லக்கி லூக் - லயன் நியூ லுக் ஸ்பெஷல் (28 ஆவது ஆண்டு மலர்)

லயன் காமிக்ஸின் 28 ஆவது ஆண்டு மலர் (லயன் நியூ லுக் ஸ்பெஷல்) இம்மாதம் வெளியாகியிருக்கிறது! இதன் ஆசிரியர் திரு. S. விஜயன் அவர்கள், 1984-இல் லயன் காமிக்ஸை துவக்கிய நாள் முதல் இன்று வரை பல ஏற்ற இறக்கங்களை கடந்து வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்! இடையில் ஏற்பட்ட பெரும் தொய்வுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்! அதே போல இந்த ஆண்டு தோன்றிய  மறுமலர்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் - எனக்கு முக்கிய காரணமாய் தோன்றுவது நீண்ட நாள் வாசகர்கள் காட்டி வரும் பேராதரவே! வாசக எண்ணிக்கையில் சிலராய் இருந்தாலும் தமிழில் காமிக்ஸ் படிப்பது என்பது ஒரு கல்ட் இயக்கமாய் உருப்பெற்றிறுப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை! அப்படிப்பட்ட தமிழ் காமிக்ஸ் hardcore வாசகர்களில் ஒருவனாக - லயன் காமிக்ஸுக்கும், திரு.விஜயனுக்கும், பிரகாஷ் பப்ளிஷர்ஸின் அலுவலர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

லயன் நியூ லுக் ஸ்பெஷல், அவர்களுடைய சமீபத்திய மறு அவதார பாணியிலேயே உயர் தர தாளில் அச்சாகி, இரண்டு முழு நீள, முழு வண்ண லக்கி லூக்கின் சாகசங்களுடன் ஒரு தரமான படைப்பாக வெளிவந்துள்ளது! கொசுறாக சில கருப்பு வெள்ளை பக்கங்கள், எழுபதுகளில் வெளிவந்த வேறு இரண்டு காமிக்ஸ் கதைகளுடன் அச்சிடப்பட்டிருக்கிறது! இவ்விதழின் முக்கிய கதைகளான இரண்டு லக்கி லூக் ஆல்பங்கள் வெளியானது அறுபதுகளில் என்றாலும், அவை காலத்தை வென்ற கௌபாய் கதைகள் என்பதால் சட்டென ஒன்ற முடிகிறது! இதுவும் ஒரு ஃபிராங்கோ-பெல்ஜியன் வகை காமிக்ஸ்தான்!

உங்களில் எத்தனை பேருக்கு லக்கி லூக் (Lucky Luke) பற்றி தெரியும் என தெரியவில்லை! அவர் ஒரு ஒடிசலான கௌபாய்! துணைக்கு ஒரு வெள்ளை குதிரையுடன் சோலோவாக சுத்தும் தனிக்கட்டை! பார்க்க சோப்ளாங்கியாக இருந்தாலும், அவரிடம் ஒரு தனித்திறமை - தன் நிழலை விட வேகமாக சுடுவது! அவருடைய குதிரையின் பெயர் ஜாலி ஜம்பர்! பன்ச் டயலாக்கள் அடிப்பது இதன் வாடிக்கை! லக்கி காமிக்ஸ்களில் அடிக்கடி இடம்பெறும் இன்னொரு 'கதாநாய்' ரான்டன்ப்ளான்! ஆம், நாய்தான் - இது ஒரு நிஜமான சோம்பேறி + சோப்ளாங்கி + அடிமுட்டாள்! அப்புறம் ஒரு வெட்டியான் - அசோகன் பாணியில் சவப்பெட்டி, பிண ஊர்த்தி சகிதம் யார் தலை விழும் என அலையும் ஒரு வழுக்கைத்தலை  நபர்! சுவாரசியத்தைக் கூட்ட தங்க வேட்டையர்கள், ஷெரிஃப்கள் , மதுபானக் கடைகள், குடிகாரத் தடியர்கள் மற்றும் நடன நங்கைகள்! கௌபாய் கதைகளில் செவ்விந்தியர்கள் இல்லாமலா?! மேற்கத்திய வழக்கப்படி, தவறாகவே காட்டப்படும் செவ்விந்தியர்கள்!  இவர்களோடு சில காமெடி வில்லன்கள் - டால்டன் சகோதரர்கள், பில்லி, ஜேன், ஜெஸ்ஸி ஜேம்ஸ் இப்படி! இவர்கள் அனைவரும் கும்பலாக வைல்ட் வைல்ட் வெஸ்ட் காலத்தில் அடிக்கும் லூட்டிகளின் அணிவகுப்பே லக்கி லூக் காமிக்ஸ் சீரிஸ்! உண்மையில், இந்த கதாபாத்திரங்களில் பல பேர் உல்டாவாக்கப்பட்ட நிஜ நபர்களே!

'ஓஹோ?! குழந்தைகள் காமிக்ஸ் போல!' என்று உங்கள் மண்டையில் பல்ப் எரிந்தால், உடனே சுவிட்சை ஆஃப் செய்யுங்கள்! அனைவர் இரசனைக்கும் ஏற்ற தரமான நகைச்சுவை படைப்புகள் இவை! உண்மையில் சித்திரங்களில் பொதிந்துள்ள நகைச்சுவையை உணர, இரசிக்க சற்று மன முதிர்ச்சி தேவை! ஒருவேளை நீங்கள் லக்கி லூக்கை ’சுட்டி டிவி’யில் வரும் அனிமேஷன் தொடர் மூலம் அறிந்திருந்தால், அது பற்றிய உங்கள் கருத்துக்களை ரப்பர் போட்டு அழித்து விட்டு - "ஒரு படைப்பின் மிக முக்கிய அம்சமான கதாநாயகன் பெயரை மாற்றி படைப்பாளியை அவமதித்துவிட்டு, மொக்கை மொழிப்பெயர்ப்பில் படைப்பை சிதைப்பவர்கள் லிஸ்டில் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு" என்பதாக மட்டும் எழுதிக்கொள்ளுங்கள்! ஆம், சுட்டி டிவியில் லக்கி லூக்கின் பெயர் ’டெலக்ஸ் பாண்டியன்', இது எனக்கு சமீபத்தில்தான் தெரியவந்தது (நன்றி RSK & சௌந்தர்!). இது போன்ற பெயர் மற்றும் கதை மாற்றும் செயலை பிரகாஷ் பப்ளிஷார்ஸும் ஒரு சில சமயம் செய்திருக்கிறார்கள் என்றாலும், தமிழ் காமிக்ஸில் அவர்கள் பங்களிப்பு மிக மிகப் பெரியது என்ற ஒரு காரணத்தால் அவற்றை மறக்க வேண்டியிருக்கிறது! அது மட்டுமன்றி எடிட்டர் விஜயன் அவர்கள் சமீப காலமாக தரத்தில் கொண்டு வந்த நல்ல மாற்றங்கள் இனி இது போன்ற சிதைவுகள் இராது என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது!

சரி, லயன் நியூ லுக் ஸ்பெஷலில் வெளியாகியுள்ள கதைகளின் சுருக்கத்தை பார்ப்போம்! லக்கி லூக் காமிக்ஸ்களில் கதை என்று பெரிதாய் ஒன்றும் இருக்காது, ஓவியங்களிலும், வசனங்களிலும் உள்ள நகைச்சுவை அதை ஈடு கட்டி விடும்!

லக்கியின் அபிமான எதிரிகளான டால்டன் சகோதரர்கள், நாலு பேரும் நாலு விதமான உயரம் கொண்டவர்கள் - அவர்களின் உயரத்தை பொறுத்து, அறிவின் அளவு அதன் எதிர் திசையில் இருக்கும் என்பதுதான் வேடிக்கை! சிறை சுவற்றில் ஒரே ஒரு ஓட்டை போட்டாலே தப்பி விடலாம் என்றெல்லாம் லாஜிக்காக யோசிக்காமல் ஆளுக்கொரு ஓட்டை அவரவர் சைசில் போட்டுக் கொண்டு கனடாவுக்கு தப்பியோடுகிறார்கள்! அவர்களை பிடிக்க லக்கி படும் படாத பாடுதான் கதை! (குறிப்பு: உட்பக்கங்களின் ஸ்கேன்கள் சுமாராக இருப்பதற்கு மன்னிக்கவும்! புத்தகத்தை மடக்க மனம் வரவில்லை! :)

பொன்னையும், பொருளையும் தேடி கலிபோர்னியா செல்லும் ஒரு பெரிய கும்பலை பத்திரமாக வழி நடத்தும் பொறுப்பு லக்கிக்கு! இடையில் பல இடைஞ்சல்கள்! முரட்டு செவ்விந்தியர்கள், கூட இருந்தே குழி பறிப்பவர்கள், அந்த கும்பலில் இருக்கும் சில சொதப்பல் காமெடி கேஸ்கள் - இவர்களால் இடையில் ஏற்படும் பல இடைஞ்சல்களை லக்கி எப்படி சமாளிக்கிறார் என்பது கதை!

மேலே உள்ள முழு வண்ண லக்கி லூக்கின் சாகசங்களை தவிர்த்து மேலும் இரண்டு கருப்பு வெள்ளை காமிக்ஸ்கள் இணைந்து வந்துள்ளன!

3. மனித வேட்டை (காரிகனின் 18 பக்க க்ளாசிக் சாகசம்!):
கரிபியன் தீவிலிருந்து சிண்டிகேட்டுக்கு (அரசுக்கு எதிரான சில வணிக அமைப்புக்கள் என அர்த்தம் கொள்ளலாம்!) எதிரான ஒரு முக்கிய சாட்சியை, வழக்கு விசாரணைக்காக அமெரிக்க அழைத்து வர வேண்டிய கடினமான பொறுப்பு காரிகனுக்கு! இவர்கள் இருவரையும் சிண்டிகேட்டின் கரீபிய ஏஜன்ட் கார்ஸ்ட்ராம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வேறொரு கரீபியன் தீவுக்கு கடத்தி, விலங்குகளைப் போல் வேட்டையாடி கொல்ல முயற்சிக்கிறார்! உண்மையில், இது கிட்டத்தட்ட 40 ஆண்டு பழைய காமிக்ஸ் என்றாலும் க்ளாசிக் ரகத்தில் சேர்க்கலாம் - விறுவிறுப்பாக இருந்தது!

4. மரண முரசு (ஜான் ஸ்டீலின்  16 பக்க மொக்கை!): 
28-ஆவது ஆண்டு மலருக்கு திருஷ்டிப்பொட்டு வேண்டுமல்லவா?! அதற்காகவே வெளியாகியிருக்கும் சிறப்புக் கதைதான் இது!

இவற்றைத்தவிர ஆசிரியரின் வழக்கமான ஹாட்லைன், வரவிருக்கும் காமிக்ஸ்களின் விளம்பரங்கள், ஒரு சில குட்டி காமிக்ஸ் கதைகள் என்று அட்டகாசமாக உள்ளது இந்த இதழ்! இது நீங்கள் அவசியம் வாங்க வேண்டிய இதழ், Ebay மூலமும் வாங்கலாம்! லயன் / முத்து காமிக்ஸ் பற்றிய சந்தா மற்றும் இதர விபரங்களுக்கு இந்தப் பதிவை பார்க்கவும்!

நிற்க!: நீங்கள் தமிழ் காமிக்ஸ் வாசிப்பிற்கு புதியவராய் இருக்கும் பட்சத்தில் இந்த பதிவை இது வரை படித்தால் போதுமானது! கீழே உள்ள தீவிர விமர்சனக்கள்  உங்களுக்கு எந்த பயனையும் தராது என்றே நினைக்கிறேன்!

லயன் நியூ லுக் ஸ்பெஷல் - ஒரு அலசல்!:
இந்த இதழ்களை பற்றிய நெகடிவ் கருத்துக்களை கூறவே தயக்கமாகத்தான் இருக்கிறது - குறைசொல்லி என்ற முத்திரை விழுந்துவிடுமோ என்று! பெரும்பாலான வாசகர்கள் நல்ல விஷயங்களை மட்டுமே பாராட்டிவிட்டு, உறுத்தும் விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பதிற்கு லயன் / முத்து மீதான அபரிதமான அபிமானம் காரணமாக இருக்கலாம்! சரி முதலில் நல்ல விஷயங்களையே பார்ப்போம்!
 • ஒட்டுமொத்த வடிவமைப்பு ஆங்கில காமிக்ஸ்களை எட்டி விடும் தூரத்தில் இருக்கிறது!
 • உயர் தர தாளில், உயிரோட்டமுள்ள வண்ண அச்சு!
 • லக்கி லூக் கதைகளில் பேனல்களுக்கும், பக்கங்களுக்கும் கத்திரி போடாதது!
 • ஃபிரெஞ்சு மூலத்திற்கு கிரெடிட் கொடுத்தது!
 • மனித வேட்டை - காரிகன் சாகசத்தின் மொழிப்பெயர்ப்பு ஓல்ட்ஸ்கூல் என்றாலும், அருமை!
 • வாசகர் அறிமுகம் மற்றும் கடிதங்கள்!
 • புதிய இதழ்களுக்கான, வண்ண விளம்பரங்கள் அருமை! அதே போல, க்ரே ஷேடிங்களுடன் கூடிய கருப்பு வெள்ளை விளம்பரங்களும் நன்றாக உள்ளன!
 • வெகு நாளைய வாசகர் கோரிக்கைக்கு செவி சாய்த்து தரமான பேக்கிங்கில் அனுப்பியது!
களைய வேண்டிய குறைகள்:
 • அட்டைகளில் கதைகளுக்கான ஒரிஜினல் ஓவியங்களை உபயோகப்படுத்தாதது!
 • பின்னட்டை ரொம்பவே சுமார் ரகம்!
 • லக்கி லூக் கதைகளில் மொழிப்பெயர்ப்பு அவ்வளவு சுவாரசியமாக இல்லை! சினிமா காமெடி வசனங்களை நம்பியே மொழிப்பெயர்ப்பில் நகைச்சுவை கூட்டுவது ஓரளவுக்கு ஓகேதான் என்றாலும் விரைவில் அலுத்துவிடுகிறது!
 • நான் இத்தனை காலம் திரு. விஜயன் மட்டும்தான் அனைத்து கதைகளையும் மொழி பெயர்க்கிறார் என்ற தவறான எண்ணம் கொண்டிருந்தேன்! விஜயனின் இந்த பேட்டியைப் படித்த பிறகு, தற்போது திரு.கருணையானந்தம் என்பவர்தான் அப்பணியை பெரும்பாலும் செய்கிறார் என்று அறிந்தேன்! வேற்று மொழி படைப்புகளின் வெற்றி அல்லது தோல்வியின் பெரும்பங்கு அவற்றை மொழி பெயர்ப்பவரின் தோள்களில்தான் உள்ளது! அப்பேர்ப்பட்ட பணியை செய்பவருக்கு கிரெடிட் கொடுக்கும் விதமாய், சின்னதாய் அவர் பெயரையும் கதைகளின் - ஆரம்பத்திலோ, இறுதியிலோ தெரிவித்தால், வாசகர்கள் பாராட்டவோ, குறை சொல்லவோ வசதியாக இருக்கும்!
 • எழுத்துருக்கள் (Fonts) சிறிதும் பெரிதுமாய் இருக்கிறது! இந்த குறையைக் களைய புத்தக நீள அகலத்தை சற்று அதிகரித்தால் மட்டுமே முடியும் - வேற்று மொழி ஒரிஜினல் அளவுகள் அப்படிதான் சற்று பெரியதாக இருக்கின்றன! நடைமுறையில் அது சாத்தியமில்லை என விஜயன் கோடிட்டு காட்டிவிட்டார் (லயன் ப்ளாக் பின்னூட்டமொன்றில்!). எனவே கண்ணாடி அணியாத வாசகர்களும் சீக்கிரமே கண் டாக்டரிடம் போக வேண்டி வரலாம்!

 • பல இடங்களில் எழுதுப் பிழைகள் உறுத்துகின்றன! எடிட்டர் கவனிக்கவேண்டும்!
 • லக்கி லூக் கதைகளுக்கு கார்ட்டூன் ரக எழுத்துருக்களை பயன்படுத்தியிருக்கலாம்!
 • இவ்விதழின் இரண்டு லக்கி லூக் கதைகள், முறையே 1963 மற்றும் 1964 ஆம் ஆண்டுகள் வெளியானவை! அப்படியிருக்க பொத்தாம் பொதுவாக 1971 என கிரெடிட்டில் போட்டது ஏனோ? (நன்றி: விக்கியில் ஒரு வெட்டி ஆராய்ச்சி! )
 • ரான்டன்ப்ளானின் பெயர் சினிபுக்கின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் போல ரின்டின்கேன் என வெளியாகியுள்ளது! இது போன்ற பெயர் மாற்றங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும்! இனி வரும் வெளியீடுகளில், ஏற்கனவே பெயர் மாற்றத்துக்குள்ளான கதாபாத்திரங்களையும் அவரவர் அசல் பெயரில் உலவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்! முக்கியமாக கேப்டன் டைகர் பெயரை, ப்ளூபெர்ரி என்று சரி செய்வது!
 • கதைத் தேர்வுகளில் கவனம் தேவை - ஜான் ஸ்டீலின் - மரண முரசு ரொம்பவே சுமார் ரகம்!
 • கருப்பு வெள்ளை கதைகள் அச்சிடப்பட்டுள்ள தாள்கள் முன்பை விட பரவாயில்லை ரகம் என்றாலும் மறுபக்கத்தின் கருமை முன்பக்கத்தில் தெரிகிறது! சற்றே GSM அதிகமான தாளை பயன்படுத்தலாம்!
 • அப்புறம் ஓவியங்களில் வரும் பெயர்ப் பலகைகளில் - தமிழ் எழுத்துக்களை பொதிக்கும் போது, பலகையின் சாய்மானம் மற்றும் ஒளி அமைப்புக்கேற்ப எழுத்துக்களை வைத்தால் நன்றாக இருக்கும்! கீழே சில உதாரணங்கள்!

செய்யக் கூடிய மாற்றங்கள்:
 • லக்கி, லார்கோ போன்ற நாயகர்களின் - 44 பக்க ஆல்பங்கள் இரண்டை ஒரே இதழில் வெளியிடும்போது , முன்னட்டையில் முதல் சாகசத்தின் ஒரிஜினல் அட்டையையும், பின்னட்டையில் இரண்டவாது ஆல்பத்தின் ஒரிஜினல் அட்டையையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்!
 • அட்டை வடிவமைப்பு: ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு கலரில், ஒவ்வொரு அளவில், ஒவ்வொரு டிசைனில் கேப்ஷன்கள் போடுவதை தவிர்த்து ஒரே வண்ணத்திலான, ஒண்ணரை இன்ச் பட்டிக்குள் லயனின் லோகோ மற்றும் கதையின் பெயரை வெளியிடலாம்! பின்னட்டையில் ISBN Code-ஐ (எண்களுடன்) வெளியிடலாம்!
 • லயன் காமிக்ஸ் வெளியீடு எண்ணுடன், வெளியான மாதம் மற்றும் வருடத்தை இணைத்தால் நன்றாக இருக்கும்!
 • உங்களின் Ebay காமிக்ஸ் ஸ்டோரின் எளிய முகவரி இதுதான்: http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html - உங்கள் ப்ளாக் முகவரியின் கீழ் இதையும் பிரசுரிக்கலாம்!
 • வாசகர் அறிமுகத்திற்கு ஒரு கால் பக்கமாவது ஒதுக்கலாம் - இம்மாதப் பகுதியில் இடம்பெற்ற வாசக நண்பர் சோமசுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்!

வாசகர்களுக்காக ஒரு யோசனை!:
 • வாசகர் அறிமுகப் பகுதிக்காக உங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பும் போது - பெயர், வயது, ஊர் - போன்றதொரு போரடிக்கும் டெம்ப்ளேட்டில் சிக்காமல் உங்களைப் பற்றிய சுவையான சுய அறிமுகத்தை, உங்கள் வயது மற்றும் அனுபவத்திற்கேற்ற முதிர்ச்சியோடு பகிர்ந்தால் இரசிக்கும்படி இருக்கும்!
ஒரு ஆச்சரியக்குறி!:
லக்கி லூக்கின் இந்த கதைகள் வெளியாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் ஒரிஜினல் சித்திரங்களை இவ்வளவு அழகாக ஃபிரெஞ்சு பதிப்பகத்தாரால் (Dupuis/Dargaud) பளபளப்பு குறையாமல் எப்படி பேணிக் காக்க முடிகிறது?! 25 வருட ரீப்ரிண்டுக்கே முழி பிதுங்கும் பரிதாப நிலை நம் பதிப்பகத்தாரிடம்! காமிக்ஸ் என்று இல்லை நம் பதிப்பகத்துறையே அப்படித்தானோ?!

இப்போதைக்கு தோன்றியவை இவ்வளவுதான் நண்பர்களே! இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

31 comments:

 1. கதைகளின் சுருக்கத்தை அருமையாக கொடுத்துள்ளீர்கள் நண்பரே... நன்றி...  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
 2. Tamil comics ku
  puthiya vasakarkalai serkkum unkal muyarchikku parattukal !

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி நண்பரே!

   Delete
 3. "Marana murasu"
  kathaium nanrdakave irunthathu...!
  enakku pidithu irunthathu....!

  ReplyDelete
 4. என்ன சொல்லி பாராட்ட ,பின்னிட்டீங்க நண்பரே ...................

  ReplyDelete
 5. படத்தை பார்க்கும் போது கதைகளை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாங்கிப் படியுங்கள்!

   Delete
 6. கண்டிப்பாக வாங்கி படியுங்கள் நண்பரே.கார்த்திக் நீங்கள் இவரை போன்ற நண்பர்களுக்கு நமது சர்ப்ரைஸ் ஸ்பெஸல் லார்கோ வையும் அறிமுகம் செய்யுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் அப்துல் நமது ப்ளாக்கை தொடர்ந்து வாசித்து வருகிறார், எனவே அந்த பதிவுகளையும் நிச்சயம் படித்திருப்பார்! :)

   தற்போது காமிக்ஸ் வாசகர்கள் தவிர்த்த இதர நண்பர்களை நம் பதிவுகள் சென்றடைய தமிழ் வலைத் திரட்டிகள் மூலம் முயன்று வருகிறேன்!

   Delete
 7. A detailed review. IMO Lucky is the best option to introduce comics for young readers. (The book is waiting in Native. I should go as early as possible)

  ReplyDelete
  Replies
  1. true, cartoon characters like this are a good start point!

   Delete
 8. லயன் ஆண்டு மலரின் விக்கிப் பக்கம் படித்தது போல மிக நீண்ட அருமையான அலசல். கலக்கல்.

  என்னுடைய எண்ணங்கள் (லயன் ப்ளாகில் பகிர்ந்துகொண்டது. இங்கு பதிந்தால், அதிகம் பேர் படிப்பார்க்ள் என்பதால் இங்கே)

  நிறைகள்
  --------

  - சர்வதேசதரத்தில் இருந்த தயாரிப்பு, கலர் பிரிண்டிங், ஆர்ட் பேப்பர். பிரிண்டிங் சினி புக்ஸ்சை (cinebooks) விட மிகப் பிரம்மாதமாக இருந்தது.

  - இரண்டு கதைகளும் வாய் விட்டு சிரிக்கக் கூடிய அளவில் அற்புதமாக இருந்தது. ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும், தமிழில் படிக்கும்போது இன்னும் நன்றாக இருந்தது.

  - பேக்கிங் முன்பு பலர் கூறியது போல அருமை. முனைகள் மழுங்காமல்,கசங்காமல் அருமையாக வந்தடைந்தன.


  குறைகள்
  ---------

  - லக்கிலூக் கதையில் எழுத்துருக்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் பல சைஸில் இருந்தது. இது நிவர்த்தி செய்ய இயலுமா எனத் தெரியவில்லை (சில இடங்களில் பெரிய சைஸில் எழுத்துக்கள் இருக்கவேண்டும் ஏன் எனில் அவைகள் சில சப்தங்களை வெளிப்படுத்தும் இடங்களாக இருக்கலாம். அதில் தவறில்லை)

  - புத்தகத்தை முழுமையாக (மிகக் கவனமாக பிரித்து) படித்து முடித்தவுடன், அட்டை, தனியாக பிரிந்து விட்டது (முழுவதுமாக இல்லை). இது என் புத்தகத்தில் மட்டுமா இல்லை எல்லாருடைய புத்தகத்திலும் இந்தப் பிரச்சினை இருக்கிறதா எனத் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே! எனது பிரதியில் அட்டை பிரியவில்லை - ஆனால் எப்போதும் சுருண்டே இருக்கிறது! :)

   Delete
 9. என் மகன் ஆங்கில லக்கிலூக் (சினிபுக் வெளியீடு) பார்த்திருந்ததால், சுட்டிடிவியில் வருபவரையும் லக்கிலூக் என்றே சொல்கிறான் :). நன்றிகள் சினிபுக்கிற்கு

  ReplyDelete
 10. மரண முரசு கதையைப் பற்றிய உங்களின் கருத்துக்களை வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 11. உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் அப்படியே ஏற்கிறேன்.
  அதுவும் அந்த ஜான் ஸ்டீல் கதை படு மொக்கை.
  ஆசிரியர் கதை தேர்வில் சற்று கவம் சுளுதினால் நன்றாக இருக்கும்.
  நீங்களும் இக்கருத்தை blore காமிக்ஸ் கானில் சந்தித்து கூறுங்கள்.

  ReplyDelete
 12. பதிவு ரொம்ப பெருசா போயிட்ட மாதிரி தெரியுது!

  ReplyDelete
  Replies
  1. பதிவோட நடுவில "நிற்க!" அப்படின்னு ஒரு எச்சரிக்கை மணியை பாக்கலையா நீங்க?! ;) அது வரைக்கும் படிச்சா போதும்! பாக்கி எல்லாம் லயன் காமிக்ஸ் ஆசிரியரோட கவனத்திற்கு! :D

   Delete
 13. முதலில் என்னையும் சரவணாவையும் பதிவின் இடையே நினைவுகூர்ந்ததற்கு நன்றி நண்பா.

  நண்பா இவ்வளவு சிரத்தை எடுத்து உங்கள் கருத்துக்களை ஆசிரியருக்கு தெரிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. எப்படி உங்களைப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

  "அளவுகோல் மேட்டர்" ப்ளேடு கார்த்திக் டச்.சூப்பர் நண்பா (எப்படித்தான் இப்படி யோசிக்கிறீங்களோ).

  ReplyDelete
  Replies
  1. //ஆசிரியருக்கு தெரிவித்திருப்பது//
   ஆசிரியர் இந்த மொக்கையை எல்லாம் உட்கார்ந்து பொறுமையா படிப்பாரான்னு தெரியல பாஸ்! ;)

   Delete
 14. ஹாய் கார்த்திக் , u done a very good job ,நானும் என் school friend name ராஜாதிருவேங்கடம் ,as a reporter in விகடன் வார இதழ் &ஜூனியர் விகடன் ,அவர் இடம் நம் காமிக்ஸ் மறு ஜென்மம் பற்றி பேசி உள்ளேன் , இன்னும் nam காமிக்ஸ் வருவது நிறைய பேருக்கு தெரிய வில்லை , எனக்கே comeback வந்து one month கழித்து முருகேஷ் என்ற நண்பர் மூலமாக தான் தெரிந்தது , என் நண்பர் ராஜாதிருவேங்கடம் இடம் விகடன் ல் ஒரு page வருமாறு nam காமிக்ஸ் பற்றி கவர் ஸ்டோரி (இரும்பு கை மாயாவி கு 40 வயது ) என்று செய்ய முடியமா? என்று கேட்டு உள்ளேன் ,கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் ,editer மாதிரியே நானும் fingers crossed .

  ReplyDelete
  Replies
  1. //விகடன் ல் ஒரு page வருமாறு nam காமிக்ஸ் பற்றி கவர் ஸ்டோரி// நண்பரே, நல்ல விஷயம்தான்! ஆனால், ஒரு சின்ன suggestion! இரும்புக்கையையே எத்தனை நாள்தான் நம்பி இருப்பது! கட்டுரையின் தலைப்பை 'தமிழில் சர்வதேச தரத்திலான, பெரியவர் மற்றும் சிறியவர்க்கான காமிக்ஸ்' போன்று கொஞ்சம் மாறுதலாக வைத்து விட்டு - ப்ளூபெர்ரி, லார்கோ வின்ச், ஜில் ஜோர்டான், லக்கி லூக், XIII (கடைசி பாகம்) இவர்களின் கதைகள் சர்வதேச தரத்தில் ஆர்ட் பேப்பரில் வெளியாவதை (வெளியாகப் போவதை) சொல்லி அப்புறம் கடைசியாய் முத்துவுக்கு நாற்பது வயது ஆன கதையை சொல்லிக்கொள்ளலாம்! தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம்! இன்றைய தலைமுறையிடம் இரும்புக்கை, பழைய காமிக்ஸ் என்றால், பக்கத்தை திருப்பி விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்!

   Delete
 15. இந்த சுட்டி டிவியில் நானும் பார்த்து உள்ளேன் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை....அந்த நாய் கிறுக்கு தனமாய் செய்து லக்கிலுக் மாட்டியும் விடும் உதவியும் செய்யும் நானும் வாங்கணும் என்று தான் பார்கிறேன் ஆனால் நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது......

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அட்ரஸ்சை எனக்கு மெயில் பண்ணுங்க பாஸ்!

   Delete
 16. குறைகளை மிக தெளிவாக சுட்டிகாட்டியுள்ளீர்கள். இது காமிக்ஸ் வளர்ச்சிக்குத்தான் என்பதனை கண்டிப்பாக அனைவரும் புரிந்து கொள்வார்கள் கவலை படாதீர்கள்.

  அடுத்த மாதம் 8-9 தேதிகளில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். நானும் அங்கு வந்து ஒருவர் வீட்டில் காமிக்ஸ் கொள்ளை அடித்துவிட்டு வரலாம் என நினைக்கிறேன். வீட்டை பூட்டி விட்டு வெளியூர் பொய்விடாதீர்கள் :)

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேலை எச்சரிக்கை மணி அடித்தீர்கள்! ஒரு மாத அவகாசத்தில் அனைத்தையும் பதுக்கி வைத்து விட வேண்டியதுதான்! :D

   Delete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia