அமில மழை!

நீண்ட விமானப் பயணங்களின் போது சீட்டுக்கு எதிரே இருக்கும் 7" திரையில் உலகப் படங்கள் பார்ப்பதையும், ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு கேவலமாக தலையாட்டுவதையும், ஏர்ஹோஸ்டஸ்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிப்பதையும், டாய்லெட் செல்ல நீண்ட வரிசையில் தர்மசங்கடமாக காத்துக்கிடப்பதையும், ஏசியன் வெஜ் ஆர்டர் செய்து விட்டு - இட்லி தோசையை எதிர்பார்த்து ஏமாறுவதையும், அந்தக் கடுப்பில் கை காலை குறுக்கிப் போர்த்திக்கொண்டு தூங்குவதையும், தவிர்த்து இன்னும் ஒரு பொழுது போக்கு இருக்கிறது!

நிற்க..........!

கேப்டன் ஷேன் மைகேல் ஸ்கோஃபீல்ட் - அமெரிக்க மெரைன் கார்ப்ஸ் வான்வழிப் பிரிவில் பணியாற்றியபோது எதிரிகளால் பிடிபட்டு, சித்திரவதையில் இரு கண்களும் கீறப்பட்டு பார்வை இழந்தவர். பிறகு சிகிச்சையில் பார்வை திரும்பினாலும் வதையின் வடுக்களாக இரு கண்களின் மேலும் கீழும் ஓடும் வரிகளின் காரணமாக அவர் முகத்தோற்றம் மாறியதால் அவரின் புனைப்பெயர் ஸ்கேர்க்ரோ என்றாகிப் போனது! பிறிதொரு பணியின் போது பிரெஞ்சு அரசாங்கத்தை பகைத்து கொண்டதால் அவர்களின் ஹிட் லிஸ்டில் முதலிடம் பெற்றது கூடுதல் தகுதி! இந்த காரணங்களுக்காக விமானப் பிரிவிலிருந்து தரையிறக்கப்பட்டு, ஆர்டிக் பிரதேசத்திலுள்ள ஒரு சோதனைச் சாலையில், ராணுவ ஆயுதங்களின் திறனை பரிசோதிக்கும் பணியில் நியமிக்கப்படுகிறார், துணைக்கு ஒரு சில மெரைன்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே! சோதனைகள் விரைவில் தொடங்கின - ஸ்கேர்க்ரோவுக்கும்தான்!

அமெரிக்க சோதனைச் சாலையில் இருந்து சிறு தொலைவில் டிராகன் ஐலாண்டில், ரஷ்யர்களால் கைவிடப்பட்ட பெரும் ஆயுதக்கூடமொன்று அமைந்திருக்கிறது! பனிப்போர் உச்சத்தில் இருந்த சமயம் ரஷ்யர்களால் வடிவமைக்கப்பட்ட பேரழிவு ஆயுதம் "டெஸ்லா" அங்குதான் துயில்கிறது! அதனை இயக்கி வான்வெளியில் தீமூட்டி, அமில மழை பொழியச் செய்து குறிப்பிட்ட நாட்டை ஏன் உலகத்தையே அழித்திட முடியும்! சோவியத் பிளவுபட்ட பின்னர் அந்த ஆயுதத்திற்கு வேலையின்றி போனதால், பெயருக்கு சில ராணுவ வீரர்கள் மற்றும் வல்லுனர்களுடன் அதை பராமரித்து வருகிறது ரஷ்யா!

இந்நிலையில் ராணுவ தளவாடங்கள் மற்றும் பல மில்லியன் பணம் கொள்ளை, சிறை உடைப்பு என உலகின் வெவ்வேறு இடங்களில் பல்வேறு சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறுகின்றன!  அதன் தொடர்ச்சியாக டிராகன் தீவில் பணியாற்றும் சொற்ப ரஷ்யர்களையும் அழித்து அத்தீவை கைப்பற்றுகிறது "கள்வர்கள் ராணுவம்" என்ற தீவிரவாத இயக்கம்! சாதாரண ரவுடிக் கும்பல் அல்ல, மிசைல் தடுப்பு ஆயுதங்கள் உட்பட பெரும் ஆயுத மற்றும் ஆள் பலம் பொருந்திய ஒரு குட்டி ராணுவம்! எந்த ஒரு நாட்டுடனும் எந்த ஒரு பேரமும் பேசாமல் டெஸ்லா ஆயுதத்தை முடுக்கும் வேலைகளிலும் இறங்குகிறது!

அத்தீவில் இருந்து தப்பும் ஒரு முதிய ரஷ்ய விஞ்ஞானி ரஷ்ய அரசுக்கு இதைப் பற்றி தகவல் தெரிவிக்கிறார். ரஷ்யா டிராகன் தீவை அழிக்க ICBM ஒன்றை ஏவுகிறது - கள்வர்கள் ராணுவம் மிசைல் வழித்தட அமைப்பை ஹாக் செய்து அது ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பிச் சென்று தாக்குமாறு செய்கிறது. முடுக்கப்பட்ட டெஸ்லா ஆயுதம் அமில வாயுவை பல வாரங்களாக வான்வெளியில் உமிழ்ந்துவிட்ட நிலையில் அதனை இயக்குவதின் இறுதிக்கட்டமாக சக்தி வாய்ந்த வெடிபொருளான சிவப்பு யூரேனியத்தை ஏவுகணை மூலம் விண்ணில் அனுப்பி வெடிக்கச் செய்ய வேண்டும். அதனை ஒரு சில மணி நேரங்களுக்குள் செய்து விடப்போவதாய் கள்வர்கள் ராணுவம் அறிவிக்க அதிர்ச்சியில் உறைகிறது ரஷ்யா! உதவிக்கு வரும் அமெரிக்கா, தன்னுடைய கடற்படை டிராகன் தீவு சென்றடைய நேரம் பிடிக்கும் என்பதால் டிராகன் தீவு அருகே பணியிலிருக்கும் ஸ்கேர்க்ரோ தலைமையிலான சிறிய அணியை முதலில் அனுப்பி வைக்கிறது.

துணைக்கு ஆயுத பலமில்லாத சிறிய அணி, எங்கு போனாலும் தலையை வேட்டையாட வரும் பிரெஞ்சு ஏஜண்டுகள் - இந்த பிரச்சினைகள் போதாது என்று ஸ்கேர்க்ரோவை ஆட்டுவிக்கும் மனக்குழப்பங்கள் வேறு! எதிரியோ சர்வ  வல்லமை படைத்த கள்வர்கள் ராணுவம்! கையிலிருக்கும் நேரமோ வெகு குறைவு! தடுக்காவிட்டால் சீனா, இந்தியா மற்றும் சில நாடுகள் அழிந்து விடும்! இடையில் தெரியவரும் 'கள்வர்கள் ராணுவத்தின் பின்னணியில் இருப்பது யார்?' என்ற அதிர்ச்சியான உண்மை - இப்படி பல இக்கட்டுகளுக்கு இடையே ஸ்கேர்க்ரோ வெற்றி பெறுகிறாரா என்பது மீதக் கதை!

அமெரிக்கர்களின் புதிய எதிரி சீனா என்பதில் சந்தேகம் இல்லை! தம் வளர்ச்சிக்கு போட்டியாக இருக்கும் நாடுகளை, அவர்கள் படைக்கும் புனைவுகளில் எதிரிகளாக காட்டத் தவறுவதில்லை. இந்நாவலின் ஆசிரியர் ஒரு ஆஸ்திரேலியர் எனினும் அமெரிக்கர்களை முன்னிறுத்தி எழுதிய புதினம் என்பதால் அவர்களின் இந்த மரபை பின்பற்றத் தவறவில்லை. பின்னே, ஏதாவது ஒரு சில அமெரிக்க நாளிதழ்களின்  பெஸ்ட் செல்லர் பட்டியகளில் இடம் பெற வேண்டுமென்றால் இதை எல்லாம் செய்து தானே ஆக வேண்டும்! அமெரிக்கர்களின் "உண்மையான எதிரி" யார் என்ற உண்மையை ஒத்துக்கொண்டிருந்தாலும், முடிவில் அவர்களை உலக நாயகர்களாக (பட்டப்பெயர் உபயம்: கமல்) காட்டிக்கொள்ளவும் தவறவில்லை!

நாவலாசிரியர் மாத்யூ கிட்டத்தட்ட ஒரு மசாலா ஹாலிவுட் படத்திற்கு திரைக்கதை / ஸ்டோரிபோர்ட் அமைப்பதைப் போல நாவலை எழுதியிருக்கிறார் - ஹாலிவுட் படங்களின் சுவாரசியங்களையும், அபத்தங்களையும் இம்மி பிசகாமல் கொண்டிருக்கிறது இந்நாவல்! யூகிக்கக் கூடிய திருப்பங்களை கொண்டிருப்பதும், அதீத விவரிப்புகள் மற்றும் சம்பவங்களால் முன்னூறு பக்கத்தில் முடிய வேண்டியதொரு கதையை 450 பக்கத்துக்கு இழுத்திருப்பதும் முக்கிய குறைகள்!  இருப்பினும், உலகத்தின் மிகப்பெரும் தீயசக்தி எந்த நாடு என்பதை சரியாக  இனம் கண்டிருப்பதிலும், ஓரளவுக்கு விறுவிறுப்பான வாசிப்பு அனுபவத்தை தந்திருப்பதிலும் மாத்யூ வெற்றி கண்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை!

..........அமர்க!

பாட புத்தகங்கள் தவிர கையில் கிடைக்கும் எந்த புத்தகத்தையும் படிக்கும் வழக்கம் 18 வயது வரை இருந்தது. இப்போது வருடத்திற்கு அதிகபட்சம் ஓரிரு புத்தகங்கள் படிப்பது உண்டு! கூடுதலாக காமிக்ஸ் படிக்கும் சிறு வயதுப் பழக்கம் இவ்வருடம் மீண்டும் தலை தூக்கியுள்ளது! சென்ற மாதம் US கிளம்பிய போது இந்த வருட கோட்டாவில் ஏதாவது ஒரு நாவலைப் படித்து வைக்கலாமே என்று பெங்களூர் ஏர்போர்ட்டில் உள்ள கிராஸ்வோர்டில் நுழைந்தேன். எந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தாலும் பின்னட்டையில் NY டைம்ஸ் பெஸ்ட் செல்லர், தினத்தந்தி பெஸ்ட் செல்லர் என்று கையிலெடுத்த எல்லாமே பெஸ்ட் செல்லர்களாக இருந்தது பெரும் வியப்பை அளித்தது! ;) ஒருவழியாக அட்டைப்படத்தாலும்(!), கதைச் சுருக்கத்தாலும் கவரப்பட்டு நான் தேர்ந்தெடுத்த நாவல் Matthew Reilly எழுதிய Scarecrow and the Army of Thieves! அதன் விமர்சனமே நீங்கள் மேலே காண்பது! :)

கருத்துகள்

  1. நல்ல ஆங்கில படத்தை பார்த்த பீல் கிடைத்தது. யார் கண்டது ஆங்கில படமாக கூட வரலாம். கண்ணை பார்த்ததும் ஜான் ட்ரவோல்டாவோ என்று நினைத்தேன்.

    US வெள்ளக்காரன் கிட்ட பிலிம் காட்ட வாங்கலையே ? :b

    தங்க கல்லறை மொழி பெயர்ப்பை "அமில மழை" என்று சொல்லுகிறீர்களோ என்று பதிவின் தலைப்பை பார்த்தவுடன் நினைத்தேன். :b

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://en.wikipedia.org/wiki/Matthew_Reilly#Personal_life
      //A big fan of Hollywood blockbusters, Reilly hopes to one day direct a movie adapted from one of his own books.//

      நான் ஏன் பிலிம் காட்ட வேண்டும்? தங்கக் கல்லறை ஹேங் ஓவரில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்! ;)

      நீக்கு
  2. விமானம் என்றதும் ஏதோ சுவாரிசியமான மொக்கை என நினைத்தேன் கதை நன்றாகவே இருந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்த எடுப்பில் கதை சொல்லி போரடிக்க விரும்பாததால் அந்த பீடிகை! :)

      நீக்கு
  3. மெனக்கெட்டு ஒரு ராணுவக் கதையைத் தேடிப்பிடித்துப் படித்து, கஷ்டப்பட்டுத் தொகுத்து, சிரமப்பட்டு எங்களுக்கெல்லாம் புரியவைத்ததைவிட....

    அந்த ஏர்ஹோஸ்டஸின் நடவடிக்கைகளையே கண்காணித்திருக்கலாம். :)

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    பதிலளிநீக்கு
  5. ரசனையான புத்தகப்பகிர்வு .. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia