ஹிந்திரன்!


விமர்சனத்திற்குப் போகும் முன் ஒரு குட்டிக் கதை:

ஒரு ஊர்ல ஒரு அப்பா; அவருக்கு ஒரே ஒரு மகன்; வேண்டாம், ரெண்டுன்னு மாத்திக்கிங்க! சின்ன வயசுலேயே ஒரு பையன் பிரிஞ்சு போயிடறான். அப்பா கிட்ட வளர்ற பையன் நல்லவன், பிரிஞ்சு போன இன்னொரு பையன்? ஆமா, அதேதான் - கெட்டவனா வளர்றான்! நடுவுல கொஞ்சம் பாட்டு, சண்டை, மொக்க காமெடி இதெல்லாம் போட்டுக்குங்க, சரியா?

க்ளைமேக்ஸ்ல கெட்ட பையன் - தன்னோட அப்பாவையும், நல்ல பையனோட லவரையும், ஒரு பாழடைஞ்ச ஃபேக்டரி பில்டிங்ல இறுக்கமா கட்டி வச்சு, 'ஹா ஹா ஹா'-ன்னு பயங்கரமா சிரிக்கறான்! அவனோட அப்பா, 'வேணாம்டா மவனே, நீ திருந்தணும், நல்லவனா மாறணும்' அப்படின்னு கெஞ்சறார். அதுக்கு அவன், 'முடியாது, உன்னால என்ன கிழிக்க முடியும்?'-ன்னு நக்கல் பண்றான். அதுக்கு அவங்கப்பா கோவமா, 'என்னோட பேர் சொல்லும் பிள்ளை, உனக்கு பதில் சொல்வான்டா'-ன்னு கத்துறார்!

ஒரு ஓட்ட ஜீப்-லயோ, இல்லாட்டி ஒரு இத்துப் போன புல்லட்-லயோ, ஃபேக்டரி பக்கச் சுவர் மாதிரி அடுக்கி வச்சிருக்கிற செங்கல்களை சிதற அடிச்சிக்கிட்டு, டெர்ரரா என்டர் ஆவுறான் நல்ல பையன்! அவனப் பார்த்ததும், 'என் கிட்ட நிறைய அடியாளுங்க இருக்காங்க, துப்பாக்கி இருக்கு, பச்சாப் பையன் உன்கிட்ட என்னடா இருக்கு?'-ன்னு கேட்டு, மறுபடி 'ஹா ஹா ஹா'-ன்னு வில்லச் சிரிப்பு சிரிக்கிறான் கெட்டப் பையன்! 'என் பக்கம் அப்பா இருக்காருடா'-ன்னு கெத்தா சொல்லிட்டு, ஸ்டைலா ஒரு லுக்கு விடுறான் நல்ல பையன்!

அப்புறம் ஒரு பதினஞ்சு நிமிஷம் பயங்கரமா சண்ட நடக்குது, ரெண்டு பசங்களும் செம டயர்டு ஆயிடுறாங்க! (நாமளும்தான்). இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல, தேவையில்லாம அவங்க அப்பா என்டர் ஆகி, அல்பாயுசுல பரலோகத்துக்கு பேக்கப் ஆயிடுறாரு! அதுனால செம காண்டாவுற நல்ல பையன், 'டாய்ய்ய்ய்ய்ய்ய்'-ன்னு கத்திக்கிட்டே, கெட்ட பையனை போட்டுத் தள்ளிடறான்.

எல்லாம் முடிஞ்சதும், 'நான் தனி ஆள் இல்லடா' அப்படின்னு சொல்லிகிட்டே, நம்ம கீரோ, அதான் சார் அந்த நல்ல பையன், ஸ்க்ரீன் பக்கமா கையக் காட்டுறான்! தியேட்டர்ல இருக்குற ஆடியன்ஸ் எல்லாம், 'நான் இல்ல, நான் இல்ல'-ன்னு அலறிக்கிட்டே, வுட்டாப் போதும்னு, முண்டியடிச்சுக்கிட்டு வாசல் பக்கமா ஓடிட்டு இருக்காங்க...!

அந்த ஓடிப் போற ஆடியன்ஸ்ல, ஒரு பத்து ஆளுக - படத்தோட ப்ரொடியூசர் செட் பண்ணி அனுப்புன பய புள்ளைங்க! அவனுங்க மட்டும், வாசலுக்கு வலது பக்கமா நிக்குற ஒரு கேமராமேன் கிட்ட போயி, வரிசையா - 'படம் சூப்புரு', 'படம் மாஸூ', 'படம் கிளாஸூ', 'அஞ்சு வருஷம் ஓடும்', 'அறுபது ஆஸ்கர் அள்ளும்' - அப்படின்னு வாய்க்கு வந்ததை எல்லாம், வாந்தி எடுக்குறாங்க!

ஆனா, வாசலுக்கு இடது பக்கமா ஓடுன மெஜாரிட்டி கும்பல்ல, ஒரே ஒரு பயபுள்ள மட்டும், நேரா வீட்டுக்குப் போயி, கூகிள் ப்ளாகர்ல சின்சியரா ஒரு போஸ்டு ரெடி பண்ணிட்டு இருக்கு!!!

இனி பதிவுக்குள் செல்வோமா நண்பர்களே?! :)

இந்தியப் படங்களில் பார்த்துச் சலித்த இந்தக் கதையுடன், ஹாலிவுட் (காமிக்ஸ்) சூப்பர் ஹீரோ படங்கள் அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து, கொஞ்சம் ஸ்டைலிஷ் ஆக, பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்தால் அது தான் க்ரிஷ்!

இந்தியாவில் உருவாக்கப் பட்ட, சொல்லிக் கொள்ளும்படியான சயன்ஸ் பிக்ஷன் / சூப்பர் ஹீரோ படம் என்றால், எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது எந்திரன் மட்டும் தான்! ஆனால், அந்தப் படத்திலும் வழக்கமான தமிழ் சினிமா சமாச்சாரங்கள் அனைத்தும் அப்படியே இருக்கும். இதிலும் அதே கதை தான் - பாடல்கள், சென்டிமென்ட் சீன்கள், மொக்கை காமெடி, (பெரிய) லாஜிக் ஓட்டைகள் என்று ஒன்று விடாமல் இருக்கின்றன.

ரஜினிக்கு வயதாகி இருந்தாலும், அவரிடம் அட்டகாசமான ஒரு ஸ்க்ரீன் பிரசன்ஸ் இருக்கும். எந்திரனின் பல காட்சிகளை, லாஜிக் பார்க்காமல் ரசித்ததிற்கு அவரின் சூப்பர் ஸ்டார் இமேஜும் ஒரு காரணம்! ஆனால், அது ஹ்ரித்திக்கிடம் மிஸ்ஸிங் (அட்லீஸ்ட் நம்மாட்களைப் பொறுத்த வரை!).

ஆள் படு ஸ்மார்ட் என்ற ஒரே ஒரு அம்சத்தைத் தவிர, சொல்லிக் கொள்ளும்படி நடிப்பு உட்பட எதுவுமே ஹ்ரித்திக்கிடம் இல்லை. டேன்ஸ் ஆடும் போது கூட, விறைப்பாக எக்ஸர்சைஸ் செய்து கொண்டே தான் ஆடுகிறார். ஆனால், அவர் தன்னுடைய 16 பேக் பாடியைக் காட்டும் போது மட்டும், நம்முடைய (தொப்பை) வயிறு, பொறாமையில் பற்றிக் கொண்டு எரிகிறது! :(

பிரியங்காவுக்கு படத்தில் அதிக வேலையில்லை! அவரை நடிப்பிலும், அழகிலும் ஓரங்கட்டி விடுகிறார் - வில்லியாக வரும் கங்கனா ரனாவத்! ஹாலிவுட் நடிகைகளைப் போலவே அலட்டல் இல்லாத, படு ஸ்டைலான நடிப்பு, தூள்! கெட்ட பையனாக விவேக் ஓபராய் - மோசமில்லை.

ஆனால், இது மாதிரி படங்களுக்கு நாம் என்ன நடிப்பைப் பார்க்கவா போகிறோம்?! விஷூவல் எஃபெக்ட்ஸ் - ஒரு இந்தியப் படம் என்ற முறையில், இந்த பட்ஜெட்டில் - பிரமாதம் என்று தான் சொல்வேன்! பல காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இருந்து உருவப் பட்டவை என்றாலும், 'இது ஒரு இந்தியப் படமாச்சே!' என்ற ஒரு சாஃப்ட் கார்னர் இருந்து தொலைப்பதால், காப்பி அடித்த காட்சிகளையும் என்னால் ரசிக்க முடிந்தது! க்ளைமேக்ஸ் ஆக்ஷன் சீக்வன்ஸை விட - ஹ்ரித்திக், பிளேனை தரையிறங்க உதவும் சீக்வன்ஸூம், 'மனிதன் பாதி - மிருகம் பாதி' ஆட்களோடு (X-MEN!) மோதும் காட்சிகளும் நன்றாக இருக்கின்றன.

பாடல்கள், மொக்கை காமெடி, செண்டிமெண்ட், காதல் மற்றும் வெட்டி ஹீரோயிசக் காட்சிகளை எடுக்க செலவழித்த நேரத்தில் - ஒழுங்காக ரூம் போட்டு யோசித்து, இன்னும் கொஞ்சம் லாஜிக் சேர்த்து, விறுவிறுப்பாக ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடுமாறு எடுத்திருந்தால் இந்தப் படம் இந்தியாவின் பெஸ்ட் சூப்பர் ஹீரோ படமாக இருந்திருக்கும். ஆனால், இந்த ஹிந்திரனால் நம்மூர் எந்திரனைக் கூட எட்ட இயலவில்லை. இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் பட்டியலிட்ட டெம்ப்ளேட் காட்சிகளை நாம் தவிர்க்காத வரை, எந்த ஒரு இந்தியப் படமும் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு நிகரான அந்தஸ்தை, ஒரு நாளும் அடையப் போவதும் இல்லை!

ஆலையில்லா ஊரில் வசிப்பதால், இந்த சூப்பர் ஹீரோவை, போனால் போகிறது என்று ஒருமுறை பார்க்கலாம்!

பி.கு: ப்ளேட்பீடியாவில் வெளிவரும் முதல் ஹிந்திப் பட விமர்சனம் இது!!! ஒரு காலத்தில், அகமதாபாத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, வாரத்திற்கு இரண்டு ஹிந்திப் படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன்; இப்பொழுது, வருடத்திற்கு இரண்டு பார்த்தாலே அதிகம்! ஹிந்தியில் பொதுவாகவே பல நல்ல படங்களும் அடிக்கடி வெளிவருகின்றன என்றாலும், ஏனோ அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் அகமதாபாத் விட்டு வெளியே வந்ததும், காணாமல் போய் விட்டது! இனிமேலாவது பார்க்க முயற்சிக்க வேண்டும்!

கருத்துகள்

  1. வந்தோம்ல first .. ;-)

    நான் போன வாரம் பார்த்த படத்துக்கு இது பெட்டெர்னு தோணுது ... (ஆ ... ரம்பம்) !

    /* 'இது ஒரு இந்தியப் படமாச்சே!' என்ற ஒரு சாஃப்ட் கார்னர் */
    /* ஆலையில்லா ஊரில் வசிப்பதால், */

    இது ரெண்டையும் பாத்த ஒடனே எனக்கு வேற ஒரு ஞாபகம் வருது .. ஆனா நான் அழுது என் "கோபம்" உங்கள தாக்கிடுமொன்னு நெனச்சா வர்ற அழுக கூட ... ஹா .. ஹா ... அபிராமி அபிராமி :-) :-)

    --

    இப்போதெல்லாம் multipexகளில் இந்த மாதிரி மொக்கை தான் ஓடுது - நீங்க முன்ன சொன்ன நல்ல படம் எல்லாம் ஏதோ ஒரு பாடாவதி திரை அரங்கில், வீட்டிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு அப்பால் .. ஹ்ம்ம் .. !

    இதை கங்கனாவுக்காக பார்க்க முயற்ச்சிக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனா நான் அழுது என் "கோபம்" உங்கள தாக்கிடுமொன்னு நெனச்சா வர்ற அழுக கூட ... ஹா .. ஹா ... அபிராமி அபிராமி :-) :-)//
      :-D

      //இதை கங்கனாவுக்காக பார்க்க முயற்ச்சிக்கிறேன் :-)//
      சரிங்க்ணா! ;)

      //நான் போன வாரம் பார்த்த படத்துக்கு இது பெட்டெர்னு தோணுது ... (ஆ ... ரம்பம்) !//
      அதை நானும் பார்த்தேன்! விமர்சனம் போடும் அளவுக்கு வொர்த் இல்லை என்பதால் - நோ பதிவு! :)

      நீக்கு
  2. ஹி ஹி .. விமர்சனத்திற்கு முன் சொல்லப்பட்ட கதை நல்லா இருந்தது .. :) ;)

    அதையே படமா எடுத்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விமர்சனத்திற்கு முன் சொல்லப்பட்ட கதை நல்லா இருந்தது//
      இந்தப் படத்தோட கதையே அது தானே சார்! :P

      நீக்கு
  3. நமக்கு ஹிந்தி அறிவு "ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாத்தா" என்கிற அளவே என்பதாலும் உங்களது விமர்சனத்தைப் படிக்கையில் முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த பழைய பழிவாங்கல் கதைகளை விட மிக மோசம் என்பதாலும் ஹிஹி... இந்தப்படம் பார்க்கப்போவதில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த பழைய பழிவாங்கல் கதைகளை விட மிக மோசம் என்பதாலும்//
      பழைய சரக்கு தான், வெளிநாட்டு பேக்கிங்குடன்!

      நீக்கு
  4. டெம்ப்ளேட் கதை விளக்கமும், அதைத் தொடர்ந்த பட விமர்ச்சனமும் - வித்தியாசமானதொரு ஜாலி ஜில்பான்ஸா!

    கங்கனா - 'அன்பே என் அன்பே' பாடலில் அநியாயத்துக்கு 'அழகு' காட்டிய ஸ்லிம்மி தானே? ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், தமிழில் அநியாயமாக வீணடிக்கப் பட்ட அதே பெண் தான்! ;-)

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia