ஈரோடு புத்தகப் புயலிலே ஒரு ப்ளேடு!

சிறந்த புத்தகங்கள் சிறந்த நண்பர்களுக்கு ஈடானவை; அத்தகைய புத்தகங்களை நமக்கு அறிமுகப் படுத்துபவர்களும் சிறந்த நண்பர்களே - அப்படிதான் கார்த்திகைப் பாண்டியன் அவர்களும் எனது மனதில் இடம் பிடிப்பார்! நண்பர் ஒருவரின் புத்தகத்தை வெளியிடுவதற்காகவும், லயன் காமிக்ஸ் ஸ்டாலை பார்வையிடுவதற்காகவும் ஈரோடு வந்திருந்த அவர், தானொரு பிரபல பதிவர் என்ற எந்தவொரு தோரணையுமின்றி சட்டெனப் பழகினார். கா.பா., "வலசை" என்றொரு இலக்கியச் சிற்றிதழையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடப் பட வேண்டிய விஷயம்!

நேற்யைய நண்பகலை சில மணி நேரங்கள் விழுங்கி இருந்ததொரு தருணத்தில், 'காமிக்ஸ் தவிர வேறெதுவும் படிப்பதில்லையா கார்த்தி?' என்றவரிடம் 'இலக்கியம் என்றாலே எனக்கு அலெர்' என ஆரம்பித்து பிறகு 'ஜி'யை வெட்டி 'பயம் ஜி' என்று ஒட்டினேன்! 'இதுவரைக்கும் வேறு புத்தகங்கள் அதிகம் படிச்சது இல்ல, ஏதாவது நல்ல புத்தகத்தை பரிந்துரையுங்களேன்!' என்றேன்; 'எஸ். இராமகிருஷ்ணனோட துணையெழுத்து படிச்சுப் பாருங்க' என்றவர், அந்தப் புத்தகம் தன்னை எவ்விதம் பாதித்தது என்பது பற்றியும் பேசினார். வேறு சில எழுத்தாளர்களையும், அவர்களின் சில சிறந்த படைப்புகளையும் பட்டியலிட்டார். கிளம்புவதற்கு முன் விகடன் பதிப்பகத்தில் வாங்கிய துணையெழுத்து ஈரோடு முதல் பெங்களூர் வரை இரயிலில் எனக்கு துணையாக இருந்தது. பயணம் முடிந்து பெங்களூர் வந்தாகி விட்டது, பாதி புத்தகத்தையும் கடந்தாகி விட்டது, ஆனால் மாற்று வாசிப்புக்கான எனது பயணம் இன்னமும் தொடக்கப் புள்ளியில்தான் நின்று கொண்டிருக்கிறது!

சில மாதங்களுக்கு முன்னர் வாங்க எண்ணி பிறகு வாங்காமலேயே விட்ட "~புயலிலே ஒரு தோணி~ புத்தகம் எப்படி?!' என்று கா.பா.விடம் கேட்டதிற்கு, தமிழின் சிறந்த  படைப்புகளில் அதுவும் ஒன்று என அவர் கூறியதால் அதையும் வாங்கினேன்! சாருவின் ஜீரோ டிகிரியை வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்களைக் கூட தாண்ட முடியாமல் தூக்கிப் போட்டதை அவரிடம் சொன்னபோது, எனது வாசிப்பு எல்லையை விரிவு படுத்திவிட்டு அதை மீண்டும் படிக்க முயலுமாறு கூறினார்.

இரண்டாவது பத்திக்கு சில மணி நேரங்கள் முன்பாக:
நேற்று திருப்பூரில் மனைவி குழந்தையை விட்டுவிட்டு  ஐந்து நாள் பேச்சலராக (பேச்சாளராக) பெங்களூர் திரும்பும் வழியில், ஈரோடு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டேன். சென்னை புத்தக விழாவை  இதுவரை கண்டதில்லை, ஆனால் நான் பார்த்தவற்றிலேயே மிகப் பெரிய புத்தக கண்காட்சி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்! புத்தகங்களாலும், ஜனத்திரளாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஸ்டால்களை கண்டும் காணாமல், நேராக 78ம் எண் தாங்கிய லயன்-முத்து காமிக்ஸ் ஸ்டாலை அடைந்த போது நேரம் நடுப்பகலைத் தொட்டிருந்தது! ஆசிரியர் விஜயன் அவர்கள், காமிக்ஸ் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார். அவரிடம் வணக்கங்களை தெரிவித்து விட்டு - ஈரோடு நண்பர்கள் ஸ்டாலின், விஜய், புனித சாத்தான் & ஆடிட்டர் ராஜா இவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். வலையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்திருந்தாலும், நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் போது பழகுவதற்கு எளிய, இனிய நண்பர்களாகவே பரஸ்பரம் உணர்ந்தோம்! நேரில் சந்திக்கையில், மனத்தடைகளை உடைத்தெறிந்து எவ்வித தயக்கமுமின்றி இயல்பாய் சிரித்துப் பேசிடும் மனிதர்களை காண்பதில் உள்ள மகிழ்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை!

லயன் வலைப்பூவில் நான் கொடுக்கும் டார்ச்சர்களே போதும் என்பதால் நேரில் ஆசிரியரிடம் நான் அதிகம் பேசவில்லை; மாதந்தோறும் 100 ரூபாய் இதழ்களுக்கு பதிலாக இரண்டு ஐம்பது ரூபாய் இதழ்களாக வெளியிடலாமே என்ற கோரிக்கையை மட்டும் வைத்தேன். முகம் நிறைய சிரிப்புடன் வரவேற்கும் லயன் சீனியர் அலுவலர் ராதாகிருஷ்ணன் அவர்களைப் பார்த்தாலே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எனது தோளை அழுத்திக் கொண்டிருந்த ட்ராவல் பேகைப் கவனித்து, அவரருகில் சுமையை இறக்கி வைத்திடுமாறு அன்புடன் பணித்தார்! வேலு அவர்கள் வழக்கம் போல மும்முரமாக விற்பனையை கவனித்துக் கொண்டிருந்தார்.

புத்தக கண்காட்சியை - குறிப்பாக நமது காமிக்ஸ் ஸ்டாலையும், ஆசிரியரையும் பார்த்துப் பேசுவதற்கென்றே வெளியூர் வாசகர்கள் பலர் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்! லயன் வலைப்பூவில் அறிமுகமான கார்த்திகைப் பாண்டியன், சேலம் டெக்ஸ் விஜயராகவன், திருப்பூர் சிபி, பழனிவேல், தாரமங்கலம் பரணிதரன், ஷல்லூம் பெர்னாண்டஸ் மற்றும் பலரை (பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்) சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! கண்காட்சிக்கு வந்திராத பெங்களூர் வெங்கட் பிரசன்னா போனில் நலம் விசாரித்தார்!

வலைக்கு அப்பாற்பட்ட பல வாசகர்களையும் காண முடிந்தது - சேலம் கார்த்திகேயன், கோவை செந்தில்குமார், அஸ்லம் பாஷா, பெங்களூர் அஜய் (மகேஷ்?), மற்றும் எனது சிறிய நினைவுப் பேழையில் சற்று நேரம் மட்டுமே தங்கி மறைந்த பல பெயர்கள், பல பேர்கள், பல ஊர்கள்!. அவர்களில் ஒரு சிலரிடம் மட்டுமே பேச இயன்றது என்றாலும், அவர்கள் அனைவரும் ஆசிரியருடன் எல்லை மீறிய உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பெரும்பாலோனோர் இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு வேண்டுமென ஆசிரியரை துளைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் சிங்கத்தின் சிறு வலைக்கு பெரிய தூண்டிலாக போட்டுக் கொண்டிருந்தனர்.

பொதுவாக வலைக்கு அப்பாற்பட்ட வாசகர்களிடம் - வலையில் நடக்கும் விவாதங்கள், சச்சரவுகள் பற்றிய ஒருவித கசப்புணர்ச்சி இருப்பதை அவர்கள் பேச்சில் இருந்து உணர முடிந்தது. அது பற்றிய சிலரின் கருத்துகளையும், அவற்றிக்கு ஆசிரியர் அளித்த சில பதில் கருத்துகளையும் கேட்க நேரிட்ட போது மிகவும் சங்கடமாக இருந்ததால் அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டினேன்! ஒவ்வொரு கேள்வியும் பதிலைத் தேடியே தத்தம் பயணங்களை மேற்கொள்கின்றன. தம்மை எப்பாடு பட்டேனும் அடையவே இத்தகைய கேள்விகள் விடாமல் துரத்துகின்றன என்று அந்த பதில்கள் சலித்துக் கொள்ளுமேயானால் கேள்விகள் நின்று விடும் அல்லது வேறு இடங்களில் கேட்கப்படும்! :)

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பார்வை, ஒவ்வொரு புரிதல்கள்! தங்களை குறையே இல்லாத மனிதர்களாக முன்னிறுத்திக் கொள்ள விரும்புபவர்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்! ஆனால் இவை அனைத்தையும் தாண்டி நம் அனைவரையும் இணைக்கும் கண்ணுக்குப் புலனாகாத அந்த காந்தப் பிணைப்பிற்கு மறுபெயர் காமிக்ஸ் என்பதை நான் சொல்லிடத் தேவையில்லைதான்!

இந்த விழாவில் சந்தித்த மறக்க முடியாத நண்பர்கள் பலரில் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர் - முன்னவர் முதல் பத்தியில் வீற்றிருக்கிறார். மற்றவர் மதிய உணவுப் பந்தியில் கடைசியாக உண்ண அமர்ந்த ஈரோடு விஜய்!

வலைப்பூக்களில் பரஸ்பரம் கலாய்த்தது, கட்டிப் புரண்டு சண்டையிட்டது என்று ஏற்கனவே ஈரோடு விஜயுடன் ஒரு ஆரோக்கியமான அறிமுகம் இருக்கிறது. கடைசியாக லயன் வலைப்பூவில் இட்ட பதில் பின்னூட்டதில் கூட அவரை பயங்கரமாக வாரியிருந்தேன். ஆனால், நேரில் பார்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதான எவ்வித அறிகுறிகளும் இன்றி நெடுநாள் பழகிய நண்பரை சந்திப்பது போலவே உணர்ந்தேன் (அவரும் தார் என்றே நினைக்கிறேன்). நான் முதன்முதலாக காமிக்ஸ் படித்த (பார்த்த) ஊர் ஈரோடு, அதுவும் "ஈரோடு அருள் நெறி திருப்பணி மன்றம்" பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த சமயம், அருள்நெறி மற்றும் ஆடைகள் விலகிய ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்டின்  'அழகியைத் தேடி'-தான் நான் பார்த்த முதல் காமிக்ஸ் என்றதுமே விஜய் ஆவென வாய் பிளந்தார். அவரும் அதே பள்ளியில்தான் படித்திருக்கிறார், அதே காமிக்ஸைப் பார்த்திருக்கிறார். பிறகு சிறிது நேரம் காணாமல் போன விஜய் கையில் ஒரு "சுஜாத்+ஆ" வுடன் திரும்பினார். சுஜாதா எழுதிய அந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் "ஆ" என்ற ஒற்றைச் சொல்லுடன் முடியுமாம். நான் வியப்புடன் "ஓ!" என்றேன்! அந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார்!

ஸ்டாலுக்கு வருபவர்களிடம் பேச்சு கொடுப்பது, போட்டோ எடுப்பது, நண்பர்களிடையே ஜாலி கமெண்டுகள் அடிப்பது என்று சதா இயங்கிக் கொண்டே இருந்தார் விஜய்! நான் காலையில் சரியாக சாப்பிடாமல் கிளம்பியதாலும், திருப்பூர்-டு-ஈரோடு பஸ்ஸில் நின்று கொண்டே வந்த காரணத்தாலும் களைத்திருந்த என் முகத்தை கவனித்த விஜய், மற்றவர்களையும் துரிதப்படுத்தி உணவருந்த  ஏற்பாடு செய்தார். எல்லோரும் சாப்பிட அமர்ந்தும் கூட விஜய் மட்டும் நெடுநேரம் சாப்பிடாமால் போட்டோக்களை க்ளிக்கிக் கொண்டே இருந்தார்.

"லயன் வாசகர் விஸ்கி-சுஸ்கி உங்கள் பள்ளித் தோழரா? வார்த்தைக்கு வார்த்தை நண்பா என அழைத்து உரிமையுடன் பேசுகிறீர்களே?" என்றவரிடம் என்னை நண்பா என்று அழைப்பவர்களை நண்பா என்றும், நண்பரே என்று அழைப்பவர்களை நண்பரே என்றும் அழைப்பதாக தெளிவு படுத்தினேன். என்னை நண்பனாய் பாவிப்பவர்களுக்கு நான் நண்பன், மாறாக என்னை எதிரி என சிலர் முடிவு கட்டினால் நானும் அவர்களுக்கு எதிர்த் திசையில் அவர்களை விட வேகமாக நடையைக் கட்டி விடுவேன் - அவ்வளவே! அதே போல எனது அலைவரிசைக்கு ஒத்து வராத நண்பர்களிடம் அளவுடன் மட்டுமே நட்பு பாராட்டுவேன்!

லயன் ஸ்டாலுக்கு வலதில் இருந்த பெரியார் புத்தகங்கள் மட்டும் அடுக்கியிருந்த அந்த ஸ்டாலை என் கண்கள் நோட்டமிடுவதை கவனித்த ஆடிட்டர் ராஜா "பெரியாரின் நூல்கள் படிச்சிருக்கீங்களா?" எனக் கேட்டார்; 'இல்லை, இலக்கியம் படிப்பதில்லை' என நான் சொன்னதும் சட்டென நிமிர்ந்து 'இது இலக்கியம் இல்லை, வாழ்க்கை' என்றார். 'நீங்களே ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுங்களேன்?' என்றதும், 'சின்னதா ஆரம்பிங்க' எனச் சொல்லியவாறு "மனிதனும் மதமுமை" பரிசளித்தார். தொடர்ந்து பேசியதில், விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஜான் பெர்கின்ஸ் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" புத்தகத்தை உங்களைப் போன்றவர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்றார். அந்த "உங்களைப் போன்ற" என்ற வார்த்தைக்குப் பின்னே புதைந்திருக்கும் அர்த்தங்களை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது! அந்த புத்தகத்தை பார்த்தும் வாங்காமல் தவிர்த்து விட்டேன்! பிரிதொரு சமயத்தில் படிக்க முயற்சிப்பேன்!

புனித சாத்தான் சோமசுந்தரம் அவர்களும் நன்றாகப் பேசினார். அருகில் அவரது மனைவியார்  இருந்ததாலோ என்னவோ, பணிவுடன்  'குனிந்த தலை சாத்தனாராகவே' காட்சி அளித்தார். ஆனாலும் தனது புதிய செவ்விந்தியப் பெயருக்கேற்ப வாய் நிறைய 'சிரிக்கும் சாத்தானாக' ஸ்டாலை வலம் வரவும் செய்தார். எனது கிரீன் மேனர் மொழிபெயர்ப்பை மிகவும் ரசித்ததாக கூறினார், சம்பிரதாய பாராட்டுகளைப் போலன்றி அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் தொக்கி நின்ற அந்த உண்மையை நான் ரசித்தேன்.

நண்பர் ஸ்டாலின் வழக்கமாக போனில் பேசுவதைப் போலவே உற்சாகமாகப் பேசினார். போட்டோவில் பார்த்ததை விட நேரில் சற்று இளமையாகவே தோற்றமளித்தார். கிமுவில் சோமு என்ற தமிழ்ச் சித்திரக் கதையை எனக்கு பரிசளித்தார்! சோமலிங்கா என்ற பெயரைப் பார்த்துத்தான் அந்தக் கதையை தேர்ந்தெடுத்தாரா என்பது தெரியவில்லை. ஆசிரியரையும் நண்பர்களையும் பேட்டி எடுப்பதில் மும்முரமாக இருந்தார் மனிதர். பிறகு காமிக்ஸ் பற்றிய கருத்துக் கணிப்பிற்காக கேள்விகள் அடங்கிய தாள்களை அனைவருக்கும் விநியோகித்தார். "நான் லயனில் அதிகம் எதிர்ப்பார்ப்பது மாயாவி, ஸ்பைடர் & ஆர்ச்சி கதைகளையே" என்று சும்மா லுல்லுலாயிக்கு எழுதிக் கொடுத்தேன்! :) தமிழைக் கூட ஆங்கில கீபோர்ட் + Google Transliteration துணையுடன் டைப்பிக் கொண்டிருக்கும் எனக்கு, பேனாவைப் பிடித்து  தமிழை எழுதுவதற்குள் ஆங்ஞை வற்றி விட்டது. கோவை ஸ்டீல் க்ளாவால் கண்காட்சிக்கு வர இயலவில்லையாம், போனில் சில வார்த்தைகள் அன்பாகப் பேசினார்.

ப்ளாகர் நண்பர் அப்துல் பாஸித் கேட்டிருந்த காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி பையில் திணித்துக் கொண்டேன். நான் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலையும் (அவருக்காக) வாங்கியதைக் கண்டு எடிட்டர் முதற்கொண்டு பலரின் புருவங்கள் ஸ்பைடரின் புருவங்களைப் போல மேல் நோக்கி உயர்ந்தன! 'நண்பர் ஒருவரை பழிவாங்கும் நடவடிக்கை' என்றவாறு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்!

நண்பர் பழனிவேலின் அழகுக் குட்டிப் பாப்பா வர்ஷா "மேற்கே ஒரு குட்டிப் புயலை" சப்பித் தின்று கொண்டிருந்தது! பரணிதரனின் மகன் தூக்கக் கலக்கத்தில் நின்று கொண்டிருந்தார். புனித சாத்தானின் மகள் மும்முரமாக பஜ்ஜி தின்று கொண்டிருந்தார். ஆடிட்டர் ராஜாவின் மகன் தனது தந்தை கேட்ட காமிக்ஸ் கேள்விகளுக்கு ஆர்வமின்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சுற்றிலும் களேபரமாக இருந்தாலும் அதில் இருந்து விலகி நிற்கும் குழந்தைகளது இந்த தனி உலகம் மிகவும் சுவாரசியமானது! அவர்கள் வளர்ந்த பிற்பாடு வாழவிருக்கும் சம உலகில், நாமும் அவ்வாறே விலகி நின்று கடந்து சென்ற பழைய உலக நினைவுகளை அசை போட்டவாறு  உறைந்திருக்கப் போகிறோம்!

மணி மூன்றைத் தொடவிருந்த வேளையில் மற்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்களுக்கு ஒரு அவசர விசிட் அடித்தேன். தமிழ் எழுத்துக்கள் அடங்கியதொரு அழகிய அட்டையை என் குட்டிக்காக வாங்கினேன். புயலிலே ஒரு தோணி, துணையெழுத்து, என் அம்மா கேட்டிருந்த PKP & ராஜேஷ் குமார் நாவல்கள் இவற்றை வாங்கிக் கொண்டு லயன் ஸ்டாலுக்கு திரும்பினேன்.

மாலை நாலரை மணிக்கு ட்ரைன் பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் 3:45க்கு பரபரத்துக் கொண்டிருந்த என்னை, ஸ்டாலினின் ஸ்ப்லெண்டரில் டிராப் செய்கிறேன் என்று விஜய் ஆசுவாசப் படுத்தினார். 'ஸ்ப்லெண்டிட்' கண்டிஷனில் இருந்த அந்த வண்டி நெடுநேரம் வரை ஸ்டார்ட்டே ஆகவில்லை. 'நான் ஆட்டோல வேணா போய்க்கறேன் விஜய்' என்ற என் வார்த்தைகள் அவரின் தன்மானத்தை சீண்டிப் பார்த்ததும், வலது காலை ஓங்கி ஒன்றரை டன் எடையுள்ள உதையை கிக்கருக்கு அவர் பரிசளிக்க வண்டி மெதுவாக உருளத் தொடங்கியது. பத்து அடிக்கு ஒரு முறை இளைப்பாற நின்ற அந்த வண்டியைப் பார்த்ததில் வயது ஏறி இருப்பது நண்பர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல என்ற உண்மை மட்டும் உள்ளங்கை பூசணி போல தெளிவாகத் தெரிந்தது! ஈரோட்டு புத்தக கண்காட்சி அனுபவங்களால் மனதில் மகிழ்ச்சியும் ஏறி இருந்தது!

பி.கு.: நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஜோரில் விழாவை சரியாக படம் பிடிக்க இயலவில்லை. கேமரா கொண்டு செல்ல மறந்ததும் ஒரு காரணம். இந்தப் பதிவில் உள்ள ஓரிரு புகைப் படங்கள் நண்பர் ஸ்டாலினின் வலைப்பூவில் இருந்து பெறப்பட்டுள்ளன, மற்றவை யாவும் என் செல்போனின் கைவரிசை - மேலும்  படங்கள் பிறகு இணைக்கப்படும்! புத்தக விழா குறித்த தினசரி அப்டேட்களை இங்கே படிக்கலாம்!

45 comments:

 1. கார்த்தி,

  நேரில் சென்று பார்த்தற்கு உண்டான அனுபவத்தை உங்கள் எழுத்துகளில் காண முடிந்தது.

  இணைய நண்பர்களிடம் மட்டுமே அதிகம் பழக்கத்தில் இருக்கும் எம்மை போன்றோர்களுக்காக, அந்த வலைக்கு அப்பால் நண்பர்களின் கசப்பான கேள்விகள், மற்றும் எடிட்டின் கசப்பான காரணங்களையும் பட்டியலிட முடியுமா ? :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரஃபிக். கேள்விகள் அல்ல, பொதுவான அவர்களின் கருத்துக்கள் மற்றும் நம் மீதான பார்வைகள்! தேவையில்லாமல் அடித்துக் கொள்கிறார்கள், ஈகோ சார்ந்த மோதல்களில் ஈடுபடுகிறார்கள் இத்யாதி இத்யாதி! ஓரளவுக்கு அவர்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் பிரச்சினைகள் இல்லாத களங்கள்தான் எவை? ஈகோ இல்லாத மனிதர்கள்தான் எவர்? வலையில் இருப்பவர்கள் மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதான பொதுப் புத்தியைத்தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

   வலைக்கு அப்பால் இவர்கள் வசித்திடும் உலகில் பிரச்சினைகளையே இல்லையா, யாராவது வம்புக்கு இழுத்திருந்தால் மல்லுக்கு நின்றதே இல்லையா அல்லது இவர்கள் தலைக்கு மேலே ஈகோ என்றொரு வஸ்து இதுவரை தலை தூக்கியதே தான் இல்லையா?! எனக்கு ஈகோவே கிடையாது என்று எவரேனும் சொன்னாரானால் அவர் நடிக்கிறார் என்றே அர்த்தம்! எடிட்டர் வாசகர்கள் பற்றி சொன்ன பொதுவான கருத்து என்ன என்பதைப் பற்றி பதிவிலேயே சூசகமாக சொல்லி இருக்கிறேன், முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்! :) நீங்கள் அங்கே பதிவிடுவதே இல்லையென்பதால் அதைத் தெரிந்து கொண்டும் உங்களுக்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை! :)

   Delete
 2. //நான் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலையும் (அவருக்காக) வாங்கியதைக் கண்டு எடிட்டர் முதற்கொண்டு பலரின் புருவங்கள் ஸ்பைடரின் புருவங்களைப் போல மேல் நோக்கி உயர்ந்தன! 'நண்பர் ஒருவரை பழிவாங்கும் நடவடிக்கை' என்றவாறு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்!//

  அவ்வ்வ்வவ்வ்வ்.... இதுல எந்த உள்குத்தும் இல்லையே? ;)

  ReplyDelete
  Replies
  1. ச்சே ச்சே... உங்களுக்குப் போய் துரோகம் நினைப்பேனா?! :)

   Delete
 3. அட பூனையும் கத்தியும் நண்பர்களாயாச்சா? இனிமே வேற ஒரு பலியாடு உங்க ரெண்டு பேருகிட்டயும் மாட்டிகிட்டு உருளப்போறான் :-)

  Humorous write up !

  ReplyDelete
  Replies
  1. அந்த பலி எலி நீங்களாக ஏன் இருக்கக் கூடாது?! ;)

   Delete
 4. எஸ்.ராமகிருஷ்ணனின் "துணையெழுத்து" அருமையான புத்தகம். ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோதே படித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என்னாது இந்த்ரா காந்திய சுட்டுடாங்களா ?? :-) :-)

   Delete
  2. @புதுவை செந்தில்:
   வாசித்த வரையில் மிகவும் சுவாரசியமாகவே இருந்தது, நன்றி!

   Delete
 5. கார்த்திக் மிக அருமையான பதிவு

  ReplyDelete
 6. வலைத்தளத்தில் உங்களைப்படித்த பின்னர் நீங்கள் மாற்று வாசிப்பு இல்லாதவர் என்றால் நம்ப முடியவில்லை கார்த்திக்...

  ReplyDelete
 7. காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில்August 12, 2013 at 4:12 PM
  வலைத்தளத்தில் உங்களைப்படித்த பின்னர் நீங்கள் மாற்று வாசிப்பு இல்லாதவர் என்றால் நம்ப முடியவில்லை கார்த்திக்...

  +1

  ஆச்சரியமான தகவல் தான் கார்த்திக்

  - தேசாந்திரி - எஸ்.ரா கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டும்
  (http://pinnokki.blogspot.in/2012/08/blog-post_26.html)

  அப்புறம் வாத்தியாரோட (sujatha) கண்டிப்பாக படியுங்கள்.


  ReplyDelete
  Replies
  1. பரிந்துரைப்புகளுக்கு மிக்க நன்றி ராம்! நிச்சயம் வாசிக்க முயல்வேன்!

   Delete
 8. அவரு பக்கா இலக்கியவாதிங்கோவ்!

  ReplyDelete
  Replies
  1. நமது ராம்குமார் தானே?! ஆமாம்! :)

   Delete
 9. உங்களைச் சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி நண்பா.. காமிக்ஸ் வலைப்பூவைப் பார்த்து ரொம்ப நாளைக்கு நீங்க இலங்கை தமிழர்னு (சோமலிங்கா?!!) நினைச்சுக்கிட்டு இருந்தேன்..:-)) காமிக்ஸ் எனும் ஒற்றைக்காதல் இத்தனை நண்பர்களை இணைக்கிறது எனும்போது பெருமையாக இருக்கிறது.

  நல்ல எழுத்து நடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. உத்திகளும் எளிதாய்க் கைவருகின்றன. நிறைய வாசியுங்கள். வாழ்த்துகள்..:-))

  ReplyDelete
  Replies
  1. அழைப்பை ஏற்று பதிவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!!!

   //நீங்க இலங்கை தமிழர்னு (சோமலிங்கா?!!) நினைச்சுக்கிட்டு இருந்தேன்//
   நானொரு சௌராஷ்டிரத் தமிழன் நண்பா! சோமலிங்கா எனது குடும்பப் பெயர்!! :)

   Delete
 10. நிகழ்வுகளை அருமையாக தொகுத்துள்ளீர்கள் கார்த்திக்.
  பகிர்வுக்கு நன்றி.

  நிகழ்வுகளோடு சேர்த்து உங்களது விளக்கங்களும் அருமை.

  என்னதான் கேமரா இல்லாவிடினும் உங்களது போஸ்டரின் முன்னால் நின்று புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டீர்கள். :)

  ReplyDelete
  Replies
  1. //என்னதான் கேமரா இல்லாவிடினும் உங்களது போஸ்டரின் முன்னால் நின்று புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டீர்கள்//
   பின்னே, நான் வேற எதுக்கு ஈரோடுக்குப் போனேனாம்?! ;)

   Delete
 11. நண்பர் கார்த்திக்,

  கலகலப்பான இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தத்தை தந்தாலும், உங்களது எழுத்துக்கள் நானும் அங்கே இருந்தது போன்ற உணர்வை கொடுக்கிறது. நன்றிகள் !!!

  உண்மையிலேயே அங்கே வருகை தந்திருந்த அனைவருக்கும் மறக்க இயலா தினமாக அமைந்து இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

  //திருப்பூர்-டு-ஈரோடு பஸ்ஸில் நின்று கொண்டே வந்த காரணத்தாலும்//

  இப்படி செல்ல வேண்டி இருந்தால் ரயில் வசதியை பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பரே, களைப்பு தெரியாது.

  // ஸ்டாலினின் ஸ்ப்லெண்டரில் டிராப் செய்கிறேன் //

  நல்ல வேலை கோவை ஸ்டீல் க்ளவ் வரவில்லை. வந்து இருந்தால் உங்களை பெங்களூர் வரை கொண்டு வந்து இறக்கி விட்டிருப்பார் :)

  //அந்த வண்டியைப் பார்த்ததில் வயது ஏறி இருப்பது நண்பர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல என்ற உண்மை மட்டும் உள்ளங்கை பூசணி போல தெளிவாகத் தெரிந்தது!//

  சைடு கேப்பில் கிடாய் வெட்டுவது இதுதானோ ?

  ReplyDelete
  Replies
  1. //உங்களது எழுத்துக்கள் நானும் அங்கே இருந்தது போன்ற உணர்வை கொடுக்கிறது//
   பஸ் டிக்கட் 24 ரூபாயை உடனே அனுப்பி வைக்கவும்! :)

   //இப்படி செல்ல வேண்டி இருந்தால் ரயில் வசதியை பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பரே, களைப்பு தெரியாது.//
   சதாப்தியில் டிக்கட் விலை ரூ.290/-!! மற்ற ட்ரைன்களில் இடமில்லை. ஓபன் டிக்கட்டில் செல்ல விருப்பம் இருக்கவில்லை. :(

   Delete
 12. ஜஸ்ட் மிஸ் கார்த்திக்........ நான் 4.30 க்கு சென்றேன்.... நீங்கள் அப்போதுதான் புறப்பட்டுச்சென்றதாக நண்பர்கள் கூறினர்....... சென்றதே தாமதம்....இதில் வீட்டில் இருந்து தொடர்ந்த அழைப்புகள் வேறு...... எனவே வேறு ஸ்டால்கள் பக்கம் எட்டிபார்க்க நேரம் இல்லை......

  ReplyDelete
  Replies
  1. அடடா, 4:30க்கு நான் ட்ரைனில் பயணித்துக் கொண்டிருந்தேன் சரவணக்குமார்!! திருப்பூர் புத்தக கண்காட்சியில் சந்திப்போம்! :) ஈரோட்டில் ஏகத்துக்கும் ஸ்டால்கள் இருந்ததால் என்னாலும் சரியாக பார்க்க முடியவில்லை! :(

   Delete
 13. நண்பர் கார்த்திக் : உங்களின் இந்தப் பதிவு one of the best of yours!

  இதுவரை ஒரு silent readerஆக மட்டுமே உங்கள் பதிவுகளை ரசித்து வந்துள்ளேன். ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கான நடை. (உதாரணம் : நிகழ்ச்சியைப் பற்றி மட்டும் எழுதாமல் சுற்றி நடப்பவை பற்றியும் எழுதி உள்ளீர்களே - அவரவர் குழைந்தைகள் பற்றிய வர்ணனை! Really super!
  மேலும் "ஒன்றரை டன் எடையுள்ள உதையை" என்ற வரியை மிகவும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. பதிவுகளை தொடர்ந்து படித்ததிற்கும், உங்கள் கருத்துக்களை இங்கே பதிந்ததிற்கும் மிக்க நன்றி நண்பரே!!! குழந்தைகளை கவனித்து அவர்கள் உலகத்தை ஒரு ஓரமாக நின்று எட்டிப் பார்க்கும் வித்தையை என் குழந்தையிடம்தான் கற்றேன்! :)

   Delete
 14. முழுமையான திருப்தியை தந்த பதிவு. உங்கள் எழுத்து நடை மிகவும் நன்றாக இருக்கின்றது. ஒரு தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தை படிக்கும் உணர்வை தந்தது. (அப்போ நான் தேர்ந்த எழுத்தாளன் இல்லையா என்று கேட்காதீர்கள், அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை)
  ஈகோ இல்லாத மனிதனே கிடையாது. கார்த்திக் என்பதும் பாலா என்றும் பெயர் இருப்பது ஈகோ இல்லாமல் என்னவாம்?
  ஓர் நிலை உணர்வில் கலந்துவிட்டவர்களுக்கும், கரைந்துவிட்டவர்களுக்குமே ஈகோ இல்லாமல் இருப்பதென்பது சாத்தியமாகும். மற்றபடி எனக்கு ஈகோ இல்லை என்று சொல்வது, நடிப்புக்கும் மேலான பொய்.
  குழந்தைகளை விவரித்த விதம் சூப்பர்.
  //அவர்கள் வளர்ந்த பிற்பாடு வாழவிருக்கும் சம உலகில், நாமும் அவ்வாறே விலகி நின்று கடந்து சென்ற பழைய உலக நினைவுகளை அசை போட்டவாறு உறைந்திருக்கப் போகிறோம்// - என்ன ஒரு அருமையான சொற்றொடர்.
  ஜானி சொன்னது போல உங்கள் பதிவில் ஒரு இலக்கியவாதியின் பிரயோகம் இருக்கின்றது. ;-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாலாஜி ஜி! நெடுநாட்களுக்குப் பின்னர் உங்களை பதிலிட வைக்கும் அளவுக்கு இந்தப் பதிவு உங்களுக்கு திருப்பதி... மன்னிக்கவும் திருப்தி அளித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே! :)

   //எனக்கு ஈகோ இல்லை என்று சொல்வது, நடிப்புக்கும் மேலான பொய்//
   உண்மை!!!

   //ஓர் நிலை உணர்வில் கலந்துவிட்டவர்களுக்கும், கரைந்துவிட்டவர்களுக்குமே ஈகோ இல்லாமல் இருப்பதென்பது சாத்தியமாகும்//
   சுவாமி பாலாஜியானந்தா :) :)

   //ஜானி சொன்னது போல உங்கள் பதிவில் ஒரு இலக்கியவாதியின் பிரயோகம் இருக்கின்றது. ;-)//
   உங்களுடைய மேற்கண்ட சொற்றொடர் மட்டும் என்னவாம்? இலக்கிய மட்டுமல்ல, தூள் கலக்கிய பிரயோகம்! :) வாருங்கள் ஆளாளுக்கு இலக்கியவியாதி ஆவோம் :) :)

   Delete
 15. அலோ மிஸ்டர்,

  பதிவெல்லாம் நல்லாத்தான் போடுறீங்க; ஆனா கொஞ்சம் அசந்த நேரத்தில் ஒரு அப்பாவியை அழைச்சிட்டுப் போய் "அப்படி போய் வெய்யிலில் நின்னு முகத்தை சைடு போஸில் திருப்பி வையுங்க; உங்களை அழகா படம் பிடிச்சு கேப்டன் டைகர் மாதிரியே காட்டுறேன்" அப்படீன்னு சொல்லி நம்ப வச்சு, அந்த அப்பாவி சுதாரிக்கறதுக்குள் ஒரே டச்சில் 15 படங்களை சடசடன்னு எடுத்துத் தள்ளிட்டு (இதிலே 'எடுக்கலை'னு பொய் வேற)...

  ஒரு பூனை, புலியாய் மாறி நீங்க பார்த்தில்லைதானே?

  ReplyDelete
  Replies
  1. மூக்கு போட்டோல சரியா விழரதுக்குள்ளே ஓடுனா எப்புடி விஜய்?! நெக்ஸ்ட் மீட் பண்ணா மூக்கை நல்லா ஃபோகஸ் படம் புடிக்கறேன்! கோச்சுக்காதீங்க ;)

   //ஒரு பூனை, புலியாய் மாறி நீங்க பார்த்தில்லைதானே?//
   விஜய், நீங்க பேசும்போது உங்க கால் மட்டும் நடுங்கிகிட்டே இருக்கே ஏன்?! :)

   Delete
 16. போட்டோவில் லார்கோவை மறைத்து கொண்டு அவருக்கு பதிலா நிக்குறீங்களே...

  ReplyDelete
  Replies
  1. எப்புடி எல்லாம் கவனிக்குறீங்க!!! சான்சே இல்ல லக்கி! :)

   Delete
 17. //ஒவ்வொரு கேள்வியும் பதிலைத் தேடியே தத்தம் பயணங்களை மேற்கொள்கின்றன. தம்மை எப்பாடு பட்டேனும் அடையவே இத்தகைய கேள்விகள் விடாமல் துரத்துகின்றன என்று அந்த பதில்கள் சலித்துக் கொள்ளுமேயானால் கேள்விகள் நின்று விடும் அல்லது வேறு இடங்களில் கேட்கப்படும்! :)//

  Super... This is called "Ilakiyam"..

  ReplyDelete
  Replies
  1. ஒரு முடிவாத்தான் இருக்கீங்க! :)

   Delete
 18. உங்களோட பதிவுகல்ல இருக்கற ஒரு பாராட்டப்படவேண்டிய விஷயம் என்ன தெரியுமா ?? படிக்க ஆரம்பிச்ச அப்படியே ஸ்மூத்தா போகுது. எங்கேயும் ஒரு பிரிக்சன் இல்ல. அப்படியே வலுக்கிட்டே போய் கடைசீல "Posted by Karthik Somalinga " அப்படிங்கற ஒரு சுவத்துல மோதும்போதுதான் அட முடிஞ்சுடுச்சா அப்படின்னு மனசு ரியலைஸ் பண்ணுது!

  MORE OR LESS நம்ம விஜயன் சார் பதிவுகள்ளையும் இந்த CHARACTER ர பாக்கலாம். எங்கைங்க புடிச்சீங்க இந்த ஸ்டைல ??? அட்டகாசம் ! வாழ்த்துக்கள் நண்பா !


  இலக்கிய புத்தகங்கள் நம்ம பெருசா கவராததற்கு ஒரு முக்கிய காரணம் அதுல ஒரு ரியாலிட்டி இல்லாததுன்னு சொல்லலாம்.
  என்னை இது மாதிரி இலக்கிய புத்தகங்கள் கவராததற்கான காரணங்களை கொடுக்கிறேன்

  1 .அதன் பக்கங்களை வாசிக்கும்போது ஏதார்த்த வாழ்க்கைக்கும் அதற்கும் ஒரு ஒட்டாத உணர்வ கொடுக்குது. புத்தகங்களின் உள்ளே நுழைஞ்சாலே ஒரு STRANGENESS. ஒரு STRANDED உணர்வு எனக்கு.

  2. படிக்கும் பொது புதுசா, சுவராஸ்யமா ஏதாவது தெரிஞ்சுக்கிட்டா தான் தொடர்ந்து படிக்க முடியும். இந்த புத்தகங்கள் பொதுவா அரச்ச மாவையே அரைப்பது போன்ற ஒரு பீலிங். ( பல நண்பர்கள் இங்கே முரண்படலாம். பெரிதாக அறிவுசார் இலக்கிய வாசிப்பு வட்டத்தை விரித்துக்கொள்ளதா ஏனது கருத்து MATURITY இல்லாமல் இருக்கலாம் . மன்னிக்கவும்)

  3.வரலாற்று உண்மைகள், அறிவியல் விளக்கங்கள், நிரூபிக்கப்பட்ட கருத்துக்கள் என ஒரு COMMON KNOWLEDGE POOL லை அதிகம் தொடாமல் ஒரு தனி மனிதனின் மனதில் தோன்றும் கருத்தாகவே பெரும்பான்மையான புத்தகங்கள் உள்ளன. இது எனக்கு கொஞ்சம் அலர்ஜி.

  4.இந்த புத்தகங்களில் பெரும்பாலும் ஒரு கருத்தை "இது தான் சரி" என தனது சிந்தனையை ஆசிரியர் பெரும்பான்மையான நேரங்களில் முன்வைக்கிறார். இதுவும் எனக்கு கொஞ்சம் அலர்ஜி.

  சரி நீங்க வாசிக்கும் புத்தகங்கள் என்ன அப்படின்னு கேட்ட அறிவியலையும், வரலாற்று உண்மை சம்பவங்களையும் PHILOSOPHY யையும் மிக்ஸ் செய்து கொடுக்கும் புத்தகங்கள் எனது லிஸ்ட்ல எப்போவும் NO .1 .
  நமது அறிவு சார் தேடலுக்கு இணையத்தை விட ஒரு அறிவுக்களஞ்சியம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்னா?? இதை முழுமையாக நான் உபயோகப்படுத்த வேண்டும் என்றால் எனக்கு ஆயிரம் வருடங்கள் பத்தாது. அப்புறம் ஏங்க போய் இலக்கிய புத்தகங்களுக்கு நேரம் ஒதுக்குவது??? ஒருவேளை வருங்காலத்தில் எனது மனதுக்கு செயல்களுக்கு MULTI TASKING சாத்தியப்ப்படும்மானால் நானா முதலில் கைவைக்கபோவது இலக்கியப்புத்தகங்களின் என உறுதி கூறுகிறேன்.


  இதோடு முடித்துக்கொள்வது பல விஷயங்களுக்கு நன்மை பயக்கும் என்பதாலும், பதிவை தாண்டி OFF TRACK கில் செல்வதாலும் ஒரு FULL STOP.


  //ஒவ்வொரு கேள்வியும் பதிலைத் தேடியே தத்தம் பயணங்களை மேற்கொள்கின்றன. தம்மை எப்பாடு பட்டேனும் அடையவே இத்தகைய கேள்விகள் விடாமல் துரத்துகின்றன என்று அந்த பதில்கள் சலித்துக் கொள்ளுமேயானால் கேள்விகள் நின்று விடும் அல்லது வேறு இடங்களில் கேட்கப்படும்! :)//

  ரொம்பா கடுப்பேத்திடாங்க போல தெரியுது! ப்ரீய விடுங்க. அவங்களும் ஒரு நாள் இங்கே வந்துதான் ஆகணும். அப்போ புரிஞ்சுப்பாங்க. : )

  ReplyDelete
  Replies
  1. //படிக்க ஆரம்பிச்ச அப்படியே ஸ்மூத்தா போகுது. எங்கேயும் ஒரு பிரிக்சன் இல்ல. அப்படியே வலுக்கிட்டே போய் கடைசீல "Posted by Karthik Somalinga " அப்படிங்கற ஒரு சுவத்துல மோதும்போதுதான் அட முடிஞ்சுடுச்சா அப்படின்னு மனசு ரியலைஸ் பண்ணுது!//
   உங்க பாராட்டே காஸ்ட்லி விஸ்கி மாதிரி ஸ்மூத்தா சுஸ்கியா இருக்கு, நன்றி நண்பா! :) :) :)

   இலக்கியம் பத்தின உங்கள் விரிவான பார்வை பலரோட ஒத்துப் போகும்னு நெனைக்கறேன்! உங்க கருத்தை பொறுமையா எழுதி பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி!

   //அறிவியலையும், வரலாற்று உண்மை சம்பவங்களையும் PHILOSOPHY யையும் மிக்ஸ் செய்து கொடுக்கும் புத்தகங்கள் எனது லிஸ்ட்ல எப்போவும் NO .1 .//
   ஓ! உதாரணத்திற்கு?

   //அவங்களும் ஒரு நாள் இங்கே வந்துதான் ஆகணும். அப்போ புரிஞ்சுப்பாங்க//
   உண்மைதான்! :)

   Delete
  2. நான் சமீபத்தில் ரசித்து படித்த புத்தகம் :

   "Otherland" இந்த புத்தகம் ஒரு science fiction tetralogy எழுதியவர் Tad Williams.

   தற்போது என்னுடன் இருப்பது http://mahabharatapodcast.blogspot.in/ என்ற வலைத்தளத்தில் Lawrence Manzo என்பவரால பதிவேற்றப்பட்ட PODCAST கள். மொத்தம் நூறுக்கும் மேற்பட்ட பாகங்களாக ஆடியோ podcast கள் அங்கே உள்ளன.

   VERY VERY INTERESTING !
   Delete
  3. தங்கள் பெயரை இந்தியா டுடே பத்திரிக்கையில் பார்க்க மகிழ்சியாக உள்ளது! வாழ்த்துக்கள் நண்பரே.

   Delete
 19. நல்ல., அனால் மிக நீ....ளமான பதிவு.! எதை எழுதுவது, எதை விடுவது என்று குழம்பிவிட்டீர்கள் போலும். :-)

  'ஆ..' ஒரு classic கதை. முதலில் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. என் மாமா (maternal uncle) தொடர் பக்கங்களை மட்டும் கிழித்து அழகாக bind செய்து வைத்திருந்தார். ஒரு தடவை ஏன் மாமா, இப்போதுதான் புத்தகமாக கிடைக்கிறதே, அதை வாங்கிவிட்டு இதை தூர போட வேண்டியதுதானே என்றபோது அவர் கக்கிய கோபக்கனல் இன்று வரை என்னால் மறக்க முடியாது.!

  படித்துமுடித்து விட்டு "3" திரைப்படம் பாருங்கள், you will feel some similarities and you will get amazed on how Sujatha wrote these kind of stories in the 90's itself.!

  On the other side, என்னை எஸ்.ராவின் எழுத்துக்கள் ஏனோ கவரவில்லை. But., ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் படங்களே துனையெழுத்தை பார்க்க வைத்தன.!

  ReplyDelete
  Replies
  1. //எதை எழுதுவது, எதை விடுவது என்று குழம்பிவிட்டீர்கள் போலும். :-)//
   அதே! :) அனைத்தையும் கவர் செய்ய நினைத்ததால் நீளம் கூடி விட்டது!

   //அதை வாங்கிவிட்டு இதை தூர போட வேண்டியதுதானே என்றபோது அவர் கக்கிய கோபக்கனல் இன்று வரை என்னால் மறக்க முடியாது.!//
   ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்! :)

   எஸ்.ரா. படித்த வரை சுவாரசியமாகவே தெரிந்தது! பார்க்கலாம்...

   Delete
 20. Sir eppathan post pakkaren super thanks

  ReplyDelete
  Replies
  1. லேட்டா வந்தாலும், ரொம்ப லேட்டாதான் வந்துருக்கீங்க பழனி! வாழ்த்துக்கள்! ;) குட்டிப் பாப்பா போட்டோ புக்ல வந்துருக்கு கவனிச்சீங்களா?! :)

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia