லூசியா - கனவுகளின் காதலன்!


நீ மாயையினுள்ளா...? மாயை உனக்குள்ளா?!
நீ உடலினுள்ளா...? உடல் உனக்குள்ளா?!
நீ கனவினுள்ளா...? கனவு உனக்குள்ளா?! 
நீ போதையினுள்ளா...? போதை உனக்குள்ளா?!

ந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்க, படம் துவங்குகிறது! பலத்த அடி பட்டு கோமாவில் கிடக்கிறான் நிக்கி என்ற நிகில்; அதற்கான காரணத்தை அறிய புலன் விசாரணைகள் நடந்து கொண்டிருக்க, இடையிடையே அவனது பிளாஷ்பேக் காட்சிகள் நமக்குக் காட்டப் படுகின்றன!

பெங்களூர் தியேட்டர் ஒன்றில், டார்ச் அடித்து பார்வையாளர்களுக்கு வழி காட்டுபவன் நிக்கி! தூக்கக் குறைபாடு வியாதி கொண்ட அவனுக்கு, லூசியா என்ற போதைப் பொருளின் அறிமுகம் கிடைக்கிறது! ஆழ்ந்த தூக்கத்தையும், அத்தூக்கத்தில் விரும்பிய கனவுகளையும் (Lucid dream) வரவழைக்கக் கூடிய அந்த மாத்திரையின் உதவியுடன் - அன்றிரவு சுகமான கனவுகளுடன், நிம்மதியான நித்திரை அவனை ஆட்கொள்கிறது!

கனவில் அவன் ஒரு புகழ் பெற்ற சினிமா நட்சத்திரமாக ராஜ வாழ்க்கை நடத்துகிறான்; நிஜத்திலோ - கீழ்மட்ட வேலை, காதல் தோல்வி, தூக்கமின்மை என்று அவனது வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானதாக இருக்கிறது! நிஜத்தை விட கனவை நேசிக்கத் துவங்கும் அவன், அதை வரவழைக்கும் லூசியாவுக்கு அடிமையாகி விடுகிறான். ஒரு கட்டத்தில், எது கனவு, எது நிஜம் என்ற தெளிவு அவனிடம் இருந்து முற்றிலும் அகன்று விடுகிறது. எதிர்பாரா ஒரு திருப்பத்துடன், அவனைப் பற்றிய புலன் விசாரணையும் ஒரு முடிவுக்கு வருகிறது! நிக்கி பிழைத்தானா?!

Inception போன்ற ஹாலிவுட் படங்கள் ஏற்படுத்தக் கூடிய அதே அளவு தாக்கத்தை, கருத்தளவில் இப்படமும் ஏற்படுத்துகிறது! இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை; இன்செப்ஷனின் CG வித்தைகளுக்கு அருகே கூட லூசியாவால் நெருங்க முடியாது என்றாலும், அதைத் தாண்டியும் சுவாரசியமான ஒரு த்ரில்லராக அமைந்திருப்பது தான் இப்படத்தின் தனித்தன்மை!

இப்படி ஒரு ரிஸ்க்கான கான்செப்டை வைத்து படமெடுத்த இயக்குனர் பவன் குமார் பாராட்டப் பட வேண்டியவர்! கனவுகளையும், நிஜத்தையும் குழப்பமின்றி வேறுபடுத்திக் காட்டிய விதம் எளிமை! பூர்ணசந்திராவின் இசையமைப்பு அருமை, ஓரிரு பாடல்கள் தாளமிட வைக்கின்றன! இசை மட்டுமல்ல, இப்படத்தில் - நடிப்பு, காட்சியமைப்பு, CG ஆகிய எதுவுமே துருத்திக் கொண்டு தெரியாமல் இயல்பாக இருக்கின்றன! கதாநாயகர் சதீஷ், வழக்கமான கன்னட ஹீரோக்களில் இருந்து மாறுபட்ட ஒரு முகம்; நாயகி ஸ்ருதியும் அப்படியே - தெருவில் எதிர்கொள்ளும் பெங்களூர் பெண்ணைப் போன்ற எளிமையான தோற்றம்!

13 வருட பெங்களூர் வாசத்தில், உபேந்திராவின் H20-விற்கு அடுத்த படியாக, நான் பார்த்திருக்கும் இரண்டாவது கன்னடப் படம் இது - பிரச்சினை அதுவல்ல! நான் கவனித்த வரை, கன்னடர்களுக்கே கூட அவர்களின் திரைத்துறை மேல் அதிக நாட்டம் கிடையாது! "தமிழ், தெலுங்கு படங்களை திரையிட்டு அதிக லாபம் பார்க்கலாமே?!" - இது, நிக்கி பணியாற்றும் தியேட்டர் உரிமையாளரிடம், படத்தில் சொல்லப் படும் வசனம்; அதில் உண்மை இல்லாமல் இல்லை!

பெங்களூரில், அனைத்து மொழிப் படங்களின் Pirated DVD-களும் எளிதில் கிடைக்கும்! ஆனால், கன்னடப் படங்களை பொருத்த வரை ஒரிஜினல் DVD-களை மட்டுமே விற்பார்கள்! மற்ற மொழிப் படங்களை கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிடவும் தடை இருக்கிறது! இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும், கன்னட சினிமாக்கள் ஈட்டும் கமர்ஷியல் வெற்றியின் அளவு மிகச் சிறியதே! அதுவும் லூசியா போன்ற பரீட்சார்த்த ரீதியிலான படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்!

வெறும் முக்கால் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தரமாக தயாரிக்கப் பட்ட இப்படம், மூன்று கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது! ஆனால், இப்படம் கன்னடத் திரைத்துறைக்கு பெற்றுத் தந்திருக்கும் நற்பெயர் விலை மதிப்பற்றது; கன்னடப் படங்கள் மேல் நாம் வைத்திருக்கும் பிம்பங்களை தகர்த்தெறியக் கூடியது! தமிழில் வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ண வைக்கக் கூடிய படம் இது! (இத்தகைய படங்கள் தமிழில் வந்தாலும் கல்லா கட்டாது என்பது வேறு விஷயம்!).

வளர்ந்து வரும் கன்னட சினிமாவிற்கு என் சிறிய பங்களிப்பாக ஒரிஜினல் DVD வாங்கி, சப்-டைட்டில்களுடன் படத்தை ரசித்தேன்; 13 வருடங்களாக இங்கே குப்பை கொட்டியும், கன்னட மொழியை முழுதாகக் கற்கவில்லையே என்ற சிறிய உறுத்தலுடன்!

திவின் துவக்கத்தில் உள்ள பாடல், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கன்னடக் கவிஞர் கனகதாசர் படைத்த பக்திப் பாடலை ஒட்டி எழுதப் பட்டுள்ளது! நன்றாக இருக்கிறதே என்று, அதன் முழு வடிவத்தை தேடிப் பிடித்து, சுமாராக மொழிபெயர்த்தும் உள்ளேன் :P இந்தப் பாடல் நமக்குப் பழக்கமான, "கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா?" ரேஞ்சில் இருந்தாலும், இதில் மாயை என்ற மூன்றாவது perspective-ஐயும் நுழைத்திருக்கிறார் கவிஞர்!

நீ மாயையினுள்ளா...? உனக்குள் மாயையா?!
நீ உடலினுள்ளா...? உனக்குள் உடலா?!

மனை வீட்டினுள்ளா...? வீடு மனையினுள்ளா?
மனையும், வீடும் உன் கண் பார்வையினுள்ளா?!
கண்கள் உள்ளத்தினுள்ளா...? உள்ளம் கண்களினுள்ளா?
கண்களும் உள்ளமும் உனக்குள்ளா இறைவா?!

இனிப்பு சர்க்கரைக்குள்ளா...? சர்க்கரை இனிப்புக்குள்ளா?
இனிப்பும் சர்க்கரையும் உன் நாவினினுள்ளா?!
நாவு எண்ணத்தினுள்ளா...? எண்ணம் நாவினுள்ளா?
நாவும் எண்ணமும் உனக்குள்ளா இறைவா?!

மணம் பூவினுள்ளா...? பூ மணத்தினுள்ளா?
பூவும் மணமும் உன் நாசியினுள்ளா?!
இவையேதும் நானறியேன், இணையில்லா இறைவா...
இவையனைத்தும் உள்ளடங்கி இருப்பது உன்னுள் தானா?!
***
Information Credits: Wikipedia

கருத்துகள்

 1. பெயரில்லா24 மே, 2014 அன்று 5:10 AM

  வணக்கம்
  தங்களின் பார்வையில் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. I wish to see but its language stopping me to watch this ....the only language films which I didn't like to watch...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்கான காரணம் என்ன என்று தெரியாததால் என்ன சொல்வதென்று தெரியவில்லை! ஆனால், என்னைப் பொறுத்த வரை, எந்த மொழியும் ஒன்றுகொன்று குறைவானது அல்ல! குறை என்பது அதை வைத்து அரசியல் செய்பவர்களிடம் தான் இருக்க முடியும்; இது அனைத்து மொழிகளுக்கும் / மொழி வாரி மாநிலங்களுக்கும் பொருந்தும்! துவக்க காலத்தில் நான் கன்னடம் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்ததிற்கு நான் சந்தித்த அத்தகைய நண்பர்களும் ஒரு காரணமே!

   On a lighter note, சவுண்டை மியூட் செய்து விட்டு, சப்-டைட்டில்களை மட்டும் படித்து இந்தப் படத்தைப் பார்க்கலாமே?! :D

   நீக்கு
 3. I too seen this movie in udaya tv. it is a bold venture narrated in a catchy manner. surely an experimental film to watch by our movie makers of kollywood. nice review

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thank you Kumar. If remade in Tamil, my actor of choice would be Vijay Sethupathi!

   நீக்கு
  2. in tamil in recent times myskin seems to be a promising director. His movies like anjathe, onayum aatukuttiyum are so good and broken all aspects of cinema. He is having a catchy narration skills which is rare in tamil movies.

   நீக்கு
 4. சிறப்பான விமர்சனம். வெளிநாடுகளில் வசிக்கும் எங்களை போன்றவர்களுக்கு, பார்க்க ஆசைப்பட்டாலும் இது போன்ற படங்கள் கிடைப்பதில்லை !

  நல்ல சினிமாவுக்கு நிச்சயமாய் மொழி ஒரு தடை கிடையாதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் வெளியான புதிதில், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் இணையத்தில் இலவசமாக காணும் வசதி (சட்ட பூர்வமாக) செய்து தரப்பட்டதாக ஞாபகம். இப்போது கட்டணம் வசூலிக்கிறார்கள்:
   http://www.hometalkies.com/lucia/watch/

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia