கிராஃபிக் காமிக்ஸ் - ஒரு புதிய ப்ளேடு, ஆங்கிலத்தில்!

காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பது என் இளவயது பொழுதுபோக்குகளில் முதன்மையானதாக இருந்தது! எண்பதுகளின் மத்தியில் காமிக்ஸ் படிக்கத் துவங்கிய எனக்கு, அச்சமயம் வெளியாகிக் கொண்டிருந்த பல விதமான காமிக்ஸ்களை வாங்க போதுமான பணம் ஒருபோதும் இருந்ததில்லை! கைச்செலவுக்காக கிடைக்கும் சில (கால் / அரை) ரூபாய்களைத் திரட்டி மாதந்தோறும் ஒரு சில புத்தகங்களை மட்டுமே வாங்க முடிந்தது! அது ஒரு காமிக்ஸ் கனாக்காலம், அன்று வாங்கத் தவறிய புத்தகங்களை இன்றளவும் என் கனவுகளில் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்!


1997-ல் வேலையில் இணைந்ததும் எனது மனதுக்கு நெருக்கமான காமிக்ஸ்களை பல வருடங்கள் பிரிய நேர்ந்தது! அச்சமயத்தில் காமிக்ஸ் பதிப்பாளர்களும் இரும்புக்கை மாயாவி கணக்காய் கண்களில் இருந்து காணமல் போகத் துவங்கியிருந்தனர்! லோ-வோல்டேஜ் கரண்ட் பாய்ந்ததால் முழுமையான அரூப ரூபம் கிட்டாமல், லயன் & முத்து காமிக்ஸ்கள் மட்டும் அவ்வபோது கண்களில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்தன (என்பதை பின்னர் அறிந்தேன்!). 2012 முதல் சிவகாசியில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டின் பலனாக இப்போது லயன் & முத்து காமிக்ஸ்கள் தமது முழு உருவத்துடன் வெளியுலகில் தலைகாட்டி வருகின்றன! :) இப்படியாக லயன் & முத்து புண்ணியத்தில் எனது காமிக்ஸ் வாசிப்பு மீண்டும் முழு வீச்சுடன் தொடங்கி இருக்கிறது!

இப்போது வேலைக்கு போய் மாதச் சம்பளம் வாங்கி லோன் கட்டும் அளவிற்கு வளர்ந்து(!) நின்றாலும், இன்னமும் காமிக்ஸ் வாங்க போதுமான பணம் இல்லாமல்தான் இருக்கிறது, அதாவது ஆங்கில காமிக்ஸ்களை! பெரும்பாலான தமிழ் காமிக்ஸ் ரசிகர்களைப் போலவே நானும் ஆங்கிலத்தில் காமிக்ஸ் படிப்பதை "தீவிரமாக" தவிர்த்து வந்தேன்! ஆனால், அதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கத்தான் செய்தன!

முதல் காரணத்தை மிக எளிதில் யூகித்து விடலாம்! ஆங்கில காமிக்ஸ்களின் அலற வைக்கும் விலைப் பட்டியல்தான் அது! ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னர் ரஃபிக் உள்ளிட்ட பல வலைப்பதிவர்கள், ₹195 விலையில் Cinebook / Eurobooks இதழ்கள் இந்தியாவில் கிடைப்பதாக எழுதி வந்த சமயம், நான் எட்ட நின்று பெருமூச்சு விட்டதோடு சரி! 50 பக்கங்களுக்கு, ₹200 கொடுப்பது என்னைப் பொறுத்தவரை ஜீரணிக்க முடியாத விஷயமாகவே இருந்தது, இருக்கிறது!  வருடங்கள் பல கழிந்தும் ₹200 என்பது மிக அதிகம்தான் என்று இப்பொழுதும் தோன்றுவதற்கு, இதே தரத்தோடு வெளிவரும் லயன் & முத்து காமிக்ஸ்களின் குறைவான விலையும், லோன் கட்டியது போக கையில் மிஞ்சும் சொற்ப சம்பளமும் முக்கிய காரணங்களாக இருக்கலாம்.

ஆனால், இவ்வாறான நேரடி விலை ஒப்பீடுகள் சரியல்ல என்பதும் புரியாமலில்லை. ஏனெனில், பிரகாஷ் பப்ளிஷர்சின் சந்தைப் படுத்தும் முறையானது மற்ற உள்நாட்டு / வெளிநாட்டு ஆங்கிலப் பதிப்பகங்களோடு ஒப்பிடும்போது பெரிதும் மாறுபடுகிறது. சந்தா மற்றும் ஈபே மூலம் நடக்கும் நேரடி விற்பனையைத் தவிர்த்து, லயனின் வெளியுலகத் தொடர்பாக இருப்பவை விரல் விட்டு எண்ணக் கூடிய சில (தமிழ்நாட்டு) புத்தக நிலையங்களும், அவ்வபோது நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளும் மட்டுமே!

ஆங்கில மொழிக்கு வாசகர்கள் அதிகம் என்பதால், ஒரு காமிக்ஸ்கான ஆங்கில உரிமங்களை பெறுவதற்கு ஆகும் செலவுகள், பிராந்திய மொழி உரிமங்களைக் பெறுவதைக் காட்டிலும் மிக அதிகம். தவிர ஆங்கிலப் பதிப்பகங்கள் தங்களது வெளியீடுகளை இந்திய அளவில் மிக விரிவாக சந்தைப் படுத்துகின்றன. நாட்டின் பல்வேறு நகரங்களில் இருக்கும் புகழ் வாய்ந்த புத்தக விற்பனை மையங்களில் தமது புத்தகங்களை விற்பனைக்கு வைக்கின்றன. அப்படி பார்வைக்கு வைக்கப்படும் புத்தகங்கள் உடனுக்குடன் விற்றுத் தீர்வதுமில்லை. முழுவதும் விற்க பல வருடங்கள் கூட ஆகலாம். Reliance TimeOut, Landmark போன்ற இடங்களில், பல பேர் அங்கேயே உட்கார்ந்து முழுவதும் படித்துவிட்டு நடையைக் கட்டி விடுவார்கள். :)

இப்படியாக, இடைத் தரகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கான கழிவுத் தொகை, விற்பனை மையங்களில் விற்பனையாகாமல் தேங்கும் இதழ்கள்; கூடுதலாக  வெளிநாட்டுப் பதிப்பகங்கள் என்றால் இறக்குமதி செய்ய ஆகும் செலவுகள், மற்றும் இந்திய விநியோகஸ்தர்களுக்கான கட்டணங்கள் என எல்லா செலவீனங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்துதான் ஒரு புத்தகத்தின் விலையினை தீர்மானிக்கிறார்கள்.

இங்கிலாந்துப் பதிப்பகமான Cinbook-கிற்கு தற்போது இந்திய விநியோகஸ்தர்கள் யாரும் இல்லை என்பதால், அவர்களின் லயனை விட சற்றே அளவில் பெரிய, ஐம்பத்தி சொச்ச பக்கங்கள் கொண்ட ஒரு காமிக்ஸின் விலை, இங்கிலாந்தில் என்ன விலைக்கு விற்கிறதோ அதே விலைதான் இந்தியாவிலும்; அதாவது 6 பவுண்டுகள் - இந்திய விலையில் சுமார் 600 ரூபாய்கள்! கதைகளின் பக்க எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அதற்கேற்ப புத்தகத்தின் விலை 7 பவுண்டுகளில் இருந்து 10 பவுண்ட்கள் வரை மாறுபடும். சில இந்திய (இணைய) விற்பனையகங்கள் இறக்குமதி தொகையையும் நம் தலைமேல் கட்டும் பட்சத்தில் புத்தக விலை மேலும் அதிகரிக்கும்.

ஆனால், Eurobooks போன்ற இந்தியப் பதிப்பகங்கள் கெட்டியான ஆர்ட் பேப்பரில், லயனை விட பெரிய அளவிலான (A4) காமிக்ஸ்களை, இன்னமும் 200 ருபாய் விலைக்கே விற்றுக் கொண்டிருக்கின்றன. தோராயமாகப் பார்த்தோமானால் லயனை விட இரண்டரை அல்லது மூன்று மடங்கு மட்டுமே விலை அதிகம். எனவே, பொத்தாம் பொதுவாக 50 பக்க ஆங்கில காமிக்ஸ்கள் 1000 ரூபாய், லயனோ 50 ரூபாய் என்று சொல்வது; லண்டனில் ஒரு ப்ளேட் இட்லியின் விலை 5 பவுண்ட்கள் என்று சலித்துக் கொள்வதற்கு ஈடானது! சென்னையில் 20 மடங்கு குறைந்த விலையில் கிடைக்கும் அதே இட்லிதான், ஆனால் விற்கும் இடம் வேறு அல்லவா? அதேபோல, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பதில்லையா என்ன - அதே லாஜிக்தான்!

அதற்காக லயன் & முத்துவின் மதிப்பைக் சற்றும் குறைத்துச் சொல்லவில்லை, லயனின் குறைந்த விலை பற்றி எதிர்மறையாக பேசுபவர்களோடு நான் ஒத்தும் போகவில்லை! ஏனெனில், குறைந்த பிரிண்ட் ரன் மட்டுமே கொண்ட ஒரு பதிப்பகம், விளம்பரதாரர்களின் துணையின்றி, 100 ரூபாய் விலையில், தரமான ஆர்ட் பேப்பரில், ~112 பக்கங்களுடன் ஒரு காமிக்ஸ் வெளியிடுவது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. டாலரின் மதிப்பு, பழனி 'ரோப் கார்' போல ஏறுமுகமாக இருக்கும் இவ்வேளையில், ஆசிரியர் விஜயன் அவர்கள் இன்னமும் விலையை ஏற்றாமல் வைத்திருப்பதே மிகப் பெரிய அதிசயம்தான்! அதிக லாப நோக்கமின்றி அவர் செயல்படுவதால் மட்டுமே இது சாத்தியமாகிறது!

ஆங்கில காமிக்ஸ்களின் விலை பற்றி எல்லாம் விசனப்பட்டுக் கொண்டிராமல், அவற்றின் CBR வடிவங்களை இணையத்தில் இருந்து இலவசமாக (அதாவது இல்லீகலாக) தரவிறக்கம் செய்து, கணினி, டாப்லெட் அல்லது மொபைல் திரையில் ஜாலியாகப் படிக்கலாம் என்பதை நான் அறியாமல் இல்லை! ஆனால், எனக்கு புத்தகத்தை தொட்டுப் படிப்பதில் கிடைக்கும் அந்த "கிக்", காமிக்ஸை கம்பியூட்டரில் படிப்பதில் கிடைப்பதில்லை! ;)

சிறு வயதில் இருந்து தமிழ் காமிக்ஸை மட்டுமே படித்து பழக்கப் பட்டதாலோ என்னவோ, தமிழில் படிக்கும் போது மனதுக்கு நெருக்கமாகத் தோன்றும் அயல்நாட்டு நாயகர்களும், கதைக்களங்களும் , ஆங்கிலத்தில் படிக்கும்போது மிகவும் அந்நியமாகவே தோன்றுகி(ன்றனர்)து!. ஆங்கில காமிக்ஸ்களை படிக்கத் தவிர்த்ததிற்கு இதுவும் ஒரு காரணம்.

லயன், முத்து & ராணி புண்ணியத்தில் பிரிட்டிஷ், அமெரிக்க & ஐரோப்பிய காமிக்ஸ்கள் என பல வகையான படைப்புகளின் அறிமுகம் எனக்கு ஓரளவுக்கு இருக்கிறது. இருப்பினும் நான் படித்தறியாத காமிக்ஸ் களங்கள் உலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. அவை அனைத்தும் தமிழில் வெளியாவது நிச்சயம் சாத்தியமில்லை, அவ்வளவு ஏன் - அவை அத்தனையும் ஆங்கிலத்திலேயே கூட வெளியாகி இருக்காது!.

சித்திரங்கள் நாம் பழக்கப்பட்ட பாணியில் இல்லை என்ற ஒரே காரணத்தால் 'கார்டோ மால்டிஸ்'க்கே இங்கு பெரிதாய் வரவேற்பு கிட்டாத போது; புதுமையான வேறு பல சித்திர பாணிகள், கதைக் களங்கள், கிராபிக் நாவல்கள் மற்றும் தற்கால அமெரிக்க காமிக்ஸ்கள், தமிழில் உடனே ஏற்கப்படுமா என்பதும் பெரும் கேள்விக் குறியே! இவற்றில் ஒரு சிறு பகுதியையாவது ஆங்கிலத்தில் படிக்க முயற்சிக்கலாமே என்ற ஆர்வம் தற்போது மேலோங்கி இருக்கிறது! இனி நான் படிக்கவிருக்கும் ஒவ்வொரு ஆங்கில காமிக்ஸ் பற்றியும் எனது ஆங்கில வலைப்பூவான www.grafikcomics.com இல் பதிவுகள் இடப்போகிறேன். நேரம் கிடைக்கும் போது அப்பதிவுகளை தமிழாக்கம் செய்து ப்ளேட்பீடியாவிலும் வெளியிடுவேன்.
இதன் துவக்கமாக சமீபத்தில் சில Cinebook மற்றும் Eurobooks காமிக்ஸ்களை வாங்கினேன். அமேசானின் இந்தியத் தளத்தில் சில சினிபுக் இதழ்கள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன (₹87 முதல் ₹150 வரையிலான விலைகளில்!). அவ்வாறு நான் இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கிய இதழ்களில் சில, இதோ:
  • Alpha: 1 - Exchange
  • Alpha: 2 - Wolves
  • Alpha: 3 - The List
  • Lady S: 1 -  Here's to Suzie!
  • Pandora's Box: 1 - Pride
  • Pandora's Box: 2 - Sloth
  • Pandora's Box: 3 - Gluttony
  • Pandora's Box: 4 - Greed
  • The Bluecoats: 1 - Robertsonville Prison
  • The Bluecoats: 2 - The Navy Blues
  • The Scorpion: 1 - Devil's Mark
  • The Scorpion: 2 - Devil in the Vatican
2001ல் இருந்து பெங்களூரில் குப்பையைக் கொட்டிக் கொண்டு இருந்தாலும், காமிக்ஸ் புத்தகங்களைப் பொறுக்க இங்கிருக்கும் Blossoms, Bookworm போன்ற புகழ் பெற்ற புத்தகக் கடைகளுக்குப் சமீப காலம் வரை சென்றதில்லை! இதற்காகவும், Landmark போன்ற புத்தக மையங்களில் அவ்வப்போது நடைபெறும் ஆடித் தள்ளுபடி விற்பனைகளை தவற விட்ட குற்றத்திற்காகவும் இப்போது ரொம்பவே வருந்துகிறேன். சினிபுக் இதழ்களின் புதிய பதிப்புகள் அறுநூறு ரூபாய்களுக்கு குறைவாக கிடைப்பதில்லை எனும் நிலையில், அவற்றின் பழைய பதிப்புகளைத் தேடி ஆன்லைன் & ஆஃப்லைனில் கடை கடையாக அலைகிறேன். அப்படியாக Thorgal தொடரின் முதல் 9 பாகங்கள் கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைத்தன! இனி அவற்றை படிக்க வேண்டியதுதான் பாக்கி! :)

Eurobooks வெளியிட்ட Lucky Luke 4 in 1 Volume-களையும் வாங்கி இருக்கிறேன். சினிபுக்கின் பழைய 200 ரூபாய் பதிப்புகள் கிடைப்பது மிக அரிதாக இருப்பதால், இவற்றை வாங்க இனி நிறையவே அலைய வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். இந்த மாத காமிக்ஸ் பட்ஜெட்டில் ஏற்கனவே ஜமுக்காளம் விரித்து விட்டதால், வேட்டையை அடுத்த மாதம்தான் தொடர வேண்டும்!

ப்ளேட்பீடியாவில் கிட்டதட்ட ஒன்றரை வருடங்களாக ப்ளேடு போட்டதில் எனது தமிழ்ப்புலமை(!) சற்றே முன்னேறி இருக்கிறது. ஆனால் வேலைக்கு சேர்ந்து 16 வருடங்கள் ஆகியிருந்தும், வேலை தொடர்பான ஈமெயில் மற்றும் கோப்புகளை ஆங்கிலத்தில் எழுதுவதைத் தாண்டி, எனது ஆங்கிலப்புலமையானது "Respected Manager, As I am suffering from fever, kindly grant me two days leave.' என்ற அளவிலேயே இருக்கிறது! சரி, ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதியாவது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்ற நிஷ்டூர முடிவுக்கு வந்துள்ளேன்! என் ஆங்கிலத்திடம் இருந்து, ஆண்டவர் உங்களை காப்பாற்றுவாராக! :)

வலைப்பூவின் பெயரை "GRAFIK COMICS" என்று வைத்ததிற்கான காரணத்தை எளிதில் யூகித்திருப்பீர்கள். கிராஃபிக் நாவல் மற்றும் காமிக்ஸ் என்ற இரண்டு வகைகளும் வலைப்பூ பெயரில் இடம்பெற வேண்டும் என்று நினைத்தேன். ஃபேஸ்புக்கிலும் "கிராபிக் காமிக்ஸ்"காக ஒரு தனிப்பக்கத்தை துவக்கியுள்ளேன். இந்தப் பதிவின் ஆங்கில வடிவத்தை படிக்க எண்ணுவோர் இங்கே போய் ரிஸ்க் எடுக்கலாம். இப்போதைக்கு அவ்வளவுதான் நண்பர்களே, எழுத்து கூட்டி காமிக்ஸ் படிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கிறது, பை பை! :)

பின்குறிப்பு:
கிராஃபிக் காமிக்ஸ் வலைப்பூவை துவக்கி சரியாக ஒரு மாதம் ஆகி விட்டது.  அதன் முதல் பதிவை தமிழாக்கம் செய்து இங்கே வெளியிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைப்பேன். ஆனால், டிராஃப்டைப் பார்த்தாலே ஒரே  அயர்ச்சியாக இருக்கும். நான் ஆங்கிலத்தில் எழுதியதை, நானே மொழியாக்கம் செய்வதென்பது ரொம்பவே போரடிக்கும் வேலை. ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தமிழில்  மாற்ற முயற்சித்தால் சுவாரசியம் குறைகிறது என்பதால், வார்த்தைகளை முன்பின் மாற்றி, கூடுதலாக சில தகவல்களையும் இணைத்துள்ளேன். இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் ஆங்கில காமிக்ஸ் பற்றிய எனது பதிவுகளை உடனுக்குடன் படிக்க நீங்கள் செல்ல வேண்டிய முகவர் டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் கிராபிக் காமிக்ஸ் டாட் காம் - எங்களுக்கு ப்ளேட்பீடியாவைத் தவிர வேறு எங்கும் கிளைகள் இல்லை! :)

கருத்துகள்

  1. பதில்கள்
    1. தினா, நீங்களும் ஆரம்பிச்சுடீங்களா ... ஹ்ம்ம் .. அடுத்த அரசர் :-)

      நீக்கு
  2. உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே !!!

    எப்படியோ எங்களது ஆங்கில புலமையும்(?) வளர்ந்தால் எங்களுக்கு நல்லதுதானே :)

    // கிராஃபிக் காமிக்ஸ் வலைப்பூவை துவக்கி சரியாக ஒரு மாதம் ஆகி விட்டது. //

    ஒரு மாதத்திற்கு ஒரு போஸ்ட் என்று ஏதாவது கணக்கா நண்பரே? ok ok ...

    ஒரு மாதம் வெற்றிகரமாக கடந்ததற்கு வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு மாதம் வெற்றிகரமாக கடந்ததற்கு வாழ்த்துக்கள் :)//
      ஒரு மாசம் எல்லாம் சும்மா ஜிவ்வுன்னு ஓடுதுங்க! பதிவுதான் போட முடியல!

      நீக்கு
  3. இந்தியாவில் நேரடியாய் இரோக்குமதி செய்யப்பட காமிக்ஸ்கள் அந்த காலத்திலிருந்தே விலை அதிகம் தான்.

    asterix, tintin போன்றவை இப்போதும் 450/- குறையாமல்தான் கிடைக்கின்றது.

    மாதம் ஒரு காமிக்ஸ் என்று பிளான் போட்டால் கண்டிப்பாய் பல அறிய காமிக்ஸ்கள் வருடத்திற்கு 12 படிக்க முடியும்.

    சென்னை முருகன் இட்லி கடை ஒரு plate இட்லி வடையும், NJ எடிசன் சரவணபவனின் ஒரு plate இட்லி வடையும் ஒப்பிடுவது எப்படியோ அதேதான் தமிழ் காமிக்ஸ் மற்றும் ஆங்கில franco-belgian ஒப்பிடல்.

    ஒரே ஒரு வார்த்தை : ஆங்கில காமிக்ஸ் கொஞ்சம் விலை அதிகம்தான். சல்லீசா கிடைக்கிதுன்னு எல்லா சினிபூக், Eurobook மொக்கைகளையும் வாங்கிடல் - வேண்டாமே ப்ளீஸ் :-)

    [இப்படித்தான் 1500 கொடுத்து கிரீன் மனோர் வாங்கி படிக்க முடியாமல் - அடுத்த போகிப் பண்டிகைக்கு சொக்கப் பானையில் சேர்க்க வைத்திருந்தேன் - அப்புறம் ஒரு நண்பர் அதை "சூப்பர்" என்று சொன்னதால் கொடுத்துவிட்டேன் :-)]

    தேர்ந்தெடுத்து வருடத்திற்கு சற்றே அதிக விலையினில் 7-8 படித்தாலும் போதுமே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆங்கில காமிக்ஸ் கொஞ்சம் விலை அதிகம்தான். சல்லீசா கிடைக்கிதுன்னு எல்லா சினிபூக், Eurobook மொக்கைகளையும் வாங்கிடல் - வேண்டாமே ப்ளீஸ் :-) //
      :) :)

      //அப்புறம் ஒரு நண்பர் அதை "சூப்பர்" என்று சொன்னதால் கொடுத்துவிட்டேன்//
      யாரு சார் அந்த நல்லவர்?! கிரீன் மேனர் மொக்கை கதையாச்சே!!! :P

      நீக்கு
  4. குழப்பமில்லாத வார்த்தைகளை ஒரு மாலை மாதிரி கோர்த்து, நிறைய தகவல்களையும், கொஞ்சம் நகைச்சுவையையும் தேவையான இடங்கள்ள புகுத்தி நீங்க பதிவு போடுற அழகே தனி!
    உங்க ஸ்டைலில் உலகக் காமிக்ஸ்களையும் போட்டுத் தாக்குங்க கார்த்திக்!

    காத்திருக்கிறேன்! :)

    (நிறையப் பொய் பேசுற வியாதிக்கு இங்கிலீஸ்ல என்ன பேர்னு யாருக்காவது தெரியுமா?) :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Vijay:
      ஆஹா... ஜில்லுன்னு பாராட்டுராறேன்னு சந்தோஷப்பட்டு முடிக்கறதுக்குள்ள இப்படி உண்மையை போட்டு ஓடைச்சிட்டீங்களே! :)

      ராகவன் ஆங்கிலத்தில அதுக்கு என்ன பேருன்னு சொல்லிட்டாரு! தமிழ் காமிக்ஸ் ஸ்டைல்ல சொல்றதுன்னா: மியாவ் மியாவ் பொய்கள்! :)

      நீக்கு
  5. //

    மைக் 1 :காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பது என் இளவயது பொழுதுபோக்குகளில் முதன்மையானதாக இருந்தது!

    மைக் 2 :Reading books especially Comics had been my prime source of entertainment during childhood.

    மைக் 1 : எண்பதுகளின் மத்தியில் காமிக்ஸ் படிக்கத் துவங்கிய எனக்கு, அச்சமயம் வெளியாகிக் கொண்டிருந்த பல விதமான காமிக்ஸ்களை வாங்க போதுமான பணம் ஒருபோதும் இருந்ததில்லை!

    மைக் 2 :As a kid grew up in the 80s, I was exposed to a wide variety of comics published in the Tamil language during that time - it indeed was a golden era in the history of Tamil comics. With a paltry pocket money that hardly adds up to a few rupees every month - I certainly didn't even have enough bucks to buy all those wonderful books

    //

    வேற எதுக்கோ PRACTICE பண்ற மாதிரி தெரியுது நண்பா! : D .

    தினத்தந்தி முதல் பக்கம் :

    "ஆங்கிலத்தில் தனது புலமையை மேலும் மெருகேற்ற தூரதேசம் செல்லும் "ஆல் இன் ஆள் கார்த்திக்கை" ஜெயமுடன் திரும்பி வர வாழ்த்தி வழியனுப்புகிறோம்!"

    MIND வாய்ஸ் : இங்கிலீஸ்காரனுக மாட்நானுகடா மச்சான்! : D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /* "ஆல் இன் ஆள் கார்த்திக்கை" ஜெயமுடன் திரும்பி வர வாழ்த்தி வழியனுப்புகிறோம்!" */

      யோவ் யோவ் .. கார்த்தி ஏற்கனவே கல்யாணம் ஆனவருய்யா - புள்ள குட்டி வேற இருக்கு - இப்போ 'ஜெயமுடன்' வந்தால் வம்பாயிடும்யா :-) :-)

      நீக்கு
    2. @விஸ்கி-சுஸ்கி:
      //வேற எதுக்கோ PRACTICE பண்ற மாதிரி தெரியுது நண்பா! : D .//
      அப்படியா?! :)

      //MIND வாய்ஸ் : இங்கிலீஸ்காரனுக மாட்நானுகடா மச்சான்! : D //
      அவனவன் கதறியடிச்சுக்கிட்டு தமிழ் கத்துக்கப் போறான்! :)

      @Raghavan:
      //இப்போ 'ஜெயமுடன்' வந்தால் வம்பாயிடும்யா//
      ஆமாங்க, அப்புறம் பயமுடன் தான் வீடு திரும்பணும்!

      நீக்கு
  6. அருமையான பதிவு நண்பரே. எனக்கும் இந்த காமிக்ஸ்களை CBR பார்மேட்டில் iPadல் படித்தாலும் தமிழில் புத்தகம் படிப்பது போல் அனுபவம் கிடைப்பதில்லை. ஆனால் போகிற இடமெல்லாம் பொதி மூட்டை போல் எல்லா புத்தகங்களையும் கொண்டு செல்ல இயல்வதில்லை.

    நானும் ஒரு வலைத்தளம் வைத்து இருக்கிறேன் http://www.electronmedia.in ஆனால் அதற்கும் காமிக்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை . இப்போது ஓரளவு தமிழில் எழுத முடிவதால் (கூகள் வாழ்க) எனது வலை தளத்திலும் தமிழில் ஒரு பகுதி துவக்கினால் என்ன என்று உங்களை பார்த்து தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கார்த்திக்! உங்களுடைய ஆங்கில தொழில்நுட்ப வலைப்பூ மிகவும் நன்றாக இருக்கிறது! தமிழில் நன்றாக எழுதுகிறீர்கள். எழுத எழுத கூகிள் ட்ரான்ஸ்லிடரேட் பழகி விடும்! விரைவில் (காமிக்ஸ்?) வலைப்பூ (பகுதி) துவக்க வாழ்த்துக்கள் "எலெக்ட்ரான் கார்த்திக்" அவர்களே! :)

      நீக்கு
    2. நன்றி! நமக்கு தெரிந்ததெல்லாம் காமிக்ஸ்உம் கம்ப்யூட்டர்உம் மட்டுமே இதில் எதாவது ஒன்றை வைத்துதான் (மாவு) அரைக்க வேண்டும். பார்ப்போம்.

      நீக்கு
  7. அப்புறம் எந்த 'எலெக்ட்ரான் கார்த்திக்' பேரும் நல்லாவே இருக்கிறது. இதயே blogger ID யாக வைத்து விடுகிறேன். நீங்கள் நிஜமாகவே ஒரு பெயரியல் நிபுணர்தான். நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia