ஹரிதாஸ் - அர்த்தமுள்ள தமிழ் படம்!

மற்ற படங்கள் நிறைய நாட்கள் ஓடினால்தான் வெற்றி! ஆனால், இப்படத்தை நிறைய பேர் பார்த்தாலே வெற்றிதான்...
"ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பற்றிய படம் இது! ஆனால், சிறுவர்களுக்கான படம் அல்ல! பெற்றோர்களுக்கான பாடம்!" என்று டெம்ப்ளேட் விமர்சன பாணியில் எளிதாக சொல்லிவிட்டு போய் விடலாம்! ஆனால், அப்படி சொன்னால் ஒரு பயலும் இந்தப் படத்தை பார்க்க மாட்டான்(ர்)! பெங்களூரில் ஒரே வாரத்தில் தூக்கி விட்டார்கள். தமிழ்நாட்டில் நிலைமை எப்படியோ?! மொக்கை படங்களாக தேடிச் சென்று பார்த்துவிட்டு, படம் படு மொக்கையாக இருக்கிறது என்று கண்டு பிடிக்கும் நாம், தரமான படங்கள் வரும் போது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம்! மிகவும் கவலையூட்டும் போக்கு இது! 

சிவதாஸ் (கிஷோர்) மனைவியை இழந்த ஒரு முரட்டு போலிஸ் அதிகாரி - தவிர அவர் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டும் கூட! ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பத்து வயது மகனை தனது தாய் வீட்டில் விட்டு வைத்து சிவனே என்று ரவுடிகளை சுட்டுத் தள்ளும் வேலையை பார்த்து வருகிறார். ஒரு பெரிய ரவுடிக்கு குறி வைத்த வேளையில் தனது தாய் இறந்த தகவல் கிடைத்து ஊர் செல்லும் சிவதாஸுக்கு மகனைக் கண்டதும் உண்மை சுடுகிறது!

முரட்டுத்தனமான சிவதாஸ், முளைத்தும் இலை விடாத சிறுவனுடன் நடத்தும் பாசப் போராட்டம் கதை நெடுகிலும் பயணிக்கிறது! மிகவும் தாமதமாக அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று டோஸ் வாங்குவதும், பள்ளியில் உடன் சென்று அமர்வதும்,  அவன் காணாமல் போகும் போது பரிதவிப்பதும், சற்றும் எதிர்பாரா ஒரு தருணத்தில் அவன் திறமையை இனங்கண்டு நெகிழ்வதும், அவனுக்கு அங்கீகாரம் கிடைக்க போராடுவதும் என ஒவ்வொரு தருணத்திலும் அசத்துகிறார் கிஷோர் - அருமையான அண்டர்ப்ளே!

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனை தன் கவனமாக நடிப்பால் கண் முன் நிறுத்துகிறார் ப்ரித்விராஜ் தாஸ்! வலதுகை விரல்களை ஓயாமல் ஆட்டிக் கொண்டே இருக்கும் அந்த மேனரிசத்தை நிற்கும் போது, நடக்கும் போது, ஓடும் போது என எங்கும் எப்போதும் பிசகாமல் தொடர்கிறார். இது போன்ற கேரக்டர்கள் என்றாலே முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு இலக்கின்றி சிரிக்கும் வழக்கமான சினிமா மேனரிசத்தை உடைத்தெறிந்து நிதர்சனத்தை தன் நடிப்பில் காட்டுகிறார்! தன்னிலை மறந்து தன் திறமையை வெளிக்காட்டும் அந்த குதிரைப் பந்தயக் காட்சி உணர்வுகளை உரக்க மீட்டும் ஒரு வலிய ஆக்கம்!

குழப்பக் குறிப்பு: இப்படி எல்லாம் குழப்பமா எழுதுனாதான் சார் மக்கள் மதிக்கறாங்க!!! :)

டாக்டராக நடித்துள்ள யூகிசேது புத்திசாலித்தனமான வசனங்களின் துணையுடன் கைத்தட்டல் பெறுகிறார். பொறுப்புள்ள டீச்சர் அமுதவல்லியாக, சினேகா தேவையான அளவு நடித்திருக்கிறார். டாக்டர் கோச் போலவும், கோச் டாக்டர் போலவும் பேசுவதாக அவர் புலம்பும் இடம் அருமை. மற்றபடிக்கு தனது ஆட்டிச மாணவனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ முடிவெடுப்பது சினிமாத்தனம்! கிஷோர் அதை மறுப்பது சற்று ஆறுதல்.

ஒரேடியாக உணர்ச்சிப்பூர்வ சித்திரமாக எடுத்துவிட்டால் எடுபடுமா என்ற சந்தேகம் இருந்ததாலோ என்னவோ, தனியே ஒரு திருடன் - போலிஸ் ட்ராக் படம் முழுக்க வருகிறது. உண்மையில் அது படத்தின் வேகத்தை கூட்ட சற்று உதவியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான். ஆனாலும் இப்படி ஒரு க்ளைமேக்ஸ் காட்சி இந்தப் படத்திற்கு தேவைதானா?! ஆட்டிச குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும் படமாக இது அமைந்திருக்கும் அதே வேளையில், அந்த க்ளைமேக்ஸானது ஒரு கசப்புச் சுவையை நாவில் நிறுத்தி விடுகிறது! தவிர்த்திருக்கலாம்!

70 வருடத்திற்கு முன்பு வெளியான ஹரிதாஸுக்கும், புதிய ஹரிதாஸுக்கும் - தமிழ் சினிமா என்ற அடிப்படையில் சில ஒற்றுமைகள் இருப்பின்; பாடல்களையும், மரண மொக்கை நகைச்சுவையையும் கைவிடாதது - இவையிரண்டாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். புதிய ஹரிதாஸில் நான் துளியும் விரும்பாத அம்சங்களும் இவையிரண்டு மட்டுமே! அதிலும் இது போன்ற ஒரு படத்தில் குத்துப்பாடல் என்பதெல்லாம் அநியாயம், அட்டூழியம், அராஜகம்! இவற்றைத் தவிர்த்திருக்கலாம்!

இப்படி ஒரு அர்த்தமுள்ள படத்தை எடுத்த இயக்குனர் GNR குமாரவேலன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்! ஹரிதாஸ் - அவசியம் பார்க்க வேண்டிய அற்புதமான படைப்பு!

கருத்துகள்

 1. ஹா ஹா ஹா உங்கள் விமர்சனம் என்னையும் சுடுவது போல் உள்ளது.. எப்பாடு பட்டாவது நேற்று பார்த்துவிடலாம் என்று சென்னையில் சுற்றினேன், இருந்தும் பார்க்க முடியவில்லை.. திரையில் இருந்து தூக்குவதற்கு முன் பார்க்க நினைக்கும் படம்... உங்கள் விமர்சனம் அருமை

  பதிலளிநீக்கு
 2. அப்ப கிளைமாக்ஸ் டிராஜடியா... அப்ப பாக்க யோசிக்கணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் முடியறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி எழுந்து வந்துருங்க! ஒண்ணும் கெட்டுப் போயிடாது!

   நீக்கு
 3. //அப்ப கிளைமாக்ஸ் டிராஜடியா... அப்ப பாக்க யோசிக்கணும்//
  நானும் அதே ரகம்தான். சோக முடிவு எனில் இயன்ற வரை பார்ப்பதனை தவிர்த்திடுவேன். இருதாலும் உங்கள் விமர்சனம் பார்க்கத்தூண்டுகிறது

  பதிலளிநீக்கு
 4. மொக்கைப் படங்களாக தேடி பார்க்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது... நானெல்லாம் முதல் வாரமே படம் பார்த்து பதிவு போட்டாச்சு...

  நீங்கதான் ரொம்ப லேட்... உங்க பதிவை படிச்சிட்டு படம் (தியேட்டர்ல போய்) பார்க்கணும்ன்னு யாராவது நினைத்தால் கூட திரையரங்கை சிரமப்பட்டு தேட வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேபிள் சங்கர் படம் வெளியாவதற்கு முன்பே பார்த்து விட்டு விமர்சனம் எழுதினார், ஃபிலாசபி பிரபாகரன் படம் வெளியான வாரமே பார்த்து விட்டார்; ஆனால் பல பிரபல பதிவர்கள் இதுவரை விமர்சனமும் போடவில்லை - படம் பார்த்தார்களா என்றும் தெரியவில்லை - என இப்படி எல்லாம் குறிப்பிட்டு கூட எழுதலாம்தான்!!! ஆனால் பிரச்சினை அது இல்லையே?! இது பதிவர்கள் பற்றிய பொதுவான கமெண்ட் இல்லையே?

   பெரும்பான்மையைப் பற்றிப் பேசும்போது பொதுப்படையாகத்தானே பேச முடியும்? இந்தப் பதிவிலேயே நிறைய பேர், 'டிராஜடியா? அப்ப பாக்கறது டவுட்டுதான்' என்கிறார்கள்! இது போன்ற கதையம்சம் கொண்ட ஒரு படத்தை எத்தனை பேர் பார்க்க விரும்புகிறார்கள் என்பதுதான் கேள்வி!

   இந்தப் படத்தில் வரும் ஒரு வசனத்தைப் போல, 'மத்தவங்க படம் எல்லாம் நிறைய நாள் ஓடினாதான் வெற்றி, எங்க படத்தை நிறைய பேர் பார்த்தாலே வெற்றிதான்' என இயக்குனர் ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

   மற்றபடிக்கு படங்களை தாமதமாகப் பார்ப்பதும், அதை விட தாமதமாக விமர்சனம் போடுவதும் என் வாடிக்கையாகிவிட்டது! :)

   நீக்கு
 5. நல்ல விமர்சனங்களை பார்த்ததில் இருந்தே நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த படம்.

  ஆனாலும் சிறு தயக்கம் பேசாமல் DVD வந்த பின் பார்த்துக்கொள்ளலாம என்று.

  அதற்கு முடிவும் ஒரு காரணம்.

  சத்யம் தியேட்டரில் ஓடுகிறது என்று நினைக்கிறன்.வார இறுதியில் முயற்சி செய்யவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. DVD-யில் பார்த்தாலும் அதே முடிவுதான்! இதெல்லாம் ஒரு காரணமா?!!! :)

   நீக்கு
 6. இது போல் இன்னும் நிறைய படங்கள் வருமா...? சந்தேகம் தான்...

  ஆட்டிசம் - உண்மை நிலை வேறு... எழுதிக் கொண்டே போகலாம்... அதை விட திரு. யெஸ்.பாலபாரதி அவர்களின் தளத்தில் முழு விவரங்கள் உண்டு...

  முகவரி : http://blog.balabharathi.net/

  மேலும் அறிய கீழே உள்ள இணைப்பில் சென்று, தரவிறக்கியும் படிக்கலாம்...

  https://docs.google.com/file/d/0BzfUmo1CVqraMEd2VENpMHBDUFU/edit

  இந்தக் கட்டுரை பலருக்கும் உதவும்... முக்கியமாக பெற்றோர்களுக்கு...

  பதிலளிநீக்கு
 7. நான் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

  பதிலளிநீக்கு
 8. என் நெருங்கிய நண்பனின் குழந்தைக்கும் ஆட்டிசம் உண்டென்பதால், இப்படத்தைப் பார்க்கச் சொல்லி முன்மொழியலாமா? ஒரு பாதிக்கப் பட்ட சிறுவனின் தந்தையாக அவர் இப்படத்தைப் பார்த்தால் பிரயோஜனப் படுமா? அல்லது எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துமா?

  விளக்கம் ப்ளீஸ்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாராளமாக பரிந்துரைக்கலாம்! நிச்சயமாக இது ஒரு நம்பிக்கையூட்டும் படம்தான்! ஆட்டிசம் மிகவும் சென்சிடிவ் ஆக கையாளப்பட்டுள்ளது, புண்படுத்தும் காட்சிகள் இல்லை. க்ளைமேக்ஸ் நீங்கள் யூகிக்கும் கோணத்தில் அல்ல! மாறாக துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால்... புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

   நீக்கு
  2. புரிந்தது!

   நன்றி, கார்த்திக்!

   நீக்கு
 9. நல்ல படம் என்று கேள்வி. உங்கள் விமர்சனம் ஆமாம் என்கிறது. பார்க்கிறேன்.

  குழப்பக் குறிப்பு - பிரபல பதிவர்களின் பதிவுகளைப் படித்து விட்டு அதே மாதிரி எழுத ட்ரை பண்ணி இருக்கிறீர்களா ? :D

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia