2013½ - தமிழ் காமிக்ஸ் அரையாண்டு ரிப்போர்ட்!

நடுவில் வலைச்சரத்தில் எழுதிய தத்தக்கா பித்தக்கா பதிவுகளை கணக்கில் சேர்க்காவிட்டால், கடைசியாக பதிவெழுதி காலாண்டு காலம் ஆகிறது! 2013 தொடங்கியே அரையாண்டு ஓடி விட்ட நிலையில் எனது இருப்பை உறுதி செய்யும் விதமாக இந்த முழு நீளப் பதிவு! இதை ஏற்கனவே இட்ட கருத்துக்களின் சுருக்கம் என்று கூட சொல்லலாம், புதிதாக எதையாவது எதிர்பார்த்து வந்திருப்பவர்கள் பதிவின் இரண்டாம் பாகத்திற்கு நேரடியாக செல்லலாம்! :) 

ஜனவரி:
தமிழ் காமிக்ஸ் பிரியர்களுக்கு இந்த ஆண்டின் துவக்கமே முத்து காமிக்ஸ் - Never Before Special மூலமாக தடபுடலாகத்தான் துவங்கியது! தமிழில் இப்படி ஒரு தயாரிப்புத் தரத்துடன் வெளியான காமிக்ஸைப் பார்க்க மகிழ்வாக இருந்தது! ஆனால், பல்வேறு விதமான கதைகளை சுமந்து வந்த இந்த இதழ்; மூன்று தொடர் கதைகளையும் உள்ளடக்கி இருந்ததால் ஒரு முற்றுபெறாத இதழாக அமைந்து ஏமாற்றம் அளித்தது!

கலவையான கதைகளுடன், கனமாக வெளியிட்டால் மட்டுமே அது ஒரு 'சூப்பர் ஸ்பெஷல்' இதழ் என்று எண்ணாமல், ஒரே கதையை இப்போது வருவதை விட பெரிய அளவில், ஹார்ட் பௌண்ட் அட்டையுடனோ (அதாவது ஸ்பெஷல் எடிஷன்!); அல்லது ஒரு தொடர் கதையின் அனைத்து பாகங்களையும் ஒரே இதழாகவோ வெளியிடலாம்! அல்லது ஒரே ஒரு புதிய நாயகரை தடபுடலாக அறிமுகப் படுத்தலாம்! ஆனால் லயன்-முத்து காமிக்ஸ் எடிட்டர் விஜயனோ தனது காக்டெயில் பாணியை கைவிடுவதாய் இல்லை என்பதற்கு இம்மாதம் வெளிவரப் போகும் லயன் 29வது ஆண்டு மலரே சாட்சி!  அடுத்ததாக, 30வது ஆண்டு மலருக்கு 1000 ரூபாயில் எக்கச்சக்க கதைகள் வேண்டும் என்ற ரீதியில் லயன் ப்ளாகில் விழும் கருத்துக்களை பார்க்கும் போது மாறுபட்ட ஸ்பெஷல் இதழ்கள் வரும் என்ற நம்பிக்கை அடியோடு போய் விட்டது! 

பிப்ரவரி:
டெக்ஸ் வில்லரின் 'சிகப்பாய் ஒரு சொப்பனம்' & லக்கி லூக்கின் 'வில்லனுக்கொரு வேலி' என இரண்டு புத்தகங்கள் 50 ரூபாய் விலையில் பிப்ரவரியில் வெளியாகின! ஸ்பெஷல் என்று முடியும் எந்த உபபெயரும் இந்த இதழ்களுக்கு இல்லை என்பதே ஒரு ஸ்பெஷலான அம்சம்தான்! ;) தலையணை சைஸ் காக்டெயில் காமிக்ஸ் வரிசையில், இந்த மாதாமாத ஸ்பெஷல் பெயர் சூட்டல்களும் தமிழ் காமிக்ஸின் தகர்க்க முடியாத தனித்துவ அம்சங்களில் ஒன்றாக இணைந்து விட்டது!

பரபரப்பான கதையம்சத்துடன் களமிறங்கிய டெக்ஸ் தனது ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை என்றாலும் புத்தகத் தரத்தில் ஏமாற்றம் துவங்கியது இந்த இதழில்தான்! லக்கி லூக்கை முன்பு அளவுக்கு ரசிக்க முடியாமல் போனாலும் சிறுவர்களுக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்த இவரைப் போன்றவர்களே சரியான தேர்வாக இருப்பார்கள்! டெக்ஸ், டைகர், லக்கி லூக், சிக் பில் என்று நீளும் கௌபாய்களின் பிடியில் இருந்து தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்! :) 

மார்ச்:
லார்கோ வின்ச் - ஆக்ஷன் ஸ்பெஷல்! இந்த வருடம் வெளியான காமிக்ஸ்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று! அற்புதமான மொழிபெயர்ப்புடன் வெளிவந்த க்ரைம் த்ரில்லர்! கொசுறாக வாசக நண்பர் செந்தில் குமாரின் மொழிப்பெயர்ப்பில் மதியில்லா மந்திரி கதை இந்த இதழுடன் இணைப்பாக வந்தது! லார்கோ சாகசத்தை விட எடிட்டர் ப்ளாகில் நடந்த சென்சார் குறித்த விவாதங்கள் ஒரே அடிதடியாக இருந்தன! காமிக்ஸ் படைப்பாளிகள் இப்போது எடிட்டிங்கிலும் மூக்கை நுழைக்க ஆரம்பித்திருப்பதால், இனி நானே நினைத்தாலும் நினைத்த இடத்தில் கத்திரி போட முடியாது என்று சமீபத்தில் சென்சார் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எடிட்டர்! படைப்பாளிகள் இப்படியே கெடுபிடியாக இருந்தால் இன்னும் பல நல்ல மாற்றங்கள் நிகழும்! :) 

ஏப்ரல்:
ஹாட் & கூல் ஸ்பெஷல் & டைகர் ஸ்பெஷல் என்று இரண்டு 'பெசல்' இதழ்கள் வெளியாகின! :) 'ஒரு ஒப்பந்தத்தின் கதை' - NBS-இல் தொடங்கிய வேய்ன் ஷெல்டன் சாகசத்தின் இறுதிப் பாகம்! முதல் இரண்டு பாகங்களை விட இதில் பரபரப்பு அதிகம்! மசாலா தூக்கலான இந்த பழி வாங்கும் படலத்தின் மூலம் வேய்ன் முன்னணி நாயகர்கள் வரிசையில் இலகுவாக இடம் பிடித்துள்ளார்! சிக் பில் குழுவின் 'ஒரு கழுதையின் கதை' - பல நாட்களுக்குப் பின்னர் மிகவும் ரசித்துப் படித்த ஒரு காமெடி கதை! எடிட்டரின் சரளமான ட்ரேட்மார்க் நகைச்சுவை வசனங்கள் மிகவும் ரசிக்க வைத்தன!

இதே மாதம் சன் ஷைன் லைப்ரரியில் வெளியான டைகர் ஸ்பெஷல், அமெரிக்க வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த வழக்கமான ப்ளூபெர்ரி சாகசம்! அட்டை, அச்சுத்தரம் என்று எந்த ஒரு வகையிலும் குறை சொல்ல முடியாத ஒரு இதழ்! இரும்புக்கை எத்தன் & பரலோகப் பாதை - இந்த பழைய முத்து இதழ்களின் வண்ண மறுபதிப்புதான் என்றாலும் நான் படிப்பது இதுவே முதல்முறை!  

மே:
ஸ்பெஷல் என்ற அடைமொழி ஏதும் இன்றி இரத்தத் தடம் வெளியானது! ஏப்ரல் மாத டைகர் ஸ்பெஷலில் ஜோராக ஆரம்பித்த கதை, செவ்விந்தியர்களுக்கு எதிரான டைகரின் நடவடிக்கைகளால் சப்பென்று முடிந்தது! இருந்தாலும், இது ஒரு அட்டகாசமான தொடர் என்பதில் சந்தேகம் இல்லை! கிளைமேக்சை விட படு சொதப்பலான அம்சமாக இந்த இதழின் அச்சுத்தரம் அமைந்திருந்தது! இதே இதழில் பக்க நிரப்பியாக வெளியான ஸ்டீல் பாடி ஷெர்லாக் கதையின் பேச்சுத்தமிழ் வசன நடை, ஒட்டாமல் ரொம்பவே தனித்துத் தெரிந்தது, கதையும் சுமார் ரகமே!  

ஜூன்:
பெங்களூர் காமிக் கானில் பங்கேற்பதற்காக நான்கு இதழ்கள் இம்மாதம் தயாராகின. எனவே, இவ்வருட காமிக் கான் ரொம்பவே டல்லடித்தாலும், தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு புத்தக எண்ணிக்கையில் ஏதும் குறை இருக்கவில்லை!  

1. லக்கி ஸ்பெஷல்:
சூப்பர் சர்க்கஸ் & பொடியன் பில்லி இவற்றின் மறுபதிப்பு, சிறு வயதில் விழுந்து விழுந்து சிரித்த பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. இப்போது அந்த அளவுக்கு சிரிக்க முடியாத அளவுக்கு இறுக்கமானவர்களாக நாம் மாறியிருந்தாலும் இந்த இரண்டு லக்கி கதைகளும் கிளாஸிக் ரகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

2. குற்றத் திருவிழா:
ஸ்பைடர் சாயலில் இன்னொரு "V ஷேப் ஹேர்-ஸ்டைல் மண்டையர்" டயபாலிக்! சற்று பூச்சுற்றல் ரகம் என்றாலும், விறுவிறுப்பான கதை மற்றும் தெளிவான சித்திரங்கள் அதை ஈடுகட்டி விடுகின்றன! கதையில் வரும் கம்பியூட்டர் மானிட்டர், டெலிபோன், மைக்ரோ ஃபிலிம், கார் & வேன் இவற்றைப் பார்க்கையில், இது குறைந்தது 25 - 30 வருட பழைய காமிக்ஸ் எனத் தோன்றினாலும் புதிய பாணி (நமக்கு!) சித்திரங்களின் புண்ணியத்தில் அது ஒரு உறுத்தலாக தெரியவில்லை! இவ்விதழின் பின்னட்டையில் வாசகர் ஷண்முக சுந்தரத்தின் ஆக்கம் வெளியானது! அதன் பிறகு ஏனோ அவர் காணாமல் போய் விட்டார், புதிய கவர் டிசைன்களையும் ஃபேஸ்புக்கில் பகிர்வதில்லை!  

3 & 4. இரண்டு டெக்ஸ் இதழ்கள்:
நிலவொளியில் ஒரு நரபலி - டெக்ஸை முதன்முறையாக வண்ணத்தில் காணும் ஆர்வத்துடன் ஒரே மூச்சாக படித்ததில் கதை போரடிக்காமல் நகர்ந்தது! ஆனால் அடுத்ததாக "பூத வேட்டை-யின்" 224 வளவள பக்கங்களை படித்து முடிப்பதற்க்குள் நாக்கு தள்ளி விட்டது! இரண்டு இதழ்களின் முன்னட்டைகளும் சுமார் ரகமே! அடிக்கடி 'அட்டை நல்லா இல்லை' என்று நொட்டை சொல்லி போரடித்து விட்டதால், இனிமேல் இது பற்றி அதிகம் சட்டை செய்வதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்! :) இந்த வருடம் வெளியான மூன்று டெக்ஸ் கதைகளும் அமானுஷ்யம் சார்ந்ததாக அமைந்ததோடில்லாமல், அடுத்ததாக வரவிருக்கும் டெக்ஸ் கதையும் (திகில் நகரில் டெக்ஸ்) அமானுஷ்ய கதையாக இருக்கலாம் என்பதை எண்ணும் போதே மனதுக்குள் திகில் அடிக்கிறது! :)
அட்டைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!
அரையாண்டு ரிப்போர்ட் - பாகம் 2!
இந்த 6 மாதங்களில் மட்டும் மொத்தம் 11 புத்தகங்கள் வெளியாகியுள்ளன! லார்கோ, வேய்ன், டயபாலிக் என ஆக்ஷன் நாயகர்கள் ஒருபுறம்; டெக்ஸ், டைகர் என்று வெஸ்டர்ன் ஆசாமிகள் மறுபுறம்! அவ்வப்போது நகைச்சுவைக்காக லக்கி லூக், சிக் பில் என்று இந்த மூன்று பாணிகளை தாண்டி நாம் இந்த ஆண்டும் பயணிக்கவில்லை! அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிராபிக் நாவல்கள் வந்தாலும், ஹாரர், வார், சூப்பர் ஹீரோ (ஸ்பைடர் அல்ல!), சயன்ஸ் பிஃக்ஷன் என்று கொஞ்சம் மாறுதலாகவும் முயற்சித்தால் நன்றாக இருக்கும்! இந்த ஆண்டு அட்டவணை ஏற்கனவே முடிவாகி விட்ட நிலையில், அடுத்த வருடமாவது இது நடக்கிறதா என்று பார்க்கலாம்!

அதே போல, சந்தா கட்டலாம் என்று நினைப்பவர்களை +5, +6, +12, சன்ஷைன், முத்து, லயன், மறுபதிப்பு,  சூப்பர் ஸ்பெஷல் அட்வான்ஸ் புக்கிங் என்று விதவிதமாக குழப்பாமல் சந்தா முறையை அடுத்த ஆண்டு எளிமைப் படுத்தினால் வசதியாக இருக்கும்!

ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு விகிதத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மற்ற பொருட்களின் விலைகள் எகிறுகின்றன! இம்மாதம் முதல் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப் போவதாக சமீபத்தில் விஜயன் அவர்கள் அறிவித்திருந்தார்! இவற்றை ஈடு கட்ட விரைவில் காமிக்ஸ் விலை கூடினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! மாறாக, விலையில் ஏற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தால் அந்த எண்ணம் புத்தகத் தரத்தில் எதிரொலித்து விடக்கூடாதே என்று சற்று கவலையாகத்தான் இருக்கிறது! தொடர்ந்து நிகழும் அச்சுக் குளறுபடிகள், தாளின் தர மாற்றங்கள் கலக்கத்தைத் தருகின்றன! .என்னைப் பொறுத்தவரை, புத்தகத் தரம் குறையாமல் இருக்க விலையை ஏற்றியே ஆக வேண்டும் என்றால் அதை நிச்சயம் ஆதரிப்பேன்! அல்லது பக்கங்களைக் குறைக்க ஃபில்லர்  கதைகளை மூட்டை கட்டி விடலாம்!

இன்று விற்கும் விலைவாசியில் 100 ரூபாயில் தரமான முழுவண்ண காமிக்ஸ் இதழ்கள் கிடைப்பது மிகப் பெரிய விஷயம்தான் என்றாலும், சல்லிசாக கிடைக்கும் ஒரே காரணத்தினால் இவற்றை விமர்சிக்கவே கூடாது என்பது மிகவும் தவறான, வேடிக்கையான வாதமாக தோன்றுகிறது! எடிட்டர் ப்ளாகில் விமர்சிப்பவர்களை விமர்சித்து ஒரு சிலர் வியாக்கியானங்கள் செய்வதும் தொடர்ந்து வருகிறது! இவர்களின் அன்புத் தொல்லை ஒருபுறம் என்றால் பேஸ்புக்கில் ஒரு சிலர் விமர்சனம் செய்தே ஆக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எந்நேரமும் எதையாவது குறை சொல்லி இன்னொரு பக்கம் ஆனந்தத் தொல்லை தருகிறார்கள்! மூன்றாவது அணியினரோ புத்தகம் எந்த தரத்தில் வந்தாலும் அதை 'சூப்பர்' என்று சொல்லியே சிரிப்புத் தொல்லை தருகிறார்கள்! :) ஆளாளுக்கு ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது! எனவே இந்த மும்முனை தள்ளுமுள்ளுவில் சிக்காமல் நான் சொல்ல நினைப்பதை மட்டும் ஓரிரு பின்னூட்டங்களாக எடிட்டர் ப்ளாகில் போட்டு விட்டு நடையைக் கட்டி விடுகிறேன்! எல்லோருக்கும் நல்லவனாகவோ, சிந்தனாவாதியாகவோ, காமிக்ஸ் தீவிரவாதியாகவோ, நடுநிலையாளனாகவோ என்னை போலியாக முன்னிறுத்திக் கொள்வதைக் காட்டிலும் நான் நானாகவே அதாவது 'மொக்க ப்ளேடாகவே' இருக்க விரும்புகிறேன். :)

பொதுவாகவே காமிக்ஸ் பதிவர்களின் ஆர்வம் முன்னிலும் வெகுவாக குறைந்து விட்டதை கவனிக்கிறேன்! முன்பு ஒவ்வொரு மாதமும் காமிக்ஸ் வெளியான சூட்டோடு பலரின் விமர்சனப் பதிவுகள் வெளியாகும் - இப்போதோ பல இதழ்களுக்கு ஒரு பதிவு கூட வருவதில்லை! இதற்கு காரணங்கள் என்னவாய் இருப்பினும், காமிக்ஸ் பதிவர்களின் விமர்சனங்களை கடுமையாக எதிர்த்து வந்த தீவிர வாசக அன்பர்கள் இந்த தேக்கத்தை பார்த்து சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம்! :) 

இறுதியாக...
அவ்வபோது என் மனைவியை காமிக்ஸ் படிக்க வற்புறுத்துவது மூலமாக துன்புறுத்தி மகிழ்வது உண்டு! :) எனக்காக ஆர்வத்துடன் படிப்பது போல பாவ்லா காட்டி நான் நகர்ந்ததும் புத்தகத்தை மூடி வைத்து விடுவார்! 'ஊஹீம், இது வேலைக்கு ஆகாது, என் எதிரில் முழுதாக படித்தே ஆக வேண்டும்' என்று வம்படியாக 'ஒரு கழுதையின் கதையை' படிக்க வைத்தேன். நான் ரசித்து சிரித்த இடங்களை எல்லாம் ஒரு ஜென் துறவியைப் போன்ற சலனமில்லா முகத்துடன் கடந்து கொண்டிருந்தார். என் நகைச்சுவை உணர்ச்சி மீது எனக்கே பலமான சந்தேகம் வந்து விட்டது! 'இங்கே சிரிக்கணும்', 'ஷெரிஃப்போட இந்த முகபாவத்தைப் பார்த்தியா - காமெடியா இல்ல?' என்று ரன்னிங் கமெண்டரி கொடுத்ததில் லைட்டாக புன்னகைத்துக் கொண்டே வந்தார்; அவர் கண்களுக்கு நானே ஒரு காமெடி கழுதையாக தெரிந்தேனோ என்னவோ? :) என் மனைவிக்கு லார்கோ ரக ஆக்ஷன் கதைகளும் பிடிப்பதில்லை, இது போன்ற கார்ட்டூன் கதைகளும் பிடிப்பதில்லை. தவிர காமிக்ஸ் பாணி தமிழ் வசனங்களை புரிந்து கொள்வதே அவருக்கு சற்று சிரமமாகத்தான் இருக்கிறது! ரசனை என்பது தானாக வர வேண்டிய ஒன்று, திணிக்க முடியாது இல்லையா?! அவருக்கு காமிக்ஸ் மீது ஈடுபாடு இல்லை - அவ்வளவுதான்! ஆனாலும், என் துன்புறுத்தல்கள் தொடரும்! :) 

பி.கு:
நாங்களும் நூறாவது பதிவு போடுவோம்ல!:)

68 comments:

 1. கார்த்திக்,

  அருமையான பதிவு .. காமிக் காதலன் [காமிக் லவர் :-)], புரட்சித் தீ போன்ற அரசியல் அடைமொழிகளைத் தாண்டி நாம் நாமாகவே இருப்பது என்பது நமது ப்ளாக்-ல் தான் சாத்தியம் போலும் !

  நான் ஆவேசமாய்க் கூறிய பல கருத்துக்களை அழகாய்ப் பதித்துள்ளீர்கள் !

  சல்லீசாய் 25 புத்தகங்கள் வருவதற்கு பதில் 200 ரூபாயில் ஆறே புத்தகங்கள் வருடந்தோரும் அருமையாய் இருக்கும்! ஹ்ம்ம் .. எங்கே சொல்லுவது ? :-)

  தொடர்ந்து எழுதுங்கள் ...!

  பி.கு: உங்கள் நகைச்சுவை இழைந்தோடும் பதிவுகள் படிக்கையில் என் பெரியப்பா ஞாபகம் எப்போதும் வருவதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. Congrats on your 100th entry!

   Delete
  2. கார்த்திக்,

   நீங்கள் ஒரு பிரபல காமிக்ஸ் பதிவர் [:-)] என்பதால் இதனை இங்கே பதிக்கிறேன் ...

   ஆண்டுக்கு ஆறு இதழ்கள், இருநூறு ரூபாய் பிரதிகள், இரு மாதங்களுக்கு ஒரு முறை: 4 கதைகள் உள்ளடக்கி, வழ வழ பேப்பர் இல்லாமல், ஆனால் நல்ல பேப்பர் கொண்டு, "வருகிறது, போகிறது" இல்லாமல், சுயபுராணம் தவிர்த்து ஒரு சீராய் வந்திட்டால் ...

   - ஒரு கௌபாய் இதழ்
   - ஒரு கார்டூன் இதழ்
   - ஒரு லார்கொ / ஷெல்டன் [Franco - Belgian மசாலா ] இதழ்
   - ஒரு 'காதுல பூ' இதழ் (அதாவது டயபாலிக் இத்யாதி)
   - ஒரு கிராபிக் நாவல்கள் அடங்கிய இதழ்
   - ஒரு வருடாந்திர கிளாச்சிக் ரீப்ரின்ட் (4 கதைகள் கொண்டது)

   அடுத்த இருபது வருஷம் அடிக்க ஆளில்லாமல் வண்டி ஓடும்! இசையுமா இசைத் தமிழ்?

   Delete
  3. வாழ்த்துகளுக்கு நன்றி ராகவன்!

   நீங்கள் கூறும் யோசனைகளில் எனக்கு உடன்பாடு இல்லை! :) 200 ரூபாய்க்கு 4 கதைகள் என்பதும் நான் மேலே குறிப்பிட்டது போல எனக்கு சற்றும் பிடிக்காத காக்டெய்ல் பாணியே! இருமாதங்களுக்கு ஒரு இதழ் என்பது நீண்ட காத்திருப்பு! தவிர நீங்கள் வரிசைப் படுத்தியுள்ள கதை பாணிகள் ஏற்கனவே வருவனதான், புதிதாய் ஏதும் இல்லை!

   Delete
  4. Will ping you separately ... ingana ithukku mEla pEsina angana NOORAVATHU pathivu super hero neengalaaththaan irukkum :-)

   Delete
  5. Karthik Somalinga, 100th pathivu super star neengalE thaan! :-)

   Delete
 2. ஜஸ்ட் மிஸ்டு. வந்தோம்ல செகண்ட்

  ReplyDelete
 3. காமிக்ஸ் பதிவர்களின் தேக்க நிலைக்கு காரணம் facebook என அடித்து கூறலாம்

  ReplyDelete
  Replies
  1. இல்லை தமிழ் ... நான் அப்படி எண்ணவில்லை ... நம் மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே எழுதினால் வரும் எதிர்மறை feedback ஒரு காரணம்.

   காமிக்ஸ் நாள் செல்லச் செல்ல தரம் குறைவதால் அல்லது வேறுபடுவதால் ஏற்படும் ஆர்வக்குறைவு - "சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலை" - இன்னொரு காரணம் !

   Delete
  2. @லக்கி:
   அடிக்காம கூறுங்களேன் ப்ளீஸ்! :) பேஸ்புக்கும் ஒரு காரணம்தான்! ஆனால், ஃபேஸ்புக் பதிவுகள் சில வாரங்களில் தேடி எடுக்க முடியாதபடிக்கு கமெண்ட் கடலில் மூழ்கிப் போய் விடுவதால் எனது சாய்ஸ் வலைப்பதிவுகளே!

   Delete
 4. காமிக்ஸ் பதிவர்கள் என்று இல்லை சினிமா பதிவர்கள் , பொது பதிவர்கள் என அனைத்து பதிவர்களும் facebook ஆல் பதிவை குறைத்துள்ளனர்

  ReplyDelete
 5. அப்புறம் மறந்துட்டேன் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நூறாவது பதிவுக்கும் தொடர்ந்து பகிர்ந்திடவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் அவர்களே!!

   Delete
 7. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

  பி.கு: நாங்களும் கம்மென்ட் போடுவோம்ல?

  ReplyDelete
  Replies
  1. அட நம்ம அப்துல் பாஸித்! :) இப்பதான் url தெரிஞ்சதா?! ;)

   Delete
  2. I am a silent reader..... :)

   Delete
 8. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  எல்லா சைடும் கோல் போட்டுட்டீங்க :-).

  ஃபேஸ்புக், எடிட்டர் ப்ளாக்கில் உங்கள் கருத்துக்களைச் சொல்ல சிறிய தயக்கம் என்னும் நிலையில், உங்கள் ப்ளாக்கில் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் சின்ன அப்ளிக்கேஷன்.

  மனைவியைக் காமிக்ஸ் படிக்க தந்த காமெடி அருமை. என் வீட்டில் படிக்கத் தந்தாலும் இதுவே நடக்கும்.. அவர்கள் உலகம் வேறு...

  இது கூட பரவாயில்லை. சிறுவயதில் காமிக்ஸ் மெகா வெரியனாக இருந்த என் அண்ணனிடம் புக்ஸ் காண்பித்தால்.. ஓ.. லயன் காமிக்ஸ் எல்லாம் இன்னும் வருதான்ற ஆச்சரியம் மட்டுமே... புத்தகத்தை திறந்து கூட பார்க்க மாட்டேன் என்கின்றான்.. Nostalgic feeling ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையில்.. நமக்கு காமிக்ஸ்.. அவனுக்கு இளையராஜா பாடல்கள்..

  ReplyDelete
  Replies
  1. //எல்லா சைடும் கோல் போட்டுட்டீங்க :-).//
   சேம் சைடிலேயும்தான்! ;)

   //Nostalgic feeling ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையில்.. நமக்கு காமிக்ஸ்.. அவனுக்கு இளையராஜா பாடல்கள்..//
   எங்க அண்ணனும் இதே கேஸ்! வீட்டுல ராஜா CDs ரொப்பி வச்சுருக்கார்! :)

   Delete
 9. நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்... ரொம்பவும் துன்புருத்திடாதீங்க...! வெருத்துடப் போறாங்க! வாழ்த்துகள்...

  ReplyDelete
 10. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள், கார்த்திக்!

  ReplyDelete
 11. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

  அருமையான அரையாண்டு summary!

  //.. வம்படியாக 'ஒரு கழுதையின் கதையை' படிக்க வைத்தேன். நான் ரசித்து சிரித்த இடங்களை எல்லாம் ஒரு ஜென் துறவியைப் போன்ற சலனமில்லா முகத்துடன் கடந்து கொண்டிருந்தார்..//

  ஹி..ஹி .. இதே எங்க வீட்டுல முயற்சி செய்தால் காமிக்ஸ் உடன் சேர்த்து என்னையும் வெளியே எறிந்து விடுவார்கள் :)

  தயவுசெய்து முன்பு போல, மாதம் ஒரு காமிக்ஸ் பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்... உங்கள் trade mark நையாண்டியுடன் :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி பெரியார்!

   //காமிக்ஸ் உடன் சேர்த்து என்னையும் வெளியே எறிந்து விடுவார்கள்//
   எறியப் படும் காமிக்ஸ்களிற்கு (மட்டும்) அடைக்கலம் கொடுக்க ஆவலுடன் உள்ளேன்! :p

   Delete
 12. வாழ்த்துக்கள் கார்த்திக். நகைசுவையுடன் இன்றைய தமிழ் காமிக்ஸின் அவலநிலையை கூறியுள்ளீர்கள்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் கார்த்திக். நகைசுவையுடன் இன்றைய தமிழ் காமிக்ஸின் அவலநிலையை கூறியுள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அவலம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை! ஆனால் இன்னும் வளரலாம்! வளரும்! :)

   Delete
  2. மீசை, தாடியா கார்த்திக்? :-D

   Delete
 14. வந்தோம்ல நடுவுல :)

  நூறு கூடிய விரைவில் ஆயிரம் ஆக
  வாழ்த்துக்கள் - நாங்களும் வாழ்த்து வோமில்ல

  ReplyDelete
  Replies
  1. அப்படியே காமிக்ஸ் ஏதாவது குடுத்துட்டு போங்க ஜிம்மி தாத்தா! :)

   Delete
 15. நூறுக்கு வாழ்த்துக்கள் . . அடிக்கடி பதிவிட்டு அதகளம் செய்யுமாறு கோபத்துடன் கூறிக் கொல்கிறேன் ;-)

  ReplyDelete
 16. DEAR KARTHIK,
  CONGRATS FOR UR 100TH POST.AS ALWAYS THIS POST TOO BROUGHT OUT SMILE FROM MY SERIOUS FACE?!

  ReplyDelete
 17. FROM MURUGAN THIAGARAJAN,
  BLADE U ALWAYS ROCKS.

  ReplyDelete
 18. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 19. மனைவியை காமிக்ஸ் படிக்கவைக்கும் விபரீத முயற்சியெல்லாம் எதுக்கு சார்? என் மனைவி லார்கோ கதையை படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

  '' காமிக்ஸ்லையும் இப்படி கன்றாவி படமெல்லாம் வர ஆர‌ம்பிச்சாச்சா? வெளங்குனாப்புலதான்......ஆபாசமில்லாத பத்திரிக்கை படிக்கனும்னா இனிமே கல்யாணப்பத்திரிக்கை மட்டும்தான் படிக்கனும் போல ''

  இது எப்படி இருக்கு?

  ReplyDelete
  Replies
  1. My wife has started reading Lucky Luke and Yakari..! Largo - she has requested to give away after reading as there is a small kid growing at home :-)

   Delete
  2. @சிவ.சரவணக்குமார்:
   //மனைவியை காமிக்ஸ் படிக்கவைக்கும் விபரீத முயற்சியெல்லாம் எதுக்கு சார்?//
   ஹா ஹா, அப்படியாவது அவங்களை கொடுமைப் படுத்தலாம்னுதான் பாஸ்!

   //ஆபாசமில்லாத பத்திரிக்கை படிக்கனும்னா இனிமே கல்யாணப்பத்திரிக்கை மட்டும்தான் படிக்கனும் போல... இது எப்படி இருக்கு?//
   சூப்பர்! இன்னொரு சிம்பிள் வழியும் இருக்கு! எல்லா பத்திரிக்கைகளையும் 'கண்ணை மூடிட்டு' படிக்கலாம்! :)

   Delete
 20. ஹல்லோ கார்த்திக், ஒரு வழியாக காலாண்டுக்கு அப்புறம் ஒரு அரையாண்டு ரிப்போர்ட். நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  'மொக்க ப்ளேடாகவே இருக்கே விரும்பு கிறேன் என்று முடியும் பத்தி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பாஸ் கலாய்க்கல. தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் வகையை தெளிவாக சொல்லியது.

  காமிக்ஸ் படிக்க சொல்லி துன்புறுத்ர அளவுக்கு போனது ரொம்ப ஓவர். வன்கொடுமை சட்டதில உள்ள போட்டுற போறாங்க. எங்க வீட்டில் காமிக்ஸ் என்றாலே கலவரம் தான். சத்தமில்லாமல் என் மகளை லக்கி லுக் கொடுத்து அணி சேர்த்து வருகிறேன்.

  ரொம்ப நாள் பதிவிடலையே என்ன ஆச்சு?

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜ்!

   //சத்தமில்லாமல் என் மகளை லக்கி லுக் கொடுத்து அணி சேர்த்து வருகிறேன்.//
   சூப்பர் ஐடியா! எனக்கும் இதே பிளான்தான்! ஆனா பயபுள்ள இப்பதான் நர்சரி போறான்! இந்த வயசுல புக்கைக் கொடுத்தா 'படிச்சுக் கிழிச்சுடுவான்'! :)

   //ரொம்ப நாள் பதிவிடலையே என்ன ஆச்சு?//
   ஒரு சின்ன கமர்சியல் ப்ரேக்! :)

   Delete
 21. அருமையான பதிவு. விமரிசனம் செய்தால் மாற்றம் வரும் என்றால் விமரிசிப்பதில் அர்த்தம் உள்ளது..... அனைவரும் கதைகளை தனித்தனியாக வெளியிட சொல்லி வலியுறித்தியும் அவர் தனது போக்கிலிருந்து மாறுவதாக இல்லை. இவ்வளவுக்கு அப்புறமும் கிரீன் மனோர் / தோட்டா தேசம்/ பிரளயத்தின் பிள்ளைகள் ஒன்றாக வருவதே எதுவும மாறப் போவதில்லை என்பதைக் காட்டுகிறது. ஆனாலும் நாம் சொல்வதை அவரவர் வழியில் சொல்வோம்.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி!

   டெக்ஸ் ஸ்பெஷல் தனியே வருவது இப்போதைக்கு ஒரு சிறிய consolation! இதே பாணி அடுத்த வருட ஸ்பெஷல் இதழ்களிலும் தொடர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும்!

   //ஆனாலும் நாம் சொல்வதை அவரவர் வழியில் சொல்வோம்.....//
   நிச்சயமாக!

   Delete
 22. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் - இந்த பதிவு மற்ற பதிவுகளை விட மிகவும் சீரியஸ் ஆக உள்ளது (Terror Torture episode தவிர்த்து)

  // சூப்பர் ஹீரோ (ஸ்பைடர் அல்ல!) //
  எப்ப எழுதினாலும் எங்க தலைவர இழுக்காம உடமாட்டிங்க போல. :)
  அவரோட இன்னும் இருக்கிற கதையே 2 தானம் கொஞ்சம் அதா எதாவது கிளாச்சிக் பிரிண்ட்ல போடா விடுங்க பாஸ்.

  சூப்பர் ஹீரோ (ஸ்பைடர் அல்ல!), - உங்கள் சாய்ஸ் சூப்பர் ஹீரோ யாரு ?.


  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்!

   //இந்த பதிவு மற்ற பதிவுகளை விட மிகவும் சீரியஸ் ஆக உள்ளது//
   புலம்பல் கொஞ்சம் ஓவராத்தான் போயிடுச்சோ?! :)

   //எப்ப எழுதினாலும் எங்க தலைவர இழுக்காம உடமாட்டிங்க போல. :)//
   எங்க முன்னாள் தலைவரு மேல அவ்ளோ பாசம்! :)

   //உங்கள் சாய்ஸ் சூப்பர் ஹீரோ யாரு ?.//
   ஸ்பைடர் தலையை வெட்டினால் அதற்கு பின்னே ஒரு ஆசாமி மறைந்திருப்பார் பாருங்கள்! அவர்தான் என்னுடைய சாய்ஸ்! ;)

   Delete
 23. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திக். But இது என்னுடைய first comment! மேலும் வளர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி செந்தில்! தொடர்ந்து கமெண்டுங்கள், காசா பணமா?! :) அப்படியே 'பார்னே கார்த்திகேயனிடம்' சொல்லி ஒரு பாட்டில் (அதாவது காம்ப்ளான்) அனுப்பி வையுங்கள்! நான் வளரனும்ல?! :)

   Delete
 24. இனிய நண்பர் கார்த்திக்,

  தங்களது வலைப்பூவில் சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் (வீட்டில் வாங்கிய அடி கூட பல சதத்தை (சத்தமில்லாமல்) தாண்டுமாமே ?)

  உண்மையிலேயே நூறு பதிவுகள் என்பது அருமையான விசயமே ...

  இந்த பதிவிற்கு மிக நீண்ட நாட்கள் எடுத்து கொண்டு விட்டீர்கள் :) இனி வரும் பதிவுகளை இடைவெளி இல்லாமல் இட்டால் நன்றாக இருக்கும்.

  // ஆனாலும், என் துன்புறுத்தல்கள் தொடரும்! :)//

  ஆமாம் !! எங்கும் :)

  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
  ReplyDelete
  Replies
  1. ஆமா பாஸ், சத்தம் வராம அடிச்சதுல பித்தம் தலைக்கேறி மூணு மாசம் இந்தப் பக்கமே வரல! :D

   இனிவரும்பதிவுகளைஇடைவெளிஇல்லாமல்இட்டால்படிக்கறவங்களுக்குஒண்ணுமேபுரியாதேநண்பா! :)

   Delete
 25. "KAUN BANEGA TRANSLATOR - சீசன் 2" போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் கார்த்திக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

  ReplyDelete
 26. தண்ணீர் பிரச்சினை, கரண்ட் எப்ப வரும், எப்ப போகும்ன்னே தெரியாத மரணபயம்(??!) , புதுசா வாடகைக்கு குடிவந்த வீட்டில bsnl evdo சிக்னல் இல்லாம அதை கேன்சல் பண்ணிய சோகம், அதுனால இணையம் பக்கமே ஒருமாசமா தலைவைக்கமுடியாத வெறுப்பு, பழைய வீட்டுஓனர் அட்வான்ஸ் பணம் தராம இழுத்தடிக்கிற கடுப்பு... இவ்வளவுக்கு நடுவிலும் உங்க பதிவை படிக்கும்போது வரும் சிரிப்பை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் என்னை முறைக்கும் முறைப்பு இருக்கே, யப்பா... தேங்க்ஸ் தலைவா... for make my time lighter! :) இவ்வளவு sense of humour உள்ள உங்களை கணவராக கொண்ட மனைவி கொடுத்துவைத்தவர்.(நான் பூரிகட்டை அடியை சொல்லைப்பா!) :)

  ReplyDelete
  Replies
  1. என்னடா ரொம்ப நாளா பேஸ்புக் பக்கம் நீங்க வரல்லியேன்னு நினைச்சேன்! கேப்டன் (வி.கா. அல்ல!) பெயர் வச்சுகிட்டாலே கஷ்டம்தான் போல!!

   //இவ்வளவு sense of humour உள்ள உங்களை கணவராக கொண்ட மனைவி கொடுத்துவைத்தவர்//
   பாராட்டுகளுக்கு நன்றி! ஆனா, அது ஒரு பெரிய black humor கேப்டன்! அழுதிகிட்டே சிரிக்கிற மாதிரி நடிக்கிறது எல்லாம் ஒரு பெரிய கலை! ஹி :( ஹி :(

   :)

   Delete
 27. அட கார்த்தி!, நூறு பதிவ தாண்டியாச்சா ??? சூப்பர் ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 28. டியர் கார்த்திக் அங்கிள்!!!

  க்ரீன் மேனர் கதையில் உங்கள் மொழிபெயர்ப்பு அட்டகாசம்.உண்மையை சொல்கிறேன்.
  இவர் என்ன பிரமாதமாக எழுதியிருக்க போகிறார் என்ற அலட்சியத்தோடு படிக்க ஆரம்பித்த அடியேனுக்கு முதல் பக்கத்திலேயே ஆனந்த அதிர்ச்சி.உங்கள் மொழிநடையும் ,விக்டோரியன் காலத்து ஆங்கிலேயர்களை அப்பட்டமாக நய்யாண்டி செய்த வார்த்தை ஜாலங்களும் ரியலி சூப்பர்.
  நூறாவது பதிவிற்கு வாழ்த்து சொல்ல வயதில்லை.வணங்குகிறேன்:-)

  ReplyDelete
  Replies
  1. டியர் சாத்தான் தாத்தா!

   உங்களுடைய மனமார்ந்த பாராட்டுகளுக்கும், நூறாவது பதிவிற்கான வாழ்த்துகளுக்கும் நான் மனதார நன்றி கூறுகிறேன்!

   //இவர் என்ன பிரமாதமாக எழுதியிருக்க போகிறார் என்ற அலட்சியத்தோடு படிக்க ஆரம்பித்த அடியேனுக்கு//
   உங்களுடைய இந்த நேர்மையான கருத்திற்கு மிக்க நன்றி!

   என்னால் இயன்ற அளவு ஆங்கிலக் கலப்பின்றியும், எனக்கு தெரிந்த அளவு தூய தமிழிலும் எழுதினேன் - பரவலாக கிடைக்கும் பாராட்டுகள் மகிழ்வூட்டுகிறது! நன்றி நண்பர்களே!

   பி.கு.1: சாத்தா(ன்) தாத்தா - என்று செம ரைமிங்காக இருக்கிறது அல்லவா?! :)

   பி.கு.2: லயன் ப்ளாகில் நான் ஜிப்ஸிகள் பற்றி கேட்ட கேள்விக்கு நீங்கள் சரியான பதில் அளித்தால் நாற்பது லிட்டர் நல் நேர நஞ்சினை நானே உங்கள் வாயில் ஊற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்! :) :)

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia