லயன் காமிக்ஸ் 29வது ஆண்டு மலர் - ஆல் நியூ ஸ்பெஷல் - ஒரு அலசல்!

லயன் காமிக்ஸின் 29-வது ஆண்டு மலராக 'All New Special' என்ற சிறப்பிதழ், ₹200 விலையில், 214 பக்கங்களுடன், நான்கு கதைகளைத் தாங்கி வெளியாகி இருக்கிறது! இந்த இதழின் 7 பக்கங்களில் சிறிதாக எனது பங்களிப்பும் இருக்கிறது! KBT2 போட்டிக்காக, க்ரீன் மேனர் தொடரின் ஒரு சிறுகதையை மொழிபெயர்த்து நான் அனுப்பி வைத்த தமிழாக்கம் தேர்வாகி, இந்த இதழில் அச்சேறி இருக்கிறது! எனது எழுத்துக்களை எனக்கு பிடித்த காமிக்ஸ் இதழிலேயே வாசிப்பது என்பது கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது! வாய்ப்பு அளித்த லயன் ஆசிரியர்  திரு.S.விஜயன் அவர்களுக்கு நன்றி! இதை சாக்காக வைத்தாவது எனது மனைவியை மீண்டும் காமிக்ஸ் படிக்க வைக்கலாம் என்று முயற்சித்து வருகிறேன்! :) முதல் முயற்சி படு தோல்வி அடைந்த சோகக் கதையை கடந்த பதிவின் கடைசி பத்திகளில் படித்து மகிழலாம்!

இனி விமர்சனத்துக்குள் செல்வோமா ஜென்டில்மென்?!

1. கொலை செய்வீர் கனவான்களே! (Green Manor):
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை க்ரீன் மேனர் என்ற மேல்தட்டு க்ளப்பில் பட்லராக கழித்த தாமஸ் பிலோ, ஓய்வு பெரும் தருவாயில் சித்தம் பேதலித்து கொடூர புத்தி கொண்டவனாக மாறுகிறான். அந்த க்ளப்பில் நடந்த பல குற்றங்களுக்கு மௌன சாட்சியாக இருக்க நேர்ந்த அவலம்தான் அதற்கு காரணமா? மனநல காப்பகத்தில் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் அடைக்கப்படும் தாமஸ், க்ரீன் மேனர் க்ளப்பின் இருண்ட பக்கங்களை டாக்டர் தார்ன் என்ற மனவியல் நிபுணரிடம் அசை போடுகிறான்...

நுனிப்புல் மேய்வது போல மேலோட்டமாக படித்தால் இக்கதைகள் பைத்தியக்காரத்தனமாகக் தோன்றலாம்! சித்திரங்களையும் உன்னிப்பாக கவனிக்கா விட்டால் சரியாக புரியாமலேயே போய் விடலாம் (உதாரணம்: சிறு கொலையும் கைப்பழக்கம் கதையின் முடிவு)! ஆனால், மனம் ஓய்வாக இருக்கும் ஒரு தருணத்தில் நிதானித்துப் படித்தால், மனித மனதின் இருண்ட பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டிடும் இக்கதைகளின் ஆழம் அனைவருக்கும் புரியும்! ஆறு சிறுகதைகள் கொண்ட இந்த முதல் பாகத்தில், ஒவ்வொரு சிறு கதையும் ஒரு சோகமான ஆனால் நகைப்புக்குரிய திருப்பத்துடன் முடியும்; எனவேதான் இந்தப் படைப்பு Dark Humor / Black Humor (இருண்ட நகைச்சுவை) என்ற பிரிவில் வகைப் படுத்தப் படுகிறது!

19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில், விக்டோரியன் இங்கிலாந்தில் நடைபெற்ற (கற்பனை) சம்பவங்களின் தொகுப்பு என்பதால், சற்று வித்தியாசமான தமிழ் நடையை விஜயன் அவர்கள் கையாண்டிருக்கிறார். இந்தத் தொடரின் ஆங்கில பதிப்பே நீட்டி முழக்கிப் பேசும் பழைய ஆங்கில நடையை கொண்டிருக்கும் போது, தமிழில் மட்டும் சுருக்கமான பின்நவீனத்துவ வசனங்களையா எதிர்பார்க்க முடியும்?! :)

ஆனால், சமகால பாணியில் இல்லாத தமிழ் வசனங்கள் இந்த தலைமுறை இளைஞர்களுக்கு சற்று அன்னியமாக தோன்றலாம்! நான் மொழிபெயர்த்த பகுதியை மட்டும் பெரும் கெஞ்சல்களுக்குப் பின் படித்த என் மனைவியார் ("மனைவியர்" அல்ல) - 'தமிழ்ல புரியற மாதிரி எழுதி இருக்கலாமே?!' என்று கடுப்பேற்றினார். எனக்காக, 20 வருட இடைவெளிக்குப் பிறகு காமிக்ஸ் படித்த என் அண்ணனுக்கு கதை + தமிழ் நடை மிகவும் பிடித்திருந்ததிற்கு இந்த தலைமுறை இடைவெளி ஒரு காரணமாக இருக்கலாம்!

என்னளவில் நான் தூய தமிழுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை, துயரத்தை பகடி செய்யும் விக்டோரியன் கால க்ரீன் மேனருக்கு அதுவே பொருத்தமானது என்ற ஆசிரியரின் முடிவோடு முழுதும் ஒத்துப் போகிறேன்! ஆனால், வழக்கில் இல்லாத சொற்பிரயோகங்கள் அதிகம் வேண்டாம், அவை புதிதாய் காமிக்ஸ் படிக்க முயல்பவர்களுக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடும் என்ற என் கருத்தை லயன் ப்ளாகில் தெரிவித்து இருந்தேன்! ஆசிரியரும் வரவிருக்கும் க்ரீன் மேனர் பாகங்களில் இதை கவனத்தில் கொள்வதாக உறுதி அளித்து இருக்கிறார்!

உதாரணத்திற்கு, கீழ்க்கண்டவற்றை தவிர்க்கலாம்:
1. 'வெற்றார்ப்பரிப்பு', 'கற்பனைக்கப்பாற்பட்டதொரு' - இவை போன்ற படிக்க சிரமம் தரும்  கூட்டுச் சொற்கள்!
2. நிஷ்டூரம், நல் நேர நஞ்சு, யெளவனமான யுவதி - போன்ற வழக்கில் இல்லாத பிரயோகங்கள்!

லயன் ப்ளாகில், எனது இந்த கருத்துகளுக்கு 'சில' வாசகர்கள் எதிர்க் கருத்து தெரிவித்து இருந்தனர். க்ரீன் மேனரில் காணப்படும் இருண்ட நகைச்சுவை (இ.ந.) அனைவரையும் கவராது என்பது ஒருபுறம் இருக்க, பேஸ்புக்கில் இ.ந. என்றால் என்ன என்பது குறித்து ஒரு நீண்ட விவாதமே நடந்தது! உட்கார்ந்து யோசித்ததில், சில வாசகர்களுக்கு உதித்திருக்கும் திடீர் தமிழ் பற்றே ஒரு இருண்ட நகைச்சுவையாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறது! "முற்றிலும் புதுமையான சிறப்பிதழ்" என்று தமிழ்ப்பெயர் வைக்காமல், "லயன் ALL NEW ஸ்பெஷல்" என்ற ஆங்கிலப் பெயர் தாங்கிய கொட்டை எழுத்துக்கள் அட்டையில் மின்னுவது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையாம்! 'டாக்டர்', 'போலிஸ்', 'ஜென்டில்மென்', 'ஓ. மை காட்' என கதை நெடுக ஆசிரியர் ஆங்கிலம் கலந்து எழுதி இருப்பதும் இவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லையாம்; நிஷ்டூரம் போன்ற சம்ஸ்கிருத சொற்களும் இந்தக் கண்மணிகளுக்கு உறுத்தவில்லையாம்! ஆனால், நான் 'வழக்கில் இல்லாத தமிழ் சொற்கள் வேண்டாமே!' என்று கருத்து தெரிவித்ததைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உடனே தமிழ்ப்பற்று பொங்கி வழியத் துவங்கி விடுகிறதாம்!!! இதை விட ஒரு பெரிய இருண்ட நகைச்சுவை வேறு என்னவாக இருந்திட இயலும்? :)

ஒரு நிஷ்டூர சுய பிரசங்கம்:
பக்கம் 33ல் துவங்கி 40 வரை, நான் தமிழாக்கம் செய்த "இரசித்துக் கொல்ல வேண்டும்!" கதை இடம் பெற்றுள்ளது! இக்கதைக்காக, கீழ்க்கண்ட இரண்டு தலைப்புகளையும் பரிசீலனையில் வைத்திருந்தேன்:

1. கலைகார கொலைஞர்கள்!
2. ஆய கொலைகள் அறுபத்திநான்கு!

''சிரித்துக் கொல்ல வேண்டும்!' (The killing joke) எனக்கு மிகவும் பிடித்த பேட்மேன் கதைகளில் ஒன்று! அதை நினைவு கூரும் விதமாக "இரசித்துக் கொல்ல வேண்டும்!" என தலைப்பிட்டேன்! உங்களுக்கு எந்த தலைப்பு  பொருத்தமாக தோன்றுகிறது நண்பர்களே?

2. தோட்டா தேசம் (Comanche):
வழக்கமான வெஸ்டர்ன் ஷெரிப், ரேஞ்சர், bounty hunter ரக சாகசங்களில் இருந்து விலகி ஒரு நிஜமான 'கௌபாய்' கதையாக அமைந்துள்ளது! மாட்டுப் பண்ணையை தனித்து பாதுகாக்க முடியாமல் தவிக்கும் இளம் பெண் ஒருத்திக்கு ஒத்தாசையாக நின்று எதிரிகளை வீழ்த்தும் ஒரு நாயகர், காமெடி செய்ய ஒரு கிழம் என கதையும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது! ரெட் டஸ்ட் & கென்டக்கி இவர்களின் அமுங்கிய மேல்மண்டைகளையும், கமான்ச்சேவின் டோரா கண்களையும் தவிர்த்துப் பார்த்தால் பிரம்மிப்பூட்டும் சித்திரங்கள். ப்ளுபெர்ரி கதைகளிலும் இந்த கலவையான சித்திர அமைப்பை கவனிக்கலாம் (டைகரின் மூக்கு & ஜிம்மியின் முகரை!). 15 பாகங்கள் கொண்ட இந்த தொடரை 5 ஆண்டு கால அவகாசத்தில் ஆசிரியர் வெளியிட இருக்கிறாராம்!; ஹாவ்வ்... :)

3. பிரளயத்தின் பிள்ளைகள் (Batchalo):
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த உருக்கமான கிராபிக் நாவல் பற்றி எழுத ஒரு தனிப்பதிவே தேவைப்படும்! இதன் தத்ரூபமான சித்திரங்கள் மனதை விட்டு அகல மறுக்கின்றன! மற்ற அனைத்து கதைகளைக் காட்டிலும் இதில் ஆசிரியரின் மொழிபெயர்ப்பு மிக அருமையாக வந்திருக்கிறது! வாசகர்களிடம் பெருகி வரும் மாற்று காமிக்ஸ்க்கான ஆதரவு மகிழ்வு தருகிறது! இது பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்!

4. ஸ்டீல் பாடி ஷெர்லாக் (Baker Street):
பக்கங்களை நிரப்புவதற்காக வந்திருக்கும் இரண்டு சிறு கதைகள் - சிறுவர்களை கவரக் கூடும்! இதற்கு முன்னர் வந்த ஸ்டீல் பாடி கதைகளை காட்டிலும் இவை சற்று தேவலாம் ரகம்

ஒரு ஸ்பெஷல் அலசல்:
அழகான முன் அட்டை, ரசனையான கதைத்தேர்வு, அச்சுக் கோளாறுகள் இல்லாதது என திருப்திகரமாக அமைந்திருக்கும் இந்த ஆண்டு மலரில் குறிப்பிடத்தக்க குறை என்ன என்று பார்த்தால், அது ஒன்று மட்டுமே! All அல்ல, Almost-ம் அல்ல உண்மையில் இது Half New Special மட்டுமே! இதிலுள்ள நான்கு கதைகளில், கமான்ச்சே - ரெட் டஸ்டும், ஸ்டீல்பாடி (பேக்கர் ஸ்ட்ரீட்) ஷெர்லாக்கும் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். ஆனால், பிரச்சினை அதுவல்ல! மாறாக, வழக்கம் போல கலவையான கதைகள் கொண்ட ஸ்பெஷல் இதழாக இது அமைந்திருக்கிறது என்பதே! தனித்தனியே பார்த்தால் இந்த நான்கு கதைகளுமே அந்தந்த Genre-ன் கீழ் சிறந்த கதைகள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை!

ஆனால், இப்படி சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரும் படிக்கக் கூடிய வகைக் கதைகளையும் (ஸ்டீல் பாடி & தோட்டா தேசம்), மற்றும் 'ஓரளவுக்குகாவது' விவரம் புரிந்தவர்கள் படிக்கத் தகுந்த கதைகளையும் ( க்ரீன் மேனர் & பட்சாலோ ) ஒரே இதழில் வெளியிட்டிருப்பதைப் பார்க்கும் போது 'ஹம்கோ ஸ்பெஷல் இஸ்யூஸ் ஸே பச்சாலோ' என ஹிந்தியில் கூவத் தோன்றுகிறது!

முதலில் இது 2 * 100 ஸ்பெஷல் இதழ்களாக வெளிவர இருந்தது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தகவலை இங்கே காணலாம்! ஆனால், அதிலும் ஸ்டீல்பாடி + பட்சாலோ என்ற ரகளையான காம்பினேஷன் இருந்ததால் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இருந்திருக்காது! குண்டு மசாலா மிக்ஸ் ஸ்பெஷல் இதழ்கள் மீதான தனது காதலை எடிட்டர் சிறிதும் குறைத்துக் கொள்வதாய் இல்லை என்பதை அவரின் சமீப கருத்துக்கள் தெளிவாக்குகின்றன (கீழே!)!

//தனியாக வரும் கதைகளின் தாக்கம் அதிகமிருக்கும் என்ற கருத்துக்கு நான் உடன்பாடு சொல்ல மாட்டேன் ! பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போதும் வீரியம் கொண்ட கதைகள் நம் மனதை விட்டு அகல்வதில்லையே !

நம் கதைகளின் பெரும்பான்மை பெல்ஜியத்தில் வெளியான TINTIN ; SPIROU போன்ற காமிக்ஸ் பத்திரிகைகளில் தொடர்களாக வந்து ; வெற்றியான பின்னே தனித் தனி ஆல்பம்களாக வலம் வந்தவை. So நிறைய வேளைகளில் இவைகளின் துவக்கப் புள்ளிகள் - கதம்பமானதொரு கச்சேரியில் தானே தவிர exclusive albums வாயிலாக அல்ல ! //

அவருக்கு என் பதில்கள்:
1. பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போது அவற்றில் உள்ள சிறந்த கதை மட்டுமே நம் மனதில் தங்கும்! அதன் தாக்கத்தால் மற்ற ஓரளவு நல்ல கதைகளும் படு சுமார் எனத் தோன்றக் கூடிய அபாயம் இருக்கிறது!

2. வார / மாத இதழ்களுக்காக சிறிது சிறிதாக வரையப்பட்டு வெளியான தொடர் கதைகள் அவை! ஆனால், நமக்குத்தான் அவை இப்போது முழுமையாகக் கிடைக்கின்றதே?! அவற்றில் வெற்றி பெற்ற கதைகள் எவையென்றும் ஏற்கனவே தெரியுமே? யாரோ கஷ்டப்பட்டு கட்டிய ரோஜா மாலையை பிய்த்துப் போட்டு, வேறு மலர்களோடு சேர்த்து ஏன் கட்ட வேண்டும்? (பூக்காரம்மா கோச்சுக்கும்ல?!)

கொசுறு:
கேரளாவை சேர்ந்த "ரீகல் பப்ளிஷர்ஸ்", மலையாள தினசரிகளில் வெளியான Phantom & Mandrake - டெய்லி ஸ்ட்ரிப்களைத் தொகுத்து கோமிக்ஸ் வெளியிடத் தொடங்கி இருக்கின்றனர்! (மலையாளத்தில்தான்!). அவர்களிடம், இவற்றை தமிழுலும் வெளியிடச் சொல்லி பல நண்பர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். Phantom வெறியரான நண்பர் பாலாஜி சுந்தர் அவர்கள், ஒருபடி மேலே போய் நண்பர்களிடம் ரீகல் பப்ளிஷர்ஸின் முகநூல் பக்கம் சென்று "லைக்" போடுமாறு ஆதரவு திரட்டி வருகிறார்! இப்போது அந்த பேஜை மலையாளிகளை விட நம்மாட்கள்தான் அதிகம் லைக்கி இருக்கிறார்கள்! ;)

லயன் ஆசிரியர் விஜயன் அவர்களிடம், உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு ஈமெயில், சாட் போன்ற basic platform-களைத் தாண்டி, Social Network-களில் இணைய உலக அடியெடுத்து வைத்து சில வருடங்கள் கழிந்து விட்டது என்றும் லயன் & முத்துவிற்காக ஒரு தனி Facebook Group அல்லது குறைந்த பட்சம் ஒரு Official Facebook Page துவக்கச் சொல்லியும் கோரிக்கை வைத்திருந்தேன்! அவரும் விரைவில் துவக்குவதாக உறுதி கூறியிருக்கிறார்! கடந்த ஆண்டே துவக்கி இருந்தால் இந்நேரம் ஒரு 2000 லைக் காவது தாண்டி இருக்கலாம்; அதிலிருந்து குறைந்தது 200 புதிய சந்தாதாரர்களாவது கிட்டி இருப்பார்கள்! ஹூம்ம்!

டுமீல்:
லயன் ப்ளாக் அல்லது FB காமிக்ஸ் குழுமங்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு, இந்தப் பதிவின் சில பகுதிகள் எங்கேயோ படித்த உணர்வை தந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல! 'ஃபேஸ்புக் பக்கம் தலைய வச்சுக் கூட படுக்கறது இல்ல; நான் ரொம்ப நல்ல பையனாக்கும், தடுக்கி விழுந்ததுல லைட்டா எட்டிப் பார்த்தேன்' என்று லயன் ப்ளாகில் பில்டிங் கட்டும் பேஸ்மென்ட் வீக் பார்ட்டிகளுக்கும் இது பொருந்தும்! ;)

23 comments:

 1. இந்தத் தொடரின் ஆங்கில பதிப்பே நீட்டி முழக்கிப்பேசும் பழைய ஆங்கில நடையை கொண்டிருக்கும் போது, தமிழில் மட்டும் சுருக்கமான பின்நவீனத்துவ வசனங்களையா எதிர்பார்க்க முடியும்#அருமையான விளக்கம்

  ReplyDelete
  Replies
  1. தமிழில் வந்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக குறை கூறிக் கொண்டிருக்கும் கனவான்களுக்கான விளக்கம் அது தினா! ;)

   Delete
 2. //.. ("மனைவியர்" அல்ல)..// - உங்க வருத்தம் புரியுது பாஸ் :)

  //.. வழக்கில் இல்லாத சொற்பிரயோகங்கள் அதிகம் வேண்டாம், அவை புதிதாய் காமிக்ஸ் படிக்க முயல்பவர்களுக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடும் ..// -

  எனக்குமே தூய தமிழில் படிக்கவே விருப்பம். இருந்தாலும், இக்கருத்தை நானும் முன்மொழிகிறேன்


  //.... "லயன் ALL NEW ஸ்பெஷல்" என்ற ஆங்கிலப் பெயர் தாங்கிய கொட்டை எழுத்துக்கள் அட்டையில் மின்னுவது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையாம்! 'டாக்டர்', 'போலிஸ்', 'ஜென்டில்மென்', 'ஓ. மை காட்' என கதை நெடுக ஆசிரியர் ஆங்கிலம் கலந்து எழுதி இருப்பதும் இவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லையாம்; நிஷ்டூரம் போன்ற சம்ஸ்கிருத சொற்களும் இந்தக் கண்மணிகளுக்கு உறுத்தவில்லையாம்! ஆனால், நான் 'வழக்கில் இல்லாத தமிழ் சொற்கள் வேண்டாமே!' என்று கருத்து தெரிவித்ததைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உடனே தமிழ்ப்பற்று பொங்கி வழியத் துவங்கி விடுகிறதாம்! ....// - நெத்தியடி

  //.... உங்களுக்கு எந்த தலைப்பு பொருத்தமாக தோன்றுகிறது நண்பர்களே? ..//

  - இரசித்துக் கொல்ல வேண்டும் - இது மிகப் பொருத்தம்


  //... பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போது அவற்றில் உள்ள சிறந்த கதை மட்டுமே நம் மனதில் தங்கும்! அதன் தாக்கத்தால் மற்ற ஓரளவு நல்ல கதைகளும் படு சுமார் எனத் தோன்றக் கூடிய அபாயம் இருக்கிறது! ... // -

  சரியான point


  //.... பேஸ்புக் பக்கம் தலைய வச்சுக் கூட படுக்கறது இல்ல; நான் ரொம்ப நல்ல பையனாக்கும், தடுக்கி விழுந்ததுல லைட்டா எட்டிப் பார்த்தேன்' என்று லயன் ப்ளாகில் பில்டிங் கட்டும் பேஸ்மென்ட் வீக் பார்ட்டிகளுக்கும் இது பொருந்தும் ..//

  இன்னொரு நெத்தியடி

  ReplyDelete
  Replies
  1. //எனக்குமே தூய தமிழில் படிக்கவே விருப்பம். இருந்தாலும், இக்கருத்தை நானும் முன்மொழிகிறேன்//
   உங்களின் இந்த கருத்தே நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்களும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது! மீண்டும் அந்த 2 உதாரணங்களை படியுங்கள்!

   Delete
 3. எப்பொழுதும்போல நடுநிலை கருத்தைக்கூறி உள்ளீர். தூய தமிழில் படிக்கும்போது சந்தோசம்தான். யெளவனமான யுவதி - இதற்கு பதிலாகா வழக்கில் உள்ள இளநங்கை என்று வந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும். மற்றவைக்கு மாற்றுச்சொல் என்னிடம் இல்லை. கிரீன் மேனர் கதையில் உங்களுடைய மொழிபெயர்ப்பு, சலிப்பில் ஒரு ஆறுதல்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமேஷ்!!

   Delete
  2. //யெளவனமான யுவதி - இதற்கு பதிலாகா வழக்கில் உள்ள இளநங்கை என்று வந்திருந்தாள்//

   டியர் ரமேஷ், எல்லா இளநங்கைகளும் யெளவனமான யுவதிகள் அல்ல ,எல்ல யெளவனமான யுவதிகளும் இளநங்கைகள் அல்ல. புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைகிறேன். : )

   Delete
 4. கார்த்தி,

  நல்ல பதிவு !

  /* தமிழில் வந்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக குறை கூறிக் கொண்டிருக்கும் கனவான்களுக்கான */

  இது நான் இல்லை :-) எனக்கு ஆங்கிலத்திலும் அறவே பிடிக்கவில்லை GREEN MANOR என்பதை உங்களிடம் தெரிவித்திட்டேன் தானே !

  /* கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது */ - என்ன சொல்ல வர்றீங்க :-)

  /* பூக்காரம்மா கோச்சுக்கும்ல?! */ - ஏதோ கைல பூமாலை :-p

  ரமேஷ் சொல்லுவது போல உங்கள் மொழிப்பெயர்ப்பு அயர்ச்சியில் ஒரு ஆறுதல் ! Keep it up !!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராகவன்! :) அந்தக் கனவான் நீங்கள் அல்ல என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?! ;)

   Delete
 5. /* 'சில' வாசகர்கள் */ - இப்போதான் அவர்கள் யார் என்று பார்த்தேன் - ஹி ஹி :-)

  ReplyDelete
 6. வழ இலாத ெசாரேயாகக அக ேவடா, அைவ தா கா பக யபவக ஒ தைடயாக அைம ட// நானும் இதே கருத்தை கூறலாம் என்றுதான் நினைத்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. இது என்ன புதுவிதமான Font கிரி?! :)

   Delete
 7. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பா! (நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்..... )

  ஹிஹிஹிஹி.... காரணம் சொல்ல மாட்டேன்..... :)

  ReplyDelete
  Replies
  1. //விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பா!//
   இதுல என்னங்க விழிப்புணர்வைக் கண்டீங்க?! :D

   //நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்..... //
   KBT-ல கலந்து கொள்ளாம எஸ்கேப் ஆன கதைய தான சொல்றீங்க?! ;)

   Delete
 8. கிரீன் மேனார் மொழி பெயர்ப்புக்கும், இந்தியா டுடே சித்திரக்கதை கட்டுரையில் இடம் பெற்றதுக்கும் வாழ்த்துக்கள் கார்த்திக்... ஆல் நியு ஸ்பெஷல் ஒரு அலசல் - சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. மூன்று நன்றிகள் நண்பரே! :)

   Delete
 9. நானும் வந்தேன், உங்கள் பதிவை படித்தேன் இப்போ கிளம்புகிறேன். வர்ட்டா..... :-)

  ReplyDelete
 10. // நல் நேர நஞ்சு, - போன்ற வழக்கில் இல்லாத பிரயோகங்கள்!//

  இதை ஒரு தொழிற் பெயர் அல்லது காரணப்பெயர் எனக்கொள்ளலாம். அந்த விஷத்தின் பெயர் CINE BOOK கில் இப்படி வருகிறது "ATTERMINATUM ATTEMPERATUM" . இந்த பெயர் மட்டும் வழக்கில் உள்ளதா என பார்க்கவேண்டாமா ??? இதை அப்படியே "அடடெர்மிநெடம் அடெம்பெரட்டும்" என DIRECT ஆகா மாற்றியிருந்தால் உங்களுக்கு பிரசனை இல்லை என நினைகிறேன். நம் ஆசிரியர் பாவம் கஷ்டப்பட்டு ஒரு அருமையான மாற்று தமிழ் பெயர் கொடுத்து நம்மிடையே வாங்கிகட்டிகொண்டிருக்கிறார். : (

  என்னை பொறுத்தவரை இந்த இடத்தில ஆசிரியரின் வார்த்தை பிரயோகம் அருமை அட்டகாசம் என சொல்லுவேன்.

  ReplyDelete
  Replies
  1. @விஸ்கி-சுஸ்கி:

   //நம் ஆசிரியர் பாவம் கஷ்டப்பட்டு ஒரு அருமையான மாற்று தமிழ் பெயர் கொடுத்து நம்மிடையே வாங்கிகட்டிகொண்டிருக்கிறார்//
   ஆசிரியரை குறை சொல்வது என் நோக்கமல்ல நண்பரே! வழக்கில் இல்லாத சொற்பிரயோகங்கள் அதிகம் வேண்டாம், அவை புதிதாய் காமிக்ஸ் படிக்க முயல்பவர்களுக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடும் என்பதே என் எண்ணம்! :)

   //இதை அப்படியே "அடடெர்மிநெடம் அடெம்பெரட்டும்" என DIRECT ஆகா மாற்றியிருந்தால் உங்களுக்கு பிரசனை இல்லை என நினைகிறேன்//
   "Venenum Atterminatum Attemperatum" என்ற இலத்தீன் மொழிச் சொற்றொடருக்கு "குறித்த கெடுவில் கொல்லும் நஞ்சு" என்று பொருள் கொள்ளலாம்!

   Borgia என்ற இத்தாலிய ராஜ குடும்பம் இது போன்ற முறைகளை கையாண்டிருக்கிறது (As per Cinebook)!
   http://en.wikipedia.org/wiki/House_of_Borgia
   http://en.wikipedia.org/wiki/Lucrezia_Borgia

   Delete
 11. @ கார்த்திக்

  'இரசித்துக் கொல்லவேண்டும்' - இந்தத் தலைப்பின் கீழ் மொழிபெயர்ப்பு மட்டுமே உங்களுடயதென்றும், தலைப்பு எடிட்டரால் வைக்கப்பட்டதென்றும் இத்தனை நாள் நினைத்திருந்தேன்!
  என்னே என் மடமை?!!
  இதைவிடப் பொருத்தமான, நயமான தலைப்பு வைத்திட முடியாது எனுமளவுக்கு தலைப்பிலேயே உங்கள் ரசணையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!

  இப்பதிவிலுள்ள மற்ற விசயங்கள் எனக்கு அரைகுறையாகவே புரிவதால் அதைப்பற்றி no comments! :)

  ReplyDelete
  Replies
  1. //தலைப்பிலேயே உங்கள் ரசணையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்/
   நன்றி விஜய்!

   //இப்பதிவிலுள்ள மற்ற விசயங்கள் எனக்கு அரைகுறையாகவே புரிவதால் அதைப்பற்றி no comments! :)//
   ;)

   Delete
 12. @ விஸ்கி-சுஸ்கி

  'நல் நேர நஞ்சு'க்கும், 'யெளவன யுவதி'க்கும் நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் ரசிக்க வைக்கிறது! இந்த விளக்கம் நம் நண்பர்களுக்கு (என்னையும் சேர்த்துத்தான்) அவசியமானதும் கூட!

  ReplyDelete
  Replies
  1. அந்த விளக்கம் எனக்கு அரைகுறையாகவே புரிவதால் அதைப்பற்றி no comments! :D

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia