சேலத்தில் செருப்பு தேய்ந்த கதை!
"காமிக்ஸ் சேகரிப்பில் பழைய புத்தக கடைகள் ஆற்றும் பங்கு - பகுதி ஒன்று" என்ற தலைப்பில்தான் எழுதலாம் என்று நினைத்தேன், ஆனா ஒரு பய படிக்க மாட்டான் என்ற உண்மை உரைத்ததால் காமிக்ஸ் ஸ்டைலில் தலைப்பை மாற்றி விட்டேன் :)
பழைய புத்தக கடைகளுடனான முதல் தொடர்பு ஏற்படுத்தியது எனது அப்பாதான்! 1986-இல் நாங்கள் ஒரு சமயம் திருச்சி சென்ற போது பெரிய சர்ச்சுக்கு (பெயர் ஞாபகமில்லை) எதிரே உள்ள சாலை பிளாட்பார கடைகளில் ஓரிரு புத்தகங்கள் வாங்கியது மங்கலாய் நிழலாடுகிறது! அங்கே புத்தகங்கள் வாங்கிய ஞாபகத்தை விட அந்த கடைவீதி பின்னணியில் சர்ச்சின் பிரமாண்ட தோற்றம் கோட்டோவியமாய் இன்னும் என் மனதில்!
ஆனால் உண்மையான வேட்டையை ஆரம்பித்தது சேலத்தில்தான்! எங்கள் அப்பா PWD-இல் பணி புரிந்த காரணத்தால் மூன்று வருடங்களுக்கொருமுறை ஊர் மாற்றலாகி விடும்! அவ்வாறு, 1988-இல் வேலூரில் இருந்து சேலம் வந்திறங்கியபோதே பேருந்து நிலையம் அருகில் வரிசையாக பழைய புத்தக கடைகளை பார்த்ததில் பசித்தவன் பன்னை பார்த்தது போல அப்படி ஒரு மகிழ்ச்சி! மனதில் அவ்விடத்தை வட்டம் போட்டு கட்டம் கட்டி வைத்தேன்.
அன்றிலிருந்து எந்த ஊருக்கு மாற்றலானாலும் என் கண்கள் துளாவும் முதல் இடம் பேருந்து நிலைய அருகேயான சாலைகளும் தெருக்களுமாக ஆனது! பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே உள்ள டீ மற்றும் புத்தக கடைகளில் பளபளப்பாய் தொங்கும் காமிக்ஸுகளை பார்ப்பது ஒரு வகை சுகம் என்றால், பிளாட்பார கடைகளில் அடுக்கி வாய்த்த காமிக்ஸுகளை பார்ப்பது இன்னொரு பெருஞ்சுகம்! அந்த புத்தகங்களை புரட்டும் போது வரும் வாடையே அலாதி - ஹ்ம்ம் அதெல்லாம் சொல்லிப் புரிவதில்லை!
அது என்ன "சேலத்தில் செருப்பு தேய்ந்த கதை" என்ற உப தலைப்பு என்று மண்டையை உருட்டிக் கொண்டு இருப்பவர்கள் மேலே தொடரவும். "அந்த பிஞ்ச செருப்ப என் கைல குட்றா" என்று பீதி கிளப்புபவர்கள் அப்படியே அரை வட்டம் அடித்து கிளம்புங்கள்!
ஆத்துக்காடு ஹௌசிங் போர்டில் நாங்கள் குடியிருந்தோம். எங்களை மரவனேரி பாரதி வித்யாலயாவில் சேர்த்தார்கள். நான் ஆறாவது, அண்ணன் ஒன்பதாவது! வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 4km தொலைவில் எங்கள் பள்ளி! நானும் என் அண்ணனும் வாரத்தில் மூன்று, நான்கு நாள் பஸ்ஸில் செல்லாமல் நடந்தே சென்று வருவோம். அவ்வாறாக சேமித்த பணம் காமிக்ஸ் புத்தகங்களாய் மாறும்! என் அண்ணன் ஆரம்பத்தில் சில வருடங்கள் என்னைப் போலவே காமிக்ஸ் பைத்தியமாக இருந்தான், ஆனால் சீக்கிரமே அவனது நாட்டம் வேறு தளங்களில் மாறியது, அது இங்கே தேவையில்லை! ஒவ்வொரு வார இறுதியிலும் இவ்வாறாக சேர்த்த பணம் ஆளுக்கு ஐந்து அல்லது ஆறு ரூபாய் இருக்கும். அதை வைத்து எங்களால் முடிந்த அளவு பழைய புத்தகங்கள் வாங்குவோம்.
முன்னுரிமை ராணி காமிக்ஸ் இதழ்களுக்கே, ஏனென்றால் மூன்று ரூபாய்க்கே நான்கு பழைய புத்தகங்கள் கிடைக்கும்! நாங்கள் காமிக்ஸாகவே மதிக்காத பட்டியலில் முதல் இடத்தில் இந்திரஜால் காமிக்ஸ் அப்போது இருந்தது என்பதால் அதை மட்டும் தொடவே மாட்டோம். நிறைய பேர் அப்படி நினைத்ததன் மௌன சான்றாய் அடுக்கடுக்காக அப்புத்தகங்கள் வாங்குவார் இன்றி கிடக்கும். வாங்காமல் விட்ட புத்தகங்களின் ஆவி (இந்திரஜாலையும் சேர்த்துதான்) அவ்வப்போது என் கனவில் இன்னமும் வந்து வெறுப்பேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன!
புத்தகத்தை கூட சுலபமாக வாங்கி விடலாம் ஆனால் அதை வீட்டுக்கு தெரியாமல் பதுக்குவதும், படிப்பதும் இன்னொரு கலை. எதை பதுக்குவது, எதை காட்டுவது போன்றவற்றிக்கு சில வரையறைகள் இருந்தன. பின்னே, தினமும் நடந்து போய்தான் காசு சேர்த்தேன் என்று அம்மாவிடம் சொல்ல முடியுமா என்ன! வாங்கும் புத்தகங்களில் ஒன்றிரண்டை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மற்றவற்றை முதுகில் பதுக்கி கடத்துவோம்! அப்படி கையில் வைத்துக் காட்டும் புத்தகங்களில் எப்போதும் ஜேம்ஸ் பாண்ட் மட்டும் இருந்ததில்லை! காரணம் உங்களுக்கே தெரியும், அந்த காலத்தில் எங்களை போன்ற பள்ளி மாணவர்களுக்கு அதிகபட்சமாய் கிடைத்த கிளு கிளு புத்தகங்களே தலைவரின் காவியங்கள்தான்! சரி பதுக்கிய புத்தகங்களை படிப்பதெப்படி? அடுத்த பதிவில்...
மணலூர் பேட்டையிலும் அதே அதே
பதிலளிநீக்குவேட்டை பாகம் இரண்டு - ரெடி!
நீக்குமன்னிக்க, சரியான லிங்க் இதோ:
நீக்குகாமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் இரண்டு! - ரெடி!
http://bladepedia.blogspot.in/2012/03/blog-post_31.html
Dear karthik, good job keep on posting, i am from madurai. can you give me your cell number or email id.
நீக்குஇன்றும் திருச்சியில் அந்தத் தெரு பழைய புத்தகங்களுக்கு பிரபலமான இடம். ஆனால் ஒரு காமிக்ஸ் கூட கிடைக்காது.
பதிலளிநீக்குகேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது (காமிக்ஸ் கிடைப்பதில்லை என்பதை பற்றி அல்ல!). அந்த தெரு மற்று சர்ச்சின் பெயர் என்ன?
நீக்கு