007 ஜேம்ஸ் பாண்ட் - தமிழில்!

ஆக்ஷன் படங்கள் என்பது ஆண்களுக்கு மட்டுமானது என்ற தவறான பிம்பம் ஆரம்பத்திலிருந்தே நம் மனதில் அழுந்தப் பதிந்து விட்டது! அதற்குரிய அடித்தளங்கள் சிறுவயதில் நமக்கு கொடுக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் முதற்கொண்டு பலமாக அமைக்கப்பட்டுவிடுகின்றன! ஆக்ஷன் ஹீரோவான 007 ஜேம்ஸ் பாண்ட்டின் படங்கள் எனக்கு சிறு வயதிலேயே மிகவும் பிடித்துப் போனதில் வியப்பில்லைதான்...!

எனக்கு 007 ஜேம்ஸ் அறிமுகமானது 006 வயதில்! பக்கத்து தெருவில்தான் குடியிருந்தார் - என்று சொன்னால் மட்டும் நீங்கள் நம்பி விடவா போகிறீர்கள் ஆனால், நிஜமாகவே ஆறு வயதிலேயே எனக்கு ஜேம்ஸ் பாண்டின் அறிமுகம் ராணி காமிக்ஸின் மூலமாக கிடைத்தது! காமிக்ஸ் என்றதும் சிதறு தேங்காயைப் போல தெறித்து ஓடுபவர்கள் கீழே இருக்கும் அழகிய காமிக்ஸ் பக்கத்தை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் ;) நான் என் வாழ்க்கையில் திருட்டுத்தனமாய் படித்த (பார்த்த?) முதல் புத்தகம் ஜேம்ஸுடையது என்பது எளிதில் விளங்கிவிடும்! பாட புத்தகத்துக்கு நடுவில் புதைத்து பாண்டைப் படித்தவர்களில் நானும் ஒருவன்!

உள்ளாடைகளில் (சில சமயம் அதுவும் இன்றி) சுற்றும் அழகிய பெண்களைத் தவிர்த்துப் பார்த்தாலும் ஜேம்ஸ் காமிக்ஸ்களில் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது! உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பயணிக்கும் அசத்தலான கதையமைப்பு, ஜேம்ஸின் ஸ்டைல், உலகை மிரட்டும் வில்லன்கள், ஜேம்ஸ் விரட்டும் கார்கள், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பனிப்போர்,  நவீன ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிகள், ஆழ்கடலில் நடக்கும் சண்டைகள்... இத்யாதி, இத்யாதி! ஆங்கிலப் படங்கள் நாங்கள் பார்க்க அனுமதியும், வாய்ப்பும் இல்லாத அந்நாட்களில் ஜேம்ஸின் காமிக்ஸ் புத்தகங்கள் அக்குறையைத் தீர்த்தன!

ஜேம்ஸ் பாண்டாக ஷான் கானரியில் தொடங்கி டேனியல் கிரெயிக் வரை பல நடிகர்கள் நடித்ததைப் போல, காமிஸ்களிலும் பல ஓவியர்கள் ஜேம்ஸை தங்கள் பாணியில் வரைந்திருக்கிறார்கள்! அவர்களில் முக்கியமான இருவர் John McLusky & Yaroslav Horak. மெக்லஸ்கியின் ஓவிய பாணி பாலீஷ்டாக, தெளிவாக இருக்கும் - பெண்களை மிக அழகாக வரைந்திருப்பார்! ஹோராக்கோ அதிரடியாக வரைவார், ஆக்ஷன் காட்சிகளில் ஒரு வீரியம் இருக்கும் - கண்களை மிகவும் கூர்மையாக வரைவார்! கீழே உள்ள பாண்ட்களில் மெக்லஸ்கியால் வரையப்பட்டவர் யார், ஹோராக்கால் வரையப்பட்டவர் யார் என்பதை நீங்களே சொல்லி விடுவீர்கள்! அதே போல ஜேம்ஸை படைத்த இயான் ப்ளெமிங்கைத் தவிர மற்ற பல கதாசிரியர்களும் ஜேம்ஸ் பாண்ட்  காமிக்ஸுகளுக்கு கதை எழுதி இருக்கிறார்கள்! உதாரணத்திற்கு மாடெஸ்டி ப்ளைசியைப் படைத்த Peter O'Donnell ஜேம்ஸுக்கும் கதை எழுதியிருக்கிறார்.

ராணி காமிக்ஸ் பெற்ற பெருத்த வரவேற்பிற்கு ஜேம்ஸ்தான் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. மாதம் இருமுறை இதழான ராணி காமிக்ஸில் ஒரு இதழில் ஜேம்ஸ், மறு இதழில் வேறு ஒரு நாயகர் என தொடர்ச்சியாக ஜேம்ஸ் கதைகள் வெளிவந்த காலமது! ராணியைத் தவிர்த்து முத்து காமிக்ஸிலும் தலை காட்டியிருக்கிறார் ஜேம்ஸ்! ஆனால் ராணியில் வந்தபோது இருந்த தாக்கம் முத்துவில் இல்லாததிற்கு காரணம், ஜேம்ஸின் நல்ல கதைகள் அனைத்தும் ஏற்கனவே ராணியில் வந்து விட்டிருந்தன என்பதால் இருக்கலாம்! இவற்றைத் தவிர இன்னும் சில பதிப்பகங்கள் ஜேம்ஸின் காமிக்ஸ்களை (தமிழில்) வெளியிட்டிருக்கின்றன!

ஜேம்ஸின் பெரும்பாலான காமிக்ஸ்கள், 1958 முதல் தொடங்கி 1984 வரை பல்வேறு ஆங்கிலப் பத்திரிக்கைகளில் டெய்லி ஸ்ட்ரிப்களாக வெளிவந்தவையே! இவற்றைப் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்! ஸ்ட்ரிப்களைத் தவிர மேலும் சில காமிக்ஸ் புத்தகங்களும் வந்துள்ளன - விவரங்களுக்கு இங்கே செல்லவும்! தற்சமயம் ஏனோ புதிய ஜேம்ஸ் காமிக்ஸ்கள் வெளிவருவதில்லை! சில வருடங்களுக்கு முன் Young Bond என்ற பெயரில் ஐந்து நாவல்கள் வெளியாகின, அதை சார்ந்து ஒரு கிராபிக் நாவலும் வெளியிடப்பட்டது, இது ஜேம்ஸின் மாணவப் பருவத்தில் நடப்பதாய் அமைந்திருக்கிறது (நான் படித்ததில்லை). பழைய ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ்களின் தொகுப்பு (ஆங்கிலம்) இப்போது ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கிறது!
Casino Royale Strip
காமிக்ஸ் தவிர்த்து ஜேம்ஸின் திரைப்படங்களும் என்னை சிறு வயதில் வெகுவாய் கவர்ந்தன! அவற்றில் வரும் பாண்ட் தீம் மியூசிக்கும், சில படங்களின் டைட்டில் சாங்குகளும் அட்டகாசமாக இருக்கும்! பழைய ஜேம்ஸ் படங்களை இப்போது பார்த்தால் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை! எவ்வளவுதான் மொக்கையாக இருந்தாலும் டிவியில் பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்களை போடும் போதெல்லாம் கண் கொட்டாமல் பார்க்கும் நடுத்தர வயது ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கல்யாணமான புதிதில் என் மனைவியிடம் ஓவர் பில்ட் அப் கொடுத்து "Quantum of  Solace"-க்கு அழைத்துச் செல்ல, இண்டர்வல் வரை அரை  குறை உறக்கத்தில் இருந்த அவர், பின்னர் பாப்கார்ன் நொறுக்கிய களைப்பில் ஆழ்ந்து உறங்கியதும், சற்று நேரம் கழித்து எனக்கும் கொட்டாவி வர ஆரம்பித்ததால் அவரை எழுப்பி வீடு திரும்பியதும் இன்றும் புன்னகையை வரவழைக்கும்! கேசினோ ராயலைத் தவிர்த்து சமீபத்தில் வெளியான பெரும்பாலான பாண்ட் படங்கள் சுமார் ரகம் என்பது பரிதாபகரமான ஒன்று! Skyfall பாக்ஸ் ஆஃபிஸிலும், ரசிகர்கள் மத்தியிலும் விழாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

விமர்சனம்: Skyfall - 2012 - ஐம்பதிலும் ஆக்ஷன் வரும்!

பி.கு.:
1. கற்போம் பிரபு தனது பலே பிரபு வலைப்பூவில், தன்னுடைய காமிக்ஸ் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். காமிக்ஸ் பற்றி பதிவு செய்யும் சிறுபான்மை பதிவர்கள் வட்டத்தில் புதிதாய் இணைந்திருக்கும் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்! :)
2. ஜேம்ஸ் தோன்றிய ராணி / முத்து காமிக்ஸ் கவர் ஸ்கேன்கள் விரைவில் இணைக்கப்படும்!
3. இங்கு தற்போது இணைக்கப்பட்டுள்ள ராணி காமிக்ஸ் ஸ்கேன்கள் ரஃபிக்கின் வலைப்பூவில் இருந்து அனுமதி இன்று சுடப்பட்டுள்ளன ;)

15 comments:

 1. மேலும் பல கவர்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
  நண்பர் கனவுகளின் காதலரின் விமர்சனம் skyfall பற்றி சிறிது பயம் உண்டாகுகிறது.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் ஒரு சில நாட்களில்! :)

   Delete
 2. ஜேம்ஸ்பான்ட் காமிக்ஸ்களை படித்த போதும் அவற்றை எதையும் நான் சேகரிக்கவில்லை.ஆனால் நான் உங்கள் அளவுக்கு படிக்கவில்லை என்பது உண்மை.

  படங்களை போலவே இந்த கதைகள் கொஞ்சம் குதூகலமாய், சாதுர்யமாய் இருந்ததே அனைவரையும் கவரக் காரணம்.

  ReplyDelete
 3. ஸ்கை பால் விமர்சனம் என்று ஏமாந்து விட்டேன். :-)

  ராணி காமிக்ஸ் தவறாமல் என் வீட்டுக்கு வந்தாலும், என்னால் பாண்டை வாசித்து கலங்கலாகதான் நினைவுக்கு வருகிறது.

  //பெண் : என் உடம்பில் ஆடையே இல்லையே?
  ஜேம்ஸ் : நெக்லஸ் இருக்கிறதே போதும்.
  //

  என்ன ஒரு கருத்தாழமிக்க வசனங்கள் :D . ஜேம்ஸின் குறும்புகளுக்கு எல்லையே இல்லை.

  இப்படியெல்லாம் படங்கள் ராணி காமிக்ஸில் கத்திரி போடாமல் வந்ததா ? கலாசார காவலர்கள் அப்போது யாரும் இல்லையோ?

  நான் ஜேம்ஸ் ரசிகன் ஆனது அவர் படங்களை பார்த்து தான்.

  பலே பிரபு பற்றி மூன்றாவது முறையாக சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறன். லிங்கும் அதே லிங்க் நண்பா

  //
  3. இங்கு தற்போது இணைக்கப்பட்டுள்ள ராணி காமிக்ஸ் ஸ்கேன்கள் ரஃபிக்கின் வலைப்பூவில் இருந்து அனுமதி இன்று சுடப்பட்டுள்ளன ;) //

  உங்க, உங்க நேர்மைய பாராட்டுறேன். :D

  ReplyDelete
  Replies
  1. //இப்படியெல்லாம் படங்கள் ராணி காமிக்ஸில் கத்திரி போடாமல் வந்ததா ? கலாசார காவலர்கள் அப்போது யாரும் இல்லையோ?//

   yes it came for few jame's rani comics.
   but my fate in my copy those parts has been covered using a baal point pen.

   Delete
  2. @Raj:
   விமர்சனமும் ரெடி! :)

   //பலே பிரபு பற்றி மூன்றாவது முறையாக சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறன். லிங்கும் அதே லிங்க் நண்பா//
   இல்லையே! ஃபேஸ்புக்கில் ஒரு முறை, இது இரண்டாவது முறை! எனி ப்ராப்ளம்?! :)

   Delete
 4. நல்ல பதிவு! கார்த்திக் பதிவிடும் முறையில் தரம் அதிரித்துக்கொண்டேயிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
  அந்நாட்களில், ராணியில் வந்த ஏதோவொரு ஜேம்ஸ் கதை முத்துவிலும்(அல்லது லயனில்) வந்திருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது முத்துவின் மொழிபெயர்ப்புத் தரம் அன்றே வியக்கவைத்தது.
  இன்னொரு வித்தியாசம்- ராணியில் 'உள்ளது உள்ளபடியே' இருக்கும் படங்கள், முத்துவில் இருட்டடிப்பு ( ஆடை வரையப்பட்டிருக்கும்) செய்யப்பட்டிருக்கும். முத்துவின் இந்தக் கண்ணியம் அந்நாட்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த விஷயங்களில் ஒன்று!

  மற்றபடி நான் அன்று ராணியில் (திருட்டுத்தனமாக) ரசித்த அதே பக்கங்களை இங்கே பதிவிட்டு, மீண்டும் ரசிக்க வைத்த உங்களுக்கு என் ஜொள் கலந்த நன்றி!! ;)

  ReplyDelete
  Replies
  1. //முத்துவின் இந்தக் கண்ணியம் அந்நாட்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த விஷயங்களில் ஒன்று//

   //நான் அன்று ராணியில் (திருட்டுத்தனமாக) ரசித்த //

   //ஜொள் கலந்த நன்றி!! ;)//

   நீங்க நல்லவரா, கெட்டவரா?! :D

   Delete
 5. சிறு வயது ஞாபகம் வந்தது... நண்பர்களின் இணைப்பிற்கு நன்றி...tm3

  ReplyDelete
 6. ஜேம்ஸ் பாண்ட் கதைகளை ராணி காமிக்ஸில் படித்து சேகரித்தும் வந்தேன்! பின்னர் என் ஒன்று விட்ட தம்பியிடம் கொடுத்தேன். இருக்கிறதா என்று கேட்க தூண்டுகிறது உங்கள் படைப்பு! வீ மிஸ் இட்!

  ReplyDelete
 7. அடடே!இவ்வளவு நாளும் இதைப்படிக்கவில்லையே!சூப்பர்.

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia