வார இறுதியில் மதுரை சென்ற போது நடந்த சில (அ)சம்பவங்களின் தொகுப்பு!
அசம்பவம்:
இரயில்வே ஸ்டேஷன் வெளிவாயில் மின்படிகளில் இருந்து கீழே இறங்கும் போது...
...
* அந்த மஞ்ச சட்டை எனக்கு..
* பச்ச டீ-ஷர்ட்ட நான்தான் மொத பாத்தேன்.. இங்க பாருங்க சார்..
* கோடு போட்ட ஜிப்பா எனக்கு... சார் இப்படி வாங்க...
...
என நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளை வைத்து நீங்கள் பொதுவில் ஏலம் விடப்படுவீரானால், நீங்கள் சென்றிருக்கும் இடம்...
...
...
மதுரை! கேர் ஆஃப் ஆட்டோ டிரைவர்ஸ் @ மதுரை இரயில்வே ஸ்டேஷன்!
சார் ஆட்டோவா?
அசம்பவம்:
இரயில்வே ஸ்டேஷன் வெளிவாயில் மின்படிகளில் இருந்து கீழே இறங்கும் போது...
...
* அந்த மஞ்ச சட்டை எனக்கு..
* பச்ச டீ-ஷர்ட்ட நான்தான் மொத பாத்தேன்.. இங்க பாருங்க சார்..
* கோடு போட்ட ஜிப்பா எனக்கு... சார் இப்படி வாங்க...
...
என நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளை வைத்து நீங்கள் பொதுவில் ஏலம் விடப்படுவீரானால், நீங்கள் சென்றிருக்கும் இடம்...
...
...
மதுரை! கேர் ஆஃப் ஆட்டோ டிரைவர்ஸ் @ மதுரை இரயில்வே ஸ்டேஷன்!
சார் ஆட்டோவா?
வேணாங்க...
எங்க போகணும் சார்?
ஆட்டோ வேணாங்க...
கரெக்டு ரேட்டுதான் சார்,, எங்க போகணும்? சும்மா சொல்லுங்க...
அட வேணாங்க, நமக்கு கார் வெய்ட்டிங்ல இருக்கு!
(முணு முணு முணு ...) அந்த கருப்பு சட்டேய்ய்... நாந்தான் மொதல்ல பார்த்தேன்....
ஆஹா சம்பவம்:
வெல்கம் டு மதுரை சார்! இண்டிகாவா? ஆம்னியா?
இண்டிகா!
பேரும், போன் நம்பரும் கொடுத்துட்டு அந்த வண்டில ஏறுங்க சார். மினிமம் சார்ஜ் 75, மீட்டர்ல வர்றதை தந்தா போதும்!
ஆட்டோ அலம்பல்களைத் தாண்டி
சற்று முன்னே நடந்தால், ஃபாஸ்ட்ட்ராக் டாக்ஸியின் புக்கிங் கவுன்ட்டர்
மதுரை இரயில் நிலையத்தின் முன்பகுதியிலேயே அமைந்துள்ளது! டாக்ஸிகள் தயார்
நிலையில் நிற்கின்றன! மதுரை
ஆட்டோக்காரர்களிடம் பேச்சு கொடுத்து இரத்த அழுத்தத்தை அதிகரித்துக்
கொள்வதை விட, ஃபாஸ்ட்ட்ராக்குக்கு கோயில் கட்டி கும்பிடலாம்! இரயில்
நிலையம் தவிர்த்து பிற இடங்களில் ஆட்டோ ஏற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்,
வாடகை எவ்வளவு என்று பேசாமல், இடத்தை மட்டும் சொல்லி விட்டு உட்கார்ந்து
விடுவேன். இறங்கும் போது, நூறு ரூபாய்த் தாளை நீட்டினால் மீதியை கருத்தாக
கொடுத்து விடுவார்கள்! என்ன இருந்தாலும் சென்னை ஆட்டோகாரர்களை விட இவர்கள் எவ்வளவோ பெட்டர் தான்! :)
ஒரு ஆஹா அசம்பவம்:
இரயில்வே ஸ்டேஷன் மின்படி: ஆமா சார், ஆமா! எஸ்கலேட்டரேதான்! மதுரை இரயில் நிலையத்தில் இருக்கும் எஸ்கலேட்டர்கள், மால்களில் இருப்பதைப் போல சட்டென்று மேலெழவோ அல்லது கீழிறங்கவோ செய்யாமல் நான்கு, ஐந்து படிகள் தரை மட்டத்திலேயே நகர்ந்து, பயணிகள் தங்களை லக்கேஜ்களுடன் நிலையிறுத்திக் கொள்ள அவகாசம் தருகின்றன! நல்ல சிந்தனைதான்! முன் அனுபவம் இல்லாதவர்கள், பெரிய தகவல் பலகைகளில் எழுதப் பட்டிருக்கும் பத்தி பத்தியான எச்சரிக்கை வாசகங்களை மிரட்சியான பார்வையுடன் படித்துக் கொண்டே நிற்பதால் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் பகுதிகளில் ட்ராபிக் ஜாம் ஆவதும் நடக்கிறது!!! நல்ல தொடக்கம், அனைத்து இரயில் நிலையங்களிலும் இந்த வசதி வந்தால் நன்றாக இருக்கும்! தலையில் கூடையை சுமந்த ஒரு வயதான மதுரை ஆத்தா, சரியாக பேலன்ஸ் கிடைக்காமல் 'அய்யோ, ஆத்தாடி' என்றவாறு விழத் தெரிந்தார்! நான் சிரிக்கவில்லை, அவரின் தைரியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று - என் அம்மா இன்றுவரை எஸ்கலேட்டரில் ஏறத் துணிந்ததில்லை!
பன் வாங்கிய சம்பவம்:
திருமலை நாயக்கர் மகால் நுழைவுச் சீட்டு மையம்
இரண்டு பெரியவங்க, ஒரு குழந்தை
25 ரூவா, கேமரா இருக்கா?
மொபைல் கேமராதான் இருக்கு
மொத்தம் 55 எடுங்க!
(வருங்கால வரலாறு: மொபைல் கேமராவிற்கு எல்லாம் முப்பது ரூபாய் கொடுத்து டிக்கட் எடுத்த ஒரே நபர், திருவாளர்.கார்த்திக் சோமலிங்கா தான் என்று நம்பப்படுகிறது!)
'பன்'குறிப்பு:
மகாலை படு கேவலமாக பராமரிக்கிறார்கள். புறா எச்சங்களின் மீதுதான் நடக்க வேண்டி இருக்கிறது! ஏதோ ஒரு பள்ளியில் இருந்து ஐம்பத்தி சொச்ச மாணவிகளை, மகாலை கூட்டிப் பெருக்குவதற்காக அழைத்து வந்திருந்தார்கள்! ஒளியும் ஒலியும் காட்சிக் கூடத்தில் இருக்கும் காலி இருக்கைகள், ஓரமாய் ஒரு (டூப்ளிகேட்?) அரியணை, வலது மூலையில் இருக்கும் ஒரு அறையில் ஒரு சிறிய அரும்பொருள் கண்காட்சி என மகால் வெறிச்சோடிக் கிடக்கிறது! மகாலின் வெளியே பல ஜோடிகள் மறைவாக உட்கார்ந்து காதலித்துக் கொண்டிருந்தார்கள். மகால் உட்புற ஜன்னல்களுக்கு கீழே இருக்கும் காலி இடங்களில் யாரும் உட்கார்ந்து விடக் கூடாது என்று ஆணிகளை பதித்து, அருகே இருக்கும் தூண்களில் "காதல் என்ற பெயரில் முறைகேடாக நடந்து கொள்பவர்களை போலீஸில் பிடித்துக் கொடுக்கப் படும்" என்று அறிவிப்புப் பலகைகள் வைத்திருக்கிறார்கள்!
பவண்டோ வாங்கிய சம்பவம்:
Bovanto ஒண்ணு கொடுங்க!
ஹாஃப் லிட்டரா?
ஆமா! Cold-டூ...
அத முதல்லயே சொல்லி கேக்கணும்ல? புடிங்க...
எவ்ளோ?
முப்பது...
இந்தாங்க, ஸ்ட்ரா ஒண்ணு கொடுங்க?
ஸ்ட்ரா எதுக்கு? அப்படியே குடிக்கலாம்ல?
அது எங்களுக்கும் தெரியுங்க. பையனுக்காக வேணும்!
ஸ்ட்ரா இருந்திருந்தா கொடுத்துருப்போம்ல!
(அப்புறம் ஏன்யா எக்'ஸ்ட்ரா' கேள்வி எல்லாம் கேக்குறே, கிர்ர்ர்...)
பல்சுவை சம்பவங்கள்:
என்ன இருந்தாலும் பவண்டோ போல வருமா? பெங்களூரில்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது! அவ்வளவு ஏன், மதுரையைத் தாண்டினாலே பல இடங்களில் கிடைப்பதில்லை. இந்த அழகில் 'பவண்டோவையே வாங்குங்கள், உள்ளூர் குளிர்பான கம்பெனிகளை ஆதரியுங்கள்' என்ற ஃபேஸ்புக் பிரச்சாரங்கள் வேறு! அதுக்காக பவண்டோ வாங்க எல்லாம் மதுரை போக முடியாது பாஸ்! :)
அதே போல மதுரை மைசூர் பாக் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும்! கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்டைல் நெய் மைசூர் பாக்குகளைப் பற்றி பேசவில்லை. ஆனால் மொறு மொறுவென்ற அமிர்தம் & பகவான் ஸ்வீட் கடைகளின் மைசூர் பாக்குகள்! இந்த சுவை மைசூரில் கூட கிடைக்காது! அரைக்கிலோ வாங்கி வந்திருக்கிறேன். அநேகமாக 'இந்த வாரம் பேதி வாரம்' ஆக மாறும் வாய்ப்பு இருக்கிறது! :)
சனிக்கிழமை மதியம், மாட்டுத்தாவணிக்கு அருகில் உள்ள அஞ்சப்பர் சென்றிருந்தோம்! பிரியாணியா அது?! வாவ்!!! பெங்களூர் அஞ்சப்பரில் சாப்பிடுவது, சைனா போய் சப்பாத்தி சாப்பிடுவது போன்ற ஒரு அக்குபஞ்சர் அனுபவத்தைத்தான் தந்திருக்கிறது! உணவு விஷயத்தில் மதுரையை அடித்துக் கொள்ளவே முடியாது!!!
வாந்தி ஸ்டாப் ரெண்டு டிக்கட்:
வில்லாபுரம் ரெண்டு டிக்கட்... ஸ்டாப் பேர் மறந்துருச்சு... இரண்டாவது பேச்சியம்மன் ஹோட்டலுக்கு பக்கத்துல எதுனா ஸ்டாப் இருக்கா?
எடம் வந்ததும் சொல்லுங்க, இறங்கிக்கலாம். 26 ரூபா சில்றயா கொடுங்க...
...
...
என்னங்க... முதல் பேச்சியம்மன் தாண்டிருச்சுங்க...
சரி, எந்திரி வாசல் கிட்ட நின்னுக்கலாம்.. குழந்தைய நான் தூக்கிக்கறேன்..
கண்டக்டர்... அதோ இரண்டாவது பேச்சியம்மன் ஹோட்டல் வந்துருச்சு.. பஸ்ஸை நிப்பாட்டுங்க...
இங்க ஸ்டாப் இல்ல.. அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கங்க
வாசல் சீட்டு அறிவாளி: தம்பீ, ஒங்களுக்கு எங்க எறங்கணும்?
பேச்சியம்மன் ஹோட்டல் பக்கத்துல...
ஸ்டாப் பேரு?
தெரியல
ஸ்டாப் பேரு கூட தெரியாமலேயா ஏறுனீங்க?
(ஆமா, அதுக்கு என்ன இப்ப? கிர்ர்ர்...)
கண்டக்டரிடம்: ஏங்க நீங்கதானே 'எடம் வந்தா சொல்லுங்க நிறுத்தறேன்'னு சொன்னீங்க?
நாங்க எப்படி வண்டியை நிறுத்தறதூதூதூ? முன்ன போங்க.. ட்ரைவர்ட்ட கேளுங்க..
...
...
சார், கொஞ்சம் வண்டியை நிப்பாட்டுறீங்களா? பையனுக்கு அவசரமா வாந்தி வருதாம்... நாங்க இங்கேயே இறங்கிக்கறோம்!
கிரீச்ச்ச்ச்...
(இவங்ககிட்ட எல்லாம் பேசுற மாதிரி பேசுனாத்தான் வேலை நடக்கும் போல!)
'வழி'ப்போக்கர்:
மதுரையில் யாரிடமாவது வழி கேட்டால், அந்த இடத்திற்கே கொண்டு போய் சேர்த்து விடுவார்கள் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதில் ஓரளவுக்கு உண்மை இல்லாமல் இல்லை, தெளிவாய் வழி சொல்வதில் எங்கள் ஊர்க்கார்கள் கில்லாடிகள்! உதாரணம்:
நாடார் கல்யாண மண்டபம் எங்க இருக்கு?
லெஃப்டுல திரும்பி, டக்குன்னு ரைட்டு எடுங்க, அப்புறம் மூணாவது ரைட்டு, கொடிக்கம்பத்தை ஒட்டி ரைட்டு எடுத்தீங்கன்னா லெஃப்டுலே ஒரு பத்து வீடு தாண்டி வரும்!
... தாண்டினோம், வந்தது!!!
வெயிலின் மைந்தர்கள்:
பெங்களூரில் 12 வருடங்களுக்கு மேலாக குப்பை கொட்டியதில், மதுரைக்கு செல்வதென்றாலே சற்று அலுப்பாகத்தான் இருக்கிறது! பெயருக்குத்தான் சொந்த ஊரே தவிர, அங்கு மொத்தம் தங்கி இருந்தது இரண்டே ஆண்டுகள்தான் என்பது அதிக ஒட்டுதல் இன்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனால், முக்கிய காரணம் வெப்பம்தான்! செப்டம்பரில் கூட அனலாகத் தகிக்கிறது! எனக்காவது பரவாயில்லை, எனது மகனுக்கு பெங்களூரிலேயே வேர்த்துக் கொட்டும். ஒரே நாளில் அவன் கழுத்துப் பகுதியில் வேர்க்குருகள் எட்டிப் பார்க்க ரொம்பவே சிரமப்பட்டு விட்டான். வேர்வையின் காரணமாகத்தான் இங்கே வெளியில் வேலை செய்பவர்கள் (கடை, கண்டக்டர், ஆட்டோ இத்யாதி) கொஞ்சம் எரிச்சலாகவே பேசினார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை!
திருமணத்திற்கு அழைப்பதற்காக கடந்த மாதம் பெங்களூர் வந்திருந்த மதுரையைச் சேர்ந்த எங்கள் உறவினர்கள் 'கால்களை கீழே வைக்க முடியல - ரொம்ப குளிர்ச்சியாக இருக்கு', 'என்ன ஊர் இது எப்பவும் மசமசன்னு?!' என்று பெங்களூர் பற்றி புலம்பித் தள்ளியது வேறு விஷயம்! :) 12 வருடத்திற்கு முந்தைய பெங்களூர் குளிர் இப்போது இங்கே இல்லை என்பதுதான் உண்மை!
மதுரைக்காரன் டா & டி:
திருமண மண்டபத்தில் காட்டன் சட்டை புண்ணியத்தில் ஆண்கள் அக்கடாவென்று காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். தக தக பட்டுச் சேலைகளை கட்டிக் கொண்டு பெண்கள் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்கள்! அந்த எரிச்சலில் என் மனைவி, 'இனிமே மதுரை பக்கமே வரக்கூடாது'ங்க என்றார் கடுப்பாக! நான் உடனே, 'அது எப்படி முடியும்? திருப்பூர் பக்கம் வேணா போகாம இருக்கலாமா?' என்று கேட்டேன்! என்ன இருந்தாலும் சொந்த ஊரை விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?! :)
தல.... நம்ம ஊருக்கு வந்துட்டு....?????
பதிலளிநீக்குஅனுபவங்களை அசத்தலா சொல்லி இருக்கீங்க...
மன்னிக்கணும் தலைவா! அடுத்த முறை கட்டாயம் போன் பண்றேன்! :(
நீக்குபிரேமா விலாஸ் அல்வா வாங்கலியா...
பதிலளிநீக்குரயில்வே ஸ்டேசன் பக்கத்துல தான் இருக்கு தல...
இந்த முறை மகாலில் பன் வாங்கியதால், விலாஸில் அல்வா வாங்கவில்லை! :D
நீக்கு//பெங்களூரில்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது! அவ்வளவு ஏன், மதுரையைத் தாண்டினாலே பல இடங்களில் கிடைப்பதில்லை. இந்த அழகில் 'பவண்டோவையே வாங்குங்கள், உள்ளூர் குளிர்பான கம்பெனிகளை ஆதரியுங்கள்' என்ற ஃபேஸ்புக் பிரச்சாரங்கள் வேறு! அதுக்காக பவண்டோ வாங்க எல்லாம் மதுரை போக முடியாது பாஸ்! :)//
பதிலளிநீக்குஇன்றுதான் பார்த்தேன். எங்கள் ஊரில் பவண்டோ கிடைக்கிறது. இனிமேல் நீங்கள் பவண்டோ குடிக்க மதுரை போக வேண்டாம். இங்கே வந்து விடுங்கள். அது என்ன கோல்டு? இங்கே ஒரே ஒரு டைப் தான் கிடைக்கிறது.
//வேர்வையின் காரணமாகத்தான் இங்கே வெளியில் வேலை செய்பவர்கள் (கடை, கண்டக்டர், ஆட்டோ இத்யாதி) கொஞ்சம் எரிச்சலாகவே பேசினார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை!//
எனக்கு இந்த சந்தேகம் உலக அளவில் இருக்கிறது. வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில் தான் அதிகம் அடிதடி நடக்கிறது, மக்களும் கூட கொஞ்சம் கரடுமுரடானவர்கள் தான். மேலும் அந்த நாடுகள் முன்னேறிய நாடாக மாறுவதும் கூட கொஞ்சம் கடினம்தான் என்று தோன்றுகிறது. முன்னேறிய நாடுகளில் நிலநடுக்கோட்டை ஒட்டிய நாடுகள் மிகவும் சொற்பமே.
//அது எப்படி முடியும்? திருப்பூர் பக்கம் வேணா போகாம இருக்கலாமா?' //
அருமை அண்ணன் சிபி கோவிச்சுக்கப்போறார். :-)
வாவ், முதன்முறையாக முத்து விசிறி அவர்கள்! :)
நீக்கு//இனிமேல் நீங்கள் பவண்டோ குடிக்க மதுரை போக வேண்டாம்//
ஆஹா!! அதற்காக சிங்கபூருக்கா வர முடியும்?! ;) இப்படி சிங்கப்பூர் அல்லது மதுரை டிக்கட்டிற்கு தண்ணீராய் செலவழிப்பதை விட, கூரியரில் அனுப்பச் சொல்லி காளிமார்க் கம்பெனிக்கு ஆயுள் சந்தா கட்டி விடலாம்! :D
//அது என்ன கோல்டு? இங்கே ஒரே ஒரு டைப் தான் கிடைக்கிறது.//
அது Gold அல்ல Cold :D
//எனக்கு இந்த சந்தேகம் உலக அளவில் இருக்கிறது//
உண்மை! விவாதிக்கப்பட வேண்டிய சுவாரசியமான டாபிக் தான்!! பெட்ரோல் புண்ணியத்தில் வளைகுடா நாடுகள் மட்டும் ஓரளவுக்கு தப்பி விட்டன!
//அருமை அண்ணன் சிபி கோவிச்சுக்கப்போறார். :-)/
அவர் ஏற்கனவே லைட்டா கோவிச்சுக்கிட்டார்! :)
@முத்து விசிறி : கோல்டு - அப்படி வெரைட்டி ஒண்ணும் இல்லை. குளிர்விக்கப் பட்ட என்று சொல்வதற்கு பதில் கோல்டு (COLD) என்றிருக்கிறார்.
பதிலளிநீக்குநல்ல கோல்டா குடுங்க ன்னு நல்ல தமிழில் கேப்போம். :D
//குளிர்விக்கப் பட்ட என்று சொல்வதற்கு பதில் கோல்டு (COLD) என்றிருக்கிறார்//
நீக்குஅப்போ கோல்டு என்பது தமிழ்ச் சொல் இல்லையா?! :P
கார்த்திக், மீண்டும் நல்ல பதிவு ! ஒரு எழுத்தாளனுக்கு, சுற்றி நடப்பதை கூர்ந்து கவனித்து, சுவையாக வர்ணிக்கத் தெரிவது அவசியம் என்று சுஜாதா எழுதி இருந்தது நினைவு வருகிறது !
பதிலளிநீக்கு@ @ முத்துவிசிறி : good observation on the developed countries - however we should also look at places in gulf though it is due to oil reserves - the intent of developing has been fueled into execution.
நன்றி ராகவன்! உண்மைதான்! சுவாரசியத்தைக் கூடுதலாக்க இடையிடையே கொஞ்சம் கற்பனையையும் கலந்து கட்டி அடிக்க வேண்டியது மிகவும் அவசியம்! ;)
நீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்கு//என்ன இருந்தாலும் பவண்டோ போல வருமா? பெங்களூரில்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது! //
இந்த ஆண்டு துவக்கத்தில் பெங்களூர் வந்திருக்கையில் பவண்டோ சாதாரணமாக சிறிய (தெருவோர) கடைகளில் கிடைக்க பார்த்தேன். நீங்கள் organized retail பெரிய கடைகளுக்கு பதிலாக சிறிய கடைகளில் try செய்தீர்களா?
@Election Karthick: தயவுசெய்து பெங்களூரில் எங்கே பவண்டோ பார்த்தீர்கள் என்று தெரிவிக்கவும்.
நீக்குநான் இன்னும் மதுரையிலிருந்து import செய்து கொண்டிருக்கிறேன்
நான் பார்த்த வரையில் எந்த ஒரு சிறிய அல்லது பெரிய கடைகளிலும் பவண்டோ இருந்ததில்லை! நீங்கள் பெங்களூரில் பவண்டோ கிடைக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை அளித்ததும், பாருங்கள் பெரியார் எப்படி பதறிப் போய் விட்டார்! :D
நீக்குஎன் சகோதரன் பெங்களூரில் பணியில் உள்ளான். அவனிடம் கிடைக்கும் இடங்கள் பற்றி கேட்டிருக்கிறேன். Hosur ரோடு என்பது வரை ஞாபகம் உள்ளது. துல்லியமாக ஏரியா ஞாபகம் இல்லை (மன்னிக்கவும் பெங்களுற்கு அதிகம் வந்தது இல்லை). இந்த லிங்கை பார்க்க: http://blogging4timepass.blogspot.com/2011/05/bovonto-in-bangalore.html
நீக்கு@கா.சோ. சூப்பர்.. தற்போதைய மதுரை பற்றிய மிகச்சரியான பதிவு. முக்கியமாக ரயில்வே ஸ்டேஷன் காட்சிகள் தத்ரூபம்..
பதிலளிநீக்குMissing items :)
- கோனார் கடை முட்டை தோசை + சுக்கா வறுவல்
- பண்டாபிஸ் / பிரேம விலாஸ் கோதுமை ஹல்வா
- அம்சவல்லி ஹோட்டல் பிரியாணி
- ராஜேஸ்வரி / அசோக் ஹோட்டல் புரோட்டா
- கோபு ஐயங்கார் பாடம் ஹல்வா
- விளக்குத்தூண் ஜில் ஜில் ஜிகர்தண்டா
- ஜெயராம் பேக்கரி கேக்
இன்னும் list போகும்.. இத்தோட நிறுத்திக்கிறேன்
நன்றி பெரியார்! இரண்டு நாள் அனுபவங்களை மட்டுமே எழுதியுள்ளேன்! நீங்கள் போட்ட லிஸ்டை எல்லாம் இரண்டே நாட்களில் சாப்பிட்டு, அனுபவித்து எழுத வேண்டுமானால் ஹாஸ்பிடல் பெட்டில் இருந்துதான் எழுத முடியும்! :D ஓவராக சாப்பிட்டால் மைசூர் பாக்குக்கே எனக்கு வயிற்றுப் போக்கு 'ஆய்' விடும்! ;)
நீக்குமதுரை, மதுரை தான். நம்ம ஊர போல வருமா?
பதிலளிநீக்குநல்லா எழுதியிருக்கீங்க கார்த்திக்
ஆமாங்க தியானா! ஒரு தடவையாவது அங்கே சில வாரங்கள் தங்கி இருந்து அனைத்தையும் பொறுமையாக ரசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது! இனி அது நிறைவேறுமா என்றுதான் தெரியவில்லை! வருகைக்கு நன்றி!
நீக்குஒரே நாளில் 1000 ஹிட்ஸைத் தாண்டிய சினிமா தவிர்த்த ஒரே பதிவு இதுதான் என்று நினைக்கிறேன்! தி பவர் ஆஃப் மதுரை! நன்றி நண்பர்களே! :)
பதிலளிநீக்குகோர்வையான, தெளிவான ஆங்காங்கே வசணநடையில் உங்கள் பானியில் “ஒரு பயனத்தின் பதிவு” :)
பதிலளிநீக்குகாமிக்ஸ் ஸ்டைல் பேரா? நடத்துங்க! ;)
நீக்குசொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா! விட்டு போன பாக்கியை நான் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குமினாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பழைய புத்தக கடைகள் அங்கே 5 ருபாய் 10 ருபாய்க்கு கிடைத்த
பழைய காமிக்ஸ்கள்! பூவிலி மற்றும் பொன்னி காமிக்ஸ் பிறப்பிடம்! மேரி மாதா சர்ச் அருகில் 35 ருபாய்க்கு சிக்கன் பிரியானி! மேல மாசி வீதி லஸ்ஸி கடை! Ak Ahamed அருகிள் காதல் படத்தில் வரும் ஜில் ஜில் ஜிகர்தன்டா! அம்மா மெஸ்! கோரிப்பாளையம் தலப்பாக்கட்டு பிரியாணி! மாப்பிள்ளை விநாயகர்
தியேட்டர் 3 ருபாய் டிக்கெட்(A/c) ! முனியான்டி விலாஸ் ! பறவை முனியம்மா! நடிகர் வடிவேல்.
லிஸ்டுக்கு நன்றி அஸ்லாம்! :) கடந்த ஆண்டு மதுரை வந்த போது பழைய புத்தகக் கடைகளை மேய்ந்தேன்! மருந்துக்கு கூட காமிக்ஸ் கிடைக்கவில்லை! :(
நீக்குSir, If you can't get BOVONTO in Bangalore, please try at Hosur - even at bust stand itself you can get it..!
பதிலளிநீக்குசார் எல்லாம் வேண்டாமே அருண்! :) தகவலுக்கு மிக்க நன்றி! ஓசூர் சென்றால் தேடிப் பார்க்கிறேன்!
நீக்கு//சார், கொஞ்சம் வண்டியை நிப்பாட்டுறீங்களா? பையனுக்கு அவசரமா வாந்தி வருதாம்... நாங்க இங்கேயே இறங்கிக்கறோம்!
பதிலளிநீக்குகிரீச்ச்ச்ச்...//
Super Technique :D
:)
நீக்குஒவ்வொரு வரியிலும் சுவாரஸ்யம்! சாதாரண விசயத்தைக்கூட சுவைபடச் சொல்வதில் டிஸ்டிங்ஸன் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் கார்த்திக்! :)
பதிலளிநீக்குநன்றி விஜய்!!!
நீக்கு