோ இடிச்ச புளி பார்சேல்! :-D

      நீக்கு
  4. அதானே பார்த்தேன்! எங்கே புக்கை முழுசா படிச்சுட்டு விமர்சனப் பதிவு போட்டுட்டீங்களோன்னு நினைச்சு பயந்துட்டேன். ;) அடுத்த ஆண்டுமலர் வர்றதுக்குள்ள சட்டுபுட்டு புக்கை படிச்சுட்டு ஒவ்வொரு கதைக்கும் உங்க ஸ்டைல்ல எஸ்டீடிய சொல்லுங்கப்பு. ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ்டீடி-யா? அப்டீன்னா?! :~{ நான் ப்ரொபெஷனல் கூரியர்ல வாங்குனேன்! :P

      விமர்சனம் - அது அல்ரெடி அங்க லைவ் அப்டேட்ஸ் ஓடிட்டு இருக்கு... எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா இங்க காப்பி பேஸ்ட் பண்ணா விமர்சனப் பதிவு ரெடி! ;)

      நீக்கு
  5. "சிங்கம் ஒரு கிலோ, புலி ஒரு கிலோ!" என்ற (மொக்கையான) கவன ஈர்ப்புத் தலைப்பை, "லயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்! " ஆக மாத்தியாச்சு! பதிவு புதுசுன்னு நினைச்சு ஏமாந்துறாதீங்கப்பா :P

    பதிலளிநீக்கு
  6. நண்பரே,

    நான் இந்தியா வந்திருக்கும் சமயத்தில் இன்ப அதிர்ச்சியாக லயன் மேக்னம் ஸ்பெசல் பற்றிய தகவலை தந்து பரவசப்படுத்திவிட்டீர்கள் ! உள்ளே கதைகள் எப்படியோ, எதுவாக இருந்தாலும் நிச்சயமாக என் பால்யத்தை நினைவூட்டுவதாக இருக்கும் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம்
    http://saamaaniyan.blogspot.in/2014/08/blog-post.html
    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு நண்பரே! :) சிவகாசிக்கு பணம் அனுப்பினால், ஒரே நாளில் அனுப்பி வைத்து விடுவார்கள்!, ஃப்ரான்ஸ் திரும்பும் முன் கைப்பற்றி விடுங்கள்! :)

      நீக்கு
  7. இரண்டு கிலோவுக்குமே ஒரு வழியா கட்டிட்டேன் நண்பரே. பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்,டெக்ஸின் மெகா இதழ்களுக்கு மட்டும் பதிவு போடுகிறீர்கள்.மி.ம.ஏன் போடவில்லை.ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பா?(இப்படி கோர்த்து விட்டாலவது ஒரு பதிவு போடமாட்டிங்களா?என்று ஒரு நப்பாசைதான்.)

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia