ப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்!

இணையதளங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம். ஆனால்...
முன்னரே சொல்லி விடுகிறேன் - இந்த பதிவிற்கும் பிரபல பதிவர் ஒருவர் எழுதிய புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை!) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது! முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது!

பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்(!) சொல்லிக் கொண்டிருந்தேன்! அவர் என்னென்னவோ இதழ்களின் பெயர்களைச் சொல்லி இது இருக்கா, அது இருக்கா என கேட்டுக் கொண்டிருக்க எனக்கு ஞாபக மறதி சற்று கூடுதல் என்பதால் "ஙே" என்ற பதிலை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தேன்! :) "ஙே" என்ற எழுத்தை Google Transliterate-இல் எப்படி டைப்புவது என்பது தெரியாமல் "ஙே" என முழித்தது கூடுதல் தகவல்! ;)

எனக்கு வழி தெரியாது என்பதால், சிபி அவர்கள் ஷார்ப்பாக காலை 11 மணிக்கு என் மாமனார் வீட்டருகே என்னை சந்தித்து உடன் அழைத்துச் செல்வதாகக் உறுதியளித்தார்! சொன்ன நேரத்தில் 11:30 மணிக்கே மனிதர் டாண் என்று வந்து நின்றார்:) :) :) அவருடைய இரும்புக்குதிரை போன்ற பைக்கின் - பெட்ரோல் டேங்க் மேலே கட்டியிருந்த அந்த உயர்ரக சேணம் சற்றே புடைப்பாக இருந்ததை என்னுடைய கண்கள் கவனிக்கத் தவறவில்லை! RC புக், இன்சூரன்ஸ் போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் அடங்கிய முக்கிய கோப்பாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்! அவர் முன்னே செல்ல, என் மனைவியின் சகோதரியிடம் கடன் வாங்கி வந்த பிங்க் நிற ஸ்கூட்டியில் அவரை பின்தொடர்ந்தேன்!

ஆச்சரியமான சங்கதி என்னவென்றால் திருப்பூர் மாநகரில் ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டும் ஒரே நபர், நமது நண்பர் சிபிதான்!!! :) ஆச்சரியத்தில் 'ஆ' என்று அகல விரிந்த வாயை மூட முடியாமல் அவருடைய ஹெல்மெட்டை குறி வைத்து பிங்கியை முடுக்கினேன்! :) போக்குவரத்து நெரிசலில் அவர் அவ்வப்போது காணாமல் போவதும், ஹெல்மெட் புண்ணியத்தில் அவரை நான் சட்டென இனங்காணுவதும் என மிக சுவாரசியமான பயணங்களில் ஒன்றாக அது அமைந்திருந்தது! :)

அதே வேளையில் சிபியின் அலுவலகம் அருகே உள்ளதொரு டீக்கடையில், ஒரு மர்ம உருவம் லெமன் டீயை ஒரு சிப் உறிஞ்சுவதும், சிபி வராத கடுப்பில் ஒவ்வொரு சிப்புக்கும் ஒரு தடவை மணி பார்ப்பதும் என பொறுமையிழந்து நேரத்தை கடத்திக் கொண்டிருந்தது! அவர் வேறு யாருமல்ல நண்பர் நாகராஜன்தான்! 11 மணிக்கே அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று சொன்னதை நம்பி மனிதர் 10:45க்கே வந்து விட்டாராம்! எங்கள் இருவரைக் கண்டதும், கடுப்பை மறைத்துக்கொண்டு கை குலுக்கி சிரித்தவாறே டீ சாப்பிடலாமா என்றார்! நாங்கள் குடித்தது டீக்கடை லெமன் டீதான், டாஸ்மாக் பீர் அல்ல என்பதை கீழே உள்ள போட்டோக்களைப் பார்த்து உறுதி படுத்திக் கொள்ளலாம்!
சிபியும் நானும் - 1
சிபியும் நானும் -2

முக்கியக் குறிப்பு: நான் அணிந்திருக்கும் சிவப்பு நிற டீஷர்ட்டில் செவ்விந்திய வீரர் ஒருவரின் தலைப்பாகை பொறிக்கப்பட்டிருப்பது முழுக்க முழுக்க தற்செயலானதொரு சம்பவமே ஆகும்! இதற்கும் லயன் வலைப்பூவில் சமீபத்தில் அரங்கேறிய நீண்ட விவாதங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை ;)

பிறகு சிபியின் கார்மெண்ட் ஃபேக்டரி வளாகத்தில் நுழைந்தபோது பல வலது கைகள் விறைப்பாக சல்யூட் அடித்தன! நம்முடன் இருப்பது ஒரு முக்கிய அதிகாரி என்ற எண்ணம் எனக்கும், நாகராஜனுக்கும் லேசாக உறைக்க ஆரம்பித்த சமயத்தில், முதல் மாடியில் உள்ள குளிரூட்டப்பட்ட அந்த தனியறையின் சுழல் நாற்காலியில் அவர் அசத்தலாய் சென்று அமரவும் அவ்வெண்ணம் சரியே என உறுதிப்பட்டது! ஞாயிறு அன்றும் பணியாளர்களை அவர் விடாமல் வேலை வாங்கும் அழகை கண்டு மகிழலாம்! :)

பரஸ்பர அறிமுகங்கள் நடந்தேறின! நாகராஜன் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தபோது எடுத்த போட்டோவை ஃபேஸ்புக்கில் பல நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். நண்பர் ரஃபிக், நான் நாகராஜன் மாதிரியே இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்! நாகராஜனுக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் தோன்றவில்லை! ஆறு ஒற்றுமைகள் ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்! :)

சிபியின் போட்டோவையும் முன்னர் ஒரு தரம் ஸ்டாலின் அவர்களின் வலைப்பூவில் பார்த்திருக்கிறேன்! நண்பர் ஸ்டீல் க்ளாவின் இரும்புக்கரம் மின்சாரத்தைப் பாய்ச்ச, சிபியின் ஒட்டுமொத்த முடிகளும் குத்திட்டு நிற்கும் அற்புதமான படம் அது! :)

காமிக்ஸ், NBS வெளியீடு, சென்னை புத்தக கண்காட்சி, திருப்பூரில் பழைய புத்தகக்கடை வைத்திருக்கும் பெரியவர், சினிமா, LKG அட்மிஷன் - இப்படி பல விஷயங்களை பேசியதில் நேரம் சென்றதே தெரியவில்லை!

சரி முக்கியமான விசயத்திற்கு வருவோம்! அத்தனை நேரம் சேணத்தில் பாதுகாத்து வைத்திருந்த அந்த கோப்புகளை மேஜையில் பரப்பினார் சிபி! அவை கோப்புகள் அல்ல, ஆ..... என்ற அதிர்ச்சியில் கண்களை கசக்கிக் கொண்டேன் :)  நான் ட்ரீம்களில் மட்டுமே கண்டிருந்த ஸ்பெஷல் இதழ்கள்தான் அவை! :) எனக்கே எனக்கா என்று மனம் துள்ளிக்குதிக்கத் தொடங்கியது! இருந்தாலும் நமது நண்பர்கள் எக்ஸ்சேன்ஜ் முறையில் புத்தகங்களை பரிமாறிப் படிக்கும் பழக்கம் வைத்திருப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் - 'காமிக்ஸ் கையால் காக்காய் கூட ஓட்டிப் பழக்கமிராத' என் மனதில் குபீர் என திகில் அடித்தது! :) :) :)

ஆனால், நான் வெட்கும்படி நண்பர் சிபி ஒரு காரியம் செய்தார்! "மில்லினியம் ஸ்பெஷல் நீங்களே வச்சுக்கங்க! MDS & 'மரண முள்' படிச்சுட்டு மெதுவா ரிட்டர்ன் கொடுங்க" - என்றார்! நான் அசடு வழிந்ததை துடைத்துக்கொண்டு "ரொம்ப நன்றி ஜி! ஆனா, எப்படி இப்படி? புக்கை எல்லாம் டக்குன்னு தூக்கித் தர்றீங்க?! நான் ஒரு தடவை படிச்ச புக்கை நானே மறுபடி எடுத்துப் பாக்குறதில்லே, மத்தவங்களுக்கும் கொடுக்கறதில்லே" என்று வெட்கமில்லாமல் சேஃப்டி சைடில் சொல்லி வைத்தேன்! :) என்ன செய்வது எனக்கு காமிக்ஸ் மீது அப்படி ஒரு possessiveness! :) நாகராஜன் அவர்களுக்கும் சிபி சில புத்தகங்களை பரிசளித்தார்!

மூன்று பேருக்குமே அன்று நேரமின்மை காரணமாக உடனே கிளம்ப வேண்டியிருந்ததால் - அடுத்த முறை நிச்சயமாக லஞ்சுக்கோ, டின்னருக்கோ சந்தித்து நிதானமாக உரையாடலாம் என்ற முடிவில் கை குலுக்கிக் கிளம்பும் முன்னர், நண்பர் சிபி மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்! எனக்கும் நாகராஜனுக்கும் - பொருத்தமான அளவில், ஆளுக்கு இரண்டு "Van Heusen" டீஷர்ட்களை பரிசாக அளித்து அன்பு மழையில் நனைய வைத்தார்!!! அடுத்த நாள் பொங்கல் தினம் என்பதால், அந்த டீஷர்ட்கள் மறக்க முடியாத பொங்கல் பரிசாக அமைந்துவிட்டன! அடுத்ததாக தீபாவளிக்கு முந்தைய நாளும் சிபியை நிச்சயம் சந்தித்திட வேண்டும் என்ற முடிவுடன் இருவரும் நன்றி சொன்னோம்! :) :) :)

லயன் மற்றும் இதர காமிக்ஸ் வலைப்பூக்கள் மூலமாக மட்டுமே அறிமுகமாகியிருந்த இரண்டு நண்பர்களை நேரில் சந்தித்தது மிகவும் இனிய அனுபவமாயிருந்தது! வலைப்பூக்களில் / ஃபேஸ்புக்கில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம்; முகம் தெரியா நண்பர்களைப் பற்றி நாமாக ஒரு பிம்பத்தை மனதில் வைத்துக் கொள்கிறோம்! ஆனால், நேரில் சந்தித்துப் பேசிடும் போது அத்தகைய பிம்பங்கள் சட்டென உடைகின்றன - உருவிலும், உறவிலும் முற்றிலும் மாறுபட்ட நபர்களாக அவர்கள் தோற்றமளித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள்! இதுதான் இணைய நட்பிற்கும், நேரில் கைகள் இணையும் நட்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம், இல்லையா நண்பர்களே?! :)

சரி, இணைய நண்பர்கள் இணைந்த கதையைப் படித்தீர்கள்! ஆனால், இணைய நண்பர்கள் பற்றிய அறிமுகங்கள் இத்தோடு முடிந்திடவில்லை! கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் பெங்களூரைச் சேர்ந்த மற்றுமொரு இணைய நண்பர் கிரிதரன், என்னுடைய தங்கக் கல்லறை விமர்சனத்தைப் படித்துவிட்டு, ராணி காமிக்ஸில் ஒருமுறை டைகர் (ப்ளூபெர்ரி) போன்ற தோற்றம் கொண்டதொரு கௌபாய் வீரர் தோன்றியதாக அந்த புத்தகத்தின் சில பக்கங்களை தனது மொபைல் கேமரா மூலம் படமெடுத்து அனுப்பி இருந்தார்! எனக்கும் டைகர் போலத்தான் தோன்றுகிறது - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?!அப்புறம் கிரிக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் உரித்தாகுக; எனக்காகவும் மற்றுமொரு பெங்களூர் நண்பர் பெரியாருக்காகவும் (பூர்னிஷ்) "ஸ்டார் காமிக்ஸ் - பனி மண்டலக் கோட்டை" இதழ்களை வாங்கி, நண்பர் ரஃபிக் மூலம் அனுப்பியிருந்தார் . சும்மா சொல்லக்கூடாது, ரஃபிக்கின் பேக்கிங் கனஜோர்!!! :) நன்றி நண்பர்களே!!!

பெரியார் பற்றி ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும்! நாம் ஃபேஸ்புக்கில் ஏதாவது போஸ்டோ, கமென்ட்டோ போட்டால், அது எவ்வளவு மரண மொக்கையாக இருந்தாலும் அடுத்த நொடியே லைக் போடுவார்! :) தன் நிழலை விட வேகமாக செயல்படும் லக்கி லூக்கைப் போல, நம் போஸ்ட்டை விட வேகமாக இவர் லைக் போடுவதால் ஃபேஸ்புக் வட்டாரத்தில் இவரை "லைக்கி லூக்" என்று அன்புடன் அழைக்கிறார்கள்! :)

கடைசியாக நமது நண்பர்கள் பலர், காமிக்ஸ் குறித்த பிரத்தியேக வலைப்பூக்களை சமீபத்தில் துவக்கியுள்ளனர்! அது குறித்த சிறிய அறிமுகப் படலம்!
காமிக்கேயன்: என்று தனக்குத் தானே பெயர் சூட்டி மகிழும் இவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்! கிங்கேயன், கரண்டிமேன் என்று பல புனைப்பெயர்களில் சுற்றும் இவரின் இயற்பெயர் "P. கார்த்திகேயன்"! :)
comicsgalaata.blogspot.com

ஷி நா பா: டைகர் மேல் உள்ள பிரியத்தால் தன் மூக்கையே சிதைக்கத் துணிந்த இவரின் ஒரிஜினல் பெயர் சௌந்தர் என்பதாகும்! :) இவர் நடத்தும் எண்ணற்ற வலைப்பூக்களில் - இது ஒரு புதிய வருகை!
http://blueberry-soundarss.blogspot.com

பொடியன்: முதல் பதிவிலேயே விஜயன் அவர்களின் பின்னூட்டத்தைப் பெற்றவர் நம் பொடியர்!
http://tamilcomicsworld.blogspot.com

ஸ்ரீராம்: சார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்! :)
http://nameistexwiller.blogspot.com

ஈரோடு விஜய்: இவரும் காமிக்ஸ் பற்றிய ஒரு வலைப்பூ துவக்கியுள்ளாராம்! ஆனால் பிரச்சினை என்னவென்றால், வலைப்பூவின் முகவரியைக் கேட்டால் அதற்கு புகை சமிக்ஞையிலேயே பதில் அனுப்பித் தொலைக்கிறார்! ;) இவர் விரைவில் எல்லோருக்கும் புரியும் முகவரியில் வலைப்பூவை நடாத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! ;)
புகை சமிக்ஞை

இவர்களைத் தவிர, இந்த இரண்டு நண்பர்கள் தங்கள் ஓவியத் திறமையை தங்கள் வலைப்பூக்களில் காட்டி வருகின்றனர்:

விஸ்கி சுஸ்கி: சமீபத்தில் இவர் ஃப்ரொபைல் பகுதிக்கு சென்ற போதுதான் இவர் வலைப்பூ நடத்தும் விசயமே தெரியவந்தது!!!
http://valaippathivugal.blogspot.com

cap tiger: யாருக்கும் தெரியாமல், சீக்ரெட்டாக வலைப்பூ நடத்துபவர்களில் இவரும் ஒருவர்! ;) இவர் வலைப்பூ நடத்தி வரும் விஷயம் எனக்கு இன்றுதான் தெரியும்!!!
http://sivsmilyart.blogspot.in

இறுதியாக,
பாலா: காமிக்ஸ் ரசிகரான ஓவியர் பாலா (விகடன், தினமலர்...) அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்பதால், எனக்குப் பிடித்த வலைப்பூ என்பதாக மட்டுமே இதைப் பார்க்கவும். இவருடைய படைப்புக்கள் லயன் / முத்து காமிக்ஸில் வெளி வர வேண்டும் என்பது என் ஆசை!
http://cartoonbala-conceptartist.blogspot.com

இந்த நீண்ட பதிவைப் படித்த கடுப்பில் 'ரெண்டு ஷாட் டக்கீலா' அடிக்கக் டாஸ்மாக் கிளம்பிட வேண்டாம்! மொக்கைகள் இத்துடன் முடிவுற்றன - அடுத்த பதிவில் சந்திப்போம்! :) :) :)

59 comments:

 1. சிபி சார் நோட் பண்ணிங்களா, உங்கள வீட்டுக்குள்ளாரகூட நுழையவிடல. :)
  (நல்லப்புள்ளையா பதிவு போட்டா விட்டுடுவோமா.)

  ReplyDelete
  Replies
  1. வந்த உடனேயே வேலையை ஆரம்பிச்சாச்சா மிஸ்டர்.கரண்டிமேன்?! :)

   Delete
  2. அவருடைய வீடு திருப்பூரில் இல்லையே நண்பரே ;-)
   .

   Delete
 2. நானும் "இரவுக் கழுகாரை" புகை சமிக்ஜை விட்டு சந்தித்ததை ஒரு பதிவு போடலாம் போல இருக்கிறதே.

  சிபி : கொடுக்குறதுக்கும் ஒரு மனசு வேணும். வாழ்க வளமுடன்.

  கார்த்திக் : மிச்சர் பதிவு சூப்பர். கலக்கு கலக்கிட்டீங்க :D

  ReplyDelete
  Replies
  1. இரவுக் கழுகுக்கே புகை சமிக்ஞையா?! :)

   Delete
  2. நன்றி நண்பரே

   எக்ஸ்ட்ரா வாக இருக்கும் புத்தகத்தை தானே தந்துள்ளேன் நண்பரே :))
   .
   //நானும் "இரவுக் கழுகாரை" புகை சமிக்ஜை விட்டு சந்தித்ததை ஒரு பதிவு போடலாம் போல இருக்கிறதே. //

   கண்டிப்பாக பகிருங்கள் நண்பரே
   .

   Delete
 3. திருப்பூரில் பழைய புத்தகக்கடை வைத்திருக்கும் பெரியவர.... இந்த கடை எங்க இருக்கு ?

  ReplyDelete
  Replies
  1. பழைய பஸ் ஸ்டாண்ட் என்ட்ரன்ஸ்! ஒரு தபா போனேன்! 'காமிக்ஸே வர்றதில்ல தம்பி' என்றார்!

   Delete
 4. @ நண்பர் நாகராஜன் : முதலில் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். சென்னை புத்தகத்திருவிழாவில் நீங்கள் என் அருகில் இருந்தும் உங்களுடன் பேசமுடியாமல் போய்விட்டதை நினைத்து, இன்றுவரை நொந்துபோயிருக்கிறேன். சில போட்டோக்களில் என்னுடன் இருக்கிறீர்கள் என்பது ஒரே ஆறுதல்.

  ReplyDelete
  Replies
  1. @P.Karthikeyan: நண்பர்களுக்குள் மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை அன்பு நண்பரே ... மீண்டும் நேரம் கூடி வரும்பொழுது சந்திப்போம்.

   Delete
  2. அப்படி எல்லாம் உங்களை சும்மா விட முடியாது! கரண்டியை தூக்கிக் கொண்டு 300 பஜ்ஜிகள் சுட்டுத் தரவும்! :)

   Delete
 5. அழகான சந்திப்பு, வழக்கம்போல் நல்லபதிவு. இந்த கத்துகுட்டி ஒரு பிரபல பதிவர் பதிவில் இடம்பெறுவது பெருமையாக இருக்கிறது. நன்றி நண்பரே. :)
  புதுவைக்கு வாங்க , உங்களுக்கு பிடிச்ச பார்ட்டி வச்சுடுவோம். :)

  ReplyDelete
  Replies
  1. எனக்கு பிடிச்ச பார்ட்டியா?! அதை உங்களால ஏற்பாடு பண்ண முடியுமா?! ;)

   Delete
  2. // எனக்கு பிடிச்ச பார்ட்டியா?! அதை உங்களால ஏற்பாடு பண்ண முடியுமா?! ;) //

   "ஙே"

   Delete
 6. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?! -கண்டிப்பாக அவரேதான் கதை கூட தரமாக இருக்கும்! சூப்பர் கிரியார் அவர்களே!

  ReplyDelete
 7. உங்களுடைய இந்த நகைசுவை ததும்பும் வசனநடையே என்னை மிகவும் கவர்ந்து, எந்த கருத்தும் போடாது வேடிக்கை பார்த்துகொண்டிருந்த என்னை, தற்போது பலரை சிரிக்கவைக்குமளவுக்கு பேஸ்புக்கில் கமெண்டஸ் போடுமளவு வளர்த்தியுள்ளது!நன்றி நண்பரே! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா! நகைச்சுவை இயல்பிலேயே அமைவது, உங்களுடையதும் அப்படியே!!! :)

   Delete
 8. எனது அறிமுகத்துக்கு மிக்க நன்றி! :)

  அடிச்சாச்சு "லக்கி" prize .. Millineum special :) அத்தோட கொசுறா T-Shirt வேற... அடுத்து திருப்பூர் போகும்போது மறக்காமல் சொல்லியனுப்பவும்.. அந்த நல்ல உள்ளங்களைச் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. நோ, நோ அவர்கள் எனக்கு மட்டுமே நண்பர்கள், அவ்வ் - உங்களுக்கும் அறிமுகப்படுத்தி பரிசுகளை பங்கு போடும் எண்ணம் இல்லை! ஹி ஹி ஹி ;) ஏற்கனவே விஜய் முன்னாடி லைனில் நிற்கிறார்! :D

   Delete
 9. விரைவில் நான் பெங்களூர் வருகிறேன் அந்த புத்தகங்களை கைப்பற்ற.... முக்கியமாக சூப்பர் சர்க்கஸ்

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் சர்க்கஸ் - ப்ளூபெர்ரியிடம் உள்ளது! சென்னையில்தான் பணி புரிகிறார்! ;)

   Delete
 10. அழகானதொரு சந்திப்பு நிகழ்வை தனது பாணியில் அட்டகாசமாகத் தொகுத்திருக்கிறார் நண்பர் கார்த்திக்!

  நண்பர் சிபியைச் சந்தித்துவிட்டு திரும்பும் யாரும் 'யாம் அறிந்த நண்பரிலே சிபியைப் போல் இனிதாவதெங்கும் காணோம்' என்று பாடியபடியே செல்வது வழக்கமாக நடக்கனன்ற ஒன்றுதான்!

  சென்ற தீபாவளிக்கு சிபியிடமிருந்து அன்புப் பரிசு(கள்) பெற்ற மிகச்சிலருள் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன்.

  நண்பர் ப்ளூவை நேரில் சந்தித்ததில்லை என்றாலும், அவர் அனுப்பிய ஒரு பரிசும் அழகாக என் புத்தக அலமாரியில் சிரித்துக் கொண்டிருக்கிறது.

  உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் நண்பர்களே?!

  நினைவுகூறவைத்த நல்லதொரு பதிவுக்கு நன்றி கார்த்திக்! :)

  ReplyDelete
  Replies
  1. @Erode VIJAY: நண்பரே ஒரு முறை உங்களுடன் அலைபேசியில் பேசியதோடு சரி, நேரம் சரியாக அமையவில்லை. விரைவில் சிந்திப்போம் அது பற்றி இனி வரும் நாளில் சிந்திப்போம் :)

   Delete
  2. //உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் நண்பர்களே?!//
   உங்களுடைய ஒட்டுமொத்த காமிக்ஸ் சேகரிப்பையும் கொரியர் மூலம் எனக்கு அனுப்பி வைக்கவும்! :)

   Delete
  3. ST கொரியரில் அனுப்புகிறேன்; எப்பவுமே கைக்கு வந்து சேராது! :)

   Delete
  4. அடுத்த Sense of Humour நண்பர் Vijay ;-)
   .

   Delete
 11. கலக்கல் கார்த்திக்....:)
  புத்தகம் கொடுப்பதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டும்.
  புத்தகங்கள் பரிசாகவும் படிக்கவும் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.
  அறிமுகங்கள் அனைத்தும் அருமை.
  லெமன் டீ நன்றாக இருந்ததா?

  ReplyDelete
  Replies
  1. லெமன் டீ சூப்பர்! நாகராஜன்தான் suggest செய்தார்! :)

   Delete
 12. நன்றிகள் பல நண்பர்களே ....

  அந்த நாளை மீண்டும் ஒரு முறை கண்ணில் கொண்டு வந்ததற்கு நண்பர் கார்த்திக் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி !!!

  நண்பர் கார்த்திக் சொல்லிய விஷயம் - " நண்பர் சிபி கொடுத்த இரண்டு பரிசுகள் "

  சொல்லாமல் விட இரண்டு விஷயம் ??


  ஒன்று நண்பர் கார்த்திக், மதன் அவர்களது "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தை எனக்கும், சிபி அவர்களுக்கும் வழங்கியது :) நன்றிகள் கார்த்திக் அண்ட் சிபி ...

  இரண்டாவது, அவசரத்தில் எதுவும் எடுத்து (வாங்கி) செல்லாமல், இருவரிடமும் பரிசை வாங்கி கொண்டு அசடு வழிந்து "திருப்பூர் ப்ளுபெர்ரி" சமாளித்தது
  :(

  மீண்டும் சிந்திப்போம் நண்பர்களே (அனைவருமே) ...

  திருப்பூர் ப்ளுபெர்ரி

  ReplyDelete
  Replies
  1. அதனால் என்ன?! அடுத்த முறை சந்திக்கும் போது MDS-ஐ எனக்கு பரிசாக அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! :)

   Delete
  2. என்னிடம் இல்லாத ஒன்றை கேட்டால் எப்படி நண்பா :)

   Delete
  3. சும்மா ஜாலிக்குதான் கேட்டேன்! :) Don't worry! ;)

   Delete
 13. /* சும்மா ஜாலிக்குதான் கேட்டேன்! :) */ - appo Jolly Special thaane ketkanum :-D

  BTW, Karthik - good post this one! Keep going ...!!

  After reading this, everyone is going to plan and meet CIBI :-D

  ReplyDelete
 14. ஜாலி ஸ்பெஷல்தான் என்கிட்டே இருக்கே! :)

  தெரியாத்தனமா CIBI-யோட போட்டோ வேற போட்டுட்டேன் - இனி அவரை அந்த CBI-யால கூட காப்பாத்த முடியாது! :) 'முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல்' என்பது போல 'நண்பர்க்கு காமிக்ஸ் கொடுத்த சிபி வள்ளல்' என்று பெயர் எடுக்கப் போகிறார்! ;)

  ReplyDelete
 15. காமிக்ஸ் நண்பர்களின் நேர்காணல் எப்படி இருக்க வேண்டுமா அப்படி இருந்ததில் மகிழ்ச்சி. போட்டோகளில் கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கும் அந்த முகங்களே, சந்திப்பு இன்பகரமாக இருந்தது என்பதை சுட்டிகாட்டுகிறது.

  சிபி யை நேரில் கண்டது போலவே உணர்ந்தேன்... கார்த்திக் எழுத்துகளில் உள்ள சரளம் அப்படி :D

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரஃபிக்! உண்மையில் படு ஜாலியான சந்திப்பாக அமைந்திருந்தது! நேரம்தான் போதவில்லை! :)

   Delete
 16. ஹாய் கார்த்திக், "ஸ்டார் காமிக்ஸ்" பனி மண்டல கோட்டை இதழ் எங்கு கிடைக்கின்றது?

  ReplyDelete
  Replies
  1. சென்னை புத்தகக் கண்காட்சி ஸ்டால் எண் 300-ல் கிடைத்ததாக நண்பர்கள் சொன்னார்கள்! கண்காட்சி இன்னமும் நடக்கிறதா என்பது தெரியவில்லை! :)

   Delete
 17. நன்றி கார்த்திக்.

  ReplyDelete
 18. இத.... இத..... இதைத்தான் எதிர்பார்த்தேன். புத்தகங்கள் பரிமாறிக்கொள்ளதான் வேண்டும். அதிலேதான் இன்பம். பெட்டிக்குள் கூண்டில் அடைபட்ட பறவை போல் இருக்ககூடாது. சிறகடித்து பறந்தால்தான் புத்தகத்திற்கும் பறவைக்கும் பெருமை.

  //////////ஆனா பாருங்க, புத்தகம் ஒவ்வொருத்தர்கிட்டேயும் பயணிச்சு கடைசியா நம்ம கையில வந்து சேர்றப்போ நடுவுல அடிச்ச பின் மட்டும்தான் மிஞ்சும்! ;)///////

  பின் கூட மிஞ்சவேண்டாம். எல்லாமே என்றாவது ஒருநாள் காலத்தால் அழியகூடியவை.

  எங்கே அந்த RAMG75
  ////////////////////RAMG75November 15, 2012 at 1:42 PM
  இப்பத்தான் கவனிச்சேன்.. இவர்... ஒரு புத்தகம் வாங்கிட்டு ஒரு ஊரே படிக்கவேண்டும் அது தான் புத்தகத்தின் பயணம்னு சொல்லியிருக்காரு.. இத எல்லாரும் follow பண்ணினா.. 30 புத்தகம் கூட விக்காதுங்க.. ஒரு மாவட்டத்துக்கு ஒரு புத்தகம்.. காமிக்ஸ் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா இவர் என்று தெரியவில்லை... இத எடிட்டர் படிச்சாரா என்றும் தெரியவில்லை////////////////

  Muthu comics Never Before Special முதல் பக்கத்தை கவனிக்க அதில் உள்ள குறிப்பு முக்கியமாக கவனிக்க.
  //////இந்த இதழைப் படித்த பின் உங்கள் நட்பு வட்டாரத்தில் இரவல் கொடுத்து நமது வாசகர்கள் வட்டத்தை விரிவு படுத்த உதவுங்களேன்////

  நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டுசோ இல்லையோ.............. எடிட்டர் குடும்பத்திற்கு கேட்டுவிட்டது.
  நன்றிகள்.

  கார்த்திக் நம்மிடையே இன்னும் ஒரே ஒரு தீராத கணக்குத்தான் உள்ளது. அதற்கு அப்புறம் உங்களிடம் நிரந்தரமாக நான் பழம் தான்.

  ReplyDelete
  Replies
  1. //இத.... இத..... இதைத்தான் எதிர்பார்த்தேன்//
   இதைப் போன்ற ஒரு சம்பவதிற்காக காத்திருந்தா இத்தனை நாட்கள் எங்கும் பின்னூட்டங்கள் இடாமல் இருந்தீர்கள்?! :) :) :) வெல்கம் பேக் ஹஜன்!!! :)

   //பின் கூட மிஞ்சவேண்டாம். எல்லாமே என்றாவது ஒருநாள் காலத்தால் அழியகூடியவை.//
   ஆமாம் ஹஜன்! எல்லாமுமே ஒரு நாள் அழியக் கூடியவைதான்! பகிர்தல் இன்பம்தான்! அதற்காக எல்லாரும் எல்லாவற்றையுமே பகிர்ந்து கொள்கிறார்களா என்ன?! பகிரக் கூடிய விஷயங்கள் பல இருக்கின்றன: உணவு, உடை, பணம், பாசம், நட்பு, அறிவு, அனுபவம் - இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவற்றில் சிலவற்றை நான் நிச்சயம் பிறர்க்கு பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்! புத்தகங்களையும் பகிர்கிறீர்களா என்று நீங்கள் கேட்டீர்களானால் நிச்சயம் ஆம் என்றுதான் சொல்வேன் - அதுதான் உண்மையும் கூட!!!

   ஆனால், என்னுடைய பகிர்தல் லிஸ்டில் சிறு வயதில் இருந்து நான் சேகரித்து வைக்கும் காமிக்ஸ் புத்தகங்கள் இல்லை என்பதுதான் நிஜம்! இதை ஒத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை! காமிக்ஸை பகிர்ந்தே ஆக வேண்டும் என்றால் கூடுதல் பிரதிகள் வாங்கி பகிர்வதுண்டு (காமிக்ஸ் வாசிப்புக்கு புதியவர்களுக்கு!). உதாரணத்திற்கு என் மகனின் முதலாம் பிறந்த நாளின் போது - Return Gift ஆக அனைவருக்கும் நான் கொடுத்தவை காமிக்ஸ் இதழ்கள்தான்!!!

   மேலே சில விசயங்களை நகைச்சுவைக்காக சற்றே மசாலா கூட்டி எழுதியிருந்தாலும் நான் மேலே எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் நிஜம். MDS இதழை கடனாக வாங்கிக்கொள்ள நான் ரொம்பவே யோசித்தேன், சங்கடப்பட்டேன்! முதலில் வேண்டாம் என்றே மறுத்தேன்!
   //நான் ஒரு தடவை படிச்ச புக்கை நானே மறுபடி எடுத்துப் பாக்குறதில்லே, மத்தவங்களுக்கும் கொடுக்கறதில்லே" என்று வெட்கமில்லாமல் சேஃப்டி சைடில் சொல்லி வைத்தேன்! :) என்ன செய்வது எனக்கு காமிக்ஸ் மீது அப்படி ஒரு possessiveness! :) //

   ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றின் மேல் பற்றிருக்கும் - எனக்கு காமிக்ஸ் மீது! இதை சொல்லிக்கொள்வதில் எனக்கு வெட்கமில்லை ஹஜன்! உங்களுக்கு எந்த ஒரு பொருளின் மீதும் பற்றே இல்லையா என்ன?!

   //இந்த இதழைப் படித்த பின் உங்கள் நட்பு வட்டாரத்தில் இரவல் கொடுத்து நமது வாசகர்கள் வட்டத்தை விரிவு படுத்த உதவுங்களேன்//
   MDS இதழில் நான் மிகவும் ரசித்த பகுதிகளில் ஒன்று சீனியர் எடிட்டர் அவர்களின் இந்த மடல்! நீங்கள் எந்த அர்த்தத்தில் புரிந்து கொண்டீர்களோ இல்லையோ, ஆனால் அன்பிற்குரிய சீனியர் எடிட்டர் MDS-ஐ பகிரச் சொன்னதிற்கு முக்கிய காரணம் - அப்படியேனும் காமிக்ஸ் படிக்கும் வாசகர் வட்டம் விரியாதா என்ற ஒரு ஆதங்கம்! இதையே நீங்கள் விஜயன் அவர்களின் பார்வையில் பார்த்தீர்களானால் வாசகர் வட்டம் விரிவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு சந்தாதாரர்கள் விரிவதையும் விரும்புவார்! எனக்கு பத்து நண்பர்கள் இருக்கிறார்கள் - அத்தனை பேருக்கும் காமிக்ஸ் என்றால் பிடிக்கும். நான் வாங்கும் காமிக்ஸை படித்த பின்னர் அந்த பத்து பேருக்கும் படிக்கக் கொடுப்பேன் என்று நீங்கள் சொல்வீர்களானால் விஜயன் விரும்புவாரோ இல்லையோ - நான் ஒரு காமிக்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தால் நிச்சயம் விரும்பமாட்டேன்!

   //கார்த்திக் நம்மிடையே இன்னும் ஒரே ஒரு தீராத கணக்குத்தான் உள்ளது//
   பத்து ரூபாய் புத்தக மேட்டர்தானே?! பதில்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன - விரைவில் கணக்கை தீர்த்துக்கொள்ளுங்கள் ஹஜன்!!! :)

   //அதற்கு அப்புறம் உங்களிடம் நிரந்தரமாக நான் பழம் தான்//
   மகிழ்ச்சி அளிக்கும் சங்கதிதான்! :)

   Delete
 19. @ஹஜன் சுந்தர் - இதோ வந்துட்டேன்.. :)


  என்னங்க.. நீங்க லைப்ரரில ஒரு புத்தகத்த வைன்னு சொல்றத்துக்கும் இந்த மாதிரி 4 புத்தகத்த (அதுவும் கிடைக்காத, பிரிண்டில் இல்லாத) காமிக்ஸ் பிரியர்கள் படிக்க தருவதற்கும் வித்தியாசம் இல்லையா.. நீங்க சொன்னது லெண்டிங் லைப்ரரி. அந்த முறையைப் பற்றி தான் நான் குறிப்பிட்டிருந்தேன். என்னங்க.. இதல்லாம் கூட சொல்ல வேண்டுமா என்ன ?

  ReplyDelete
 20. @ஹஜன் சுந்தர் - எல்லாம் ஒ.கே..
  குடும்பத்தினர் - கண்டிப்பாக படிக்க தரலாம்.

  நண்பர்கள் ? கண்டிப்பாக படிக்க தரலாம். ஒழுங்காக திருப்பி தரும் வகையில். ஆனால்.. அவர்களிடம் இதை ஒரு அறிமுகமாக செய்யவேண்டும். சும்மா மாதா மாதம் நம்ம கிட்ட புக் வாங்கி படிக்கக் கூடாது.

  அக்கம் பக்கம் - நோ... சான்ஸ்.. அக்கம் பக்கம்னா தெருவுல இருக்குற எல்லாரும் அக்கம் பக்கம் தான். அவங்க எல்லாம் படிச்சா.. சுத்தம்.. சான்ஸ் இல்லைங்க.

  பழைய பேப்பர் கடை - இதுல தான் பிரச்சினையே.. குமுதம், ஆ.வி மாதிரி புத்தகத்ததான் படிச்சு முடிச்சதும், கொஞ்ச நாள் கழிச்சு பேப்பர் கடையில போடலாம். காமிக்ஸ்ச அப்படி போட சொல்றீங்களா ?.. ஏங்க.. ரூ 1000 காமிக்ஸ் ?? இத தான் நான் சொன்னேன்.

  ReplyDelete
 21. Sense of Humour அப்படீன்னு சொல்லுவாங்களே அது இதுதானோ ;-)

  1.எனக்கு ஞாபக மறதி சற்று கூடுதல் என்பதால் "ஙே" என்ற பதிலை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தேன்! - அது சரி

  2.காலை 11 மணிக்கு என் மாமனார் வீட்டருகே என்னை சந்தித்து உடன் அழைத்துச் செல்வதாகக் உறுதியளித்தார்! சொன்ன நேரத்தில் 11:30 மணிக்கே மனிதர் டாண் என்று வந்து நின்றார்:) - பஞ்சுவாலிட்டி கீப் அப் பண்ணுவோம்ல

  3. அவருடைய இரும்புக்குதிரை போன்ற பைக்கின் - பெட்ரோல் டேங்க் மேலே கட்டியிருந்த அந்த உயர்ரக சேணம் சற்றே புடைப்பாக இருந்ததை என்னுடைய கண்கள் கவனிக்கத் தவறவில்லை!

  4. திருப்பூர் மாநகரில் ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டும் ஒரே நபர், - 2013 ஆண்டின் மிக சிறந்த காமெடி இதுதான் தலீவா

  5. அலுவலகம் அருகே உள்ளதொரு டீக்கடையில், ஒரு மர்ம உருவம் லெமன் டீயை ஒரு சிப் உறிஞ்சுவதும், சிபி வராத கடுப்பில் ஒவ்வொரு சிப்புக்கும் ஒரு தடவை மணி பார்ப்பதும் என பொறுமையிழந்து நேரத்தை கடத்திக் கொண்டிருந்தது! அவர் வேறு யாருமல்ல நண்பர் நாகராஜன்தான்! - மன்னிக்கவும் நண்பரே அடுத்தமுறை சீக்கிரம் வர முயற்சி செய்கிறேன் :))

  கலக்கல் பதிவு நண்பரே

  இவ்வளவு தெளிவாக பதிவு போடுபவர் "ஙே" என்று இருந்தார் என்று சொன்னால் எப்படி நம்ப முடியும் நண்பரே ;-)

  தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

  சற்றே வேலைப்பளு மற்றும் மூன்று நாட்கள் விடுமுறையில் சென்றதும் காரணம் :))
  .

  ReplyDelete
  Replies
  1. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சிபி! :) என்னடா இன்னமும் ஆளையே காணோம் என்று ஙே என முழித்துக் கொண்டிருந்தேன்! சத்தியமா நீங்க வரிசையா புக்ஸ் பேர் சொன்னப்போ எனக்கு சுத்தமா எதுவுமே ஞாபகத்தில வரல!!! :)

   //திருப்பூர் மாநகரில் ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டும் ஒரே நபர், - 2013 ஆண்டின் மிக சிறந்த காமெடி இதுதான் தலீவா //
   ஆனா உண்மை அதுதானே சிபி!!! :D

   Delete
  2. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல ;-)
   .

   Delete
 22. // ஒரு தடவை படிச்ச புக்கை நானே மறுபடி எடுத்துப் பாக்குறதில்லே, மத்தவங்களுக்கும் கொடுக்கறதில்லே" //

  எங்கேயோ கேள்விப்பட்ட டயலாக் மாதிரி இருக்கிறதே நண்பரே ;-)
  .

  ReplyDelete
  Replies
  1. அது யாரோ அணிலோ குருவியோ பேசின பஞ்சு டயலாக்! :)

   Delete
 23. // வலைப்பூக்களில் / ஃபேஸ்புக்கில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம்; முகம் தெரியா நண்பர்களைப் பற்றி நாமாக ஒரு பிம்பத்தை மனதில் வைத்துக் கொள்கிறோம்! ஆனால், நேரில் சந்தித்துப் பேசிடும் போது அத்தகைய பிம்பங்கள் சட்டென உடைகின்றன - உருவிலும், உறவிலும் முற்றிலும் மாறுபட்ட நபர்களாக அவர்கள் தோற்றமளித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள்! இதுதான் இணைய நட்பிற்கும், நேரில் கைகள் இணையும் நட்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம், இல்லையா நண்பர்களே?! :) //

  I'm totally agreed with you on this point buddy :))
  .

  ReplyDelete
 24. இணையத்தின் மூலம் இணைந்த நண்பர்களை சந்திக்க நானும் ஆவலாயிருக்கிறேன் சிபி அவர்கள் திருப்பூரில் தான் இருக்கிறாரா?நான் அவரது வாசகன் உங்கள் பதிவும் நன்றாகவே இருந்தது

  ReplyDelete
  Replies
  1. நன்றி! ஆனா நீங்க நினைக்கற சிபி இவர் இல்லை! :)

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia