ரோனின் - ஒரு சாமுராயின் சபதம்!

ப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள்! ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள்! தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - "ரோனின்"!

வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும்?! அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த "ரோனின்":

13ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி காத்திருக்கிறான் ரோனின் ஒருவன்; ஆனால், முதல் முயற்சியில் வெற்றி கிட்டாமல் போய் விடுகிறது. கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது... கற்பனைக்கு எட்டாத அறிவியல் வளர்ச்சிகள் பெற்று, அழிவின் விளிம்பில் நிற்கும் நியூயார்க் நகரில், தான் இழந்த கௌரவத்தை மீட்டானா அந்த ரோனின்?!

ந்தக் கதை வெளியான சமயம் (1983), "இது எல்லாம் சாத்தியமா?!" என்ற கேள்விகள் இருந்திருக்கக் கூடும்! ஆனால், கதை வெளியாகி 31 ஆண்டுகள் ஆன பின்னர், "இதுவும் சாத்தியமே!" என்ற எண்ண வைக்கும் அளவுக்கு, கற்பனைக் குதிரைகளை கால இயந்திரத்துடன் பிணைத்து, முன்னோக்கி செலுத்தி இருக்கிறார் மில்லர்!

ஃபிரான்க் மில்லரின் கற்பனைகள் காலம் கடந்து நின்றாலும், "ரோனின்" எனது எதிர்பார்ப்புகளின் எல்லைகளைத் தொடத் தவறி விட்டது என்றே சொல்ல வேண்டும்!100 அல்லது 150 பக்கங்களில் முடிக்கப் பட்டிருக்க வேண்டிய இக்கதை, "குருவை இழந்த ரோனின்" போல, 300+ பக்கங்களுக்கு இலக்கின்றி நீள்கிறது! சிக்கலான கதையும், நாம் பழக்கப் பட்டிராத ஓவிய பாணியும் - கதையோடு ஒன்றுவதற்கு பெரும் தடையாக அமைந்திருக்கின்றன! இவை காமிக்ஸ் சித்திரங்களா இல்லை சிறுபிள்ளையின் கிறுக்கல்களா அல்லது கைதேர்ந்த கலைஞனின் நவீன ஓவியங்களா என்ற குழப்பம் பல இடங்களில் தலை தூக்குகிறது! ஓவியங்களில் புதைந்திருக்கும் சம்பவங்களைப் புரிந்து கொள்வதற்குள், தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

இக்கதையில், சிறப்பான தருணங்களும், வியக்க வைக்கும் ஓவிய ஜாலங்களும் ஆங்காங்கே தென்பட்டாலும்; கதை மீதான ஆர்வத்தை இறுதி வரை தக்க வைத்துக் கொள்வது என்னைப் பொருத்த வரை மிகுந்த சிரமமாகவே இருந்தது! கதையின் உயிர்நாடியே, "ரோனின் யார்?" என்பதைச் சொல்லும் அந்த முக்கியமான பகுதி தான்! அது இப்போது தெரிந்து விட்டதால், மறுவாசிப்பு செய்யும் போது இந்தக் கதை பிடித்துப் போகலாம்; புரியாமல் இருந்த சில இடங்கள் மறுவாசிப்பில் பிடிபடலாம்! ஆனால், அதற்கான பொறுமை தற்போது என்னிடம் இல்லை! :)
ருவேளை, நீங்கள் இப்புத்தகத்தை படிக்க விரும்பினால், அதன் முக்கியமான திருப்பத்தை முதலிலேயே அறிந்து கொள்வது நலம்; முதல் வாசிப்பிலேயே கதையை ரசிப்பதற்கு இது உதவும் என நினைக்கிறேன். கடைசி பக்கத்தை, முதலில் படிக்கும் வழக்கம் கொண்ட வாசகர்கள் மட்டும், இப்பதிவை மேற்கொண்டு படிக்கலாம்! :)

கதையின் முக்கியப் பகுதிகள்:
அக்வாரியஸ் என்ற நிறுவனம் - வேண்டிய வடிவங்களுக்கு மாறக் கூடிய, பழுது பட்டால் தானாக சரி செய்து கொள்ளக் கூடிய பயோ-சர்கியூட்களைக் கண்டு பிடித்து, அவற்றை உலக மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் ஆராய்சிகளில் இறங்குகிறது; கை கால்கள் இன்றிப் பிறந்த பில்லி என்ற இளைஞனுக்கு, பயோ-சர்கியூட்களால் ஆன செயற்கை அங்கங்களைப் பொருத்தி, அவற்றை அவன் எண்ணங்கள் மூலமாக இயக்க வைக்கும் முயற்சிகளில் கணிசமான வெற்றியையும் ஈட்டுகிறது! அந்நிறுவன ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டுக் கணினியின் பெயர் விர்கோ; மனிதர்களுக்கு நிகரான சிந்தனை சக்தியை அது கொண்டிருக்கிறது!

தான் நினைத்தபடி மற்றவர்களை ஆட்டிப் படைக்கக் கூடிய தொலை இயக்கு (telekinetic) சக்தி பில்லிக்கு இருப்பதை அறியும் விர்கோ, அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பயோ-சர்கியூட்களை உலகின் புதிய உயிரினங்களாக நிறுவ முயற்சிக்கிறது! ஆனால், பில்லியின் சிறுவயதில் நடந்த சில சம்பவங்கள் தந்த மன அதிர்ச்சி, அந்த சக்தியை அவன் வேண்டும் போது பிரயோகிப்பதற்குத் தடையாக அமைந்திருக்கின்றன!

அந்த சக்தியை பில்லியிடம் இருந்து வெளிக்கொணர்வதற்காக, அவனுள் பிரம்மைகளைத் தூண்டி, அவனை ஒரு மாய உலகினில் தள்ளுகிறது விர்கோ! அந்த உலகில், பில்லி ஒரு ரோனின் ஆக மாறுகிறான். அகாட் பூதத்தைப் போல (பார்க்க மூன்றாம் பத்தி!) ஒரு ரோபோவை வடிவமைத்து, ரோனினின் (பில்லி) பழிவாங்கும் உணர்வுகளுக்குத் தீனி போடுகிறது விர்கோ! விர்கோவின் வில்லங்கமான திட்டங்கள் பலிக்கிறதா என்பதே மீதக் கதை!

"சாமுராயாவது, பூதமாவது?" என சலிப்பின் விளிம்பில் வாசகன் நிற்கும் சமயத்தில், விஞ்ஞானத்தைக் கையில் எடுத்து, Artificial Intelligence, Bio-Circuitry, Organic Computing, Self Healing & Self Constructing Computers, Psionics (Telekinesis), Virtual Reality என்று நம்பத் தகுந்த (அல்லது நம்பித் தொலைக்க வேண்டிய) அறிவியல் விளக்கங்களை வரிசையாக அடுக்குகிறார் மில்லர்! இந்தக் கோணத்திலிருந்து, கதையை படிக்கத் துவங்குங்கள் - ஒருவேளை உங்களுக்குப் பிடித்துப் போகலாம்! :)

பின்குறிப்பு: 
ரோனின், விரைவில் ஒரு டிவி சீரியலாக வரப் போகிறதாம் - அதையாவது புரியும் படி எடுத்தால் மகிழ்ச்சியே! ;) இக்கதையின் தலைப்பைப் பார்த்ததும், 'ராபர்ட் டி நீரோ' நடித்த 'ரோனின்' என்ற அருமையான ஆக்ஷன் திரைப்படம் நினைவுக்கு வந்தது! சாமுராய்கள் பற்றி முதன் முதலாக, 'ஜானி இன் ஜப்பான்' என்ற முத்து காமிக்ஸில் படித்ததாக ஞாபகம் (சின்னஞ் சிறு வயதில்!); அதன் மறுபதிப்பு என் சேமிப்பில் இருக்கும் என்று நினைக்கிறேன் - தூசி தட்டி வைக்க வேண்டும்! :)

16 comments:

 1. Replies
  1. இல்லை கிருஷ்ணா. இது வேறு கதை! ரோனின் என்ற கான்செப்டை வைத்து பல படங்கள் / காமிக்ஸ்கள் வந்திருக்கின்றன. சாமுராய் என்ற பெயரில் நம்ம விக்ரம் கூட ஒரு படம் பண்ணி இருக்காரே?! :D

   Delete
 2. வெகு சமீபத்தில் நான் பார்த்த இரண்டு ஆங்கில திரைப்படங்கள் "Pompeii" மற்றும்
  "47 ronin ". இரண்டுமே medieval period படங்கள். இரண்டுமே நம்மை, நமது ஆர்வத்தை படம் முடியும் வரை இழுத்துப்பிடிக்கும் வசீகரம் கொண்டவை. இரண்டுமே more or less ஒரே மாதிரி கதைகளை கொண்டிருந்தன.ரோனின்னை விட medieval ரோமன் படமான pompeii யில் கிராபிக்ஸ் அதகளம் செய்கின்றது.

  ரோனினை விட pompeii என்னை மிகவும் கவர்ந்தது. ரோனின்னில் காதில் பூ சுற்றும், உருவம் மாறும் சூனியக்காரி, ராட்சசர்கள்,மந்திர வித்தை, பூதம்,பேய்,பிசாசுவேன என படம் ஏகத்துக்கு கொண்டுவந்து எரிச்சல் பட வைகிறார்கள். ஒரு படத்தையோ புத்தகத்தையோ ரசிப்பதற்கு நமக்கு, அந்த கதையினுள் நம்மை நிலைநிறுத்த, அதனில் ஒரு anchor பாயிண்ட் நிச்சய தேவை.
  unfortunately இந்த ரோனின் கதையில் அப்படியொரு வலுனான anchor பாயிண்ட்டை என்னால் பிடிக்கமுடியவில்லை.

  அயல்மொழிக் கதைகளிலேயே மூழ்கியிருகீங்க?? நமது புத்தகங்களின் விமர்சனம் பத்தி மூச்சு விடுவதில்லையே ?? :-)

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்! இந்த ரோனின் கதையிலும், நம்மை பிடித்து இழுக்கும் அம்சம் என்று பெரிதாக எதுவும் இல்லை - 31 ஆண்டுகள் ஆகியும், plot இன்னமும் புதுமையாக இருக்கிறது என்பதைத் தவிர...

   //அயல்மொழிக் கதைகளிலேயே மூழ்கியிருகீங்க??//
   நமது புத்தகங்களிலும் அயல்மொழிக் கதைகள் தானே வருகின்றன?! ;-)

   //நமது புத்தகங்களின் விமர்சனம் பத்தி மூச்சு விடுவதில்லையே ?? :-)//
   ஒரு மாறுதலுக்காகத் தான்! :-)

   Delete
  2. /* ஒரு மாறுதலுக்காகத் தான்! :-) * /

   வழுவுற மீனுல நழுவுற மீனு நீங்கள் என்பது அனைவரும் அறியாததல்லவே :-)

   Delete
  3. பதிவைப் பற்றிய உங்கள் உபயோகமான கருத்துக்கு நன்றி ராகவன்! ;)

   Delete
 3. நேற்றே உங்களின் இந்த பதிவை படித்துவிட்டேன். முதன்முதலாக பின்னூட்டமிட்டிருக்க வேண்டியது... நேரமில்லை, இப்போது அது நல்லதாக போய்விட்டது !

  படித்ததும் முதலில் எழுந்த, நான் பின்னூடமாக எழுத நினைத்த கேள்வியை கிருஸ்ணா வ வெ கேட்டு உங்களிடம் வாங்கிகட்டிக்கொண்டார் ! ( சாமுராய் என்ற பெயரில் நம்ம விக்ரம் கூட ஒரு படம் பண்ணி இருக்காரே?!... )

  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr


  ReplyDelete
  Replies
  1. அது சும்மா ஜாலிக்கு பாஸ்! :) உண்மையில் இதே கேள்வியை இன்னும் ஒரு நண்பர் கேட்டிருந்தார் (fb-ல்).

   Delete
  2. வ வெ கோபித்துகொள்ளபோகிறார் !நானும் சும்மா ஜாலிக்குதான் எழுதினேன் !

   சாமானியன்

   Delete
 4. நண்பரே,

  சுழற்சி முறை பதிவு ஒன்றில் உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்... என் வலைப்பூ பக்கம் வாருங்களேன்... ! அப்படியே... எனது முதல் கதைக்கு உங்கள் கருத்து அல்லது குட்டும் தேவை !!!

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. இரண்டையும் நிறைவேற்றி விட்டாகி விட்டது நண்பரே (கிட்டத்தட்ட)! :)

   Delete
 5. Rober De Niro played a really great role. He is one of the best Hollywood movie players. Who wouldn't love him. He is just good. A true legend. Imagine him playing in a long series of Idhu Kadhala. Probably he will be a "Silent Robert" as always but full of action. Check the latest updates of them here and you will bookmark it asap. http://www.tamilserials.tv/vijay-tv-serials/idhu-kadhala

  ReplyDelete
 6. ninya & samurai pondra peyargal carton kadhaikilil prebalam - muyazhiku paaraatukkal
  kadhaiku idamum paiyarum thevai
  cinemavum irukuthu bike(tvs-saamrai) irukuthu

  ReplyDelete
 7. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
  ACCA Qualifications and Courses | ACCA courses Chennai | Best ACCA training institutes

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia