கோச்சடையான் - சித்திரமும், சரித்திரமும்!

'ஹாலிவுட் படங்களுக்கு நிகரான', 'அவதார் படத்துக்கு இணையான' என்று எக்கசக்க பில்ட்-அப் கொடுத்த பின்னர், அதற்கு எதிர்மாறான ட்ரைலரை தைரியமாக ரிலீஸ் செய்தது இந்தப் படத்திற்கு சாதகமாக அமைந்து விட்டது! எனது எதிர்பார்ப்பை குறைக்க உதவி, படத்தை ரசிக்க வைத்தது அந்த  ட்ரைலர் தான்!

கோச்சடையானில் வரும், அரண்மனை, ஆடை அணிகலன்கள், கட்டிடங்கள், கப்பல்கள், ரதம் போன்ற உயிரற்ற பொருட்கள், உயிரோட்டத்துடன் தத்ரூபமாக இருக்கின்றன - இதற்காகவே இப்படத்தைப் பார்க்கலாம்! ஆனால், உயிருள்ள ஜீவன்கள் தான் உயிரற்று பரிதாபமாக நடமாடுகின்றன! பெரிதும் விளம்பரப் படுத்தப் பட்ட மோஷன் கேப்ச்சர், பார்வையாளர்களின் ஏமாற்றத்தை மட்டுமே கேப்ச்சர் செய்திருக்கிறது. மனதில் ஒட்டாத பாடல்களுக்கு (ஏ.ஆர்.ரஹ்மான்?!) செலவழித்த நேரத்தையும், பணத்தையும் மற்ற காட்சிகளை மேம்படுத்துவதில் பயன்படுத்தி இருக்கலாம்; சண்டைக் காட்சிகளை படமாக்கிய விதம் மட்டும் ஆறுதல் தருகிறது!

சூப்பர் ஸ்டாரின் வசீகரமான குரல், தீபிகாவை விட இளமையான ரஜினி,  படுகோனேவின் படு இறுக்கமான உடைகள், அனிமேஷனுக்கு பின்னே ஒளிந்திருக்கும் நடிகர்களின் முகங்களையும், குரல்களையும் தேடுவது போன்ற சிறுசிறு சுவாரசியங்களைத் தாண்டியும் இப்படத்தில் ரசிப்பதற்கு ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது; கோச்சடையான், ஒரு விறுவிறுப்பான வரலாற்றுக் கதை என்பதே அது!

விர்க்க இயலா ஒரு சூழ்நிலையில், எதிரி தேசமான கலிங்கபுரியிடம், தனது படைகளை ஒப்படைத்து விட்டு நாடு திரும்புகிறான் கோட்டைப் பட்டினத்தின் வீரத்தளபதி கோச்சடையான் (ரஜினி 1)! அதையே சாக்காக வைத்து, அவன் மீது தேசத் துரோக பட்டம் சுமத்தி, சிரச்சேதம் செய்கிறான் பொறாமை கொண்ட கோட்டைப் பட்டினத்து மன்னன் (நாசர்)! தன் தந்தை மீதான அவப் பெயரைத் துடைக்க, கோச்சடையானின் மகன் ராணா (ரஜினி 2) எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் தான் படத்தின் கதை!

த்தனை காலம் ஆகி விட்டது, இப்படி ஒரு முழுநீள வரலாற்றுப் படத்தைப் பார்த்து! இம்சை அரசன் 23ம் புலிகேசி, பொன்னர் சங்கர், தெனாலி ராமன் ஆகிய சில வரலாற்றுப் படங்கள் சமீபத்தில் வந்திருந்தாலும், அவற்றின் திரைக்கதை இந்த அளவு விறுவிறுப்பாக இல்லை என்பதே உண்மை! கே.எஸ்.ரவிக்குமார் எழுதியிருக்கும் இக்கதை வழக்கமான ஒன்று தான்; லாஜிக் ஓட்டைகளுடன் கூடியது தான்! ஆனால், அதை சொல்லியிருக்கும் விதமே இப்படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது! எதிர்பார்ப்புக்களை இறக்கி வைத்து விட்டு சென்றால், ஏமாறாமல் திரும்பி வரலாம்!

பெரும்பாலான ஹாலிவுட் அனிமேஷன் மற்றும் சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாவதற்கு முன்னரும், பின்னரும் அவற்றின் காமிக்ஸ் வடிவங்களை வெளியிட்டு அதிலும் கொஞ்சம் பணம் பார்ப்பார்கள்! கோச்சடையானின் இறுதிக் காட்சியில் இரண்டாம் பாகத்திற்கு அடி போட்டிருக்கிறார்கள். ஒருவேளை இப்படம் கமர்ஷியல் வெற்றியைச் சந்திக்கா விட்டால், இதன் இரண்டாம் பாகம் வராமலேயே போய் விடலாம்!

ஆனால், இதன் தொடர்ச்சியை காமிக்ஸ் வடிவத்தில் வெளியிட்டால் - அதிக பொருட்செலவும் இருக்காது, ஒரு புதிய வடிவத்தின் மூலம் மக்களை சென்றடைந்தது போலவும் இருக்கும்! குறைந்த பட்சம், இப்போது வெளியாகி இருக்கும் முதல் பாகத்தை, காமிக்ஸ் வடிவில் வெளியிட்டு அதன் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று ஆழம் பார்க்கலாமே?!

பின்குறிப்பு: தமிழில் வெளிவந்த முதல் அனிமேஷன் படம், வந்த சுவடே தெரியாமல் சென்ற "இனிமே நாங்க தான்"; இதன் ட்ரைலர் சில வருடங்களுக்கு முன்னர் டிவி சானல்களில் வந்தது - படம் பரவலாக வெளியானதா என்று தெரியவில்லை! இந்தியாவில் தயாரிக்கப் பட்ட முழுநீள அனிமேஷன் திரைப்படங்களில், தமிழ்நாட்டின் பங்கு அதிகம் இருக்கிறது என்பது விக்கிபீடியாவை பார்க்கும் போது தெரிகிறது!

 
***

கருத்துகள்

  1. //உயிருள்ள ஜீவன்கள் தான் உயிரற்று பரிதாபமாக நடமாடுகின்றன! // கோச்சடையான் பார்த்துவிட்டு நான் நினைத்ததும்

    ஆனாலும் படம் எனக்கு பிடித்துள்ளது :-)

    பதிலளிநீக்கு
  2. நான் இன்னும் படம் பார்க்கவில்லை நண்பரே ... ஜூன் முதல் வாரத்தில் மகனுடன் (சார் இப்போ ஸ்கூல் லீவ் என்பதால் tour ல பிஸி யாக இருக்கிறார்) தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்துள்ளேன்.

    பதிவர்களின் விமர்சனங்களை பார்க்கும் பொழுது இந்த புத்துய முயற்சி வெற்றியே என தெரிகிறது ....


    Grafikcomics.com - என்ன ஆச்சு நண்பரே ... no updates ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சார் இப்போ ஸ்கூல் லீவ் என்பதால் tour ல பிஸி யாக இருக்கிறார்//
      அடுத்த வாரம் வரை கொண்டாட்டம் தான்! :)

      Grafikcomics ஆ?! எங்கேயோ கேள்விப் பட்ட பெயராக இருக்கிறதே?! :P

      நீக்கு
  3. காமிக்ஸில் வந்தால் எனக்கு(ம்) தெரிவியுங்கள் கார்த்திக்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஏதாவது நடந்தால், எனக்குத் தெரிவதற்கு முன்னர், மீடியாக்களின் உபயத்தில், உலகுக்கே தெரிந்து விடுமே :D

      நீக்கு
  4. Songs are very good and fit the movie. Three months from now, you will revise this, I reckon.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் பையன்! பாடல்கள் ஒருவேளை கேட்கக் கேட்க பிடித்துப் போகலாம் - ஆனால், படம் பார்க்கும் போது அவை வேகத் தடையாக இருப்பதாகவே உணர்ந்தேன்!

      நீக்கு
  5. நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை !

    தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமில்லாத சூழ்நிலையில், இந்த படம் நல்ல முயற்சிதான். லாஜிக் ஓட்டைகளிருந்தாலும், கே. எஸ். ரவிகுமார் ஒரு வெற்றிகரமான கமர்சியல் இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை.

    உங்களின் காமிக்ஸ் யோசனை நிச்சயமாய் பலன் தர கூடிய ஒன்று என தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினி அவர்களின் ஸ்டார் வேல்யூ, காமிக்ஸ் மீது மக்களின் கவனத்தை லேசாக திருப்பக் கூடும் என்பது கூடுதல் பலன்!

      நீக்கு
  6. //எனது எதிர்பார்ப்பை குறைக்க உதவி, படத்தை ரசிக்க வைத்தது அந்த ட்ரைலர் தான்!//
    கார்த்திக்...நச் !!

    என்னை பொறுத்தவரை நம்மால் சமகால தரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒரு படைப்பை படைக்கமுடியாவிட்டால்/படைக்ககூடிய தொழில்நுட்பம் நம்மிடையே இல்லாதபோது/இருப்பதில் மார்க்கெட் ஸ்டாண்டர்ட் தொழில்நுட்பத்தை, நம்மால் பயன்படுத்த முடியாதபோது, அதில் முயற்சியெடுப்பது வீண் வேலை என்று சொல்வேன். முடிவில் தயாரிப்பாளர்கள்/விநியோகிஸ்தர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இவர்கள் கொடுக்கும் பில்ட் அப்பில் மயங்கும் ரசிகர்களின் நிலையும் பரிதாபம்.

    //கோச்சடையானில் வரும், அரண்மனை, ஆடை அணிகலன்கள், கட்டிடங்கள், கப்பல்கள், ரதம் போன்ற உயிரற்ற பொருட்கள், உயிரோட்டத்துடன் தத்ரூபமாக இருக்கின்றன - இதற்காகவே இப்படத்தைப் பார்க்கலாம்! ஆனால், உயிருள்ள ஜீவன்கள் தான் உயிரற்று பரிதாபமாக நடமாடுகின்றன! //

    டிரைலர் பாக்கும்போது எனக்கு தோன்றியதும் இதே சிந்தனை. லேன்ட் scape போன்ற காட்சிகள் வெரி bad . ஆடும் அல்லது flexible பொருட்கள், ஆடாத கட்டை பொருட்கள் என வேண்டுமானால் பிரிக்கலாம்.
    //ஆடை //....? noway! worst rendering :-(!

    //ஒருவேளை இப்படம் கமர்ஷியல் வெற்றியைச் சந்திக்கா விட்டால், இதன் இரண்டாம் பாகம் வராமலேயே போய் விடலாம்!//

    இரண்டாம் பாகம் "ரானா". ரியல் லைப் movie. ஏற்கனவே படபிடிப்பு ஆரம்பித்தாயிற்று என எங்கோ படித்த ஞாபகம்.

    //ஆனால், இதன் தொடர்ச்சியை காமிக்ஸ் வடிவத்தில் வெளியிட்டால் - அதிக பொருட்செலவும் இருக்காது, //

    காமிக்ஸில் வருகிறதோ இல்லையோ, கொஞ்சம் நாளில் போகோவில் எதிர்பார்க்கலாம். சோட்ட பீமுக்கு போட்டியாக கோச்சடயான் கலக்கப்போகிறார். :-(((




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனிமேஷன் எதிர்பார்ப்புகளுக்கு / 'ஏற்றி விட்டல்களுக்கு' ஈடுகொடுக்கா விட்டாலும், படம் ரசிக்கும் படியே இருந்தது வி-சு!

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia