காமெடி கௌபாய், கில்லாடி கௌபாய்!

இது கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைவிமர்சனம் அல்ல, பிப்ரவரி மாதம் வெளியான இரண்டு வெவ்வேறு விதமான கௌபாய் (லயன்) காமிக்ஸ்கள் பற்றிய விமர்சனம். ஒருவர் லக்கி லூக் - சிரிப்புக் கௌபாய், மற்றவர் கேடிகளை வீழ்த்தும் கில்லாடி - டெக்ஸ் வில்லர்!

1. சிகப்பாய் ஒரு சொப்பனம் - டெக்ஸ் வில்லர் (லயன் #215):
பிப்ரவரி மாத கோட்டாவில் வெளியாகியிருக்கும் 2 * ₹50 இதழ்களில் முதலாவது இதழான இது, நச்சென்ற அட்டைப்படத்துடன் வந்திருக்கிறது! விதவிதமான நீள அகலங்களில் காமிக்ஸ் வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பிரகாஷ் பப்ளிஷர்ஸ், வழக்கமாக Trade Paperback புத்தகங்களுக்கு பயன்படுத்தப்படும் அளவில் இந்த இதழை வெளியிட்டிருக்கிறார்கள். பழகிப்போன அளவு என்பதால் கையில் பிடித்துக்கொண்டு படிப்பதற்கு சிக்கென்று இருக்கிறது. இது ஒரு கருப்பு வெள்ளை காமிக்ஸ் மற்றும் புத்தக அளவும் வழக்கத்தை விட சிறியது என்பதால் கூடுதலான பக்கங்களுடன் (242) வந்திருக்கிறது!
 
கதைச்சுருக்கம்: செவ்விந்தியர்களில் ஒரு பகுதியினரையாவது மகா மோசமான கொலை வெறியர்களாக காட்டியே ஆக வேண்டும் என்ற டெக்ஸ் காமிக்ஸ் சம்பிரதாயங்களை மீறாத கதையமைப்பு. ஹூவால்பை செவ்விந்திய இனத்தின் மதகுரு ஒருவன், "மற்ற செவ்விந்திய இனங்களை அடிமை கொண்டு", அவர்கள் துணையுடன் வெள்ளையர்களை அடக்கத் திட்டம் போடுகிறான், இதை டெக்ஸ் சாமர்த்தியமாக முறியடிக்கிறார். இதில் "மற்ற செவ்விந்திய இனங்களை அடிமை கொண்டு" என்பதை கவனியுங்கள் - அதாவது செவ்விந்தியன் ஒருவன், தனது இனங்களை ஒன்று சேர்த்து வெள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவதாக காட்டினால்; நடுநிலைப் பார்வையில் அவன் தன் தாய்நாட்டைக் காக்கப் போராடும் வீரனாக, ஆளுமை கொண்ட தலைவனாகத் தோன்றக் கூடிய அபாயம் இருப்பதால், இப்படி ஒரு உபாயம்.
 
இந்த ஒரு அம்சத்தை ஜீரணித்துக் கொண்டு படித்தால் இது மிகவும் துடிப்பான கதையே! உயிரோட்டமான சித்திரங்கள் வேகமாய் நகரும் கதைக்கு துணையாக இருக்கின்றன! கதை நெடுக பரபரப்பான சண்டை காட்சிகளுக்கு குறைவில்லை! வழக்கம் போல கிட் கார்சனின் பன்ச் வசனங்கள் அருமை - கார்சனின் வசனப் பகுதியை எழுதுவதற்காகவே ஆசிரியர் தனியே ரூம் போட்டு யோசிப்பார் என கேள்விப் பட்டேன்! :) டெக்ஸ் காமிக்ஸின் அமைப்புக்கு இந்த பேப்பரின் உயர விகிதம் சற்று அதிகம் என்பதால் உட்பக்கங்களில் மேலேயும் கீழேயும் தலா ஒரு இன்ச் இடம் வீணாகி உள்ளது (படத்தை பெரிதாக்கிப் பார்க்கவும்!).

இந்த இதழின் வடிவமைப்பு, டெக்ஸ் காமிக்ஸை 'உருவாக்கும்' இத்தாலிய பதிப்பகத்திற்கு மிகவும் பிடித்துப் போனதால்; இந்த இதழை மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்தில் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்கிறார்களாம்! இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழ் (அதுவும் தமிழில்!) இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பது பெருமை சேர்க்கும் சங்கதிதானே? இதுவரை மட்டமான தாள்களிலேயே தமிழ் டெக்ஸை பார்த்துப் பழகிய அவர்களுக்கு இந்த இதழ் மிகச் சிறப்பாக தோன்றி இருப்பது வியப்பில்லை என்றாலும்; கடந்த ஆண்டில் இருந்து  உயர்தர தாள்களில் தமிழில் காமிக்ஸ் படித்து பழகிப் போன நமக்கு, இந்த இதழின் மகா சன்னமான வெளிர்நீல தாளின் தரம் ஏமாற்றத்தையே தருகிறது.

பக்க நிரப்பியாக, ஒரு 'ஒரு பக்க' பூனைக் கதைத் தொடர் இந்த இதழில் அறிமுகமாகி இருக்கிறது. யாரோ ஒரு நல்லவர், இரும்புக்கை மாயாவி மேல் இருக்கும் அளவுகடந்த பிரியத்தால் இத்தொடருக்கு 'மியாவி' என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.
 
இந்த இதழ் வெளியான சமயத்தில் பேரினவாதம் - சிற்றின்பவாதம், மன்னிக்கவும் சிற்றினவாதம் பற்றியும்; அமெரிக்காவில் செவ்விந்திய பூர்வகுடி மக்கள் ஒடுக்கப்பட்டதைப் பற்றியும் - லயன் ப்ளாகில் 'நீயா நானா' டைப்பில் ஒரு காரசாரமான விவாதமே நடந்தது. சுவாரசியமான அந்த விவாதத்தைப் படிக்க விரும்புபவர்கள், ஒரு கழுகின் வருகை பதிவின் பின்னூட்டப் பகுதிக்குச் சென்று முதலில்  பொறுமையாக அனைத்துப் பின்னூட்டங்களையும் "Load More" செய்த பின்னர் அந்த விவாதத்தை தேடிப்பிடித்து படித்துக்கொள்ளுங்கள். :)

2. வில்லனுக்கொரு வேலி - லக்கி லூக் (லயன் #216): 
பிப்ரவரி மாதம் வெளியாகி இருக்கும் இரண்டாவது ₹50 இதழின், பழைய மினிலயன் பாணி அட்டைப்படம் நினைவுகளைக் கிளருகிறது. ஒரு முழுநீள லக்கி லூக் சாகசத்துடன், உபரியாக இரண்டு எட்டு பக்க Iznogoud (மதியில்லா மந்திரி) கதைகள் (ஒன்று மட்டும் B&W-ல்!). 'குட்டீஸ் கார்னர்' என்ற பெயரில் குழந்தைகளுக்காகவும் ஒரு சில பக்கங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. வழக்கமான ₹100 புத்தகங்களை விட பக்கங்கள் 50% குறைச்சல் என்றாலும், ஒரு (முழுநீள) கதைக்கு ஒரு தனி புத்தகம் என்ற அமைப்பு இதன் ப்ளஸ்! இதையே மாதா மாதம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்! இந்த இதழ் முதல், ஜூனியர் எடிட்டராக விஜயன் அவர்களின் புதல்வர் விக்ரம் பதவியேற்றுள்ளார்! தனது தந்தையைப் போலவே தமிழ் காமிக்ஸ் உலகில் பெரும் மாறுதல்களை கொண்டு வர அவருக்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்!
 
கதைச்சுருக்கம்: அடாவடி கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் பரப்புகளுக்கிடையே, நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய இயலாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தனது ட்ரேட்மார்க் நகைச்சுவையுடன் போர்க்கொடி உயர்த்துகிறார் லக்கி லூக்!
இதோடு இணைந்து வந்திருக்கும் மதியில்லா மந்திரியின் இரண்டு கதைகளும் பரவாயில்லை ரகம்! குறிப்பாக வண்ணத்தில் வந்திருக்கும் அந்த ஊடு சூனிய காமெடிக் கதையும், அதன் வசனங்களும் நன்றாக உள்ளன! மொத்தத்தில் சிறுவர்களுக்கு நீங்கள் புதிதாக காமிக்ஸ் அறிமுகம் செய்ய விரும்பினால், அவர்களுக்கு பரிசளிக்க இது மிகவும் பொருத்தமான இதழ்!
 
 
நீங்கள் இன்னமும் படித்திராத பட்சத்தில், NBS பற்றிய ஒரு (தாமதப்) பார்வை:
முத்து காமிக்ஸ் - 40வது ஆண்டு மலர் - Never Before ஸ்பெஷல்!

கருத்துகள்

  1. உங்களிடம் இருந்து நீளமான ஒரு பதிவை எதிர்பார்த்தல் இப்படி ஒரு குட்டி பதிவா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை விரிவாக எழுதவில்லை என்றால் பதிவு குட்டியாகதான் இருக்கும்! :)

      நீக்கு
  2. பதிவின் அளவு சின்னதென்றாலும் சொல்லவேண்டிய தகவல்களில் எல்லாவற்றையும் சொல்லியிருப்பது நன்று!

    'மியாவி' என்று பெயர் சூட்டுபவர்களெல்லாம் நல்லவர்களா? கர்...புர்...
    அதுவும் மாயாவியின் மேல் இருக்கும் அளவுகடந்த பிரியத்தால் 'மியாவி'னு பேர் வச்சாராம்! கிர்...

    கொஞ்சம் குட்டிப் பதிவென்றாலும் 'நச்' பதிவுதான்!

    பதிலளிநீக்கு
  3. உலக வரலாற்றில் முதல் முறையாக இரண்டு நாளில் இரண்டு தொடர் பதிவு அதுவும் காமிக்ஸ் பற்றி ... கலக்கல் நண்பா ...

    NBS இன் ஒவ்வொரு கதைகளை பற்றியும் தனி தனி பதிவு போட்டால் (விரிவாக - உங்கள் பார்வையில்) நன்றாக இருக்குமே :) நாங்கள் சில வருடங்கள் காத்திருக்க தயார்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாங்கள் சில வருடங்கள் காத்திருக்க தயார்.//

      ஆனாலும் உங்களுக்கு நக்கல் ஜாஸ்தி திருப்பூர் புளுபெர்ரி.

      நீக்கு
    2. //ஆனாலும் உங்களுக்கு நக்கல்//
      அதானே?! ;)

      //NBS இன் ஒவ்வொரு கதைகளை பற்றியும் தனி தனி பதிவு போட்டால்//
      Never!!! ;)

      நீக்கு
  4. //லயன் ப்ளாகில் 'நீயா நானா' //
    // "Load More" செய்த பின்னர் அந்த விவாதத்தை தேடிப்பிடித்து படித்துக்கொள்ளுங்கள். :)//

    அதனையும் இணைத்திருந்தால் வருங்கால சந்தியினர் பார்த்து படித்து தெரிந்து கொண்டிருப்பார்கள்.

    இந்த பதிவ திரைமனத்தில் வேறு இணைத்து விமர்சனம் படிக்க வருகிறவர்களை ஏமாற்றுகிறீர்கள்.

    //இதுவரை மட்டமான தாள்களிலேயே தமிழ் டெக்ஸை பார்த்துப் பழகிய அவர்களுக்கு இந்த இதழ் மிகச் சிறப்பாக தோன்றி இருப்பது வியப்பில்லை//

    :)

    //யாரோ ஒரு நல்லவர்//
    யாருங்க அது கண்டுபிடிப்பதற்கு ஏதாவது 4 ஆப்சன்ஸ் கொடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமிக்ஸ் என்பதும் படம் சார்ந்த ஊடகம்தானே கிரிஷ்? ;)

      அனைத்து காமிக்ஸ் பதிவுகளையும் திரைமணத்தில் போடுவதில்லை! ஒரு சிலவற்றை மட்டும் போடுவதுண்டு! நாலு பேரு (புதுசா) காமிக்ஸ் படிப்பாங்கன்னா நாலாயிரம் பேரை ஏமாத்தலாம் - தப்பில்லே! ;)

      அப்ப நான் நல்லவனா கெட்டவனா?! :) - இதான் உங்களுக்கான க்ளூ! :)

      நீக்கு
  5. செவ்விந்தியர்களை நல்லவர்களாக காட்டினால்"துயில் எழுந்த பிசாசு" மாதிரி கதை வரும் பரவா இல்லையா ? :D

    பதிலளிநீக்கு
  6. மியாவி என் மகனுக்கு மிக பிடித்து விட்டது நண்பா! பதிவுக்கு நன்றிகள்! மியாவி பெயரிட்டமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia