தங்கக் கல்லறை - மின்னும் மரணம்!

இந்த இதழின் அழகிய அட்டையைத் தாண்டி உட்பக்கங்களுக்கு செல்லவே நிச்சயமாக சில நிமிடங்கள் பிடிக்கும்! படங்களை மேலோட்டமாகப் பார்த்து, வேகமாக வசனங்களை படித்து, பக்கங்களை நகர்த்தினால் சுவாரசியம் இராது! ஒவ்வொரு கட்டத்திலும், அட்டகாசமான இதன் சித்திரங்களை நிதானித்து உள்வாங்கி அனுபவித்துப் படித்தால் ஒரு Spaghetti வெஸ்டர்ன் படம் பார்த்த உணர்வு கிடைப்பது நிச்சயம்! சிவப்பு விளக்குகளுக்கு இடையில் இதன் கதை, ஸ்பாய்லர்கள் இன்றி மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது! லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் முதலில் இந்தப் பதிவை படிப்பது நலம்! கதை திடுதிப்பென்று முடிவது போல ஒரு உணர்வு எழுந்தாலும், இவ்வருடத்திய டாப் காமிக்ஸ் இதழ்களில் தங்கக் கல்லறையும் ஒன்று என்பதில் சற்றும் ஐயம் இல்லை!!!

தங்கத்தைத் தேடுவதையே முழுநேரத் தொழிலாக கொண்ட முரட்டுத் தங்க வேட்டையர்கள் நிறைந்த 19ம் நூற்றாண்டின் அமெரிக்கா! அரிஸோனா மாநிலத்தில் பலோமிடா என்ற சிறு நகரில் சட்டஒழுங்கை பேணுவதற்கு தற்காலிக மார்ஷலாக பணியிலிருக்கிறார் ப்ளூபெர்ரி, அவரது டெபுடி ஜிம்மியுடன்!

லக்னர் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளும் அந்த கிழட்டு நபர், தனக்கு ஒரு பெரிய தங்கச் சுரங்கம் இருக்குமிடம் தெரியும் என அந்நகரில் உள்ளதொரு மதுபானக் கடையில் உளறி வைத்து வம்பில் மாட்டுகிறான். இதே கதையைச் சொல்லி, முன்பு மோசடி செய்திருந்ததால் கோபமாகும் அந்நகர தங்க வேட்டையர்கள் லக்னரை கொல்ல முயல்கின்றனர்.

அவனைக் காப்பாற்றி, பாதுகாப்புக்காக சிறையிலடைக்கிறார் ப்ளூபெர்ரி! அச்சமயம் வெகுமதி வேட்டையர்கள் இருவர், லக்னரை கைது செய்ய வாரண்ட்டுடன் ப்ளூபெர்ரியை அணுகுகின்றனர். இடைப்பட்ட வேளையில் ஜிம்மிக்கு தங்கச் சுரங்கத்தில் பாதியை தருவதாக ஆசை காட்டி அவன் உதவியுடன் சிறையில் இருந்து தப்புகிறான் லக்னர்.
ஜிம்மி புதையல் ஆசையில் ப்ளூபெர்ரிக்கு துரோகம் இழைத்திருந்தாலும் அடிப்படையில் ஒரு நல்ல மனிதன். லக்னரோ முதுகில் குத்த நேரம் பார்க்கும் நயவஞ்சகன். இவர்களைத் தேடிக் கிளம்பும் மூவரணியில் ப்ளூபெர்ரி ஒரு நேர்மையான அதிகாரி. ஆனால் அவ்விரண்டு வெகுமதி வேட்டையர்களோ பணத்திற்காக எதையும் செய்ய கூடியவர்கள்.

முரண்பாடான மனிதர்கள் கூடுமிடத்தில் மனிதத்தின் முகட்டையும், மடுவையும் தொட்டுச் செல்லும் சம்பவங்களுக்கு பஞ்சமிராதுதான்! தங்கச் சுரங்கத்திற்கு செல்லும் பாதையோ - சுட்டெரிக்கும் பாலைவனமும், வறண்ட குட்டைகளும், குறுகிய கணவாய்களும், முரட்டுச் செவ்விந்தியர்களும், இன்ன பிற தடைகளும் நிறைந்த ஆபத்தான ஒன்று!.

களைத்த குதிரைகளின் மேல் செய்யும் பயணம் மரணத்திற்கு மட்டுமே இட்டுச் செல்லும். அக்குதிரைகளும் இல்லாவிடில் வெப்பம் தாளாது களைத்து விழும் இடமே கல்லறையாய் மாறிடும்! வறண்ட பாலைவனமோ, 'தங்கத்தை விட தண்ணீர் பெரிது' என்ற கசப்பான உண்மையை இறக்கும் நிலையிலுள்ள வேட்டையர்க்கு இரக்கமின்றி நினைவூட்டிடும்!

இந்தத் தடைகளை ஐவரும் தாண்டினார்களா?! தடத்தில் உள்ள தடைகளை கடந்தால் மட்டும் போதுமா?! முடிவில் ஒரு திருப்பமாய், சுரங்கத்தின் அருகே காத்திருந்தது அந்த பேராபத்து - தங்கக் கல்லறை!
☻ ஒரு மாறுதலுக்காக ஆசிரியர் விஜயனின் வலைப்பூவில் நான் இட்ட கீழ் காணும் பின்னூட்டத்தை இங்கே 'காப்பி + எடிட் + பேஸ்ட்' செய்கிறேன்! ;)

// இவ்வருடம் வெளியான வண்ண இதழ்களில் மொழிப்பெயர்ப்பு / மொழிநடை, எந்த தரத்தில் இருந்ததோ - அதே பாணியில்தான் தங்கக் கல்லறையிலும் இருக்கிறது! இந்த புதிய பாணி மொழிப்பெயர்ப்பு என்னைப் போன்ற ஒரு பகுதி வாசகர்களுக்கு 'சற்றே சுமார் ரகம்' (ஆங்காங்கே) என படுவதென்னவோ உண்மைதான்.

ஆனால் அதற்கான காரணங்களையும், அவர் அலுவலர்கள் சந்திக்கும் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் இன்ன பிற நெருக்கடிகளைப் பற்றியும் ஏற்கனவே ஆசிரியர் பல முறை பொறுமையாக விளக்கி விட்டார். எழுத்துப் பிழைகளை களைவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். எனவே, இவற்றை மீண்டும் மீண்டும் பெரிது படுத்துவதில் யாருக்கும் எந்த பலனுமில்லை. //

பி.கு.1: அதே சமயம் இனி வரும் இதழ்களில், நான் மற்றும் மற்ற வாசக நண்பர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டிய குறைகளைத் தவிர்த்து, புதிதாக ஏதேனும் தென்படும் பட்சத்தில் அவற்றை ஆசிரியரின் வலைப்பூவிற்குச் சென்று, தயங்காமல் 'ஜல்தியாக' பின்னூட்டம் இடுவேன் என்று இங்கு உறுதி கூறுகிறேன்! ;) இதில் எந்த ஒரு கெட்ட நோக்கமும் கிடையாது! :)

பி.கு.2: 'ஜல்தி' - சமீபத்தில் நமது இதழ்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல். மேலே உள்ள பத்தியில் இருப்பது போலவே இந்தச் சொல் வரும் இடமெல்லாம் கண்ணை உறுத்துகிறது!!!

பி.கு.3: இந்தப் புத்தகத்தை இன்னமும் வாங்காதவர்கள், Ebay மூலம் ஜல்தியாக வாங்குங்கள்! :D

பி.கு.4: இணைப்பாக வரும் கருப்பு வெள்ளைக் கதைகள் ஒரு பகுதி வாசகர்களை வெகுவாக திருப்தி படுத்தும் ;)

பி.கு.5: 'டை_ர்' என்ற பெயர், இந்தப் பதிவில் வேண்டுமென்றே (வேண்டாம் என்றே!) தவிர்க்கப்பட்டுள்ளது! ;)

பி.கு.6: இந்தப் பதிவு போன பி.கு.விலேயே முடிந்து விட்டது! :) :) :)

19 comments:

 1. எனக்கு புத்தகம் மிகவும் தாமதமாக (20 days late :( ) வந்தது.

  எனக்கும் இந்தக் குறைகள் (spelling mistakes) பெரியதாக தெரியவில்லை.

  Probably I haven't read/remember the old version of this story

  ReplyDelete
  Replies
  1. பெரியாருக்கே பெரிதாக தெரியவில்லை எனும் போது நான் எம்மாத்திரம்?! ;)

   Delete
 2. //கதை திடுதிப்பென்று முடிவது போல ஒரு உணர்வு எழுந்தாலும், //

  எனக்கு அந்த உணர்வு எழவில்லை. உங்கள் பதிவுதான் திடு திப்பென்று முடிவது மாதிரி ஒரு உணர்வு :-(

  ஜல்தியை வட நாட்டவர்களை தவிர யாரும் உபயோகிப்பதுமாதிரி தெரிய வில்லை.

  ReplyDelete
  Replies
  1. அதாவது பதிவு ஜல்தியாக முடிந்து விட்டது என்கிறீர்கள், அப்படிதானே?! :)

   Delete
 3. எதுக்கடா வம்பு என்கிறமாதிரி, ரொம்ப நாசுக்கா விமர்சனம் பண்றமாதிரி தெரியுது. ;)

  ReplyDelete
  Replies
  1. :) :) :) சிண்டு முடியற வேலையை ஆரம்பிச்சாச்சா?! ;) தம்பி, டீ இன்னும் வரலே! ;)

   Delete
  2. யாருப்பா அது, ஸாருக்கு டீயில மிளகு தூள் கொஞ்சம் தூக்கலா போட்டு கொடுப்பா :-D

   Delete
  3. மிளகு டீ நல்லாத்தானே இருக்கும்?! :)

   Delete
 4. பாஸ் வழக்கமா "குறை நிறைகளுடன்" தெளிவான விமர்சனம் எழுதும் "ப்ளேட் கார்த்திக்" என்ற ஆளை இந்தப் பதிவின் இண்டு இடுக்கில் எல்லாம் தேடிப் பார்த்துவிட்டேன் காணவில்லையே :P அவரைப் பார்த்தால் இந்தப் பக்கம் வரச் சொல்லுங்க :-)

  ReplyDelete
  Replies
  1. அவர் எங்கேயோ அரேபியாவிலோ, ஆப்ரிக்காவிலோ சுத்திட்டு இருப்பாருன்னு நெனைக்கிறேன்!!! :D

   ஆனால், சொன்ன குறைகளையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்று தோன்றியது சௌந்தர்! It will only discourage the Editor! :)

   Delete
  2. //It will only discourage the Editor!// உண்மை நண்பரே.

   Delete
 5. தினமும் ஸட்ராங் காஃபி சாப்பிட்டாலும், திடீர்னு ஒரு நாள் லைட் டீ சாப்பிடுவதும் சுகமே!

  பதிவை விட பி.கு.கள் பின்னுகின்றன. ;)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே!

   பி.கு.1: & 4: 'இங்கு தட்டினால் அங்கு வலிக்கும்' என்பதற்காக!!! ;) (ரமணா படத்தில் எனக்கு பிடித்த இரண்டாவது வசனம்!) :) :) :)

   அப்புறம், இங்க சொன்ன டீயும் வரல்ல, அங்க நீங்க தர்றதா சொன்ன மோதிரமும் வரல்ல! :) :) :)

   Delete
 6. அருமையான பதிவு கார்த்திக். இன்று நான் பழைய ராணி காமிக்ஸ் புக்ஸ்களை அடிக்கி கொண்டிருக்கும்போது "கில்லாடி வீரன்" என்ற தலைப்பில் வந்த புக்கை எதேய்சையாக புரட்டி பார்த்தேன். அதில் இருக்கும் ஹீரோ அச்சு அசலாக நம் tiger(ப்ளூ பெர்ரி) மாதிரியே இருகிறார், இதில் அவரின் பெயர் ரெட். சித்திரங்களும் அதே பாணியில் வரைய பட்டிருகிறது, அனேகமாக அது tiger தான் என்று நினைக்கிறன். வெளி வந்த வருடம் 1998 இதழ் -327 . அப்புறம் 5 காமிக்ஸ் புத்தங்களை nannol நிலையத்தில் இருந்து பெற்று இருகிறேன் .கி மு வில் சோமு by சிம்பு இஸ் சோ குட். சித்திர தரமும் அருமை , இவர் வடிவேலு நடித்த 23 ம் புலிகேசி படத்தை இயக்கியவர். அப்புறம் வாண்டுமாமா வின் பலே பாலு மற்றும் சில புத்தங்கள். படித்து விட்டு என் கருத்தை கூறுகிறேன்.

  Adios Amigos,

  Giri

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரி! (துர்)அதிர்ஷ்டவசமாக ராணி காமிக்ஸ் 1997-க்குப் பின் வெளியான இதழ்கள் 99% என்னிடம் இல்லை! :) சாம்பிளுக்கு ஒரு உட்பக்க ஸ்கேன் (கில்லாடி வீரன்!) போடுங்களேன் பார்ப்போம்! வாண்டுமாமாவின் பலே பாலு நானும் வாங்கினேன் - ஒரு சில குட்டிகதைகள் மட்டும் படித்தேன்! சிறு வயதில் வெகுவாய் ரசித்த கதைகள் இவை! உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பகிருங்கள்!

   Delete
 7. I don't have the scanner Karthik. Let me try to take some Photos and send it to you :).

  ReplyDelete
 8. கார்த்திக் இரண்டு மூன்று நாட்களாக நான் நமது லயன் ப்ளாக் இன் பக்கமே வரவில்லை. என்னதான் நடந்தது. தனியாக ஒரு பதிவில் எங்களுக்கு விளக்கம் தர முடியுமா ? ப்ளீஸ் . I have taken some photos from Kilaadi Veeran comic book, If you Could share your mail ID would be really great. thanks.

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia