முத்து காமிக்ஸ் - 40வது ஆண்டு மலர் - Never Before ஸ்பெஷல்!

முத்து காமிக்ஸ் துவங்கி நாற்பது ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் - கிட்டத்தட்ட டெலிபோன் டைரக்டரி சைஸில், 400 ருபாய் விலையில், 456 பக்கங்களுடன், 90 சதவிகிதம் முழுவண்ணத்தில், பத்து கதைகள் அடங்கிய ஒரு மெகா காமிக்ஸ் சிறப்பிதழ் - கடந்த ஜனவரி மாதம் சென்னை புத்தகத் கண்காட்சியில் வெளியிடப்பட்டது! இந்த நீளமான வாக்கியத்தைப் படிப்பதற்கே மூச்சு வாங்குகிறதல்லவா? இந்த Never Before Special-ஐ (சுருக்கமாக NBS!) படித்து முடிப்பதற்கும் மூச்சு வாங்கித்தான் போனது!

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காமிக்ஸ் இதழில் திருஷ்டிப் பரிகாரமாக இருப்பது இதன் முன்னட்டை எனலாம். கௌபாய் டாப் ஹீரோக்களில் ஒருவரான ப்ளூபெர்ரி, எக்குத்தப்பான காஸ்டியூமில், ஒரு கையால் பற்றி எரியும் சாட்டையை சுழற்றிக் கொண்டே மறு கையால் இலக்கின்றி சுடும் வேடிக்கையான ஓவியம், இந்த இதழின் சிறப்பை மட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. பின்னட்டையில் தமிழ் காமிக்ஸ் உலகின் சமீபத்திய சூப்பர் ஸ்டாரான லார்கோ, கிட் ஆர்ட்டின் மற்றும் இந்த இதழில் அறிமுகமாகியுள்ள புது நாயகர் வேய்ன் ஷெல்டன் ஆகியோர் இடம் பிடித்துள்னர். அட்டைகளில் உள்ள சித்திரங்களை விட, அட்டை வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள நகாசு வேலைகள் வெகுவாக கவர்கின்றன. உதாரணதிற்கு, அட்டையோடு இணைந்து வந்திருக்கும் மேலுறை (Dust jacket), ஆங்காங்கே செய்யப்பட்டுள்ள வழுவழு லாமினேஷன், மின்னும் எழுத்துக்கள் - இவற்றைச் சொல்லலாம்.

முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு.சௌந்திரபாண்டியன் அவர்களின் சுருக்கமான ஆனால் அர்த்தமுள்ள முன்னுரை முதல் பக்கத்தை அலங்கரிக்கிறது. இன்றைய தலைமுறையினர் புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற ரீதியிலான ஆதங்கமான எழுத்துக்கள்! சமீபத்தில் பேஸ்புக் நண்பர் சிவக்குமார் பகிர்ந்திருந்த ஒரு கார்ட்டூன் இதோ:
இந்த முன்னுரையைத் தொடர்ந்து முத்து காமிக்ஸின் தற்போதைய ஆசிரியரும், சௌந்திரபாண்டியன் அவர்களின் புதல்வருமான திரு.S.விஜயனின் நான்கு பக்க முகவுரை! வாசகர் வட்டம் மிகவும் குறுகியது என்ற போதிலும், தயாரிப்புத் தரத்தை மேம்படுத்தி தொடர்ந்து தமிழில் காமிக்ஸ் வெளியிட்டு வரும் விஜயன் பாராட்டப்பட வேண்டியவர்! அட்டைகளின் உட்புறங்களில் லயன் / முத்து பதிப்பகத்தில் தற்போது பணிபுரிபவர்கள் பற்றிய சிறு அறிமுகம் வெளியாகியுள்ளது.

பத்து கதைகளுக்கும் தனித்தனி பதிவு போடுவது காலத்தை விரயம் செய்யும் காரியம் ஆகி விடும் என்பதால் அவற்றைப் பற்றிய ஒரு சிறு பார்வை மட்டும்:

I. லார்கோ வின்ச் - 1. கான்க்ரீட் கானகம் New York! & 2. சுறாவோடு சடுகுடு!:
லார்கோ வின்ச்சின் இரு பாகக் கதைதான் இந்த இதழின் ஹைலைட்! வழக்கமான தமிழ் காமிக்ஸ் தலைப்பு வைக்கும் பாணியில் (ஒரு டேஷ் டேஷ் - கதை/உதை (அ) ​படலம்/சடலம் (அ) மர்மம்/கர்மம் etc.) இருந்து சற்றே வேறுபட்ட கதைகளின் பெயர்களே, கனத்த கதையம்சம் கொண்டதொரு படைப்பை படிப்பதற்கு ஏதுவான ஒரு மனநிலையை அமைத்துத் தந்துவிடுகின்றன!
வணிக சாம்ராஜ்யங்கள் ஒன்றையொன்று விழுங்குவதற்காக செய்யும் பங்கு வர்த்தக தகிடுதத்தங்களை மையமாக வைத்து புனையப்பட்ட பரபரப்பான கதை. ஏராளமான பிசினஸ் சட்டங்கள் & ஷேர் மார்கெட் குறித்த விளக்கமான தகவல்கள், வசனங்கள் கதையெங்கும் விரவிக் கிடப்பதால் மிகவும் கவனமான வாசிப்பை கோரும் படைப்பாக அமைந்துள்ளது! மேலோட்டமாக படித்தால் விளங்கமாலேயே போய்விடும் அபாயம் இருந்தாலும், வழக்கமான லார்கோ பாணி அதிரடிகளும்; காதல் காட்சிகளும் நிறைந்திருப்பதால் சலிப்பு தட்டா வண்ணம் கதை நகர்கிறது! 

II. சிக்பில் & கோ - 3. கம்பளத்தில் கலாட்டா!: 
ஒரு மிதமான நகைச்சுவைக் கதை. ஷெரிஃப் டாக் புல் மற்றும் கிட் ஆர்ட்டினின் அசட்டுத்தனங்கள் லேசான புன்னைகையை கொணரத் தவறுவதில்லை. சிக்பில் குழுவினரின் "அதிரடி மன்னன்" என்ற கதை ஏற்கனவே ஜுனியர் லயனில் முழு வண்ணத்தில் பாக்கெட் சைஸில் வந்திருக்கிறது என்றாலும், முழு அளவில், வழுவழு வண்ணத்தில் வருவது இதுவே முதல் தடவை! 

III. லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி - 4. கான்சாஸ் கொடூரன்! & 6. இருளில் ஒரு இரும்புக் குதிரை!:
முத்து காமிக்ஸின் முதன்மையான நாயகர்களில் ஒருவரான ப்ளூபெர்ரியின் கதைகள் இன்றி எந்த ஒரு (Cocktail) சிறப்பிதழும் சிறப்பானதாக அமைந்திடாது என்பதாலோ என்னவோ, ஒன்றுக்கு இரண்டாக ப்ளூபெர்ரி கதைகள் இதில்!
ஆனால், இவற்றில் முதலாவது (கா.கொ.) தொடர்கதை ஒன்றின் மத்திமப் பகுதியாகவும், மற்றொன்று (இ.ஒ.இ.கு.) இன்னுமொரு தொடர்கதையின் துவக்கமாகவும் அமைந்து அந்தரத்தில் தொங்குவது வெறுப்பையே வரவழைக்கிறது. இருப்பினும் வழக்கமான கௌபாய் சமாச்சாரங்கள் நிறைந்த கதைகள் என்பதால் (என்னைப் போன்ற) வெஸ்டர்ன் பிரியர்களை எளிதில் திருப்திப்படுத்தி விடுகின்றன! குறிப்பாக இ.ஒ.இ.கு.-யில் கையாளப்பட்டுள்ள யுத்த தந்திரங்கள் மற்றும் (The Five Man Army திரைப்படத்தை நினைவுறுத்தும்) இரயில் சார்ந்த ஆக்ஷன் காட்சிகள் தூள்!

IV. டிடெக்டிவ் ஜில் ஜோர்டன் - 5. அலைகளின் ஆலிங்கனம்!
ஜில் ஜோர்டான் தமிழில் அறிமுகமாவது இப்போதுதான் என்றாலும், இது உண்மையில் ஐம்பதாண்டு (அரதப்) பழைய கதைத் தொடர். கிட்டத்தட்ட டின்டின் பாணியிலான கார்ட்டூன் சித்திரங்கள் கொண்ட, மெலிதான நகைச்சுவை கலந்த துப்பறியும் கதைகள் என்பதுதான் இத்தொடரின் தனித்தன்மை. சித்திரங்கள் வண்ணத்தில் பளிச்சென்று இருந்தாலும், ஏனோ முதல் வாசிப்பில் மனதோடு ஒன்ற மறுக்கின்றன. ஜில் பார்ப்பதற்கு Blondie-யில் வரும் Dagwood போலவே இருக்கிறார்! ஆர்ப்பாட்டமில்லாத கதையோட்டம், ஆங்காங்கே பளிச்சிடும் ஜில்லின் புத்திசாலித்தனம், உதவியாளார் லிபெல்லின் (மொக்கை) நகைச்சுவை, அலைகள் உயர எழும் சமயத்தில் தரைப்பாலத்தின் நடுவே ஜில் குழு பயணிக்கும் கார் மாட்டிக் கொள்ளும் பரபரப்பான கட்டம் என ஓரளவு ரசிக்கத் தக்க விதத்திலேயே கதை பயணிக்கிறது. 

V. வேய்ன் ஷெல்டன் - 7. ஒரு பயணத்தின் கதை! & 8. ஒரு துரோகத்தின் கதை!:
ஜேம்ஸ் பாண்ட் போன்ற நளினமான(?) முரட்டுத்தனம் கொண்ட உளவாளி வேடத்தில் நடித்திட நாற்பது வயதை கடந்து, காதோரம் நரை தட்டிய நடிகர்தான் பொருத்தமான தேர்வாக இருந்திடுவார் இல்லையா? அப்படிப்பட்ட ஒரு நாயகர்தான் வேய்ன் ஷெல்டனும்! எந்த ஒரு நாட்டின் உளவாளியாகவும் இல்லாமல், தனிப்பட்ட முறையில் பணத்திற்காக ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் முரட்டுத்தனமும், தெனாவட்டும் கலந்த ஒரு துடிப்பான நபர்!
சோவியத் ரஷ்யாவில் உள்ள ஒரு சுயாட்சி பகுதியில் நடக்கும் ஒரு எதிர்பாரா ட்ரக் விபத்தில் அந்நாட்டு இராணுவ அமைச்சர் கொல்லப் படுகிறார். விபத்துக்கு காரணமான ட்ரக் ஓட்டுனர் ஒரு பிரெஞ்சு நாட்டவர் என்பதால் ஏற்படும் அரசியல் பதட்டத்தால் இந்த இருநாடுகளுக்கிடையே பொருளாதாரத் தடை ஏற்படுகிறது. இந்தத் தடையால் பாதிக்கப்படும் ஒரு தொழிலதிபர், அந்த ட்ரக் டிரைவரை சிறையில் இருந்து 'யாரும் அறியா வண்ணம்' மீட்கும் மிக ஆபத்தான பணியில் ஷெல்டனை அமர்த்துகிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது ஒரு அட்டகாசமான சித்திர விருந்து! இதனுடைய மூன்றாவது மற்றும் இறுதிப் பாகம் விரைவில் வெளியாகிறது என்பது (வெறுப்பேற்றும்) கொசுறுத் தகவல்.

VI. மாடஸ்டி பிளைஸி - 9. எதிரிகள் ஏராளம்!:
அறிமுகமாகி நாற்பது, ஐம்பது ஆண்டுகள் உருண்டிருந்தாலும் சில நாயக, நாயகிகள் தங்களது வசீகரத்தை சிறிதளவேனும் தக்கவைத்துக் கொள்ள தவறுவதில்லை. அந்த வகையில், மாடஸ்டி ப்ளைஸி & கார்வின் தோன்றும் இந்த B&W ஆக்ஷன் த்ரில்லர் ஓரளவுக்கு சுவாரசியமானதாகவே இருக்கிறது. ஒரு பழைய ஜேம்ஸ் பாண்ட் படத்தை TV-யில் பார்க்கும் உணர்வு நிச்சயம் ஏற்படும். சிறுவயதில் அதிரடியாக தோன்றிய ஆக்ஷன் படங்கள், இப்போது பார்த்தால் ஸ்லோமோஷனில் நகர்வது போன்ற உணர்வு எழுவது ஒன்றும் வியப்பில்லைதானே?! இந்தக் கதையை விட - மாடஸ்டியின் பிகினி உடையில், கோடு போட்டு விளையாடி அவரை கோடஸ்டியாக மாற்றிய முத்து காமிக்ஸ் ஓவியரின் சாகசம் மிகவும்(!) ரசிக்கத்தக்கதாக இருந்தது! ;)

VII. இரும்புக்கை மாயாவி - 10. விலங்குகளா..? வில்லன்களா?:
70-களின் துவக்கத்தில் முதலாவது முத்து காமிக்ஸ் இதழில் அறிமுகமான இரும்புக்கை மாயாவி, தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் ஒரு காமிக்ஸ் சூப்பர் ஹீரோ! ஒரு கட்டத்தில் காமிக்ஸ் என்றாலே இரும்புக்கை நினைவுக்கு வரும் அளவுக்கு புகழ்பெற்று விளங்கிய கைராசி(!) நாயகர். முத்து காமிக்ஸ் நாற்பதாம் ஆண்டு சிறப்பு மலரில் இந்த வழக்கொழிந்த நாயகர் இடம் பெற்றிருப்பது அவரது கடந்த கால வெற்றிக்கு ஒரு நினைவஞ்சலி என்ற அடிப்படையில் என நினைக்கிறேன்!!! மாயாவியின் தீவிர ரசிகர்களுக்கு மட்டும்!


இறுதியாக:
மொத்தத்தில் கலவையான கதைகள் கொண்ட சிறப்பான காமிக்ஸ் தொகுப்பாக NBS அமைந்துள்ளது. எனினும் இந்த அம்சமே இதற்கு எதிராகவும் போய்விடுகிறது! இது போன்ற மைல்கல் தருணங்களுக்கு கனத்த புத்தகம் வெளியிட்டே ஆகவேண்டும் என்றால் 4 அல்லது 5 பாகங்கள் கொண்ட ஒரு முழு நீள ப்ளூபெர்ரி சாகசத்தையோ அல்லது ஒரே நாயகரின் பல கதைகளையோ இணைத்து ஸ்பெஷல் இதழாக வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. NBS-இல் மூன்று கதைகள் முழுமையடையாமல் அந்தரத்தில் தொங்குவதும் இந்த எண்ணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

எது எப்படி இருப்பினும், இது ஒரு தவறவிடக் கூடாத காமிக்ஸ் பொக்கிஷம்! முன் பதிவின் பேரில், குறைவான அளவிலேயே இப்புத்தகங்கள் அச்சிடப் பட்டுள்ளன என்பதால் விரைவில் விற்று தீரும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது Ebay-இல் விற்பனையாகிறது! லயன் காமிக்ஸ் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டும் (04562 - 272649 & 04562 - 320993) வாங்கலாம்!

பின்குறிப்பு:
"ஒரு படிக்கக் கூடாத பதிவும், ஒரு வாங்கக்கூடாத புத்தகமும்!" என்ற தலைப்பில் 09 ஜூலை 2012 அன்று 12:42:00 AM மணிக்கு முதன்முதலில் வெளியாகி, கடந்த டிசம்பரில் கூடுதல் விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்ட இப்பதிவு, தற்போது மூன்றாவது முறையாக (மற்றும் இறுதியாக?) புதுப்பிக்கப்பட்டுள்ளது! ஜனவரியிலேயே புத்தகம் கிடைத்து விட்டாலும், படித்து முடிக்கவே கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது! இதற்கான இந்த விமர்சனமும் முழுமை அடையாமல் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ட்ராஃப்டே கதி என கிடந்து, ஒரு வழியாக இன்று வலையேறுகிறது!!! 

தொடர்புடைய பேட்டிகள் / பதிவுகள்:
முத்து / லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள், ஒரு பிரபல இணையதளத்திற்கு இந்த இதழைப் பற்றி அளித்த சிறு பேட்டி: 456 Pages Tamil Comic Book 'Never Before Special'

இது குறித்த ஆசிரியரின் இதர பதிவுகள்:

கருத்துகள்

  1. Kandippaka
    vanka vendiya
    book ithu
    mun pathivukku matdume
    kidaikkum enpathal
    2 book ardar seiyalam

    பதிலளிநீக்கு
  2. உங்கள் எண்ணம் சரியாகி விட்டது நண்பரே,நான் படித்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நன்றி நண்பரே! நமது காமிக்ஸ் பரிச்சயமான நண்பர்களுக்கு சொல்லவே தேவையில்லை என்பது தெரியும் - இது மற்றவர்களுக்காக! :)

      நீக்கு
  4. ஒரே நாளில் இரண்டு பதிவா எப்ப தான் தூங்குவீங்க....நானூறு ருபாய் வாங்குவது கஷ்டம் தான்...பேட்மேன் வரும்போது கண்டிப்பா சொல்லுங்க வாங்கிவிடுறேன்....சந்தா கட்டிஉள்ளேன் என சொன்னீங்களே எப்படி அது...spiderman எல்லாம் அவர்கள் அறிமுகம் செய்யவில்லையா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பில்லா 2 மட்டும் ப்ளாக்கில் பார்க்கலாமா? ;)

      ஒரு வருட சந்தா கிட்டதட்ட Rs.1000/- :) - இது 2012-இல் வெளிவந்த பழைய இதழ்களையும் சேர்த்தது - இவை வேண்டாம் என்றால் எவ்வளவு என்று தெரியவில்லை! எதற்கும் ஒரு தடவை lioncomics@yahoo.com-க்கு மின்னஞ்சல் அனுப்பி எவ்வளவு கட்ட வேண்டும் என கேளுங்கள்!

      சந்தா பணத்தை கீழ் கண்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம்!
      http://lion-muthucomics.blogspot.in/2012/01/our-bank-info-and-some-general-stuff.html

      இன்னமும் ஸ்பைடர்மேன் அறிமுகம் ஆகவில்லை! :)

      நீக்கு
  5. நன்றி நண்பா...

    ///பில்லா 2 மட்டும் ப்ளாக்கில் பார்க்கலாமா? ;)/// எனக்கு என்னவென்று புரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானூறு ருபாய் வாங்குவது கஷ்டம் தான்//

      நீங்கள் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பலபேர் (நானும் சில சமயம்!) அதிக விலை கொடுத்தோ அல்லது மல்டிப்ளெக்ஸில் 300, 400 செலவு செய்தோ படம் பார்பதில்லையா - அதைச் சொன்னேன்! :)

      நீக்கு
    2. ஒரு படிக்கக் கூடாத பதிவும், ஒரு வாங்கக்கூடாத புத்தகமும்!////
      படிக்க கூடாது என சொன்னீங்க ஆனா படித்து புட்டேன்...சரி அடுத்ததாய் சொன்ன வாங்ககூடாத புத்தகம் அப்படி சொன்னீங்க அதையாவது செய்யலாம் என்று தான்(அப்பா தப்பிச்சேன் டா சாமி)
      // மல்டிப்ளெக்ஸில் 300, 400 செலவு செய்தோ படம் பார்பதில்லையா///நானும் பார்த்து உள்ளேன் நண்பா...எனக்கும் புத்தகம் வாங்க ஆசை உள்ளது காமிக் புக் எல்லாம் படித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது உங்களின் பழைய காமிக் பதிவை எல்லாம் படித்த பிறகு காமிக் படிக்க வேண்டும் போல் உள்ளது...முடிந்த அளவு இதை வாங்க முயற்சியும் சந்தா கட்டவும் பார்கிறேன்...இந்த மாதம் அவ்வளவு தான் இனி அடுத்த மாதம் தான்...

      நீக்கு
  6. அடடா.. நீங்க.. எவ்ளோ சொல்லியும் கேக்காம வந்து படிச்சுபுட்டேனே :D :D

    பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்மான முறையில் புத்தகம் அறிமுகம்! சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, இந்த புத்தகத்தை நீங்கள் வாங்கினால் மகிழ்வேன்! (எனக்கு இதில் கமிஷன் ஏதும் கிடையாது!} ;)

      நீக்கு
  8. எனது நெவர் பிபோர் ஸ்பெஷலுக்கான முன்பதிவு நெ.31.

    பதிலளிநீக்கு
  9. இந்த பதிவை படிச்சு ஒரு தப்ப பண்ணிபுட்டேன்... இரண்டாவது தப்பையும் செய்யாம இருக்க முயற்சிக்கிறேன். :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பதிவு செய்யலன்னாலும், எப்படியும் சென்னை புத்தக கண்காட்சியில வாங்கத்தான போறீங்க! :)

      நீக்கு
  10. நான் ரெண்டு தப்பையும் ரெண்டு தடவை செஞ்சுட்டேன் தல ஹ்ம்ம்....

    பதிவையும் படிச்சிட்டேன் புக்கையும் ஆர்டர் பண்ணிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது ரெண்டு பிரதி ஆர்டர் பண்ணி இருக்கீங்க - அப்படிதானே?! :)

      நீக்கு
    2. உண்மை! அவர் (Shriram) எப்பவுமே ரெண்டு ரெண்டாத்தான் எல்லாம் செய்வாரு ;)

      நீக்கு
  11. MR கார்த்திக்
    மேலே என் பெயரில்
    உள்ள 2 கமெண்ட்களும்
    சத்தியமாக நான் போடவில்லை

    அடபாவிங்களா
    எனக்கே ஆப்பு வைச்சுட்டானுகளா?

    அடுத்தவன் பெயரை திருடுவது
    தப்புங்க...;-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, கவலை வேண்டாம்! நான் இந்தப் பதிவின் கடைசிப் பகுதியில் குறிப்பிட்டு இருப்பது போல இது புதிப்பிக்கப்பட்ட 'பழைய பதிவு' ஆகும்! :) உங்களுக்கு ஞாபக மறதி சற்று அதிகமோ?! மேலே உள்ளது நீங்கள் இட்ட பின்னூட்டங்கள்தான் (ஜூலை மாதம்!)!

      நீக்கு
    2. நல்லா கிளப்புறாங்கையா பீதியை :)

      அடுத்த வருடத்திற்கான எல்லா சந்தாவும் (Lion, Muthu, CC, NBS etc) இரண்டு மாதத்திற்கு முன்பே கட்டியாச்சு :)

      நீக்கு
    3. //நல்லா கிளப்புறாங்கையா பீதியை :)//
      :) :) :)

      நீக்கு
  12. சௌந்தர் ஒரு ஐடியா சொல்லியிருந்தார். இங்கு லயன்/முத்து காமிக்ஸ் கிடைக்கும் என்பதனை அழகான வண்ண அட்டைப்படத்தில் ஒரு நூலைக் கட்டி கடைகளில் தொங்க விடும் படி. ரொம்ப நல்ல ஐடியா. அனைவரையும் எளிதில் கவரும்.

    இந்தப் பதிவு, NBS பலரை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தியதால் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. FB-யில் நான் ரசித்த வசனம் (உபயம் P.கார்த்திகேயன்):
      //இன்னாது... தமிழ்ல காமிக்ஸ் வெளிவருதா?!!!//
      :)

      நீக்கு
    2. (புரியாதவர்களுக்காக) 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' பட வசனத்தின் உல்டா இது!!! :)

      நீக்கு
  13. இந்தப் பதிவும் கூட அவசியமானதொரு மறுபதிப்புத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபதிப்பு அல்ல, மறுஆக்கம் (Remake அப்படிங்கறதுக்கு தமிழ்ல சரியான வார்த்தை இதானே?!) :)

      நீக்கு
  14. தலைப்பை பார்த்தவுடனே..... வடிவேலு சொல்லுறமாதிரி....அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்...

    இதெல்லாம் எப்பிடி உங்களுக்கு தோணுது.... மூளையை அடிக்கடி சலவைக்கு போட்டு பளீச்சினு வச்சிருப்பீங்களோ? :-))

    பதிலளிநீக்கு
  15. நண்பரே

    புதிய பதிவுகள் எதையும் காணவில்லையே ?

    அதிரடியாக ஒரு பதிவு போடுங்க ...

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரமே போட்டுறலாம்! :) 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பார்த்துட்டு விமர்சனம் போடணும் - ஆனா இங்க ரிலீஸ் ஆகல! :(

      நீக்கு
  16. //! இந்த நீளமான வாக்கியத்தைப் படிப்பதற்கே மூச்சு வாங்குகிறதல்லவா? // ஹா ஹா ஹா

    தமிழ் காமிக்சுகளில் கூட ஹீரோ இருக்கிறார்களா... அடடே ஆச்சரியக் குறி...

    நீங்கள் சொன்னதற்காக அந்தப் புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் எடுத்துப் பார்த்தேன்... தரமாக இருந்தது.... முன்பெல்லாம் என் பயணத் தோழனாக இருந்தவன் முது காமிக்ஸ்... இப்போதெல்லம் நீங்கள் எழுதினால் மட்டுமே என் தோழனாக உள்ளான் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் சொன்னதற்காக அந்தப் புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் எடுத்துப் பார்த்தேன்//
      நன்றி சீனு! வாய்ப்பு கிடைத்தால் ஓசியிலாவது லார்கோ & ஷெல்டன் கதைகளை படித்துப் பாருங்கள்! ஹாலிவுட் ஆக்ஷன் படங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல! :)

      நீக்கு
  17. //பின்குறிப்பு:// இறுதியாக என்பதை ஏற்றுகக் கொள்ளலாமா :-)

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப லேட்- ஆனாலும் வழக்கமான 'கார்த்திக் டச்'களுடன் கலக்கலாகவே வந்திருக்கிறது.

    கார்த்திக் உட்பட நண்பர்கள் பலரும் கூறியபடி 'அந்தரத்தில் தொங்கும் கதைகள்' இல்லாதிருந்தால் NBS இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும்!
    எதிர்காலத்தில் இதை ஒரு மாபெரும் கோரிக்கையாக எடிட்டரிடம் வைத்திடுவோமே?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி விஜய்! பல வாரங்களாக கிடப்பிலேயே கிடந்த இந்தப் பதிவை தூசு தட்டவே ரொம்ப லேட்டாகி விட்டது! :) ஒட்டுமொத்தமாக பத்து கதைகள் வந்தால் இதுதான் பிரச்சினை!

      //எதிர்காலத்தில் இதை ஒரு மாபெரும் கோரிக்கையாக எடிட்டரிடம் வைத்திடுவோமே?!//
      அவர் லேசில் அசர மாட்டாரே?! ;)

      நீக்கு
  19. வழக்கம் போல் உங்கள் முத்திரையான வசனநடையில் NBS விமர்சனம், சூப்பர்!:) என்னதான் NBS ரெண்டுதடவை முழுசா படிச்சாலும் இது போன்ற சுவாரஸ்யமான விமர்சனங்களை மனதை ஆக்ரமித்து மீண்டும் புக்கை எடுத்து படிக்க தூண்டுகிறது!பெங்களூரில் வசிக்கும் என் சித்திபையனுக்கு சிலகாமிக்ஸ் கொடுத்து படிக்க சொன்னேன், ஆனால் அவனுக்கு ஆர்வமே ஏற்படவில்லை! :( சிறுவயதிலேயே தமிழில் வாசிக்கும் பழக்கத்தை தவறவிட்ட அவனுடைய அந்த அலட்சியபோக்கு, முன்னாள் ஆசிரியரின் ஆதங்கத்தை படித்தபோது ஞாபகம் வந்தது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கேப்ஸ்! பெங்களூரில் படித்தால் இது ஒரு சங்கடம்! ஸ்கூலில் தமிழ் இருக்காது! பேசக் கற்றுக்கொள்வார்கள் ஆனால் எழுதப் படிக்க கற்றுத்தருவது சிரமம்!

      நீக்கு
  20. Nice Late Post. :-)

    //நினைவஞ்சலி// Ithu romba over :P :-)

    பதிலளிநீக்கு
  21. ஆமா ஆபீஸ்ல ஸ்டாக் தீர்ந்து போச்சா?ன்னு தெரியலை நண்பா! பதிவு வழக்கம் போன்று அட்டகாசம்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia