பரதேசி - சொல்ல மறந்த கதை!

அடிமை முறை கட்டவிழ்க்கும் அராஜகங்கள் பற்றிப் பேசும் படங்கள் தமிழுக்கு புதிதல்ல! இது போன்ற படங்களில் வில்லனாக அவசியம் ஒரு குறுநில மன்னரோ அல்லது ஜமீன்தாரோ இருப்பார். அவரைச் சுற்றி கம்பு தாங்கிய ஒரு முரடர் கூட்டம் துணைக்கு இருக்கும். பெரிய பட்ஜெட் படம் என்றால் முரடர்கள் குதிரைகளில் வலம் வருவார்கள். அந்த ஜமீன்தார் அவரது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களை கொத்தடிமைகளாக வேலை வாங்குவார், அழகாக இருக்கும் அடிமைப் பெண்களை தனது காமப் பசிக்கு இரையாக்குவார். அடிமைகள் கூலி கேட்டால் அடிகள்தான் விழும், களி தின்னக் கூட வழியின்றி அழுதே சாவார்கள்! ஒருநாள் அவர்களில் ஒருவன் திடீரென பொங்குவான், அல்லது அப்படி பொங்கியவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் - அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை அந்தக் கால ஜமீன்தார் படம் தொடங்கி இந்தக் கால ஜமீன்தார் படம் (கலைஞரின் இளைஞன்!) வரை - இவைகளில் ஏதாவது ஒன்றின் இறுதிக் காட்சியை, இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்தாலே தெரிந்து விடும்!

பரதேசியிலும் கிட்டத்தட்ட மேற்சொன்ன அனைத்து அம்சங்களும் இருக்கின்றன! ஆனால் பரதேசி படத்தின் இறுதிக்காட்சி எப்படி இருக்கும் என்பதை அறிய பரதேசி படத்தைதான் பார்க்க வேண்டும்! பாலா படத்தில் இப்படியொரு முடிவு ஆச்சரியகரமானது அல்ல என்றாலும், யதார்த்தம் மீறாத முடிவை வைத்த பாலா தமிழ் இயக்குனர்களில் நிச்சயம் ஒரு பரதேசிதான் (வெளியில் இருந்து வந்தவர் என்ற அர்த்தத்தில்!). எனவே இந்த விமர்சனத்தில் நான் முழுக் கதையையும் சொன்னது போலத் தெரிந்தாலும், படத்தில் பார்க்கும் போது வேறுவிதமாக உணர்வீர்கள். இருப்பினும் இந்த வம்பே வேண்டாம் என்பவர்கள் படம் பார்த்து விட்டு இந்த விமர்சனத்தை படிக்கவும்(?!). மற்றவர்கள் தொடரலாம்!

'தேயிலை / தேனீர் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?' என்பதைப் பற்றி சிறு வயதில் பூந்தளிர் / 'அமர் சித்திரக் கதைகள்' இதழ் ஒன்றின் மூலமாக படித்த ஞாபகம் இருக்கிறது! முன்னொரு காலத்தில், சீனாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடையன், ஆடுகள் ஏதோ ஒரு செடியின் இலைகளைத் தின்ற பிறகும் மிகவும் சுறுசுறுப்பாய் மாறியதை கவனித்து தானும் தின்று பார்ப்பான். தின்ற உடனே புத்துணர்வு கிட்டுவதை உணர்ந்து மகிழ்ச்சியாகும் அந்த இடையன், இந்த 'இரகசியத்தை' அந்நாட்டு மகாராஜாவிடம் சொல்வான். குஜாலாகும் அந்த மகாராஜா, இலைகளை சுடுநீரில் ஊறவைத்து பானமாக அருந்தி, புத்துணர்வுடன் அந்தப்புரம் விரைவார் என்பதாக முடியும்! கதையின் நீதி: சீனாவின் அதீத மக்கள்தொகை பெருக்கத்திற்கு தேநீரும் ஒரு முக்கிய காரணம்!

மகாராஜா அந்தப்புரம் செல்வதாய் முடிவது & கதையின் நீதி - இந்தப் பகுதிகள் மட்டும் அவ்விதழின் ஆசிரியரால் சென்சார் செய்யப்பட்டு மாற்றி அமைக்கப் பட்டன என்பது வேறு விஷயம்! ஒரு படக்கதையில் படித்தது ஆண்டுகள் பல கடந்தும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது! ஆனால் பள்ளிப் பாடங்கள் மூலமாக படித்தது முக்கால்வாசி மறந்து விடுகிறது! படக்கதைகள் மூலம் பாடம் படிக்கும் முறையைக் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமோ?!

அஸ்ஸாமில் தேயிலை அதிகமாக விளைகிறது, சிரபுஞ்சியில் மழை அதிகமாக பொழிகிறது என்றெல்லாம் சிறுவயதில் பாட புத்தகங்கள் வாயிலாக படித்து அறிந்திருந்த எனக்கு; தேயிலையானது பிரிட்டிஷார் மூலமாகத்தான் இந்தியாவில் பிரபலப் படுத்தப்பட்டது, அதன் பின்னணியில் உயிர் நீத்த அடிமைகள் பல்லாயிரம் என்ற உண்மை இப்படி ஒரு படம் வரும் வரையில் சுருக் என்று உறுத்தாமல் இருந்ததிற்கு காரணம் நமது பாடத்திட்டம் மட்டும்தானா அல்லது எனது மறதியும்தானா என்பது புரியவில்லை. 'Red Tea' மற்றும் அதன் தமிழாக்கம் 'எரியும் பனிக்காடு' போன்ற நாவல்களின் பெயர்கள் பாலாவின் பரதேசியால்தானே பலருக்கும் தெரியவந்தன?! Red Tea கதையை எழுதியவரே ஒரு பரதேசிதான் என்பது கூடுதல் தகவல்!

1940-களின் ஒரு தமிழ் கிராமத்தை அதன் இயல்பு குறையாமல் காட்டியிருக்கிறார் பாலா. வறண்டு போன சாலூர் கிராமத்தில், தமுக்கு அடித்து, தானம் கேட்டு பிழைப்பு நடத்தும் ராசா (அதர்வா) மீது காதல் பொங்குகிறது அங்கமாவுக்கு (வேதிகா)! அதர்வா அப்பாவி வேடத்தில் அதகளப் படுத்தியுள்ளார்! ஆனால், படத்தில் துருத்திக்கொண்டு தெரியும் சில விடயங்களில் பிரதானமாய் இருப்பது வேதிகாவின் துடுக்குத்தனம்தான். அச்சம், மடம் & நாணத்துடன் - பிராணநாதா என்று அழைத்து பிராணனை வாங்கியவர்கள் அந்நாளைய பெண்கள் என்று என் மனதில் பதிந்திருந்த பிம்பத்தை விலக்கி வேதிகாவின் பாத்திரப் படைப்பை ஏற்றுக் கொள்வது சிரமமாகவே இருந்தது! அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் எனக்கு ஏனோ, மற்ற பாலா படங்களின் லூஸுக் கதாநாயகிகளே நினைவுக்கு வந்தார்கள்!

அந்நாளில் நடந்த ஒரு தமிழ் திருமணம் & விருந்து எப்படி இருந்திருக்கும் என்பது ஒரு கற்பனையாக மட்டும் இராது, ஆராய்ந்தே படமெடுத்திருப்பார் என நம்புகிறேன். அவ்வளவு மெய், அவ்வளவு எளிமை - படத்தில் வெகுவாய் கவர்ந்த காட்சிகளில் இந்த திருமண காட்சியும் ஒன்று. அந்த மணப்பெண் நாணுவதை விட அதிகமாக மணமகன் நாணுவது கவிதை! பிற்பாதி படத்தில் இந்த ஜோடிக்கு நேரும் நிலைமை நமது மனதில் இடியாய் இறங்க உதவுவதும் அழகான இந்த திருமணக் காட்சியே!

ஊராரின் கேலிப் பேச்சு தாங்காமல் உழைத்துப் பிழைக்க முடிவெடுக்கும் ராசா, கங்காணி (ஜெர்ரி) மூலமாக விவகாரத்தை ஊருக்குள் அழைத்து வருகிறான். அந்தக் கங்காணி ஆசை வார்த்தைகள் பேசி, தேயிலை பறிக்க ஆள் சேர்க்கும் அந்தக் காட்சி அற்புதமான ஒன்று! அவனை நம்பி கூட்டம் கூட்டமாய் சாலூர் மக்கள் 48 நாட்கள் கால்நடையாய் பயணித்து தேயிலை விளையும் மலைப்பிரதேசத்தை அடைகிறார்கள். அங்கே தாங்கள் கால்நடைகளை விட கேவலமாக நடத்தப்படப் போகிறோம் என்ற உண்மையை அறியாமல்!

வருடத்திற்கு ஒருமுறை மொத்தமாய் கணக்கு செய்து பண முடிப்பைத் தருவோம் என கங்காணி சொன்ன ஒரே ஒரு வார்த்தையை நம்பி; செடிகள் சிராய்ப்பதாலும், அட்டைகள் கடிப்பதாலும் இரத்தம் சொட்டுவதையும் பொருட்படுத்தாமல், நாள் முழுக்க கூடை கூடையாய் தேயிலை பறிக்கிறார்கள் அந்த மனிதர்கள். சுகாதாரமற்ற சூழலில் தங்க வைக்கப்படும் இவர்களிடம்; மருந்து கொடுத்து காசு பிடுங்கும் ஒரு கிறிஸ்தவ கம்பவுண்டர், மந்திரித்து தாயத்து கட்டி பணம் பிடுங்கும் ஒரு இந்து பூசாரி, ரேஷன் முறையில் உணவு வழங்கி துட்டு பிடுங்கும் ஒரு இசுலாமிய சாயபு என, மதத்திற்கு ஒருவர் வீதம் தீய பாத்திரங்களை அளந்து அளந்து சித்தரித்துள்ளார் பாலா! அடியாள்களின் மதக் கணக்கில் கவனமாக இருந்த பாலா, ஆங்கிலேயர்கள் நம்மவர்களை கொத்து கொத்தாக மதமாற்றம் செய்ததது பற்றி விளக்கும் காட்சிகளை மிகவும் காட்டமாகவே படமெடுத்திருக்கிறார்.

இந்த ஆண்டு விடுவிக்கபடுவோம் என ஒவ்வொரு ஆண்டும் காத்திருந்து ஏமாறும் அந்த அடிமைகள் கிட்டத்தட்ட நடை பிணங்களாகவே வாழ்கின்றனர். அந்த அடிமைக் கூட்டத்தில் மரகதம் (தன்ஷிகா) என்ற பெண் அதர்வாவுக்கு மனதளவில் ஆதரவாக இருக்கிறார்! வேதிகாவுக்கு பதில் தன்ஷிகாவையே நாயகியாக போட்டிருக்கலாம் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் - கலக்கியிருக்கிறார் மனுஷி. மனைவி & குழந்தையை பார்க்கும் ஆசையில் வேறுவழியின்றி தப்ப முயலும் அதர்வாவின் கணுக்கால் மூட்டை குறடு மூலம் துண்டித்து விடுகிறார்கள். சரியாக நடக்கக் கூட முடியாத அதர்வாவால், 48 நாள் தொலைவில் இருக்கும் மனைவி & குழந்தையை பார்க்க முடிந்ததா என்பது மீதக் கதை!

ஆரம்ப கட்டத்தில் கதாபாத்திர அறிமுகங்களின் போது யதார்த்தம் மீறிய சில இடங்கள், ஆங்காங்கே தர்க்கம் தாண்டிய சில காட்சிகள், மனதில் நிற்காத பாடல்கள் இவை போன்ற உறுத்தல்களைத் தாண்டியும் பரதேசி ஒரு தரமான படைப்புதான்! இது நல்ல படமா, சுமார் படமா, உலகப் படமா என்ற ஆராய்ச்சிக்குள் எல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை! இது ஒரு ஆவணப் படம், வரலாற்றுப் பதிவு - அவ்வளவுதான்! பொழுது போக்குக்காக அணுகாமல், உணர்வுகளோடு அணுக வேண்டிய படம். மனிதன் என்ற குறைந்த பட்ச மரியாதை கூட தரப்படாமல் சாகடிக்கப்பட்ட அந்த அடிமைகளைப் பற்றிய துக்க உணர்வை தொண்டைக்குள் சிக்க வைக்கும் படம். நாம் எவ்வளவு சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாம் செய்யும் வேலை எவ்வளவு இலகுவானது என்பதை உணரச் செய்யும் படம். நவீன யுகத்திலும் அடிமைகள் வெவ்வேறு வடிவுகளில் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று நம்மை சிந்திக்கத் தூண்டும் படம். பாலா இம்முறை ஏமாற்றவில்லை, இப்படி ஒரு ஆவணப் படத்தை எடுத்ததிற்காக அவர் நிச்சயம் ஆணவப் பட்டுக் கொள்ளலாம்! அவசியம் பாருங்கள்!

கருத்துகள்

 1. படத்தின் முடிவைப் பார்பதற்காகவே பார்க்க வேண்டும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முழுப்படத்தையும் பாருங்கள்!

   நீக்கு
  2. // முழுப்படத்தையும் பாருங்கள்! //


   இதில் ஏதோ ஒரு உள் குத்து இருப்பதாக உணர்கிறேன் யுவர் ஆனர் ;-)
   .

   நீக்கு
  3. அதே! ஆனா, சும்மா தமாசுக்கு! :)

   நீக்கு
 2. பொதுவாக பாலாவின் பட்ங்களில் திரைக்கதைக்கும்,நடிகர்களின் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.( சன் டீவியில் இப்பொழுதுவரும் மாகாபாரத தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்கள், தினமும் மெகாதொடரில் அறுப்பவர்களாதலால் மனதில் சிறிதும் ஒட்டுவதில்லை)

  பதிலளிநீக்கு
 3. // நாம் எவ்வளவு சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாம் செய்யும் வேலை எவ்வளவு இலகுவானது என்பதை உணரச் செய்யும் படம். // மிகவும் உண்மை தல ....

  பதிலளிநீக்கு
 4. நன்றாக விமர்சித்திருக்கிரீர்கள்.பாலா நல்ல படைப்பாளி என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 5. நமக்கும் பாலா படத்துக்கும் ஆகாது சாமி...நான் எஸ்கேப்

  பதிலளிநீக்கு
 6. பாலா படம் ஓடினால் சந்தோசப் படுவேன். ஆனால் பார்க்கும் அளவுக்கு எனக்கு திட மனது இல்லை.

  //நாம் எவ்வளவு சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாம் செய்யும் வேலை எவ்வளவு இலகுவானது என்பதை உணரச் செய்யும் படம். நவீன யுகத்திலும் அடிமைகள் வெவ்வேறு வடிவுகளில் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று நம்மை சிந்திக்கத் தூண்டும் படம். //

  உண்மைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரதேசி வணிகரீதியாகவும் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியே!

   நீக்கு
  2. // ஆனால் பார்க்கும் அளவுக்கு எனக்கு திட மனது இல்லை. //

   Me too

   Same Blood :))
   .

   நீக்கு
 7. பாலாவின் சேது படத்துக்கு பிறகு தியேட்டரில் போய் பார்த்தது இந்த "பரதேசி"யைத்தான். பாலா படங்களிலேயே இதுதான் சிறந்த படம் என்பேன். உலகத்தரத்தில் படம் எடுககிறேன் என்று ஊரை ஏமாற்றும் தமிழ் இயக்குனர்கள், பரதேசியை பார்த்து உண்மையான உலகத்தரம் என்றால் என்ன என்பதை பார்த்து திருந்தட்டும். பாலாவின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 8. சிறு வயதில் பூந்தளிர் / 'அமர் சித்திரக் கதைகள்' //மகாராஜா அந்தப்புரம் செல்வதாய் முடிவது //
  என்ன கார்த்திக் - Censor இல்லாத காலமா அது ?

  நமக்கு படம்ன Avengers / Superman / BATMAN - காசு குடுத்து அழுவுற வேலையே நமக்கு ஆவது :)

  அனாலும் உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //Censor இல்லாத காலமா அது//
   அது சும்மா தமாசுக்கு! :)

   //காசு குடுத்து அழுவுற வேலையே நமக்கு ஆவது :)//
   :) :)

   நீக்கு
 9. பொதுவாக இதுவரை நான் படித்த அனைத்து (பரதேசி) விமர்சனங்களும் படம் பார்க்க தூண்டுவதாகவே உள்ளது.

  பார்ப்போம் நண்பரே, எப்பொழுது நேரம் அமைகிறது என்று.

  ஆமாம், நீங்க எப்படி ஹரிதாஸ், பரதேசி என எல்லா படத்தையும் உடனே பார்த்து விடுறீங்க ? நண்பர்களுடன் சென்று பார்கின்றீர்களா ? தனியாக வண்டியை எடுத்து கொண்டு செகண்ட் ஷோ போயிடுரீங்களா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீரியசான படங்கள் என்றால் தனியாக பார்ப்பதையே விரும்புவேன்! :)

   நீக்கு
 10. இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

  பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகிர்வுக்கு நன்றி இக்பால்! படத்தைப் பார்த்தீர்களா?!

   நீக்கு
 11. சாதாரணமாகவே பதிவிடுவதில் பட்டையைக் கிளப்பும் கார்த்திக்(குக்)கு, பாலாவின் ஒரு மனதை கனக்க வைக்கும் வரலாற்றுப் பின்ணணி கொண்ட காவியப் படம் கிடைத்தால் சும்மா விட்டுவிட முடியுமா என்ன?
  தூள்!

  (சீனாவின் மக்கள் தொகைப் பெருகுக்கத்தின் காராணத்தை இன்னிக்குத்தான் தெரிந்துகொண்டேன். நன்றி கார்த்திக்! என்னிக்காச்சும் நீங்க ஈரோடு வந்தா ஒரு கப் டீ நிச்சயம் உண்டு!)

  ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் டீ குடிப்பதென்ற என் முடிவை இன்றிலிருந்து தூக்கிக் கடாசிட்டேன். என்னா ஒரு பானம்... ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // என்னா ஒரு பானம்... ;) //

   இதற்கு பெயர்தான் மன்மத பானமோ பாணமோ ;-)
   .

   நீக்கு
  2. @Erode Vijay:
   வேணாம் விஜய்! நான் காபிக்கு மாறிட்டேன்! ;) இந்தியால இருக்கற ஜனத்தொகையே போதும்! :) :)

   நீக்கு
  3. @Cibi:
   பானமோ? பாணமோ?!
   Super! சிபி நீங்கள் ஒரு கவி! ;)

   நீக்கு
 12. மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே :))

  உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறது ஆனால் என்னவோ தெரியவில்லை நண்பரே

  எனது சிறு வயது முதல் சோகமான படங்களை பார்க்க விரும்புவதில்லை :((

  ஏற்கெனவே நமது வாழ்க்கை ஒரு TRAGEDY இதில் இது வேறா ;-)

  ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :))
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி! இந்த ட்ராஜெடியை பார்த்தா நம்ம ட்ராஜெடி (வாழ்க்கை) பரவாயில்லைன்னு தோணும் சிபி! :)

   //எனது சிறு வயது முதல் சோகமான படங்களை பார்க்க விரும்புவதில்லை :((//

   அது சரி, சின்ன வயசுல அப்படியோ என்ன ட்ராஜெடி உங்களுக்கு? ;) உங்க காமிக்ஸை யாராவது ஆட்டைய போட்டாங்களா?

   PS: கேக்கணும்ணு நெனச்சேன், பாஸ் உங்க கிட்ட MDS இருக்குமா?? ;) :D

   நீக்கு
  2. // PS: கேக்கணும்ணு நெனச்சேன், பாஸ் உங்க கிட்ட MDS இருக்குமா?? ;) :D //

   ஹா ஹா ஹா

   நன்றி நண்பரே ;-)

   நாங்க சமீபத்துல கேள்வி பட்டது NBS அது என்னாதுங்க அது MDS :))
   .

   நீக்கு
  3. ஹப்பாடா, புக்கு கொடுத்ததை மறந்துட்டீங்க போல! அப்படியே அமுக்கிற வேண்டியதுதான்! ;)

   அதாவது MDS சுகந்த பாக்குன்னு புதுசா ஒண்ணு வருது! அதப் பத்திதான் கேட்டேன்! :D

   நீக்கு
 13. // இந்தியால இருக்கற ஜனத்தொகையே போதும்! :) :) //

  அது எப்படி நண்பரே :((

  உங்க பங்குக்கு நீங்க ஏற்கெனவே உயர்திவிட்டுட்டீங்க ;-)

  எங்க பங்குக்கு நாங்க ஏதாவது இந்த நாட்டுக்கு செய்ய வேண்டாமா நண்பரே ;-)

  இப்புடி பொசுக்குன்னு சொன்னா சின்ன பசங்க நாங்கல்லாம் ஏன்னா பண்ணுறது / எங்க போறது ஒண்ணுமே புரியலியே சொக்கா :))
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி சரி, லெமன் டீ குடிச்சு உங்க பங்கை நீங்களும் இன்னும் நிறைய(!) ஆற்றுங்க! (டீயை ஆற்றச் சொல்லவில்லை!) ;)

   நீக்கு
 14. இரக்கம் காட்டுங்க என்ற அதர்வாவின் கடைசி கதறல் கல் நெஞ்சையும் கரைக்க கூடியது .அந்த கதறல் கூட சில பேரிடம் கேலியாக பார்க்கப்படுவது பணத்தாசையும் ,சுயநலமும் மனதை எந்த அளவுக்கு கடினமாக்கும் என்பதை காட்டுகின்றது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் மீரான்! தமக்கு நேராதவரை துன்பத்தின் வீச்சை யாரும் உணர்வதில்லை!

   நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia