என்னாச்சி?! தினமலர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோமோ?!

வெற்றிப் படங்களை (கமர்ஷியல் கோணத்தில் மட்டுமல்ல!), வித்தியாசமான முயற்சிகளை - தியேட்டரில் மட்டுமே பார்ப்பது என்ற ஒரு வறட்டுப் பிடிவாதத்தாலும், பெங்களூர் பக்கமே இந்தப் படம் வரக்காணோம் என்பதாலும் நேற்று திருப்பூர் வந்ததும் முதல் வேலையாக படம் எங்கே ஓடுகிறது என தினமலர் பேப்பரை சல்லடை போட்டுத் தேடினேன். படம் வெளியாகி நான்கு வெள்ளிகிழமைகள் கடந்துவிட்டதால் தூக்கி இருப்பர்களோ என்ற சந்தேகம் வேறு!

பேப்பரை குப்புறப்போட்டு மேய்ந்தும், எந்த சினிமா எங்கே ஓடுகிறது என்ற விவரம் மட்டும் சிக்கவில்லை. 'என்னாச்சி?! தினமலர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோமோ?!' என்ற சந்தேகத்தில் பக்க எண்களை சரிபார்த்தேன். அப்புறம்தான் தெரியவந்தது, தினமலரில் சினிமா விளம்பரங்களே வருவதில்லை என்று! 'நான் அப்படியே ஷாக்காயிட்டேன்!!!' :) அப்புறம் பக்கத்து வீட்டு தினத்தந்தி புண்ணியத்தில் கெஜலட்சுமி தியேட்டரில் ஓடுகிறது என்பது கெரசின் வாசனையுடன் தெரிய வந்தது!

பரவாயில்லை, பழைய தியேட்டர் என்றாலும் சமீபத்தில்தான் புதுப்பித்திருக்கிறார்கள் போல! ஒவ்வொரு ஃபேன் பக்கத்திலும் Airwick எல்லாம் மாட்டிவைத்து, புஸ் புஸ் என்று சென்ட் அடித்து கமகமவென்று வைத்திருக்கிறார்கள்! 'என்னாச்சி?! இவன் ஏன் படத்தப் பத்தி பேசாம வேற எதை எதையோ பேசறான்?!' என நீங்கள் பின் மண்டையைத் தடவி குழம்பும் முன்னர் மேட்டருக்கு வருகிறேன்! :) படத்தின் மொத்தக் கதையே இப்படி பின்மண்டையைத் திரும்பத் திரும்ப தடவுவதுதான்! :)

பிரேம் (விஜய் சேதுபதி), பாஜி என்ற பாலாஜி (ராஜ்குமார்), சரஸ் (விக்னேஷ்வரன்), பக்ஸ் என்ற பகவதி (பகவதி பெருமாள்) - இப்படி உங்கள் வாழ்விலும் நீங்கள் கடந்து வந்திருக்கக் கூடிய பழக்கமான முகங்களுடன் நான்கு நண்பர்கள். பிரேமுக்கு மார்ச் 28ம் தேதி திருமணம், 27ம் தேதி ரிசப்ஷன். ஆனால் 26ம் தேதி அவன் வாழ்க்கையில் டென்னிஸ் பால் வடிவில் கிரிக்கெட் விளையாடிவிடுகிறது! :)

பக்ஸின் பந்து வீச்சில், பாஜியின் மட்டையடியில், உயரப்பறக்கும் பந்தை பிடிக்க முயற்சிக்கும் பிரேம், செங்கல் தடுக்கி கீழே விழ, பின்மண்டையில் பலமாக அடிபட்டு விடுகிறது! அடிபட்டதில், 'தற்காலிக மறதி' வியாதிக்கு ஆளாகும் பிரேம், 'என்னாச்சி?!' எனத் தொடங்கி, தனக்கு எப்படி அடிபட்டது என்பதையே திரும்பத் திரும்ப நண்பர்களிடம் விவரிக்க ஆரம்பிக்கிறார்.

பிரேமுக்கு கடந்த ஒரு வருடத்தில் நடந்த எல்லாமும் மறந்து விடுகிறது, காதலித்து திருமணம் செய்யப்போகும் தனா என்ற தனலட்சுமி (காயத்ரி) உட்பட! பிரேமிடம் என்ன பேசினாலும் அடுத்த சில நொடிகளிலேயே அதை மறந்து விட்டு, மறுபடியும் பேசியதையே அவர் பேச, மற்ற மூன்று நண்பர்களும் தலையைப் பிய்த்துக்கொண்டு, டாக்டரிடம் ஓடுகிறார்கள்.

சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ அவருக்கு நினைவு திரும்பலாம் என டாக்டர் சொல்ல, பிரேமின் திருமணம் தடைபடக்கூடாது என நினைக்கும் நண்பர்கள், இந்த உண்மையை பிரேமின் குடும்பத்திடம் மறைத்துவிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து நடக்கும் குழப்பங்களை நண்பர்கள் எப்படி சமாளிக்கிறார்கள், பிரேமுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதே மீதி கதை!

ஒரு வரி (உண்மைக்!) கதையை வைத்துக்கொண்டு, புதிய முகங்களுடன், புகுந்து விளையாடி இருக்கிறார்கள்! ரகுவரன் 'I Know' என்ற ஒரே வசனத்தை, விதவிதமான பாணியில் பேசியது ஞாபகம் இருக்கிறதா?! ஆனால் விஜய் சேதுபதி 'என்னாச்சி' எனத் தொடங்கி, அதே வசனத்தை, அதே பாணியில் படம் முழுக்க பேசிக்கொண்டே இருந்தாலும் கொஞ்சமும் போரடிக்கவில்லை - அதுவே அவர் நடிப்பின் வெற்றி!

பக்ஸாக நடித்துள்ள பகவதி, முட்டைக் கண்களை உருட்டி, மேதாவித்தனமாக பேசும் ஒவ்வொரு காட்சியும் பட்டை கிளப்புகிறது. பாஜியாக நடித்துள்ள ராம்குமார் - பிரேமைக் கண்டு பயப்படுவதும், மொக்கை அட்வைஸ்கள் அள்ளிக் கொடுப்பதும் என ஜமாய்த்திருக்கிறார். அதே போல சரஸ் வேடத்தில் விக்னேஷ்வரன் கொஞ்சம் சீரியஸான ஆனால் யதார்த்தமான ஒரு நல்ல நண்பனை கண் முன் நிறுத்துகிறார்! தனாவாக நடித்துள்ள காயத்ரி, சொல்ல மறந்த கதை - ரதியை நினைவு படுத்தும் முகச் சாயலுடன் அழகாக இருக்கிறார்! கல்யாண மேடையில் கண் கலங்கி நிற்கும் இடத்தில் நன்றாக நடித்துள்ளார்.

பாடல்களே இல்லாமல், கிட்டத்தட்ட ஒரு நேரடி நிகழ்ச்சியைப் பார்ப்பது போல படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்! வழக்கமான சினிமா இலக்கணத்தை மீறி படம் எடுத்ததிற்கே அவரை பக்கம் பக்கமாக பாராட்டலாம்!  ஆனால், இது போன்ற வித்தியாச முயற்சிகளையும், Subtle ஆன நகைச்சுவையையும் ரசிக்கும் பக்குவம் பலருக்கு இன்னமும் வரவில்லை என்பதற்கு, சிரிக்காமல் உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த பல பக்கத்து சீட்டுக்காரர்களே சாட்சி!

படத்தின் பின்னணி இசையும், Promo பாடலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை! வசனங்களை புரிந்து கொள்வதற்கு தடையாக, நாடக பாணி பின்னணி இசை ரொம்பவே சோதிக்கிறது! ஒளிப்பதிவு குறும்படத்தை பார்க்கும் ஃபீலிங்கைத் தருகிறது! ஒரு மணிநேரத்தில் இடைவேளை வந்துவிட்டதே என மகிழ்ச்சியாக இருந்தால், இடைவேளைக்குப் பிறகு படம் இரண்டு மணிநேரம் மாங்கு மாங்கென்று ஓடுகிறது!

என்னதான் விஜய் அழகாக அதே டயலாகை பேசினாலும் எப்போது படம் முடியும் என்ற சலிப்பு இரண்டே மணி நேரத்தில் வந்து விட்டது. பாடல்கள், சண்டைக் காட்சிகள், தனி காமெடி ட்ராக்குகள் இல்லாத இந்தப் படம், நறுக்கென்று ஒன்றரை மணி நேரத்தில் முடிந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்த குறைகளை களைந்து, இன்னமும் வசனங்களில் கொஞ்சம் காமெடி சேர்த்திருந்தால் இதை விட பெரிய ஹிட் அடித்திருக்க வேண்டிய படம், ஹ்ம்ம்...

எது எப்படியோ, தமிழில் இது போன்ற படங்கள் வருவது எப்போதாவது நடக்கும் ஒரு அதிசயம். அதனால் மேற்சொன்ன குறைகளை கண்டு கொள்ளாமல் ஒரு தடவை பார்க்க முயற்சியுங்களேன்?! இது போன்ற படங்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவே, கமர்சியல் மொக்கைகளிடம் இருந்து நம்மை எதிர்காலத்திலாவது காப்பாற்றும்!!! :)

கருத்துகள்

  1. எனக்கும் நடுவுல கொஞ்சம் தூக்கம் வந்துருச்சு

    பதிலளிநீக்கு
  2. பஸ்ட் கமெண்ட் படிக்காம தான் போடுவோம்

    பதிலளிநீக்கு
  3. முழுசா படிச்சிபுட்டேன். விடிஞ்சாப்ல வாரேன். நெறய கேள்வி கேக்கோணும் உங்ககிட்ட, ஞாபகத்துல இருந்தா. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடிஞ்சிருச்சு! கேள்விகளை நீங்க கேக்குறீங்களா, இல்லை நான் கேட்கட்டுமா?! :D

      நீக்கு
  4. அந்த நாயகி சொல்ல மறந்த கதை பட ரதி மாதிரி தோன்றியது எனக்கு .உண்மையிலே முக்கால் வாசி படம் கதாநாயகி இல்லை என்பதே பெரிய சாதனை தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் நண்பா! ரதியேதான்!! :) குறிப்பாக, அவர் கல்யாண கோலத்தில் கண்கலங்க நிற்குமிடத்தில் அப்படியே ரதி போலவே தெரிந்தார்! :)

      நீக்கு
  5. நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்களில் நீர் வரச் சிரித்தேன்; காரணம் - இந்தப் படம்!

    கொஞ்சம் பிசகினாலும் 'சரியான மொக்கைப் படம்' என முத்திரை குத்திவிடும்படியான ஒரு கதைக்களத்தை கத்திமேல் நடக்கும் வித்தையாய் அழகாக செய்து முடித்திருக்கிறது மொத்த டீமும். நிச்சயம் hats-off செய்யலாம்!

    இடைவேளைவரை பெண்களையே திரையில் காட்டாமல் ( சில வினாடிகளே தலைகாட்டும் நர்சுகளைத் தவிர) ஒரு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பதும்; படம்முழுக்க நான்கு பேரை பயத்திலும் குழப்பத்திலும் தவிக்கவிட்டு நம்மைச் சிரிக்க வைத்திருப்பதும்; வழக்கமான தமிழ்படத்திற்கான வரையறைகளை (பாடல்கள், சண்டைகள், அரைகுறை ஆடையில் ஹீரோயின்கள்,  பஞ்ச் டயலாக்ஸ், பகட்டான காஸ்டியூம்கள், ஸ்டார் வேல்யூ நடிகர்கள்) தூர வீசிவிட்டு திரைக்கதையை மட்டும் ஆயுதமாக்கி மொத்தப் படத்தையும் நகர்த்தியிருப்பதுமாய் -  நிறையவே வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள்.

    மெதுவாக நகர்கிறது என்ற குறையைப் பொருத்துக் கொண்டு, எதிர்பார்ப்பின்றி படம் பார்க்க அமர்ந்தால் சற்று நிறையவே சிரிக்க வைக்கும்.

    நான் சொல்வது சரிதானே கார்த்திக்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கிட்டீங்க விஜய்! :) ஒரு தேர்ந்த விமர்சகரின் பார்வை உங்கள் பின்னூட்டத்தில்! நீங்கள் ஏன் ஒரு வலைப்பூவை தொடங்கக் கூடாது?!!

      நீக்கு
    2. //நீங்கள் ஏன் ஒரு வலைப்பூவை தொடங்கக் கூடாது?!!//
      இதற்கு எனது ஓட்டும் உண்டு

      நீக்கு
    3. அப்படிதான் கார்த்திக் யாரையும் விடக்கூடாது உள்ள இழுக்கணும்.
      ஆனா அவர் சிக்கமாட்டார்.
      உங்களால் அவர வலைபூ ஆரம்பிக்க வைக்க முடியாது..:)

      நீக்கு
    4. @கிருஷ்ணா:
      அவர் எழுத்துக்களை இன்னும் கொஞ்சம் புகழ்ந்து ஏத்தி விட்டோம்னா சீக்கிரமே வலையில சிக்கிருவார்! அப்புறமா அவரை கண்டமேனிக்கு ஏத்தி விட்டு, NBS பத்தி ஒரு காட்டமான விமர்சனப் பதிவு போட வச்சு, பிரச்சினையில மாட்டி விட்டுரலாம்! ஏதோ நம்மால முடிஞ்சா சேவை! :) :) :)

      @விஜய்:
      ஸ்டாலின் & கிருஷ்ணா ரெண்டு பேருமே சொல்லிட்டாங்க. உங்கள் நகைச்சுவை எழுத்துக்களைப் படிக்க ஏங்கிட்டு இருக்கோம், சீக்கிரமா ப்ளாக் ஆரம்பிங்க! :)

      நீக்கு
    5. ஹா!ஹா!ஹா!

      வலைப்பூ, வலைக்காய், வலைப்பிஞ்சு, வலைப்பழம், வலைக்கிளை, வலைத்தண்டு, வலை இலை, வலைவேர் - போன்ற எதையும் ஆரம்பிக்கும் எண்ணம் துளியும் கிடையாது எனக்கு!

      உங்க வலையில் நான் சிக்கமாட்டேன். ஆளை விடுங்க, சாமி! :)

      நீக்கு
    6. நீங்கள் பின்னூட்டவாதியாக இருப்பதோடு நில்லாமல், பதிவுலக பயங்கரவாதியாக பரிணமிக்க வேண்டும் என்பதே உங்கள் வாசகர்களின் அன்புக் கோரிக்கை! உங்கள் நகைச்சுவை எழுத்துக்களை பின்னூட்டங்களில் மட்டும் துண்டு துண்டாக படிக்கும் நிலை மாறி, நீங்கள் எழுதப் போகும் முழு நீளப் பதிவுகளுக்கு துண்டு போட்டு, நாங்களும் பின்னூட்டம் போட வேண்டும் என்பதே எங்கள் ஆசை!
      - நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில், பெங்களூரிலிருந்து கார்த்திக்! :D

      நீக்கு
    7. @EV:
      //வலைப்பூ, வலைக்காய், வலைப்பிஞ்சு, வலைப்பழம், வலைக்கிளை, வலைத்தண்டு, வலை இலை, வலைவேர் - போன்ற எதையும் ஆரம்பிக்கும் எண்ணம் துளியும் கிடையாது எனக்கு!//
      ஒரு சிறிய வலைவிதையாவது போட்டு வைக்கலாமே?! :) விரைவில் வலைவிருட்சமாய் வளர வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்! :) :)

      நீக்கு
    8. ஒரு வலைப்பூவை ஆரம்பித்துவிட்டு இரவுபகலாகத் தூக்கமின்றியும், வீட்டிலிருப்பவர்களெல்லாம் ஏதோ ஒரு வினோத ஜந்தைப் பார்ப்பதைப் போல் பார்ப்பதுமாக- நீங்களும், உங்களைப் போன்ற பதிவர்களும் படும் பாட்டைக் கண்டபின்புமா எனக்கு அப்படியொரு விபரீத ஆசை வந்துவிடும்!?!

      உங்களையெல்லாம் பார்த்து நானே பலமுறை பரிதாபப்பட்டிருக்கிறேனே; எனக்குமா அந்த நிலைமை வரவேண்டும்? :-D

      நான் தொடர்ந்து புத்திச்சாலியாகவே இருப்பதை யாராலும் தடுக்கமுடியாது. :)

      நீக்கு
    9. அப்ப என்னை முட்டாள்ன்னு சொல்றீங்களா?! கிர்ர்ர்ர்ர்.... :)

      நீங்க அப்படி எல்லாம் சொல்லப்படாது! மொதல்ல வினோத ஜந்து மாதிரி நம்மை விசித்திரமாத்தான் எல்லோரும் பார்ப்பாங்க! ஆனா...
      ...
      ...
      போகப் போக அதுவே அவங்களுக்கும், நமக்கும் பழகிடும்! :D சீக்கிரம் வாங்க, NBS குறித்த உங்கள் நேர்மையான, பயமில்லாத விமர்சனங்களை தைரியமா வெளியிடுங்க! உங்க வலைவிதைக்கு நான் லயன் பூவில் பின்னூட்டம் மூலம் லிங்க் கொடுத்து உதவுகிறேன் :)

      நீக்கு
  6. // தினத்தந்தி புண்ணியத்தில் //கெரசின் வாசனையுடன் தெரிய வந்தது!//
    thats BPK. keep it up

    பதிலளிநீக்கு
  7. என்ன கார்த்திக் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளே நைட் முழுவதும் முழுச்சுக்கிட்டு இருந்தீங்க போல.

    நான் ரிலீஸ் ஆனா அன்னைக்கே பார்த்தேன்.எனக்கு பிடித்திருந்தது,ஆனால் எனக்கு பின்னால ஒரு காலேஜ் குழு உட்கார்திருந்து ஒரே மொக்கை என கமெண்ட் அடித்துக்கொண்டே இருந்தார்கள்.எனக்கு படம் பார்க்கவே முடியல.

    நேத்து தான் MSK பிரிண்ட் டவுன்லோட் பண்ணி பார்த்தேன்.
    மீண்டும் ரசித்து சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்க வேற, திருப்பூர்ல இருந்து காலங்காத்தால 4 மணிக்கே பெங்களூர் வந்தாச்சு, ஆனா தூக்கம்தான் வர மாட்டேங்குது! :)

      நீக்கு
  8. //எது எப்படியோ, தமிழில் இது போன்ற படங்கள் வருவது எப்போதாவது நடக்கும் ஒரு அதிசயம். அதனால் மேற்சொன்ன குறைகளை கண்டு கொள்ளாமல் ஒரு தடவை பார்க்க முயற்சியுங்களேன்?! //

    100 சதவீத அக்மார்க் உண்மை ...இன்னமும் தமிழ் சினிமா உடைத்தெறிந்துவிட்டு செல்லவேண்டிய பழக்கவழக்கங்கள் பல பல...அதற்க்கு நம்மால் செய்யக்கூடிய சிறு உதவி இது போன்ற வித்தயாசமான படங்களை ஆதரிப்பது மற்றும் அதில் உள்ள இன்னமும் மாற்றப்படவேண்டிய கவனிக்கப்பட வேண்டிய குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது!
    படத்தை முழுமையாக இன்னமும் பார்க்காவிட்டாலும் ஒரு சீன் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்ததில் ஒரு சிறு நெருடல்...

    படத்தில் நாயகன் விஜய் சேதுபதி தன் நண்பர்களிடம் தனக்கு தாகமாக இருக்கிறது தண்ணீர் வேண்டும் என திரும்ப திரும்ப கேட்கிறார் ...தண்ணீர் குடித்ததை மறந்துவிடுகிராராம்...ஓகே அவரின் மெடுல்ல அப்லாங்கெடாவில் அடிபட்டுவிட்டதால் அவருக்கு SHORT TERM MEMORY LOSS நம்பாலம், ஆனால் மீண்டும் தாகம் ஏற்படுகிறதாம் ...மற்றும் பாத்ரூம் செல்ல வேண்டுமாம்...உடலில் ஏற்படுகின்ற உணர்வுக்கும் MEMORY LOSS க்கும் என்ன சம்மம்தம்...??? தாகமும் இயற்க்கை அழைப்புகளும் நமது உடலில் ஏற்படுகின்ற INSTANT உணர்வுகளால் தூண்டப்படுகின்ற செயல்கள் அல்லவா ??
    WHEN WOULD TAMIL CINEMA COME CLEAN OUT OF SUCH BASIC OVERSIGHT...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வி-சு :

      படம் பார்த்தபோது இதே விசயத்தை நானும் நினைத்தேன். காமெடி என்று வந்துவிட்டால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டு கொடுத்த காசை வீணாக்கிக் கொள்ளக்கூடாது :)

      நீக்கு
    2. உண்மைதான் விஸ்கி-சுஸ்கி! அது போன்ற பல லாஜிக் மீறல்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. உதாரணத்திற்கு விஜயை அவர் கல்யாணத்தன்று நண்பர்கள் பொறுப்பில் முழுவதுமாய் ஒப்படைத்துவிட்டு அவர் குடும்பத்தார் கண்டுகொள்ளாமல் இருப்பது! இவற்றை எல்லாம் சரி செய்திருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும்!

      உங்களுக்காக இன்டர்நெட்டை லேசாக புரட்டிப் போட்டதில், ஷார்ட் என்றில்லை பொதுவாக மெமரி லாஸில் இந்த சிம்ப்டமும் இருப்பதாகவே தெரிகிறது - ஆனால் நோய் சற்றே முற்றிய நிலையில்:
      //http://www.martinfrost.ws/htmlfiles/dec2008/aphasia-memory-loss.html
      The sense of time becomes more distorted as the disease progresses, and people may insist it's time to leave immediately after arriving at a place or may complain of not having been fed as soon as a meal has ended.//

      விரைவில் முழுப்படத்தையும் தியேட்டரில் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!

      நீக்கு
  9. ரொம்ப நாளைக்கு அப்புறம் (களவாணி) சிரிக்க வைத்த தமிழ் படம் இது. சற்றே நீளம், மற்றும் விஸ்கி-சுஸ்கி குறிப்பிட்ட சில லாஜிக் மிஸ்டேக்ஸ் மறந்து பார்த்தால், என்ஜாய் செய்ய வைத்தப் படம் இது.

    ஒரே வசனத்தை திரும்ப திரும்ப சொல்வது, 10ஆம் கிளாஸ் ரெக்கார்டு நோட், அப்பா ! பேய் மாதிரி இருக்காடா, நர்ஸ் - நீ போயேன்... சதீஸ்க்கு கல்யாணம் போன்ற இடங்கள் சிரித்து கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

    Clean Entertainer..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மனதை இலகுவாக வைத்துக்கொண்டு ரசிக்க வேண்டிய படம்! :)

      நீக்கு
  10. வழக்கம் போல் உங்கள் பாணியிலான "நகைச்சுவை + நக்கல் = கார்த்திக் விமர்சனம்" அருமை. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமா விமர்சனத்திற்கு எல்லாம் கமெண்டு போட ஆரம்பிச்சிட்டீங்க?! :)

      நீக்கு
  11. என்னாச்சி ! நேத்து நைட் 8 மணிக்கு காரை எடுத்துகிட்டு பஸ் ஸ்டான்ட் போனேன். ஒருத்தர ஏறக்கிவிட்டுட்டு வீட்டுக்கு வந்தேன். வந்தேனா, அப்புறம் வீட்ல மதியம் சமைச்ச மீந்துபோனத சாப்டேன். அப்புறம் இந்த பிளேடு விமர்சனத்த படிச்சேன். அப்புறம் என் பொன்னான நேரத்த வீணாக்கி ஒரு கமெண்ட் போட்டேன். அதுக்கப்புறம் படுத்துட்டேன். எழுந்து பாக்கிறேன் விடிஞ்சிடுச்சு. இதுக்கு நடுவுல என்னாச்சு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாச்சின்னா, உங்க ரௌஸ் தாங்க முடியாம பின்சீட்டுல ஒக்காந்திருந்த உங்க நண்பர் மடேர்ன்னு உங்க பின்னந்தலையில ஸ்பேனர் மூலமா ஒரு போடு போட்டதில, உங்க 'மெதுவடா ஆப்புடா'-வில் அடி பட்டு, உங்களுக்கு மீடியம் டெர்ம் மெமரி லாஸ் ஆயிடுச்சுன்னு நெனைக்கிறேன்! ;)

      நீக்கு
    2. ஓ இவ்வளவு நடந்திருக்கா ! சொல்லவேயில்ல. :)

      நீக்கு
  12. பதிவை நகைச்சுவையாகவே எழுதியிருந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜாம் சார், நடுவுல கொஞ்சம் நாள் உங்கள இந்தப் பக்கம் காணோமே?! :)

      நீக்கு
  13. சிரித்து சிரித்து வயிறு வலி தாங்கலை நண்பா! அருமையான படம்! ஹி ஹி ஹி சிரித்து சிரித்து வயிறு வலி தாங்கலை நண்பா! அருமையான படம்! ஹி ஹி ஹி சிரித்து சிரித்து வயிறு வலி தாங்கலை நண்பா! அருமையான படம்! ஹி ஹி ஹி சிரித்து சிரித்து வயிறு வலி தாங்கலை நண்பா! அருமையான படம்! ஹி ஹி ஹி சிரித்து சிரித்து வயிறு வலி தாங்கலை நண்பா! அருமையான படம்! ஹி ஹி ஹி சிரித்து சிரித்து வயிறு வலி தாங்கலை நண்பா! அருமையான படம்! ஹி ஹி ஹி ஆமா எனக்கு என்ன ஆச்சு? மேடுல்லா ஆப்லங் கேட்டா அடி பட்டுச்சோ? என்னமோ? ஆமா எல்லாம் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க! கபர்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர்ல இன்னும் எத்தன பேர் இந்த மாதிரியே சுத்தறீங்க?! :)

      நீக்கு
  14. வழக்கமான கார்த்திக் விமர்சனம்! :-)

    பதிலளிநீக்கு
  15. வழக்கமான பிளேடு விமர்சனம்....யோவ உங்களைத்தான் சொன்னேன்...இதில் எந்த உள்குத்தும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கமான 'செல்லா' கமென்ட்டு :) நானும் உங்க பேரத்தான் சொன்னேன்! ஹி ஹி ஹி ;)

      நீக்கு
    2. நண்பர் கார்த்திக்

      இன்னும் படம் பார்க்கவில்லை ... இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

      //எது எப்படியோ, தமிழில் இது போன்ற படங்கள் வருவது எப்போதாவது நடக்கும் ஒரு அதிசயம். //

      உங்களது விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. :)

      அப்புறம் நமது ஈரோடு விஜய் விரைவில் வலைப்பூ தொடங்க எனது வாழ்த்துக்கள் (ஏதோ என்னால் முடிஞ்சது) ..

      அடுத்த முறை திருப்பூர் வருகின்ற பொழுது எனக்கு தெரியப்படுத்துங்கள். நானும் அப்பொழுது அங்கிருந்தால் சந்திக்க முயற்சி செய்வோம்.

      திருப்பூர் ப்ளுபெர்ரி

      நீக்கு
    3. விஜயை விடாதீங்க, எப்படியாவது சிக்க வைக்கணும்! :)

      நீங்க திருப்பூர்ல இப்ப இல்லையா?! நான் வரும் போது உங்களுக்கு தெரிவிக்கிறேன்!

      நீக்கு
    4. அடேய் விஜய், இன்னும் ஏன் நின்னு வேடிக்கை பார்த்திட்டிருக்க? ஓடிப்போயிரு...

      நீக்கு
    5. மொசக்குட்டி ஓடுது புடிங்கலே :)

      நீக்கு
    6. "நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ"

      -- என்ற ஒரு தமிழ் பாடல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் நண்பர் விஜய் அவர்களே ... :)

      மேலும் சென்னை புத்தக திருவிழாவிற்கு வருகிறீர்களா ?

      திருப்பூர் ப்ளுபெர்ரி

      நீக்கு
  16. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  17. Friends
    Before the sun sets in this year,
    before the memories fade,
    before the networks get jammed.....
    Wish u and ur family Happy Sparkling New Year 2013 :))
    .

    பதிலளிநீக்கு
  18. சிறப்பான கண்ணோட்டம்- புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  19. @திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்
    @Cibiசிபி
    @ப்ரூனோ ப்ரேசில்
    நன்றி நண்பர்களே, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! :)

    பதிலளிநீக்கு
  20. ப்பா என்ன பதிவுடா இது :D

    பதிலளிநீக்கு
  21. எனா? Puthusa oru pathivayum kanom ? I laughed out very loudly after such long time while I was watching this movie :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நடுவுல கொஞ்சம் உடல்நலத்த காணோம்' கிரி! அதான்! :)

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia