பல் பிடுங்கிய பதிவர்!

ஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல்! இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது! இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன்! ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது! ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை! அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை! ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது!

அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன! சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும்! சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை  நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, 'அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும்' என்றார்! 'பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர்'? என நான் அப்பாவியாய் கேட்க; 'பிடுங்க, முடியாது - சர்ஜரி பண்ணித்தான் எடுக்கணும்' என்றார்! ரெண்டு நாளில் வருகிறேன் என்று சொல்லி விட்டு அப்புறம் அந்தப் பக்கம் பல் வைத்துக் கூட படுக்கவில்லை!

இந்த வருடம், ஏப்ரலில் திடீரென பல் வலி - கீழ் தாடை முழுக்க வலிக்க ஆரம்பித்தது! 'X-Ray எடுத்துப் பார்த்திறலாம்' என்றார்  டென்டிஸ்ட்! XRay-ஐப் பார்த்தால் எனக்கே பயமாக இருந்தது - ஈ என்று இளித்துக்கொண்டு இருந்தது என் தாடை!

விஸ்டம் டூத்தை சர்ஜரி பண்ணி எடுத்தே ஆகணும், அப்படியே விட்டீங்கன்னா பக்கத்தில இருக்கற கடைவாய்ப் பல்லும் போயிடும்...

சர்ஜரி பண்ண எவ்ளோ நேரம் ஆகும்?

முக்கா மணி நேரம். லோக்கல் அனெஷ்தீஷியா குடுத்து சர்ஜரி பண்ணுவோம். அப்புறம் ரெண்டு மூணு நாள் வலி இருக்கும், சாலிட் ஃபுட் எதுவும் சாப்பிடக்கூடாது. ஒரு வாரம் கழிச்சு தையல் பிரிப்போம்...


எனக்கு வயிறு லேசாக கலங்கி, வேறு எங்கேயோ தையல் பிரிந்து விடும் போல் இருந்தது!

இப்போ வேலை கொஞ்சம் டைட்டா இருக்கு, பெயின் கில்லர் மட்டும் குடுங்க, அடுத்த வாரம் வர்றேன்.

'எக்ஸ்-ரே இங்கேயே இருக்கட்டும்' என்றார் டென்டிஸ்ட் - அவருக்கு எங்கேயோ பொறி தட்டியிருக்க வேண்டும்!

'இல்ல டாக்டர், எடுத்துட்டு போறேன் - வீட்டிலே காட்டணும்' என்று சொல்லிக்கொண்டே, அவர் என்னை கேவலமாய் பார்த்ததை கண்டு கொள்ளாமல் எஸ்கேப் ஆனேன்!

அப்புறம் நாலு மாசம் அப்படியே ஓடிவிட்டது! போன வியாழக்கிழமை திடீரென மீண்டும் பல் வலி! அதே எக்ஸ்-ரேயைத் தூக்கிக்கொண்டு, அதே டென்டல் கிளினிக் சென்றேன் - வேறு டென்டிஸ்ட் இருந்தார்! 'உடனே சர்ஜரி பண்ணனும் - விசிட்டிங் சர்ஜன்கிட்ட அப்பாய்ன்ட்மென்ட் வாங்கணும் - எப்போ வர்றீங்க' என்றார்! வார இறுதியில் திருப்பூர் போக வேண்டி இருந்ததால் திங்கட்கிழமை நாலு மணிக்கு வாங்கிக் கொண்டேன்! 'வர்றதுக்கு முன்னாடி நல்லா சாப்பிட்டுட்டு வந்திருங்க' என்றார் - அதன் முழு அர்த்தம் எனக்கு அப்போது தெரியவில்லை!

திங்கட்கிழமை மாலை நாலு மணி! பல்லை பிடுங்க ஆயத்தமான டென்ட்டல் சர்ஜன், தொண்டையை செருமிக்கொண்டு கேட்டார் - 'புடுங்கறதுக்கு முன்னாடி ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க' என்றார்! 'நீங்க பல்லை தானே புடுங்கப்போறீங்க, நாக்கை இல்லையே?' என மனதில் நினைத்தவாறு அவரை பார்த்து - கடைசியாக ஒரு தடவை ஞானப்பல் மேல் நாக்கை போட்டு 'பல்லை பிடுங்குனதும் பக்கோடா சாப்பிடலாமா டாக்டர்?' (நன்றி RSK!) - என்றுதான் கேட்க நினைத்தேன்! அது எனக்கே ஓவராக தோன்றியதால் 'நைட்டு டின்னர் சாப்பிடலாமா டாக்டர்?' என்று கேட்டேன், 'குடிக்கலாம்' என்றவாறு வேலையை ஆரம்பித்தார்.

'லோக்கல் அனெஷ்தீஷியா இன்ஜெக்ஷன் குடுக்கப் போறேன், கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்குங்க!'; நறுக் நறுக் என்று பல்லை சுற்றி இரண்டு மூன்று இடத்தில் இன்ஜெக்ஷன் போட்டதும் - கன்னமும், உதடுகளும் பாரமானது போல ஒரு உணர்வு - நாக்கில் லேசாக பொறி பறந்தது. ஆங்காங்கே அழுத்திப் பார்த்து வலிக்கிறதா என்று கேட்டார்; 'யாருக்கு?' என்றேன்!

'பக்கத்து பல்லும், சொத்தை ஆயிடுச்சு - அது ரொம்ப முக்கியமான பல், அதை சேவ் பண்ணியாகணும்! ஒரு மாசம் கழிச்சு அதுக்கு "Root Canal" பண்ணிருவோம்...'. என்றவாறே சிறிய மோட்டார் பொருத்திய இரம்பம் மூலம் பல்லை அறுக்கத் துவங்கினார்! சர்ஜனின் அசிஸ்டென்ட் ஒரு குழாய் மூலம் எச்சிலையும், இரத்தத்தையும் என் வாயிலிருந்து உறிஞ்சிக்கொண்டே இருந்தார்! சர்ஜன் என்னென்னவோ பேசிக்கொண்டே மும்முரமாக வேலை செய்தார், நானும் பிளந்த வாயை மூடாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன்! வலி தெரியாததால், யார் பல்லையோ, யாரோ புடுங்குவது போல் பிளந்த வாயுடன் விட்டதை வெறிக்கலானேன்!

கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆனது, பல் எடுத்த இடத்தில் பஞ்சை வைத்து அமுக்கிவிட்டு 'அப்படியே அரை மணி நேரம் பஞ்சை அமுக்கிக் கடிங்க - வாயை திறக்கவோ, பேசவோ கூடாது' என்றார். என்னென்ன மாத்திரை சாப்பிட வேண்டும், அடுத்த ஒரு வாரத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் போன்ற விபரங்களை எழுதிகொடுத்து விளக்கினார் - தலையை ஆட்டுவதை தவிர வேறெதுவும் என்னால் செய்யவியலவில்லை! 'ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுங்க' என்று முதன்முறையாக ஒரு டாக்டர் சொல்லக் கேட்டது அப்போதுதான்! அனெஷ்தீஷியாவின் ஆதிக்கம் அகல அகல, வலியுடன் வீடு திரும்பினேன்!

கஞ்சி, Porridge போன்ற கொழகொழ  உணவு வகைகளுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்பதால், தோசையையே சட்னியில் நன்றாக குழைத்து பட்டும் படாமல் உள்ளே தள்ளினேன்! அன்று இரவுக்குள் முகம் வீங்கி சிடிசன் அஜீத் மாதிரி ஆனது (இடப்பக்கம் மட்டும்)  தாடையை சரியாக கூட மூட முடியவில்லை. ஆ என்று ஈ புகும் கேப்பை மெயின்டெயின் பண்ண வேண்டியிருந்தது! இன்று முழுதாய் ஐந்து நாளாகி விட்டது - இட்லி, தோசை, குழைத்த சாதம்தான்; லேசாக காரம் பட்டாலும் எரிகிறது! எதையும் மென்று சாப்பிட முடிவதில்லை! வாழைப்பழத்தைக் கூட நாக்கால் நசுக்கிதான் சாப்பிட வேண்டியிருக்கிறது! இன்று கூட - 'நீங்க இப்படி இருக்கும்போது, ஸ்பெஷலா எதுவும் பண்ணவே மனசு வர மாட்டேங்குது' என்றவாறே வெஜிடபிள் பிரியாணியை உள்ளே தள்ளிய என் மனைவியை, கடுப்புடன் பார்த்தவாறு தயிர் சாதம் சாப்பிட்டேன்! சூடான டீ, காபி எல்லாம் கனவாகி சீசனில்லாத மாம்பழமான maazaa-தான் குடித்துக் கொண்டிருக்கிறேன்! வலியில் இரவு சரியாக கூட தூங்க முடிவதில்லை!

நான் சிகிச்சை செய்து கொண்ட டென்டல் கிளினிக்கில் விசிடிங் சர்ஜன் தினம் வருவதில்லை, ஒரு சில சந்தேகங்களை தெளிவுபடுத்த சென்றபோது அங்கிருந்த டென்டிஸ்ட்டுகளின் ரெஸ்பான்ஸ் சரியில்லை என்பதால், வேறொரு டென்டல் சர்ஜனின் கிளினிக்கிற்கு சென்றேன்! 'கடைவாய்ப் பல்லை உடனே Root Canal செஞ்சாகனும் - நாலு சிட்டிங் வரவேண்டி இருக்கும், அந்த பல்லை எடுத்தப்பவே இதோட கிரௌனை எடுத்திருந்தா ஒரு சிட்டிங் குறைஞ்சிருக்கும்' என்றார்! நான் எடுத்துச் சென்றிருந்த எக்ஸ்ரேயைப் பார்த்து விட்டு அவர் மீண்டும் சொன்னார் - 'ரைட் சைடுலேயும் ஒரு விஸ்டம் டூத் இருக்கு!!!'

எனக்கு மயக்கம் வராத குறைதான்! இதைத்தான் 'முற்பல் செய்யின் பிற்பல் விளையும்' என்பார்களோ?! அசிரத்தையாக இருந்த முந்தைய டென்டல் சர்ஜனை நொந்து கொள்வதா, இல்லை இன்னொரு விஸ்டம் டூத்தை 'கண்டு பிடித்த' இந்த சர்ஜனை மெச்சுவதா எனப் புரியாமல் நொந்து கொண்டே வீடு திரும்பினேன்! மொத்தத்தில் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு எனக்கு பல் பிரச்சினைகளில் இருந்து விடிவுகாலம் இல்லை என்பது மட்டும் 'பல் மேல் ஒட்டிய பப்பிள் கம் போல' தெளிவாகத் தெரிகிறது!



Wisdom Tooth Extraction - Horror Story of a Blogger / © www.bladepedia.com

55 comments:

 1. அடடா.. என்ன இது இந்த பிளேடுக்கு வந்த சோதனை :(

  ReplyDelete
 2. பதிவுக்கு தோதா படம் எங்க இருந்துய்யா தேடி பிடிச்சு போட்டீங்க :D

  ReplyDelete
 3. எல்லாரும் சேர்ந்து பிளேடோட எல்லா பல்லையும் பணத்தையும் புடுங்க ஒரு முடிவோட இருக்காய்ங்கன்னு தற்போதைக்கு எனக்கு கிளியரா தெரியுது..:D

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் - இப்பவே 3500 காலி! :D

   Delete
 4. பல்வலியையும் நகைச்சுவையுடன் உங்கள் திறமை போற்றத்தக்கது! வாழ்த்துக்கள் விரைவில் குணமடைய!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி! :)

   Delete
 5. பிளேடுக்கே யாரோ வாய்குள்ள பிளேட விட்டு ஆட்டியிருக்காங்கபா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, வெறும் ப்ளேடு இல்ல! ஆக்ஸா ப்ளேடு! :D

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. நண்பரே

  தாங்கள் விரைவில் குணமடைய (?) எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

  எனக்கும் இந்த மாதிரி பிரச்சினை இருந்தது. அதாவது கீழ் தாடையில் முன்னாள் உள்ள இரண்டு பற்கள் ஸ்ட்ராங் இல்லாமல் இருந்தது ... உங்களை போலவே நான்கு வருடங்கள் ஒவ்வொரு டாக்டரிடம் போய் பார்ப்பது பின்பு ஜகா வாங்குவது ... ஒரு வருடத்திற்கு முன்புதான் (வேறு வழியில்லாமல்) RCT செய்ததேன்.

  இருங்க இன்னும் முடியல ....

  ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் வலி வர வேறு டாக்டரிடம் சென்று எக்ஸ்-ரே எடுத்து பார்த்து விட்டு, டாக்டர் சொன்னார்.

  "சார், பக்கத்துல இருக்கற பல்லும் ஸ்ட்ராங் இல்லாம இருக்கு. பழைய எடுத்துட்டு புதுசா மூன்று பல்லுக்கும் சேர்த்து RCT பண்ணனும். பழைய டாக்டர் இத பார்க்காம விட்டுட்டார்"

  மீண்டும் முதல்ல இருந்தா ...

  தல சுத்துது நண்பா :(

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பல் டாக்டரும், முந்தைய பல் டாக்டரை விட ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளி என்பது இதன் மூலம் உறுதியாகிறது! :D எனக்கு RCT-யை நினைத்தாலே பேதி புடுங்கி விடும் போல் இருக்கிறது! :(

   RCT - முற்பல் செய்யின் பிற்பல் விளையும்! :D

   Delete
 8. ஹிஹி !!! நல்ல பதிவு .. எனக்கும் இந்த ஞான்ப்பல் பிரச்சனைக் கொடுக்குது !!!

  ReplyDelete
 9. விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். நன்றி (த.ம. 3)

  ReplyDelete
 10. அவஸ்தைப் பட்டதைக் கூட சுவாரஸ்யமான
  நிகழ்வாக பதிவு செய்துள்ளது அருமை
  தொடர வாழ்த்துக்கள்(பதிவைச் சொல்கிறேன்)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா! அடுத்து root canal பற்றிய பதிவைப் போட்டால் போயிற்று! :D

   Delete
 11. சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. கூகிளில் wisdom tooth என்று தேடி பார்த்தேன். படங்களை பார்க்கும்போதே பயமாக உள்ளது. நீங்கள் எப்படி தாங்கினீர்களோ? :( :( :(

  ReplyDelete
  Replies
  1. Image Search-இல் Wisdom tooth cartoons என்று தேடுங்கள்! அதைப் பார்த்து விட்டு சிரிக்கலாம்! :D

   Delete
  2. ஹா..ஹா..ஹா.. நல்லா சிரிச்சேன். உங்களுக்காக ஒன்று:

   Mother: Has your tooth stoopped hurting yet?

   Son: I dont know. The dentist kept it!

   Delete
 12. எனக்கும் இந்த பிரச்சனை உண்டு அன்பரே அவ்வபோது முளைத்து பெரும் வலியை கொடுக்கும்

  //அப்புறம் அந்தப் பக்கம் பல் வைத்துக் கூட படுக்கவில்லை!//ஹா ஹா ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. //அவ்வபோது முளைத்து//
   what????!!! :)

   Delete
 13. பல் டாக்டர்ட போறதுன்னாலே, அப்படியே பக்கத்துல வயித்த செக் பண்ணவும் இன்னொரு டாக்டர்கிட்ட அப்பாயின்மெண்ட் போட்டுக்கணும்.

  “ஃபில்லிங் ஒன்னு பண்ணனும், வா”ன்னு டென்டிஸ்ட் போன மாசமே சொன்னாரு. பயத்துல நானும் பல் வச்சு படுக்கல. கடைசில உங்க நிலமை தானோ தெரியல. :P

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் போய் ஃபில் பண்ணுங்க பாஸூ, இல்லேன்னா அப்புறமா ஃபீல் பண்ணுவீங்க! :D

   Delete
 14. hai karthik , i hope u get well soon , கண்டிப்பாக impaction tooth remove செய்தால், pain &swelling one week இருக்கும் ,அதற்கு பிறகும் pain இருந்தால் , உங்களுக்கு impact செய்த surgen யை contact செய்யவும் ,another side 3rd molar யை ஒரு 6 month கழித்து remove செய்து விடுங்கள் , வலி யை கூட கிண்டல் ஆக பதிவு செய்து இருக்கீங்க , as a dentist (i am ) u get well soon காமிக்ஸ் friend ,

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி (டாக்டர்) நண்பரே! :) நான் கன்சல்ட் செய்த டென்டிஸ்ட்கள் பற்றிய என் கிண்டல்கள் உங்களை புண்படுத்தியிருக்காது என்று நம்புகிறேன்!

   Delete
 15. டியர் கார்த்திக் ,உண்மையை சொன்னால் ,உங்கள் கிண்டல் யை மிகவும் ரசித்தேன் , தொடரடும் உங்கள் கிண்டல் தொண்டு ,இந்த பல் problem காரணமாக தான் batman க்கு பிறகு எந்த பதிவும் வரவிலையா?, iceage 4 family யோடு சென்று இருந்தேன் , நன்றாக இருந்தது ,அதற்கு விமர்சனம் உங்கள் ப்ளாக் ல் அடித்து துவைத்து இருபிர்கள் என்று ப்ளாக் ல் பார்த்தால் blade க்கு பல் வலி , டேக் ரெஸ்ட் friend

  ReplyDelete
  Replies
  1. Ice Age 4 அடுத்த வாரம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்! அடித்து துவைக்க அந்த படத்தில் பெரிதாய் ஏதும் இருக்கப்போவதில்லை, வழக்கமான அனிமேஷன் படம்தானே?! :)

   Delete
 16. 'பல்'வேறு பணிகளுக்கு இடையேயும் இப்படி ஒரு பதிவைப் எழுதி எங்களுக்கு வழிகாட்டிருக்கிறிங்க..
  நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. பல் மேல் வேலைதான்! :D

   Delete
 17. இனி யாரும் உங்களை " என்னத்த புடுங்கி கிளிச்ச" அப்படின்னு திட்டவே முடியாது :)

  G + U

  ReplyDelete
 18. இதிலிருந்து தப்பியவர் யாரும் பூலோகத்தில் இல்லை.

  மனசைத் திடப்படுத்திக்கிட்டுப் பல்லைக் காமிங்க!

  ஆல் த பெஸ்ட்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி! என்ன பண்ணறது, சரியாகற வரைக்கும் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்திட வேண்டியதுதான்! :D

   Delete
 19. தங்களது வலியைக் கூட அழகான நகைச்சுவையாக மாற்றிய உங்கள் திறமை வியப்படைய வைக்கிறது.

  வலியோடு பதிவிட்ட ப்ளேடின் மனஉறுதி யாருக்கு வரும் :) சீக்கிரம் பூரண குணமடைய வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 20. இந்த சர்ஜரிக்கு இன்சூரன்ஸ் இருக்கா ???

  ReplyDelete
  Replies
  1. பொதுவாக பல் சார்ந்த விஷயங்கள் இன்சூரன்சில் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை நண்பரே! இருப்பினும் கேட்டுச் சொல்கிறேன்!

   Delete
 21. 'நீங்க இப்படி இருக்கும்போது, ஸ்பெஷலா எதுவும் பண்ணவே மனசு வர மாட்டேங்குது' என்றவாறே வெஜிடபிள் பிரியாணியை உள்ளே தள்ளிய என் மனைவியை, கடுப்புடன் பார்த்தவாறு தயிர் சாதம் சாப்பிட்டேன்!


  super !!!!!!

  ReplyDelete
  Replies
  1. இதை எல்லாம் படித்தால் என் மனைவி என்னை அடி பின்னி விடுவார்! :D

   Delete
 22. பல் பிடுங்கிய பதிவரா அல்லது
  பல் பிடுங்கப்பட்ட பதிவரா ;-)
  .

  ReplyDelete
  Replies
  1. பல் பிடுங்கிய பாம்பு - அப்போ பாம்பு தன் பல்லை தானே பிடுங்கிக் கொள்கிறதா?! :D இதெல்லாம் ஒரு ரைமிங்க்காக சொல்றது! - கண்டுகொள்ளப்படாது ;)

   Delete
 23. // வார இறுதியில் திருப்பூர் போக வேண்டி இருந்ததால் திங்கட்கிழமை நாலு மணிக்கு வாங்கிக் கொண்டேன்! //

  சொல்லவே இல்ல நீங்க திருப்பூரெல்லாம் போவீங்கன்னு :))
  .

  ReplyDelete
  Replies
  1. எனது பதிவுகளில் இதற்கான காரணத்தை அடிக்கடி சொல்லியிருக்கிறேனே! :)

   Delete
  2. மன்னிக்கவும் உங்களது பழைய பதிவுகளை படிக்கவில்லை நண்பரே
   சரி மறுபடி நேரம் உள்ளபோது படித்து பார்க்கிறேன் நன்றி :))
   .

   Delete
  3. அப்படியெல்லாம் கஷ்டப்படுத்தி உங்களை படிக்க வைக்க மாட்டேன்! ;) என் மாமனார் வீடு இருப்பது திருப்பூரில், வேறொன்றும் இரகசியம் இல்லை! :)

   Delete
 24. // 'புடுங்கறதுக்கு முன்னாடி ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க' என்றார்! 'நீங்க பல்லை தானே புடுங்கப்போறீங்க, நாக்கை இல்லையே?'
  ஆங்காங்கே அழுத்திப் பார்த்து வலிக்கிறதா என்று கேட்டார்; 'யாருக்கு?' என்றேன்!
  அன்று இரவுக்குள் முகம் வீங்கி சிடிசன் அஜீத் மாதிரி ஆனது (இடப்பக்கம் மட்டும்) //

  சூப்பர் காமெடி போங்க ( மேற்கண்ட இடங்களில் வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை நண்பரே )
  சோகத்தையும் காமெடியாக சொன்னவிதம் கலக்கிட்டீங்க
  உங்கள் பல்வலி சீக்கிரமாக குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பாராக ஆமென் :))
  .

  ReplyDelete
  Replies
  1. பல்லவியா? யார் அவங்க?! :D

   Delete
 25. அப்ப இன்னும் சில மாதம் கழித்து(களைத்து) மீண்டும் பல் பிடுங்கிய பதிவர் பார்ட் 2 என வரும் போல இருக்கே......பலருக்கும் அறுவை போட்ட உங்களுக்கே யாரோ ஒருவர் ரம்பம் போட்டு விட்டார்...அடுத்த மாதம் வந்து விட்டது என்ன அறுவை அப்டடேட் வரவில்லை....வழியோட இன்னொரு பதிவும் போட்டு விட்டீங்க போல......

  ReplyDelete
 26. இதப் படிச்ச உடனே..என்னை அறியாமல், நாக்கு வாயின் பின் புறத்தில் வேறு திசையை நோக்கி வளர்ந்திருக்கும் பல்லின் மேல் பட்டது. பயமாத்தான் இருக்குங்க...

  ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, என் வயித்தையே கம்ளீட்டா ஓப்பன் பண்ணினாங்க ஒரு ஆப்பரேஷனுக்கு. அப்புறம் 4 வருஷம் கழிச்சு இன்னொரு டாக்டருகிட்ட போனபோது “இந்த மாதிரி ஆப்பரேஷனே செஞ்சிருக்க வேண்டாமே ? ஏன் செஞ்சாங்கன்னு” கேட்டார்.. என்ன சொல்ல..?

  ReplyDelete
 27. பல் 'விட்டு' போனதை சொல்லி வாய் 'விட்டு' சிரிக்க வைத்தது உங்க பதிவு!

  ReplyDelete

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia