கும்கி - காதலெனும் மதயானை!

'காட்டு யானைகள் தாக்கி பயிர்கள் நாசம், இருவர் உடல் நசுங்கி சாவு!' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல!!! சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே! ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன்  குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது!

பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு! மாணிக்கம் என்ற யானையுடன் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து, அதை கிட்டத்தட்ட சகோதரனாக பாவிக்கும் 'பொம்மன்' என்ற பாகன் வேடத்தில் எளிதாக மனம் கவர்கிறார். முகத்தில் பிரபுவின் சாயல் இருந்தாலும், நடிப்பில் அவரையோ, தாத்தா சிவாஜியையோ  பின்பற்றாமல், இதர புதிய தலைமுறை நடிகர்களைப் போலவே இவரும் அதிகம் அலட்டாமல் அடக்கி வாசிக்கிறார். கோபத்தில் புடைக்கும் மூக்கும், கட்டான உடலும் இருப்பதால் இவரை விரைவில் ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தில் காணும் சாத்தியக்கூறுகள் அதிகம்!

ஆதிகாடு என்ற மலையோர குக்கிராமம், விவசாயம் செய்து இயற்கையோடு இணைந்து வாழும் மலைவாசி மக்கள். இருநூறு வருட பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் ஊர்த்தலைவர் மாத்தையன் (நல்ல நடிப்பு!), அவருக்கு ஒரு அழகிய பெண் - அல்லி (லக்ஷ்மி மேனன்)!. அவள், தோழிகளுடன் வயலில் இருக்கும்போது, இப்பதிவின் முதல்வரியில் குறிப்பிட்டது போலவே நடக்கிறது. ஒவ்வொரு அறுவடையின் போதும் ஊருக்குள் நுழையும் கொம்பன் என்ற அந்த வெறிகொண்ட காட்டுயானை பலரை மிதித்தும், தந்தங்களால் குத்தியும் கொல்லும் அந்த ஆரம்பக் காட்சி - செய்திக்கும், நடப்பதை நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை யானை மிதித்தாற் போல் மனதில் அழுத்தமாய் பதிக்கிறது!

அரசாங்க மற்றும் வனத்துறை அதிகாரிகள், சலுகைகளுடன் மாற்றுக்குடியிருப்பு அமைத்துத் தருவதாகச் சொல்லி , அங்கு இடம்பெயருமாறு ஆலோசனை கூறுகிறார்கள். அதனை மறுக்கும் மாத்தையன், கொம்பனை அடக்க ஒரு கும்கி யானையை பணியமர்த்த முடிவு செய்கிறார்.

வளர்ப்பு யானை மாணிக்கத்தை படங்களில் நடிக்க வைப்பதிலும், திருமண ஊர்வலங்களில் அலங்கரித்து அழைத்துச் செல்வதிலும் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், அதற்கு தீனி போட்டு, கூடவே ஊர் சுற்றும் குடிகாரத் தாய் மாமன் - கொத்தல்லியையும் (தம்பி ராமைய்யா), இன்னொரு எடுபிடி - உண்டியலையும் (பாஸ் என்கிற பாஸ்கரனில் டுடோரியல் ஸ்டூடன்ட்டாக நடித்தவர்) காப்பாற்றும் பெரிய பொறுப்பு பொம்மனுக்கு (விக்ரம்)! இவரின் நண்பர் ஒரு யானை கான்ட்ராக்டர், ஆதிகாட்டுக்கு ஒரு கும்கி யானையை அனுப்புவதாகச் சொல்லி முன்பணமும் வாங்கிக் கொள்கிறார். ஆனால், கும்கியை அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதால் நண்பருக்கு உதவும் நோக்கில் பொம்மன், மாணிக்கம் மற்றும் சகாக்களோடு  ஆதிகாட்டுக்கு செல்ல முன்வருகிறார்! இரண்டு நாட்கள் மட்டும் சமாளித்து விட்டால், வேறு கும்கியை அனுப்பி வைத்து இவர்கள் திரும்பலாம் என்ற திட்டத்துடன்!

இது தெரியாத ஆதிகாட்டு மலைவாசிகள், கொம்பனை அடக்க வந்தவர்கள் என்பதால் இவர்களை காக்கும் கடவுளாக எண்ணி ராஜ மரியாதை தருகிறார்கள். பொம்மனுக்கோ தமிழ் சினிமா வழக்கப்படி அல்லியை கண்டவுடனேயே காதல் தலைக்கேறி விடுகிறது. இரண்டு நாளுக்கு நடிக்க வந்தவர், அறுவடை முடியும்வரை அங்கேயே தங்கியிருக்க முடிவெடுக்கிறார்.

ஆனால், கும்கி பயிற்சி பெறாத அப்பாவி நாட்டுயானை மாணிக்கத்தால், காட்டுயானை கொம்பனை அடக்க முடியுமா?! இருநூறு வருட பாரம்பரியத்தை உடைத்து, மாத்தையன் வெளியிலிருந்து வந்த ஒருவருக்கு பெண் கொடுப்பாரா?! அல்லது தன் மகள் மற்றும் பொம்மன் மேல் அவர் வைத்த நம்பிக்கைக்கு துரோகமிழைத்து, பொம்மனால் அல்லியை திருமணம் செய்ய முடியுமா? தன்னை கடவுளாக நினைத்து வணங்கும் அப்பாவி மக்களை காட்டு யானையிடம் இருந்து பொம்மனால் காப்பாற்ற முடியுமா?! அதுவும் எந்த ஒரு உயிர் இழப்பும் இன்றி பிரபு சாலமனுடைய படத்தில் இத்தனை சங்கதிகளும் நடக்குமா???!!! :)

மனிதர் லொகேஷனை எங்குதான் தேடிப்பிடிப்பாரோ, ஒவ்வொரு ஃப்ரேமும் பச்சைப் பசேல்! ஏதோ நேஷனல் ஜியோகிராஃபிக் சானல் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு. அல்லியாக லக்ஷ்மி மேனன், அழகிய மலைக்கிராம பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். நடிக்கவும் செய்கிறார், ஆனால் ரொம்பவே சின்னப்பெண் போலத் தெரிகிறார்.

பொம்மன், அல்லி இடையேயான காதல் அழகு, ஆனால் கொஞ்சம் தேவைக்கும் அதிகமான நேரத்தை விழுங்கி விடுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் 'சீக்கிரம் கொம்பனை வரச் சொல்லுங்கப்பா' என்று சலிப்பு வந்து விடுகிறது. "சொல்லிட்டாளே" பாடலுக்கான காதலைச் சொல்லும் அரை நிமிடக் காட்சி காதலின் உச்சம் - காதல் செய்பவர்கள், செய்தவர்கள் புல்லரிக்கப் போவது நிச்சயம் :) அங்கு மட்டும் விக்ரமிடம் லேசாக சிவாஜி எட்டிப் பார்க்கிறார்! இமான் இசையில் அனைத்து பாடல்களும் அட்டகாசம் - குறிப்பாக படத்தில் பார்க்கும் போது!

மைனாவில் வருவது போலவே இதிலும் கேரளாவின் ஏதோ ஒரு சிறு நகரின், கடைத்தெரு மற்றும் பேருந்து நிலையத்தில் வைத்து சில காட்சிகள் வருகின்றன! பொம்மனின் தாய்மாமன் கொத்தல்லியாக  வித்தியாசமான கெட்டப்பில் தம்பி ராமைய்யா! இவர் மைன்ட் வாய்ஸில் புலம்பும் போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது. அவரை கும்கி பயிற்சியில் தேர்ந்த குரு என நினைத்து மலைவாசிகள் பெருமையாக பேசுவதும், அதற்கு அவர் உள்ளுக்குள்ளேயே புலம்புவதும் என சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் மனிதர்!

ஆனால் காலம் காலமாய் காட்டிலேயே வாழும் மக்களுக்கு கும்கி எது, சாதாரண யானை எது என்ற வித்தியாசம் தெரியாமல் இருக்குமா என்ற கேள்வி சற்று உறுத்தவே செய்கிறது. கும்கி பயிற்சியாளரை வைத்து மாணிக்கத்திற்கு 'ஒரு நாள்' பயிற்சி அளிக்கும் இடம் சுவாரசியம். "பார்கே பார்கே" எனக் கத்தி, அதன் காது மடல்களை அழுத்தினால் யானை பயமின்றி முன்னே செல்லும் என பல சுவாரசியத் தகவல்கள்.

இருந்தாலும் பயிற்சி பெற்றவுடனேயே அது கும்கியாக மாறி கொம்பனை துவம்சம் செய்வது போல் காட்டாமல் நம்பும் விதத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்தது இயக்குனரின் புத்திசாலித்தனம். அதே போல கொம்பனின் அறிமுகக் காட்சியையும், கொம்பனோடு மாணிக்கம் மோதும் இறுதிக்காட்சியையும் இரவு நேரத்தில் அல்லது மங்கலான வெளிச்சத்தில் படமாக்கியிருப்பதும் அவர் சாமர்த்தியம். கிராபிக்ஸ் யானை காட்சிகள் உறுத்தாமல் இருக்க இந்த மங்கலான ஒளியமைப்பு மிகவும் ஒத்துழைத்திருக்கிறது! இந்தப் படத்தின் க்ளைமேக்ஸை பலவிதமாக எடுத்திருக்க முடியும். ஆனால் எளிதில் யூகிக்க முடியாத ஒரு க்ளைமேக்ஸை தேர்ந்தெடுத்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார். படத்தின் முக்கியத் திருப்பங்களைச்  சொல்லி படத்தின் சுவாரசியத்தை கெடுப்பதாய் இல்லை. :)

கும்கி - சூப்பர்! :)

கருத்துகள்

  1. //படத்தின் முக்கியத் திருப்பங்களைச் சொல்லி படத்தின் சுவாரசியத்தை கெடுப்பதாய் இல்லை. :)//
    that's good

    நல்ல இருக்கும்னு சொல்லுரீங்க ..... பத்துட்டு வந்துடுறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சப்போஸ் படம் உங்களுக்கு பிடிக்கலைன்னா பாண்டிச்சேரி கார்த்திகேயன் மாதிரி டிக்கெட் பணம் ரீஃபண்ட் கேட்கக் கூடாது! ;)

      நீக்கு
    2. எனக்கு தரவேண்டிய ரீஃபண்ட்லதான் நீங்க இந்த படத்த பார்த்திங்கனு தெரியும் :)

      நீங்க படம் நல்லா இல்லன்னு சொல்லியிருந்தாலும் நான் பார்க்கறதா ஏற்கனவே முடிவுபண்ணிட்டேன். வீட்ல வரமாட்டேனு சொல்லிட்டாங்க. அதனால தனியாதான் போறேன். :)

      நீக்கு
    3. படத்தோட க்ளைமேக்ஸை மாத்தப் போறதா பேச்சு அடி படுது!

      நீக்கு
  2. கார்த்திக்,

    நீங்க ஏன் ஆனந்தவிகடன் திரைவிமர்சனம் பகுதிக்கு பார்ட் டைமில் வேலைக்குச் சேர்ந்து நாலு காசு பார்க்ககூடாது?!
    விமர்சனத்தில் அப்படியொரு நேர்த்தி!

    எழில்கொஞ்சும் இயற்கையை அழகாகக் காட்டும் இதுபோன்ற படங்களை தியேட்டரில் பார்த்தால் மட்டுமே முழுமையாக ரசிக்க முடியும்.

    நேர்த்தியான பதிவுக்கு நிறைவான பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்க வேற! அல்லியை செல்வியா மாத்திட்டேன், இதைப் போய் நேர்த்தின்னு சொல்லறீங்க! விகடன்ல விமர்சனம் எழுதணும்னா அவங்க விமர்சன டெம்ப்ளேட்டை யூஸ் பண்ணியாகணுமே?! ;) இருந்தாலும் உங்கள் பாராட்டுகளை குச்சி நீட்டி பெற்றுக் கொள்கிறேன்! ;)

      நீக்கு
    2. மிக அருமையான விமர்சனம். கலக்கல் கார்த்திக். அந்த குச்சி மேட்டர் இன்னுமா? ஈரோடு குச்சி தானே? முடியல LOL & ROFL

      நீக்கு
    3. முதல் முறையாக பின்னூட்டமிடுகிறீர்கள், பாராட்டுகளுக்கு நன்றி புத்தக ப்ரியன்! ஆமாம், அதே குச்சிதான் :) லயன் வலைப்பூவில், விஜயின் மறக்க முடியாத பின்னூட்டமல்லவா அது?! :) :)

      நீக்கு
    4. முதல் முறை பதிவிற்க்கு என ஏதேனும் ட்ரீட் அல்லது கிப்ட் உண்டுங்களா? :) இருந்ததுன்னா அதே குச்சிய இரவல் வாங்கி தூரத்துல இருந்தே வாங்கிகிடலாம்னு ஒரு விண்ணப்பம் :)

      நீக்கு
    5. விருதுகள் வழங்கிட்டிருந்தவர் தற்காலிகமா தன்னோட பணிகளை நிறுத்திவச்சிருப்பதால், குச்சி இப்போ ஃப்ரீயாதான் இருக்கு. இரவலா தருவதில் எனக்கொன்றும் பிரட்சினை இல்லை. ஆனால், விருதுகள் அறிவிக்கப்பட்டால் உடனே குச்சியைக் கொடுத்துடனும்; நிறைய வாங்கனுமோல்லியோ?!! :)

      நீக்கு
    6. ஓ.... லயன் blog விருது படலம் part-2 இங்கே தொடர்கிறதா? :) நடத்துங்க.. நடத்துங்க.. :)

      நீக்கு
    7. @புத்தக ப்ரியன்: இத்தனை நாள் பதிவுகளை ஒளிஞ்சு நின்னு படிச்சுட்டு கருத்து சொல்லாம போனதால, அதே குச்சி மூலம் உங்கள் இரண்டு கைகளிலும் 'லைட்டாக' இரண்டு அடிகள் பரிசாக வழங்கப்படும்! ;) :D

      நீக்கு
    8. @Erode Vijay:
      //விருதுகள் வழங்கிட்டிருந்தவர் தற்காலிகமா தன்னோட பணிகளை நிறுத்திவச்சிருப்பதால்//
      என்னாது? தற்காலிகமாகவா?!!!! :D அப்ப மறுபடியும் விருதுகள் வழங்கப்படுமா?! :)

      நீக்கு
    9. @ கார்த்திக்: எனக்கு நிறைய(????) கூச்ச சுபாவம். அதான் :) மேலும் எனக்கு விளம்பரம் அவ்வளவாக (ப்ளீஸ் நோட் அவ்வளவாக) பிடிக்காது என்பதும் ஒரு காரணம் :)... விருதுகள் தொடருமா? ஹை ஜாலி!!! ஒரு விண்ணப்பம், போன தடவ நான் லாஸ்ட் place தான். இப்போவாச்சும் first prize கிடைக்குமா? உரியவர்கள் ஆவன செய்யவும் :)

      நீக்கு
    10. ஹலோ மிஸ்டர் பு.பி, திடீர்னு எட்டிப்பார்த்து ரெண்டு கமெண்ட்டுகளைப் போட்டுட்டு உடனே கார்த்திக்கிடம் முதலிடத்து சிபாரிசு கேட்குறது கொஞ்சம்கூட நல்லாயில்லை. நாங்கல்லாம் மாச கணக்குல பின்னூட்டங்களைப் போட்டுட்டு ஒரு மாமாங்கம் காத்திருந்த பிறகுதான் முதலிடம் வாங்கியிருக்கோம்.
      வேணுமின்னா, மூன்றாவது இடத்துக்கு சிபாரிசு கேளுங்க; கோயமுத்தூரின் அப்பாவி மனுசரிடம் குச்சி மிட்டாய் கொடுத்து ஈசியா ஏமாத்திடலாம்.

      நீக்கு
    11. ஏதோ கார்த்திக் தான் சிபாரிசு பண்ணி அவார்ட் தருவது போல சொல்றிங்க ஈரோடு காரரே??? :) ஒரு புதுமுகத்தை (நான் என்னய சொன்னேன்) உற்சாகப்படுத்தி வரவேற்கணும்கறது நம்ம தமிழ் பண்பாடு இல்லையா? அதான் ஒரு ஆதங்கத்துல சொன்னேன். :)

      நீக்கு
    12. கோவை இரும்பு கையாரு ரொம்ப நீளமாஆஆஆஆ எழுதிட்டு அவருக்கு ஓகே ஆ இல்லையான்னு சொல்லாமலே விட்டுடுவாரு. கரெக்ட் ஆ? :)

      நீக்கு
    13. அதானே?! தணிக்கை கமிட்டி மெம்பர் கிட்ட அவார்ட் வழங்குவோர் சங்கம் மெயின் மெம்பர் பத்தி கேட்டா எப்படி?!!! ;)

      நீக்கு
  3. நானும் பாத்துடேங்க.
    படம் சூப்பர் ங்க இறுதிக்காட்சி தவிர.
    //அதுவும் எந்த ஒரு உயிர் இழப்பும் இன்றி பிரபு சாலமனுடைய படத்தில் இத்தனை சங்கதிகளும் நடக்குமா???!!! :)//


    அதே தானுங்க.
    வேற மாதிரி முடிவு வச்சிருக்கலாம்.
    அப்புறம் பொண்ணு பேரு அல்லினு நெனைகிறேங்க.
    எதுக்கும் ஒரு தடவை சரி பாத்துக்கங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்னவோ இப்படி க்ளைமேக்ஸ் வச்சதுதான் நம்புற மாதிரி இருந்துச்சு! :)

      //அப்புறம் பொண்ணு பேரு அல்லினு நெனைகிறேங்க.//
      அல்லியேதான்! நன்றி கிருஷ்ணா! :)

      நீக்கு
  4. @Karthik:

    சூப்பர் பாத்துடலாம்.

    கார்த்திக் டச்

    //தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது!//

    //பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் //

    யானையின் வழி தடத்தை மறித்து நாம் ஆக்கிரமிக்கும் போது மட்டுமே அது நம்மை தாக்கும். அதற்க்கு உணவு கொடுக்கும் காட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டால் நம் சமயலறைக்கு அது வரத்தான் செய்யும்.

    @Krishna ://அப்புறம் பொண்ணு பேரு அல்லினு நெனைகிறேங்க.//
    லக்ஷ்மி மேனன் தாங்க. சுந்தர பாண்டிய புரத்தில் நடித்ததே அந்த பொண்ணு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ம்ம்... நானும் நியூஸ் படிச்சேன்! குட்டியானை சமையலறையில பூந்து சாம்பார் சாதம் சாப்ட்டிருக்கு! இது எங்க போய் முடியுமோ?! :)

      நீக்கு
  5. நல்ல விமர்சனம். படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறீர்கள் ...

    நிற்க...

    கதையை விமர்சனத்தில் சொல்லிவிட்டாலும், ஜீவ நாடியான டிவிஸ்டுகளைச் சொல்லாமல் விட்டது மிகவும் வரவேற்புக்கு உரியது.


    பிரபு சாலமன் ஆங்கிலப் படங்களைப் பார்த்து சூடு போடாமல் சுற்றி நடக்கும் விஷயங்களை படமாக எடுக்க விழைந்ததின் விழைவே மைனாவும் கும்கியும்..

    கும்கி போல.. நீ.எ.பொ படத்தின் விமர்சனத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.. (பாப்போம்.. சமந்தா பத்தி பத்தி பத்தியா எழுதுறீங்களான்னு ;) )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமந்தா பத்தி பத்தி பத்தியா எழுத முடியாது - பத்தியமாதான் எழுத முடியும் அவ்ளோ ஸ்லிம்! :) :)

      நீக்கு
  6. Hey karthik nice review, you should have become a reporter :) the way you described the review is excellent :)

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான விமர்சனம். எங்குமே டிக்கெட் கிடைக்காமல் பரங்கிமலை ஜோதியில் பார்க்க வேண்டியதாயிற்று. இரண்டாம் பாதியில் கொம்பனின் வருகைக்கும் சொய்ங் பாடலுக்கும் தியேட்டரில் விசில் பறக்கிறது. கர்நாடகாவில் உள்ள jog falls ஐ இதைவிட சிறப்பாக கேமிராவில் படம் பிடிக்க இயலுமா எனத் தெரியவில்லை. கேமிராவிற்காக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரங்கிமலை ஜோதி யா? சிவ சிவ!!!! என்ன படம் பார்த்தீர்கள் நண்பரே அதுவும் அந்த அரங்கில்? :)

      நீக்கு
    2. @SIV:
      பன மரத்தடியில் பசும்பால் குடிச்சாலும் இப்படிதான் சந்தேகமா பாப்பாங்க! கண்டுக்காதீங்க!!! :)

      நீக்கு
    3. அடங்கப்பா!!!! அகில உலகமும் பிரசித்தம் போல உ(ந)மது பரங்கிமலை திரைஅரங்கு :) கார்த்திக்கும் அங்கிருந்து தலைல துண்டு போட்டு வந்து பார்த்து இருப்பாரோ? யார நம்புறதுன்னே தெரில்ல!!!!! :)

      நீக்கு
    4. நோ நோ, முகத்தை மறைச்சு எந்த காரியமும் பண்ணறது கிடையாது! ;) ஆனா, மதுரையில ஜோதி மாதிரி வேற நெறைய தியேட்டர் இருந்துச்சு!!! :D

      @SIV:
      //கர்நாடகாவில் உள்ள jog falls ஐ இதைவிட சிறப்பாக கேமிராவில் படம் பிடிக்க இயலுமா எனத் தெரியவில்லை//
      very true!

      நீக்கு
  8. கும்கி தான் நண்பரே,... நீங்கள் நினைக்கும்(!!) சிவ சிவ படங்கள் எதையும் தற்போது அவர்கள் திரையிடுவதில்லை.
    கோவில் திருவிழாவில் பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள் மூலம் dts அமைத்திருக்கும் தியேட்டர் இதுதான் என நினைக்கிறேன். காதில் ஒரே பிளட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒலிபெருக்கிகள் மூலம் dts அமைத்திருக்கும் தியேட்டர் இதுதான் என நினைக்கிறேன்//
      இது வேறையா!!! :) :)

      நீக்கு
    2. இதில் விந்தை ஒன்றும் இல்லையே.அவர்கள் முன்னர் திரையிட்ட படத்திற்கு ஒலி தேவையே இல்லை. சொல்ல போனால் mute'ல் மட்டுமே பார்த்தல் சால சிறந்தது :)

      நீக்கு
    3. ஒளியும், ஒலியும் இருந்ததால்தானே நன்றாக இருக்கும்!!! :) ஆனால் லோ பட்ஜெட் சிவ சிவ மூவி என்றால் மியூசிக் சவ சவ என்று கண்றாவியாக இருக்கும்! ;)

      நீக்கு
    4. உங்கள் அனுபவத்திற்கு முன்னர் நாங்கள் எம்மாத்திரம்? தலை வணங்குகிறேன் :) :D

      நீக்கு
  9. ஏதேது? நான் சென்னை யில் இருந்து வந்த பின்னர் அந்த திரைஅரங்கில் தலைகீழ் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது போல? :) இதுல்லாம் நல்லா இல்லையே :)

    பதிலளிநீக்கு
  10. சாரு படம் நல்ல இல்லை என்று சொன்ன போதே நினைத்தேன் நன்றாக இருக்கும் என்று பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) :) சில விமர்சகர்கள் சொல்வது போல் படமொன்றும் மோசமில்லை! தாராளமாகப் பார்க்கலாம்!!

      நீக்கு
  11. //கிராபிக்ஸ் யானை காட்சிகள் உறுத்தாமல் இருக்க இந்த மங்கலான ஒளியமைப்பு மிகவும் ஒத்துழைத்திருக்கிறது! //
    என் நினைவுக்கு வருவது JP-2. முதல் பாகத்தில் அற்புதமான கிராபிக்சில் உலகை கவர்ந்து இரண்டாம் பாகத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்து, முக்கால்வாசி படம் மங்கலான ஒளியில் எடுத்து என் வயிற்றேரிச்ச்சலை வாங்கி கட்டிக்கொண்ட மறக்கமுடியாத படம். அது பழைய கதை.
    இதை போல் COVERUP செய்வது பல நேரங்களில் மிக எரிச்சலை ஏற்படுத்தும் சமாச்சாரம்.

    நான் இன்னமும் படம் பார்கவில்லை கார்த்திக். நீங்கள் coverup செய்யும் கிளைமாக்ஸ் ய் யூகிப்பதில் அதிக சிரமம் இருப்பதாக தோன்றவில்லை. காலம் காலமாக சின்னப்பதேவர் காலமாக இதுதானே தமிழ் சினிமாவில் நடக்கும் ??
    கொம்பன் ஆண் யானை என்றால் மாணிக்கம் பெண் யானையா ??? நண்பர்கள் கவனிக்க: நான் கதையின் முடிவை சொல்லவில்லை. ; )

    பதிலளிநீக்கு
  12. @விஸ்கி-சுஸ்கி: //COVERUP செய்வது பல நேரங்களில் மிக எரிச்சலை ஏற்படுத்தும் சமாச்சாரம்.//
    உண்மைதான்! CG-யில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னமும் ரசித்திருக்கலாம்! Climax உங்கள் யூகம் சரிதான், கூடுதலாக இன்னும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொம்பன் ஆண் யானை என்றால் மாணிக்கம் பெண் யானையா//
      Nope, விட்டா ரெண்டுத்துக்கும் கல்யாணம் கட்டி வச்சுருவீங்க போல?! :)

      நீக்கு
    2. சும்மா காமெடிக்காக போட்ட பிட் அது புத்தக பிரியன் கார்த்திக் . the elephant in the picture is a tusker. No chance for manikkam being female . உங்களோட பதிலா பாத்த ஏதோ யானைகளுக்குள்ளே loves நடப்பது போல உள்ளதே ?? பிரபு சாலமனின் மைனாவுக்காக ஒரு தடவை ரிஸ்க் எடுக்கலாம் ...தப்பில்லை ....
      //"பார்கே பார்கே" எனக் கத்தி, அதன் காது மடல்களை அழுத்தினால் யானை பயமின்றி முன்னே செல்லும் என பல சுவாரசியத் தகவல்கள்.//
      எனக்கு ஏனோ "நீ என்ன புலியா?? " டையலாக் இந்த நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது ... யானை அருகே செல்லும்முன் நண்பர்களே ஜாக்கிரதை !!!11

      நீக்கு
    3. :) :) நீ என்ன புலியான்னு ஆடுகிட்ட கேட்டா கூடா உசுரோட தப்பிச்சுரலாம்! 'நீ என்ன டைனோசரான்னு' யானை கிட்ட கேட்டு ரிஸ்க் எடுக்க விரும்பல! :)

      நீக்கு
  13. நேற்று தான் கும்கி பார்த்தேன். உங்கள் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன். கிளைமாக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் லக்கி! என் மனைவி உட்பட பலபேருக்கு இந்த க்ளைமேக்ஸ் பிடிக்கவில்லை! ஆனால் 200 வருட பாரம்பரியம் என்று எப்போதும் சொல்லித் திரியும், இன உணர்வு கொண்ட ஒரு ஊர்த்தலைவரிடம் வேறு எதை எதிர்பார்த்திட முடியும்! அவருக்கு மனிதத்தை விட பாரம்பரியம் பெரிதாக தெரிந்ததாலேயே அப்படியான ஒரு முடிவு!!! அதற்காக அவரின் முடிவு எனக்கு பிடித்தது என்ற அர்த்தம் அல்ல! இப்படி ஒரு எதிர்பாராத க்ளைமேக்ஸ் வைத்தது படத்திற்கு ஒரு நம்பகத் தன்மையை அளித்ததாக எனக்குத் தோன்றியது அவ்வளவே! :) ஆனால், அநியாயத்திற்கு அனைவரையும் போட்டுத் தள்ளியது வருத்தமாகத்தான் இருந்தது!

      பதிவிட்டு ஒரு மாதம் கழிந்திருந்தாலும் உங்கள் கருத்துக்களை இங்கே வந்து பகிர்ந்ததிற்கு நன்றி நண்பா!!!

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia