நீர்ப்பறவை - தமிழ்நாட்டின் இந்தியர்கள்!

நீர்ப்பறவை - கடலில் விரையும் படகு நீர்ப்பறவையா அல்லது அதில் பயணிக்கும் மீனவனா? சமீபத்தில் பார்த்த 'கடலும், கடல் சார்ந்த படங்களும்'  வரிசையில் இது இரண்டாவது!

கடலில் சுடப்பட்டு மாளும் தமிழ் மீனவன், இந்தியனாக மாளாமல், அனாதைத் தமிழனாக வீழும் அவலத்தை சொல்ல நினைத்ததுதான் இப்படத்தின் உண்மையான நோக்கம். ஆனால், பாய் மரம் இழந்த படகாய், பெரும்பாலான படம் வேறு இலக்கிலேயே பயணிக்கிறது. கடைசி 15 - 20 நிமிடங்களில், வயதான சுனைனாவாக வரும் நந்திதா தாஸின் 'அற்புதமான' நடிப்பில் சொல்ல வந்த மையக் கருத்தும் அனாதைக் குரலாக வீழ்கிறது.

உடனே படம் சரியில்லை என அவசர முடிவெடுத்திட வேண்டாம்! படம் அவ்வளவு அழகு! 'இயற்கை' படத்திற்குப் பிறகு "கடலை", குறிப்பாக கடல் சார்ந்த மனிதர்களின் உணர்வுகளை இவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் படம் இதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இயக்குனர் சீனு ராமசாமிக்கும், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்திற்கும் வாழ்த்துக்கள்.

விஷ்ணு அலட்டாமல் நடித்திருக்கிறார், சுனைனாவும்தான். மிகையில்லா நடிப்பே நல்ல நடிப்பு என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் இருவரும். ஆனால், சுனைனா உதடுகளை பிளந்தே வைத்துக் கொண்டிருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. அளவாய் சரக்கடிக்கும் கருப்பு வெள்ளைக்காரனாக பாண்டி, விஷ்ணுவின் சகாவாக, அளவாய் சிரிக்க வைக்கிறார்!

விஷ்ணுவின் அப்பாவாக நடித்திருக்கும் ராம், புதுப்படகின் லைசன்ஸை மகனிடம் இருந்து பெறும் இடம் உணர்ச்சிக்குவியல்! சரண்யா வழக்கமான அம்மா நடிப்பில் வழக்கம் போல கவர்கிறார்! சமுத்திரக்கனி, சுனைனாவுக்கு கேட்குமாறு, படகை வேகமாக தயாரியுங்கள் என வேண்டுமென்றே சத்தமாக சொல்லுமிடம் மனிதத்தின் உச்சம்!

அருள்தாஸ் = மிரட்டல்! 'தடையறத் தாக்க'வில் என்னை மிகவும் கவர்ந்த இவர் இதிலும் மிரட்டியுள்ளார். அவர் எதுவும் செய்யாவிட்டாலும் படு கெத்தாக இருக்கிறது! வழக்கமான வில்லனாகக் காட்டாமல், ஒவ்வொரு மனிதனிலும் இருக்கும் தீய குணத்தின் வெளிப்பாடாகக் காட்டி, மீண்டும் அவரின் நல்ல பண்பைக் காட்டுவது அழகு (விஷ்ணுவை 'கடலுக்குள் பார்த்துப்போ' என எச்சரிக்கும் இடம்!)

மணிவண்ணன் என்ற அற்புத குணச்சித்திர நடிகர் அடிக்கடி நடிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய இழப்பு?! இது போன்ற ஒரு படத்தில் 'எந்த ஒரு வேடத்திலும்' அற்புதமாக பொருந்தியிருப்பார். அவர் இல்லாத குறையை தம்பி ராமையா நன்றாகவே ஈடு கட்டுகிறார். அழகம் பெருமாள், வடிவுக்கரசி என ஒரு பெரிய குணச்சித்திர பட்டாளமே நடித்திருக்கிறது!!!

மீனவர்களின் பாஷை பேசுகிறேன் பேர்வழி என்று நம்மை சோதிக்காமல் (அஜீத்'s சிட்டிசன்!), எல்லோரும் நமக்குப் புரியும் படியே பேசுகிறார்கள். மீனவர்களின் கட்டுப்பாடுகள், வாழ்வியல் கோட்பாடுகள், பலரின் தினசரி வாழ்க்கையில் இரண்டறக் கலந்த மது, மத நம்பிக்கை, வல்லம் (படகு) தயாராகும் விதம், புதுப்படகிற்கு பூஜை போட்டு கடலில் தள்ளுவது என்று படமெங்கும் பல ரசிக்க வைக்கும் பதிவுகள்!!! படகிற்கு கூட லைசன்ஸ் இருக்கிறது என்பது எனக்கு ரொம்பவே புதிய சேதி - அவ்வளவு மக்காக இருந்திருக்கிறேன்!!! :)

தபு, நந்திதா தாஸ், சீமா பிஸ்வாஸ் இப்படி ஏதாவது ஒரு வாடிய வட இந்திய நடிகையைப் போட்டு விட்டால் படத்துக்கு தானாக ஒரு வெயிட் கிடைக்கும் என நினைப்பது எவ்வளவு தவறான ஒன்று என்பதை நந்திதா தாஸ் இதில் நிரூபித்துள்ளார். கிளைமேக்ஸில் அவரின் நடிப்பு பயங்கர கடுப்பேற்றுகிறது, சுனைனாவே நடித்திருக்கலாம். அதே போல ஏற்கனவே பார்த்துச் சலித்த காட்சிகள் பல இருப்பதும் ஒரு பெரிய குறையே! ஒரு படம் அழகாக இருந்தால் மட்டும் போதாது என்பதை நமது இயக்குனர்களுக்கு மீண்டும் நினைவுறுத்தும் படமாக அமைந்திருக்கிறது!!!

நீர்ப்பறவை - நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பெங்களூர் வராத கடுப்பில் பார்த்த படம்! நல்லவேளை பார்த்தேன், இல்லையென்றால் ஒரு (ஓரளவு) நல்ல படத்தை மிஸ் செய்திருப்பேன். ஆனால் 'கடைசில கொஞ்சம் அழுத்தத்த காணோம்'-னு புலம்ப வைத்துவிட்டார்கள் என்பதுதான் ஒரே வருத்தம் :(

தொடர்புடைய இடுகை: இனவெறியைத் தூண்டுகிறதா டைம்ஸ் ஆஃப் இந்தியா?

கருத்துகள்

  1. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கிறேன்.

    படத்தின் நடித்திருக்கும் எல்லோருடைய பெயர்களையும் தெரிந்துவைத்திருக்கும் உங்க இன்வால்வ்மெண்டை பாராட்டாமலிருக்க முடியாது!

    வேலை, குடும்பம், நண்பர்கள், எடிட்டரின் வலைப்பூ, FB கும்மிகள், இந்த வலைப்பூ, சினிமா. புத்தகங்கள்... கார்த்திக்கு மட்டும் ஒரு நாள் என்பது 48 மணி நேரமோ?!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படத்தின் நடித்திருக்கும் எல்லோருடைய பெயர்களையும் தெரிந்துவைத்திருக்கும் உங்க இன்வால்வ்மெண்டை//
      எல்லா புகழும் விக்கிக்கே! :D

      http://en.wikipedia.org/wiki/Neerparavai

      //கார்த்திக்கு மட்டும் ஒரு நாள் என்பது 48 மணி நேரமோ?!!!!!!//
      அட நீங்க வேற, இதால வீட்டுல எனக்கு சரி மொத்து! :(

      //வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கிறேன்//
      Sure, பதிவில் மேலும் சில தகவல்கள் இணைத்துள்ளேன்! :)

      நீக்கு
  2. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கிறேன்.

    படத்தின் நடித்திருக்கும் எல்லோருடைய பெயர்களையும் தெரிந்துவைத்திருக்கும் உங்க இன்வால்வ்மெண்டை பாராட்டாமலிருக்க முடியாது!

    வேலை, குடும்பம், நண்பர்கள், எடிட்டரின் வலைப்பூ, FB கும்மிகள், இந்த வலைப்பூ, சினிமா. புத்தகங்கள்... கார்த்திக்கு மட்டும் ஒரு நாள் என்பது 48 மணி நேரமோ?!!!!!!

    பதிலளிநீக்கு
  3. @Erode Vijay:
    //கார்த்திக்கு மட்டும் ஒரு நாள் என்பது 48 மணி நேரமோ?//

    முற்றிலும் உண்மை.
    மனுஷன் தீயா வேல பாக்கறாரு.

    எனக்கும் இறுதிக்காட்சியில் யாரும் சாக கூடாதுங்க.
    இதுலதான் அதுக்கு முன்னாடியே ஹீரோவ சாக அடுசுடரான்களே.
    அதுநாள் நான் பாக்க மாட்டேன்.

    ஆனால் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாத்தேங்க.
    அருமையான படம்.அப்பா எப்படி யோசிக்கறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கும் இறுதிக்காட்சியில் யாரும் சாக கூடாதுங்க//
      அப்ப நெறைய நல்ல படத்த மிஸ் பண்ணிட்டீங்கன்னு சொல்லுங்க!!!

      நீக்கு
    2. //எனக்கும் இறுதிக்காட்சியில் யாரும் சாக கூடாதுங்க// எனக்கும் என் வைப் க்கும் பிரச்சனையே இதாங்க. அதுவும் ஒரு விதத்துல எனக்கு நன்மைதான். தொல்ல இல்லாம தனியா போய் படம் பார்க்கிறேன். செலவும் மிச்சம். :)

      நீக்கு
    3. அப்ப, படத்துல ஹீரோ செத்துருவான்னு உங்க மனைவிகிட்ட பொய் சொல்லி நெறைய படம் தனியா போய் இருக்கீங்க - அப்படித்தானே?! ;)

      நீக்கு
  4. இந்த தடவ உங்க வலையில விழர்தா இல்ல. :-) ஏற்கனவே பேமென்ட் பாக்கி. :-D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் சினிமாவுக்கு வருமானத்தை தேடித் தரலாம்னு பார்த்தா சிக்க மாட்டேங்கறீங்களே? :)

      நீக்கு
  5. சுவாரஸ்யம் !

    பல விதங்களில் ஒரே மாதிரி உணர்ந்துள்ளோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மோகன்! உங்கள் விமர்சனத்தைப் படித்தேன் - நான் ரசித்த பல வசனங்களை பட்டியலிட்டிருக்கிறீர்கள்!!! :)

      நீக்கு
  6. கத நல்லா சொல்றிங்க... ஆனா எனக்கு சினிமா புடிக்காது, ஆனா உங்க உழைப்புக்காக ஒரு தடவ பாக்கலாம்னு தோணுது. சென்னையில எங்க ஓடுதுன்னு சொன்னா நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia