காவலாளிகளின் காவியம் - 2 - வாட்ச்மென், ஒரு அலசல்!

சூப்பர் ஹீரோக்கள் பற்றிய முன்கதையை முந்தைய பாகத்தில் பார்த்தோம். அரசாங்கத்தால், பெரும்பாலான முகமூடி நாயகர்கள் தடை செய்யப் பட்டு எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், பல புதிரான சம்பவங்கள் நிகழத் துவங்குகின்றன.

1985 - காமெடியன், கொடூரமாகக் கொல்லப் படுகிறான்! அது ரோர்ஷாக்கிற்கு சந்தேகத்தை அளிக்க; ஓய்வில் இருக்கும் மற்ற சூப்பர் ஹீரோக்களைச் சந்தித்து, எஞ்சியவர்களுக்கும் இதே கதி நேரக் கூடும் என எச்சரிக்கிறான்! அடுத்த ஓரிரு வாரங்களில் பல தொடர் சம்பவங்கள் நடந்தேறுகின்றன! Dr.மன்ஹாட்டன், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பகிங்கரமாக அவமானப் படுத்தப்படுவதால், மனமுடைந்து மார்ஸ் கிரகம் சென்று விடுகிறான்! ஓசிமண்டியஸ் மீது கொலை முயற்சி நடக்கிறது! ரோர்ஷாக் சிறை பிடிக்கப் படுகிறான்! இதனிடையே, சோவியத் யூனியன் - ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை ஆகிய நாடுகளை ஊருடுவுகிறது!

சூப்பர் ஹீரோக்களை முடக்கும் இத்தொடர் நிகழ்வுகளின் பின்னணியில் இருப்பது, சோவியத் யூனியனா என்ற கேள்வி எழுகிறது! ஏனெனில், Dr.மன்ஹாட்டனின் வருகை, அணுசக்தி படைத்த சோவியத் வல்லரசின் வலிமையைக் கேள்விக் குறியாக்கி இருந்தது! Dr. மன்ஹாட்டன் பூமியில் இல்லாததால், "சோவியத், அடுத்தாக அமெரிக்கா மீதும் கை வைக்குமா? அது மூன்றாம் உலகப் போராக மாறி, அணுகுண்டுகளால் உலகம் அழியுமா?" என்றெல்லாம் மக்கள் அஞ்சி நடுங்கத் துவங்குகின்றனர்!

தாக்குதல் வருகிறது; ஆனால், எதிர்பாரா திசையில் இருந்து! அதிலிருந்து அமெரிக்காவைக் காக்க, மாறுபட்ட குணநலன்கள் கொண்ட முகமூடி நாயகர்கள் ஒன்று பட்டார்களா? அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை என்ன?! சுயநலமிகள் சிலர், பொதுநலன் என்ற பெயரில், குரூரமான ஒரு முடிவை அரங்கேற்றும் கனமான இறுதிக் காட்சியுடன், இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது வாட்ச்மென்!

ஆலன் மூர் - இந்நாவலின் கதாசிரியர் (எழுத்தாளர் பாலகுமாரனை நினைவுறுத்தும் தோற்றம்!); காமிக்ஸ் வட்டாரத்தில் மிகவும் பரிச்சயமான பெயர்! இவர் கதை சொல்லி இருக்கும் விதமும், பாத்திரப் படைப்பில் செலுத்தி இருக்கும் கவனமும் வியப்பைத் தருகின்றன! குறிப்பாக, ரோர்ஷாக்கின் பாத்திரம்!

ரோர்ஷாக் எனப்படுவது, ஒரு உளவியல் சோதனை! இருமருங்கிலும் சீரான வடிவங்கள் கொண்ட சித்திரங்களை, சோதனைக்கு உட்படுத்தப் படுபவரிடம் காட்டி, அவற்றைப் பற்றிய அவரின் எண்ணங்களை உளவியல் ரீதியாக அலசும் முறை! இக்கதையின் நாயகர்களில் ஒருவன், முகத்தின் அசைவுகளை, 'ரோர்ஷாக் சித்திரங்களாக' மாற்றிக் காட்டும் முகமூடி அணிந்து, அதையே தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டவன்! சிறையில் அவனை மனவியல் நிபுணர் ஒருவர் விசாரிக்கும் காட்சிகள் மிகவும் வலிமையானவை! சிறியதாக ஒரு எடுத்துக்காட்டு இதோ:
கதையின் இடையிடையே, வாடிக்கையாளர்களுடன் அரசியல் பேசும் ஒரு நடைபாதை பத்திரிக்கை வியாபாரியும், கடை அருகே அமர்ந்து 'காமிக்ஸ் தொடர்' படிக்கும் சிறுவனும் வருவார்கள்! சிறுவன் படிக்கும் காமிக்ஸில் உள்ள படங்களும், வசனங்களும் - இந்தக் கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப உள்ளே புகுத்தப் பட்டிருக்கும். வெட்டி அரசியல் பேசியும், கற்பனை உலகில் சஞ்சரித்தும் திரியும் சராசரி மனிதர்களை, இந்தப் பாத்திரங்கள் வாயிலாக ஆலன் மூர் உணர்த்தி இருப்பார்; இது போன்ற வேறு பல யுக்திகளையும் இக்கதையில் கையாண்டு இருக்கிறார்! Dr.மன்ஹாட்டன், காலத்தின் முன்னும் பின்னும் பயணித்து, தனக்குத் தானே பேசிக்கொள்ளும் காட்சிகள் இன்னொரு உதாரணம்!
டேவ் கிப்பன்ஸ் - இக்கதையின் ஓவியர்! ஒவ்வொரு தலைமுறை மக்களுக்கு ஒரு பொதுவான தோற்றமும், அந்தந்த கால கட்டத்திற்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியும் இருக்கும்! அவற்றை மிக அழகாக சித்திரங்களில் சிறைப் படுத்தி இருக்கிறார் கிப்பன்ஸ்! நாயகர்களின் உணர்வுகளையும், கலவர சூழ்நிலையையும் மிகவும் துல்லியமாக பிரதிபலித்து இருக்கிறார்!
இந்த 27 வருட பழைய கதையை, நிகழ்காலத்திற்கும் பொருத்திப் பார்க்க முடிவது வியப்பு! அன்று, அமேரிக்கா வியட்நாமில் அடி வாங்கியது - இன்று ஆஃப்கானிஸ்தானில்! அன்று, சோவியத் ஆஃப்கானிஸ்தானை ஊருடுவியது - இன்று உக்ரைனை! இந்த மாற்றங்களையும்; இரண்டாம் தலைமுறை முகமூடி நாயகர்களுக்கு பதிலாக, மூன்றாம் தலைமுறையையும் உள்ளே நுழைத்தால், உறுத்தல்கள் ஏதும் இன்றி கதையை புதுப்பித்து விடலாம்!

ஆனால், 2009-ல் திரைப்படமாக வந்து தோல்வி அடைந்திருக்கிறது இக்கதை! திரைக்குத் தேவையான மாற்றங்களை செய்யத் தவறியது, தோல்விக்கான காரணமாக கருதப் படுகிறது. முழுப்படம் எப்படியோ, ஆனால், Youtube-ல் தனித் தனிக் காட்சிகளைக் கண்டபோது, சிறப்பாகவே தோன்றின. எனது அபிமான நாயகர்களில் ஒருவனாகி விட்ட ரோர்ஷாக், சிறையில் மற்ற கைதிகளைப் பார்த்து 'பன்ச் டயலாக்' பேசும் காட்சி இதோ: "None of you seem to understand. I'm not locked in here with you... you're locked in here with me!" (உங்க யாருக்கும் ஒரு விஷயம் புரிஞ்ச மாதிரி தெரியல! நான் உங்களோட சேர்ந்து, இந்த சிறையில இல்ல! நீங்க தான், என்னோட கைதிகளா இருக்கீங்க!)


இதன் Motion Comics வடிவம் வித்தியாசமாக உள்ளது!


வாட்ச்மென்,
- சூப்பர் ஹீரோ கதைகளின் பூச்சுற்றல்களுக்கு இடையே, யதார்த்தைத் தேடுபவர்களுக்கு பிடிக்கும்!
- "சூப்பர் ஹீரோ என்பதே மிகை கற்பனை; அதில் நடைமுறை தேடுவது, நகைப்புக்குரியது!" என யதார்த்தம் பேசுபவர்களுக்கு பிடிக்காது!

... என்றெல்லாம் மேலோட்டமாக வகை பிரித்து, படிக்கக் கூடிய அல்லது தவிர்க்கக் கூடிய கிராஃபிக் நாவல் அல்ல!

காரணம், சித்திரங்களில் பொதிந்திருக்கும் சின்னஞ்சிறு விவரங்களும், தத்துவ நெடி தூக்கலான வசனங்களும் பலமுறை மறுவாசிப்பைக் கோருகின்றன; ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும், மூன்று முதல் ஐந்து பக்கங்கள் வரை நீளும், சூப்பர் ஹீரோக்களின் டைரிக் குறிப்புக்கள் பொறுமையைச் சோதிக்கின்றன! கதாசிரியர் மேலோட்டமாக தொட்டுச் செல்லும் அரசியல் மற்றும் வரலாற்றுக் குறிப்புக்கள், விக்கிபீடியாவை தேட வைக்கின்றன! இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்காவைப் பற்றி நுணுக்கமாகப் புரிந்து கொள்ளாமல் படிப்பவர்களுக்கு, வாட்ச்மென் எந்த பாதிப்பையும் தராது என்பது தான் உண்மை!

"சூப்பர் ஹீரோக்களும், பலகீனமானவர்களே!" என்பதை பலமாகச் சொல்லும் இக்கதை, காமிக்ஸ் வாசகர்கள் அனைவரையும் கவராது! ஆனால், 'சித்திரக் கதைகளில் கனமான கதைக்களம் இருப்பதில்லை!' எனக் கூறும் தீவிர இலக்கிய வாசகர்கள், மேலே சொன்ன விவரங்களை மனதில் கொண்டு, இந்த சித்திரப் புதினத்தை பொறுமையாக வாசிப்பார்களேயானால், படம் வழியே கதை சொல்லும் ஊடகத்தின் மீதான தங்களின் இளக்காரப் பார்வையை மாற்றிக் கொள்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

Image Credits: DC Comics, Wikipedia & ComicVine

11 comments:

 1. I liked the movie.it seems this is the only story available for watchmen.the end is unexpected though it may depict the reality..feeling pity on Rorschach.

  ReplyDelete
  Replies
  1. Try the GN when you get a chance, you'll like it even more - but yes, you need a lot of patience to complete the book

   Delete
 2. சூப்பர் ஹீரோ கதைகளுடன் என்றுமே ஒரு ஈர்ப்பு வந்ததில்லை என்பதால் இம்மாதிரி காம்ப்ளெக்ஸான ப்ளாட்டுகளை மேலோட்டமாகப் பார்க்கும்போதே கூடுதல் பீதியை கிளப்புகிறது! :D

  ஒருவேளை இதே Bizarre உணர்வு நமது இதிகாச / புராணக் கதைகளை அயல்நாட்டினர் வாசிக்க முற்படும்போது, அவர்களுக்கும் ஏற்படுமோ?!

  ReplyDelete
  Replies
  1. //இதே Bizarre உணர்வு// சர்வ நிச்சயமாக ஏற்படும்! :D அதுவும் நம் கதைகளில், எக்கச்சக்கமான பாத்திரங்கள், கிளைக்கதைகள் இருப்பதால், ரொம்பவே குழம்பிப் போய் விடுவார்கள்!

   எனக்கும் அதே கதி இந்த நாவலில் நேர்ந்தது - சூப்பர் ஹீரோக்களை அவ்வப்போது அவர்களின் நிஜப் பெயரிலும் குறிப்பிட்டு மண்டையைக் காய வைத்து விட்டார்கள்; அதிலும் சிலருக்கு வெர்ஷன் 1, வெர்ஷன் 2 பெயர்கள் வேறு!!! :D

   சூப்பர் ஹீரோ கதைகளுக்கு நானும் புதுசு தான்... இப்போது தான் அந்தப் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறேன். :P

   Superman, Spiderman வகையறா பிடிக்குமா என்று தெரியவில்லை (படங்களில் பிடிக்கும்). இப்போதைக்கு, Batman-ன் தேர்ந்தெடுத்த சில கதைகளை படிக்க உள்ளேன்...

   Delete
 3. முதலில் பாலகுமாரன் ஒற்றுமை ஆச்சரியம் !

  உங்களின் ஆழமான விவரிப்பை படித்தவுடன் வாட்மேனை படிக்கவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.

  உங்களின் சர்வதேச அரசியல் பார்வை அரிதான ஒன்று ! சோவியத் ஊடுருவிய ஆப்கான் காலத்து பனிப்போரை உலக அரசியலை அலசும் நம் சுதேசி வல்லுநர்கள் கூட சில சமயங்களில் மறந்துவிடுகின்றனர் ! இன்றை அடிப்படைவாதத்தின் வேர்கள் அங்கிருந்துதான் ஆரம்பமாகின !!

  ReplyDelete
  Replies
  1. அவசியம் படியுங்கள் சாமானியன்; ஆங்காங்கே தொய்வுடன் பயணிக்கும் மிக நீண்ட கதை என்பதால், பொறுமையான வாசிப்பு மிக அவசியம். ஆனால், படித்து முடித்ததும் நிறைவாக உணர்வீர்கள்.

   மற்றபடி, சர்வதேச அரசியலை உன்னிப்பாக கவனித்ததில்லை. ஆனால், இந்த அமெரிக்கா (+NATO நாடுகள்) Vs சோவியத் பனிப்போர் மோதல்கள் சற்று சுவாரசியமானவை. சிறுவனாய் இருந்த போதே, ஜேம்ஸ் பாண்ட் (ராணி காமிக்ஸ்) புண்ணியத்தில் தோன்றிய ஆர்வம் அது!

   Delete
 4. ரியல் லைப் சூப்பர் ஹீரோஸ்(RLSH) என்றொரு COMMUNITY அமெரிக்காவில் மிகப்பிரபலம். "கிக் ஆஸ்" படம் பாத்திருக்கீங்களா நண்பா? காமடி படமான அதுல சூப்பர் ஹீரோஸ் பத்தி வண்டி வண்டியா கிண்டல் அடிச்சிருப்பாங்க. படம் பாக்கும் போது உண்மையாவே அந்த DIRECTER காமிக்ஸ் புத்தகங்களையும், அதை தழுவிய சீரியஸ் சூப்பர் ஹீரோ படங்களையும் தான் கிண்டல் அடிக்கறாருன்னு நினைச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது உண்மையாவே அப்படி ஒரு குரூப், தங்கள ஹீரோக்களா நினைச்சுட்டு, முகமூடி போட்டுகிட்டு அங்கே, இரவுல தெருவுல சுத்தீட்டு இருக்குன்னு! அவங்க தான் இந்த RLSH COMMUNITY. கூகுள் பண்ணி பாத்தா இவங்கள பத்தி ஏகப்பட்ட விஷயம் கிடைக்கும்.
  நம்ம ஊருல ராமராவும் அனுமானவும் வேஷம் போட்டவங்க யாரும் COMMUNITY வொர்க் பண்றதில்ல. பிச்சை தான் எடுக்கறாங்க. அசலூர் ஹீரோக்கள் கிட்ட நவீன ஆயுதங்கள் இருக்கு. நம்ம ஹீரோக்கள் கிட்ட இருக்கறது அம்பும்,கதாயுதமும் தான். இத வைச்சுகிட்டு சமூக விரோதிகளா பிடிக்கறதுக்கு, இரவுல தெருவுல சுத்தறத பத்தி யோசனை பண்ணாலே சிரிப்பு சிரிப்பா வருது.
  BACK TO CORE TOPIC,
  // சித்திரங்களில் பொதிந்திருக்கும் சின்னஞ்சிறு விவரங்களும், தத்துவ நெடி தூக்கலான வசனங்களும்//
  எந்த ஒரு தொடரும் வெற்றி பெற இது ஒரு MINIMUM GUARANTEE FORMULA! அருமையான விமர்சனம் நண்பா. என்னுடய WISHLIST டில் மேலும் ஒரு பெயர் சேர்த்தாயிற்று. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. //ரியல் லைப் சூப்பர் ஹீரோஸ்(RLSH) என்றொரு COMMUNITY அமெரிக்காவில் மிகப்பிரபலம்//
   சுவாரசியமான தகவல்!

   //நம்ம ஊருல ராமராவும் அனுமானவும் வேஷம் போட்டவங்க யாரும் COMMUNITY வொர்க் பண்றதில்ல. பிச்சை தான் எடுக்கறாங்க//
   :) இல்லைன்னா காமெடிக்கு யூஸ் பண்ணிப்பாங்க!

   ராமாயணத்தை Futuristic setting-ல் கூறும் ஒரு கிராஃபிக் நாவலை சமீபத்தில் வாங்கினேன் - விரைவில் படிக்க வேண்டும்:
   http://en.wikipedia.org/wiki/Ramayan_3392_A.D.

   Delete
 5. இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்
  ......................................................
  வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,
  தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது. 
  - இணையுரு (WebFont)  என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
  - இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு  ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?
  - இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?
  - அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?
  என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.  
  தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...
  சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
  இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html 
  இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை 
  1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891
  2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053

  (அல்லது)
  1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html 
  2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html  

  மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.

  நன்றி மற்றும் வணக்கம்
  ராஜு.சரவணன்  

  படித்தவுடன் இதை நீக்கிவிடவும் 

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia