மறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...!

எச்சரிக்கை: முத்து காமிக்ஸில் நவம்பர் மாதம் வெளியான, "ஒரு சிப்பாயின் சுவடுகளில்...!" என்ற கிராபிக் நாவலின் கதை, இந்தப் பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது! அந்த GN-ஐ படிக்க எண்ணியிருப்பவர்கள் - இந்தப் பதிவை தவிர்த்து விடலாம்; ஏற்கனவே படித்தவர்கள், இப்பதிவின் முதல் பாகத்தை வாசித்து விட்டு மேலே தொடரலாம்!

ஒரு சிப்பாயின் சுவடுகளில்...!: 
1954-ல், வியட்நாமை விட்டு ஃபிரான்ஸ் வெளியேறினாலும், ஃபிரெஞ்சு வீரர்கள் பலர் அங்கு போர்க் கைதிகளாக சிறைபட்டுக் கிடந்தனர்! அணி மாறிய ஃபிரெஞ்சு வீரர்களும், வியட்நாமிலேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்! முதல் இந்தோசீனப் போர் முடிந்து, கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழிந்த நிலையில், புதிய வியட்நாம் அரசுக்கும், ஃப்ரான்ஸிற்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது! அதன் படி, வியட்நாம் தன்னகத்தே இருந்த ஃபிரெஞ்சு வீரர்களின் சடலங்களையும், உடைமைகளையும் - சவப்பெட்டிகளில் அடைத்து ஃப்ரான்ஸிற்கு அனுப்பி வைத்தது! 

அக்டோபர் 1986 - ராய்ஸி இன்டர்நேஷனல் ஏர்போர்ட், பாரிஸ்! சடலங்களாக வந்திறங்கும் வீரர்களின் பெயர்ப் பட்டியல், முன்னதாகவே பகிரப் பட்டிருந்ததால், அவ்வீரர்களின் உறவினர்கள், விமானத்தில் வந்திறங்கும் சவப்பெட்டிகளின் உரிமை கோர, அங்கே குழுமியிருக்கின்றனர்! அந்த சோகமயமான நிகழ்வு, ஃபிரான்ஸ் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப் படுகிறது!

பட்டியலில், தனது மகன் ஹென்றி ஜோபெர்ட்டின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும், காணாமல் போன அவனைப் பற்றிய விவரங்கள் ஏதேனும் கிடைத்திடும் என்ற எதிர்பார்ப்பில், மூதாட்டி ஒருவரும் அங்கு வந்திருக்கிறார்! ஆனால், ஹென்றியைப் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காததால் விரக்தியுடன் நிற்கும் அவரை, டிவி நிருபர் ஒருவர் பேட்டி காண்கிறார்!

பாரிஸில் இருக்கும் ஒரு மன நலக் காப்பகம்: அந்தப் பேட்டியைப் பார்க்கும், நியூரித் என்ற மனநோயாளி, வெகுண்டு போய், டிவி பெட்டியை அடித்து நொறுக்குகிறார்!

மதுபான விடுதியொன்றில் அதே பேட்டியை, பிரபல டிவி ரிபோர்ட்டர் வலோன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்! தனது குடிப் பழக்கத்தால், குடும்பம் மற்றும் அலுவலகத்தில் வெறுப்பைச் சம்பாதித்தது மட்டுமின்றி; அலுவலகத்தில் தன் திறமையையும், மனைவியிடம் தன் குடும்பப் பொறுப்பையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்!

தான் வேலை செய்யும் டிவி நிறுவனத்தில், முக்கிய பொறுப்பு வகிக்கும் தனது நண்பர் லூகாஸை அன்றிரவு வலோன் சந்திக்கிறார்! காணாமல் போன சிப்பாய் பற்றிய உண்மைகளை கண்டறியப் போவதாகவும், வியட்நாமில் நடத்தப் போகும் அந்த தேடுதல் வேட்டையை, ஒரு டிவி சீரியலாக பதிவு செய்யப் போவதாகவும், தனது திறமையை நிரூபிக்க இந்த வாய்ப்பை அளிக்கும் படியும் வற்புறுத்துகிறார்! அந்த யோசனைக்கு, லூகாஸ் அரைமனதுடன் சம்மதிக்கிறார்!

அதே இரவில், மனநலக் காப்பகத்தில் இருந்து தப்பி வெளியேறும் நியூரித், ஹென்றியின் தாய் வசிக்கும் வாலென்ட்ரே என்ற கிராமத்தை நோக்கிச் செல்கிறார். இடைப்பட்ட வேளையில், காப்பகத்தின் பொறுப்பதிகாரி, நியூரித் தப்பியோடிய சேதியை, "கார்பின்" என்ற நபரிடம் சொல்லி அவரை உஷார் படுத்துகிறார்!
வாலென்ட்ரே செல்லும் வழியில், நீலக் கார் கொலையாளியால் கொல்லப் படும் நியூரித்!
நியூரித் இலக்கை அடையும் தருவாயில், ஒரு கார் விபத்தில் கொல்லப் படுகிறார். அது திட்டமிட்ட கொலை என்பதை சித்திரங்கள் மூலம் ஓவியர் உணர்த்துவார்; கொலையாளி தனது நீல நிறக் காரின் நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டிருக்க, காரின் உள்ளே, நியூரித்தின் புகைப்படம் காணப்படும்! பிறகு அந்தக் கொலையாளி, ஹென்றியின் தாயார் வீட்டை, பைனாகுலர் மூலம் கண்காணிக்கத் துவங்குகிறான்!

மறுநாள் காலை ஹென்றியின் தாயாரைச் சந்திக்க, வாலென்ட்ரேவுக்கு செல்கிறார் வலோன்! வழியில் அந்த சாலை 'விபத்தை' கவனித்து, காரை நிறுத்தி விசாரிக்கிறார்! அப்போது, "கேப்ரியல் லாரு" என்ற உள்ளூர் பத்திரிகை நிருபருடன்  ஒரு சிறு அறிமுகம் ஏற்படுகிறது! வலோன் ஹென்றியின் தாயாரை சந்திக்க வந்திருப்பதை, லாரு அறிந்து கொள்கிறார்!

ஹென்றியின் தாயார் மூலமாக, அவனுடைய தோழன் கர்ராஸ் மற்றும் முன்னாள் காதலி ஸெஸிலி இவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் வலோன் - ஹென்றியின் புகைப்படம் ஒன்றையும் கேட்டுப் பெறுகிறார்! பிறகு, அதே கிராமத்தில் வசிக்கும் அவ்விருவரையும் சந்தித்து, ஹென்றியைப் பற்றி விசாரிக்கிறார்!

கர்ராஸ் கொடுக்கும் தகவலின் படி, ஹென்றியுடன் பணியாற்றிய மார்ஷல் கயோன் என்பவரை சந்திக்க முடிவு செய்கிறார் - கொலையாளி ஒருவனால் தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறோம் என்ற உண்மையை அறியாமலேயே!

இதற்கிடையே வலோனின் மனைவி, அவரிடம் குடும்பச் செலவுக்காக பணம் வாங்குவதற்காக, அவர்களின் மகள் சாண்ட்ராவை அனுப்புகிறார்! மகளிடம் தனது இயலாமையைத் தெரிவிக்கும் வலோன், தான் தயாரிக்கவிருக்கும் புதிய டிவி சீரியல் பற்றி விரக்தியுடன் பேசுகிறார்! அவருக்கு ஆறுதல் சொல்கிறார் சாண்ட்ரா! பேச்சின் இடையே, ஃபிரெஞ்சு பல்கலைக் கழகங்களின் இட ஒதுக்கீடு சார்ந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்வதால், தனது காலேஜ் மூடி இருப்பதாக வலோனிடம் சாண்ட்ரா தெரிவிக்கிறாள்!
அடுத்த பாகத்திற்கு, முக்கியமானதொரு வசனம்!
மறுநாள் காலையில், வலோனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது! எதிர்முனையில்,  தன்னை ஹென்றி என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்நபர், மாற்றுப் பெயரில் விலகி வசிக்கும் அவரைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டாம் என்று வலோனை  மிரட்டுகிறார்! அதை நம்பாத வலோன், தனது தேடலைத் தொடர்கிறார்!
வலோனிடம் பேசும் நபரைக் கவனியுங்கள்!
ஹென்றி அணி மாறியிருப்பானோ என்ற சந்தேகத்தை உறுதி படுத்திக் கொள்ள, மார்ஷல் கயோன் அளித்த தகவலின் பேரில், 'எர்வின் போச்சர்ஸ்' என்ற முன்னாள் வியட்நாம் போராளியைச் சந்திக்க ஜெர்மனி செல்ல முடிவெடுக்கிறார் வலோன். தூரத்தில் இருந்து இந்த சந்திப்பை நோட்டமிடும் கொலையாளி, தனது பாஸிடம், வலோனின் அடுத்த இலக்கு எதுவென்று சரியாகத் தெரியவில்லை என்று கூறுகிறான். அதை அறிந்திட, வலோனின் தொலைபேசியை ஒட்டு கேட்கும் ஏற்பாட்டை அந்த மர்ம நபர் செய்கிறார்! ஹென்றி என்ற பெயரில் வலோனிடம் பேசியவரும், கொலையாளியை அமர்தியவரும் ஒரே நபர் தான் என்பது சித்திரங்கள் மூலம் வாசகர்களுக்கு உணர்த்தப் படுகிறது!
வலோனிடம் பேசிய அதே நபர், கொலையாளியிடமும் பேசுகிறார்!
வலோனின் பெர்லின் பயணத்தை தடுப்பதற்காக, அந்த மர்ம நபர் தன் அடியாட்கள் மூலமாக அவரைத் தாக்குகிறார்! ஆனால், தேடல் முயற்சியிக்கு நேரும் ஒவ்வொரு தடையும், அதில் வெற்றி காண வேண்டும் என்ற வலோனின் பிடிவாதத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே அமைகிறது! எனவே, மகள் சாண்ட்ராவின் அறிவுரையையும் மீறி பெர்லின் பயணிக்கிறார் வலோன்!

இராணுவத்தில் இருந்து வெளியேறிய ஹென்றி, 1947ம் ஆண்டு தங்களது போராட்டக் குழுவில் இணைந்ததாகவும்; ஆனால், 1950-க்குப் பிறகு அவனுடனான தொடர்பு அறுபட்டுப் போனதாகவும் போச்சர்ஸ் வலோனிடம் தெரிவிக்கிறார்! ஹென்றி பணியாற்றிய (கம்யூனிஸ) கமாண்டோ குழு ஒன்றின் மேலதிகாரி குய்ச்சார்ட் என்பவரிடம் மேலதிகத் தகவல்கள் கிடைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்!

வலோனின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப் பட்டு, கொலையாளிக்கு தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப் படுகின்றன. அதன் மூலம் வலோனின் அடுத்த இலக்கை அறிந்து கொள்ளும் அவன்; குய்ச்சார்ட்டையும் கொலை செய்து, அதை ஒரு தற்செயலான விபத்து போலத் தெரியுமாறு ஜோடனை செய்கிறான்!
அங்கே தாமதமாக சென்றடையும் வலோன், குய்ச்சார்ட்டின் வீட்டை ஆராய்கையில்; ஹென்றிக்கு 'கிம்-சி' என்ற பெயரில் ஒரு மகள் இருப்பதையும், வியட்நாமில் உள்ள சைகோன் நகரில் அவள் வசிப்பதையும் - குய்ச்சார்ட்க்கு அவள் அனுப்பியிருந்த ஒரு கடிதம் மூலம் கண்டறிகிறார்.

தான் இதுவரை சேகரித்த தகவல்களை லூகாஸிடம் பகிரும் வலோன், வியட்நாம் சென்று கிம்-சியை நேரில் சந்தித்துப் பேச அனுமதி கேட்கிறார்! அது ஒரு வீண் முயற்சி என்று எரிச்சலாகும் லூகாஸ், தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று கூறி, தேடும் படலத்தை கை விடச் சொல்கிறார்!

தன் முயற்சியில் சிறிதும் தளராத வலோன், சொந்தச் செலவில் வியட்நாம் செல்ல முடிவெடுக்கிறார்! பயணச் செலவுக்காக, தன்னிடம் உள்ள ஒரே ஒரு உயர் ஜாதிக் குதிரையை விற்று பணம் திரட்டுகிறார். தனது தாய் பணம் கேட்ட போது கூட உதவாத தனது தந்தை; பல வருடங்களுக்கு முன் காணாமல் போன யாரோ ஒரு சிப்பாயைத் தேடும் ஒரு டிவி சீரியலுக்காக, தனக்குப் பிரியமான அந்தக் குதிரையை விற்று பணம் திரட்டுவதைக் கண்டு, மிகவும் வெறுப்படைகிறாள் சாண்ட்ரா!
தனக்குத் துணையாக வியட்நாம் வருமாறு அழைக்கும் தந்தையையின் கோரிக்கையை, ஒரு வெறுப்பு கலந்த பார்வையுடன் நிராகரித்து விட்டு, விலகி நடக்கிறாள் சாண்ட்ரா! இவை அனைத்தையும், தனது நீல நிறக் காரில் அமர்ந்தவாறு அந்தக் கொலையாளி கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான்! இத்துடன், இக்கதையின் முதல் பாகம் முடிகிறது!
*** ( அடுத்த பதிவில் தொடரும் : ஒரு தேடலின் முடிவில்...! ) ***

கருத்துகள்

 1. அடுத்த பதிவிலாவது முடிப்பீங்களா, இல்லையா? கிர்ர்ர்....

  பதிலளிநீக்கு
 2. @Karthik Somalinga

  I welcome myself to your blog! :D

  கதையின் வரலாறு சார்ந்த உங்களின் முந்தைய பதிவு - ஒரு நல்ல அணுகுமுறை. பொதுவாக வரலாறு சார்ந்த பொழுதுபோக்குப் படைப்புகளின் நோக்கமே வாசிப்போரை வரலாற்றின் பக்கம் நாட்டம் செய்விப்பதும், மறந்துவிடுவிடாமல் இருக்க வைப்பதும்தான்.

  அதேநேரம் உங்களின் இந்த பதிவில் "இதுதான் கதை" என்று விளக்குவது இந்தக்குறிப்பிட்ட கதைக்குப் பாணிக்கே பொருத்தமில்லை என்று தோன்றுகிறது. காரணம், கதாசிரியர் வேண்டுமென்றே பல முடிச்சுகளையும் முட்டு சந்துகளையும் வைத்திருக்கிறார். வாசிப்பவர்கள் சில இடங்களில் ஒரு conclusion-க்கு வந்துவிடக்கூடாது என்ற முனைப்புடன் சித்திரங்களின் Detail-ல் தடையங்களையும் போட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு:

  நீங்கள் மேலே "வலோனை மிரட்டியவர் கார்பின் தான் என்பது வாசகர்களுக்கு காட்டப் படும்இடம்!" என்பதாக சுட்டிக்காட்டிய 35 மற்றும் 41ஆம் பக்க கட்டத்தில் கொஞ்சம் உற்று நோக்கினால் தெரிவது, கார்பின் மாதிரியே உடை, Hair Style மற்றும் நரைமுடி இருந்தாலும் அந்த மர்ம நபரின் உச்சந்தலையில் Sharp ஆன சொட்டை. அதுமட்டுமல்ல, அதே மர்ம நபருக்கு மீசை இல்லாத உண்மை, 35-ஆம் பக்கத்தில் தெளிவான side view-ல் காட்டப்பட்டுள்ளது. இப்போது கார்பினை நேரடியாகக் காட்டும் 94 மற்றும் 95 ஆம் பக்கங்களைப் பார்த்தால் கார்பினுக்கு சொட்டை இல்லை, மீசை இருக்கிறது. So மர்ம நபரை உண்மையில் கார்பினாக காட்டுவது கதாசிரியரின் நேரடியான aim அல்ல (ஒருவேளை வாசகரை திசைதிருப்பும் aim ஆக இருக்கலாம்!).

  எல்லா கதைகளும் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்வதற்காக மட்டுமே எழுதப்படுவதில்லை. சித்திரக்கதையாக படம்பார்த்து - வாசிக்கும்போது கிடைக்கும் experience-க்காகவும்தான். அதனால் நான் சொல்லவருவது - இம்மாதிரி கதைகள் well deserved to be reviewed for narration style rather than explaining the story itself - as there is no solid story on this as most of the parts are left to readers level of grasping or even left unexplained!

  (அப்பாடா, எப்படியொ கஷ்டப்பட்டு type பண்ணிட்டேன்! இதுக்குமேல உழைக்கிறது கஷ்டம்தான்! :D)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், நீண்ட கருத்திற்கும் நன்றி ரமேஷ்! :)

   "வலோனிடம் ஹென்றி என்ற பெயரில் பேசிய நபர் உண்மையில் ஹென்றி அல்ல! அது கொலையாளியை அமர்த்திய கார்பின் தான் என்பதை சித்திரங்கள் மூலமாக ஓவியர் வாசகருக்கு உணர்த்துகிறார்"

   என்ற நீண்ட வாக்கியத்தை,

   //வலோனை மிரட்டியவர் கார்பின் தான் என்பது வாசகர்களுக்கு காட்டப் படும் இடம்!//

   என்று சுருக்கமான Caption ஆக போட்டிருந்தேன்!

   //இப்போது கார்பினை நேரடியாகக் காட்டும் 94 மற்றும் 95 ஆம் பக்கங்களைப் பார்த்தால் கார்பினுக்கு சொட்டை இல்லை, மீசை இருக்கிறது.//
   அதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்! :D இது ஒரு தொடர் பதிவு என்பதால், தலைக்கு மேல் வேலை இருக்கிறது! ;-)

   //எல்லா கதைகளும் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்வதற்காக மட்டுமே எழுதப்படுவதில்லை. சித்திரக்கதையாக படம்பார்த்து - வாசிக்கும்போது கிடைக்கும் experience-க்காகவும்தான். அதனால் நான் சொல்லவருவது - இம்மாதிரி கதைகள் well deserved to be reviewed for narration style rather than explaining the story itself - as there is no solid story on this as most of the parts are left to readers level of grasping or even left unexplained! //

   ஒத்துக் கொள்கிறேன்! இந்தத் தொடரும், அநேகமாக இதைச் சார்ந்த இன்னொரு தொடரும்(?!) நிறைவடையும் போது, நான் சொல்ல வந்த / வரும் / ப் போகும் கருத்துக்களை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்வீர்கள்! :-)

   இதுவரை பல கதைகளை இங்கே விமர்சனம் செய்திருந்தாலும், 'எமனின் திசை மேற்கு' விமர்சனத்தைத் தவிர வேறெதிலும் முழுக் கதையையும் சொன்னது கிடையாது! குறிப்பாக, Spoiler-களைத் தவிர்த்து விடுவேன் - குறைந்த பட்சம் ஒரு அலெர்ட் ஆவது போட்டு விடுவேன்! எனவே, தொடர்(கள்) முடியும் வரை சற்று பொறுமை ப்ளீஸ்! :)

   நீக்கு
  2. // "வலோனிடம் ஹென்றி என்ற பெயரில் பேசிய நபர் உண்மையில் ஹென்றி அல்ல! அது கொலையாளியை அமர்த்திய கார்பின் தான் என்பதை சித்திரங்கள் மூலமாக ஓவியர் வாசகருக்கு உணர்த்துகிறார்" //

   இந்த point of viewஏ தவறு என்பதுதான் என் கருத்து. அந்த மர்ம நபர் கார்பினாகவும் இருக்க வாய்ப்பில்லை என்பதும் சித்திரங்களில் (சற்று மறைமுகமாக ஆனால் அழுத்தமாக பல இடங்களில்) காட்டப்பட்டுள்ளது.

   // பொறுமை ப்ளீஸ் //
   Sure!

   நீக்கு
  3. // பொறுமை ப்ளீஸ் - Sure! //
   பொறுமை - எனது விளக்கமான பார்வையை நீங்கள் அறிந்திட மட்டுமே! ஆனால், உங்களது கருத்துகளையும், விளக்கங்களையும் பதிவதில் தடையேதும் இல்லை! :)

   //அந்த மர்ம நபர் கார்பினாகவும் இருக்க வாய்ப்பில்லை என்பதும் சித்திரங்களில் (சற்று மறைமுகமாக ஆனால் அழுத்தமாக பல இடங்களில்) காட்டப்பட்டுள்ளது.//
   எப்படி என்று விளக்க முடியுமா?!

   நீக்கு
  4. கொஞ்ச நாளைக்காவது நான் ஒ.சி.சு புத்தகத்தை எப்பவும் கையிலேயே வச்சிக்கறது நல்லது போலிருக்கே...!

   நீக்கு
  5. // சற்று பொறுமை ப்ளீஸ் //

   ஒரே ஒரு கிராபிக்ஸ் நாவலை படிச்சிட்டு நான் படும் பாடிருக்கே ஐய்யய்யய்யய்யோ...

   நீக்கு
  6. Already விளக்கிவிட்டேன்!

   - Page 35ல், "இத்தனை காலமும்" என்று தொடங்கும் panel-ல் மீசை இல்லை.
   - Page 35 மற்றும் 41ல் உச்சந்தலையில் சொட்டை அல்லது முடி இல்லாத பகுதி

   மேற்கூறிய அங்க அடையாளங்கள், நேரடியாக கார்பினைக் காட்டும் 94-95 பக்கங்களில் வித்தியாசப்படுகிறது. In fact 95-ஆம் பக்கத்தில் கார்பின் இரண்டுபக்கமும் sideஆக திரும்பி - அவருக்கு சொட்டையில்லாததைக் காட்டுகிறார் (என்னைப் பொருத்தவரை இவையெல்லாம் கதாசிரியரின் சில்மிஷங்கள் :D).

   நீக்கு
 3. இந்த கிராபிக்ஸ் நாவல் எல்லாம் கம்பியூட்டர் கிராபிக்ஸ் தெரிஞ்சவங்களுத்தான் புரியுதோ என்னவோ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குப் புரிந்தாக எனக்கே தோன்றவில்லை. நான் explain பண்ணியதெல்லாம் குழப்பத்தின் தொடர்ச்சியே! :)

   நீக்கு
  2. @ஈ.விஜய்:
   உங்களைப் போல பலர், அடிக்கடி தவறாக உச்சரிப்பதால், ஒரே ஒரு திருத்தம்:

   அது "கிராபிக்ஸ்" நாவல் அல்ல!

   கிராஃபிக் நாவல்

   "ஸ்" வராது! :)

   நீக்கு
 4. ஆஹா ... ரமேஷ், கார்த்தி - இங்கயும் ஆரம்பிச்சாச்சா :-) நடுல குண்டு பூனையின் மியாவோட:-)

  கார்த்தி எனக்கு அந்த புக்கைவிட இந்த பதிவுகள் தான் லேசா புரியற மாதிரி இருக்கு - இது தான் கதை என்றால் :-)

  கேள்வி: இருபத்தாறாம் பக்கம் வரும் கவிதைக்கு பொழிப்புரை, விளக்க உரை - எழுதும் எண்ணம் உண்டா? !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இது தான் கதை என்றால்//
   அப்படித் தான் நம்புகிறேன்! :)

   //கேள்வி: இருபத்தாறாம் பக்கம் வரும் கவிதைக்கு பொழிப்புரை, விளக்க உரை - எழுதும் எண்ணம் உண்டா? !!!//
   கதையை ஆராய்வது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம், கவிதையை அல்ல! :P

   நீக்கு
 5. ஒரு. வேளை. இடைப்பட்ட. காலத்தில். கார்பின் கேசவர்த்தினி ஹேர் ஆயில் யூஸ் பண்ணியிருப்பானோ? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொட்டை மண்டை இரகசியம் - அதிர்ச்சித் தகவல்கள் அடுத்த பதிவில்!!! :D

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia