ஏலகிரியும், ஏமாறாத சோணகிரியும்!

குட்டிப் பயலின் கோடை விடுமுறை முடிவதற்குள், ஒரு சூறாவளி உல்லாசப் (!) பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தோம்! ஒரே நாளில் சென்று திரும்பக் கூடிய இடங்களின் பட்டியலில், நாங்கள் இதுவரை சென்றிராத, "ஷ்ரவணபெளகொளா" கவனத்தை ஈர்த்தது! இணையத்தை துளாவிய போது, மலை உச்சியை அடைய காலணிகள் இன்றி, அறுநூற்றுச் சொச்சப் படிகளை கடக்க வேண்டும் என்பது தெரிய வந்தது! அனலாய் தகிக்கும் படிகளில், வெற்றுப் பாதங்களுடன் நாட்டியமாடும் விருப்பம் இல்லாததால், அங்கு செல்லும் முடிவை கால் கழுவினோம்!

கொஞ்சம் தமிழ்நாட்டுப் பக்கமாக யோசித்ததில், ஏலகிரி என் நினைவிற்கு வந்தது! "இதுவரை செல்லாத இடம், குளுகுளு கோடைத் தலம்! ஃபிரிட்ஜில் வைத்த தயிர் சாதம் போல, சும்ம்மா ஜிலுஜிலுன்னு இருக்கும்" என்று நான் அளந்து விட்டதில், என் மனைவி உடனே சம்மதம் தெரிவித்தார்! குட்டிப் பயலைப் பொறுத்த வரை, எந்த இடமாக இருந்தாலும் கவலை இல்லை; காரில் வெளியே கிளம்பினாலே, அவனுக்கு உற்சாகம் பீறிடத் துவங்கி விடும்!

18ம் தேதி - காலை ஆறு மணிக்கு கிளம்பினோம்; அன்று மாரத்தான் பந்தயம் நடக்கவிருந்ததால், போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்து, சுற்றலில் விட்டு விட்டார்கள்! 'எலெக்ட்ரானிக் சிட்டி - எலிவேடட் ஹைவேயை' அடைந்த பின் தான் சற்று நிம்மதியாக இருந்தது! ஆளரவமற்ற அந்த பத்து கிலோ மீட்டர் சாலையை ஜிவ்வென்று கடந்து, அதன் முடிவில் இருந்த டோல் பிளாசாவில், திரும்பி வருவதற்கும் சேர்த்து மொய் எழுதி விட்டு, ஓசூர் சாலையைத் தொட்ட போது லேசாகப் பசிக்கத் துவங்கி இருந்தது!

வழக்கமாக செல்லும் ஓசூர் சரவண பவனில் வண்டியை நிறுத்தினேன்! சென்னை சரவண பவனுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றாலும், சுவையும் தரமும் நன்றாகவே இருக்கும்! இட்லியை ஆர்டர் செய்ய, அழையா விருந்தாளியாக வடையும் வந்து சேர்ந்தது! பெங்களூரில், இட்லி கேட்டால் இட்லியை மட்டுமே தருவார்கள்! ஆனால், எனக்கிருந்த பசியில், வடையைத் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! :) பிறகு, பூரி தோசை வகையறாக்களையும் உள்ளே தள்ளி விட்டு, எனக்கு மட்டும் ஒரு காஃபியை வரவழைத்தேன்!

தமிழ்நாட்டு ஓட்டல்களில், வடை மேட்டருக்கு அடுத்த படியாக பயங்கர கடுப்பேற்றும் விஷயம் - ஆறிப் போன காஃபி! டபராவில் கூடுதலாக ஊற்றப் பட்ட காஃபியின் நடுவே, குட்டித் தீவு போல நின்று கொண்டிருந்தது காஃபி டம்ளர்! சர்க்கரையைக் கலக்குவதற்காக இரண்டையும் கலந்து குடித்தால், அது ஐஸ் காஃபியாக மாறி விடும் என்பதோடு; டபராவில் கால் நனைத்த டம்ளர், சொட்டு சொட்டாய் சட்டை மீது ஒழுகித் தொலையும்! என் புலம்பல்களைக் கேட்ட மனைவி, "காஃபி குடிச்சோமா, கிளம்பினோமான்னு இல்லாம... ஏன் இந்த வெட்டி ஆராய்ச்சி?!" என்று கூடுதல் கடுப்பேற்றினார்!

வயிறு நிரம்பிய திருப்தியில், அதிக நெரிசல் இல்லாத நெடுஞ்சாலையில், நிதானமான வண்டியை உருட்டினேன் - குழந்தை பிறந்த போது, கூடவே நிதானமும் பிறந்து விட்டது! ஆனால், குட்டிப் பயல் வளர வளர, என்னை வேகமாக ஓட்டச் சொல்லி வருகிறான்! கிருஷ்ணகிரியில் திரும்பி, பர்கூர் வழியே, திருப்பத்தூர் தாண்டி, வாணியம்பாடியை அடையும் முன்னர், ஏலகிரி செல்லும் திருப்பம் வந்து விடுகிறது! (அங்கே திரும்பாமல், இன்னொரு நாற்பது கிலோ மீட்டர் நேரே பயணித்தால், ஆம்பூர் சென்று பிரியாணி சாப்பிடலாம்!)

குறுகலான மலைப் பாதையில், ஆங்காங்கே நின்று படம் பிடித்துக் கொண்டு, 14 கொண்டை ஊசி வளைவுகளையும் கடந்து, உச்சியை அடைந்த போது காலை மணி பத்தரை ஆகி விட்டிருந்தது! ஏலகிரி, பெங்களூர் "நந்தி ஹில்ஸ்" அளவிற்கு தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன்! ஆனால், வழியெங்கும் வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் சூழ - நான் நினைத்தததை விட, ஊர் பெரியதாகவே இருந்தது!

அத்தனாவூர் படகு இல்லம் அருகே காரை நிறுத்தி விட்டு, வெளியே கால் பதித்த போது சில்லென்று இருந்தது. படகு இல்லத்தை ஒட்டிய பூங்காவில், கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்க; உட்கார வாகான இடம் கிடைக்காததால், பூங்காவை ஒரு சுற்று வந்து விட்டு, படகு இல்லத்துக்கு சென்றோம். கிட்டத்தட்ட ஐம்பது பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்! நீண்ட நேரம் காக்க நேர்ந்தாலும், இளவெயிலில் செய்த படகுப் பயணம் இதமானதாகவே இருந்தது!

பூங்காவை விட்டு வெளியே வருவதற்குள், காற்றில் இருந்த சிலுசிலுப்பு குறைந்து, சூரியன் தகிக்கத் துவங்கி இருந்தது! அடுத்ததாக, ஏலகிரி முருகன் கோவிலுக்கு சென்றோம். சிறிய குன்றின் மீது அமைந்திருந்த அந்தக் கோவிலை அடைய, சில படிகளை காலணிகள் இன்றி கடக்க வேண்டி இருந்தது! நாங்கள் "ஷ்ரவணபெளகொளா" செல்லாதது சரியான முடிவே என்பதை அந்தப் படிகள் சூடாக ஆமோதித்தன! தரிசனம் முடிந்ததும் - ஆலயத்திலும், கடிகாரத்திலும், வயிற்றிலும் ஒரு சேர ஒரு மணி அடித்தன!

நீலகிரியில், ஒவ்வொரு தெருவிலும், குறைந்த பட்சம் ஒரு ரிஸார்ட் அல்லது ஹோட்டலாவது இருக்கிறது! அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் (Paragliding) மற்றும் ட்ரெக்கிங் பிரியர்களின் வருகை அதிகம் இருப்பதால், அறைகளுக்கான தேவையும் அதிகம் போலும்! மதிய உணவுக்கு, குமாரராஜா பேலஸ் சென்றோம்! ரெஸ்டாரன்ட்டில் உணவு பரவாயில்லை ரகம்; ஆனால், ஹோட்டல் படு அட்டகாசமாக இருந்தது! அடுத்த முறை, இங்கு சாவாகாசமாக தங்கிச் செல்வது போல வர வேண்டும் என்ற என் யோசனையை மனைவியிடம் சொல்ல, அவர் காதில் விழாதது போல "கிளம்பலாமா?!" என்றார்!

வெளியே செக்யூரிட்டியிடம், கோடைவிழா நடக்கும் இடம் எங்கிருக்கிறது என்று கேட்க - அவர், "தேர்தல் காரணமாக இவ்வருட கோடைவிழாவை ரத்து செய்து விட்டார்கள்" என்றார்! ஜலகம்பாறை அருவிக்கு வழி கேட்டோம் - "பாறை இருக்கிறது, அருவியில் நீர் தான் இல்லை" என்றார்! வேறு என்ன தான் பார்க்கலாம் என்று கேட்டதிற்கு, "ட்ரெக்கிங் பண்ண நிறைய இடம் இருக்கு; ஆனா, குழந்தையோட இந்த வெயிலில் போறது கஷ்டம் சார்!" என்று புன்னகைத்தார்; நன்றி சொல்லி விட்டு நகர்ந்தோம்!

படகு இல்லப் பூங்காவுக்கு எதிரே, இன்னுமொரு பெரிய பூங்கா இருந்தது நினைவுக்கு வர அங்கே சென்றோம்! கவுன்டரில் மற்ற இடங்கள் பற்றி விசாரித்த போது, அவரும் ஹோட்டல் செக்யூரிட்டி கூறியதையே உறுதி செய்தார். அழகான பூங்கா - அதன் நடுவில், "நடன நீரூற்று" நிகழ்ச்சி நடை பெறும் இடம்; ஆனால், அது இரவு ஏழு மணிக்கு மேல் தான்! சுற்றிப் பார்த்த பிறகு, மரத்தடியில் அமர்ந்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்; நிழலாக இருந்தாலும், அனலாக இருந்தது! "ஃப்ரிட்ஜு, தயிர் சாதம்னு ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சே?!" என்ற என் மனைவியிடம், "டிசம்பர்ல தான் அப்படி இருக்கும்!" என்று வியர்வையை வழித்த படி சமாளித்தேன்!

கொளுத்தும் வெயிலில், வேறு இடங்களை சுற்றிப் பார்க்க மனமின்றி, நான்கு மணிக்கே பெங்களூர் நோக்கி கிளம்பி விட்டோம்! நாங்கள் சென்ற சமயம் சரியில்லையே தவிர, ஏலகிரி ஒரு சிறப்பான சுற்றுலாத் தலம் என்பதில் ஐயம் இல்லை! ஆனால், இந்த "ஒரு நாள் / அரை நாள் பயணம்" எல்லாம் வேலைக்கு ஆகாது! சரியான சீசனில், முறையாக திட்டமிட்டுச் சென்றால், ஓய்வாக பொழுதைக் கழிக்கலாம்! முன்யோசனை இன்றிக் கிளம்பினால், ஏமாந்த சோணகிரியாகத் தான் திரும்பி வர வேண்டி இருக்கும்! :)

ஏலகிரிப் பயணம் எங்களுக்குப் பிடித்ததோ இல்லையோ, எங்கள் மகனுக்கு படகுச் சவாரியும், அங்கே வாங்கிய பெரிய சைஸ் கார் பொம்மையும் ரொம்பவே பிடித்து விட்டது! திரும்பும் வழியில், வண்டியை வேகமாக ஓட்டச் சொல்லி அவன் செய்த நச்சரிப்பு தாங்காமல், ஆக்ஸிலரேட்டரை அழுத்தி மிதித்தேன்! பெங்களூர் ஹைவேயில், எனது பத்து வருடப் பழைய "ஃபியட் பெட்ரா" 140-ஐத் தொட்ட தருணத்தில், எனக்குள் பழைய உற்சாகம் தொற்றிக் கொள்ள - ஏலகிரிப் பயணம் எனக்கும் பிடித்துப் போயிருந்தது!

கருத்துகள்

  1. ரொம்ப நாளாக ஏலகிரி போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். அனுபவத்திற்கும் பகிர்வுக்கும் தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு ஏற்ப, திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளுங்கள் ராம்!

      நீக்கு
  2. அருமையான பதிவு கார்த்திக்..
    நானும் திருப்பத்தூர் காரன் தான்..
    ஏலகிரிக்கு அடிக்கடி பைக்கில் போவோம்.குளிர்க்காலத்தில் மிகவும் ரம்மியமாக இருக்கும் தவிர மற்றபடி ஒன்றுமில்லை...
    எல்லாம் அருமையாக பதிவு செய்த நீங்கள் ஏலகிரியில் கிடைக்கும் பலாப்பழங்களைப்பற்றி எழுதவில்லையே..?
    வேர்ப்பலா மிகவும் மலிவாக கிடைக்கும்மிடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! உண்மையில் கட்டுரையின் நீளம் கருதி பல விஷயங்களை நீக்கியதில், இந்த பலா விஷயமும் இணைந்து விட்டது! :D முதல் Collage-ல், இடது ஓரத்தில் இருக்கும் படத்தைக் கொஞ்சம் கவனியுங்களேன்? சர்வ சாதாரணமாக பலா மரங்களைப் பார்க்க முடிந்தது! குளிர்காலத்தில் மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும்! :)

      நீக்கு
  3. Wow அழகாக பயணத்தை தாெகுத்து அளித்துள்ளீர்கள் நகைச்சுவையை பதிவு முழுதும் அள்ளித்தெளித்துள்ளீர்கள், என்ன அதற்கு எப்பாெழுதும் மனைவியையே பயன்படுத்துகிறீற்கள் 😀 அவர்கள் பதிவுகளை படிக்காததால் தப்பித்துக்காெள்கிறீற்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெஞ்சிக் கூத்தாடினாலும் அவர் என் பதிவுகளை மட்டும் படிக்கவே மாட்டார்! ;)

      நீக்கு
  4. நல்ல கட்டுரை கார்த்திக் -

    ஆனால் இந்த எதுகை மோனை டைட்டில் மற்றும் சில வாக்கியங்கள் ஏதோ ஒரு ப்ளாகை ஞாபகப் படுத்துவது இது முதல் முறை அல்ல - நான் சொல்வதும் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு அந்த "ஏதோ ஒரு ப்ளாக்" மீது அபிமானம் கூடியிருப்பதால், எந்த ப்ளாகைப் பார்த்தாலும் அப்படியே தெரிகிறது போலும்?! ;) மற்றபடி, எதுகை மோனை டைட்டில் வைப்பது சும்மா ஒரு ஜாலிக்கு தான் பாஸ்! முதலில் வைக்க நினைத்த தலைப்பு: "ஏலகிரியில் கால் தினம்!" - தலைப்பே போரிங்காக இருக்கிறது இல்லையா?! :D

      நீக்கு
  5. // டபராவில் கூடுதலாக ஊற்றப் பட்ட காஃபியின் நடுவே, குட்டித் தீவு போல நின்று கொண்டிருந்தது காஃபி டம்ளர்! சர்க்கரையைக் கலக்குவதற்காக இரண்டையும் கலந்து குடித்தால், அது ஐஸ் காஃபியாக மாறி விடும் என்பதோடு; டபராவில் கால் நனைத்த டம்ளர், சொட்டு சொட்டாய் சட்டை மீது ஒழுகித் தொலையும்! //

    ஆடடா! இந்த மாதிரி விஷயங்களுக்காகவே உங்க ப்ளாகை அடிக்கடி எட்டிப்பார்ப்பது அவசியமாகிறது. Good stress buster! ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ரமேஷ்! :) மான் கராத்தே மாதிரி "மான் வராதே"-வா? (உங்கள் ப்ரொஃபைல் போட்டோ) :D

      நீக்கு
  6. வழக்கம் போலவே அருமையான எழுத்துநடை மற்றும்,...

    " டபராவில் கூடுதலாக ஊற்றப் பட்ட காஃபியின் நடுவே, குட்டித் தீவு போல நின்று கொண்டிருந்தது காஃபி டம்ளர்!... "

    எதார்த்தமான நகைச்சுவை !

    ஏலகிரியை போல, பார்த்து மகிழ இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் தமிழ்நாட்டிலேயே நிறைய இருக்கின்றனதான்.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதற்கு நன்றி நண்பரே!

      //ஏலகிரியை போல, பார்த்து மகிழ இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் தமிழ்நாட்டிலேயே நிறைய இருக்கின்றனதான்.//
      உண்மை தான்! மதுரைக்காரனாக இருந்தும் இதுவரை கொடைக்கானல் சென்றதில்லை! தூர இருந்தால் தான் ஆர்வம் வரும் போல! :D

      நீக்கு
  7. சிறந்த பதிவு.உங்கள் எழுத்துகளில் எனக்கு மிகவும் கவர்ந்தது தெவிட்டாத இன்பம் தரும் நகைச்சுவைதான்.நன்றி சார்

    பதிலளிநீக்கு

  8. உபயோகமான பயணக்கட்டுரை நன்றி நண்பரே.... சும்மா இருக்கும்போது கடைப்பக்கம் வாங்க......
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் ரொம்ப நாளாய் ஏலகிரி போய் வரனும்ன்னு ஆசைதான். ஆனா அங்க ஒண்ணுமில்லன்னு சொல்றாங்க எல்லோரும்.

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் வந்த பொது அருவியில் நீர் இல்லாமல் இருக்கலாம். அதே சமயம் இங்கு நிறைய பார்வையிடும் இடங்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. மலையேற்றம் தடை கோடை விழா நடைபெறவில்லை. இதற்கு நீங்கள் அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டுமே தவிர, மற்றவர்களை அல்ல. மேலும் மலையேற்றத்திற்கு முறையான அனுமதி பெற வேண்டும் வனத்துறையிடம் இருந்து. அதை விடுத்தது இது அது என்று எழுத கூடாது

    பதிலளிநீக்கு
  11. முன்னேற்பாடு மிக முக்கியம் அன்பரே

    பதிலளிநீக்கு
  12. 1xbet korean: 1xbet korean
    1xbet korean: 1xbet korean: 샌즈카지노 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean: 1xbet korean 1xbet korean: 1xbet 제왕카지노 korean: 1xbet

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia