மறக்கப்பட்ட மனிதர்கள் - 3 - ஒரு தேடலின் முடிவில்...!

ஹென்றியின் மகள் கிம்-சியை சந்திக்க, வியட்நாமில் இருக்கும் சைகோன் நகருக்குச் செல்கிறார் ரிப்போர்டர் வலோன் (பார்க்க: பாகம் 01 & 02)! அவரைப் பின்தொடரும் கொலையாளி, கிம்-சி உடனான வலோனின் சந்திப்பை தாமதப் படுத்துவதற்காக சிறு விபத்து ஒன்றினை அரங்கேற்றுகிறான்! உடைகளை மாற்றிக் கொள்ள வலோன் ஹோட்டலுக்குத் திரும்பும் அவகாசத்தில் கிம்-சியைச் சந்திக்கும் கொலையாளி, தன்னை அவளின் தந்தை ஹென்றி என அறிமுகம் செய்து கொண்டு; தன்னைத் தேடி ஒருவர் வருவார் என்றும், தன்னைப் பற்றிய தகவல்களை அந்த மனிதரிடம் வெளியிட வேண்டாம் என்றும் எச்சரித்து விட்டுச் செல்கிறான்!
ஒரு வயதிலேயே தந்தையைப் பிரிந்து, சிறு வயதிலேயே தாயை இழந்த அவளுக்கு, இது  பெரும் குழப்பத்தைத் தருகிறது! அதன் காரணமாய், வலோன் அவளைச் சந்திக்கும் போது, முதலில் அவரிடம் பேச மறுக்கிறாள்!

வலோன், தான் வந்த காரணத்தை எடுத்துரைத்து, மகனின் வரவுக்காக 30 ஆண்டுகளாக ஏங்கிக் காத்திருக்கும் அவளது பாட்டியின் புகைப்படத்தைக் காட்டியதும், மனம் இளகி பேசத் துவங்குகிறாள்! வியட்நாம் காம்ரேட்களுடன் தனது தந்தை ஹென்றி இணைந்தது; மோக் டென் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, வியட்நாம் போராளிகளிடையே ஹீரோ அந்தஸ்து பெற்றது; தனது தாயை காதலித்து மணந்தது; என பல தகவல்களை பகிர்கிறாள் கிம்-சி!

ஹென்றி, கடைசியாக 'துவாங் பை' என்ற இடத்தில் காணாமல் போனதாக அறியும் வலோன், கிம்-சியுடன் அங்கு சென்று விசாரிக்கிறார்! ஹென்றியும் அவரது போராட்டக் குழுவினரும், 'டின் பின்' என்ற ராணுவ முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள முதியவர்கள் நினைவு கூர்கின்றனர்! ஆனால், டின் பின்னில் அவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமே - சம்பவம் நடந்து பல வருடங்கள் உருண்டோடி விட்டதால், இராணுவ முகாம் இருந்ததிற்கான தடயங்கள் முற்றிலும் அழிந்து போய், மனித வாசமற்ற பகுதியாக அது காணப் படுகிறது!

அந்த ஏமாற்றத்தில், "ஹென்றியை தேடுவது ஒரு வீண் செயல்" என்று நம்பிக்கையிழந்து புலம்பும் வலோனைக் கண்டு கிம்-சி உடைந்து போகிறாள்! அனாதரவாக நிற்கும் அவள் மேல் பரிவு கொள்ளும் வலோன், அவளை ஃபிரான்ஸிற்கு தன்னுடன் அழைத்துச் சென்று, ஹென்றியின் தாயாருடன் அவளை ஒன்றிணைக்கிறார். மகனைத் தொலைத்த தாயும், தந்தையைப் பிரிந்த மகளும் - அவன் விட்டுப் போன அந்தச் சொந்தத்தை, மீட்டெடுக்கும் ஒரு உணர்சிகரமான சம்பவமாக அது அமைகிறது!
யுத்தத்தின் போது, 'துவாங் பை' பகுதியின் பொறுப்பதிகாரியாக இருந்தவர் "கார்பின்" என்பதைக் கண்டறியும் வலோன்; தற்போது DGES என்ற இராணுவ பாதுகாப்புத் துறையில் உயர் பதவி வகிக்கும் அவரை, நேரில் சந்திக்கிறார்! ஹென்றியைப் பற்றி தனக்கு ஒரு சில தகவல்களே நினைவில் உள்ளதாகக் கூறும் கார்பின், அவனுடைய தேசவிரோத செயல்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக, சிறப்பு முகாம் ஒன்றிக்கு அவனை அனுப்பி வைத்ததாகவும், அதன் பிறகு அவனைப் பற்றி எந்தத் தகவலையும் கேள்விப் படவில்லை என்றும் கூறுகிறார்!
வலோனின் தேடுதல் முயற்சியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை, வியந்து பாராட்டும் அவர் நண்பர் லூகாஸ்; "லாரு" என்ற நபர் அவரைப் பற்றி விசாரித்ததாகக் கூறுகிறார்! லாருவிடம் தொலைபேசியில் பேசும் வலோனுக்கு, அவர் வாலென்ட்ரேவில் சந்தித்த பத்திரிக்கை நிருபர் என்பது நினைவுக்கு வருகிறது!

வாலென்ட்ரே சாலை விபத்தில் இறந்த முதியவர், வியட்நாம் யுத்தத்தில் பங்கேற்ற முன்னாள் சிப்பாய் நியூரித் என்றும், அவர் தப்பி ஓடி வந்த ஒரு மன நோயாளி என்றும் வலோனிடம் லாரு தெரிவிக்கிறார்! மேலும், 'டின் பின்' இராணுவ முகாமில் நியூரித்துடன் பணியாற்றிய புஜால் என்ற முன்னாள் சிப்பாயை, சவ அடக்கத்தின் போது சந்தித்தகாகவும்; வலோனைச் சந்தித்துப் பேச அவர் ஆர்வம் காட்டியதாகவும் லாரு கூறுகிறார்!
அந்த தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு அறியும் கொலையாளி, புஜாலைக் கொல்ல முயல்கிறான்! அந்தத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்கும் புஜாலை, மருத்துவமனையில் சந்திக்கிறார் வலோன்! ஹென்றி பற்றிய உண்மைகள் வெளியானால், தற்போது இராணுவத்தில் உயர்பதவி வகிக்கும் கார்பினின் தலை உருளும் என்று அவர் சொல்வது, வலோனுக்கு ஆச்சரியம் அளிக்கிறது!

அந்நாளில், யுத்தத்தில் பிடிபட்ட ஹென்றி உள்ளிட்ட வியட்நாமிய போராளிகளை - கார்பினின் உத்தரவின் பேரில் தானும், நியூரித்தும் சேர்ந்து, முகாமுக்குச் செல்லும் வழியில் படுகொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் புஜால்! கார்பின் தலைமை வகித்த மோக் டென் இராணுவ முகாம் மீது, ஹென்றி நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, 'அணி மாறிய பிரெஞ்சு சிப்பாய்களை திருத்த முயற்சிக்க வேண்டும்' என்ற மேலிடத்து உத்தரவையும் மீறி, இந்த வெறிச் செயலை கார்பின் நிகழ்த்தினார் என்று புஜால் விளக்குகிறார்.

கார்பினின் யோசனையின் பேரில், 'வியட்நாமியர்களால் ஹென்றி குழுவினர் மீட்டுச் செல்லப் பட்டதாக' - பொய் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்ததோடு நில்லாமல், இச்சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட நியூரித்தை,  ஃபிரான்ஸ் திரும்பியதும், ஒரு மனநோய் காப்பகத்தில் சேர்த்ததாகவும் கூறுகிறார்!

சமீபத்தில் ஹென்றியின் தாயார் அளித்த பேட்டியைக் கண்ட நியூரித், தான் இழைத்த தவறுகளுக்கு பரிகாரம் தேடும் வகையில், அவளிடம் உண்மைகளை சொல்லுவதற்காக காப்பகத்தில் இருந்து தப்பியிருக்கலாம் என்றும் புஜால் விளக்குகிறார்!

நியூரித்தின் எண்ணவோட்டத்தை எளிதில் கணித்த, அக்காப்பகத்தின் சீஃப் டாக்டரும், கார்பினின் மைத்துனருமான 'பெட்ரோசியன்' - அதை கார்பினுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து; அந்த 'சாலை விபத்தினை' ஒரு கொலையாளி மூலமாக கார்பின் அரங்கேற்றி இருப்பார் என புஜால் முடிக்கிறார்! அதைக் கேட்டதும், 'ஹென்றி தேடல் படலத்தில்' ஏற்பட்ட ஒவ்வொரு தடங்கலுக்கும் பின்னணியில் இருந்த "மர்ம நபர்", கார்பின் தான் என்பது வலோனுக்கு தெளிவாக விளங்குகிறது!

வீடு திரும்பும் வழியில், ஃபிரெஞ்சு பல்கலைக் கழகங்களின் இட ஒதுக்கீடு சார்ந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து - மாணவர்கள் நடத்தும் ஒரு கண்டன ஊர்வலத்தை, அவர் கடக்க நேர்கிறது (இது ஒரு உண்மைச் சம்பவம்!)! கூட்டத்தில் தனது மகள் சாண்ட்ரா இருப்பதைக் கண்டு அவளை அழைக்கிறார் வலோன்! ஆனால், அவளோ, அவரைக் கண்டும் காணாதது போல் விலகிச் செல்கிறாள்!
மறுநாள் தனது நண்பர் லூகாஸை சந்திகையில், "தேசிய தகவல் தொடர்பு ஆணையம்" அவருடைய ஆவணப் படத்தை ஒளிபரப்ப தடை விதித்திருப்பதை அறிந்து இடிந்து போகிறார் வலோன்!

அவரைத் தேற்றும் வகையில், ரிப்போர்ட்டைப் பற்றி அறிந்தவுடனேயே, இராணுவ அமைச்சகம் - கார்பினுக்கு கட்டாய பணி ஒய்வு அளித்து விட்டதாக கூறுகிறார் லூகாஸ்! தவிர, உண்மைகளை வெளியிட இது சரியான நேரமில்லை என்று கூறும் அவர், முந்தைய நாள் நடந்த கண்டன போராட்டம் ஒன்றில், மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதால், ஊடங்கள் அனைத்தும் அந்த செய்திக்கே முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறுகிறார் (இதுவும் ஒரு உண்மைச் சம்பவம்!).

'உண்மைகளை வெளியிடுவது நம்மிருவருக்கும் ஆபத்தானது' என்று எச்சரிக்கும் லூகாஸிடம், 'உண்மைகள் வெளியான பின், நம் மீது கை வைக்கும் துணிவு யாருக்கும் வராது' என்றும், 'ஒளிபரப்பிற்காக சில வாரங்கள் காத்திருக்கத் தயார்' என்றும் வலோன் வாதிடுகிறார்! ஆனால், லூகாஸின் மழுப்பலான பேச்சால் ஆத்திரம் அடையும் அவர் , 'என்னை முடக்கிப் போட யாராலும் முடியாது' என்றவாறு வெளியேறுகிறார்!

மறுநாள், வலோன் தனது இல்லத்தில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கையில், அழைப்பு மணி ஒலிக்கிறது; வீட்டருகில் நீல நிறக் கார் ஒன்று நிற்பது ஜன்னல் வழியே தெரிகிறது! கதவைத் திறக்கும் வலோன், அங்கே நிற்கும் நபரைப் பார்த்து, குழப்பத்துடன் "மிஸ்டர்?!" என்று அவன் பெயரை அறிந்து கொள்ளும் நோக்கில் வினவுகிறார்!
வந்திருப்பது கொலையாளி தான் - என்பது கதையைப் படிக்கும் வாசகர்களுக்குத் தெளிவாகத் தெரியுமென்பதால், கதையின் முடிவு அவர்களின் கையிலேயே விடப்படுகிறது!

( முற்றும் )

தொடரும் ஒரு தேடல்...!: ஒரு காமிக்ஸ் கதை பற்றி எழுத, மிக அதிக நேரம் செலவழித்தது இதுவே முதல் முறை! :-) இந்தத் கதை இத்துடன் முடிவுற்றாலும், விரைவில் இப்பதிவு சார்ந்த பதிவுகள் தொடரும் வாய்ப்புக்கள் (ஓரளவுக்கு பலமாக) இருக்கின்றன! ;-)

கருத்துகள்

  1. அருமையான பதிவு ! தங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் !

    பதிலளிநீக்கு
  2. கார்த்தி, இப்டி எல்லாம் பண்ணி, +6 GNன +24 ஆக்கிடுவீங்க போல இருக்கே ... இருங்க ஒரு தலைவர் உங்கள பார்க்க வர்றாராம் ? லெட்டர் போடுவார் :-) :-)

    Man, so much patience to enjoy this book. Some one is gonna ********* ! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I don't usually spend this much time on any book! But, there is a reason behind doing that now! ;)
      ...
      and the reason is...
      ...
      ...
      ...
      ...
      ...
      ...
      I wanted to improve my narrative skills! :-D

      நீக்கு
  3. சூப்பர் கார்த்திக்! கிராபிக் நாவலை விமர்சனம் செய்வது என்ற விசயத்தை தாண்டி உண்மை நிகழ்வுகளையும், இன்றைய அரசியல் வன்முறைகளையும், மீடியாக்களின் பொறுப்பின்மையும் (எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும்) வாசகருக்கு புரியவைத்ததற்கு நன்றி! ஆனால் ப்ரெஞ்ச் அரசு “அணி மாறிய வீரர்களை திருத்தவேண்டும் ” என்றும் அதை கார்பின் என்ற அதிகாரி தனது சொந்தவிருப்புவெறுப்புகாக பின்பற்றவில்லை என்றும் கதாயசிரியர் கூறி இருப்பது வலோன் போன்ற நிலை இந்த காமிக்ஸ் மூலம் அவருக்கு ஏற்படாமல் இருப்பதற்காக இருக்குமோ என்று எண்ணவைத்தது! வாழ்த்துக்கள்! இனி 2014ல் பல வகை விமர்சன ஆராய்ச்சி கட்டுரைகள் நீங்கள் எழுதுவீர்கள் என பட்சி சொல்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட கருத்திற்கு, நன்றி நண்பரே! புத்தகத்தில் விடுபட்ட சில குறிப்புகளுடன், இங்கு கதையை மட்டுமே சொல்லி இருக்கிறேன்! விமர்சனத்திற்குள் இன்னும் செல்லவில்லை! :)

      நீக்கு
    2. //ப்ரெஞ்ச் அரசு “அணி மாறிய வீரர்களை திருத்தவேண்டும் ” என்றும் அதை கார்பின் என்ற அதிகாரி தனது சொந்தவிருப்புவெறுப்புகாக பின்பற்றவில்லை என்றும் கதாயசிரியர் கூறி இருப்பது வலோன் போன்ற நிலை இந்த காமிக்ஸ் மூலம் அவருக்கு ஏற்படாமல் இருப்பதற்காக இருக்குமோ என்று எண்ணவைத்தது//

      அட! இந்த வாக்கியத்தின் அர்த்தம் சட்டென எனக்கு விளங்கவில்லை, இப்போது புரிகிறது! ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ?!! கருத்து சுதந்திரத்திற்கு பெயர் போன ஃபிரான்ஸ் போன்ற மேலை நாடுகளிலேயே, இந்தக் கதி என்றால்; இப்படி ஒரு பொலிடிகல் த்ரில்லர் இந்தியாவில் வெளியானால், அதை எழுதியவரின் கதி என்னவாகும் என்பதையும் சிந்திக்க வேண்டி இருக்கிறது!!!

      நீக்கு
  4. கார்த்திக், சென்ற பதிவில் வந்த என்னுடைய குழப்பக்குறுக்கீடுகளை மன்னிக்கவும்! I really have to apologize for that! புத்தகத்தை மறுபடியும் படித்தபோது அப்படி ஒன்றும் நிறைய open ends இருப்பதாகத் தோன்றவில்லை!

    கார்பினின் சொட்டைத்தலை, மீசை மர்மத்தை illustration-ன் inconsistency-ஆகப் பார்க்கும்பட்சத்தில் கதை நீங்கள் explain பண்ணியதுபோல straight-ஆகதான் உள்ளது. Keep up the goodwork!

    ( அப்பாடா! )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமேஷ், மன்னிப்பு கேட்பது எல்லாம் இங்கே அவசியப் படாத ஒன்று! உண்மையில், நீங்களும் சரி, என்னுடன் இந்தக் கதை பற்றி விவாதித்த மற்ற வலைப்பூ / ஃபேஸ்புக் நண்பர்களும் சரி - கதையை முழுமையாக புரிந்து கொள்ள எனக்கு நிச்சயம் உதவியிருக்கிறீர்கள். உண்மையில், சென்ற பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டங்களைத் தொடர்ந்து, அப்பதிவில் "கார்பின்" மீது சந்தேகம் ஏற்படும்படியான வாக்கிய அமைப்புக்களை முற்றிலுமாக நீக்கி விட்டேன்! ஏனெனில், அது இரண்டாம் பாகத்தின் இறுதியில் மட்டுமே வெளிப்பட வேண்டிய ஒன்று! இப்போது யாராவது, இந்தத் தொடர் பதிவை முழுமையாக படிக்கும் பட்சத்தில் (பொறுமையாக படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை :D), கதையில் உள்ளது போலவே, சஸ்பென்ஸ் இறுதிவரை வெளிப்படாமல் இருக்கும்! அந்த வகையில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்! :)

      //கார்பினின் சொட்டைத்தலை, மீசை மர்மத்தை illustration-ன் inconsistency-ஆகப் பார்க்கும்பட்சத்தில்//
      அதற்கும் ஒரு விளக்கம் கைவசம் உள்ளது! :D அது, அனேகமாக அடுத்த பதிவில்! இப்போதைக்கு ஓரிரு வாரங்கள் கமர்சியல் ப்ரேக்!!! ;)

      நீக்கு
  5. # வாய்ப்புக்கள் (ஓரளவுக்கு பலமாக) இருக்கின்றன! ;-)#
    வேண்டிய பலம் விரைவில் பெற வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  6. நானும் மூனு பதிவா 'இவர் நாம படிச்ச கதையைத் தாண்டி ஏதோ ஒரு வித்தியாசமான கோணத்திலே புலனாய்வு பண்ணி கதை சொல்லப் போறார்'னு காத்திருந்தால்...
    // I wanted to improve my narrative skills! :-D //
    அப்படீன்னு போட்டீங்களே ஒரு போடு!
    இதுக்குப் பாய் விரிச்சு விட்ட மாதிரி மூனு பதிவு; நாலாவது பதிவுக்கு ஒரு விளம்பர விடுமுறை வேறு! கிர்ர்ர்...

    ஆனாலும் உங்க நோக்கம் நிறைவேறிட்ட மாதிரிதான் இருக்கு! உங்களைப் பாராட்டாமல் இருக்க என்னை நான் ரொம்பவே கன்ட்ரோல் பண்ண வேண்டியிருக்கே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான கோணத்திலே படிச்சா, கண்வலி தான் வரும்! ;)

      நீக்கு
  7. கலக்கலா கிராப்பிக் நாவலுக்கு மூணு ( +1 ) பதிவ DEDICATE பண்ண உங்களோட ஆர்வத்த பாராட்டாம இருக்க முடியல. அருமையான உழைப்பு நண்பா! : )!

    இங்கேயும் "நீயா நானா" (:)) போட்டிக்கு போகாம கிராபிக் நாவல்கள் பத்திய சில REAL FACTS சொல்லனும்.

    1.ஆசிரியர் வரலாறு சம்மந்தம தொடர்ந்து ரெண்டு கதைகள் விட்டது தப்பு. நம்ம வாசகர்கள் மத்தியில கிராபிக் நாவல்கள்னாலே ஏதோ சினிமாவுக்கு முன்னாடி பாக்கற ஆவணப்படம் மாதிரியான எண்ணம் ஏற்ப்பட்டிடுச்சு. எப்படா படத்த போடுவாங்கன்னு பக்கங்கள வேகவேகமா புரட்டி அப்படி ஒன்னும் கிடையாதுங்கறபோது சலிச்சு போறாங்க.

    2. நார்மல் கதைகள ஒரு சின்ன கேப் விட்டு எவ்வளவு தடவை படிச்சாலம் சுவராஸ்யம் இருக்கும். இது போன்ற வரலாறு சம்மந்தப்பட்ட எதார்த்த கதைகள ஆர்வம் இருக்கறவங்க ஒரு தடவை படிக்கலாம். மசாலா வறட்சி காரணமா மறுமுறை படிக்க ஆர்வம் இருக்காது.

    3.வரலாற்று கதைகள்னாலே சோகம் ததும்பி வழியற கதைய மட்டும் எப்பவும் எடுத்துக்கறாங்க. "THERE AFTER THEY LIVED HAPPILY " மாதிரியான வரலாற்று கதைகள பத்தி யாரும் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. (ஏன் இப்படி...???)

    4.காமிக்ஸ் என்ற இந்த ஊடகம் HYPER IMAGINATIVE FICTION களுக்கு ஏற்றது. இதன் பலமும்/ இதில் பெரும்பான்மையானவர்களின் எதிர்பார்ப்பும் அது தான். இதில் இது போன்ற எதார்த்த கதைகளை பதிப்பிப்பது தற்போது VERY EARLY ஆகா தோன்றுகிறது. இன்னமும் நமது வாசகர் வட்டம் இந்த மாதிரி கதைகளை உள்வாங்க முதிர்ச்சி அடையவேண்டும்.

    FACTS APART....: ) , இந்த புத்தகம் ஒரு அருமையான கால பதிவு பொக்கிஷம். உங்க REFERENCE LINKS அருமை/சுவை.

    கேமிராவும் கையுமா சுவடுகளை தேடிப்போன வலோனின் கதைய அருமைய சொல்லீட்டீங்க...கிபோர்டும் கையுமா உக்காந்து புத்தகத்தை டாப் டு பாட்டம் பிரிச்செடுக்கப்போற கார்த்தியின் கதைய எப்போ சொல்ல போறீங்க??? இங்கே எங்களுக்க செலவில்லாம ஒரு கிராபிக் நாவல் கிடைக்கப்போகுது! : )!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கேயும் "நீயா நானா" (:)) போட்டிக்கு போகாம கிராபிக் நாவல்கள் பத்திய சில REAL FACTS சொல்லனும்.//
      :D

      அருமையான கருத்துக்கள் விஸ்கி! உங்களுடைய நாலாவது பாயிண்டுக்கு மட்டும் சின்னதாக ஒரு நீயா நானா! ;) வாசகர்கள் இது போன்ற கதைகளை ஏற்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பது எல்லாம் சரி வராது என்றே தோன்றுகிறது! :) "எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே எங்கள் கம்பெனியில் வேலை தருவோம்" என்று Freshers-களிடம் சொல்லுவதைப் போலத் தான் இதுவும்! :-D

      எனவே, படிக்கப் படிக்கத் தான் பிடிக்கும் எ.எ.க! :)

      நீக்கு
  8. அருமை நண்பரே ....

    இன்னும் இந்த மூன்று பதிவையும் முழுமையாக இன்னும் படிக்கவில்லை. மேலோட்டமாக பார்க்கும் பொழுதே உங்களது உழைப்பு தெரிகிறது ... (இதில் தொடரும் வேறு :)

    தொடரட்டும் உங்கள் பணி ...

    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய பதிவுகளைப் படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்! முதலில் ஒசிசு புத்தகத்தை படித்தீர்களா?! :D

      நீக்கு
  9. Just finished reading this story ( after third attempt - not because this story was boring instead after first reading got interrupted I forgot this book ).

    To understand the ending I came here and read your post. Thanks.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia