பாகிஸ்தான் விவகாரத்தில், அமெரிக்க CIA இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கிறதா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே!பெங்களூரில் ஜனவரி மாத இறுதியிலேயே விஸ்வரூபம் வெளிவந்து விட்டது என்றாலும், இம்மாதம் 9ம் தேதிதான் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது! பாதி படத்திற்கு மேல் தாங்க முடியவில்லை, வெளியில் வந்து விட்டேன்! படம் பிடிக்காமல் அல்ல, இடைவேளைக்குப் பிறகு வெளியே போயே ஆக வேண்டும் என்று என் மூன்று வயது மகன் விஸ்வரூபம் எடுத்ததுதான் காரணம்! :) மனைவியை தொடர்ந்து பார்க்குமாறு கூறி விட்டு, அங்கு கமல் தாலிபான்களோடு விளையாடும் வேளையில் வெளியே என் மகனோடு ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தேன்!
இப்படியாக விஸ்வரூபத்தின் முதல் பாகத்தையே இரண்டு பாகங்களாக பிரித்துப் பார்க்கும் அரிய வாய்ப்பு இந்த வார இறுதியில் கிடைத்தது! அதே போல உலக வலைபூக்களிலேயே கடைசி முறையாக விஸ்வரூபத்திற்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது! :) தமிழகத்தில் இந்நேரம் முக்கால்வாசி பேர்கள் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்பதால் நான் புதிதாக சொல்ல ஏதும் இருக்கப்போவதில்லை!
கமலுக்கு இந்தப் படத்தில் இரண்டு அறிமுகக் காட்சிகள்! இரண்டிலும் அதகளப் படுத்தியுள்ளார், குறிப்பாக இரண்டாவதில்! ஞாயிறு அன்று ஆதி பகவன் பார்த்தேன். ஜெயம் ரவி என்னதான் கஷ்டப்பட்டு பெண்மையை தன் நடிப்பில் கொண்டு வர முயன்றாலும் கமலின் அருகே கூட வர இயலவில்லை என்பது திண்ணம்! 58 வயதிலும் எப்படித்தான் நடிப்பில் இப்படி ஒரு பெண்மை கலந்த நளினத்தை கொண்டு வர முடிகிறதோ?! 'உன்னைக் காணாது' பாடலுக்கு பிறகு போனை எடுக்க ஓடும் காட்சி ஒரு சிறிய உதாரணம்! இரண்டாவது அறிமுகக் காட்சியில் பின்னணி பன்ச் பாடல் ஒலிக்க எதிரிகளை பின்னி எடுப்பது படு ஜோர்!
நியாயமாகப் பார்த்தால் நான்கு அறிமுகக் காட்சிகள் என்று சொல்லலாம்! மூன்றாவதாக தோன்றும் அந்த ஜிகாதி கெட்டப், கமல் கண்ணாடி போட்டிருந்தால் மட்டும் பொருந்துகிறது! நான்காவது, வழக்கமான கமல் ஜெர்க்கின் எல்லாம் மாட்டிக்கொண்டு படிக்கட்டில் இறங்கி வரும் காட்சி! அடிபட்டால், லாஜிக் அடிபடாமல் இருக்க, அடிபட்ட இடத்தில் பாண்டேஜ் போடுவதெல்லாம் சரிதான்! அதற்காக பாதி முகத்தை மறைக்கும் வகையில் வெள்ளை பாண்டேஜ் போட வேண்டுமா? ஸ்கின் கலரில் பாண்டேஜ் போட்டால் உறுத்தாமலாவது இருக்கு
ஆப்கன் காட்சிகள் தத்ரூபம்! குறிப்பாக NATO படையினர் தாக்குதல் நடத்தும் இடம்! ஆணாதிக்கம், ஆங்கில வெறுப்பு, ஜிகாதி சிறுவர்கள், காய்கறிகளைப் போல தோட்டாக்களை விற்கும் கடைகள், நடுத்தெரு தூக்கு தண்டனைகள் என மேலோட்டமாக சில விஷயங்களை காட்டிச் செல்கிறார் கமல்!
அமெரிக்க காட்சிகளில் அந்த ஓபனிங் ஃபைட் மற்றும் கார் சேஸ் - இவையிரண்டும் பரபர ரகம்! தமிழர்கள் எல்லாம் அமெரிக்க ஆங்கிலத்திலும், தாலிபான்கள் எல்லாம் தமிழிலும் பேசிக் கொள்கின்றனர். என்னதான் லாஜிக் வைத்திருந்தாலும் தாலிபான்கள் தமிழில் சரளமாக பேசும் போது (அதுவும் அருகில் தமிழர்களே இல்லாத போது கூட!) எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது. தமிழ்நாட்டில் கூட இந்த அளவுக்கு அழகாக தமிழில் யாரும் பேசுவதில்லை!
மாறாக, கமலின் மனைவியாக நடித்துள்ள பூஜா குமார் பேசும் சுமார் தமிழைக் கேட்டபோது ரத்தக் கண்ணீரே வந்து விட்டது! பஷ்டூன் அராபிக் மொழியைக் கூட சப்டைட்டிலை பார்க்காமலேயே புரிந்து கொள்ளலாம் போல! ஆனால் பூஜாவின் தமிழை புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது! ஆனால், மிக அருமையாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா வெறும் உள்ளார்.
ஒமராக நடித்துள்ள ராகுல் போஸ் அமெரிக்காவில் தோன்றும் காட்சிகளில், ஒட்டு மொத்தமாக ஆறு ஏழு சொற்களைத்தான் உதிர்க்கிறார். குறைந்த பட்சம் அவற்றிக்காவது சப்டைட்டில் போட்டிருக்கலாம் - ஒரு மண்ணும் புரியவில்லை! இருந்தாலும், அவருடைய நடிப்பு எனக்கு பிடித்திருந்தது!
தொழில்நுட்ப ரீதியில் இது நிஜமாகவே தமிழ் திரையுலகின் விஸ்வரூபம்தான்! கமலின் டைரக்ஷன், ஒலி/ஒளிப்பதிவு, வசனங்கள், ஆர்ட், ஆக்ஷன் என அனைத்து துறைகளிலும் படம் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தி இருக்கிறது. படமும் இறுதி வரை போரடிக்காமலேயே செல்கிறது! ஆயினும், (வழக்கமான) ஹாலிவுட் பாணியில் படமாக்கியிருப்பதே இந்தப் படத்திற்கு எதிராகப் போய் விட்டது!
பாகிஸ்தான் விவகாரத்தில், அமெரிக்க CIA இந்தியாவுக்கு எந்த அளவு விசுவாசமாக இருக்கிறது என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே! அப்படியிருக்க அமெரிக்காவுக்கான ஒரு கதைக் களத்தில் - அவர்களுக்கு ஆதரவான விதத்தில் ஒரு இந்திய (RAW?) உளவாளி, ஆப்கன் தாலிபான் தீவிரவாதிகளிடையே ஊருடுவி அவர்களை அழிப்பதைப் போல படமாக்குவதற்கு கமலின் படைப்புத்திறன் பயன்பட்டிருப்பது மிகவும் வருத்தத்தையே அளிக்கிறது!
அதற்கு பதிலாக, நமது RAW உளவாளி - இந்தியாவுக்கு சாதகமான விதத்தில் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதத்தை / சதியை முறியடிப்பதாகவோ (அர்ஜூன் / விஜயகாந்த் பாணியில் அல்ல!) அல்லது சீன அத்துமீறல் எல்லை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதாகவோ பிரமாண்டமாக படமாக்கியிருக்கலாம். குறைந்த பட்சம் தமிழர்களுக்கு ஆதரவாக ஈழப் பிரச்சினையை படமெடுத்திருக்கலாம்! அப்படி செய்திருந்தால், 'இதோ பாருங்கள் தமிழிலும் ஒரு உலகப் படம் வந்திருக்கிறது!' என்று நாமும் தலையில் வைத்து ஆடி இருக்கலாம்!
இந்தப் படம் அமெரிக்காவில் உள்ளதொரு இந்திய ரெஸ்டாரண்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வையே அளிக்கிறது! பிரியாணி தயாரிப்பதற்கு மிகவும் தரமான பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன! ஆனாலும் சுவை அன்னியமாகவே தெரிகிறது! இரண்டாம் பாகத்தின் கதை பெரும்பாலும் இந்தியாவில் நடப்பதாக அமையும் என்றொரு பேச்சு அடிபடுகிறது - பார்க்கலாம் அப்போதாவது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுகிறாரா என்று!
முந்தைய பதிவு: ஒரு கைராசி வைத்தியரின் நம்பிக்கை நோயாளிகள்!
கடைசியா வந்தாலும் ஒரு வித்தியாசமான பார்வையில் அலசி உள்ளீர்கள்.
பதிலளிநீக்குஉங்களுடைய கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஆகா அப்படியும் இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.
பார்போம் உங்கள் கேள்விக்கான விடை இரண்டாம் பாகத்தில் வருகிறதா என்று...:)
அப்படி இருந்திருந்தால் அமர்க்களமாக இருந்திருக்கும்!
நீக்குமுதல் பாகத்தை பார்த்தே மிரண்டுபோய் இருக்கேன், இதுல இரண்டாம் பாகம் வேறயா ! நடத்துங்க. :)
பதிலளிநீக்குநானெல்லாம் முதல் பாகத்தையே இரண்டு பாகமா பார்த்தவன் பாஸ்! ;)
நீக்குinge nan veetule system le film ah 6 parts ah pirichu again and again parthu rasithutu irruken.enna oru nadipu..enna oru kamal..no chance...ippa ella dialogue yum puriyuthu..rahul bose kalaki irrukar..
பதிலளிநீக்குகலக்குங்க! ராகுல் போஸ் தொண்டையை அமுக்கி பேசுனது கூட உங்களுக்கு புரியுதுன்னா உங்களுக்கு சிறப்பு தமிழ் முனைவர் பட்டமே கொடுத்துடலாம்! :)
நீக்கு// விஸ்வரூபம் - ஹ்ம்ம்!!! //
பதிலளிநீக்குஏன் இந்த இழுவை
அந்த அளவுக்கு படத்தை இழுத்துவிட்டார்களோ ;-)
.
ஹ்ம்ம்!!! - இப்படி இந்தியாவுக்கு அதிக சம்பந்தமில்லாத மேட்டரை வச்சு படம் எடுத்துட்டாரேங்கற ஆதங்கப் பெருமூச்சு! :)
நீக்கு// இப்படியாக விஸ்வரூபத்தின் முதல் பாகத்தையே இரண்டு பாகங்களாக பிரித்துப் பார்க்கும் அரிய வாய்ப்பு இந்த வார இறுதியில் கிடைத்தது! //
பதிலளிநீக்குஉலக தொல்லைக்காட்சி ;-) வரலாற்றில் முதல் முறையாக
.