என் பெயர் பில்லா - ஒரு முன்பின்நவீனத்துவ விமர்சனம்!

முன்பின்நவீனத்துவம் - இதற்கும் இலக்கிய உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை! இதற்கு நான் கொடுக்கு அர்த்தம் என்னவென்றால், இப்பதிவு நேர்க்கோட்டில் அமையாமல் - முன்னும் பின்னுமாய் எழுதப்பட்டு, பில்லா பட விமர்சனமாக மட்டுமன்றி, இடையிடையே இந்த பதிவிற்கு தொடர்புடைய ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் விமர்சனமாகவும் நவீன(!) முறையில் எழுதப்பட்டுள்ளது!   அதற்காக ஜம்ப் செய்து, ஜம்ப் செய்து பில்லா பட விமர்சனம் மட்டும் படிக்கக்கூடாது! இரண்டையும் ஆழ்ந்து(!) படியுங்கள், இவற்றிற்கான தொடர்பு என்ன என்பதை பதிவின் நடுவில் சொல்கிறேன்! அப்புறம் பில்லா ட்ரைலர் நிச்சயம் பார்த்திருப்பீர்கள், "டொன் டொய்ங், டொடடோ டோ  டொன் டொய்ங்" என்ற ரீதியில் ஒரு தீம் மியூசிக் வருமல்லவா?! இந்த பதிவில் நீங்கள் "♫" என்ற சங்கீத குறியை காணுமிடமெல்லாம் அந்த மியூசிக்கை மனதில் ஓட விட்டு, அஜித் நடப்பது போல கற்பனை செய்ய வேண்டியது மிக அவசியம்! அதே சமயத்தில் அஜீத் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்! எனது வழக்கமான சினிமா விமர்சன பாணிக்கு மாறாக இங்கு முழுக் கதையையும் சொல்லி இருப்பதால் படம் பார்க்க விரும்பும் அன்பர்கள் வெள்ளை கட்டங்களை படிக்காமல், நீளமான இப்பதிவின் நீலக் கட்டங்களை மட்டும் படித்தால் நலம்!

படத்தின் ப்ளஸ்கள் முதலில் சொல்ல வேண்டுமானால் அஜீத் ஆர்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார்! டயலாக் டெலிவரியில் ரொம்ப முன்னேற்றம்! இவரைத் தவிர சிறப்பாக நடித்தவர்கள் என்றால் இளவரசை சொல்லலாம்! வில்லன்களும் ஸ்மார்டாக இருக்கிறார்கள்! படம் எடுத்த இடங்கள், காட்சியமைப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு, உடைகள், செலவு இப்படி ஒவ்வொன்றுமே உலகத்தரம்!

உள்ளே நுழையும்போது படம் போட்டிருந்தார்கள், போலிஸ் ஆஃபிசர்(!) ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஆளிடம் லாக்கப்பில் இரண்டு நாள் தங்கிச் செல்லுமாறு அன்புடன் அழைக்கும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது! பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன், 'படம் போட்டு எவ்ளோ நேரம் ஆச்சு?!' அவர் ரெண்டு நிமிடம் கழித்து 'இப்பதான் பத்து நிமிட்டு ஆச்சு!' என்று மலையாளத்தில் கூறினார்! அந்த பதிலை நான் கேள்வி கேட்டபோதே அவர் மூளை தயாரித்திருக்கும் பட்சத்தில் நான் படம் ஆரம்பித்து முழுதாய் பனிரெண்டு நிமிட்டுகள் கழித்து உள்ளே நுழைந்திருக்க வேண்டும்! ஒருவேளை (நல்லவேளை?), ஏதாவது ஒரு பாட்டு மிஸ் ஆகியிருக்குமோ? பில்லா படங்களில் அந்த லோகோ காட்டப்படும் டைட்டில் எனக்கு ரொம்ப பிடிக்கும் - நிச்சயமாக அதை மிஸ் செய்துவிட்டேன் போல! நாங்க அகதிகள் தான் அடிமைகள் கிடையாது என்றவாறு தல காட்டும் ♫ அஜீத்குமார் ♫ போலீஸை பின்னியெடுக்கிறார்!
லார்கோ வின்ச் - ஒரு அறிமுகம்!: லார்கோ - ஐரோப்பாவில் பிரசித்தி பெற்றதொரு கதாபாத்திரம்! ஜேம்ஸ் பாண்ட்  போல் இவர் ரகசிய உளவாளி கிடையாது! ஆனால் இவர் செய்யும் சாகசங்கள், சில்மிஷங்கள் எல்லாம் ஜேம்ஸ் ரகம்தான்! Batman, Ironman போல 'சூப்பர் ஹீரோ' சக்திகளும் இவரிடம் இல்லை. ஆனால், அவர்களுக்கொப்ப பெரிய நிறுவனமும், பணபலமும், செயல்வேகமும் நிச்சயம் உண்டு! அவர்கள் உலகை காப்பாற்ற புறப்படுவார்கள், நம்மவரோ தன்னையும் தன் நிறுவனத்தை காப்பற்றிக்கொள்ள எந்நேரமும் போராடுவார் - அவ்வளவுதான் வித்தியாசம்! இதுவரை 17 ஆல்பங்கள் வெளியாகியுள்ள லார்கோ காமிக்ஸ் தொடரின் முதல் இரண்டு கதைகளை முத்து காமிக்ஸ் நிறுவனம் தமிழில், முழு வண்ணத்தில், நூறு ரூபாய் விலையில் உயர்தர ஆர்ட் பேப்ப்பரில் வெளியிட்டுள்ளது!
 உள்ளூர் கடத்தல்காரர் ஒருவர் அடிவாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருடன் இணைந்து அஜித்தை சிக்க வைக்க எண்ணுகிறார்! மீன் வாயில்(!) வைரக்கற்கள் பதுக்கிய(!) லோட் லாரியை சென்னையில் இன்னொரு கடத்தல்காரரிடம் (இளவரசு) சேர்பிக்குமாறு சொல்லிவிட்டு, வழியில் அதை மடக்கி அஜித்தை கொன்று, வைரத்தோடு அஜீத் தப்பியோடிவிட்டதாக இளவரசிடம் புளுகுவதே இவர் திட்டம்! எதிர்பார்த்தது போல இதிலிருந்து தப்பும் அஜீத் இளவரசின் வலது தலையாக மாறுகிறார். ஒரு கிளப் பாட்டு -  ♫ இன்ஸ்பெக்டரை போட்டுத் தள்ளுகிறார்! ♫ அப்புறம் ஓமனக்குட்டியை (பார்வதி ஓமனக்குட்டன் , சுருக்கமாக ஓமனக்குட்டி ) பாட்டில்லாமல் மீட் பண்ணுகிறார்!
கதைச்சுருக்கம்: லார்கோ - பெற்றோரை இழந்த ஒரு இளைஞர். இவர், பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட மிகப்பெரிய சர்வதேச நிறுவனமான "The W Group" என்ற நிறுவனத்தின் தலைவர் "Nerio Winch"-ஆல் தத்து எடுக்கப்படுகிறார்! நெரியோ, தனக்கு பிறகு தனது நிறுவனத்தை வழி நடத்த லார்கோவை பத்து வயதிலிருந்தே எல்லா விதத்திலும் தயார் படுத்தி வருகிறார்! நெரியோ ஒன்றும், லேசுப்பட்ட ஆள் கிடையாது. வியாபாரத்தில் எல்லா தகிடுதத்த வேலைகளையும் செய்து முன்னேறியவர், அதனால் பணத்தை மட்டுமின்றி பல எதிரிகளையும் சம்பாதித்தவர்! அவரை மனதளவில் தந்தையாக லார்கோ ஏற்றுக் கொண்டது கிடையாது அதற்கு நெரியோவின் வழிமுறைகளும் ஒரு காரணம். இந்த சூழ்நிலையில் நெரியோ தனது நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவரால் கொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த கொடுஞ்செயல் சாமர்த்தியமாக தற்கொலை என ஜோடிக்கப்படுகிறது - நெரியோவுக்கு பிரைன் கேன்சர் இருந்தது காரணமாக காட்டப்படுகிறது!
அப்புறம் கோட்சூட் போட்ட உள்ளூர் தாதாவிடம் (மனோஜ் கே. ஜெயன்) பாண்ட்ஸ் பவுடர் வாங்கும் அஜீத் அதை விற்றுக் கொடுக்கிறார்! இந்த பவுடர் சேல்ஸ் டீலிங்கில், லுங்கி கட்டிய ♫ இன்னொரு ரவுடியை ஷூட்(!) பண்ணுகிறார்! ♫ இதனால், இம்ப்ரெஸ் ஆகும் மனோஜ், இவரை இன்னொரு கோட்டுசூட்டு போட்ட கோவா தாதா அப்பாஸியிடம் அறிமுகப்படுத்துகிறார்! ♫ இன்னொரு கிளப் பாட்டு - தாதாவின் ஆளையே (ப்ரூனா அப்துல்லா - நடிப்பை துணியாக நினைத்து 'பிய்த்து உதறி' இருக்கிறார் மனுஷி!) லுக் விடுகிறார் அஜீத்! ♫ அப்பாஸிக்கு, டிமிட்ரி என்ற இரஷ்ய (ஸ்பானிஷ்?) மொழி பேசும் சர்வதேச கோட்டுசூட்டிடம் இருந்து, ரைடில் சிக்கிய சரக்கை மீட்டுத் தருமாறு உதவி கேட்டு அழைப்பு வருகிறது! அப்பாஸி தயங்குகிறார், ♫ அஜீத் நான் செய்கிறேன் என்கிறார்! ♫ பலத்த ஆயுதம் தாங்கிய 100 போலிஸ் வீரர்கள்(!), 200 Coast Guard வீரர்கள் இவர்களை ஏட்டு ஏகாம்பரத்தின் ரைஃபிளுடன் திறமையாக எதிர் கொண்டு ♫ ட்ரக்கில் தப்புகிறார் அஜீத்! ♫ அப்பாஸியுடன் டீல் பேச வரும் ஒரு அரசியல்வாதியையும் அவரின் மகனையும் பகைத்துக்கொள்கிறார்!
திடீரென்று அவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இருபத்தாறே வயதான நமது ஹீரோவின் தலையில் இடியாக விழுகிறது! கூடவே இதை கொஞ்சமும் விரும்பாத, கூட இருந்தே குழி பறிக்கும் W குழுமத்தின் உயரதிகாரிகளை சமாளிக்கும் தொல்லை பிடித்த வேலையும்தான்! லார்கோவின் தந்தை நெரியோ கொலை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இஸ்தான்புல்லில் இருக்கும் லார்கோவை ஒரு கொலை கேசில் மாட்டி விட்டு விடுகின்றனர்! இதில் இருந்து லார்கோ எப்படி தப்பிக்கிறார் என்பதை முதல் பாகத்திலும் (என் பெயர் லார்கோ!), தனது வளர்ப்பு தந்தையின் பங்குகளை கைப்பற்றி நிறுவனத்தை எப்படி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் என்பதை இரண்டாம் பாகத்திலும் (யாதும் ஊரே... யாவரும் எதிரிகள்...!) ஜெட் வேகத்தில் சொல்லியிருக்கிறார்கள்!
மேற்கண்ட ஏட்டு ஏகாம்பர ரைஃபிள் மேட்டரில் இம்ப்ரெஸ் ஆகும் டிமிட்ரி, வியாபார விரிவாக்கம் (ஆயுத ஹோல்சேல் விற்பனை ) தொடர்பாக அப்பாஸிக்கு  அழைப்பு விடுக்கிறார்! அதற்கு அல்லக்கை மனோஜ் உடன் ♫அஜீத்தை அனுப்புகிறார்! ♫ இன்னும் ஒரு கிளப் பாட்டு! அஜீத் செல்வாக்கில் கடுப்பாகும் மனோஜ், அப்பாஸி - அஜீத் இருவரையும் பிரிக்கிறார்! ♫ அஜீத் தனியாக தொழில் செய்ய முடிவெடுக்கிறார்! ♫
லார்கோவின் பாத்திர வடிவமைப்பு அபாரம்! சிறு வயதில் இருந்து அவர் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக  உயர் பொறுப்புக்கு செதுக்கப்படுகிறார் என்பதை தெளிவாக சொல்கிறார்கள். துப்பாக்கியை உபயோகிக்காமல் வெறும் உடல் பலத்தையும், கத்தி வீசும் திறனையும் காட்டுவது "Casino Royale" ஜேம்ஸை நினைவுபடுத்துகிறது! அவருடைய ப்ளேபாய் காட்சிகள் நமது ஓவியர்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளன - இருந்தாலும் வசனங்கள் கொஞ்சம் தாராளம்! அமெரிக்க மோகம், ஐரோப்பிய நாடுகளுக்கும் இருக்கிறது என்பதை லார்கோவின் - W நிறுவனத் தலைமையகம் மற்றும் கதைக்களன் நியூயார்க் என்றிருப்பதில் புலனாகிறது! அதே போல வசதி படைத்ததொரு அமெரிக்கர் / ஐரோப்பியர் எந்த நாட்டிலும் என்ன அக்கிரமும் செய்து விட்டு ஜஸ்ட் லைக் தட் தப்பித்து போய் விடலாம் என்பது மாதிரியான கதையமைப்பு எரிச்சலூட்டுகிறது!
தெருவில் கொலையே நடந்தாலும், கண்டுகொள்ளாமல் ஊர்வலம் போகும் கோவா கார்னிவலில், இசகு பிசகாக இரஷ்ய டீலர்களிடம் மாட்டும் அஜீத் அடி வாங்கி, அடித்து, தப்பித்து, அப்பாஸியின் இடத்திற்கு வந்து ♫ அவரையும் சுட்டுத் தள்ளுகிறார்! ♫ இங்கே படத்தின் continuity-யை  மனதில் கொண்டு, அஜீத்தின் இரத்தக்கறைகளை கழுவாமல், கோட்டுசூட்டையும் மாற்றாமல் நடிக்க வைத்த இயக்குனர் பாராட்டுக்குரியவர்! அப்புறம் தேவையில்லாமல், கோவா முதலமைச்சரையும் போட்டுத் தள்ளுகிறார் அஜீத்! ஆனாலும், நீங்கள் அஜீத்தை தவறாக நினைத்து விடக்கூடாது - ♫ அவர் ஹீரோ - ரொம்ப நல்லவர்! ♫
முதல் பக்கத்தில் உள்ள பாத்திரங்களின் அறிமுகப் பக்கம், தலை சுற்ற வைக்கிறது. வாய் சுளுக்க வைக்கும் அத்தனை வெளிநாட்டுப் பெயர்களை மற்றும் அவர்கள் வகிக்கும் பதவிகளை நினைவில் நிறுத்த என்னால் ஆகாது என்பதால் அதை படிக்காமலேயே விட்டு விட்டேன் - இருந்தாலும் கதை புரிவதில் குழப்பம் வரவில்லை. தமிழில் வெளிவந்த கதைகளில் குறிப்பாக காமிக்ஸ்களில் இவ்வளவு விரிவாக நிர்வாக மேலாண்மையை எதுவும் பிரித்து மேய்ந்தது இல்லை என நினைக்கிறேன்! ஏதோ கம்பெனி போர்டு மீட்டிங் அட்டென்ட் பண்ணுவது போன்ற ஒரு உணர்வு படிக்கும் போது ஏற்படுகிறது!
அப்பாஸிக்கு பிறகு டிமிட்ரி அஜீத்துடன் வியாபாரம் செய்ய நினைக்கிறார்! அஜீத் கேட்கும் கமிஷன் கட்டுப்படியாகாமல் டென்ஷன் ஆகும் டிமிட்ரி, மனோஜ் மற்றும் அரசியல்வாதியுடன் சேர்ந்து அஜீத்தை ஒழித்துக்கட்ட நினைக்கிறார்! அதில் இருந்து தப்பிக்கும் அஜீத் அரசியல்வாதியை நீ தகுதியான எதிரியல்ல என ♫ ஷூட் பண்ணாமல் விடுகிறார்! ♫ உள்ளூர் லுங்கி ரவுடி, மற்றும் படம் முழுக்க பொடிப் பொடி அடியாட்கள் இவர்களை எல்லாம்  தகுதி பார்க்காமல் அஜீத் போட்டு தள்ளியதை நாம் தேவையில்லாமல் ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடாது! இந்த களேபரத்தில் ஓமனக்குட்டி கழுத்தறுபட்டு சாகிறார் - இந்த சொத்தை சீனுக்குதான் அந்த பவர்புஃல் பன்ச் டயலாக்!
கதை நெடுக நிகழ்காலத்தையும், கடந்தகாலத்தையும் பின்னிப்பிணைத்த விதம் அட்டகாசம், திரைப்படங்கள் தோற்றது போங்கள்! நிகழ காலத்தில் லார்கோ எறியும் கத்தி..., அடுத்த காட்சியில் கடந்த காலத்திய ஒரு நிகழ்வில் குத்திட்டு நிற்பது ஒரு உதாரணம், கதை முழுதும் இப்படிதான் - ஆனால் கொஞ்சமும் குழப்பமேற்படுத்தாமல்! இக்கதையில் வரும் ஆக்ஷன் காட்சிகளுக்கான சித்திரங்கள், நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன! சான்ஸே இல்லை! நீங்களே பாருங்கள்! லார்கோ ஒரு ஃபிரெஞ்சு படைப்பு என்பதால் FTV ஜில்பான்ஸ் சமாச்சாரங்களும் நிறையவே! ஆனால், அவை பெரும்பாலும் தமிழில் எடிட் செய்யப்பட்டுள்ளன!
க்ளைமேக்ஸில் டிமிட்ரி ஏதோ ஒரு நாட்டிலிருந்து, ஏதோ ஒரு நாட்டுக்கு அனுப்பும் ஆயுதங்களை, ♫ அஜீத் தடுத்து நிறுத்துகிறார்! ♫ ஆயுத தளவாடங்கள் தாங்கிய ட்ரைனை திசை திருப்புகிறார்! ஒற்றை கேமரா மூலமாக எல்லா ஆங்கிள்களிலும் இதை வேறு ஏதோ ஒரு நாட்டில் இருந்து பார்க்கும் டிமிட்ரி தண்டவாளத்தில் ஹெலிகாப்டரை  பார்க் செய்து இரயிலை(!) நிற்பாட்டுகிறார்! அப்புறம் ஹெலிகாப்டரை கிளப்பினால் உள்ளே அஜீத்! இவர்கள் இருவரும் ஹெலிகாப்டர் குலுங்க சண்டை போடும்போது எவன் செத்தா எனக்கென்ன என்பது போல் வண்டி(!) ஓட்டும் அந்த பைலட்டின் கடமை உணர்ச்சி அளப்பரியது! இதற்குமேல் சுருக்கமாக என்னால் கதை சொல்ல முடியாது, மிச்சத்தை வெள்ளித்திரையில் காணுங்கள்!
ஒரு படைப்பை மொழிபெயர்ப்பு செய்வதென்பது மிகவும் சிரமம் வாய்ந்த காரியம்! வெறும் சொற்களை அப்படியே மொழிபெயர்க்க ஓரளவு படைப்பின் மூலமொழி அறிவும், இணையமும், பக்கத்தில் ஒரு dictionary-யும் இருந்தால் போதுமானது! ஆனால் அப்படி செய்தால் அதில் கொஞ்சமும் சுவை இருக்காது! வடிவேலு அல்லது சந்தானத்தின் டைமிங் ஜோக்குகளை பிற மொழியில் அப்படியே மாற்றினால் எப்படி சிரிப்பு வராதோ அப்படித்தான் இதுவும்! எனவே மொழிபெயர்ப்பு என வந்திடும் போது கொஞ்சம் சொந்த சரக்கையும் கலந்து அடிப்பதை தவிர்க்க இயலாது! அதுவும் காமிக்ஸ் இதழ்களில் வேறு மொழி சொற்களுக்கான / வார்த்தைகளுக்கான முன்னமே வடிவமைக்கப்பட்ட டயலாக் பலூன்களில் தமிழை திணிப்பது அல்லது விரிப்பது எல்லாம் ரத்தக் கண்ணீர் வரவழைத்திடும்  செயல்! அந்த வகையில் இவ்விதழின் மொழிபெயர்ப்பாளர்கள் விஜயன் மற்றும் கருணையானந்தம் - இருவரும் பாராட்டுக்குரியவர்கள்!

இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்! லார்கோவின் இரண்டு கதைகள் கொண்ட ஒவ்வொரு தொகுப்பும் ஆங்கிலத்தில் ருபாய் 350 முதல் 1000 வரையிலான விலைகளில் கிடைக்கிறது! ஆனால் தமிழில் அதே தரத்தில் வெறும் நூறு ருபாய் மட்டும்தான்! தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு நான் இதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! ஆனால் மற்றவர்க்கு, நான் சொல்லிக்கொள்ளுவதெல்லாம், இது ஒரு தவறவிடக்கூடாத காமிக்ஸ் இதழ்! இதை Ebay மூலமாகவோ அல்லது லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ வாங்கலாம்! இதைப் பற்றிய முழு நீள விமர்சனத்தை இங்கே காணலாம்: என் பெயர் லார்கோ! & எதிரே ஒரு எதிரி!


எல்லாம் சரி, பில்லாவுக்கும், லார்கோவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இரண்டு பேரும்  கோட்டுசூட்டு போட்டு இருப்பார்கள்! அவ்வளவுதான்! ஒரே ஒரு வித்தியாசம் - பில்லா ஸ்மார்டாக, ஸ்டைலாக இருப்பார்! லார்கோவோ ஸ்டைலாக, ஸ்மார்டாக இருப்பார்! அப்புறம், காமிக்ஸ் பற்றி அறிந்திராத வாசகர்களையும் காமிக்ஸ் விமர்சனம் படிக்க வைத்த ♫ அஜீத் அவர்களுக்கு நன்றி!

♫ இந்த நீளமான பதிவை பொறுமையாய் படித்த உங்களுக்கும் நன்றி!

சொல்ல மறந்து விட்டேன் - அஜீத்தை பிடிக்கும் என்றாலும், பில்லா II எனக்கு பிடிக்கவில்லை! :(

பின்குறிப்பு: எனக்கு பிடித்த படங்களுக்கு மட்டும்தான் விமர்சனம் எழுதுவது என்ற கொள்கையை அஜீத்துக்காக கொஞ்சம் தளர்த்தியது, தமிழ் காமிக்ஸ் பற்றிய awareness பலருக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே! :)

என் பெயர் யோஹன்!: சமீபத்தில் இணையத்தில் ஒரு புரளி கிளம்பியுள்ளது! கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாகவிருந்த "யோகன் அத்தியாயம் ஒன்று" என்ற திரைப்படத்தின் டீசர் போஸ்டர் ஆங்கிலத்தில் வந்த லார்கோ வின்ச் திரைப்பட போஸ்டரை உரித்து(!) வைத்திருந்ததால், யோகனின் கதையும் லார்கோவின் 'inspiration'-னுடன் இருக்குமோ ♫ என்ற சந்தேகம்தான் அது!

சரி விஜய் பத்தின நியூஸுக்கு எதுக்கு அஜீத் மியூசிக் அப்படின்னு கேக்கறீங்களா? அதனால என்ன பாஸ்? நல்லாதானே இருக்கு!  


கருத்துகள்

  1. இது எனக்கு இடது-வலது ன்னங்-ன்னங் செலவு பண்ணி இந்த மாதிரி படத்துக்கு போவியா...இனி மேல் சத்தியமா போகவே மாட்டேன்.....படம் பார்த்து வெறுத்து விட்டேன் தமிழ்மணதில் எங்க பார்த்தாலும் பில்லா பில்லா பில்லா தான் உள்ள போகமுடியலை...தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சு...இனி டான் படம் என்றாலே போக கூடாது அதுவும் கோட் போட்டு இருந்தால் போஸ்டர் கூட பார்க்ககூடாது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! நானும் ரொம்பவே நொந்து போய் விட்டேன்! :(

      நீக்கு
  2. ஆனா ஊர்ல உள்ள எல்லா தியேட்டர்லயும் இந்த படம் தான் ஓடுது. செம காசு பாக்க போறாங்க என்பது மட்டும் உண்மை

    பதிலளிநீக்கு
  3. ///ஒற்றை கேமரா மூலமாக எல்லா ஆங்கிள்களிலும் இதை வேறு ஏதோ ஒரு நாட்டில் இருந்து பார்க்கும் டிமிட்ரி ////

    பதிலளிநீக்கு
  4. நானும் பார்த்துவிட்டு வருந்தி திரும்பி வந்தேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க விமர்சனம் பார்த்தேன்! நேர்மையா எழுதி இருக்கீங்க!

      நீக்கு
  5. காசு குடுத்துப் பாக்கலாமுன்னுதான் இருந்தேன். பரவாயில்லை. கொஞ்ச நாளில் 20 ரூபாய்க்கு dvd விப்பாய்ங்க. சொந்தமா வாங்கிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. கார்த்திக் பார்த்து, தல ரசிகர்கள் பொங்கி எழுந்துடபோறாங்க..... அப்புறம் நம்ப நண்பர் தல ரசிகர் இரவுக்கழுகும் படம் சரியில்லன்னு சொல்லிட்டார். ஒகே அப்போ dvd தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தல ரசிகர்கள் பொங்கி எழுந்துடபோறாங்க// மாட்டாங்க! :)

      நீக்கு
  7. படம் ரெலீசாகி ரெலேசக்கி முதல் ஷோ முடிஞ்ச உடனே ப்ளாக்குல DVD கிடைக்கிறமாதிரி உங்களோட விமர்சனம்

    ஹ்மம்ம்மம்ம்ம்ம் எப்புடித்தான் யோசிப்பாங்களோ

    நடுவுல காமிக்ஸ் மிக்ஸ் வேற எங்கியோ போயிட்டீங்க ;-)
    .

    பதிலளிநீக்கு
  8. படத்த டவுன்லோட் பண்ணி VLC பிளேயர்ல போட்டு ரெண்டு Fast Forward பண்ணாக்கூட படம் slowவாதான் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  9. ஹாலிவுட்டில் டி.சி காமிக்ஸ்,மார்வல் காமிக்ஸ் ஆகியவற்றில் ரைட்ஸ் வாங்கி படம் எடுப்பது போல தமிழிலும் ரைட்ஸ் வாங்கிப்படம் எடுத்தால் நாலு நல்லப்படமாவது தேறும். இல்லைனா பல கோடில செலவுல கோட்டு போட்டுக்கிட்டு ரேம் வாக் செய்றத தான் எடுப்பாங்க :-))

    ஆனால் நம்ம ஊரு டைரடக்கர்கள் ஓசில பஜனைப்பாடுற கோஷ்டிகள், ரத்தப்படலத்தை சுட்டு "வெற்றி விழா" எடுத்தாங்க, முத்து காமிக்ஸ்/லயன் காமிக்ஸ் மொழியாக்கம் செய்த ஆர்ச்சி ரோபோ வை கூட உறுவி எந்திரனில் போட்டுகிட்டாங்க, இன்னும் தோண்டி துறுவினால் நிறைய சுட்ட படங்கள் கிடைக்கும் :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி வவ்வால்! :)

      நம்மளுக்கும் ரைட்ஸ் வாங்கறதுக்கும்தான் எந்த சம்பந்தமும் இல்லையே! :) அப்புறம் எந்திரன்ல கொஞ்சம் "இரும்புக்கை மாயாவி" கான்செப்ட் தூக்கி இருப்பாங்க!

      நீக்கு
  10. ஹீரோ கோட் சூட் போட்டுகிட்டா நடிக்கிறாரு? ஏம்பா,நீயா நானா கோபிநாத் க்கு யாரும் இந்த கதைய சொல்லலையா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் உங்க ஆசையை fbல நிறைவேத்திட்டீங்களே! ;)

      நீக்கு
  11. அண்ணே படம் சூர மொக்கை !!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சொல்ல முடியாது! Over Expectation-ஐ திருப்தி செய்யல!

      நீக்கு
  12. நான் பில்லா மேட்டரை ஸ்கிப் செய்துவிட்டு காமிக்ஸ் மட்டும் படித்தேன். நன்றாக இருக்கிறது இப்பதிவு.

    அந்த லார்கோ.. குதிரை.. எந்த பாகத்தில் வருகிறது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! நான் தமிழில் வெளி வந்த இரண்டு பாங்கங்களை மட்டுமே படித்துள்ளேன் என்பதால் குதிரை எந்த பாகம் என தெரியவில்லை! :)

      நீக்கு
  13. சூப்பர் நண்பா வித்தியாசமான டிரை..

    பதிலளிநீக்கு
  14. Yet another impressive post and I liked the innovative approach very much

    பதிலளிநீக்கு
  15. movie is good.

    {தெருவில் கொலையே நடந்தாலும், கண்டுகொள்ளாமல் ஊர்வலம் போகும் ஒரு இரஷ்ய நாட்டில்(!) அப்பாஸியை கொலை செய்ய நினைக்கும் அஜீத்}

    no. it happening on goa carnivel. dealers are russians.

    பதிலளிநீக்கு
  16. நல்ல வேலை வலையுலக நண்பர்கள் என்னைக் காப்பாற்றிவிட்டார்கள், நான் பில்லா போகலாம் என்று நினைத்திருந்தேன்....

    இந்த லச்சனத்தில் வேறு என் மாமாவுக்கு என் மேல் கோபம் வேறு, அவருடன் பாம் பார்க்க நான் வர வில்லை என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிக்கெட் விலை குறைந்ததும் ஒரு தடவை பார்க்கலாம், தப்பில்லை! :)

      நீக்கு
  17. கலக்கல் நண்பா..ஒரு காலத்தில் திருநெல்வேலி பாலத்துக்கு கீழே காசில்லாமல் திருடி திருடி படித்த ஆர்ச்சி,இரும்பு கை மாயாவி,பாக்கெட் அளவு முத்து காமிக்ஸ்ராணி முத்து காமிக்ஸ் நியாபகம் வருது நண்பா..பில்லா II... அடிபட்டவன் நானு விமர்சனம் எனக்குதான் சொந்தம்...http://tamilmottu.blogspot.in/2012/07/ii.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia