மறக்கப்பட்ட மனிதர்கள் - 1 - வியட்நாம் வரலாறு!

ஒரு முன் குறிப்பு: 
வியட்நாம் பற்றிய, பல சுவையான வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய பதிவு இது! தமிழில், "ஒரு சிப்பாயின் சுவடுகளில்...!" என்ற பெயரில் இம்மாதம் வெளியாகியிருக்கும், பிரெஞ்சு மொழிமாற்ற காமிக்ஸ் புத்தகமொன்றின், விமர்சன (தொடர்) பதிவாகவும் இதைப் பார்க்கலாம்! இந்த முன்குறிப்பு, காமிக்ஸ் என்றாலே சிறுபிள்ளைகள் சமாச்சாரம் என்று எண்ணி ஒதுங்கும் வாசகர்களுக்காக மட்டுமே!

'ஒ.சி.சு.!' கிராபிக் நாவலை, தீராத ஆவலுடன் (ஆர்வக் கோளாறுடன்), கூறு போட்டு விமர்சிக்கும் (வெட்டி) ஆராய்ச்சிப் பதிவு இது; அந்த புத்தகத்தை இன்னும் படிக்காதவர்கள், கீழே உள்ள வரலாற்றுக் குறிப்புகளை படித்து விட்டு, கதைக்குள் நுழைவது, கதையைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்!

முன் குறிப்பு மட்டுமே, மூன்று பக்கங்களுக்கு நீண்டு விட்டதால், இனியும் தாமதியாமல் உடனே பதிவுக்குள் செல்வோம்! ;-)

இந்த கிராஃபிக் நாவலின், பிரெஞ்சு மூலத்தின் பெயர் "Les oubliés d'Annam" என்பதாகும்! "அன் நாம் பிராந்தியத்தின் மறக்கப் பட்ட மனிதர்கள்" என அதை மொழிபெயர்க்கலாம்! அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வரலாற்றை சற்றே புரட்டிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது; பயம் வேண்டாம், மிக மிக மேலோட்டமாகவே புரட்டுவோம்! ;)

ஃபிரெஞ்சு இந்தோசீனா:
பதினெட்டாம் நூற்றாண்டில், வணிகம் செய்யவும், கிறிஸ்துவ மிஷனரிகள் மூலம் மதத்தைப் பரப்பவும் வியட்நாமில் கால் பதித்த ஃபிரான்ஸ், மெல்ல மெல்ல வியட்நாமையும் அதைச் சுற்றி இருந்த நாடுகளையும் தன் அதிகாரத்திற்குற்பட்ட காலனிகளாக மாற்றிக் கொண்டது! வியட்நாம், கம்போடியா & லாவோஸ் ஆகிய மூன்று தேசங்களும், "ஃபிரெஞ்சு இந்தோசீனா" என்ற குடையின் கீழ், கிட்டத்தட்ட 67 ஆண்டுகள் (1887 - 1954) ஃபிரான்ஸிடம் அடிமைப் பட்டுக் கிடந்தன!

அன் நாம்:
வியட்நாமை மூன்று பிராந்தியங்களாகப் பிரிக்கலாம்! வடக்கே "டொன்கின்", தெற்கே "கௌச்சின்சீனா" - இவற்றிக்கு இடையே மத்தியப் பகுதியில் அமைந்தது தான் "அன் நாம்". இது பரப்பளவில் மற்ற இரு பிராந்தியங்களை விட மிகப் பெரியதாகும்! இந்தக் கதை நிகழும் களமும் இதுவே!

ஜப்பான் ஆதிக்கமும், கம்யூனிஸ இயக்கமும்:
1940-ம் ஆண்டு,  இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில், ஜப்பான் பேரரசு வியட்நாமின் வடக்கு பிராந்தியத்தைக் (டொன்கின்) கைப்பற்றியது! அதன் மூலம் சீனாவின் முக்கிய சப்ளை லைனை துண்டித்து, நெருக்கடி ஏற்படுத்துவதே அதன் நோக்கம்! அந்தத் தருணத்தில், சோவியத் மற்றும் சீனாவின் ஆதரவுடன், வியட்நாமை - ஜப்பான் மற்றும் ஃபிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்து மீட்க, "வியட் மின்" என்ற பெயரில், தேசிய கம்யூனிச இயக்கம் ஒன்று உருவானது! அதை வழிநடத்திய முக்கியத் தலைவர்களில் ஒருவர், நாம் அனைவரும் அறிந்த "ஹோ சி மின்"!

ஜப்பானின் வீழ்ச்சியும், கம்யூனிஸத்தின் எழுச்சியும்:
அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதைத் தொடர்ந்து, 1945ம் ஆண்டு - செப்டம்பர் 2ம் தேதியன்று, நேசநாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தது! வடக்கு வியட்நாமைப் பொறுத்த வரை, அங்கே போதிய ஆட்சிக் கட்டமைப்பு இல்லாததால், சட்ட ஒழுங்கை பேணுவதற்காக ஜப்பான் ராணுவம் அங்கேயே நீடிக்க வேண்டியிருந்தது!

ஆட்சி அதிகாரம் முழுவதும் 'வியட் மின்' இயக்கத்தின் கைகளில் இருக்க, ஜப்பான் ராணுவம் வியட்நாமிய கொரில்லாப் போராளிகளுக்கு ராணுவப் பயிற்சி அளித்தது! ஹோ சி மின் (வடக்கு) வியட்நாமின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார்!

முதல் இந்தோசீனப் போர்:
வடக்கில் ஜப்பான் வீழ்த்தப்பட்டாலும், வியட்நாமின் மற்ற பிராந்தியங்களில் பிரெஞ்சு ஆதிக்கம் நீடித்துக் கொண்டு தான் இருந்தது! வடக்கே வியட் மின்னின் கை மேலோங்கியிருக்க, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் ஃபிரான்ஸ் ஆதரவுடன் தனியே ஒரு வியட்நாம் அரசு இயங்கியது! இந்த ஃபிரான்ஸின் கைப்பாவை அரசுக்கும், வியட் மின் தலைமையிலான தேசியவாத இயக்கங்களுக்கும் இடையே, 1946 முதல் 1954 வரை நடைபெற்ற இந்த போராட்டமே "முதல் இந்தோசீனப் போர்" என அழைக்கப் படுகிறது! இறுதியில், ஃபிரான்ஸ் வியட்நாமை விட்டு வெளியேறியது!

இரண்டாம் இந்தோசீனப் போர் (வியட்நாம் யுத்தம்):
1954-ல் பிரான்ஸ் வெளியேறினாலும், இந்தோசீனப் போராட்டம், மெல்ல மெல்ல, கம்யூனிச வடக்கு மற்றும் கேபிடலிச தெற்கிற்கு இடையேயான வியட்நாம் உள்நாட்டுப் போராக மாறியது! தென்வியட்நாம் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ நாடுகள் துணையிருக்க, வடக்கு வியட்நாமின் 'வியட் மின்' அரசுக்கு சீனா, ரஷ்யா போன்ற தீவிர கம்யூனிஸ நாடுகள் துணை நின்றன!

இதற்கிடையில், அமெரிக்காவில் போருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுத்தன! தன் மக்களின் எதிர்ப்பையும், வியட்நாமிய கொரில்லாப் போராளிகளின் தாக்குதலையும் சமாளிக்க முடியாததால், 1975-ம் ஆண்டு வியட்நாமை விட்டு அமெரிக்கா வெளியேறியது! அதைத் தொடர்ந்து, 1976-ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் ஒன்றிணைக்கப்பட்டு, சுதந்திர "வியட்நாம் சோஷியலிசக் குடியரசு" மலர்ந்தது!

நடுவில் ஒரு குறிப்பு:
"காமிக்ஸ் பற்றி பேசலாம் என்று சொல்லி விட்டு, கம்யூனிஸம் பேசுகிறானே!" என்ற குழப்பம், இந்தப் பதிவைப் படிக்கையில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்! ஆனால், மேற்கண்ட வரலாற்றுக் குறிப்புக்கள், இந்தக் கதையைப் புரிந்து கொள்வதிற்கு மிகவும் அவசியமாகிறது! அடுத்த சில பத்திகளில், இந்தக் கதையின் அடிநாதத்தை தொட்டு விடலாம், கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்! :)

சற்றே ரிவர்ஸ் கியரில் சென்று, பிறகு முன்னே நகரலாம்...

அணி மாறிய மனிதர்கள்:
முதல் இந்தோசீனப் போர் நடந்து கொண்டிருந்த சமயம், ஃபிரெஞ்சு ராணுவம் இந்தோசீனாவில் நிகழ்த்திக் கொண்டிருந்த அராஜகங்களுக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் பலர் போர்க்கொடி உயர்த்தினர்! ஃபிரான்ஸில் இந்தப் போருக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள், மெல்ல மெல்ல தீவிரமடையத் துவங்கின! வியட்நாம் போர்க்களத்தில் இருந்த, கம்யூனிஸ சிந்தனை கொண்ட ஃபிரெஞ்சு இராணுவ வீரர்களில் பலர், வியட்நாமியர்கள் படும் அவதிகளைக் கண்டு மனமிறங்கி, ஹோ சி மின்னின் வலுவான கம்யூனிஸ சிந்தனைகளின் பால் ஈர்க்கப்பட்டு, மெதுவாய் அணி மாறத் துவங்கினர்.

மனம் மாறிய மனிதர்கள்:
இந்த அணி மாறிய இராணுவ வீரர்கள், ஃபிரெஞ்சு அரசாங்கத்தால் துரோகிகள் என்று முத்திரை குத்தப் பட்டாலும்; வியட்நாம் தேசியவாத இயக்கத்தவர்களும், கொரில்லா போராளிகளும் - இவர்களை இரு கரம் நீட்டி தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். 1960-களில், 'அணி மாறிய துரோகிகளுக்கு', ஃபிரான்ஸ் அரசாங்கம் பொது மன்னிப்பை அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் தாய்நாடு திரும்பினர்!

மறக்கப்பட்ட மனிதர்கள்:
ஆனால், அவர்களில் கணிசமான பகுதியினர், வியட்நாமிலேயே தங்கியிருக்க முடிவு செய்து, அந்நாடு முழுவதும் கம்யூனிஸ ஆட்சி மலர, தொடர்ந்து பாடுபட்டனர்; இருப்பினும், ஃபிரான்ஸில் உள்ள தங்கள் உறவினர்களுடன், கடித மற்றும் தொலைபேசித் தொடர்பில் அவர்கள் இருந்து வந்தனர்! ஆனால், அவர்களில் சிலர், முழுவதுமாக தொடர்பறுந்து போனார்கள்! அவர்களைப் பற்றிய எந்த தகவல்களும், அரசாங்கப் பதிவுகளில் காணப்படவில்லை! சுருக்கமாச் சொன்னால், வெவ்வேறு கால கட்டங்களில் அவர்கள் "காணாமல்" போயிருந்தார்கள்!

நெருங்கிய உறவினர்களின் நெஞ்சினில் நீங்காத நினைவுகளாய்த் தங்கியிருந்தாலும்; காலம் செல்லச் செல்ல ஃபிரெஞ்சு அரசாங்கத்தின் தேடல் முயற்சிகள் கைவிடப்பட்டு - அரசாங்கத்தாலும், மக்களாலும் மறக்கப்பட்ட அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்கள் தான், இந்தக் கதையின் ஆதார நாயகர்கள்!

*** ( தொடரும் ) ***

பின்குறிப்பு:
நன்றி:
இந்தப் பதிவை உருவாக்க, விக்கிபீடியாவின் வியட்நாம் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை பொறுமையாக புரட்ட வேண்டி இருந்தது! தகவல் மற்றும் படங்கள் அளித்து உதவிய விக்கிபீடியாவிற்கு, ப்ளேட்பீடியாவின் நன்றிகள் உரித்தாகட்டும்! :)

14 comments:

 1. Thats wonderful job Karthik... I will have to read the story again.. Had all these information been given as preface in the book, it would be very easy to understand and we can very much enjoy the story.. I had the similar idea when I read 'Pralayathin Pillaigal' too..

  ReplyDelete
  Replies
  1. In fact the original edition has such a preface! Wish it was included in Muthu..

   Delete
 2. அருமையான பதிவு. இதுபோன்ற கதைகளே வாசகனின் மனதில் ஆணிதரமாக பதியும்.ஒரு அறிவுதேடலை உண்டாக்கும், அதற்கு எடுத்துகாட்டு உங்களின் பதிவு நண்பரே! ’போர்’ என்ற கால அசுரனின் காலில் மிதிபடாதவர்களுக்கு , அதன் நிழில் படிந்திடாத நாட்டில் பிறந்தவர்களுக்கு,யுத்தகதைகளும் ஒரு டமால்டூமில் வகை, அவ்வளவே! 3 பக்கம் திருப்புவதற்குள் ” போர்” அடித்துவிடும் போல!:(
  அவர்களிடமும் ஒரு மாற்றத்தை இந்த கட்டுரை கொண்டுவருமென நம்புகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. //போரின் நிழல் படிந்திடாத நாட்டில் பிறந்தவர்களுக்கு, யுத்தகதைகளும் ஒரு டமால்டூமில் வகை, அவ்வளவே!//
   +1

   Delete
 3. வாவ்! அட்டகாசம் கார்த்திக்! வியட்நாம் யுத்தம் பற்றி முன்பிருந்ததைவிட கொஞ்சம் அதிகமாகவே தெரியவந்திருக்கிறது. வரலாற்றைப் படித்துப் புரிந்துகொண்டு மொழிபெயர்ப்பது சாதாரண விசயமல்ல! அதை அழகாகச் செய்திருக்கிறீர்கள்!

  கொஞ்சம் ரிவர்ஸ் கியர் எடுத்து, திரும்பவும் முன்னால் வந்து சரியாக பார்க் செய்தவிதம் நளினம்! :)

  ஒ.சி.சு-ல் இதுபோன்றதொரு வரலாற்று முன் குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!

  கதைக்குள் காலடி எடுத்து வைக்கப்போகும் அடுத்த பாகப் பதிவுக்காக வெயிட்டிங்....

  ReplyDelete
  Replies
  1. //ஒ.சி.சு-ல் இதுபோன்றதொரு வரலாற்று முன் குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!//
   ஒரிஜினலில், கதை பற்றிய வரலாற்றுப் பின்னணித் தகவல்கள் கிட்டத்தட்ட ஆறு, ஏழு பக்கங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது! அதை இந்த இதழில் வெளியிட்டு இருந்திருக்கலாம்!

   Delete
 4. அப்போ ... d'annam என்றால் அன்ன வயல்கள் இல்லியா? :-(

  மற்றபடி நல்ல தகவல்கள் !

  அனால் நெஜம்மா இதை நான் முதல்ல படிச்சிருந்தா அந்த நாவல மாட்டேன். வரலாறு பிடிக்கும் - அனால் அதன் அடிப்படை காமிக்ஸ் பிடிக்காது !

  ReplyDelete
  Replies
  1. //அப்போ ... d'annam என்றால் அன்ன வயல்கள் இல்லியா? :-(//
   :-)

   //வரலாறு பிடிக்கும் - அனால் அதன் அடிப்படை காமிக்ஸ் பிடிக்காது !//
   எனக்கு ரெண்டுமே பிடிக்கும்! :)

   Delete
 5. அந்த மறைந்துப் போன மனிதர்கள் பற்றிய இந்தக் கதையின் முன்னோட்டம் மிக நீளமாகயிருந்தாலும் கதை, அதாவது வரலாற்றுக் கதை, அதாவது சரித்திரக் கதை என்பதால்,
  அ(ந்தக்க)தைப் பற்றிப் புரிந்துகொள்ள மிக அவசியமானதே!

  இந்த முன்னோட்டத்திற்காக நிறைய குறிப்புகள் சேகரித்து,
  அவற்றின் இணைப்புகளையும் விடாமல் கோர்த்து, அடுத்த
  பகுதியை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்.

  தொடர் (கதை) சுவாரஸ்யமாயிருக்குமென்றெண்ணுகிறேன்.
  (18 எழுத்துக்கள்.)

  விரைவில் தொடங்குங்கள் கார்த்திக்.!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நிஜாம் சார்!!! வரவிருக்கும் பதிவுகளும் சற்று நீளமானவையே! :)

   //தொடர் (கதை) சுவாரஸ்யமாயிருக்குமென்றெண்ணுகிறேன்.
   (18 எழுத்துக்கள்.)//
   :) :)

   Delete
 6. ஆழ்ந்த ஆராய்ச்சி ! வாழ்த்துகள் கார்த்திக் !

  ReplyDelete
 7. Though the comics in Tamil is pathetic your post is awesome.... Keep up the good work.

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia